அத்தியாயம் – 10
அடுத்த ஐந்து நிமிடங்கள் ஒரு மின்னல் வேக ஆக்சன் பிளாக் அந்த இடத்தில் நடந்து முடிந்தது. கிரேசிடம் மூட்டைகள் என்னவாயிற்று என்று கேட்பது போல் விஜயா மொபைலை எடுத்து வெளியே ஜீப்பில் சாய்ந்து கொண்டு பிஸியாக பேச்சு கொடுப்பதைப் போல் நடிக்க…
அதனை ஒட்டு கேட்கும் ஆர்வத்தில் அந்த நபர் சற்று நெருங்கி வர…
ஒரு பக்கம் ‘நான் இளநீர் வாங்கி குடிச்சிட்டு வரேன்’ என்று அல்லி இளநீர் கடையிடம் கடை அருகே செல்ல…
மற்றொரு புறம் சேது டீக்கடையில் தம் வாங்கி பற்ற வைப்பது போல் வர…
தன் அருகே நெருக்கமாக நின்ற சேதுவுக்கு இடம் கொடுக்கும் பொருட்டு அந்த நபர் சற்று ஓரமாக நகர,
நகர்த்து நகர்ந்து அல்லியின் அருகே வர, அது அல்லிக்கு வாகாக. முட்டியினால் மூக்கில் ஓங்கி ஒரே குத்து.
” ஐயோ அம்மா” என்ற சத்தம் அப்படியே நிலைகுலைந்து கீழே விழுந்து விட்டான் அந்த ஆள்.
“அய்யோ என்ன ஆச்சு? அல்லி உன்னை அடிக்க தானே சொன்னேன் ஆளையே போட்டு தள்ளிட்டியா?”
“லேசா ஒரு பஞ்ச் தான் மேடம். அதுவே தாங்க முடியாம விழுந்துட்டான். சரியான புல் தடுக்கி பயில்வான். உனக்கெல்லாம் எதுக்குய்யா காவல்துறையை பாலோ பண்ற வேலை”
விஜயா அருகே வந்து பார்த்தார். அதன் பின்னர் அவனை அழைத்து தண்ணீர் கொடுத்து ஒரு ஓரமாக அமர வைத்து “வரதுக்கு கூட நாலு சொட்டு ரத்தம் இல்லையே… இவ்வளவு வீக்கா இருந்துட்டு இந்த பின் தொடரும் வேலை எல்லாம் உனக்குத் தேவையா?
சரி சொல்லு, நீ யாரு? எதுக்காக எங்களை இப்படி காலைல இருந்து ஃபாலோ பண்ணிட்டு இருக்க?”
“மேடம் சம்பா டிவில நான் ரிப்போர்டரா வேலை செய்றேன். குண்டு சம்பா ரிப்போர்ட்ஸ் அப்படின்னு ஒரு பகுதியை வழங்கிட்டு இருக்கேன். கிட்டத்தட்ட துப்பறிகிற மாதிரி வெச்சுக்கோங்க. இன்வெஸ்டிகேட்டிவ் ஜர்னலிசம்”
“அது சரி அது என்னடா குண்டு சம்பா நியூஸ்? இன்வெஸ்டிகேட்டிவ் ஜர்னலிசத்துக்கும் குண்டு சம்பாவுக்கும் என்ன சம்பந்தம்?”
“ஒரு கேட்சியா இருக்கட்டும்னு தான் மேடம் சம்பான்னு பேர் வச்சாங்க. நாஞ்சில் நாடு அதான் நம்ம ஊர் பக்கம் சம்பா அரிசி பேமஸ். குண்டு சம்பா ரொம்ப ரொம்ப பேமஸ். கேரளாவே நாஞ்சில் நாட்டு குண்டு சம்பா அரிசிக்கு மயங்கி கிடக்குது . அதே மாதிரி தமிழ்நாடு எங்க குண்டு சம்பா சேனலுக்கு மயங்கி கிடக்கணும் அப்படிங்கிற நோக்கத்துல தான் அந்த பேர வச்சாங்க.”
இதெல்லாம் ஒரு காரணமா என்றபடி தலையில் எடுத்துக் கொள்ளாத குறையாக சேதுவும் விஜயாவும் அவனைப் பார்த்தார்கள்.
“குண்டு சம்பாவோ, கீரி சம்பாவோ எங்களை ஒரு இடத்துக்கு போக விட மாட்டீங்களா? இப்படி பின்னாடியே துரத்திட்டு வந்தீங்கன்னா நாங்க எப்படி கேஸ இன்வெஸ்டிகேட் பண்றது? சரி உன் பேர் என்ன?”
“என் பேரு அருள்ராஜ். நான் கிரிமினாலஜி படிச்சிருக்கேன் மேடம். போலீஸ்ல வேலைக்கு சேர முடியாது ஹைட் பத்தல, அதனால இந்த டிவில வேலைக்கு சேர்ந்தேன்”
“சரி டிவில போடறதுக்கு எத்தனையோ ப்ரோக்ராம் இருக்கே. பிரபலங்களை பேட்டி எடுக்கலாம் புது புது விஷயங்களை மக்களுக்கு சொல்லித் தரலாம் எதுவுமே இல்லன்னா உங்க சம்பா டிவியில அந்த சம்பா நெல்ல எப்படி விவசாயம் பண்ணனும் அப்படின்னு தகவலாவது சொல்லலாம். அதை விட்டுட்டு இது என்னது போலீசை பின் தொடரும் வேலை”
“பேட்டி எல்லாம் எடுத்து இருக்கேன் மேடம். ஆனா என்கிட்ட பேசுறவங்க எல்லாம் அந்த நடிகை இப்படி இந்த நடிகை அப்படி என்று சொல்லி வம்பு தான் பேசுறாங்க. நடிகையை பத்தி பேசுறவங்க நடிகர்களை பத்தி ஏன் பேசவே மாட்டேங்கிறாங்க?
அந்த நடிகையோட இப்படிப்பட்ட வாழ்க்கைக்கு அந்த நடிகர் தான் காரணம் இது மாதிரி ஒரு தயாரிப்பாளர் டைரக்டர் காரணம் அப்படின்னு அவங்கள தானே நியாயமா குற்றம் சாட்டணும்? ஏன் பெண்களை மட்டும் பிரேம் பண்றீங்க? அவங்களை இந்த நிலைமைக்கு ஆளாக்கின ஆண்களையும் எக்ஸ்போஸ் பண்ணுங்க அப்படின்னு கேட்டேன். என்னை எடுபிடி வேலைக்கு போட்டுட்டாங்க.
அதுக்கு அப்புறம் இந்த கொலை கேஸ் அல்லது தற்கொலை கேஸ் பத்தின தகவல்களை இன்வஸ்டிகேட் பண்ணி உங்களுக்கு நியூஸ் தரேன் அப்படின்னு சொல்லிட்டு இந்த வேலையை எடுத்து இருக்கேன் மேடம். எனக்கு ப்ரூவ் பண்ண கிடைச்சிருக்க சான்ஸ். அதனால ஆர்வக்கோளாறுல உங்களை விடாமல் தொடர்ந்து வந்துட்டேன்”
“சரி பின் தொடர்ந்து வந்து என்ன கண்டுபிடிச்ச”
“காலையில இருந்து இந்த ரெண்டு கேஸ் விஷயமாவும் நீங்க அலைஞ்சிட்டு இருக்கீங்க. தாமரை குளத்தில் இருந்து எடுத்த மூட்டைகள் எல்லாம் வேற ஒரு டீம்ல இருக்கவங்க செக் பண்ணிட்டு இருக்காங்க. அநேகமா இப்ப நீங்க அவங்களையும் பார்க்க போகலாம். அதுக்கு தலைமை தாங்கறது கிரேஸ் மேடமா இருக்கலாம். அதுக்கப்புறம் உங்களுக்கு ஒரு முக்கியமான தடயம் இருக்கு . அந்த தடயத்தை வச்சு இந்த ஆக்சிடென்ட் கேஸ் எப்படி போகணும் அப்படிங்கறத நீங்க தீர்மானம் பண்ண போறீங்க.
அந்த கார் ஆக்சிடென்ட் கேஸ் கொலை கேஸா கூட இருக்கலாம் அப்படின்ற சந்தேகம் எனக்கு இருக்குது. அதே மாதிரி அந்த பொன்னையும் தூக்குல யாரோ தொங்கவிட்டு இருக்கலாம் 95% உறுதியாகவே சொல்றேன் இந்த பொண்ண யாரோ தான் தொங்க விட்டு இருக்காங்க நான் நம்புறேன்”
“அப்புறம்”
“உங்களுக்கு ஒரு தடயம் கிடைச்சிருக்கு அது என்னவா இருக்கும்னு கூட ஓரளவு யூகிச்சிருக்கேன். சொல்லவா மேடம்”
உடன் பணிபுரிவர்கள் யாருக்குமே தெரியாமல் தான் கண்டுபிடித்த தடயத்தை எப்படி மோப்பம் பிடித்தான்? தான் இன்னும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டார் விஜயா
“அருள் நீ எதுவும் சொல்ல வேண்டாம். இந்த அளவுக்கு நீ செய்திகளை சேகரித்து இருக்கிறதுக்கு ரொம்ப சந்தோஷம். நீ பின்தொடர்ந்து வந்தது தப்பு என்றாலும் ஒரு கேள்வி கேட்ட பாரு பெரும்பாலும் பெண்கள் கேரக்டர மட்டுமே உட்கார்ந்து சேனல்ல பேசுறாங்க. அவங்கள இந்த நிலைமைக்கு ஆளாக்கின மற்றவர்களை பற்றி ஒரு வார்த்தை கூட பேச மாட்டேன் என்கிறார்களே… அது ஏன்? என்ற கேள்வி எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு. இந்த மாதிரியான ஒரு சீப் வேலை செய்ய மாட்டேன் அப்படின்னு வந்த பாரு அதுவும் ஒரு நல்ல எண்ணம் தான்.
ஆனால் அதுக்காக நாங்க கேஸோட ஸ்டெப்ஸ் எல்லாம் உன்கிட்ட சொல்ல முடியாது.நாங்க சொல்ற தகவல்கள் எல்லாம் நீ பாட்டுக்கு ஆன்லைன்ல போட்டேனா ஒரு வேளை இது கொலையா இருந்திருந்தால்… கொலைகாரனுக்கு நீங்களே தகவல் தந்துட்டு இருக்கீங்க. அவன் செஞ்ச தப்பை கண்டுபிடித்து அவனை கைதி பண்றதுக்கான வழிய தேடிக்கிட்டு இருக்குது காவல்துறை. நீங்க உங்க குறிப்புகள் மூலம் அந்த வழியை அடைக்கிறதுக்கு உதவி பண்றீங்க அப்படின்னு உனக்கு புரியலையா?”
“தப்புதான் மேடம் மன்னிச்சுக்கோங்க ஆனால் நாங்க செய்யலைன்னா வேற யாராவது கற்பனையா நியூஸ் போடுவாங்க மேடம். உங்கள பின்தொடர்ந்து வரலைன்னா எங்களுக்கு எப்படி சீக்கிரமா நியூஸ் கிடைக்கும்? என் வேலையும் எப்படி நிலைக்கும்? எனக்கு இந்த வேலை ரொம்ப முக்கியம்”
“சரி நம்ம ரெண்டு பேரும் ஒரு ஒப்பந்தத்துக்கு வரலாம். எனக்கு ஏதாவது தகவல் தெரிந்தது என்றால் முதலில் உன்னை கூப்பிட்டு சொல்றேன் சரியா… இப்ப ரொம்ப வீக்கா இருக்குற. நீ போய் மூக்குக்கு மருந்து போடு”
“இல்ல மேடம் நானும் ஏதாவது உங்களுக்கு உதவி பண்ண முடியுமான்னு பார்க்கிறேன். சத்தியமா வெளில எங்கேயும் உங்க அனுமதி இல்லாம தகவலை வெளியே கசிய விடமாட்டேன்.”
“தட் வில் பி வெரி ஹெல்ப் ஃபுல். நீ முதல்ல கிளம்பு . நான் கிரேஸை பார்க்க போயிட்டு இருக்கேன். ஏதாவது முக்கியமான விஷயமாக இருந்தால் உனக்கு நானே தகவலை சொல்றேன். நீ சேகரித்த தகவல நியூஸ் சேனலுக்கு மட்டும் இல்ல வேற யார்கிட்டயும் ஷேர் பண்ண கூடாது இது என்னோட ஆர்டர்”
அரை மனதுடன் அங்கிருந்து கிளம்பிய அருளுக்கு விரைவில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் அல்வா துண்டு போன்ற மாநிலத்தையே அசைக்கிற தகவல் கையில் வந்து விழும் என்று அப்போது ஜோசியம் சொன்னால் நம்பி இருக்க கூட மாட்டான்.
தென்னாடனை சந்தித்து விட்டு கிரேஸை பார்த்து சென்ற விஜயா அங்கு மூட்டைகளைப் பிரித்து கிரேஸ் காண்பித்ததை பார்த்து அதிர்ந்து விட்டார். அத்தனையும் மருத்துவமனை கழிவுகள் எல்லாவற்றையும் மூட்டை மூட்டையாக கட்டி யாரும் பார்க்காது குளத்துக்குள் எறிந்து விட்டு சென்றிருக்கிறார்கள் மனசாட்சி இல்லாதவர்கள். குளம் மருத்துவமனை கழிவுகளால் கொஞ்சம் கொஞ்சமாக நஞ்சாகி கொண்டிருந்திருக்கிறது.
அருளை அழைத்தார் விஜயா
“அருள் உனக்கு எவ்வளவு தூரம் தைரியம் இருக்கு”
“போலீஸ்காரங்க கிட்ட அடி வாங்கிட்டு மறுபடி அவங்கள பின் தொடர்ந்து வரும் அளவுக்கு தைரியம் இருக்கு”
“சரி இங்க இருக்கிற மூட்டைகள் அதுல மருத்துவமனை பேர் கொஞ்சம் மங்கலா இருந்தாலும் கண்டுபிடிக்கிற அளவுக்கு இருக்குது பாத்தியா… அதோட சேர்த்து போட்டோ எடுத்துட்டு உங்க டிவியில் பிளாஷ் நியூஸ் இன்னைக்கு சாயந்தரம் நாலு மணி போல போடுற”
“இந்த கழிவுகளை எங்க கொட்டுனது எல்லாமே பெரிய மருத்துவமனைகள். இவங்களுக்கு கேரளாவிலும் பிரான்சஸ் இருக்கு. கேரளாவில் இதெல்லாம் டிஸ்போஸ் பண்றதுக்கு நிறைய காசு கொடுக்கணும். அதனால அங்கிருந்து இங்கு இருக்கிற ஹாஸ்பிடல் ஏதோ மருந்து டிரான்ஸ்பர் பண்ற மாதிரி வந்து ரகசியமா போட்டுட்டு போய் இருக்காங்க. அதுதான் இந்த தாமரைக் குளம் கிட்ட இருந்த லாரிகள் எல்லாம் வழக்கமா இந்த ஏரியால குப்பை போட்டுறவங்க தான்.
இதை நான் ராஜாராம் கிட்ட ரிப்போர்ட்டா 3:00 மணிக்கு தரப்போறேன். நீங்களும் தகவலை அதே சமயத்துல போட்டிங்க என்றால் மீடியாவோட பிரஷர் தாங்க முடியாம கவர்மெண்ட்லயும் விரைவா நடவடிக்கை எடுப்பாங்க .
வேற யாருக்கும் தெரியாம ரகசியமா தகவல் மேலிடத்துக்கு மட்டும் போகும் பொழுது இந்த மருத்துவமனைகள் எல்லாம் விஷயத்தை அமுக்குறதுக்கு நிறைய சான்ஸ் இருக்கு. சோ அவங்கள தப்பிக்க விடாமல் நேரடியா பெரிய அதிகாரிகள் கண் பார்வைக்கு கொண்டு போறோம். அரசாங்கம் விரைந்து மின்னல் வேகத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டிய ஒரு கட்டாயத்துக்கு நம்ம கொண்டு வரோம்”
“புரிஞ்சிருச்சு மேடம் எல்லாரும் இப்ப இந்த விபத்தையும் தற்கொலையும் பத்தி தான் பேசுறாங்க. அதை கொலை, சைக்கோ கொலை அப்படின்னு ஒரு குரூப் மக்கள் சேர்ந்துக்கிட்டு அதுக்கு காரணமா உங்களை காமிச்சு புல்லி பண்ணிட்டு இருக்காங்க.
நீங்க எங்க மூலமா இந்த விஷயத்தை எக்ஸ்போஸ் பண்றதுனால அதைவிட பெரிய மருத்துவ கழிவு பத்தின நியூஸ் தான் மீடியால பேசப்படும். இந்த ரெண்டு விஷயமும் கொஞ்சம் அமுங்கும். பெருசா விவரங்கள் தெரியாததுனால கேஸ் க்ளோஸ் பண்ணிடுவாங்க அப்படின்னு குற்றவாளியும் அசட்டையா இருப்பான். அந்த டயத்துல நீங்க விரைந்து துரிதமா உங்களுடைய வேலையை முடிச்சிடுவீங்க. செம பிளான் மேடம்”


Leave a Reply