தாமரை குளம் – 1

அத்தியாயம் – 1

‘நலம் தரும் நாயகனே நவசக்தி விநாயகனே’ என்று விடியற்காலையில் பாட ஆரம்பித்து 

விநாயகனே வினை தீர்ப்பவனே ‘ என்று அந்த திருவிழா கொண்டாட்டத்தின் மூன்றாம் தினத்தன்று  ஒரு நிமிடம் கூட ஓய்வெடுக்காது ஒலிப்பெருக்கியில் பாடிக் கொண்டிருந்த சீர்காழியின் குரலுக்கு அந்த மாலை வேளையில் சற்று ஓய்வு கொடுத்திருந்தனர் கோவில் நிர்வாகத்தார். 

அன்று மாலை வாசுகி அவர்களின் சொற்பொழிவு ஏற்பாடு செய்திருந்தனர். 

சென்னையின் ஜன சந்தடி மிக்க இடம் என்பதால் சிறப்பாகவே திருவிழா நடைபெறும். தினமும் பட்டிமன்றம், பாட்டு மன்றம் என்று மாலை வேளை களை கட்டும். 

கோவிலுக்கு பக்கத்தில் இருந்த திறந்த வெளியில் பிளாஸ்டிக் நாற்காலிகள் போடப்பட்டு நூறு மக்கள் அமர்ந்தும் அருகிலிருந்த கடையிலிருந்து நின்றும் பார்க்க, சிறியதாய் அமைத்திருந்த மேடையில் வாசுகி அவர்கள் தனது ஆன்மீக சொற்பொழிவை ஆரம்பித்தார்.   

“வழக்கமா போருக்கு சில தர்மங்கள் இருக்கு. எதிராளி அவனது கையில் இருக்கும் ஆயுதங்களை இழந்துவிட்டால் அவன் மீண்டும் கையில் ஆயுதம் ஏந்தும் வரை அவனைத் தாக்கக் கூடாது. 

போர்க்களத்தில் காயம்பட்டு வெளியேறும் வீரர்களைத் தாக்கக் கூடாது. குத்துயிரும், குலை உயிருமாய் காயம்பட்டு இருப்பவர்களுக்கு ஆரோக்கியமாய் இருக்கும் வீரன் யாராவது உதவி செய்து கொண்டிருந்தால் அந்த வீரனைத் தாக்கக் கூடாது” 

என்று போர் தர்மங்களைத் தனது கணீர் குரலில் எடுத்துரைத்துக் கொண்டிருந்தார். 

சுற்றிலும் இருந்த வீடுகள் நெருக்கடியான பிளாட்டுகளாக உருமாறி இருந்தன. வாசுகி மனோகரனின் அருமையான கருத்தினை கேட்க பலர் நின்றிருந்தாலும் சிலர்  விழாவில் கலந்து கொள்ளாமல் வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டியே கதி என்று  மாமியார் மருமகளின் வில்லத்தனத்தை பார்த்து தங்களையும் அறியாமல் தங்களது மன அமைதியைக் கெடுத்துக் கொண்டிருந்தனர். 

அந்த சந்தடிக்கு மத்தியில் தெருவிளக்கு பழுதாகி ஆள் அரவமற்றிருந்த  சிறிய சந்தில் நுழைந்தான் ஒருவன். யாரும் குறிப்பிட்டு கவனிக்கும் அளவுக்கு தனித்துவம் எதுவும் இல்லாது, சாதாரண உயரத்தில், வெயிலில் கருத்த நிறத்தில், சிக்ஸ் பேக் எதுவுமின்றி ஒல்லியாக, அமைதியாக சைக்கிளை மிதித்து சென்றவனை யாராவது கவனித்திருந்தால் தான் அதிசயம். மிதிவண்டியில் ஹாண்டில் பாரில் அழுக்கான ஒரு கட்டைப்பை. 

அவன் கண்கள் சாதாரணமாகப் பார்ப்பது போல தோன்றினாலும் சுற்றுப்புறத்தை நன்றாக அளவெடுத்துக் கொண்டிருந்தன. மூளை அதனை கிரகித்து தான் செய்ய வேண்டிய காரியத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தது. 

ஒரு சிறிய ஒற்றை அறை கொண்ட அந்த பழைய ஒட்டு வீட்டினைக் கண்டவுடன் அவனது கண்கள் சுதாரிப்பானது. சுற்றிலும் மின்னல் வேகத்தில் நோட்டம் விட்டான். யாரும் இல்லை என்று உறுதிப்படுத்திக் கொண்டதும் சற்று தள்ளி சந்தேகம் ஏற்படாத வகையில் தனது சைக்கிளை சாய்த்து வைத்தவன் சில நிமிடங்களில் அந்த வீட்டின் பூட்டினைத் திறந்து ஏதோ நீண்ட நாட்கள் பழக்கம் இருப்பதைப் போல உள்ளே நுழைந்தான். 

நேராக சமையலறைக்கு சென்று கேஸ் சிலிண்டரின் பழைய டியூபைக் கழற்றிவிட்டு அதைவிடப் பழையதாக இருந்த மற்றொரு டியூபை மாற்றினான். கழற்றியதை எடுத்து கட்டைப்பைக்குள் பத்திரப்படுத்திக் கொண்டான். ஜன்னல்கள் அனைத்தையும் இறுக்கமாக மூடினான். 

லேசாக கேஸ் லீக்காகும் வாடை வந்தது. தான் உள்ளே நுழைந்ததற்கான அடையாளங்கள் இல்லை என்பதை உறுதிப் படுத்திக் கொண்டான். வீட்டிற்கு வெளியே வந்தவுடன் பழையபடி பூட்டினைப் பூட்டினான். சைக்கிளை எடுத்துக் கொண்டு மறுபடி சென்று சொற்பொழிவை கவனித்துக் கூட்டத்தின் நடுவே, மறைவாக மறைவாக இருள் நிறைந்த ஒரு இடத்தை பிடித்துக் கொண்டு  காத்திருக்க ஆரம்பித்தான். 

சற்று நேரத்தில் அந்தபக்கம் ஒரு கார் வந்து நிற்க, அதிலிருந்து ஆஜானுபாகுவான உருவம் ஒன்று இறங்கியது. 

“ஏண்டா தினமும் இதே ரோதனையா போச்சு, பொதுக்கூட்டம் திருவிழான்னு ஏதாவது வச்சு காரை போக விடாம மறிச்சுடுறீங்க” என்று மக்களை வசவு பாடியபடி சற்று தள்ளாடியபடி நடந்தவனை கண்டு கூட்டம் ஒதுங்கியது. 

“டே புளிக்கரை மோகன் டா. இதுவரைக்கும் பத்து கொலை செஞ்சிருக்கான். அவன் கீப்பு வீடு இங்க இருந்தது. லாஸ்ட்டா அவளைக் கொன்னுட்டுத்தான் ஜெயிலுக்கு போனான். இப்ப ரிலீஸ் ஆனதும் இங்க வந்து உக்காந்துட்டு நம்ம உயிரை எடுக்குறான்” என்று ஒருவன் மற்றவரிடம் சொல்ல, ஒரு நிமிடம் புளிக்கரை மோகனை  வெறித்த  கூட்டம், தூரத்தில் ஏதோ வாணவேடிக்கை தெரிய, அதை நோக்கி கண்ணைத் திருப்பியது. 

“டேய் இன்னைக்கே வாணவேடிக்கையும் ஆரம்பிச்சுட்டாங்களா?” என்று கலர்கலராய் பூக்களை இறைத்து சிதறும் மத்தாப்பூக்களை ஆர்வமாகப் பார்க்க ஆரம்பித்தனர். 

மக்கள் கவனம் முழுவதும் அங்கே சென்ற பின்னர், ஒல்லி மனிதன் மெதுவாக மோகனைப் பின் தொடர ஆரம்பித்தான்.

புளிக்கரை மோகன் அந்த ஒல்லி நபர் திறந்த வீட்டை திறந்து உள்ளே சென்றதும் மின்னல் வேகத்தில் கதவை சாத்தியவன், ஜன்னலின் வழியே தீக்குச்சி ஒன்றினைப் பற்ற வைத்து எறிந்துவிட்டு மீண்டும் கதவை சாத்தினான். 

வானவேடிக்கைக்கு போட்டியாக டமார் என்ற சத்தமும் தீப்பிழம்பும் எதிர் திசையில் வருவதைக் கண்டு திகைத்த கூட்டத்தினர் சிலர், அந்தப்பக்கம் ஓட ஆரம்பித்தபோது, நடந்த சம்பவத்திற்கு சூத்திரதாரி சைக்கிளை திருவிழா கூட்டத்தைத் தாண்டி எதிர்  தெருவில் மிதித்துக் கொண்டிருந்தான். அந்த களேபரத்தில் நாலாப்பக்கங்களிலும் சிதறி ஓடிய மனிதர்களுக்கு மத்தியில் அவனும் அவனது சைக்கிளும் அப்படியே கரைந்து போனார்கள். 

ரவுப் பொன்வானம்  பன்னீராய் தூறிக் கொண்டிருந்தது. குளிர் காலம் ஆரம்பித்துவிட்டதால் ஊரில் அனைவரும் போர்வையைப் போர்த்திக் கொண்டு வீட்டினுள் முடங்கிவிட்டனர். 

ஊர் எல்லையில் ஆள் அரவமற்ற அந்த ரோட்டில் இருக்கும் டீ கடையில் கையில் இருந்த சைனா மேட் மொபைல் போனை ஒரு பக்கமாய் சாய்த்து வைத்துக் கொண்டு பாடிக் கொண்டே பழைய டீத்தூளை எடுத்துக் கொட்டிக் கொண்டிருந்தான் விக்னேஸ்வரன். 

“டேய் கடையை மூடிட்டியா, ஒரு டீ வேணுமே”

 என்றபடி லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு மழைக்கு அணைவாக சாக்கினைத் தலையில் போர்த்தியபடி வந்தான் ஜார்ஜ். 

“இன்னும் பத்து நிமிசம் கழிச்சு வந்திருந்தா முடியாதுன்னு சொல்லிருப்பேன். இப்பத்தான் கடைசி டீ டிகாஷனை இறக்கினேன். உக்காருங்க போட்டுத்தாரேன்”

சில நிமிடங்களில் குளிருக்கு இதமாக ஸ்ட்ராங் டீயைக் குடித்தபடி ஜார்ஜ் பீடியை வலிக்க, கடையை மூட ஆயத்தங்கள் செய்துக் கொண்டிருந்தான் விக்னேஸ்வரன்.

மொபைலில் 

‘இந்த மான் உந்தன் சொந்த மான் பக்கம் வந்துதான் சிந்து பாடும்’ 

என்று காந்தக் கண்ணழகி கனகா சிவப்பு தாவணியில், அதற்கு மேட்சாக சிகப்பு சட்டை போட்டுக்கொண்டு ஆழமாக லவ் பண்ணுவதைப்  போல பாவலா காட்டும் ராமராஜனுடன் சத்தமாக டூயட் பாடிக் கொண்டிருந்தார். 

‘இதான் எங்க ஊர்ல காதலு.  நம்பி நடிச்சிடு. இல்லாட்டி உனக்கு ஹீரோயின் சான்ஸ் கிடையாது’ என்று இயக்குனர் கங்கை அமரன் சொல்லி இருப்பார் போலிருக்கிறது. ராமராஜன் புருவத்தை உயர்த்தி நிறுத்தி காட்டும் பாவனைகளை எல்லாம் காதல் என்று நம்ப வேண்டிய கட்டாயம் கதாநாயகிக்கும் படம் பார்க்கும் நமக்கும்.

“இந்தப் பொண்ணு கண்ணு சூப்பர்ல… “ என்று ஜார்ஜ் சொல்ல, 

அந்த அமைதியைக் கிழித்துக் கொண்டு “தூ சீசு படிக்கே மஸ்து மஸ்து” என்று பாடியவண்ணம் எதிர் திசையில் எக்ஸ்பிரஸ் வேகத்தில் ஒரு கார் வந்தது. 

“என்ன ஸ்பீடு… யாருய்யா அது”

“தெரியல… ஹிந்தி பாட்டுன்னு நினைக்கிறேன். வெளியூர் ஆளா இருக்கலாம். இருந்தாலும் வேகம் அதிகம். தண்ணியடிச்சுட்டு வண்டியை ஒட்டுறவங்க இப்பல்லாம் ஜாஸ்தியாயிட்டாங்க. ரோட்டில் நடக்குறவங்க உயிருக்கு உத்தரவாதம் இல்லாம போயிருச்சு” 

சலித்தவண்ணம் வேலையைத் தொடர்ந்தனர். 

காரின் சத்தம் மறைந்து  ‘சிந்தைக்குள் ஆடும் ஜீவனே கண்மணியே’ என்று தமிழ் பாட்டு தொடர்ந்தது. 

கடையைப் பூட்டிக் கொண்டு கிளம்பியபோது ஜார்ஜுக்குத் தோன்றியது இதுதான் ‘இந்த வேகத்தில் காரை ஓட்டிக்கிட்டு போறானே, அந்த தாமரைக்குளம் பக்கம் இருக்குற ரோட்டு வளைவுல, இருவது வருசமா வண்டி ஓட்டுற நானே கவனமா ஓட்டணும். இந்தத் தண்ணிவண்டி எப்படித்தான் ஓட்டப்போகுதோ?’

ஜார்ஜின் லாரி வேகமெடுத்து மறைந்த அதே சமயத்தில் அதற்க்கு நேர் எதிர் திசையில் மூன்று கிலோமீட்டர் தள்ளி, தாமரைக்குளம் வளைவில் திரும்பாமல் அந்தக் கார் நேரே சென்று ஒரு குட்டிக்கரணம் அடித்து அப்படியே தாமரைக்குளத்திற்குள் விழுந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைய ஆரம்பித்தது. அப்போது எழுந்த பெரும் ஓசையை அமுக்கிக் கொண்டு பெரிய இடி ஒன்று இறங்க, இப்படி ஒரு சம்பவம் நடப்பது யாரின் கவனத்தையும் எட்டாமலேயே போயிற்று.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page