ஹாய் பிரெண்ட்ஸ்,
‘காதல் வரம் யாசித்தேன்’ கதையின் ஒவ்வொரு பகுதிக்கும் கருத்துக்களைப் பதித்து என்னை ஊக்குவித்த தோழிகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள். ராணி இதழில் தொடர்கதையாக வெளி வந்த காதல் வரத்தை சில தோழிகள் கேட்டுக் கொண்டதற்காக ப்ளாகில் அப்படியே பதிவுகளாகத் தந்திருக்கிறேன். மீனாவையும், கைலாஷையும் உங்களுக்குப் பிடித்திருக்கிறது என்பதை உங்களது கமண்ட்ஸ் பார்த்துத் தெரிந்துக் கொண்டேன். இந்தக் கதை உங்கள் மனத்தைக் கவர்ந்திருக்கும் என்று நம்புகிறேன்.
இனி கதையின் இறுதிப் பதிவு உங்களுக்காக.
[scribd id=302472437 key=key-HUafAAhkjwmM884i34Nx mode=scroll]
அன்புடன்,
தமிழ் மதுரா.
கங்கா மரணத்தன்று நடந்த சம்பவங்களைப் பற்றி நிரஞ்சனாவின் மூலம் அறிந்த மீனாவுக்கு அன்றிரவு முழுவதும் தூக்கமில்லை. அவள் கண்ணுக்குள் கடலாய் கண்ணீர் கசிந்தது.
கங்காவின் மரணத்துக்குப் பின் குழந்தைகளின் பொறுப்பைக் கைகழுவிய பெரியம்மாவை எண்ணி மனம் ஊமையாய் அழுதது.
‘உங்களுக்குத் தேவைன்னா எப்படியாவது காரியத்தை சாதிச்சுப்பிங்க. தேவை இல்லைன்னா தூக்கி எறிஞ்சுடுவிங்களா’ என்று பல்லைக் கடித்துக் கொண்டாள்.
மறுநாள் காலையில் வந்த நிரஞ்சனாவின் கணவன் தீனா அவர்களுடன் அன்றைய பொழுதைக் கழித்துவிட்டு நிரஞ்சனாவை அழைத்துக் கொண்டு கிளம்பினான்.
அவர்கள் சென்றதும் வெகு நேரம் வரவேற்பறையில் அமர்ந்திருந்த மீனாட்சி கைலாஷின் அறைக்கு சென்றாள். அவன் ஜன்னலின் வழியே இருளை வெறித்துக் கொண்டிருந்தான்.
“என்னை மன்னிச்சுகோங்க மாமா” தன் கால்களைப் பிடித்துக் கண்ணீருடன் கேட்ட மீனாவைத் தூக்கி நிறுத்தினான்.
“எதுக்கு மன்னிப்பு”
“அக்காவைப் பத்தின விஷயம் எல்லாரும் சேர்ந்து மறைச்சுட்டோம். உங்களுக்கு துரோகம் செய்துட்டோம்”
“கங்கா என் மனைவிதானே… அவளோட குறையைப் பத்தி உன் மூலமா எனக்குத் தெரிஞ்சிருந்தால்தான் தப்பு. ஆனாலும் உனக்கு கங்கா மேல அதீதமான பாசம் இல்ல. அவ உன்னை கஷ்டப்படுத்தினது உன் மனசில் படலையா மீனா”
“என் வீட்டில் அம்மா அப்பாவுக்கு நான் ராசியில்லாத பெண். அவங்க வாழ்க்கைல இழந்த செல்வத்தைப் பத்தின ஆதங்கத்தில் வருத்தத்தில் பாதி கூட என் வாழ்க்கையை நல்லபடியா அமைச்சுத் தருவதில் காட்டல. அம்மா அப்பாவே கண்டுக்காத பொண்ணு மேல மத்தவங்களும் பெருசா அக்கறை காட்டல. என் மேல அன்பு காமிச்சது கங்கா அக்காதான். எங்க அக்காவுக்கு கொஞ்சம் பிரச்சனை இருந்தது. ஆனால் அதுக்காக அவளை வெறுக்க முடியுமா. அதனால் அவ மேல வெறுப்பில்லை”
“ஆனால் அதுக்கப்பறம் அவளோட சுயரூபத்தைப் பார்த்து பயந்துட்ட இல்லையா”
பதில் சொல்லவில்லை மீனாட்சி.
“உண்மையிலேயே உனக்கு பெரிய மனசுதான். இல்லாட்டி உங்க அக்காவுக்காக இவ்வளவு பெரிய தியாகத்தை செய்திருப்பியா” என்றான் குழந்தைகளைப் பார்த்தவாறே.
“தியாகம் இல்லை மாமா. இது கடவுள் போட்ட முடிச்சு”
“நம்ம கல்யாணம் கடவுள் போட்ட முடிச்சா இல்லை கங்கா போட்ட முடிச்சா”
“மாமா”
“சூரியாவுக்கும் சந்திராவுக்கும் அப்பா நான். அம்மா யாருன்னு சொல்லு”
“மாமா”
“நேத்து இன்ஸ்பெக்டர் ராஜி எல்லாம் சொல்லிட்டாங்க. கங்கா மரணம் பத்தி விசாரிச்சு. அப்படியே அவ சிகிச்சை எடுத்துட்ட எல்லா மருத்துவமனையிலும் அலசி எனக்கு வாழ்க்கை வரலாற்றை ஈமெயில் பண்ணிட்டாங்க. அதிலிருக்கும் சில ரிப்போர்ட்ஸ் பார்த்தத்தும் என்னால அதிர்ச்சி தாங்க முடியல.
இதுவரை நீ யாருகிட்டயும் சொல்லாத கதையை என்கிட்டே மறைக்காம சொல்லுவியா.
கங்காவுக்குக் கருமுட்டைகள் சுத்தமாய் உற்பத்தி ஆகவில்லை. அதனால் இயற்கையாக குழந்தை பெற வழியே இல்லை. சோதனைக் குழாய் மூலம் வேறு ஒரு பெண்ணின் கரு முட்டைகளை தானமாக வாங்கி கைலாஷின் உயிரணுக்களை செலுத்தி கருத்தரிக்க இயலும். எனவே அதையே முயற்சித்தனர். ஆனால் இவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, மனிதாபிமானம் காரணமாக அந்த மருத்துவர் கருமுட்டை தானத்தைப் பற்றி வெளியே சொல்லவில்லை. மூன்று முறை முயற்சித்தும் கரு தங்கவில்லை. கைலாஷ் வேறு அதுதான் கடைசி சந்தர்ப்பம் என்று சொல்லியிருந்தான். என்ன செய்வது என்று தெரியாமல் செவிலியிடம் சொல்லி வருத்தப் பட்டனர்.
“ஏம்மா… மன்சொப்பி வாழும் புருஷன் பொண்டாட்டிக்கே குழந்தை பிறக்குறது கஷ்டமா இருக்கு இதில் கருமுட்டை தானம் செய்றவங்க யாருன்னு கூடத் தெரியாது. முதலில் முன் பின் தெரியாத இரண்டு பேரோட அணுக்கள் இணைத்து கரு உருவாகணும், பின்னர் வளரணும். அப்பறம் சோதனைக் குழாயில் வளர்ந்த அந்தக் கருவை உங்க உடம்பும் ஏத்துக்கணும். இப்படி பல படிகள் இருக்கு. உங்களுக்கு உருவான கருக்கள் எல்லாம் இரண்டாம்தரத்தில் தான் இருந்தது. அது முதல் பிரச்சனை.
சில சமயம் தன்னுடைய அணுக்களினால் உருவாகாத கருவை உடம்பு ஏத்துக்காம போறதுண்டு. அதனால கருசிதைவு உண்டாகும். இது கூட இந்த முறை உங்களுக்கு ஏற்பட்ட தோல்விக்கு காரணமாய் இருக்கலாம். நீங்க பேசாம உங்க ரத்த சம்மந்தப்பட்ட உறவு யார்கிட்டயாவது கருமுட்டை தானம் வாங்குங்களேன். வெற்றி வாய்ப்பு இதில் அதிகரிக்கும்” என்று சொன்னது கங்காவின் மனதில் பதிந்து போனது.
அதே சமயம் விபத்தில் அடிபட்டு மருத்துவமனையில் தனது பெற்றோரை சேர்த்துவிட்டு அறுவை சிகிச்சைக்குப் பணமின்றி அவர்கள் முன் நின்றாள் மீனாட்சி.
“அஞ்சு லட்சம் வேணுமாம்.. .நல்ல கதையால்ல இருக்கு. என்னமோ தந்து வச்சிருக்குற மாதிரி கேக்குறா” என்று அங்கலாய்த்தாள் கலைவாணி.
“அம்மா அவ கேட்குற பணத்தை தா…”
“நீ வாயை மூடு”
“அம்மா எனக்கு மீனாவோட கருமுட்டை வேணும். வாங்கித்தா”
“என்னடி சொல்லுற…”
“என் வீட்டுக்காரருக்கு மீனாவைப் பிடிக்கும். மீனாவுக்கும் அவர் மேல பாசம் உண்டு. இவங்களுக்கு இருக்குற புரிதலால் கரு கண்டிப்பா உருவாயிடும். மீனா என் ரத்த உறவானதால கரு என் வயிற்றில் தாங்கும் வாய்ப்பும் அதிகம்” மேலே பேசவிடாமல் கையைக் காட்டினாள் கலைவாணி.
“நான் பாத்துக்குறேன் விடு”
அதன்பின் கலைவாணி பார்த்துக் கொண்டார்.
“மீனா உங்க அம்மா அப்பா சிகிச்சைக்கு நான் பணம் தரேன். ஆனால் எந்த விஷயத்துக்கும் ஒரு விலை உண்டு. நீ உன் கருமுட்டையை என் மகளுக்குத் தர. தந்துட்டு பணத்தை வாங்கிட்டுப் போற. இது நம்மைப் பொறுத்தவரை ஒரு வியாபாரம். இந்த வியாபாரம் முடிஞ்சதும் எங்க கண்ணில் படாத இடத்துக்கு போயிடணும்” என்று பெரியம்மா சொல்ல சொல்ல பேயடித்தது போல கேட்டாள் மீனா.
“அக்கா பெரியம்மா என்னமோ சொல்றாங்க… எனக்கு ஒண்ணுமே புரியல” என்று அக்காவின் ஆதரவைத் தேடினாள்.
“அம்மா என் சார்பாத்தான் பேசுறாங்க மீனா”
“ஆனால் மாமா… அவரும் நானும்… இது நல்லாவே இல்லை அக்கா. கேக்கவே அசிங்கமா இருக்கு. மாமாவும் இதுக்கு சம்மதிக்க மாட்டார்”
“உங்க மாமாவுக்குத் தெரியாது. தெரியக் கூடாது. முதலில் நீ யார்கிட்டயும் உன் வாயால சொல்லக் கூடாது. இதுகெல்லாம் சம்மதி. அப்பாட்ட சொல்லி உனக்குப் பத்து லட்சம் தர சொல்றேன்”
“வேண்டாம்க்கா…. இதுக்கு என் மனசு இதுக்கு ஒப்பலக்கா”
“சரி அப்ப உங்க அம்மா அப்பா வைத்தியம் செய்ய வசதியில்லாம சாகட்டும்” இரக்கமில்லாமல் சொன்னாள்
“அக்கா..”
“பாரு மீனா… உங்க அம்மா அப்பாவை உன்னால காப்பாத்த முடியும். நான் பணம் தரேன். ஆனால் ஒரு சின்ன வேலையை மட்டும் செய்யணும். அப்பறம் அதைப் பத்தி மறந்துடு என்ன….”
“உனக்கு இவ்வளவு நாள் சாப்பாடு, துணிமணி தந்து வளர்திருக்கோம். அந்த நன்றி இருந்தால் நான் கேட்காமையே இதுக்கு சம்மதிச்சிருப்ப” கலைவாணியும் தன் பங்குக்கு பேசினார்.
“குழந்தைங்கன்னா எவ்வளவு இஷடம்ன்னு உனக்கே தெரியும். எவ்வளவு சிகிச்சை எவ்வளவு மருந்து மாத்திரை சாப்பிட்டிருக்கேன். ஆனால் உன்னால் எனக்கு இது சாத்தியமாகும்னு சொல்றாங்க. உன் டிரஸ், புத்தகம் எல்லாம் நான் வாங்கித் தந்ததுன்னு சொல்வியே. எனக்காக இந்த சின்ன உதவியை செய்ய மாட்டியா? நான் உன் கூடப் பிறந்த அக்காவா இருந்தா செஞ்சிருப்பியோ”
“ஐயோ… உன்னை என் கூடப் பிறந்த அக்காவாதான் நினைச்சிட்டு இருக்கேன்”
“எனக்குக் குழந்தை பிரக்காததைக் காரணம் காட்டி என் மாமியார் கைலாஷுக்கு ரெண்டாவது கல்யாணம் பண்ணி வைக்க முயற்சி பண்றா… கைலாஷைப் பிரிஞ்சா நான் செத்துடுவேன். என் லைப் உன் கைலதான் மீனா…”
கடைசியில் வென்றது கங்காதான்.
மருந்து மாத்திரைகளை உட்கொண்டு அவர்கள் சொன்ன நேரத்துக்கு சொன்ன இடத்துக்கு வந்தாள். சிகிச்சை முடிந்து களைப்புடன் வெளியே வந்தவள் மயக்க மருந்தின் விளைவால் ஏற்பட்ட களைப்பைப் போக்க பக்கத்திலிருந்த விடுதியில் காபி ஒன்றை வாங்கிக் கொண்டாள். கங்காவின் கடுமையான போக்கை அவளால் ஜீரணிக்க முடியவில்லை.
‘இப்ப குழந்தை உருவானா அதுக்கு அப்பா அத்தான். அம்மா நானா இல்லை கங்காக்காவா?’ ஒரே குழப்பமாய் இருந்தது மனது.
திடீரென்று பழக்கமான ஒரு குரல் அவள் காதில் விழுந்தது. காரிலிருந்து இறங்கிய கைலாஷ் வாசலில் பிச்சை கேட்ட பெரியவருக்கு ஹோட்டலில் உணவு வழங்க சொன்னான்.
“இவருக்கு சாப்பாடு தந்துடுங்க. நான் கார்டில் பில் காட்டிடுறேன்” என்றவன்
“பெரியவரே கூச்சப்படாம வேணும்றதைக் கேட்டு வாங்கி சாப்பிடுங்க. வீட்டில் யாராவது இருந்தால் பார்சல் வாங்கிக்கோங்க” என்று அறிவுறுத்தினான்.
“உன் நல்ல மனசுக்குப் பிள்ளை குட்டியோட நல்லா இருப்ப தம்பி” மனதார வாழ்த்தினார் அவர்.
தான் செய்தது சரிதான் என்று நம்ப ஆரம்பித்தாள் மீனா.
‘மாமா என்னை மன்னிச்சுடுங்க… நான் செஞ்சது சரியா தப்பான்னு தெரியல. ஆனால் அக்காவும் நீங்களும் குழந்தைகளோட சந்தோஷமா இருந்தால் அதுவே எனக்கு போதும்’ மருத்துவமனைக்குள் நுழைந்த கைலாஷைப் பார்த்து மனதினுள் மன்னிப்பு கேட்ட மீனா உடனடியாக அவ்விடத்தை விட்டு யார் கண்ணிலும் படாமல் அகன்றாள். அந்த வாரமே தாயுடன் வல்லத்துக்குக் குடி பெயர்ந்தாள்.
மீனாவின் மூலமாக நடந்த சம்பவங்களைக் கேள்விப் பட்ட கைலாஷ் அதிர்ச்சியுடன் அமர்ந்திருந்தான்.
“அன்னைக்கு என்னை பார்த்தப்பவே விவரம் சொல்லிருக்கலாமே”
“யாருகிட்டயும் சொல்ல மாட்டேன். ஊரை விட்டுப் போயிடுவேன்னு சத்தியம் செஞ்சுத் தந்திருந்தேன் மாமா. அதான் அதுக்கப்பறம் வரலை”
“ரமணாவைக் கல்யாணம் செய்துக்க மறுத்ததுக்கும் இதுதான் காரணமா”
“ஆமாம் மாமா… என்ன இருந்தாலும் இவங்களுக்கு நான்தானே அம்மா. இதை ரமணன்ட்ட மறைக்க விரும்பல. அதனால் அவரைக் கல்யாணம் செய்துக்கவும் விரும்பல
அப்பறம் அக்கா இறந்ததும், உங்க ரெண்டாவது திருமணமும் அடுத்தடுத்து அதிர்ச்சியை தந்தது. நிரஞ்சனாவை பார்க்கப் போனேன். என்ன சொல்லி அறிமுகப் படுத்திக்கிறதுன்னு நினைச்சப்பத்தான் தீனா வந்தார். ரெண்டு பேருக்கும் அங்க வாக்குவாதம். ஒரு தகப்பன் குழந்தை மேல காட்டும் அக்கறையை பெரியப்பாவும் சித்தப்பாவும் காட்ட முடியுமான்னு அவர் கேட்டார். அப்பத்தான் நானே உங்களைக் கல்யாணம் பண்ணிக்கனும்னு என்கிற எண்ணம் உருவாச்சு. நான் பணத்துக்கோ இல்லை உங்க மேல இருக்கும் ஆசையிலோ ஏமாத்திக் கல்யாணம் செய்துக்கலை. என் குழந்தைகளோட அம்மா நான் உயிரோட இருக்கும்போது எதுக்கு அவங்க வேற யார்கிட்டயோ வளரணும்னு நினைச்சேன். அதுக்காக நிறைய தப்பு பண்ணிருக்கேன்.
அக்கா மேலையும் அவ வீட்டு மேலையும் இருந்த வருத்தத்தை மனசில் வச்சுக்காம நான் வீடு தேடி வந்ததும் டீ போட்டு, என் பசியறிஞ்சு சாப்பிட பிஸ்கட் கொடுத்திங்க. ஆனா பதிலுக்கு உங்க தங்கமான மனசை நோகடிச்சிருக்கேன். என்னை மன்னிப்பிங்களா”
“மன்னிப்பா… நீ என்கிட்டே கேட்கிறியா… நான் உனக்குக் கொடுத்த வேதனைகளுக்கு எங்கிருந்து மன்னிப்பு கேட்கிறதுன்னு தெரியாம திணறிட்டு இருக்கேன். உன்னை வார்த்தைகளால் குத்திக் குதறி, மனசை வருத்தி, குழந்தைகள் உன்னை அம்மான்னு கூப்பிட விடாம… உன் மனசு எவ்வளவு வேதனை பட்டிருக்கும் மீனா… ”
“உங்க நிலைமைல நான் இருந்திருந்தால் கூட இப்படித்தான் நடந்திருப்பேன் மாமா”
மீனாட்சியின் அருகே நெருங்கியவன் மண்டியிட்டுத் தரையில் அமர்ந்தான்.
“மீனம்மா… முந்தாநாள் நடந்ததுக்கு மன்னிச்சுடு. என் மனசில் எந்த சாத்தான் புகுந்து அப்படி நடந்துட்டேன்னு தெரியல”
பதறியவள் “ஐயோ… மாமா எந்திரிங்க…” கைகளைப் பற்றி எழுப்பி விட்டாள்.
“மீனா என்னைக் கெட்டவனாக்கிட்டியேடி” என்ற கைலாஷின் குரலில் தாங்க முடியாத ஆதங்கம்.
“ஒரு பெண்ணை அவ சம்மந்தமில்லாம பலாத்காரம் செய்திருக்கேன். இந்தக் குற்ற உணர்வு நான் சாகும் வரை என்னை விட்டுப் போகுமா?”
“தப்பு மாமா… ஒரு பெண்ணை அவ சம்மந்தமில்லாமன்னு சொன்னது இந்த இடத்தில் சரி இல்லை. ஒரு முறை கூட நான் என் மறுப்பை தெரிவிக்கல. வேண்டாம்னு சின்னதா தலை ஆட்டி மறுப்புத் தெரிவிச்சிருந்தால் கூட நீங்க விட்டு விலகிருப்பிங்க”
“அப்ப தப்பில்லையா”
“மடமாமாவே… உங்களைக் கல்யாணம் செய்துக்குறேன்னு சொன்னப்பவே இதெல்லாம் நடக்கும்னு எதிர்பார்க்காமலா இருந்திருப்பேன்”
“அப்ப”
“திருமதி. கைலாஷா நடக்க என் மனசு சம்மதிச்சதும்தான் நம்ம திருமணம் நடந்தது”
“அப்ப நாலு மாசம் வேஸ்ட் ஆயிடுச்சா”
“நீங்க மீனாட்சியோட கணவனா மாற எடுத்துகிட்ட டைம் இது”
என் ஜீவன் ஜீவன் நீதானே
என்று தோன்றும் நேரம் இதுதானே
மீனம்மாவைத் தன் கைக்கருகில் நிறுத்திக் கொண்டான்.
தவமின்றி வரமாய் கிடைத்த பொக்கிஷத்தை கலங்க விடக்கூடாது என்ற உறுதி அவன் செயலில் தெரிந்தது.
இருவர் மனதில் நிறைந்திருந்தும், எட்டியும் எட்டாமலும் போக்குக் காட்டிக் கொண்டிருந்த காதல் வரம் முழுமையாகக் கிடைக்கப் பெற்ற அந்த அன்பான தம்பதியினர் வாழ்வு இனிதே தொடங்கியது.



bselva80
Hai mathura super ending,ninache badiye Ganga ratchasi ya than irunthiruka,pasama kekurathu Vera ipidi mirati corner panni kekurathu verala,Ana kalaivani Amma ku pilla ya iruntha Ava Vera epidi irupa?
ena happy news na,babies oda pirapula meenuku Pangu irukurathu than,kovakara kailash a (apidi act vitutu)irunthavan ipidi asadu valiyum pothu super a irukuthu.
thanks for a nice story.next epo ?please come back soon eagerly waiting.god bless u.