வணக்கம் பிரெண்ட்ஸ்.
போன பகுதிக்கு பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் என் நன்றிகள். இனி இன்றைய பதிவு
[scribd id=300311046 key=key-cJPCsS2oX0stWv8Lj7UQ mode=scroll]
அன்புடன்,
தமிழ் மதுரா.
அத்தியாயம் – 9
வீடு பூட்டியிருந்தது. காலையில் மீனாட்சியைக் காயப்படுத்துவதிலேயே குறியாக இருந்ததால் வீட்டு சாவியை மறந்துவிட்டிருந்தான். எங்கே போயிருப்பாள். வீட்டை விட்டால் கோவில். இந்த இரண்டுதான் அவள் உலகம். கோவிலில் சென்று சாவி வாங்கி வரக் கிளம்பினான்.
கோவிலில் முருகப் பெருமானை தரிசித்தவள், பிரதோஷ வழிபாட்டில் அபிஷேகப் பிரியனுக்கு செய்த அபிஷேகத்தைக் கண்குளிர தரிசித்தாள். பின் குழந்தைகளை விளையாட விட்டு பக்கத்தில் அமர்ந்து கொண்டாள். வார இறுதியில்தான் கூட்டம் கோவிலுக்கு வரும். வார நாட்களில் ஏழு மணிக்கு மேல் சிலர் வருவார்கள். அதனால் கோவிலில் சுத்தமாய் கூட்டம் இல்லை. என்னதான் கூட்டமே இல்லை என்றாலும் அந்தந்த நேரத்துக்கு அபிஷேகமும் ஆராதனையும் ஒரு குறையுமின்றி செவ்வன நடந்திடும்.
பெற்ற தாய்தனை மக மறந்தாலும்
பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரை மேவிய உடல் மறந்தாலும்
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்
கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும்
நற்றவத்தவர் உள்ளிரிந்தோங்கும்
நமச்சிவாயத்தை நான் மறவேனே
என்ற பாடலைப் பாடி அம்மையப்பனை வணங்கியவள்
‘எனக்கு உன்னைத் தவிர யாரும் இல்லை. இந்தக் கடமையை நீதான் எனக்குத் தந்தாய். இதை சரிவர நிறைவேற்ற வைப்பதும் உன் பொறுப்பே’ அவளை அறியாமல் கண்களில் நீர் பெருகியது.
“வெரி குட். இந்த மாதிரி கண்ணீர் விடத்தான் அவசர அவசரமா கல்யாணம் பண்ணிட்டு வந்தியா”
அந்தக் குரல் கேட்டதும் அவசர அவசரமாய் அந்த திசை நோக்கினாள்.
“ரமணன்…” அவனை அங்கு எதிர்பாராத அதிர்ச்சியில் முணுமுணுத்தாள்.
“ஆமா மீனா… ஏன் இப்படி செய்த. என்னைக்காவது ஒரு நாள் நம்ப கல்யாணம் நடக்கும்னு நம்பினேன். இப்படி என்னை ஏமாத்திட்டியே”
“நான் ஏமாத்தினேனா… என்னைக்காவது உங்களைக் கல்யாணம் செய்துக்குறதா சொல்லிருக்கேனா”
“நீ சொன்னதில்லை. உனக்குத் தாழ்வு மனப்பான்மை அதிகம். அதனால் பணம் படிப்புன்னு காரணம் சொல்லிட்டு இருந்தியே தவிர என்னைப் பிடிக்காததால் இல்லை. கோவிலில் இருக்கோம்… இப்பயாவது உண்மையை சொல்லு… நீ உங்க அக்கா வீடு மாதிரி வசதியான நிலைமையில் இருந்திருந்தா என்னை மறுத்திருப்பியா?”
ஒரு வினாடி தயக்கம் மீனாட்சியிடம். ‘அப்படி மட்டும் இருந்திருந்தால் இந்தத் துன்பம் எனக்கு இருந்திருக்காதே. மாமாவின் மனதைப் பொய் சொல்லி நோகடித்திருக்க மாட்டேனே… என்னை துரோகியைப் போல மாமா பார்க்க மாட்டாரே…”
ரமணனுக்குக் காட்டாமல் முகத்தை வேறு புறம் திருப்பியவள், வேதனையை மறைத்து மனதை சமன்படுத்திக் கொண்டாள்.
“அப்படி இருந்திருந்தால்… இப்படி இருந்திருந்தால்ன்னு எதையாவது கற்பனையாய் சொல்லாதிங்க ரமணன். இப்ப நான் திருமதி.கைலாஷ் இதுதான் நிஜம், உண்மை, சத்தியம்”
ரமணனுக்குக் காட்ட வேண்டாம் என்று நினைத்து அவள் வேதனையை மறைத்ததை மற்றொருவன் கண்டுவிட்டானே. அதை எப்படி சரி செய்யப் போகிறாள். சாவியை வாங்க வந்த கைலாஷ் முகம் இறுகியது.
“நீ கைலாஷை எப்படி கல்யாணம் செய்துட்ட… உனக்கு அவன் மேல மரியாதை இருக்கு. ஆனால் காதல், கருமாந்திரம் எல்லாம் சுத்தமா கிடையாதுன்னு எனக்குத் தெரியும். உன் அக்கா குழந்தைகளை கவனிக்கணும்னு கல்யாணம் செய்து வச்சாங்களா…. இப்ப ம்ம்ம்…ன்னு ஒரு வார்த்தை சொல்லு. நம்ம புது வாழ்க்கையை ஆரம்பிக்கலாம்”
“சட்.. ரமணன் இதுக்கு மேல பேசினால் உங்க மரியாதை கெட்டுடும். மாமாவை நான் விருப்பப்பட்டுத்தான் கல்யாணம் செய்துட்டேன். இனிமே ஒரு வார்த்தை கூட உங்க கூடப் பேசத் தயாரா இல்லை. நீங்க போகலாம்” அவள் பேசிக் கொண்டிருக்கும்போதே இடையிட்டது அந்தக் குரல்.
“மீனா… இங்கயா இருக்க… உன்னை எங்கெல்லாம் தேடுறது. இன்னைக்கு உன் நினைவு அதிகமா வந்துடுச்சு. அதுதான் சீக்கிரம் ஓடி வந்துட்டேன்” என்ற கைலாஷின் குரலைக் கேட்டு ரமணனின் முகம் கருத்தது. மீனாவோ இந்தப் புது கைலாஷைத் திகிலுடன் பார்த்தாள்.
“சார் யாரு… தெரிஞ்சவரா…”
“உங்க மனைவி கங்கா வீட்டுப் பக்கம். என் பெயர் ரமணன். நம்ம முன்னாடி ஒருமுறை சந்திச்சிருக்கோம். என் பெயர்,விவரம் கேட்டுட்டு இனிமேல் யாரையும் பாலோ பண்ணக் கூடாதுன்னு சொன்னிங்க” தைரியமாகவே சொன்னான்.
“சாரி.. நினைவில்லை. இப்பல்லாம் என் வைப் மீனம்மாவைத் தவிர வேற யாரும் என் நினைவில் இருக்கிறதில்லை. சரி மீனா…. இருட்ட ஆரம்பிச்சுடுச்சு. குழந்தைகளுக்கு தூக்கம் வந்துடும். கிளம்பலாமா”.
மீனா தலையாட்டியபடி குழந்தைகளை தூக்கி ப்ராமில் அமரவைக்க, ஒரு கையால் ப்ராமைத் தள்ளிய கைலாஷ் மறுகையால் மீனாவை நகரவிடாமல் அவளது இடுப்பினை இறுக்கமாக வளைத்துக் கொண்டான்.
அமைதியான அந்த இரவு. குழந்தைகள் உணவு உண்டுவிட்டு தூங்க ஆரம்பித்திருந்தனர். வரவேற்பறையின் சோபாவில் அமர்ந்த வண்ணம் கண்ணாடி ஜன்னலின் வழியே இருட்டை வெறித்துக் கொண்டிருந்தான் கைலாஷ். மீனா பாத்திரம் கழுவி துடைத்து என்று என்னதான் மெதுவாக வேலை செய்தாலும் எல்லா வேலைகளும் முடிந்துவிட்டது. இது வரை வார்த்தைகளால் குத்திக் கிழித்த கைலாஷை விட இந்த அமைதியான கைலாஷ் பயத்தைக் கொடுத்தான்.
முடிவின்றி நீண்ட அமைதி… தண்ணீர் அருந்திவிட்டுத் திரும்பினாள். சமையலறை வாசலில் நின்று கொண்டிருந்தான் கைலாஷ். ‘இவன் எப்போது இங்கு வந்தான். ஏன் இப்படிக் கைகளைக் கட்டிக் கொண்டு முறைத்துப் பார்க்கிறான். ’ பயப்பந்து மனதில் உருண்டது.
வலிய சிரிப்பினை தருவித்துக் கொண்டான். “என்ன திருமதி. கைலாஷ் அவர்களே வேலை எல்லாம் முடிச்சுட்டிங்களா”
தலையாட்டினாள். “இந்த வேலையை சொல்லல. ஆண்களை ஏமாத்துற வேலையை சொன்னேன்” வினாடியில் அவன் முகம் ரத்தமென கோபத்தில் சிவந்தது. சுடும் கங்குகளாய் வார்த்தைகளைக் கக்கினான்.
“என்னடி… அவன் தேவதாஸ், நீ பார்வதியா… கோவிலில் ரெண்டு பேரும் காதல் நாடகம் நடத்துறிங்களா….
அவன் மேல உனக்கு விருப்பமே இல்லைன்னு மட்டும் பொய் சொல்லாதே. நான் என் ரெண்டு கண்ணால உன் முகத்தைப் பார்த்தேன். உன் மனசில் இருந்த ஏமாற்றம், அதை முழுங்கிட்டு நீ சமாளிச்சது. என்னமா நடிக்கிறடி… அவன்கிட்ட பதில் சொல்லாம சாமர்த்தியமா மறைச்சுட்ட. இப்ப என்கிட்டே சொல்லு. அவனை உனக்குப் பிடிச்சதா இல்லையா”
“பிடிச்சது…. “
அருகில் வந்து ஓங்கி ஒரு அறை விட்டான் “என்ன பொண்ணுடி நீ. அவனை காதலிச்சிருக்க. ஆனால் என்னைப் பொய் சொல்லிக் கல்யாணம் செய்திருக்க”
“பிடிச்சதுன்னு தான் சொன்னேன். காதலிச்சேன்னு சொல்லலையே”
“ஓஹோ… இப்படி வார்த்தையிலேயே விளையாடுவிங்களோ… அதெப்படி… எனக்கும் மாமாவுக்கும் உறவிருக்குன்னு ஊர் முன்னாடி கூசாம சொன்னியே அது மாதிரியா”
பேசாமல் நின்றாள். அருகில் வந்து முகத்தை நிமிர்த்தினான்.
“உண்மையை மறைச்சு ஏமாத்துறது, முக்கியமான விஷயத்தை சொல்லாம ஏமாத்துறது, வார்த்தையால இதயத்தைக் குத்திக் கிழிக்கிறது, நம்ப வச்சுக் கழுத்தருக்குறது இதெல்லாம் அக்காவும் தங்கையும் சின்ன வயசிலிருந்தே விளையாடிப் பழக்கமோ. எனக்கு இந்த மாதிரி விளையாட்டெல்லாம் தெரியாது. இப்ப சொல்லு… என்னை ஏன் கல்யாணம் செய்துட்ட… என் மேல பயங்கர லவ்வா…”
இல்லை என்று தலையாட்டினாள். அவள் கைகளை முறுக்கி முதுகுக்குப் பின்னே கொண்டுவந்தவன் அவள் முகத்தைப் பார்த்தவாறே நக்கலாகக் கேட்டான்.
“அப்ப அவன் மேல லவ்வா?…
என்ன தைரியமிருந்தா அவன் என்னை விட்டுட்டு ஓடி வர சொல்லுவான். உன் மனசில் என்னைப் பத்தி என்னதான் நினைச்சிட்டு இருக்க. என் முகத்தைப் பார்த்து சொல்லுடி” அவள் முகத்தை நிமிர்த்தினான்.
“நான் உன் கையைப் பிடிச்சா அவனுக்கு ஏன் முகம் கருக்குது….
இங்க பாரு… எனக்கு என் பொழப்பைப் பாக்கணும். பிள்ளை குட்டிகளைக் காப்பாத்தணும். ஊரில் வாங்கி வட்டி, குட்டி போட்டிருக்குற கடனை அடைக்கணும். இந்தக் கவலையோட சேர்த்து உன்னை அவன் கூட்டிட்டு போவானோ இல்லை இவன் கடத்திட்டு போவானோன்னு நினைச்சுட்டு இருக்க முடியாது. அதனால் ஒரு முடிவுக்கு வந்திருக்கேன்.
எந்த உறவு நமக்குள்ள இருக்குன்னு ஊரைக் கூட்டி சொன்னியோ அது பலிக்கப் போகுது.
எஸ் மிசர்ஸ்.கைலாஷ் இது வரைக்கும் என் குழந்தைகளுக்கு அம்மா வேலையை மட்டும்தானே செஞ்ச. இன்னைல இருந்து ஒரு மனைவியோட கடமையையும் சேர்த்து செய்ற”
கலங்கிய கண்கள் அதிர்ச்சியைக் காட்டின. கையறு நிலையால் துடித்த இதழ்கள் அவனிடம் தன் நிலையை சொல்ல முடியாமல் பதறின.
“மறுக்க முடியாம கஷ்டமா இருக்குல்ல. தாலி கட்ட வைக்கும்போது இப்படித்தான் என் மனசும் கதறுச்சு” என்றபடி துடித்த அவளது இதழ்களின் துடிப்பைத் தனது இதழ்களால் முரட்டுத்தனமாய் அடக்கினான். கைலாஷின் மனதில் மீனாவின் செய்கையால் சூறாவளியாய் சுழன்று கொண்டிருந்த கோபமும் ஆதங்கமும் மெது மெதுவாய் அடங்கி அமைதி பெற்றது.



bselva80
Hi mathura,pavam ramanan,nijamave meenu a sincere a love panni irupangala pola?inthe kailash ku ena achu en ipidi arrogant a behave panran,pavam meena,avaluku ena problem en ipidi amaithiya iruka?