ஹாய் பிரெண்ட்ஸ்,
சென்ற பதிவுக்கு கமண்ட்ஸ் செய்த, விருப்பம் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. இனி இன்றைய பதிவு.
[scribd id=275173801 key=key-gY2jYFVaEAfErgHWiA6o mode=scroll]
அன்புடன்,
தமிழ் மதுரா.
அத்தியாயம் – 6
மருத்துவமனைக்கே உரித்தான டெட்டால் நெடி. அந்த நிமிடம் கைலாஷின் ஜாதகமே அங்கிருந்த சப்இன்ஸ்பெக்டர் ராஜியின் கையில்.
“என்ன சார் இது. படிச்சுவங்க நீங்களே இந்த மாதிரி அயோக்கியத்தனம் பண்ணலாமா. அந்தப் பொண்ணு நல்லவேளை பிழைச்சுட்டா. இல்லைன்னா நீங்க கம்பி என்ன வேண்டியதுதான்”
மீனாட்சியின் மீது கண்மண் தெரியாத ஆத்திரத்தோடுதான் பார்க்க வந்தான். ராஜி அப்போது விசாரித்துக் கொண்டிருந்தார். அதனால் வெளியில் தாமதித்தான்.
“உன் சொந்தக்காரங்க விலாசம் சொல்லு ?”
“கைலாஷ் மாமாதான் உலகத்தில் இருக்குற ஒரே சொந்தம்”
குரலை உயர்த்தினார் ராஜி “ஏய்… டிராமா போடாதடி… வெளிநாட்டு ஆம்பளை, பணம் பறிக்கலாம்னு திட்டம் போடுறியா.. கைலாஷுக்கு உன்னை தெரியவே தெரியாதுன்னு சொல்லிட்டார்”
“மாமாவா அப்படி சொன்னார்.. இருக்காது.. நான் நம்ப மாட்டேன்”
“நம்பலைன்னா போ… கைலாஷத் தவிர வேற சொந்தம்”
“மாமாவும் குழந்தைகளும்தான் இந்த உலகத்தில் எனக்கிருக்குற சொந்தம்”
“இங்க பாரு, நான் டாக்குமென்ட் பண்ணி மேலிடத்துக்கு அனுப்பணும். அதுக்கு இந்த மாதிரி வசனம் எல்லாம் ஒத்து வராது. ஆதாரம் இருக்குற மாதிரி உறவு இருந்தா சொல்லு”
கண்களை மூடிக் கொண்டாள் மீனா. அந்த மூடிய கண்களிலிருந்து நீர் வழிந்தது.
“எனக்கும் மாமாவுக்கும் இருக்குற உறவு என் மனசு சம்பந்தப்பட்டது. இதுக்கு ஆதாரம் என்கிட்டே இல்லை. வேணும்னா உங்க டாக்குமென்ட்ல நான் அனாதைன்னு எழுதிக்கோங்க”
கிழிந்த நாராக அந்த அரசு மருத்துவமனையின் அழுக்குப் படுக்கையில் பார்த்தவனுக்கு கோபம் வடிந்து பரிதாபம்தான் சுரந்தது.
“என்னை அவளுக்கு கார்டியன்னு எழுதிக்கோங்க மேடம்” என்ற கைலாஷின் குரல் கேட்டு நன்றியுடன் பார்த்தாள் மீனா.
“தாங்க்ஸ் மாமா”
நொந்தபடியே மருத்துவமனை வளாகத்தில் நின்றுந்தனர் கைலாஷின் குடும்பத்தினர். “என்ன பாவம் செஞ்சோமா அந்தக் குடும்பத்தில் பொண்னெடுத்துட்டுக் கஷ்டப்படுறோம்”
உள்ளே இன்ஸ்பெக்டரிடம் பேசிக் கொண்டிருந்தான் கைலாஷ்
“உங்ககிட்ட நடந்ததெல்லாம் சொல்லிட்டேன். நீங்களே இவ செய்தது நியாயமான்னு சொல்லுங்க மேடம். இவ வயசென்ன என் வயசென்ன. என்னைவிட பத்து வயசு சின்னவ. இவங்க அக்கா மேல இருக்குற பாசத்தில் கடமைன்னு பெனாத்திட்டு இருக்கா. முடிஞ்சா நல்லபுத்தி சொல்லி அனுப்புங்க” வேதனையை மறைத்தபடி சொன்னான்.
கைலாஷ் அனைவரையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டு தான் மட்டும் மருத்துவமனையிலே தங்கிவிட்டான். அவ்வப்போது மீனாட்சியை சென்று பார்த்தான். அவளுக்கு உணவு தரலாமா என்று கேட்டு வாங்கிக் கொடுத்தான். அவள் மேல் கோபமும் வந்தது. அதே சமயத்தில் கங்காவின் மேல் அவளுக்கிருக்கும் பைத்தியக்காரத்தனமான அன்பை நினைத்து வியப்பாகவும் இருந்தது.
“என் மேல கோபமா வருதா மாமா” பதிலே சொல்லவில்லை கைலாஷ்.
“பேசாம இருக்காதிங்க.. ரெண்டு திட்டாவது திட்டுங்க”
“உன் மேலக் கோபப்பட்டு என்னாகப் போகுது? நான் சொன்னா கேட்கவா போற”
“அப்படி எல்லாம் சொல்லாதிங்க மாமா… இந்த உலகத்தில் நான் ரொம்ப மதிக்கிறது உங்களைத்தான். உங்களுக்காக என்ன வேணும்னாலும் செய்வேன்”
அவளை திரும்பிப் பார்த்தான். “அப்ப இந்த மாதிரி முட்டாள்தனம் செய்யமாட்டேன்னு சத்தியம் பண்ணு”
“ப்பூ.. இவ்வளவுதானா… கையை நீட்டுங்க”
கைகளை நீட்டினான்.
“நம்ம கல்யாணத்துக்கு அப்பறம் இந்த மாதிரி முட்டாள்தனமெல்லாம் சத்தியமா செய்ய மாட்டேன்”
“உன்னை…. “ பற்களைக் கடித்தான் “ப்ளாக்மெயில் பண்றியாடி”
“ஆமாம் மாமா ப்ளாக்மெயில்தான். நான் கெஞ்சிப் பாத்தேன். நீங்க புரிஞ்சுக்க மாட்டிங்கிறிங்க. வேற வழியில்லாமதான் இப்படி செஞ்சேன். குழந்தைங்க சூரியா சந்திரா கூட நூறு வருஷம் வாழணும்னு ஆசைப்படுறேன் மாமா. என்னைப் பாதியில் போக வச்சுடாதிங்க” அவள் கண்களில் நீர் வழிந்தது.
சப் இன்ஸ்பெக்டர் ராஜி நடந்ததை கவனித்துக் கொண்டே இருந்தார்.
“நான் கவுன்சிலிங் தர ஏற்பாடு செய்றேன். கவலைப்படாம போங்க” என்று அவனிடம் தைரியம் சொன்னார்.
ராஜி நல்ல புத்தி சொல்லி மீனாவின் மனதை மாற்றுவார் என்ற நம்பிக்கை வந்த வேகத்திலேயே பொய்த்துப் போனது. இரண்டு நாட்களில் கைலாஷின் வீட்டுக்கே வந்துவிட்டார் ராஜி..
“முடியல கைலாஷ். உங்களைக் கல்யாணம் செய்தே ஆவேன்னு ஒத்தக்கால்ல நிக்குறா. ஒரு அடி கூட அடிச்சுப் பார்த்தேன். ஆனால் கேட்க மாட்டிங்கிறா. இந்த மாதிரி ஒரு நெஞ்சழுத்தம் பிடிச்சவளை இதுவரைக்கும் பார்த்ததில்லை”
“இப்ப என்ன செய்றது மேடம்”
“ஒரு சிஸ்டர் மாதிரி அட்வைஸ் சொல்லட்டுமா… பேசாம இவளையே கல்யாணம் செய்துக்கோங்க”
அதிர்ந்து போய் பார்த்தான் கைலாஷ்.
“நிஜம்மா சொல்றேன். இவ கூட பேசினதில் இவளோட வாழ்க்கையே இவ அக்கா கூடத்தான். உங்களையும் உங்க குழந்தைகளையும் நல்லா பாத்துக்குவான்னு என் மனசில் படுது”
“அவங்க சொல்றதை நானும் ஆமோதிக்கிறேன் கைலாஷ்” நிரஞ்சனாவின் குரல் இடையிட்டது.
“நிரஞ்சனா… “
“இது பயந்து எடுத்த முடிவில்லை. அவளைப் பொருட்படுத்தாம கல்யாணம் செய்துட்டோம்ன்னா திரும்பவும் தற்கொலைக்கு முயற்சி பண்ணுவா. எத்தனை தடவை காப்பாத்த முடியும்”
“நிரஞ்சனா சொல்றதும் நிஜம்தான். இந்த அளவுக்கு பிடிவாதம் இருந்தா காரணமும் அதே அளவுக்கு பலம்மா இருக்கணும். அவ மனசில் வெளிய ஏதோ ஒண்ணு மறைஞ்சு இருக்குன்னு படுது” என்றார் ராஜி யோசனையோடு.
சிறிது நேரம் கைலாஷ் பேசாமல் ஜன்னலுக்கு வெளியே வெறித்தான்.
கங்கா இறந்ததில் விளைந்த குழப்பங்களிலிருந்து இப்போதுதான் மீண்டு கொண்டிருக்கிறான். இப்போது மீனாட்சியின் செய்த காரியத்தின் விளைவால் ஊர் வாயில் அரைபட்டுக் கொண்டிருக்கிறான். “ரெண்டு பேருக்கும் ஏதாவது தொடர்பிருந்திருக்கும். இல்லைன்னா அவ சாகத் துணிஞ்சிருப்பாளா… “ என்று ஊரார் பேசுவது அவன் காதில் விழாமலில்லை. ஆனால் நிரஞ்சனா வீட்டினரும், அவன் உடன் பிறந்தோருமே அவனை சந்தேகக் கண்களுடன் பார்க்க ஆரம்பித்தனர்.
“கைலாஷ் அவ கூட அப்படி என்னடா அரை நாள் பேசின” என அவன் தாய் சுலோச்சனாவும் கேள்வி எழுப்பினார்.
எந்த திசையிலும் தப்பித்து செல்ல வழியில்லாத ஒரு தனித்தீவில் மாட்டிக் கொண்டதாய் பட்டது. இதிலிருந்து மீள ஒரே ஒரு வழிதான் உள்ளது.
“நான் மீனாட்சி கிட்ட கடைசியா ஒரு தரம் பேசணும்”
தன் முன்னே இறைஞ்சும் கண்களுடன் நின்ற கைலாஷைக் கண்டு மீனாட்சியின் மனதில் ரத்தம் வடிந்தது. மருத்துவமனையிலிருந்து அவனது வீட்டுக்கு வந்திருந்தாள். அங்கு மட்டுமின்றி அவன் குடும்பத்தினரும் அந்த கூடத்தில் கூடியிருந்தனர்.
“மீனா… சரி நடந்ததை மறந்துடலாம். நீ செஞ்ச காரியத்தால் எல்லாரும் நம்ம ரெண்டு பேருக்கு இடையிலும் உறவு இருக்குறதா எல்லாருமே சொல்றாங்க. அதன் காரணமாத்தான் நீ தற்கொலைக்கு முயற்சி செய்ததா என் மேல் ஒரு பழி வந்திருக்கு. நமக்குள்ள உறவு இல்லைன்னு மாத்திரம் இவங்ககிட்ட சொல்லிடு”
ஒரு வினாடி அமைதியாய் இருந்தாள்.
“உங்களுக்காக உயிரையே தர இருந்தவ ஏன் பொய் சொல்லமாட்டா. குழந்தை மேல சத்தியம் செய்ய சொல்லுங்க. ” என்றார் நிரஞ்சனாவின் தாய்.
மெதுவாகக் குழந்தைகளுக்கு அருகில் நடந்து சென்றவள். அவர்களைத் தூகிக் கொண்டாள்.
“இவங்க ரெண்டு பேரு மேல சத்தியமா சொல்லுறேன். எனக்கும் மாமாவுக்கும் உறவிருக்கு. என்னைத் தவிர யாரும் அவரைக் கல்யாணம் பண்ணிக்கக் கூடாது. மாமா வேற பொண்ணைக் கல்யாணம் செய்துக்கனும்னா என் பொணத்து மேல ஏறித்தான் தாலி கட்டணும்”
அனைவரும் அதிர்ந்து போய் பார்க்க, நிரஞ்சனா பூஜையறையில் சுவாமிக்கு முன்பு வைக்கப் பட்டிருந்த மஞ்சள் முடித்து வைக்கப் பட்டிருந்த தாலிக் கயிறில் ஒன்றினை எடுத்து கைலாஷின் கையில் தந்தாள்.
“உங்களுக்கு வேணும்னுற வாய்ப்பு தந்தாச்சு கைலாஷ். அவ கழுத்தில் இந்தத் தாலியைக் கட்டுறதைத் தவிர உங்களுக்கு வேற வழியில்லை”
நிரஞ்சனாவின் கைகளிலிருந்த தாலியை வாங்கி இயந்திரத்தைப் போல மீனாட்சியின் கழுத்தில் கட்டினான். மீனாட்சியின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.
“அழறியா… இனிமே உனக்கு வாழ்க்கை முழுசும் அழுகை தாண்டி” பல்லைக் கடித்தபடி அடிக்குரலில் மீனாட்சிக்கு மட்டும் கேட்கும்படி சீறியவன் அந்த இடத்தை விட்டு புயல் போல் வெளியே சென்றான்.



Prabha
Interesting ud..nalaa maatikittan kailash..meena torture continues (anbu tholai)