ஹாய் பிரெண்ட்ஸ்,
போன பதிவுக்கு கமெண்ட்ஸ் அளித்த தோழிகள் ஆர்த்தி, சிந்து, ஷாந்தி, சிவா, செல்வா, சுபா அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. உங்களது கமெண்ட்ஸ் எனக்கு பதிவைத் தொடர்ந்து தர உற்சாகம் தந்திருக்கிறது.
இனி காதல் வரம் யாசித்தேன் – 4 உங்களுக்காக
[scribd id=275022508 key=key-yuoS33z5Y8iM6uRZOlUT mode=scroll]
அன்புடன்,
தமிழ் மதுரா.
அத்தியாயம் 4
கர்ப்பம் தரிக்காதது மனதளவில் கங்காவை மிகவும் பாதித்தது. உறவினர்கள் சாதாரணமாய் கேட்டால் கூட அவளைக் குத்திக் காண்பிப்பதாய் நினைத்தாள். தினமும் ஒரு விரதம், நோன்பு என்று உடலை வருத்திக் கொண்டவளைக் கடுமையாகத் திட்டினான் கைலாஷ்.
“குழந்தை பிறக்கத் தாமதமானதால் நம்ம ஒண்ணும் பாவம் செய்தவங்களும் இல்லை. திருமணமாகி ஒரே வருஷத்தில் பிறப்பதால் எல்லாரும் புண்ணியம் செய்தவங்களும் இல்லை. உணவு, சுற்று சூழல், மனம் இதெல்லாம் கூட முக்கியமான காரணி. நம்ம உடம்பையும் மனசையும் முதலில் ஆரோக்கியமா வச்சுக்கலாம். நம்மை வார்த்தைகளால் காயப்படுத்துறவங்களை விட்டு கொஞ்சம் விலகி இருக்கலாம். எல்லாம் தன்னால நடக்கும்”
கைலாஷ் சொன்னதின் விளைவு அவன் குடும்பத்திலிருந்தே சற்று தள்ளி இருக்கத் தொடங்கினாள் கங்கா.
“உங்கம்மா பேசுறப்ப எல்லாம் இன்னமும் குளிக்கிறயான்னு கேக்குறாங்க. உங்களுக்குப் பாத்த பொண்ணுங்க தகவல் எல்லாம் சொல்லி அவங்கல்ல ஒவ்வொருத்தருக்கும் எத்தனை குழந்தைங்க பிறந்திருக்குன்னு அடுக்குறாங்க. எனக்கு கஷ்டமா இருக்கு. இனிமே குழந்தை பிறந்ததும்தான் உங்க வீட்டுக்குப் போவேன்” என்று ஒரே பிடியாக சொல்லிவிட்டாள்.
கைலாஷ் தன் தாய் சுலோச்சனாவிடம் ஏன் இப்படி சொன்னீர்கள் என்று கடிந்து கொண்டால் அவர் பார்க்கும் கோணமோ முற்றிலும் வேறாக இருந்தது. “உன் பொண்டாட்டி பொய் சொல்லுறாடா… நான் எதார்த்தமா அந்த பொண்ணுங்களுக்கு குழந்தை இருக்குன்னு சொன்னேன். இவளைப் பத்தி ஒரு வார்த்தை கூட சொல்லல. ஆனால் சொன்னேன்னு சொல்லி நம்ம உறவை வெட்டி விடப் பாக்குறா பாரேன். இவ இப்படி ஒரு கைகாரியா இருப்பான்னு தெரிஞ்சிருந்தா அந்த ராமநாதனோட பொண்ணையே உனக்குக் கல்யாணம் பண்ணி வச்சிருப்பேன். அவள மட்டும் கல்யாணம் பண்ணிருந்தா உன் பிள்ளைங்க இந்நேரம் நர்சரி ஸ்கூல் படிச்சுட்டு இருந்திருக்கும்” என்று மூக்கை சிந்துவார். தலைவலியோடு தொலைப்பேசியை வைப்பான் கைலாஷ்.
திருமணமாகி ஐந்தாவது வருடத் தொடக்கத்தில் இந்தியா சென்று சிகிச்சை மேற்கொள்ளலாம் என்று பிடிவாதம் பிடித்தாள். அறையிலிருந்த தொலைக்காட்சிப் பெட்டியைக் கீழே உடைத்து முகம் வீங்க அழுது முரட்டுப் பிடிவாதம் பிடித்த கங்காவை அதிக செல்லம் கொடுத்து கெடுத்துவிட்டதாக கைலாஷ் நினைத்தது அன்றுதான்.
“கங்கான்னு நல்லா பேர் வச்சாங்க… என் தலைமேல ஏறி நின்னுட்டு இருக்க…. “ வேதனையை மறைத்து புன்னகையுடன் சொன்னான்
“இப்ப நம்ம ரெண்டு பேருக்கும் என்ன குறை. குழந்தை பிறந்தா பிறக்கட்டும். இல்லை இப்படியே சந்தோஷமா இருந்துட்டு போகலாம்”
“ஏன் கைலாஷ் இப்படி சொல்லற. உன கிட்ட ஏதாவது குறை இருக்கா. அதனால்தான் சோதனை செய்துக்க வர மாட்டிங்கிறையா.”
“தெரியல கங்கா. குறை யாருகிட்ட வேணுமானாலும் இருந்துட்டு போகட்டும். நம்ம இப்படியே இருக்கலாம்”
கடைசியில் கங்கா உண்ணா நோன்பு இருந்துதான் அவனை சம்மதிக்க முடிந்தது.
“சோதனைல ஏதாவது பாதகமா சொல்லிட்டா அதை உன்னால தாங்க முடியுமான்னு தெரியல. நிஜம்மா சொல்லப்போனா என் மேல குறைன்னு சொன்னா என்னை டைவேர்ஸ் செய்துடுவியோன்னு பயம்மா இருக்கு”
“அப்படி சொல்லாதே கைலாஷ். நம்ம யார்கிட்ட குறை இருந்தாலும். சரி செய்யும் அளவுக்கு மருத்துவம் முன்னேறி இருக்குன்னு நீதானே சொன்ன”
“ஒகே…. உனக்கு குழந்தை எவ்வளவு முக்கியம்னு காமிச்சுட்ட. அப்ப நான் சொல்லறதை ஏத்துட்டா இதுக்கு சம்மதிக்கிறேன்”
“சொல்லு”
“பிரச்சனை எதுவும் இல்லைன்னா ஓகே. ஆனா யாராவது ஒருத்தர் மேல குறை இருந்தாலும் ஒரு குழந்தையைத் தத்து எடுத்துக்கலாம்”
“தத்தெடுத்த குழந்தை எப்படி நம்ம குழந்தையாகும்”
“ஏன் ஆகாது? கிருஷ்ணர் யசோதை வயிற்றில் பிறந்தாரா? அவரை நந்தகோபரின் மகனாத்தானே பார்க்கிறோம். பஞ்ச பாண்டவர்கள் அஞ்சு பேருக்கும் பாண்டுவா அப்பா. புராணத்திலும் இதிகாசத்திலும் கூட குழந்தைகள் வளரும் இடம் தான் அவர்கள் குலம்னு சொல்லிருக்காங்க”
“எப்படியாவது வாதாடி சம்மதிக்க வச்சுருங்க”
முதல் கட்டமாக திருச்சி சென்று இருவரும் சோதனைகள் செய்து கொண்டனர். கைலாஷுக்கு ஒரு குறையும் இல்லை. கங்காவுக்கு இயற்கையான முறையில் கருத்தரிக்க வாய்ப்பில்லாததால் சோதனைக் குழாய் மூலம் கருத்தரிக்க முடியும் என்று மருத்துவம் சொன்னது. குழந்தை பேறுக்கான மருத்துவத்தையும் இந்தியாவிலேயே செய்ய வேண்டும் என்று வற்புறத்த ஆரம்பித்தாள் கங்கா.
“அறிவிருக்கா உனக்கு. என் வேலை அமெரிக்காவில். இந்தியாவில் எப்படி சிகிச்சை எடுத்துக்க முடியும்”
“கைலாஷ்… நம்ம ஊரில் கைராசிகார டாக்டர்ஸ் இருக்காங்க. அதனால் இங்க கிடைக்கும் அதே தரமான சிகிச்சை அங்கேயும் கிடைக்கும். நமக்கு எப்படியும் செயற்கை முறையில்தான் கருத்தரிக்க முடியும்னு சொல்லிட்டாங்க. அவங்க சொல்லுற நேரத்தில் லீவ் போட்டுட்டு ஊரில் இருக்குற மாதிரி பாத்துக்கோங்க. டிக்கெட் கூட எங்கப்பாவே புக் செய்துடுவார். அமெரிக்காவில் தனியா கஷ்டப்படுறதை விட எங்க அம்மா வீட்டில் இருந்தால் எனக்கும் மனசு தைரியமா இருக்கும். ப்ளீஸ் மாட்டேன்னு சொல்லிடாதிங்க” என்று கண்ணீர் விட்டவளை அடக்க வழியில்லாது சம்மதித்தான்.
ஏற்கனவே வருடத்தில் பாதிநாள் கணினி மூலமும், அலைப்பேசி மூலமுமே இருவரும் தொடர்பு கொள்கிறார்கள். இரண்டு வருடங்கள் சோதனைக் குழாய் மூலம் முயன்றும் தோல்விதான். நாளுக்கு நாள் கங்காவின் உடல் நலம் கெடுவதைக் கண்டு கவலைப் பட்டான்.
“கங்கா ரெண்டு வருஷம் முயற்சி செய்தாச்சு. இனிமே எனக்குப் பொறுமை இல்லை. ஒழுங்கா கிளம்பி ஊருக்கு வா”
“இந்த ஒரு தடவை ப்ளீஸ்” கெஞ்சினாள்
“சரி இதுதான் நமக்கு லாஸ்ட் சான்ஸ். இது பலிச்சாலும் பலிக்கலைன்னாலும் நீ ஊருக்கு வந்து சேருற. இயற்கையோ செயற்கையோ எதுன்னாலும் இங்கேயே பார்த்துக்கலாம். நம்ம ரெண்டு பேரும் வேற வேற நாட்டில் இருந்துட்டு குழந்தை பெற முயற்சி செய்றது பைத்தியக்காரத்தனமா இருக்கு”
அவனது கண்டிப்பான குரல் இனி என் முடிவை மாற்ற நினைக்காதே என்று எச்சரித்தது.
இந்த முறை வழக்கமான மருத்துவரின் சிக்கிச்சையை நிறுத்திவிட்டு, பக்கத்தில் வேறு மருத்துவமனைக்கு சென்றனர் கங்காவின் பெற்றோர்கள். புதிதாகத் தொடங்கப்பட்ட அந்த மருத்துவமனையின் ராசியான டாக்டர் சிகிச்சையை ஆரம்பித்தார்.
தெய்வாதீனமாக அந்த முறை கங்காவின் வயிற்றில் குழந்தை தங்கிவிட்டது. இரட்டைக் குழந்தை என்று மருத்துவர் சொல்ல, கண்களில் இமை போலக் காத்தனர் அனைவரும். விமர்சையாக வளைகாப்பு கொண்டாடப் பட்டது. விழாவுக்கு வந்த கைலாஷ் தான் வந்தவுடன் முன் வந்து நிற்கும் மீனாட்சியை காணாது தேடினான்.
“கங்கா எங்க உன் தங்கை ஆளே காணோம்”
“எங்க சித்தப்பா இறந்ததும் அவ சித்தி ஊருக்கே போயிட்டா.. “ பெரிய வயிறால் நடக்க முடியாமல் மூச்சு வாங்கியபடியே சொன்னாள் கங்கா.
“சித்தப்பா இறந்துட்டாரா… என்கிட்டே ஏன் முன்னாலே சொல்லல” திகைப்பாய் கேட்டான் கைலாஷ்
“அவ சரியில்ல மாப்பிள்ளை. நல்ல மாப்பிள்ளை தேடி அலைய ஆரம்பிச்சுட்டா. யாரோ ஒருத்தன் கனடால வேலை பாக்குறானாம் அவளைப் பொண்ணு கேட்டு வந்துட்டான். இந்த மாதிரிக் கழுதைகளை எல்லாம் வச்சு மேய்க்க முடியாதுன்னு கங்கா அப்பா அவங்க ஊரில் கொண்டு போய் விட்டுட்டு வந்துட்டார்” முந்திக் கொண்டு சொன்னார் மாமியார்.
அவர் சொன்னதை நம்பவே முடியவில்லை கைலாஷால். அவன் மாமியாருக்கு மீனாவைப் பிடிக்காது என்பதை ஒருவாறு ஊகித்து வைத்திருந்தான். ப்ளஸ்டூவுடன் படிப்பை நிறுத்தி இருந்தவளை மேற்ப்படிப்பு படிக்க சொல்லி, கையோடு விண்ணப்பத்தையும் வாங்கி வந்தவனை கங்காவின் தாயார் முறைத்ததை அவனால் எப்போதும் மறக்க முடியாது.
ஒருமுறை கல்லூரியிலிருந்து வீட்டுக்கு வந்தவளை பஸ் ஸ்டாப்பில் பார்த்து வீட்டில் இறக்கி விட்டான். அன்று இரவு ஏதோ வேலையாக வெளியே சென்று திரும்பி வந்தவன் கண்களில் கங்காவின் தாய் கலைவாணி ஓங்கி அறைந்தது பட்டது.
“அவர்தான் கூப்பிட்டாருன்னா உன் அறிவு எங்கடி போச்சு. இனிமே மாப்பிள்ளை இருக்கும் சமயம் நீ வீட்டுக்கு வரவேண்டாம்” என்று அவர் சொன்னது காதில் விழவும் திகைத்துப் போனான். கங்காவிடம் சொல்லி வருத்தப் பட்டான்.
“இருட்டில் தனியா நடந்து வந்தவளை கூட்டிட்டு வந்தது தப்பா. இத்தனைக்கும் ஆட்டோல தானே ரெண்டு பேரும் வந்தோம். அதுக்கு உங்கம்மா இவ்வளவு கடுமையா பேசுறாங்களே. பாவம் மீனா…. “
அவனை கண்டிப்பான பார்வை பார்த்த கங்கா பதிலளித்தாள். “அம்மாவுக்கு எப்படி நடந்துக்கணும்னு தெரியும். நீங்க தலையிடாதிங்க”
தங்கை மேல் மாறாத அன்பு கொண்டவள் தன் மனைவி என்ற தன் நினைப்பு பொய்யானதைக் கண்டான். அன்று முதல் மீனாட்சி விஷயத்தில் தலையிடுவதில்லை கைலாஷ்.



kurinji
hai tamil,
ganga talmel eri auraa super………..
meenvai ponnu kettu vanthathu yaar…………