ஹாய் பிரெண்ட்ஸ்,
போன பகுதிக்கு பின்னூட்டம் இட்ட, விருப்பம் தெரிவித்த தோழிகள் அனைவருக்கும் நன்றி. இனி இரண்டாவது பகுதி உங்களுக்காக.
[scribd id=274858235 key=key-jUSAoH52InQBC0rczoel mode=scroll]
அன்புடன்,
தமிழ் மதுரா.
அத்தியாயம் – 2
தனது மனதில் எழுந்த கோபத்தை கைகளை இறுக்கி அடக்கிக் கொண்டான் கைலாஷ். மீனாட்சியின் முகத்தைப் பார்த்தான். அந்த சாந்தம் தவழும் முகத்தில் ‘உனக்கு உதவி செய்கிறேனே அதற்கு அனுமதி கொடேன்’ என்று உரிமையுடன் கேட்கும் பாவம்தான் இருந்தது. ஏற்கனவே இவள் அரை வேக்காடு. இவள் சொல்வதின் பொருள் உணர்ந்துதான் சொல்கிறாளா? இல்லை நான்தான் உணர்த்த வேண்டுமா?
“மீனாட்சி விளையாடாதே. ஆளு வளர்ந்த அளவுக்கு அறிவு வளரல உனக்கு”
அமைதியாய் தண்ணீரை வெறித்தாள் மீனா. அவளது கண்களில் கண்ணீர்.
“நிஜம்மா விளையாடல மாமா. உங்க கல்யாணத்தைப் பத்திக் கேள்விப் பட்டதுமே ஒரே அதிர்ச்சியாயிடுச்சு. நேத்தி பூரா உங்களுக்கு பேசி முடிச்ச பொண்ணு… அவ பேரென்ன… நிரஞ்சனா… அவ வீட்டுப் பக்கம் இருக்குற கோவிலில் உக்காந்து அவளைக் கண்காணிச்சேன். அவ வேண்டாம்… உங்களுக்கு சரி படமாட்டா”
நிரஞ்சனாவைக் கண்காணித்தாளா… இதை அவர்கள் வீட்டினர் அறிந்தால்…
நினைத்ததும் தலையே வலித்தது கைலாஷுக்கு. இரண்டு கைகளிலும் தலையைப் பிடித்தபடி அமர்ந்து விட்டான்.
“தலைவலிக்குதா மாமா?”
பதிலே சொல்லவில்லை. இருந்தும் கைப்பையிலிருந்து ஒரு குரு தைல பாட்டிலை நீட்டினாள்.
“இதைத் தடவிக்கோங்க மாமா. கால்மணில ஓடிரும்”
“கொஞ்ச நேரம் தனியா விடறியா” எரிந்து விழுந்தான். மீனா அங்கிருந்து அகன்று விட்டாள்.
மீனாட்சியின் குரலில் தெரிந்த தீவிரத்தில் தெரிந்த புது மீனா அவனுக்கு பயமளித்தாள். கைலாஷ் அறிந்த மீனாக்ஷி சாது. அடித்தாலும் வாங்கிக் கொண்டு சிரிக்கும் அன்புடையவள்.
கங்காவின் தந்தை அழகேசன் பெரம்பலூரில் டைல்ஸ் கடை வைத்திருந்தார். திருச்சிராப்பள்ளியின் வளர்ச்சியால் கட்டுமானப்பணி பெருகியது. பெரம்பலூரும் அதில் முத்துக் குளிக்க, பலனாக அவர் நிற்க நடக்க நேரமின்றி கிடைத்த பொழுதையெல்லாம் காசு வாங்கிக் கல்லாவை ரொப்பிக் கொள்வதில் செலவழித்தார். அவரது மனைவி கலைவாணிக்கு கடைத்தெருவுக்கு சென்று கணவன் ஈட்டிய பொருளை அழிப்பதற்கே நேரம் சரியாக இருந்தது. இவர்களின் ஒரே மகள் கங்கா. மகள் மேல் தாய் தந்தை இருவருக்கும் அன்பு அதிகம். அவள் மனதில் நினைப்பதையும் கண்களில் பார்ப்பதையும் கூட தம்பதியினர் வாங்கிக் குவித்தனர். இதனால் கங்கா தோல்வி என்றால் என்னவென்றே தெரியாதவளாய், சற்று கர்வியாய் வளர்ந்தாள். அதற்காக அவளை முழுவதும் கெட்டவள் என்று முத்திரை குத்திவிட முடியாது. பிரியம், அன்பு, ஒட்டுதல், கோபம், பணத்திமிர் எல்லாமே கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.
அழகேசனின் தம்பி சொக்கேசன். பேருக்குத் தகுந்தாற்போல போதையிலே சொக்கியே கிடப்பார். அவர் மனைவி வைதீஸ்வரி. கணவனே கண்கண்ட தெய்வம் என்றிருந்ததால் இப்போது வாடகை வீட்டில் ஒரே பெண் மீனாட்சிக்கு மூன்று வேளையும் உணவு தருவதையே பெரிய சாதனையாக எண்ணி வாழ்ந்து வருகிறார். அவருக்குத் திருமணம் நடந்த பொழுது அழகேசனும் சொக்கேசனும் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாய் வாழ்ந்தனர்.
சொக்கேசனுக்கு மதுப் பழக்கம் அதிகமானதும் அண்ணன் தம்பிக்கு பிரச்சனை வந்தது. அப்போது மீனாட்சி நான்கு வயது குழந்தை. சகோதரர்கள் இருவருக்கும் வாக்குவாதம் தடித்தது. சொக்கேசனை வீட்டை விட்டு வெளியேறச் சொன்னார் அழகேசன். தம்பியும் ரோஷமாக வீட்டை விட்டு வெளியேறினார். அருகிலேயே ஒரு வீட்டை வாடகைக்குப் பிடித்துக் குடியேறினார். மாதா மாதம் வேலைக்கு செல்லாமலேயே சொத்தில் இருந்து தனக்கான பங்குப் பணம் வர, மேலும் கெட்டழிந்தார்.
அண்ணனுக்கும் தம்பிக்கும் பகை இருந்தாலும் மீனாக்ஷி பள்ளி முடிந்ததும் பக்கத்துத் தெருவிலிருக்கும் பெரியப்பா வீட்டுக்கு ஓடி விடுவாள். அவளுக்கு அதுதான் தங்கள் வீடு என்றே மனதில் பதிந்திருந்தது.
அழகேசனுக்கு தான் வீட்டை விட்டு அனுப்பாமல் இருந்திருந்தால் தம்பி ஓரளவாவது குடும்பத்தை கவனித்திருப்பான். மனைவியின் தூண்டுதலால் வெளியே அனுப்பி அவன் முழுதும் கெட்டுப் போக வழி செய்து விட்டோமே என்ற உறுத்தல் இருந்தது. அதனாலேயே மீனாட்சி வரவைத் தன் மனைவி கலைவாணி தடுக்காமல் பார்த்துக் கொண்டார். கங்காவின் வற்புறுத்தலும் சேர்ந்து கொண்டது. அதனால் கலைவாணியும் மீனாட்சியின் வரவை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை.
கங்கா தன்னை விட மிக இளையவளான மீனாட்சியை விரும்பினாள். அடம் பிடிக்கும் கங்காவை சமாதனப்படுத்த மீனாவாலேயே முடியும்.
“அச்சோ… அக்கா நீ பெரியவ இல்லையா. மருந்து சாப்பிடமாட்டேன்னு அடம் பிடிக்கலாமா? மூணு நாள் மாத்திரை சாப்பிடு. உடம்பு குணமாயிடும். அப்பறம் நம்ம ரெண்டு பேரும் ஐஸ்க்ரீம் சாப்பிட்டு வரலாம்” என்று சொல்லும்போது யார் பெரியவள் என்ற சந்தேகம் நிச்சயமாய் எழும். இந்த அன்புச் சங்கிலியில் கட்டுண்டு இருந்ததால், கலைவாணி அவளை மெதுவாக வேலைக்காரியாய் மாற்றியதை மீனாட்சி உணராமல் போனாளோ?
மீனாட்சி வளர வளர பெரியப்பா வீட்டில் சமையல், கடைத்தெருவுக்கு செல்வது, நாய்களை கவனித்துக் கொள்வது, வீட்டினர் இல்லாத நேரம் தேடி வருபவர்களுக்குப் பொறுப்பாய் பதில் சொல்வது என்று அவளது பணிகள் விரிந்தன. அதை விருப்பமாகவே செய்தாள்.
கங்காவும் கோபம் அதிகமானால் சில நேரம் கை நீட்டி விடுவாள். மீனாவுக்கும் கோபம் வரும். சற்று நேரத்தில்
“மீனா இவ்வளவு நேரம் என்னை விட்டு எங்கடி போய்ட்ட” என்ற கங்காவின் குரலைக் கேட்டவுடன் மீனாட்சியின் கோபம் பறந்துவிடும். இருந்தாலும் அடுக்களையிலே நிற்பாள். கங்கா அடுப்படியில் நுழைவதே மீனாவைத் தேடி மட்டுமே.
“மீனா… அரை நாளா என் கண்ணில படவே இல்லை. நான் அடிச்சது தப்புத்தான். பதிலுக்கு வேணுமானா என்னை ரெண்டு அடி அடிச்சுக்கோ. ஆனால் நீயும் என்னை வெறுத்துடாதடி”
என்று கண்ணீர் வடிக்கும் கங்காவை அணைத்தபடி
“நீ என்னக்கா பெரிய வார்த்தை எல்லாம் சொல்ற.. உன்னை என்னால வெறுக்க முடியுமா? இப்ப போட்டிருக்கும் பாவாடை நீ தந்தது. ஸ்கூல் படிக்கிறது உன் காசில். புஸ்தகம் எல்லாம் உன்னுது. எல்லாம் நீ தந்ததுதான். அடிச்சா மட்டும் வாங்கிக்க மாட்டேனா என்ன?” என்று பூவாய் சிரிப்பாள் .
“இருந்தாலும் போனமாசம் பூ ஜாடியைத் தூக்கி உன் மேல எறிஞ்சிருக்கக் கூடாது. நெத்தியில் தையல் வேற போட வேண்டியதாயிருச்சு. சித்திக்குத் தெரிஞ்சது என்னைக் கொன்னு புதைச்சிருவாங்க”
“நான் படியிலிருந்து தவறி விழுந்துட்டதா அம்மாட்ட பெரியம்மாவும் நானும் சொல்லிருக்கோம். நீயும் அதையே சொல்லு”
“எனக்காக ஏண்டி பொய் சொல்ற… நான் செஞ்ச காரியத்துக்கு சித்திட்ட ரெண்டு அறை வாங்கிருக்கணும். அப்பத்தான் எனக்கு புத்தி வரும்”
எங்க அம்மா அப்பா மாசாமாசம் ஒழுங்கா பணம் தராங்களா? சித்தி ஏண்டி இப்படி இளைச்சு போயிருக்காங்க”
“ஆஸ்த்மா அதிகமாயிடுச்சுக்கா.. டாக்டர்கிட்ட கூட்டிட்டு போவணும்”
வீட்டுக்குக் கிளம்பும் மீனாவின் கைகளில் பணத்தைத் திணிப்பாள் கங்கா. “இந்தா நாளைக்கு சித்தியை டாக்டர்ட்ட கூட்டிட்டுப் போ”
வீட்டில் வைதீஸ்வரி மகளைத் திட்டுவாள்.
“விடிஞ்சதும் அவங்க வீட்டுக்கு ஓடிப் போயாச்சா… உங்க பெரியப்பா ஏற்கனவே நம்ம சொத்தை ஏப்பம் விட்டுட்டு எதோ மாசாமாசம் பிச்சையாட்டம் போடுறார். நாளைக்கு வக்கீலைப் பாத்து கேஸ் போட்டு நம்ம பங்கு சொத்தை வாங்குறேன்”
“அறிவோட பேசும்மா… கேஸ் போட்டா உன் கொள்ளுபேரன் தான் அனுபவிக்க முடியும். அதுக்கு முன்ன அவரே பாத்து ஏதாவது கொடுத்தாலும் உன் வீட்டுக்காரன் அதை வித்துக் குடிச்சுட்டுத்தான் ஓய்வார்”
அவள் சொல்லி முடிக்கவில்லை. மகளின் பர்சைத் திறந்து ஆராய்ந்த சொக்கேசன். அதிலிருந்த ஐநூறு ரூபாயைத் தூக்கிக் கொண்டு சாராயக் கடைக்கு வேகமாய் நடை போட்டார்.
“பாத்தியா… உன்னை டாக்டர்ட்ட கூட்டிட்டு போக அக்கா தந்த காசு. இப்ப சாராயக் கடைக்கு போகுது. முதல்ல இந்த ஆளைத் திருத்து. அப்பறம் என்னைத் திருத்தலாம்”




bselva80
Ayyo so sweet character mathura,ipidi oru aprani a ,pavam a heroine parthu remba nal achupa,thanks.