வணக்கம் பிரெண்ட்ஸ்,
சென்ற பகுதிக்கு கமெண்ட்ஸ் தெரிவித்த அனைவருக்கும் என் நன்றிகள். இனி இன்றைய பதிவு.
[scribd id=301019435 key=key-Wo3jTnMKpvsZsGTpxoU6 mode=scroll]
அன்புடன்,
தமிழ் மதுரா.
கங்காவுக்கு சிறு வயதிலிருந்தே பிடிவாதம் அதிகம். அவளுக்கு கோபம் வந்தால் வீட்டில் பொருட்கள் எல்லாம் பறக்கும். சிறுபெண் என்று யாரும் பொருட்படுத்தவில்லை. ஆனால் வளர வளர அவளது இந்த மூர்க்க குணம் அதிகரித்தது. கூடுதலாக கையையும் நீட்டி அருகிலிருப்பவர்களை அடிக்க ஆரம்பித்தாள்.
“பெரியம்மா அக்கா வெறி பிடிச்ச மாதிரி எல்லாத்தையும் உடைக்கிறா. ஏன்னு கேட்டா என்னை அடிக்கிறா” என்று கங்காவின் கையால் அடி வாங்கிய மீனாட்சி சொன்னபோது யாரும் கண்டு கொள்ளவில்லை
சிறு பெண்கள் இப்போது அடிப்பார்கள் பின்னர் சேர்ந்து கொள்வார்கள் என்றெண்ணிப் அவள் செயலைப் பொருட்படுத்தவில்லை கங்காவின் தாய் கலைவாணி.
ஆனால் கங்காவின் கோபம் நாள்கணக்கில் நீடித்தது. கண்கள் சிவக்க, ஆங்கார முகத்துடன் பத்திரகாளியைப் போல தன் தாய் தந்தையிடமே கையை நீட்டியதும் அவர்களுக்கு தங்கள் மகளுக்கு உடலில் பிரச்சனை இருக்குமோ என்று பட்டது. தான் கேட்ட பலகாரத்தை செய்து தர மறுத்த அம்மாவின் முடியைப் பிடித்து இழுத்து முதுகில் ஓங்கி அடித்தாள் கங்கா. கை வலிக்கும் வரை அடித்ததும் மயங்கி விழுந்தாள். அதற்குள் மீனா தொலைபேசியில் பெரியப்பாவிடம் தகவல் சொல்லியிருந்தாள். மீனாட்சியின் உதவியுடன் போர்களமாய் இருந்த வீட்டை சரி செய்து, அவசர அவசரமாய் யாருக்கும் தெரியாமல் கங்காவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்கள்.
அங்கிருந்த மருத்துவர் பரிட்சித்துவிட்டு மருந்து மாத்திரைகளைப் பரிந்துரைத்தார்.
“இப்போதைக்கு அவங்களை அமைதிப் படுத்த மருந்துகள் தந்திருக்கேன். ஆனாலும் உங்க பொண்ணுக்கு ஒரு விதமான மனநோய் இருக்கோன்னு சந்தேகப்படுறேன். இந்த மாதிரி ஆட்களுக்கு சிறிய அதிர்ச்சி கூட பெரிய விளைவை ஏற்படுத்தும். மன அழுத்தம் தரும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளைக் கூட தவிர்த்திடுங்க. தனிமைல இருக்க விடக் கூடாது. அது அவர்களுக்கு தற்கொலை மாதிரி எண்ணங்களைக் கூடத் தோற்றுவிக்கும்.
மொத்தத்தில் இவங்களோட நடவடிக்கைகள் ஆர்பரிக்கும் அருவி மாதிரியோ அலையடிக்கும் கடலாகவோ இல்லாம அமைதியான குளம் போல அதிர்வில்லாம இருக்கணும்.
உங்க பொண்ணுக்கு நான் சொல்லுற மருத்துவரிடம் மேற்கொண்டு ஆலோசனை பெற்று சிகிச்சை எடுத்துக்கோங்க. முக்கியமான விஷயம் மருத்துவர் சொல்லுற மருந்தை தவறாம எடுத்துக்கணும். நடுவில் நிறுத்தக் கூடாது அது ரொம்ப முக்கியம்”
அவர்களின் ஆலோசனைப்படி மருந்து மாத்திரை சாப்பிட்டு வந்தாள் கங்கா. மகளின் இந்த நிலமை வெளியே தெரிந்து விடக் கூடாது என்று ஜாக்கிரதையாக அடுத்தவர்களிடம் பழகுவதைத் தவிர்த்தனர் கங்காவின் குடும்பத்தார். வேலைக்காரர்களைக் கூட நிறுத்திவிட்டனர். இதில் ஒரே விதிவிலக்கு மீனாட்சி. யாருடனும் பழகாத கங்காவுக்கு மீனாட்சிதான் ஒரே தோழி.
“எனக்கு என்னவோ மனநோயாம். நிறைய மருந்து மாத்திரை தர்றாங்க. நான் பைத்தியமாடி மீனா… என்கூட இனிமே நீ பழக மாட்டியா” குழந்தை போலத் தன்னிடம் கேட்ட கங்காவின் நிலமை புரிந்து அரவணைத்துக் கொண்டாள்.
“அக்கா உன்னை யார் பைத்தியம்னு சொன்னா. உனக்கு முடி எங்க எல்லாரைவிடவும் நீளமா இருக்கு. எல்லாரையும் விட நீதான் கூடுதல் நிறம், அழகு. பணம் நம்ம சொந்தக்காரங்களை விட உன்கிட்ட தான் அதிகம் இருக்கு. அதே மாதிரி கோபமும் கொஞ்சம் ஜாஸ்தியாயிடுச்சு. அதுதான் பிரச்சனை. நம்ம என்ன செய்யலாம். அதிகமா இருக்குற மத்ததை வச்சுகிட்டு, கோபத்தை மட்டும் குறைச்சுடலாம். ஓகேயா”
“அது அவ்வளவு சுலபமாடி”
“எல்லாம் சுலபம்தான். நீ ஒழுங்கா மருந்து சாப்பிடு. வெளிய போயி கத்தல் கூச்சல் எல்லாம் போடக் கூடாது. அமைதியா இருக்கணும். உன் ஆத்திரத்தை ஆதங்கத்தை வீட்டில் எங்க மேல காமி. சரியா” என்றாள் சிறுபிள்ளைக்கு சொல்வதைப் போல.
மாத்திரைகளை வருடக்கணக்கில் உண்டு வந்த கங்காவின் உடல்நிலையில் எவ்வளவோ முன்னேற்றம். அவர்களுடன் துணைக்கு மருத்துவமனைக்கு சென்று வரும் மீனாட்சி தன் தாயிடம் கூட கங்காவைப் பற்றிய விஷயங்களைப் பகிர்ந்து கொண்டதில்லை. அந்த அளவுக்கு கலைவாணியுடன் சேர்ந்து கங்காவின் விஷயம் வெளியே போகாதவாறு மீனாட்சியும் ரகசியம் காத்தாள்.
இவர்கள் ரகசியமாய் வைத்திருந்தது தப்பில்லை. கங்காவின் பிரச்சனையை கைலாஷுக்கும் கடைசி வரை தெரியாமல் போனது தான் பரிதாபம்.
கங்காவுக்கும் கைலாஷுக்கும் திருமணம் முடிவானதும் ‘மாப்பிள்ளை வீட்டில் இதெல்லாம் சொல்லணுமா’ என்ற அழகேசனின் கேள்வியை ஆரம்பத்திலேயே வெட்டி எறிந்தார் கலைவாணி.
“நல்லாருக்கே நீங்க செய்றது. ஏதோ சின்ன வயசில் கங்கா கோபக்காரியா இருந்தா. வளர வளர தன்னால சரியாயிருச்சு. இதைப் போயி இந்த டாக்டருங்க பெருசு படுத்திட்டாங்க. நீங்க இந்த சாதாரண விஷயத்தை வெளிய சொன்னா… ஊரே சேர்ந்து நம்ம பொண்ணைப் பைத்தியம்னு கதை கட்டிவிட்டுடுவாங்க. அதனால உங்க திருவாயை மூடிட்டு இருங்க”
“இருந்தாலும் மாப்பிள்ளை காதில் மட்டுமாவது போட்டு வைக்கலாமா. அவர்தான் குடித்தனம் நடத்தப் போறவர். அங்க இவளுக்கு முன்ன மாதிரி ஏதாவது நடந்துடுச்சுன்னா”
“விவரம் புரியாம பேசாதிங்க. மாப்பிள்ளைட்ட சொன்னா அவங்க அம்மாவுக்கு விஷயம் போகாம இருக்குமா… இவ கல்யாணம் முடிஞ்சதும் பாரின் போயிடுவா. மாப்பிள்ளை பையனும் சாது. அதிர்ந்து கூட பேச மாட்டிங்கிறார். வெளிநாட்டில் குடித்தனம் பண்றதால மாமியார் நாத்தனார் புடுங்கல் இல்லை. இந்தியாவுக்கு வரப்ப கங்காவை நம்ம வீட்டில் தங்க சொல்லலாம். மொத்தத்தில் கங்காவைப் பூ போலப் பாத்துக்கலாம்னு தான் இந்தக் கல்யாணத்துக்கே சம்மதிச்சேன். உள்ளூர்ல இருந்தா சொந்தக்காரங்க பிடுங்கல்ல டென்சன் ஆயிடுவா. இந்த ஏற்பாட்டால அவளுக்கு நன்மைதான்” என்ற மனைவியின் திட்டம் அழகேசனுக்கும் பிடித்தது.
திருமணம் சிறப்பாக நடந்தது. கைலாஷும் கங்காவும் மகிழ்ச்சியாகவே வாழ்ந்தார்கள். கைலாஷின் கலகலப்பான பேச்சும், அலட்டாத சுபாவமும் கங்காவை கவனித்துக் கொண்ட பாங்கும் அவளுக்கு தன்னிடமிருந்த குறைகளையே மறக்கச் செய்தன. அமெரிக்காவுக்கு வந்தாள். மனநிலையில் இப்போது ஒரு கோளாறும் இல்லாததால் மாத்திரைகளைத் தொடுவதே இல்லை.
“ஏதோ சின்ன வயசில் கோபம் வந்தது. அதுக்கு டெஸ்ட், மருந்து, மாத்திரை கொடுத்து காசு புடிங்கிட்டாங்க. இப்ப ஒரு வருஷமா மாத்திரை சாப்பிடல என்ன குடி முழுகிப் போச்சு” என்று தாயாரே சொன்ன பிறகு அது ஒன்றும் தப்பாகவும் தோன்றவில்லை கங்காவுக்கு. அமெரிக்காவுக்கு மாத்திரைகளைக் கூட எடுத்துப் போகவில்லை.
குழந்தை பிறக்காத கவலையில் இருந்தவள், தனக்குள்ள உடல் பிரச்சனை காரணமாக சோதனைக் குழாய் மூலம் குழந்தை பெறுவதற்கான சிகிச்சையை மேற்கொண்டாள். அப்போது கூட அந்த மகப்பேறு மருத்துவரிடம் முன்னர் மேற்கொண்ட மனநல சிகிச்சை பற்றிய விவரங்களைத் தெரிவிக்கவில்லை. அது அந்த நேரத்தில் மிகச் சிறிய விஷயமாகவே பட்டது. ஹார்மோன்கள் செய்த மாற்றத்தால் சாதாரணமான பெண்களையே அசாதாரணமான மனநிலைக்கு மாறும் சோதனைக் குழாய் சிகிச்சை, முன்பே மூட் ஸ்விங்கினால் பாதிக்கப்பட்டிருந்த கங்காவை இருமடங்கு கஷ்டப்பட வைத்தது.
ட்ரீட்மென்ட் நடக்கும் சமயத்தில் கைலாஷ் சில நாட்கள் விடுமுறையில் வந்துவிட்டு சென்றுவிட்டான். அதனால் அவளது மாற்றங்கள் அவன் பார்வையில் பெரிதாய் படவில்லை.
ஆனால் கங்காவின் மாற்றங்களைக் கண்ட கலைவாணி ஐந்தாவது மாதமே வளைகாப்பு போட்டுத் தன்னுடன் வைத்துக் கொண்டார்.
“மாப்பிள்ளை ரெட்டை குழந்தைன்னு சொல்றாங்க. இந்த சமயத்தில் கங்காவை கூட்டிட்டு போனால் உங்களால் பாத்துக்க முடியாது. நாங்க பிரசவம் முடிஞ்சதும் அனுப்புறோம்” என்று திட்டவட்டமாய் மாமியார் சொன்னார்.
“கங்கா இத்தனை நாள்தான் என்னை விட்டுப் பிரிஞ்சிருந்த. குழந்தைகள் பிறக்கும் சமயத்தில் உன்கூட இருக்கணும்னு எனக்கு ஆசை இருக்காதா”
“நீங்க காலைல ஆபிஸ் போனால் சாயந்தரம்தான் வருவிங்க. வீட்டில் தனியா உக்காந்திருக்கணும். ஏதாவது ஆத்திர அவசரம்னா நீங்க உடனே கிளம்பி கூட வர முடியாது. ப்ளீஸ் கைலாஷ் நான் அம்மா வீட்லயே இருக்கேன்” என்று தன் தாய் சொல்லித் தந்ததை அந்தக் கிளிப்பிள்ளை ஒப்பித்தது. மனைவியே இவ்வாறு சொன்ன பிறகு மேலும் வற்புறுத்த கைலாஷுக்கு மனம் வரவில்லை. அந்த சமயத்தில் இரு உயிர்களை சுமந்து நிற்கும் அவளது நலனே பெரிதாகத் தோன்றியது.
கங்காவின் பிரசவ சமயம், மீனாட்சி உடல் நிலை சரியில்லாத தாயுடன், தாயின் சொந்த ஊரான வல்லத்துக்கே சென்று விட்டாள். அதனால் கங்காவை கவனிப்பது கலைவாணியின் பொறுப்பாயிற்று, கங்காவின் உடல்நிலை காரணமாக எட்டாவது மாதம் தொடங்கியவுடன் அறுவை சிகிச்சை மூலம் இரண்டு குழந்தைகளும் பிரசவமானது. தகவல் தெரிந்து ஓடி வந்தான் கைலாஷ். அங்கு அவன் பார்த்தது புது கங்காவை.
குழந்தைகள் இன்குபேட்டரில். கங்காவோ மருத்துவமனையில். ஓடி ஓடி தாயையும் இருபிள்ளைகளையும் தனியாக கவனித்து கலைவாணி களைத்துவிட்டார். மீனாட்சி இருந்தால் இந்த சமயத்தில் உதவியாக இருக்கும் என்று எண்ணினான்.
“தனியா கஷ்டப்படுறிங்களே, மீனாட்சியை கூப்பிட்டுகோங்க அத்தை” சொல்லி முடிக்கவில்லை எங்கிருந்தோ பறந்து வந்த க்ளுகோஸ் பாட்டில் அவன் முகத்தில் பட்டு உடைந்தது. தலைவிரி கோலமாய் கண்களை உருட்டியபடி கங்கா அவனை அனல் கக்கும் பார்வையுடன் முறைத்தாள்
“ஏன் அவளைப் பாக்காம இருக்க முடியலையா…”
“கங்கா … “ அதிர்ச்சியில் அவனால் பேச முடியவில்லை.
“உனக்கு பிள்ளை பெத்துத் தர நான் செத்துப் பிழைச்சிருக்கேன். உனக்கு வந்தவுடனே அவ வேணுமோ…”
“கங்கா வாயை மூடுடி..” அடக்கினாள் கலைவாணி
“உனக்குத் தெரியாதும்மா… இவருக்கு அவன்னாதான் இஷ்டம். என்கிட்டயே உன் தங்கச்சியை ரசிக்கிறேன்னு சொல்லிருக்காரும்மா… அப்ப விளையாட்டுன்னு நம்புனேன். இப்பதான் புரியுது இவருக்கும் அவளுக்கும் மனசில் ஏதோ ஒரு ஒற்றுமை இருக்கும்மா… இல்லைன்னா…இது எப்படி சாத்தியம்” மேற்கொண்டு தொடர முடியாமல் ஓவெனக் கதறினாள்.
“மாப்பிள்ளை தப்பா எடுத்துக்காதிங்க…. குழந்தை பொறந்ததும் இவளுக்கு கொஞ்சம் உடம்புக்கு முடியல” கங்காவின் வாயைப் பொத்தியபடி கைலாஷிடம் சமாதனம் பேசினார். .
அதற்குள் சுதாரித்திருந்தான் கைலாஷ் “ஆமாம் கங்கா… எனக்கும் மீனாட்சிக்கும் என்ன ஒற்றுமை தெரியுமா.. நாங்க ரெண்டு பேரும் உன் மேல அளவு கடந்த அன்பு வச்சிருக்கோம்… போதுமா… “ வாயால் சொன்னாலும் கங்கா சொன்ன வார்த்தைகள் அவன் மனத்தைக் கொன்றன. அமைதியான மனைவிக்கு எதனால் இத்தனை ஆத்திரம், கோபம் என்று புரிந்து கொள்ள முடியாது தவித்தான்.
குழந்தை பிறந்து கிட்டத்தட்ட இருபது நாட்களுக்குப் பின் வீட்டுக்குத் திரும்பினார்கள்.
வீட்டில் கங்கா ஒவ்வொன்றுக்கும் அடம் பிடித்தாள். குழந்தைகளை அருகே கொண்டு வந்தாலே
“இதுங்களைப் பாக்கவே பிடிக்கல… என் கண் முன்ன காட்டாம தூக்கிட்டுப் போ.. “ என்று கத்தினாள். பாலூட்ட மறுத்தாள்.
அவளது இந்த செய்கைகள் மிகுந்த உளைச்சலைக் கொடுத்ததால் மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்டான் கைலாஷ்.
“கைலாஷ் உங்க மனைவி ரொம்ப வயலென்ட்டா நடந்துக்குறாங்க. இதுவரைக்கும் மூணு நர்ஸ்களை அடிச்சுட்டாங்க. குழந்தைகளை அவங்க கிட்டத் தரவே பயம்மா இருந்தது. சில நாள் நல்லாயிருக்காங்க. சில நாள் ரொம்ப ஆங்காரமா இருக்காங்க. அவங்க நடந்துக்குற விதம் பார்த்தால் ரொம்ப நாளா ஏதோ டிஸ்டர்ப்டா இருக்குற மாதிரி எங்களுக்குப் படுது. ஹார்மோன் மாறுதலால் சில பெண்களுக்கு குழந்தை பிறந்தவுடன் கோபமும் வருத்தமும் அதிகமாகும். அதே மாதிரி உங்க மனைவிக்கும் நடந்திருக்கலாம். எதுவாக இருந்தாலும் முதல் காரியமா அவங்க மனம் அமைதியாக கௌன்சிலிங் கொடுத்தே ஆகணும்.எவ்வளவு சீக்கிரம் கொடுக்குறோமோ அவ்வளவு நல்லது” என்று அபிப்பிராயம் தெரிவித்தார்கள்.
கைலாஷ் அதைப் பதமாய் மாமனார் மாமியாரிடம் சொன்னான். கலைவாணி முதலிலேயே மறுத்தார்.
“குழந்தை பிறக்கத் தாமதமானப்ப கங்கா மலடின்னு உங்கம்மா சொல்லிட்டிருந்தாங்க. குழந்தை பிறந்ததும் அவளுக்கு பைத்தியம்ன்னு பெயர் கட்டப் பாக்குறிங்களா”
விஷயம் திசை மாறிப் போவதைக் கண்டு “ஐயோ அப்படியெல்லாம் இல்லைத்த. அம்மா ஏதாவது தவறா பேசிருந்தாலும் நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன். அதை மனசில் வச்சுட்டு கங்காவோட சிகிச்சையைத் தள்ளிப் போட வேண்டாம். கொஞ்சம் மெடிசின் தந்தால் சரியாயிடும்னு சொல்லிருக்காங்க”
“இதுக்கு நான் சம்மதிக்கவே போறதில்லை” என்று அடம் பிடித்தார் கலைவாணி. அவருக்கு மகளின் உடல் நிலையைவிட ஊரார் என்ன சொல்வார்களோ என்ற பயமே அதிகமாய் இருந்தது.
இரண்டு நாட்களில் குடும்பத்தினரை சமாதனப் படுத்தி கங்காவின் சிகிச்சைக்கு சம்மதிக்க வைக்கலாம் என்று நினைத்தான் கைலாஷ்.
கலைவாணிக்கோ, கங்காவை மருமகன் மூலமாக மருத்துவரிடம் அழைத்து சென்றால் அங்கு பல கேள்விகள் கேட்பார்கள். ஏற்கனவே சிகிச்சை செய்ததைக் கண்டு பிடிக்கவும் வாய்ப்பு இருக்கிறது. ஒரு பைத்தியத்தை என் தலையில் கட்டிவிட்டீர்கள் என்று மாப்பிள்ளை குற்றம் சாட்டினால் அதை சமாளிக்க வேண்டும். மாப்பிள்ளை மூலம் அவனது தாய் தகப்பன், உறவினர்கள் என்று விஷயம் பரவும். அதனால் கைலாஷை இப்போதைக்கு எப்படியாவது சமாளித்து ஊருக்கு அனுப்பிவிட்டு, பழைய டாக்டரின் காலில் போய் விழ வேண்டியதுதான் என்ற எண்ணம்.
ஆனால் மறுநாளே யாரும் எதிர்பார்க்காத விதமாக கங்காவின் நிலைமை படு மோசமானது. கத்தியை எடுத்துக் கொண்டவள் குழந்தைகளைக் கொல்ல முயன்றாள்.
கைலாஷின் சொந்தக்காரர்கள் குழந்தையைப் பார்க்க வந்திருந்தனர். நிரஞ்சனாவின் தாய் தந்தையும் அதில் அடக்கம். அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தான் கைலாஷ். மாடியிலிருந்து கீழே வந்த கங்கா. குழந்தைகளையும், கைலாஷையும் மாறி மாறி பார்த்தாள். அவள் முகத்தில் ஏதேதோ உணர்வுகள் வந்து போயின. சமையலறைக்கு சென்றவள் காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்துக் கொண்டு ஆங்காரி போல் பாய்ந்து குழந்தையைப் பிடுங்கினாள்.
“நீங்க ரெண்டு பேரும் எனக்கு வேண்டாம். உங்களை எனக்குப் பிடிக்கவே இல்லை” என்று கத்தியபடி குழந்தைகளைக் குத்தப் போனவள் கைகளைப் பதறிப் போய் பிடித்தான் கைலாஷ்.
“ஏய் கங்கா… என்னாச்சு உனக்கு…. குழந்தையை விடு… “ அவளுடன் போராடிய கைலாஷின் மணிக்கட்டில் கங்கா குத்தியதால் ஆழமான காயம். கங்காவின் பலம் அசுரத்தனமாய் இருந்தது. மற்றவர்கள் அவளை விலக்கிவிட்டு கைலாஷின் கைகளின் காயத்திற்குக் கட்டுப் போட்டபொழுது, குழந்தைகளை எடுத்துக் கொண்ட நிரஞ்சனாவின் தந்தை புயலென வெளியேறி வாசலில் நின்ற ஆட்டோவில் ஏறினார்.
“உடனே எங்கயாவது போப்பா… “ என்ற அவரின் கூச்சலையும்
கைலாஷை விட்டுவிட்டு கத்தியோடு வெளியே ஓடி வந்த கங்காவையும் கண்டு பதறிய ஆட்டோ டிரைவர் முழு வேகத்தில் வண்டியை எடுத்து கண்களிலிருந்து மறைந்தான்.
“தப்பிச்சுட்டியா…” என்று பல்லைக் கடித்த கங்கா ஆங்காரமாய் கண்களை உருட்டி தனது வீட்டைப் பார்த்தாள். வெளியிலிருந்த படிகளின் வழியே புயலென இரண்டு மாடிகள் தாண்டி மொட்டை மாடிக்கு ஏறியவள் அங்கிருந்த வாட்டர் டாங்கில் ஏறி கீழே குதித்தாள்.
கொஞ்ச நேரத்துக்கு முன்பு அனைவரையும் பதைபதைக்க வைத்தவள் ரத்த சகதியாய் தரையில். பத்து நிமிடங்களில் நடந்த இந்த சம்பவங்களை ஜீரணிக்க முடியாத கைலாஷ் அழக் கூட திராணியின்றி ஸ்தம்பித்துப் போனான்.



Porchelvi
OMG….OMG….
என்ன சொல்றதுனே தெரியலைப்பா….I’m totally speechless….
மறைத்து வைத்த ரகசியம் இதுதானா….. விளைவுதான் விபரீதமாக முடிந்து விட்டது….
மீனாவிடம் இன்னும் ஏதேனும் ரகசியம் இருக்கிறதா..??