வணக்கம்,
சென்ற பகுதிக்கு பின்னூட்டம் மற்றும் விருப்பம் தெரிவித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இனி இன்றைய பதிவு
[scribd id=301017260 key=key-JRTvZuj2MC3gPeCWqQjV mode=scroll]
அன்புடன்,
தமிழ் மதுரா.
கைலாஷுக்குத் தன் முகத்தைப் பார்க்கவே அருவருப்பாய் இருந்தது. மீனாட்சியைக் காணக் கூசி வெகு விரைவில் அலுவலகத்துக்குக் கிளம்பினான். அப்படியும் அவன் குளியலறையை விட்டு வெளியே வந்தபோது அவனுக்கான சாண்ட்விச்சும், காபியும் தயாராய் இருந்தது. உணவைத் தொடாமல், ஏன் அவளை ஏறிட்டுக் கூடப் பார்க்காமல் அலுவலகத்துக்கு ஓடினான்.
திட்டத்தில் ஒரு மாற்றமாக மாலையே துணிமணிகளுடன் நின்றாள் நிரஞ்சனா.
“நாளைக்குதான் வரதா சொன்னேன். ஆனால் தனியா வந்து வீட்டைத் தேடிக் கஷ்டப்படுறதை விட இன்னைக்கே வந்துடலாம்னு. உங்களுக்கு தொந்தரவில்லையே” என்றாள். நிம்மதியாக இருந்தது கைலாஷுக்கு. அப்பா… மீனாவை நேருக்கு நேர் சந்திப்பதில் ஏற்படும் குறுகுறுப்பை அடக்கிவிடலாம்.
ட்ரெயினில் வரும்போது மன்னிப்புக் கேட்டாள் நிரஞ்சனா. “உங்ககிட்ட ஒரு உண்மையை மறைச்சுட்டேன் கைலாஷ். மன்னிச்சுடுங்க”
“நீயுமா… என்ன உண்மை சொல்லு“
“என் கணவர் தீனாவோட குடிப்பழக்கத்தாலதான் எங்க ரெண்டு பேருக்கும் விவாகரத்து நடந்தது உங்களுக்குத் தெரியும். நமக்குக் கல்யாணம் நடக்கப் போறதைத் தெரிஞ்சு என்கிட்டே கெஞ்சினார். இனிமே நல்லபடியா வேலைக்குப் போறதாவும் குழந்தையை விட்டு இருக்க முடியாம குடியை விட்டுட்டேன்னும் சத்தியம் செய்தார். வாக்குறுதி தர்றது அவருக்குப் புதுசில்லை. அதனால் அவர் மேல முழு நம்பிக்கை வரல.
உங்களுக்கும் மீனாவுக்கும் கல்யாணம் நடக்குறதுக்கு முதல் நாள் அவர் எங்க வீட்டுக்கு எதிர்ல இருக்குற கோவிலில் இருந்துட்டே என்னை அழைச்சார். எங்களுக்கு அங்க வாக்குவாதம் நடந்தது. அவர் குடியை மறக்க சிகிச்சை எடுத்துட்ட மருத்துவமனை விவரம் எல்லாம் தந்தார். நான் குழப்பத்தோட வீட்டுக்குப் போனேன். வீட்டில் என் மகள் ப்ரியாவுக்கு ஓரளவு விவரம் தெரியும் வயசு. அவங்க அப்பாவைப் பார்த்ததும் அப்பா கூடவே போறேன்னு அடம் பிடிச்சா.
நீங்க நல்லவர்தான். எங்க ரெண்டு பேரையும் நல்லா கவனிச்சுப்பிங்கன்றதில் எனக்கு சந்தேகமில்லை. ஆனால் அப்பாவோட இவ்வளவு நெருக்கமா இருக்கும் ப்ரியாவால் உங்ககூட எந்த அளவுக்கு ஒட்ட முடியும்னு தெரியாம தவிச்சேன். இந்தக் கல்யாணத்தைக் கொஞ்ச நாள் தள்ளிப் போட்டா கூட நல்லதுன்னு தோணுச்சு. தெய்வாதீனமாய் மறுநாள் மீனா கூட உங்களுக்குத் திருமணம் நடந்தது”
அவள் பேசுவதை பிரமிப்புடன் கேட்டான். அன்று அருகிலிருந்த கோவிலில் அமர்ந்து நிரஞ்சனா வீட்டைக் கண்காணித்ததாய் மீனா சொன்னாளே. ஒருவேளை இவர்களின் சம்பாஷணையைக் கேட்டிருப்பாளோ. அதனால்தான் நிரஞ்சனா எனக்கு சரிப்பட மாட்டாள் என்று வாதிட்டாளா. ஆனால் நடந்ததை சொல்லி இருக்கலாமே. சொல்லி இருந்தால் நீ நம்பி இருப்பாயா என்று அவன் மனசாட்சி கேட்ட கேள்வி நியாயமாய் பட்டது. கங்கா வீட்டினரின் மேல் இருந்த மனவருத்தத்தில் மீனா சொல்வதைக் காது கொடுத்தே கேட்டிருக்க மாட்டான். இந்தக் கல்யாணத்தை நிறுத்த மீனா ஜோடித்த கதையாகவே நினைத்திருப்பான்.
“ஆக உன் குழப்பம் தீர, உன் கணவனோட இணைய ஒரு சின்ன அவகாசம் தேவைப்பட்டது. அதுக்குத் தடையா இருந்ததால் என் பக்கத்து நியாயத்தை பேசக் கூட விடாம, குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி, கையில் தாலியைத் தந்து, என் வாழ்க்கையில் குழப்பம் செய்துட்ட…. எல்லா பொம்பளைங்களும் ஒரே குட்டைல ஊறின மட்டைதான்” வெறுப்போடு சொன்னான்.
“மன்னிச்சுடுங்க கைலாஷ். இதைப் பத்தி சப்இன்ஸ்பெக்டர் ராஜிட்ட சொன்னேன். அவங்க ஸ்பெஷல் கவனம் எடுத்துத் தனிப்பட்ட முறையில் நீங்க சம்பந்தப்பட்ட விவரங்களை சேகரிக்கிறாங்க”
“அதைத்தான் முன்னாடியே சொல்லிட்டியே”
கைலாஷ் வெறுப்போடு கண்களை மூடி சீட்டில் சாய்ந்து கொண்டான். பெண்கள் எல்லாரும் சுயநலவாதிகள் என்ற எண்ணம் அவன் மனதில் மேலும் வலுப்பட்டது. முதலில் கங்கா, அவள் அம்மா, இவனுடைய அம்மா, மீனா, நிரஞ்சனா என்று அவன் கூற்றை நிருபிக்கும் ஆட்கள் பெருகிக் கொண்டே போனார்கள்.
“ஹை நிரஞ்சனாக்கா…. வாங்க… வாங்க… “
வீட்டிற்கு வந்த நிரஞ்சனாவை மலர்ந்த முகத்துடன் வரவேற்ற மீனா அவனது புண்பட்ட மனதுக்கு சற்று ஆறுதல் அளித்தாள்.
“மீனா நான் கேட்குற கேள்விக்கு உண்மையான பதில் சொல்லு. நேத்து நான் பேசினதை கைலாஷ் உன்கிட்ட சொன்னாரா. உன் முகத்தைப் பார்த்தால் என்னை எதிர்பார்த்த மாதிரி இல்லையே”
“மாமா என்னவோ சொன்னார்க்கா நான்தான் ஏதோ நினைப்பில் காதில் வாங்கல” என்று கணவனைக் காப்பற்றினாள் மீனா.
எனவே அதற்கு மேல் தொடராமல் “டேய் சூர்யா. சந்திரா சித்தி வந்திருக்கேன் பாருங்க” என்று அவர்களைத் தூக்கிக் கொஞ்சினாள் நிரஞ்சனா.
“இன்னமும் பேச மாட்டிங்கிறானுங்களா”
“எங்கக்கா… நானும் மாமாவும் தானே இவங்ககிட்ட பேசுறோம். அதனால் பேச்சு வரத் தாமதமாகுது”
“குறைப் பிரசவம் வேறல்ல. அதனால் கொஞ்சம் நோஞ்சானா இருக்கானுங்க. ஆனாலும் முந்திக்கு இப்ப பரவால்ல மீனா. எல்லாம் உன் கவனிப்பு” என்று பாராட்டுப் பத்திரம் வாசித்தாள் நிரஞ்சனா. இருவரும் பேசியபடியே இரவு உணவு தயாரித்தார்கள். அனைவரும் உண்டார்கள்.
“இருந்தாலும் கங்கா இறந்ததும் உங்க பெரியம்மா கொஞ்சநாள் இவங்களை வளர்த்துத் தந்திருக்கலாம். முன்னமே தேறி இருப்பாங்க. என்னவோ குழந்தைகளுக்கும் இவங்களுக்கும் சம்மந்தமே இல்லைன்னுற மாதிரி விலகிட்டாங்க. இவனுங்களாலதான் கங்கா இறந்துட்டதாவும் இனிமே இவங்க மூஞ்சிலையே விழிக்க விருப்பம் இல்லைன்னும் சொல்லிட்டாங்க. அதுதான் எங்க எல்லாருக்கும் வருத்தம். உனக்கு இருக்குற பிரியம் கூட இந்தக் குழந்தைங்களோட பாட்டிக்கு இல்லாம போனதுதான் ஆச்சிரியமா இருக்கு” என்று பேச்சுவாக்கில் நிரஞ்சனா சொன்னாள். அந்த செய்தி தந்த அதிர்ச்சி மீனாவின் முகத்தில் தெரிந்தது. பின்னர் சமாளித்துக் கொண்டாள்.
“ஆமாம் நீ ஏன் உங்க அக்கா இறந்தப்பக் கூட வரல”
“அதே சமயத்தில் எங்க அம்மா சீரியசான நிலைமையில் ஆஸ்பத்திரியில் இருந்தாங்க. ஏற்கனவே எங்க அம்மாவும் அப்பாவும் விபத்தில் கடுமையா காயப் பட்டிருந்தாங்க. அப்பாவுக்கு ஆபரேஷன் செய்தும் காப்பாத்த முடியல. அம்மாவை எப்படியோ காப்பாத்தினோம். வல்லத்தில் எங்க மாமா வீட்டுப் பக்கமே போயிட்டோம். எனக்கு அம்மா கூடவே இருக்க வேண்டிய நிலமை.”
அவ்வளவு ஒட்டுதலாய் இருக்கும் மீனாவை ஏன் பக்கத்தில் வைத்துக் கொள்ளாமல் ஊரை விட்டு அனுப்பினார்கள் என்ற கேள்வி கைலாஷின் மனதில்.
“உங்கப்பா இறந்ததும் நீ ஏன் ஊரை விட்டு போன. பெரியப்பா வீட்டில் உதவலையா. உங்க அக்கா உன் சார்பா அப்பாட்ட பேசலையா”
கனத்த மௌனம் மீனாவிடம் “எல்லாரும் அவங்க கவலைகளில் பிஸி. இதில் என்னுடைய ஆதரவற்ற நிலை அவங்களுக்கு பெரிய விஷயமா பட்டிருக்காது. பெரியப்பா தந்த பணத்தில் கொஞ்சம் மிச்சமிருந்தது. அதை மாமா வீட்டில் தந்துட்டு நானும் அம்மாவும் இருந்துட்டோம். அப்பறம் அம்மா கூட ரொம்ப நாள் உயிரோட இல்லை”
“அதுக்கப்பறம் உங்க பெரியம்மா வீட்டுக்குப் போனியா”
“இல்லை போகவே இல்லை. அக்கா இல்லாத வீட்டுக்கு எனக்குப் போகவும் வேணாம்”
“கங்கா மேல உனக்கிருக்குற அன்பைப் பார்த்துப் பொறாமையா இருக்கு மீனா”
“கங்கா அக்காவுக்கும் என் மேல பிரியம் அதிகம். நான் சின்ன குழந்தையா இருந்தப்ப அக்கா கூடவேதான் இருப்பேன். ஒரு நாள் அப்பாவுக்கும் பெரியப்பாவுக்கும் பெரிய சண்டை நடந்தது. நாங்க வீட்டை விட்டு வெளியே போனோம். அக்காவுக்கு எங்கேருந்துதான் வேகம் வந்துதோ தெரியல. என்னைக் கட்டிப் பிடிச்சுட்டு என் தங்கச்சி என்னோடதான் இருப்பான்னு அழுது ஆர்ப்பாட்டம் பண்ணா… கடைசீல எங்க அக்கா தூங்குற நேரம் என்னை தூக்கிட்டு போனாங்க. பெரியம்மா அசந்த நேரத்தில் பக்கத்துத் தெருவில் எங்க வீட்டுக்கு ஓடி வந்துடுவா. என்னை விடமாட்டேன்னு அழுது அடம் பண்ணுவா. அதுக்கப்பறம் நான் தினமும் அவ வீட்டுக்கு வரேன்னு சத்தியம் பண்ணேன். தினமும் அவளைப் போய் பார்ப்பேன்… “ அவள் சொல்லாமலேயே இன்னும் சிலது இருப்பதாய் பட்டது கைலாஷுக்கு.
“நான் இங்கேயே தூங்குறேன்” வரவேற்பறையின் சோபாவில் நிரஞ்சனா படுத்துக் கொண்டாள்.
“மீனா ரூமில் தண்ணி இல்லை. வரும்போது ஜக்கை நிரப்பி எடுத்துட்டு வந்துடு” என்று சொல்லிவிட்டு கைலாஷ் அவனது அறைக்கு சென்றான். மீனாவுக்கு இன்று இரவும் அவள் அவன் அறையில்தான் உறங்கப் போகிறாள் என்பது புலனானது.
மனதைத் தேற்றிக் கொண்டவள் அறைக்கு சென்றாள். படுக்கையைத் தட்டி விரித்துப் போட்டுக் கொண்டிருந்தவன் தன்னருகே நின்ற மீனாவைக் கண்டு என்ன என்பதைப் போலக் கேள்விப் பார்வையை எழுப்பினான்.
“திருமதி. கைலாஷ் அவளோட கடமையை செய்ய வந்திருக்கா”
அவள் முகத்தை உற்றுப் பார்த்தான். அதில் காதலோ, அன்போ இல்லை கடமையை செய்யும் பாவம்தான் தெரிந்தது.
“திருமதி. கைலாஷுக்கு இன்னைக்கு விடுமுறை. போய் தூங்கு” என்றவாறு மறுபுறம் திரும்பிப் படுத்துக் கொண்டான்.
நேற்று நடந்த சம்பவம் அவள் மேல் தனக்குள்ள அன்பைப் புதுப் பரிமாணத்தில் கொண்டு வந்ததாய் நம்பினான் கைலாஷ். ஆனால் அதன் தாக்கம் அவளிடம் இல்லாதது அவனுக்கு வருத்தமாக இருந்தது. அவனது கேள்விகள் அனைத்துக்கும் மறுநாள் விடை கிடைத்தது. ஆனால் அது தந்த அதிர்ச்சியோ அளவிட முடியாததாக இருந்தது.



sindu
so Meena is unaware that her periamma refused to take care of the kids… what shocks are waiting for Kailash?? waiting