ஓய்வில்லாமல் கார்மேகம் தொடுத்த மழை அம்புகள் நிலத்தை முற்றுகையிட்டன. வண்டி சற்று உறுதியான பில்ட் என்பதால் இந்த மழைக்கும் ஓரளவு தாக்குப் பிடிக்கிறது. அமுதாவின் அப்பாவிற்கு மனதில் நன்றி கூறினான் பாரி. நேரம் செல்ல செல்ல பள்ளமான ரோட்டில் புரண்டோடிய மழைநீரின் வேகம் வண்டியையும் இழுக்கத் துவங்கியது. ஜன்னல் கண்ணாடியை லேசாக இறக்கிவிட்டு, தனது தலை நனைவதையும் பொருட்படுத்தாமல் சாலையில் வாய்க்காலைப் போலப் பெருகி ஓடும் தண்ணீரில் எப்படி வண்டியை செலுத்துவது என்று புலப்படாமல் யோசித்தவண்ணம் முன்னேறினான்.
சற்று தாறுமாறாக ஓட ஆரம்பித்த வாகனத்தில் அசைவை உணர்ந்து தூக்கி வாரிப்போட அரைத் தூக்கத்திலிருந்து எழுந்தாள் லலிதா.
“பயப்படாதிங்க லலிதா… தண்ணியோட ஃபோர்ஸ் வண்டியை இழுக்குது”
தன்னையும் அறியாது கண்ணசந்ததை நினைத்து வெட்கியபடி
“சாரிங்க… காலைலேருந்து அலைச்சல். என்னையே அறியாம கண்ணு சொக்கிருச்சு”
“தாங்க்ஸ்ங்க”
“இப்ப எதுக்கு தாங்க்ஸ்”
“உங்க நம்பிக்கைக்குத்தான். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடியே அறிமுகமான ஒரு பெண், என் கூட தனியா வண்டியில் வரும்போது எந்த பயமும் இல்லாம கண்ணசந்தா… நானும் கூட கொஞ்சம் நல்லவந்தான் போலிருக்கு”
“நீங்க நல்லவரா இல்லாம இருந்தால் உங்க கூட வந்திருக்கவே மாட்டேனே”
“புரியலையே…”
“என் மனசு நீங்க நல்லவர்… உங்க கூட வண்டியில் போனால் மட்டுமே பாதுகாப்பா வீட்டுக்குப் போக முடியும்னு சொல்லுச்சு. அதை நம்பித்தான் ஏறினேன்”
“உள்ளுணர்வு சொன்னதை நம்பி இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்திங்களா… தப்பாச்சே… இனிமே இந்தத் தவறை செய்யாதிங்க லல்லி”
அவள் அம்மா அவளை அப்படி அழைத்ததைக் கேட்டு அவனையுமறியாமல் வாயில் வந்துவிட்டது. இது வித்யாசமாக லலிதாவுக்கும் படவில்லை. ஏனென்றால் அவள் தன்னிச்சையாக பதில் சொல்லிக் கொண்டிருந்தாலும் வேகமாக பரவிய குளிர் காற்று ஒன்று அவளது உடலைச் சில்லிடச் செய்தது. வழக்கம்போல மனதில் தோன்றும் அந்த எச்சரிக்கை உணர்வு சற்று அதிகமாகவே இம்முறை எழுந்தது.
“ஒரு நிமிஷம் அந்த மரத்தடியில் இருக்குற மேட்டில் வண்டியை ஏத்துறிங்களா?”
மறுபேச்சு பேசாமல் ஏற்றினான்.
“ஒரு நிமிஷம் அமைதியா இருங்க. குறுக்க ஒரு வார்த்தை கூடப் பேசக் கூடாது” என்றாள்.
அவளது வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு அமைதியாய் அவள் என்ன செய்கிறாள் என்று கவனித்தான்.
“கொஞ்சமா ஒரு இன்ச் அளவுக்கு மட்டும் கண்ணாடியை எல்லாக் ஜன்னல்லயும் திறந்துவிட முடியுமா…”
அவள் கூறியபடியே செய்தான்.
சீட்டில் காலை சமணமிட்டு அமர்ந்தாள்.
“வைப்பரை நிறுத்திடுங்க” என்றதும் நிறுத்தினான்.
கைகளை தனது மடிமேல் வைத்துக் கொண்டாள். காற்றின் இரைச்சலையும், மழையின் ஓசையும் தவிர இருவரின் மூச்சு விடும் ஓசை மட்டுமே அந்த இடத்தில். மெதுவாகக் கண்களை கண்களை மூடினாள்.
யோகினியைப் போல தோற்றமளித்தது அவள் அமர்ந்திருந்த கோலம். மெதுவாக மிக மிக நிதானமாக மூச்சுக் காற்றை உள்ளிழுத்தாள். அதை விட மெதுவாக வெளியே விட்டாள். எதையோ உணர முயல்பவள் போல, ஏதோ ஒரு தகவலை யாரிடமிருந்தோ பெறுபவள் போல அவள் அமர்ந்திருந்ததை வியப்போடு பார்த்தான்.
லலிதாவுக்கு அந்த அலைவரிசைக்கு செல்ல இந்த முறை சற்று நேரம் அதிகம் எடுத்தது. முறையான பயிற்சி விட்டுப் போனது காரணமாய் இருக்கலாம். தன்னை சுற்றிலும் ஒரு ஹீலியம் பலூன் ஒன்று உருவாவதாக உணர்ந்தாள். அதனுள் உடலும் மனமும் லேசாகிப் பறப்பதைப் போலத் தோன்றியது.
இதற்கிடையே காரின் ஜன்னலின் வழியே வந்த காற்று அதிகமாகி எடைமிகுந்த வாகனத்தையே அது அசைத்தது. அங்கிருந்து கிளம்ப வேண்டிய நேரம் வந்துவிட்டதைப் பாரி உணர்ந்தான். ஆனால் இவள் இப்படி தவக் கோலத்தில் இருக்கிறாளே. கிளம்புவதா வேண்டாமா? அவனை அதிகம் சோதிக்காமல் லலிதா கண்களைத் திறந்தாள்.
“இந்த திசையில் இனிமே போக முடியாது பாரி. சரியா சொல்லப் போனால் மழை போகப் போக இன்னும் மோசமாகும். அதுவும் நம்ம கார் கிட்ட இருக்கும் இந்த மரம் கூட சீக்கிரம் விழுந்துடும்னு என் மனசுக்குப் படுது. அதனால நம்ம மேடான இடம் எதிலாவது பாதுகாப்பா சில மணி நேரம் தாமதிக்கணும்”
அவள் சொல்வதை நம்புவதா இல்லை ஏதோ உளருகிறாள் என்று புறக்கணிப்பதா என்று தெரியவில்லை பாரிக்கு. ஆனாலும் அப்போதைக்கு அந்த இடத்தில் நிற்க முடியாது. அவள் குறிப்பிட்ட மரம் விழுந்தால் முதலில் கார்தான் அடிவாங்கும். அதனுள்ளே பயணிக்கும் அவர்களும் உயிர் பிழைப்பதே சந்தேகம்தான். நீரின் வேகம் வேறு வண்டியைத் தள்ள ஆரம்பித்து விட்டது. லலிதாவின் முகத்தில் தெரிந்த உறுதி வந்த வழியே வண்டியை எடுக்கச் செய்தது பாரியை.
“வர வழியில் மேடா ஒரு இடம் பார்த்தேன். அங்க போயிடலாம். இல்லைன்னா வேற ஏதாவது பாதை வழியா போகலாம்”
முயன்று அந்த மேடான பாதைக்கு வந்தார்கள். அதுவோ ஒரு ஊருக்கு செல்லும் வழி. அங்கு ஒரு சிறிய மரம் இருந்தது.
“என்ன ஜோசியக்காரம்மா… இந்த மரம் விழுமா… இங்க நிக்கலாமா இல்லை வேற இடம் தேடலாமா” என்றான் அவளிடம் கிண்டலாய்.
“இங்க நிக்கலாம்… நான் சொன்னதை நீங்க நம்பலையா…” என்று சொல்லியவளின் குரலில் வானளவு வருத்தம்.
“அப்படியெல்லாம் இல்லைங்க. இந்த விஷயம் எனக்குப் புதுசு. வழக்கமா மரத்தடி ஜோசியங்க, இப்ப மந்திரவாதிங்க மாதிரி ஆட்கள்தான் இப்படி குறி சொல்வாங்க. உங்களை மாதிரி ஒரு பொண்ணு சொல்றது எனக்கு ஆச்சிரியமா இருந்தது. அதனாலதான் கிண்டலா பேசிட்டேன் போலிருக்கு. மன்னிச்சுடுங்க”
“பரவால்லைங்க… எங்க வீட்டில் எங்கம்மாவே நான் தியானம் செஞ்சா பயப்படுவாங்க. அதனால் இதெல்லாம் பழகிடுச்சு”
“உங்க அம்மா என்னங்க… தியானம்னா தமிழ்நாட்டுக்கே கொஞ்சம் நடுக்கம்தான். தியானம் முடிஞ்சதும் அடுத்து என்ன பிரேக்கிங் நியூஸ் வருமோன்னு திகிலா இருக்கவங்கதான் ஜாஸ்தி. நீங்க சொல்லுங்க தியானம் மூலம் ஏதாவது ஆத்மா கூட பேசினிங்களா… மழை வர்றதெல்லாம் இதை வச்சு கண்டுபிடிக்க முடியுமா..”
“சில விஷயங்களை நம்பிக்கை இருக்குறவங்க கிட்டத்தான் பேச முடியும். நீங்க கிண்டலா பேசுறிங்க”
“எனக்கு இதுவரை நம்பிக்கை இல்லை. ஆனால் இப்ப நடந்த விஷயம் காக்கா உக்காரப் பனம்பழம் விழுந்த கதைன்னு ஒதுக்கவும் முடியல.உங்ககிட்ட விளக்கம் கேட்கனும்னு தோணுது” சீரியசாக சொன்னான்.
“என்ன பாரி இதெல்லாம் உங்களுக்கு விளையாட்டா… சரிவிடுங்க சொன்னாலும் உங்களால் நம்ப முடியாது”
“உண்மைதான் எனக்கு இதுவரை நம்பிக்கை இல்லை. நம்பிக்கை வந்தவுடன் பேசலாம்”
என்ன செய்வது என்று தெரியாமல் ரேடியோவை நோண்டினான்.
“காற்றழுத்த தாழ்வு மண்டலம் திசை மாறி சென்னை மற்றும் காஞ்சீபுரம் மாவட்டத்தில் புயல் மையம் கொண்டுள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய மழை இன்று இரவு முழுவதும் தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தாழ்வான பகுதியிலிருக்கும் மக்கள் வீடுகளை காலி செய்துவிட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கும்படி கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்” என்று செய்தி தொடர்ந்தது.
பாரியின் முகத்தில் கவலை ரேகைகள்…
“மழை ரொம்ப மோசமா இருக்கும் போலிருக்கே லலிதா”
“ஆமாம் பாரி… இப்ப என்ன செய்றது”
“இருட்டில் தண்ணி எவ்வளவு ஆழம்னு கூடத் தெரியாது. இப்போதைக்கு இந்த மேடான இடம்தான் பாதுகாப்பா தோணுது. உங்களுக்கு ஆட்சேபணை இல்லைன்னா இங்கேயே இன்னைக்கு ராத்திரி இருந்துட்டு, வெளிச்சம் வந்ததும் கிளம்பலாமா”
“நமக்கு வேற வழியில்லை பாரி” என்றாள்.
மழை சற்று குறைந்து தூறல் மட்டும் தொடர்ந்தது.
“ஒரு நிமிஷம்” என்று இறங்கப் போனான்.
“மழைல என்னைத் தனியா விட்டுட்டு எங்க பாரி போறிங்க”
“அந்த மரம் ஸ்ட்ராங்கா இருக்கான்னு பாத்துட்டு வரேன்” என்றான் தீவிரமான குரலில்.
“அந்த மரத்தை எதுக்குத் தேவையில்லாம ஆராய்ச்சி பண்ணிட்டு” என்றவள் விஷயம் புரிந்தவளாக நாக்கைக் கடித்துக் கொண்டு.
“ஒரு நிமிஷம் நில்லுங்க” என்றபடி யோசித்தவள் தான் போர்த்தியிருந்த டவலைத் தந்தாள். “தலை நனையாம இதைப் போட்டுக்கோங்க” என்றாள்.
“இதெல்லாம் எதுக்கு” என்று மறுத்தவனிடம்
“இப்ப இதை வச்சு தலையையும் காதையும் மூடிக்கலைன்னா நீங்க ஆராய்ச்சி பண்ணப் போகக் கூடாது” என்றாள் உறுதியான குரலில்.
அவளை சில வினாடிகள் உற்றுப் பார்த்தவன் “உங்களுக்கு பாத்திருக்குற மாப்பிள்ளை எந்த ஊரு”
“சவுதி”
“அவன் தொலைஞ்சான்… “ என்றபடி துண்டால் தலைக்கு முக்காடு போட்டு கொண்டு நடந்து இருளில் மறைந்தான்.
அவன் திரும்பி வருவதற்கே பலமணி நேரமாகிவிட்டதைப் போலப் பட்டது லலிதாவுக்கு.
தூரத்தில் ஏதோ பேச்சுக் குரல் வேறு கேட்டது அவளுக்கு. தனியே இருப்பது எந்த விதமான ஆபத்தில் விடுமோ… பாரி அருகில் இருந்தால் இந்த பயமில்லை. தவிப்புடன் காத்திருந்தாள் அவனுக்காக.
அவளது பொறுமையை சோதித்த பின் ஒரு வழியாக அவனும் வந்துவிட்டான்.
“எங்க போயிருந்திங்க” என்றாள் கோபத்தோடு.
“லலிதா வெளிய வாங்களேன்” என்று வெளியே அழைத்தான்.
“மழை…”
“நின்னுடுச்சு… வெறும் தூறல்தான்“
வெளியே இறங்கி வந்தவளிடம் அவர்கள் வந்த பாதையைக் காட்டினான். கீழே நிலவொளியில் அவர்கள் வந்த பாதை ரோடே தெரியாத வண்ணம் வெள்ளக்காடாகக் காட்சியளித்தது. அந்த நீருக்கு மத்தியில் ஓரிடத்தை சுட்டிக் காட்ட, நிலவொளியில் மினி பஸ் ஒன்று பாதி தண்ணீரில் மூழ்கி மரம் ஒன்று தட்டி நின்றுக் கொண்டிருந்தது.
அவர்கள் நின்ற திசையிலிருந்து மேலே சென்ற பாதையை சுட்டிக் காட்டினான்.
“இந்தப் பாதை மேல ஒரு சில வீடுங்க இருக்குதாம். அதில் ஒரு வீட்டை சேர்ந்தவர் டூ வீலரில் வந்தார். அவரைப் பாத்ததும் ஓடி போயி விவரம் கேட்டேன். காஞ்சீபுரம் மாவட்டத்தில் மூணு ஏரி உடைஞ்சிடுச்சாம். பதினஞ்சு கிராமத்தில் வெள்ளம் வந்து துண்டிக்கப்பட்டிருக்காம்.
இன்னொரு விஷயம் என்னன்னா நம்ம போயிட்டிருந்த திசையில் இருக்கும் கிராமமும் அதில் ஒண்ணு. பக்கத்திலிருந்த ஏரி உடைஞ்சு வெள்ளம் இந்தப் பாதையில் ஓடிட்டு இருக்காம். இது மேடா இருக்குறதால பள்ளத்துக்கு எல்லாத்தையும் அடிச்சுட்டுப் போகுதாம். இன்னும் கொஞ்ச நேரம் அங்க நின்னிருந்தா என்னவாயிருக்கும்னு எனக்கே தெரியல.
உங்க உள்ளுணர்வை நினைச்சால் எனக்கு ஆச்சிரியமா இருக்கு. நன்றி லலிதா”
புன்னகைத்தாள். “எதுக்கு நன்றி? எனக்கு லிப்ட் கொடுத்து இந்த ஆபத்தில் சிக்கிகிட்டதுக்கா…”
“லிப்ட் கொடுத்ததாலதானே இந்தமாதிரி ஒரு வித்யாசமான ஒரு பெண்ணை சந்திக்கும் வாய்ப்பு கிடைச்சது” என்றான் பதில் புன்னகையுடன்.
“சரி நீங்க காருக்குப் போங்க. நான் வந்துடுறேன்” என்றவளின் தேவை புரிந்து.
“ஒரு நிமிஷம் வெயிட் பண்ணுங்க லல்லி” என்றபடி அவ்விடத்திலிருந்து ஓடினான். சற்று நேரம் கழித்து வந்தவன்,
“இங்க வாங்களேன்” என்றபடி ஒரு ஒற்றையடிப் பாதை வழியே அழைத்து சென்றது ஒரு வீட்டின் பின்புறம் இருந்த கழிவறைக்கு.
இரண்டு அடி உயரத்திற்கு சாங்கியத்திற்குக் கட்டப்பட்டிருந்த சுவரைத் தாண்டியவன் திணறிய அவளது கையைப் பிடித்து தாண்டிக் குதிக்க உதவினான்.
“இதை இப்போதைக்கு உபயோகிச்சுக்கோங்க” என்றான் கழிவறையை சுட்டிக் காட்டி.
தயங்கினாள் லலிதா “வந்து… வீட்டுக்காரங்க அனுமதியில்லாம” இழுத்தாள்.
கையில் கட்டியிருந்த வாட்சில் மணியைக் காட்டியவன் “ராத்திரி பன்னெண்டு மணி. இப்ப போயி அவங்களை எழுப்பி அனுமதி வாங்க முடியுமா?”
“எனக்கு என்னமோ தயக்கமா இருக்கு பாரி” அவளது கண்களில் இன்னும் தெளிவில்லை.
“அந்த மரத்தடி எனக்கு வேணும்னா சரிவரலாம். ஆனால் விஷப் பூச்சிங்க இருக்கும். அதிலும் சில ஆண் விஷப்பூச்சிகளையும் சேர்த்துத்தான் சொல்லுறேன். அது பெண்களுக்கு பாதுகாப்பான இடமில்லை. அதனால ப்ளீஸ் இந்த ஒரு தடவை கொள்கையை தளர்த்திக்கலாமே லலிதா… வேணும்னா காலைல வீட்டு சொந்தக்காரங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்கலாம்”
அவனது கெஞ்சல் அவளைத் தலையசைக்க வைத்தது.
“ஒரு நிமிஷம்” என்று உள்ளே சென்று எந்த ஆபத்தும் இல்லை என்று தெரிந்தபின்தான் அவளை உள்ளே அனுப்பினான்.
அவள் வெளியே வந்ததும் “இது அந்தக் காலத்தில் கட்டிய பாத்ரூம் போலிருக்கு. உபயோகப் படுத்தாம இருக்கு. அதனாலதான் பாதுகாப்பானதான்னு பார்த்தேன்” என்று விளக்கினான்.
இருவரும் தங்களது வண்டியை நோக்கி நடக்கத் தொடங்கினார்கள்
“எப்படி பாரி இந்த அளவுக்கு பாத்து பாத்து செய்றிங்க”
“ஏன் எனக்கும் அம்மா, அக்கா, தங்கச்சி, பாட்டின்னு உறவுகள் இல்லையா… ஆண்களை மாதிரி பெண்களுக்கும் இயற்கை தேவைகள் உண்டு. அதை கவனிச்சு பாதுகாப்பு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது நல்ல ஆண்மகனின் கடமைன்னு எங்கப்பா சொல்லிக் கொடுத்திருக்கார்”
“உங்களுக்கு நிச்சயம் செய்த பொண்ணு பேரு என்ன?”
“அமுதா…”
“அமுதா அதிர்ஷ்டசாலி” என்றாள் நிறைவான உள்ளத்துடன்.


Bselva
Wow poruthamana Jodi namaku theriuthu avanga rendu perum epo realise panuvanga.ipidi anusaranaya nadanthukura angal rembave kammi.ava than anthe lucky ponnunu lalliku therila.