இனி எந்தன் உயிரும் உனதே – 2

அத்யாயம் – 2

தில்லை மரங்கள் நிறைந்திருந்ததால் தில்லையம்பலம் என்ற பெயர் பெற்ற சிதம்பரம். விடியற்காலையில் எழுந்து வாசல் தெளித்துக் கோலமிட்டார் பார்வதி. அதற்குள் அடுக்களையில் மணக்க மணக்க காப்பி டிகாஷன் இறங்கி முடிக்கவும் பால் காயவும் சரியாக இருந்தது.

“அம்மா காப்பி ரெடியா” என்றபடி வீட்டினுள் நுழைந்தான் அவரது செல்வமகன் பாரி.  

ஐந்தடி ஏழு அங்குல உயரம், இன்னும் ஒரு ஷேடு நிறமிருந்திருந்தால் மாநிறம் என்ற கேட்டகிரியில் வந்திருப்பான். திருத்தமான முகம். உடலுழைப்பால் உறுதியாய் செதுக்கப்பட்ட ஆரோக்கியமான உடல்வாகு. அமைதியான முகமும் கள்ளமில்லாத புன்சிரிப்பும் முதல் பார்வையிலேயே பார்ப்பவர் மனதில் நம்பிக்கை தரும்.  

எம்.எஸ்சி அக்ரி முடித்துவிட்டு தனியார் நிறுவனம் ஒன்றில் அக்ரி ஆபிசராய் சென்ற வருடம்தான்  வேலைக்கு சேர்ந்திருக்கிறான். படிப்புக்கும் வேலைக்கும் இடையே இருந்த இடைவெளியில் தன் தந்தைக்கு உதவியாய் முழு மூச்சாய் விவசாயத்தில் இறங்கிவிட்டான்.

“டேய் பாரி… இந்த விவசாயத்தை மட்டும் நம்பினா வயத்தில் ஈரத்துணிதான் கட்டிக்கணும்… நம்ம என்னதான் நெத்தி வேர்வை நிலத்தில் சிந்தப் பாடுபட்டாலும் கடைசியில் ஒண்ணு வெயில் காஞ்சுக் கெடுக்கும் இல்லை மழை பேஞ்சுக் கெடுக்கும்”

“விவசாயி நீங்களே இப்படி சொல்லலாமாப்பா.. நம்ம நாட்டின் முதுகெலும்பே விவசாயம் தானே. முதுகெலும்பு இல்லைன்னா மனுஷன் உறுதியா நிக்கிறதெங்கே, நடக்குறதெங்கே?”

“க்கும்… இதெல்லாம் வெறும் வாய்ப் பேச்சோட சரி. விவசாயம் முக்கியம், தானிய விளைச்சலில் தன்னிறைவு அடையணும்னு அரசாங்கத்துக்குத் துடிப்பு இருந்தா முதலில் ஆத்துல மண் அள்ளுறதைக் கட்டுப்படுத்தணும். வரும்முன் காக்குறதை விட்டுட்டு பயிர் விளைய இந்த உரம் போடு அந்த உரம் போடுன்னு விளம்பரம் செய்றதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை”

“ஆத்தில் மணல் அள்ளுறதுக்கும் மத்ததுக்கும் என்ன தொடர்பு?” கேள்வி எழுப்பினாள் பார்வதி.

“அப்படிக் கேளு. ஆத்துல மணல் திருடுறதால ஆழம் அதிகரிக்குது. நீர்வரத்து காலத்தில் நம்ம பாசன வாய்க்காலுக்குத் தண்ணி ஏறாம கடலில் வீணா கலக்குது. தண்ணி ஆறு நிறைய ஓடியும் நம்ம விவசாயிங்க பயன்படுத்த முடியாம கிணத்து நீரை நம்ப வேண்டியிருக்கு.”

“ஏம்பா இந்த மாதிரி சில்லறை காரணங்களுக்காக விவசாயத்தை விட்டுட்டு நானும் மத்தவங்க மாதிரி வேலைக்குப் போனால் அடுத்த தலைமுறைக்கு யார்தான் சாப்பாடு போடுவாங்க”

“அந்தக் கவலை நம்ம ஆளுங்க யாருக்கும் இல்லை. ஒரு வியாபாரி தான் விக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் தானே விலை நிர்ணயம் செய்றான். ஆனால் விவசாயப் பொருட்களைப் பொறுத்தவரை அரசாங்கம் தானே விலை நிர்ணயம் செய்யுது. கொள்முதல் விலைக்கும் விற்பனை விலைக்கும் எத்தனை மடங்கு வித்யாசம் இருக்கு. இதில் ஒரு சதவிகிதமாவது விவசாயி அனுபவிக்கிறானா? இதெல்லாம் பார்த்து வெறுத்துப் போயித்தான் நிலத்தை வித்து பிளாட் போட்டுட்டு இருக்கான்”

“இப்ப என்னதான்பா சொல்ல வர்றிங்க?”

“உன் விருப்பத்துக்கு மதிப்புத் தந்து அக்ரி படிக்க வச்சேன். படிப்புக்குத் தகுந்த மாதிரி வேலையைத் தேடிக்கோ. வேலைக்குப் போன நேரம் போக மீதி இருக்குற நேரத்தில் விவசாயத்தைப்   பார்த்துக்கோ” என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்.

பாரியும் வேலைக்கு சென்றாலும் வார இறுதியிலும், காலை மாலை வேலைகளிலும் நிலங்களைப் பார்த்துக் கொள்கிறான்.

காலை உணவை உண்டவாறே குடும்பத்தின் உரையாடல் தொடர்ந்தது.

“ஏம்மா பட்டு சேலையைப் பத்தி எனக்கென்ன தெரியும். வாரக்கடைசில நம்ம எல்லாரும் போயிட்டு வந்துடலாம்”

“நம்ம சொந்தக்காரங்க வீட்டுக் கல்யாணம்டா அதுக்குக் கண்டிப்பா கிளம்பியே ஆகணும்.

இதுக்கு நடுவில்  உன் அத்தை வேற நிச்சியத்தை உடனே பண்ணனும்னு நச்சரிக்கிறா. அதுதான் அடுத்த முஹுர்த்தத்தில் வீட்டுக்கு மட்டும் உறுதி பண்ணிக்கலாம். தட்டுல புடவை வைக்கணும். காஞ்சிபுரத்தில் அந்தக் கடைலதான் நம்ம வழக்கமா விசேஷத்துக்கு புடவை எடுக்குறது”

“சரிம்மா… கதை போதும். புடவையைப் பத்தி எனக்கு என்ன தெரியும். சரி  தெரிஞ்ச அளவுக்குத்தான் எடுத்துட்டு வருவேன். அப்பறம் அது சரியில்லை இது சரியில்லைன்னு சொல்லக் கூடாது”

“சரி அமுதாகிட்ட என்ன கலர் பிடிக்கும்ன்னு ஒரு வார்த்தை கேட்டுக்கோ” பார்வதி காற்றிடம்தான் பேசிக் கொண்டிருந்தாள். பாரி எப்போதோ கிளம்பி சென்றுவிட்டிருந்தான்.

4 comments
Amu

Paari thaan hero va mam

Bselva

Apo hero vum heroine um kanji la meet panna poranga.

யாழ் சத்யா

பாரி கலாக்கிற்ப்புல. பகுதி நேரமாய் பப்புக்கு ஓடும் இளைஞர்கள் மத்தியில் விவசாயத்தை விரும்பிச் செய்யும் இவன் தான் உண்மையில் நாயகன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page