அக்கா மகளே இந்து – 1

அனைத்து தோழமைகளுக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

அன்புடன்,

தமிழ் மதுரா

அத்தியாயம் 1

சிங்காரச் சென்னை சனங்கள் எல்லாம் பரபரவென பள்ளிக்கும் வேலைக்கும் கிளம்பிக் கொண்டிருக்கும் நேரத்தில், ரெண்டு மூன்று இடங்களில் ஊதுபத்தியை வைத்து சுட்டத்தைப் போல ஓட்டை விழுந்த பழுப்பேறிய ராம்ராஜ் பனியன், ப்ளூ கட்டம் போட்ட கைலி காட்டிக்கொண்டு, நடு ஹாலில் பாயிலிருந்து தரைக்கு உருண்டு வந்து தூங்கிக் கொண்டிருக்கிறானே சிவமணி, அவன்தான் நம் கதாநாயகன். இவனைப் பற்றி என்ன சொல்ல, அக்மார்க் தமிழ் பய்யன். உயரம் 5’7 , எடை 70 கிலோ என்று போன வாரம் மருத்துவமனையில் வேலை விஷயமாக காத்திருந்தபோது பொழுது போகாமல் செக் பண்ணி உறுதி செய்து கொண்டான். சற்றே கரும்பழுப்பு நிறம், கத்திரி மீசை, சாந்தமான கண்கள், கூச்ச சுபாவம் இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம் ஆனால் இதென்ன இடையூறு? ஓ… மொபைலா?

தலைக்கு மேல் வைத்திருந்த அலைபேசி கிர் கிர் என சத்தம் போட, விருட்டென எழுந்தான் சிவமணி. அப்படியே இடது கையால் அலைபேசியை எடுத்து கண்ணை சுருக்கிக் கொண்டு பார்த்தான். வாட்ஸப் நோட்டிபிகேஷன்.

தூக்கம் கலைந்து அவசர அவசரமாக எடுத்துப் பார்க்க, “அவசரம் இதை கண்டிப்பாக பார்த்துவிட்டு உடனடியாக பதிலளிக்கவும்” என்று மெசேஜ்.

ராஜன், அவனது சித்தப்பா மகன், ஊரில் பெரிய சமூக போராளி. முக்கியமான போராட்டம், சச்சரவுகள் முதலியவற்றை கவர் செய்வதுடன். சென்னையில் இருக்கும் இவனுக்கு கிராமத்துத் தகவல்களை இலவசமாக ஒளிபரப்பும் தொலைக்காட்சி சேனல். ராஜனது எச்சரிக்கையால் அவனது அப்பா இழுக்கவிருந்த ஏழரைகளை முன் கூட்டியே தடுத்து நிறுத்தியிருக்கும் முன் அனுபவம் அவன் அனுப்பிய வீடியோவை கிளிக் செய்ய வைத்தது.

“சாய்ந்தாடும் நெற்கதிரே, சதிராடும் வாழைகளே, தேனாட்டம் வெள்ளம் ஓட ஒடுதடி என் மனசு” என்று பின்னணியில் யுவனின் அப்பா பாட, புத்தம் புது வெள்ளை வேஷ்டி சட்டை அணிந்து வாயசைத்துக் கொண்டு வயல்வெளியில் நடந்தான் ராஜன். பின்னர் “ஏங்க… சேமாபட்டிக்கு வாங்க…. “ என்று சொல்லி முடித்தபோது நம் கதாநாயகன்  கொலை காண்டானான். நேராக ராஜனின் எண்ணை அழுத்தினான்.

“எண்ணே இப்பதான் எந்திரிக்கிறியா? காலைல இருந்து உன் கருத்துக்காக காத்துக்கிட்டு இருந்தேன். வீடியோ நல்லாருக்குல்ல. நீ சென்னை ஆளு இதையெல்லாம் ரசிப்பண்ணு தெரியும்”

“சரி… எவ்வளவு டீசென்ட்டா கிராமத்து செய்தி போட்டுகிட்டு இருந்த? இதென்னடா புது அவதாரம்?”

“போட்டு என்ன ப்ரோசனம். அதையெல்லாம் ஒரு சனம் கூட பாக்கல. இந்த வீடியோக்கு பாரு, அதுக்குள்ள  பத்தாயிரம் வியூஸ்‌”

“என்னடா சொல்ற?”

“பள்ளிக்கூடம் இடிஞ்சதுன்னு போட்டேன். கவுன்சிலர் வந்து மிரட்டிட்டு போறான். படம் சரியில்லன்னு நேர்மையா சொன்னேன் ரசிகர்கள் வந்து அடிக்கிறானுங்க. அதுதான் நம்ம கிராமத்து விலாக் போட ஆரம்பிச்சுட்டேன். எப்படியும் வில்லெஜ் குக்கிங் மாதிரி பெரிய சேனலாயிருவேன். நீ வேலையை விட்டுட்டு எனக்கு ஹெல்புக்கு வந்தா நல்லாருக்கும்”

நறநறவென பல்லைக் கடிக்கும் சத்தம் அவனுக்கு கேட்டதா என்று தெரியவில்லை.

“சரி, நம்ம பெரிய மாமா பொண்ணு கூப்பிடுது. நாளைக்கு வீடியோ அவ வாச தெளிச்சு கோலம் போட்டு, சாணி பிள்ளையாரை வச்சு மேல பூசணிப்பூ வைக்கணும். பின்னணில… “

“ வாசலிலே பூசணிப்பூ வச்சுபுட்டா வச்சுப்புட்டா, நேசத்திலே என் மனச தச்சுபுட்டா தச்சுப்புட்டா தானே போடப்போற”

“அய்யோ என் மனசை புரிஞ்சவன் நீ தாண்ணே அதுனாலதான் ஒரு முப்பதாயிரம் காசுக்காக சென்னைல எதுக்கு நாயி படாத பாடு படுறேன்னு சொல்றேன் “

முப்பத்து எட்டாயிரம் டா என்றால் ரவுண்டு நம்பர் முப்பதுதானே என்பான். அதுவே அவனது விடியோவுக்கு 101 வியூஸ் வந்தால் கூட ரவுண்டு பண்ணி நூத்துக்கணக்க கடந்து 1000களை நெருங்கிட்டு இருக்கு என்று எண் விளையாட்டு விளையாடுவான்.

“நீ மாமா பெண்ணை பாரு, சேமாபட்டில இருக்குற நாலு தெருவையும் எடுத்து முடி அப்பறம் யோசிக்கலாம்” என்று காலைக் கட் செய்தவன் அப்படியே அவனது நம்பரையும் பிளாக் செய்துவிடலாமா என்று யோசித்த வண்ணம் கிளம்பினான்.

சிவமணியின் வேலைக்கு பெயர் பெருசா எதுவும் இல்ல. ஊர்ல “டைப்பிங் வேலை பண்ணுறான்”ன்னுதான் சொல்லுவாங்க. ஆனா சென்னை ராயபேட்டையில் ஒரு சிறிய போர்ஷனில் ஜாகை. மார்டர்ன் ஒண்டுக்குடுத்தனம்.

நடக்கும் தூரத்தில் இருக்கும் ஒரு சிறிய ரூமில் அலுவலகம். அவனும் அவனது நண்பனும் சேர்ந்து நடத்துகிறார்கள். படிப்பு என்று சொன்னால்  பிகாம் செகண்ட் கிளாசில் பாசாகிவிட்டு, பின் ஊர் பக்கமே இருந்த டவுனில் எம்ஏ ஹிஸ்டரி படித்தான். இப்போது வேறு வித்யாசமான வேலை. ப்ரீ லான்சர், டாக்குமெண்ட் டிரான்ஸ்லேட்டர், லீகல் டாக்குமெண்ட் டைப்பிங் இப்படி கேசுக்கு தகுந்த மாதிரி.  ஹாஸ்பிடல் காகிதம், இன்சூரன்ஸ் கிளெயிம், லீகல் நோட்டீஸ், சர்டிஃபிகேட் டைப் எதுக்கெடுத்தாலும் அவன கூப்பிடுறது வழக்கம். அதனால அவன் மொபைல்  நம்பர் ஒருத்தரிடமிருந்து இன்னொருத்தருக்கு ஓடிக்கிட்டே இருக்கும்.

அவனுக்கு பிடிக்காத இரண்டு விஷயம்:
(1) உறவு
(2) வாட்ஸப் உறவுக் குழு

இரண்டாவது தான் அவன் பெரிதும் பயப்படும் விஷயம். வாட்ஸ்ஆப் குழுவில் வலுக்கட்டாயமாக சேர்த்துவிட்டு தினமும் குட் மார்னிங், வெள்ளிக்கிழமை வாழ்த்து, சனிக்கிழமை வாழ்த்து என்று சரமாரியாக போஸ்ட் போட்டே கொன்று விடுவார்கள். அதனால் எந்த க்ரூப்பில் சேர்த்தாலும் உடனே விலகிவிடுவான். அன்னைக்கு அவனுக்கு சோதனை நாள். அது தெரியாமல் காலை காபியை குடிக்க முயன்றபோது, தெரியாத நம்பரிலிருது கால் வந்தது.

“சார் நான் அகிலா… சிவமணி தானே பேசுறது?”

“ஆமா. சொல்லுங்க.”

“சேமாபட்டிலருந்து சொந்தக்காரங்க உங்க நம்பர் தந்தாங்க. எங்க… அக்கா மகளுக்கு… ஒரு டாக்குமெண்ட் வேணும். ரொம்ப அவசரம்.”

சிவமணிக்கு சேமாப்பட்டி, அக்கா மகள்ன்னு வார்த்தைகளை கேட்டதும் மனசுக்குள்ளே ஒரு சின்ன அலாரம். இப்படி பேசுறவங்க எல்லாம் அவனை ஒரே நொடியில் ‘உள்ளூர் உறவுக்காரன்’ ஆக்கிடுவாங்க.

அவன் “சரி, அனுப்புங்க”ன்னு மட்டும் சொன்னான்.

“சார்… டெத் சர்டிஃபிகேட்.”

“சரி செஞ்சுடலாம் மத்த விவரத்தை எல்லாம் வாட்ஸப்ல அனுப்புங்க.”

அடுத்த நொடி அந்த அகிலா
“சார்… என்கிட்ட இருக்குற விவரமெல்லாம் அனுப்புறேன்… வேற தேவைன்னா சொந்தக்காரங்களை கேக்கணும். க்ரூப்ல கேட்டுகோங்க எல்லாரும் அங்க தான் இருக்காங்க.”

“க்ரூப்ல வேண்டாம். தனியா அனுப்புங்க.”

அவள் “சரி சார்”ன்னு சொன்னாலும், அவன் மனசு நிம்மதியா ஆகல.

போன் கட் ஆனதும், வாட்ஸப் நோட்டிபிகேஷன்: 

“நீங்கள் குழுவில் இணைக்கப்பட்டீர்கள்”

சிவமணியின் கண் கோழிமுட்டை சைசுக்கு மாறிவிட்டது.

க்ரூப் பெயர் பூவும், தீப்பொறியும் கலந்து கட்டி: 
🔥🌼 OUR DEAR FAMILY — 58 MEMBERS 🌼🔥

“58?” என்று அவன் வாய்க்குள் சொன்னான். அவனுக்கு ஒரே நேரத்தில் 58 பேர் கவனம் கிடைக்கிற அளவுக்கு வாழ்க்கையிலே எதுவும் நடந்ததில்லை. கல்லூரியில்  அவன் கலந்து கொண்ட பேச்சுப் போட்டியில் கூட அவன் பேச்சை கேட்டதை விட, மைக் சரியில்லன்னு சொல்ல வந்தவன் தான் அதிகம்.

ஒரு டசன் நபர்கள் இருக்கும் அவன் நெருக்கமான குடும்பக்குழுவிலேயே போஸ்ட் போட்டு சாகடிப்பானுங்க. அதுவும் அப்பா வேறு அழைத்து “பெரியப்பா மெசேஜ் போட்டிருக்காரு நீ படிச்சுட்டு மதிக்காம போயிட்டியாமே” என்று வேலை நேரத்தில் எகிறுவார்.

என்ன போஸ்டு “தென்னைய வச்சா இளநீரு பிள்ளைய பெத்தா கண்ணீருன்னு போட்டிருந்தாரே அதுவா”

“அதேதான். மகன் செஞ்சதை நினைச்சு எங்கண்ணன் எவ்வளவு நொந்து போயி போட்டிருக்காரு, நீ கண்டுக்காம போனா எப்பூடி. ஒரு லைக்காவது போட்டு வைக்கலாம்ல பெரியப்பாக்கு எவ்வளவு மனசு ஆறுதலா இருக்கும்” என்று சொல்லி உயிரை வாங்கி தான் அண்ணனுக்கு லைக் வாங்கிவிட்டுத்தான் ஓய்வார்.

அடுத்த முறை எதற்கு வம்பென்று எண்ணி அத்தை போட்ட புலம்பல் வீடியோ கிளிப் போஸ்டுக்கு லைக் போட்டால், பெரியப்பா அழைத்து “ “ஏண்டா உங்கத்தை நாங்க அண்ணந் தம்பிங்க சரியில்லைன்னு திட்டி போட்டிருக்கா, நீ அதை லைக் பண்ணிருக்க. அவ பொண்ணு மேல ஆசை இருக்கலாம் அதுக்காக இப்படி குடும்பத்துக்கே துரோகம் செய்யாதே” என்று திட்டியதும்தான் பயந்தடித்துக் கொண்டு அத்தையின் போஸ்டை பார்த்தான். அதில் “அண்ணனென்ன தம்பியென்ன சொந்தமென்ன பந்தமென்ன” என்று ஒரு பாட்டு.

இதனாலேயே அவனுக்கு வாட்ஸப் குழுக்கள் என்றாலே அலர்ஜி. சேர்த்த வேகத்தில் விலகிவிடுவான்.

குழுவை விட்டு விலக எண்ணி “லீவ் க்ரூப்” பொத்தானை தேடி விரலை வைத்தபோது, முதல் செய்தி வந்தது.

பூ + அம்மன் படத்தோட ஒரு பெண் பெயர்:
“மணி… ஜாயின் பண்ணியாச்சா? மீண்டும் வெல்கம் டூ ஃபேமிலி க்ரூப்”

“மணி?”

சிவமணியை ஊருல மட்டும் மணின்னு கூப்பிடுவாங்க. சிவான்னு ஒரு பொதுப் பெயரை அவனும் அவன் அப்பாவும் ஷேர் செய்திருப்பதின் விளைவு இது. ஸோ அவங்க யாரோதான் இவனோட மொபைல் நம்பர் தந்திருக்கணும். ஏதாவது வகையில் தூரத்து சொந்தக்கார குடும்பமா இருக்கும்.

அவன் உள்ளுக்குள்ளே ஒரு நிம்மதி “யெஸ்!” பதில் அனுப்பினான்

அடுத்த மெசேஜ் க்ரூப்பி‌ல் இவனிடம் உதவி கேட்ட அதே பெண்ணிடமிருந்து:

“மணி தான் செர்டிபிகேட் ரெடி பண்ணித் தர்றாரு. மணி இதுதான் அக்கா மகன் நம்பர்.” என்று ஒரு நம்பரைப் போட்டாள்.

சிவமணி காபியை கீழே வைத்தான். “அக்கா மகன்” என்பது அவனுக்கு தலைவலி. யாரது அக்கா? யார் அந்த அக்கா மகன்? நான் எதுக்கு இங்கே?

மேலும் யோசிக்க விடாமல் செய்திகள் மழை போல கொட்டியது:

“பாதி நாள் அவனோட மொபைல் வேலை செய்யாது. அவன் நம்பர் எதுக்கு தர்ற?அக்கா மகளே இந்து… உன் நம்பரை தா..  மணி, பாட்டி அவளோடதான் கிளோஸ்ன்னு உனக்குத் தெரியுமே. அதுனால வருத்தமா இருக்கா. அவளோட பேசும்போது மெதுவா பேசு.” 


“இப்போ தேவையில்லாத கேள்வி கேக்காத.”  என்று அறிவுரை அவனுக்கு. அப்ப இந்த டெத் செர்டிபிகேட் நம்ம சொந்தக்கார பாட்டிக்கா? இப்ப பிசின்னு கூட சொல்ல முடியாதே.


“மணி… நான் மத்ததை பார்த்துக்குறேன். நீ இந்த பக்கம் பார்த்துக்கோ. நம்ம அக்கா மக இந்துவுக்கு நம்மை விட்டா யாரு இருக்கா சொல்லு.”

தலையே குழம்பியது. என்னத்தடா பாக்கணும். குடும்ப க்ரூப்பா இல்லை கீழ்பாக்க க்ரூப்பா? அவன் மௌனமா இருக்க முடிவு செய்தான். “வேலை முடிச்சு செர்டிபிகேட்டை அனுப்பிட்டு, அப்புறம் அமைதியா க்ரூப்பை விட்டு எஸ்கேப் ஆயிரலாம்.”

அப்போ அவனை சோதிக்கிறது போல அவனைக் குறிப்பிட்டு மெசேஜ்:

இந்து: “மாமா… நீங்க தான் இல்லையா? 🙂”

சிவமணி உட்கார்ந்த இடத்திலேயே உறைந்தான். “மாமா”ன்னா… நானா? இவதான் அக்கா மகளே இந்துவா? அப்ப யாரோ மணி மாமாவா இருக்கணும். இல்ல நாமதான் இவளுக்கு மணி மாமாவா? மெய்யழகன் படம் மாதிரி இருக்கே.  இப்போ ரிப்ளை பண்ணினா சிக்கல். ரிப்ளை பண்ணலனா இன்னும் சிக்கல்.

அவன் சேஃப் ரீப்ளை போட்டு வைத்தான்.

🙂

அடுத்த நொடி க்ரூப்ல:

“ஆஹா! மாமா ஸ்மைல் பண்ணிட்டாரு!” 
“டூ விட்ருந்தீங்களே இப்ப பழம் விட்டுட்டீங்களா? இனி இந்துவுக்கு தைரியம் கிடைச்சுடும்.” 
“மணி இருந்தா நிம்மதி.”

சிவமணி மெதுவாக மூச்சு விட்டான். ‘இது சாதாரண டைப்பிங்க் வேலை இல்ல… ஒரு வாட்ஸப் சத்திய சோதனை. சீக்கிரம் இதை தாண்டனும்’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page