Author: TM

  • மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 2,3,4

    2

    ன்னடி முடிவெடுத்து இருக்க?” என்ற கமலத்துக்குப் பதிலாக,

    “அன்னபூரணி ஆகலாம்ன்னு” என்றாள் சுஜி.

    “என்னடி உளறுற. இவ்ளோ மார்க் வாங்கிட்டு பேசுறத பாரு. உன்னை எப்படியாவது நல்லா படிக்க வைக்கணும்னு நானும் மாமாவும் நினைச்சுகிட்டு இருக்கோம். கண்டதை உளறாதே”.

    “இல்லத்த நிஜமாவேதான். எனக்கு நீங்கதான் உதவி செய்யணும்” என்றபடி தனது முடிவைக் கூற ஆரம்பித்தாள். இடையில் கமலத்தின் கணவர் மூர்த்தியும் வந்துவிடவே என்ன செய்ய வேண்டும் என்று அவரிடம் ஆலோசனை கேட்டு கொண்டாள். சுஜியின் வாதத்தைக் கேட்ட அவர்களுக்கும் அவளின் முடிவு சரி என்றே பட்டது.

    அடுத்த இரண்டு மணி நேரத்தில் சுஜி நல்ல தெளிவாகி இருந்தாள்.

    “சுஜி அந்த பையன பார்த்தேன்” என்று ஏதோ சொல்ல வந்தவரை இடைமறித்து,
    “வேணாம் மாமா இப்பதான் கொஞ்சம் தெளிவா இருக்கேன். அவன பத்தி பேசி என்னை கோவப்படுத்தாதிங்க. உலகத்திலே நான் வெறுக்குற முதல் ஆள் அவன்தான். பாவி என் வாழ்க்கையே திசை மாத்திட்டான். எவ்ளோ ஆசையோட இருந்திருப்பேன். என் கனவுகளை நாசபடுத்திட்டான்”.

    அவளின் வேதனை புரிந்து சற்று மௌனமாக இருந்த மூர்த்தி பின்னர் மெதுவாக கேட்டார்.

    “சுஜி உன் அண்ணா கிட்ட ஒரு வார்த்தை சொல்ல வேண்டாமா?”

    “வேணாம் மாமா அவன் இப்பதான் வீட்டுக் கவலை இல்லாம கொஞ்சம் நிம்மதியா இருக்கான். அவனை தொந்திரவு பண்ணவேண்டாம்.”

    “உங்க அப்பா?”

    “இப்போதைக்கு யாருக்கும் சொல்ல வேண்டாம் மாமா.”

    “அதுவும் சரிதான். சுஜி எனக்கு இந்த வாரம் டைம் கொடு. என்னால முடிஞ்ச உதவி செய்யுறேன். எல்லாம் கூடி வந்தப்புறம் வீட்ல சொல்லு” என்ற மூர்த்தி மாமாவின் வார்த்தை ஏற்றுக் கொள்ளப்பட்டது.

    நிறைவுடன் வீட்டுக்குச் சென்றாள் சுஜி.

    3

    சுந்தரமும், மீனாட்சியும் அழகும் அன்பும் சேர்ந்த தம்பதிகள். அவர்களுக்கு பேர் மட்டும் பொருத்தமில்லை மனமும் கூடத்தான். சுந்தரம் மதுரையில் அம்மன் சன்னதியில் சிறிய மெஸ் ஒன்று நடத்தி வந்தார். அவரது கைமணத்துக்கும் தரத்துக்கும் ஏராள ரசிகர்கள். அவரது மெஸ்ஸின் வாடிக்கையாளர்கள் நிறைய பேர் மாத சம்பளக்காரர்கள். சுந்தரமும் கறாரான பேர்வழி இல்லை. பத்து பேர் காசு குடுத்து சாப்பிட்டால் இருவர் காசு தராமல் சாப்பிட்டு செல்வார்கள். என்னதான் கூட்டம் வந்தாலும் அவரது வருமானம் என்னவோ நடுத்தர குடும்ப வருமானம்தான். மீனாட்சி என்றாள் அவரது உயிர். அந்த அந்நியோன்ய தம்பதிகளின் அன்புக்கு சாட்சியாக பிறந்தவர்கள்தான் விக்னேஷும், சுஜாதாவும்.

    பெண்களிடம் அதுவும் அக்கம்பக்கத்து வீட்டில் இருப்பவர்களிடம் நல்ல பேர் வாங்குவது ரொம்பக் கஷ்டம். நாம் என்னதான் நல்லது செய்தாலும் அவர்களுக்கு நினைவில் இருக்காது. ஒருநாள் நம்ம தராத காபிபொடியும், பட்டு சேலையும்தான் அவர்கள் நினைவில் இருக்கும். அதிலும் மீனாட்சி பாசாகிவிட்டாள். எல்லோருக்கும் நல்லதே நினைக்கும் மீனாட்சியை அனைவருக்கும் பிடிக்கும். கடவுளுக்கும்கூட அப்படித்தான் போல. அதனால் அவளை சீக்கிரம் கூப்பிட்டுக் கொண்டார்.

    விபத்தில் மீனாட்சி இறந்த போது விக்னேஷுக்கு மூன்று வயது சுஜா ஒரு வயது குழந்தை. சுந்தரம் இரண்டு குழந்தைகளை வைத்து கொண்டு கஷ்டப்பட்டு கொண்டு இருந்தபோது தான் வயதான தன் அம்மாவின் வற்புறுத்தலுக்காக மறுமணம் செய்து கொண்டார். அவரது இரண்டாவது மனைவிதான் நாகரத்னம். நீண்டநாள் ஜாதகதோஷம் காரணமாக அவளது திருமணம் தள்ளிபோனது என்று சொல்லபட்டது. சொல்லபடாத மற்ற காரணம் நாகங்களுக்கே ராணி போன்ற அவளது குணம்தான். எப்போது படம் எடுப்பாள் எப்போது கொத்துவாள் என்றே சொல்ல முடியாது. சுந்தரத்தை கல்யாணம் செய்ய சம்மதம் சொன்னதே ஆச்சிரியம்தான். முதலில் சுந்தரத்தின் அழகும் அமைதியான குணமும் கவர திருமணம் நடந்தது. ஆனால் அவரின் குழந்தைகளை அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

    நாகரத்னத்தை மணம் செய்து கொடுத்த போது சாதாரணமாக இருந்த அவளது பிறந்தவீடு அவளது அண்ணனின் திறமையால் நல்ல நிலைமைக்குவர அவளால் பெருமை தாங்க முடியவில்லை. தினமும் உள்ளுரிலே இருக்கும் தனது தாய்வீட்டுக்கு சென்று விடுவாள். நினைத்தால் புடவை, நகை எல்லாம் வரவேண்டும். இதற்கிடையில் வாணி என்ற பெண் குழந்தை வேறு.

    4

    சுந்தரம் காலையில் போனால் இரவுதான் வருவார். விக்கி, சுஜி நிலைமைதான் பரிதாபம். எவளோ பெத்து போட்டதுக்கு நான் ஏன் சேவகம் செய்யணும் என்ற மனநிலை நாகரத்னதுக்கு.

    சிறுவயதில் ஏன் திட்டு எதற்கு அடி என்று தெரியாமலே வளர்ந்தார்கள். ஓரளவு விவரம் புரிந்தவுடன் ‘துஷ்டரை கண்டால் தூரவிலகு’ என்ற பழமொழிப்படி முடிந்த வரை சித்தியை விட்டு விலகியே இருந்தார்கள்.

    காலையில் எழுந்து விக்கி தண்ணி பிடித்து வைத்து விட்டு பால்வாங்கி வருவான். அதற்குள் சுஜி வாசல் பெருக்கி, கோலம் போட்டு விட்டு காபி டிகாஷன் தயாரித்து விடுவாள். அதற்குள் சுந்தரமும் வந்துவிட எளிமையாக காலை உணவு தயாரித்துவிடுவார்கள். வாணி எழுந்தால் பூஸ்ட் கொடுத்துவிட்டு இருவரும் பள்ளிக்கு கிளம்ப ஆரம்பிப்பார்கள்.

    சரியாக எட்டு மணிக்கு, “எங்கடி காபி?” என்ற சத்தம் கேட்டவுடன் காபி சூடாக கொண்டு செல்ல வேண்டும் அவளது சித்திக்கு.

    “ஏண்டி சமையல்காரன் பொண்ணுக்கு காபிகூட ஒழுங்கா போட துப்பில்லை” என்பாள்.

    விக்கி சிறிது பயந்த சுபாவம், அதனால் பதில் பேசமாட்டான். சுஜி சற்று துடுக்கானவள். “நான் சமையல்காரன் பொண்ணுனா வாணி யாராம்?” என்று கேட்டுவிடுவாள்.

    “அம்மாவை முழுங்கிட்டு பேச்சைப் பாரு” என்று பதிலுக்குக் கொட்டுவாள் நாகம்.

    “ஏன் சுஜி வாய் குடுத்து வாங்கி கட்டிக்கிற?” என்பான் விக்கி.

    “போண்ணா நம்ம இப்படி அடங்கி போக போக இப்படிதான் படுத்துவாங்க. நம்ம ஸ்கூல் போயிட்டு இவங்களுக்கும் வேல செய்யணுமா? உனக்கு தெரியுமா இவங்க டிரஸ், ராணி, வாணி டிரஸ் எல்லாம் நான்தான் துவைச்சு போடுறேன். கை எல்லாம் புண்ணு பாரு” என்று காட்டிய குட்டி தங்கையை அணைத்து முத்தமிடதான் முடிந்தது விக்கியால்.

    “இத அப்பாகிட்ட சொல்லாதேடா”.

    “சரிண்ணா”.

    ஒரு முறை சுந்தரம் நாகரத்னத்தைக் கண்டிக்கபோய் அவள் பெரிய பிரச்சனையாக்கி விட்டாள். பின்னர் அவள் பெற்றோர், உறவினர் அனைவரும் வந்து சமாதானம் செய்து வைத்துவிட்டு போயினர். தனது வாழ்க்கையே தியாகம் செய்து விட்டு அவரது இரண்டு குழந்தைகளுக்கும் தாயாகவும், வீட்டுக்குச் சம்பளமில்லா வேலைக்காரியாகவும் இருக்கும் தங்கள் பெண்ணை எப்படி நீங்கள் கொடுமை படுத்தலாம். இனிமேல் தங்கள் வீட்டுப் பெண் கண்களில் இருந்து கண்ணீர் வந்தால் அவர்கள் குடும்பமே பதில் சொல்ல வேண்டி இருக்கும் என்ற மிரட்டல் வேறு. அதிலிருந்து சுந்தரம் அவளிடம் அனாவசியமாய் வாயே திறப்பதில்லை.

    “சுஜி நான் பெரிய இஞ்ஜினீயர் ஆகி உன்னை நல்லா ராணி மாதிரி பார்த்துப்பேன்”

    “நிஜமாவாண்ணா எனக்கு நிறைய பட்டுபாவாடை, கொலுசு எல்லாம் வாங்கித் தருவியா?”

    “உனக்குப் பிடிச்ச குலாப்ஜாமூன் கூட வாங்கித் தருவேன். எத்தனை குலாப்ஜாமூன் வேணும்?”

    “1000 நோ 1 லட்சம் குலாப்ஜாமூன் வேணும்”.

    “வாங்கிட்டாப்போச்சு “.

  • மனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 1

    ம்மன் கோவில் மணி சத்தம் தூரத்தில் ஒலித்தது. கவலைபடாதே சுஜி உனக்கு நானே துணை இருப்பேன் என்று கூறியது போல் இருந்தது. கடவுள் கண்டிப்பாக என்னைக் கைவிடமாட்டார். எனது வெற்றி தள்ளிபோகிறது அவ்வளவுதான் என்று எண்ணியபடியே வீட்டுக்கு நடக்க ஆரம்பித்தாள்.

    இப்போது சற்று சுஜி பற்றி பார்போம். சற்றே ஒல்லியான உடல்வாகு. ஐந்திரை அடி உயரம். சுருட்டைமுடி. அதுவே அவளுக்கு ஒரு அழகாக இருந்தது. செதுக்கி வைத்தாற் போல் முகம். பொன்னிறம் என்று சொல்ல முடியாது அதற்கு சிறிது கம்மி. காதில் சிறிய பவளதோடு. கழுத்தில் மெல்லிய சங்கிலி. கைகளில் கண்ணாடி வளையல். எளிமையான சுடிதார். இதுதான் சுஜி. அவள் பேசுவதைவிட அவள்கண் ஆயிரம் கதை பேசும்.

    வீடு பூட்டி இருந்தது. எதிர்பார்த்ததுதான்.

     “சுஜி வழக்கம் போல உன் சித்தி ஊர் சுத்த போய்ட்டா. வந்து சாவி வாங்கிட்டு போ”என்றார் பக்கத்து வீட்டு கமலம்.

    உள்ளே செல்ல திரும்பிய கமலம் ஏதோ நியாபகம் வந்தவராக சுஜியிடம், “சாப்டியா?”என்றார்.

    “இதோ இப்ப வீட்ல போய் சாப்பிடபோறேன்”என்ற சுஜி பதிலில் திருப்தி அடையாமல்,

    “ஆமா நீ போய் சமைச்சு சாப்பிடறதுக்குள்ள மயக்கமே வந்திடும். கொஞ்சம் உட்காரு மத்தியானமே சாப்பிட்டியோ என்னமோ தெரியல” என்றபடியே ஒரு தட்டிலே சூடாக இரண்டு தோசையும் கொத்துமல்லி சட்னியும் கொண்டு வந்தார்.

    சுஜிக்கு உண்மையிலே ரொம்ப பசி. வீட்டில் ஒன்றும் இருக்காது. இப்போது உள்ள மனநிலையில் சமைத்து சாப்பிடுவது முடியாத காரியம். தன் முடிவைச் சொல்லி வாதாடுவதற்கு நிறைய தெம்பும் தேவை. மறுப்பேதும் பேசாமல் சாப்பிட ஆரம்பித்தாள்.

    “நில்லுடி போய்டாதே, இன்னொரு தோசை கொண்டு வரேன்”என்று சூடாக ஒரு கையில் தோசையையும் இன்னொரு கையில் பில்ட்டர் காபியும் எடுத்து கொண்டு வந்த கமலத்தைப் பார்க்க அன்னபூரணி போல் தோன்றியது சுஜிக்கு. ஆமாம் வயிற்றுப் பசி அறிந்து அன்போடு சாப்பாடு தருபவர் எல்லாம் அன்னபூரணிதானே?

    “என்னடி இப்படி பார்க்குற?”

    “இல்லத்த உங்கள பார்க்க இப்ப அன்னபூரணி போல தோணுது”.

    “போடி ஊருக்கே சமைச்சுபோடுறார் உங்கப்பா. என்னமோ, ரெண்டு தோசைக்காக எனக்கு அன்னபூரணி பட்டம் கொடுக்கற” என்றார் சிரித்தபடி.

    சுஜி தோசை சாப்பிடுவதை வாஞ்சையுடன் பார்த்திருந்தாள். இந்த பதினெட்டு வருஷத்தில் இந்தப் பெண் எவ்வளவு கஷ்டப்பட்டுவிட்டாள். கடவுளே இனிமேயாவது இந்தக் கொழந்தைக்கு வாழ்க்கைல நிம்மதிய கொடு.

    “என்னடி முடிவடுத்து இருக்க?” என்ற கமலத்துக்குப் பதிலாக,

    “அன்னபூரணி ஆகலாம்ன்னு” என்றாள் சுஜி.