Tamil Madhura செம்பருத்தி தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 28

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 28

அத்தியாயம் – 28 

 

அவர்கள் மூவரையும் அவினாஷ் அவனது அறையில் சந்தித்த பொழுது 

“நீதான் இந்த வீட்டு பெரிய மனுஷனோ… எங்கய்யா எங்க வீட்டுப் பொண்ணு” என்று பாய்ந்தாள் அத்தை. 

 

“உங்க பொண்ணா யாரது?”

 

“கட்டிக்கரும்பா ஒண்ணே ஒன்னு கண்ணே கண்ணுன்னு பெத்து, கண்ணுல தூசி படாம பொத்திப் பொத்தி வளர்த்த எங்க வீட்டுப் பொண்ணு செம்பருத்தி”

 

“ஓ செம்பருத்தியோட ரிலேட்டிவா நீங்க. பொத்தி பொத்தி வளர்த்திங்களா? அப்பறம் ஏன் இங்க வந்து வேலை பார்க்குறாங்க? உறவு யாரும் இல்லைன்னு சொன்னதா நினைவு” அவினாஷும் விடவில்லை. 

 

“வேலை கேக்குறப்ப இரக்கம் வரணும்னு ஏதாவது சொல்றது தான். ஆனா அதெல்லாம் நம்பிட்டு அவளை அனாதைன்னு சொல்லுவிங்களா? 

 

இதா இங்க பாருங்க…” ரமேஷை இழுத்து முன்னால் நிறுத்தினாள்.

 

“இவன்தான் என் மகன். இவனுக்குத்தான்  செம்பருத்தியைக் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு என் தம்பி சாவுறதுக்கு முன்னாடி சத்தியம் வாங்கிருக்கான். அதை நிறைவேத்துறதுக்காகத்தான் நான் உயிரைக் கையில் பிடிச்சுட்டு இருக்கேன்”

 

“அப்படியா” என்று கிண்டலாக அவினாஷ் கேட்க, அவன் அருகில் இருந்த அந்த திராவிட அழகிக்கு முகத்தில்  திகைப்பை மறைக்கவே முடியவில்லை. 

 

“ஆமா எனக்காக அவ அவளுக்காக நான். என்னைப் பாத்தா அத்தான்னு ஓடி வந்து கட்டிப் பிடுச்சுச்சுக்குவா. எங்களோட மாசிலா அன்பை அப்ப பாப்ப”

 

அந்தப் பெண் தலையில் கை வைத்துக் கொண்டது. கேட்டுக் கொண்டிருந்த அந்த அவிநாஷோ மேஜையின் உள்ளிருந்த அமிர்தாஞ்சன் பாட்டிலை அந்தப் பெண்ணின் முன்பு வைத்தான்.

 

“அடேங்கப்பா அவ்வளவு லவ்வா? தீவிரமான காதல்தான் போல… இத்தனை அன்பை அப்படியே தேக்கி வச்சு காத்திருக்கிங்க.. இன்னைக்கு உங்க முறைப்பொண்ணை பாத்ததும் அப்படியே சுனாமியா பொங்கப் போறிங்க. 

 

டூயட் எதுவும் பாட பிளான் இருந்தா, பாலத்துக்கு பக்கத்தில் ஒரு பார்க் கட்டி வச்சிருக்கோம், அங்க ஓடிப் போயிரணும். கார்டன்தான் பெருசா இருக்கேன்னு இங்க பாட்டு பாடி எங்களை டிஸ்டர்ப் பண்ண கூடாது” முகத்தை சீரியஸாய் வைத்துக் கொண்டு சொன்னவனை பக்கத்தில் அமர்ந்திருந்த செம்பருத்தி முறைத்தாள். 

 

“என்ன கிண்டலா? எங்க, எங்க என் தங்கம்… என் தங்கத்தை எங்க வச்சிருக்கிங்க” பாய்ந்தான் ரமேஷ்.

 

அவினாஷ் பக்கத்தில் அமர்ந்திருப்பது செம்பருத்தி தான் என்பதை அந்தக் குடும்பம் இன்னமும் உணரவில்லை.

 

“தங்கமா? அது யாரு செம்பருத்தின்னு தானே சொன்னிங்க”

 

“செம்பருத்தி தான் எங்க சொக்கத் தங்கம். டேய் பாவி, கேக்குறதுக்கு யாருமில்லைன்னு வித்துட்டிங்களா?” என்றாள் அத்தை

 

“ஏம்மா எங்களுக்கு வேற வேலை இல்ல” கடுப்பானான் அவினாஷ். 

 

“எனக்குத் தெரியும் நான் செய்தித் தாளில் படிச்சிருக்கேன். எங்க பொண்ணு பாக்க வேணும்னா அப்படி இப்படின்னு இருக்கலாம். ஆனால் ஆரோக்கியமா ரெண்டு கிட்னி இருக்கு, இதயம், கல்லீரல், நுரையீரல், கொஞ்சம் மூளை கூட இருக்கு. அதுக்கெல்லாம் தனித்தனி ரேட்டு போட்டு வித்தா ரெண்டு கோடி போகும்”

 

“சாரி, நான் வித்ததில்லை. வாங்குனதும் இல்லை. அதனால விலை தெரியாது. அப்ப செம்பருத்தியோட விலை ரெண்டு கோடியா… “

 

டேபிளில் மேனேஜர் என்ற பெயர் பலகை இருந்ததை பார்த்தான் ரமேஷ். இவன் மேனேஜரா? எப்படி திமிரும் தெனாவெட்டுமாய் பேசுகிறான். கூட இருக்கும் பெண் வேறு முட்டைக் கண்ணை வைத்துக் கொண்டு பார்த்து பார்த்து முறைக்கிறாள். கொஞ்சம் மூக்கும் முழியுமாக பக்கத்தில் பெண் இருந்தால் போதுமே இவனுங்களுக்கு தைரியம் தாண்டவமாடுமே! 

 

“பல கோடியா… அவளுக்கு இருக்குற சொத்தை விட்டுட்டேயே… அதெல்லாம் தெரிஞ்சு மேனேஜர் நீ மடக்கலாம்னு பாக்குறியா? எங்க காதல் முன்னாடி தோத்துத்தான் ஓடப் போற”

 

“நான் எதுக்குப் பா ஓடுறேன். இந்தா, உங்க செம்பருத்தி இங்கதான் பக்கத்தில் உக்காந்திருக்கா. உன் அத்தான் கூட வேணும்னா டூயட் பாடிட்டு வா. நான் வெய்ட் பண்ணுறேன்”

 

“என்னது, என்னது….” திகைத்தான். 

 

இந்த அழகி செம்பருத்தியா? அவன் எதிர்பார்த்து வந்தது ஒரு நல்ல பருமனான, வெகு சுமாரான, தாழ்வு மனப்பான்மையால் பயந்து ஒதுங்கி தான் இட்ட வேலையை தலையில் தாங்கி செய்யும்  ஒரு பெண்ணை. ஆனால் இங்கு இருப்பதோ நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும், தன்னம்பிக்கையும், பதவிக்குத் தகுந்த பொருத்தமான தோற்றம், இவை அனைத்தும் தந்த கம்பீரமும் சேர்ந்த ஒரு பெண். 

 

அவளது உடல் பிரச்சனைகள்  தீர்ந்து விட்டதால் அகல்விளக்காக அழகில் சுடர்விட்டாள். மூவரும் பேச வார்த்தை வராமல் அப்படியே அமர்ந்திருந்தார்கள். 

 

“என்ன முடிவு சொல்ற செம்பருத்தி?” என்றான் அவினாஷ். 

 

“என் அத்தை குடும்பம்தான் அவினாஷ் என்னோட சொந்தம். எங்க அத்தான் இருக்காரே வீரன் தீரன். என் கண்ணில் தூசி பட்டா கூடத் துடிச்சுடுவாரு. என்னைப் பாக்க ரொம்ப தூரத்தில் இருந்து வந்திருக்காங்க. சாப்பிட்டுட்டு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கட்டும். அப்பறம் பேசலாம்” என்றாள். 

 

ஏதோ ஒரு பிளான் அவள் மனதில் ஓடுகிறது என்பதை அவினாஷ் கண்டு கொண்டான். 

 

அவர்களுக்கு இளைப்பாற அறை ஒன்று ஏற்பாடு செய்யச் சொன்னான். 

 

அப்படி குதித்தவர்கள் வாயைத் திறந்து கூட ஒரு வார்த்தை பேச முடியாமல் அதிர்ச்சியில் அப்படியே சென்றனர். 

 

புட்டை கடலைக்கறியோடு சேர்த்து குழப்பியடித்து ஒரு கட்டு கட்டிக் கொண்டிருந்த தாயிடம் “என்னம்மா இது, காக்கா குயிலானா கூட நம்பலாம். இதென்னம்மா மயிலா மாறி நிக்குது”

 

“அதாண்டா… எப்படிடா இவ்வளவு அழகா மாறினா?”

 

“அவ பெரிய அழகியாக்கும். இளைச்சிருக்கா அவ்வளவுதான். மத்தபடி என் அளவுக்கு எல்லாம் அழகில்லை” என்று பொறாமையில் கழுத்தை நெடித்தாள் மகள். 

 

“முன்னாடி இருந்த மாதிரியே இருந்திருந்தாக் கூட நான் கவலைப்பட்டிருக்க மாட்டேன். ஆனால் இப்படி அழகா இருந்தா நமக்கு ஆபத்துதான். அந்த மேனேஜர் பயலப் பாத்திங்களா, செம்பருத்தியை பக்கத்தில் வச்சுக்கிட்டே நம்ம மூணு பேரையும் எவ்வளவு எகத்தாளமா பேசினான்? அவளுக்கு ரூட்டு விடுறான்னு நினைக்கிறேன்”

 

“இப்ப என்னடா சொல்ற. செம்பருத்தியை கல்யாணம் பண்ணிக்கிறியா?”

 

“ஏம்மா முறைப்படி டைவர்ஸ் பண்ணிட்டுத்தான் கல்யாணம் பண்ணிக்கணுமா? இல்லைன்னா அடுத்து முகுர்த்தத்திலேயே கல்யாணத்தை வச்சுக்கலாமா?”

 

“டைவர்ஸ் அது பாட்டுக்கு நடக்கட்டும். நம்ம கல்யாணத்தை இங்கயே பக்கத்துல கோவில்ல முடிச்சுடலாம்”

 

ஏதோ யோசித்தவராக “செம்பருத்திகிட்ட தனியா பேசுற சந்தர்ப்பம் கிடைச்சா வெக்கம் மானம் பாக்காம படக்குன்னு கால்ல விழுந்துரு. சொத்தோட, அழகும், நல்ல வேலையும் இருக்குற பொண்ணு. விட்டுறக் கூடாது”

 

“அப்ப காவியா கேட்டுக்கிட்டது?”

 

“அவ கிடக்குறா…  நமக்கு நம்ம காரியம் முக்கியம்டா… “ என்று சொல்லிவிட்டு கைகழுவ எழுந்தாள். 

 

“இதென்ன இடமோ, சின்னதா கை கால் நீட்டக் கூட வசதி இல்லாம” என்று சலித்துக் கொண்டாள் அத்தைக்காரி. 

 

காளியம்மா, ஓவியா மற்றும் செம்பருத்தி தங்கியிருந்த அறைகளுக்கு அருகே இருந்த பெரிய அறையை தற்காலிகமாகத் தங்க ஒதுக்கி இருந்தார்கள். பெரிய தாராளமான படுக்கை மற்றும் நான்கைந்து பேர் வசதியாக அமர்ந்து கொள்ள இருக்கைகள்,டிவி, சாப்பிடப் பழங்கள் இதெல்லாம் குறை கூறிய அம்மாவைக் கொலை வெறியுடன் பார்த்தாள் மகள்.

 

“ஏம்மா நேத்து வரைக்கும், நம்ம மாட்டுக்கொட்டாய்ல மறைஞ்சு ஒளிஞ்சு, பசிக்கு பன்னு தின்னுட்டு இருட்டுல உக்காந்திருந்ததை எல்லாம் எப்படிம்மா அவ்வளவு சீக்கிரம் மறக்குற? மறதி உன் பிறவிக் குணமோ?”

“கஷ்டம் நஷ்டம் எல்லாம் அடியோட மறந்துடனும். உன் அப்பனோட வாழ்த்தப்ப பச்ச தண்ணி குடிச்சுட்டுத்தான் இருந்தோம். அதை நினைச்சுட்டே இருந்தா நம்ம அமைதி எல்லாம் கெட்டு போய்டும்”

 

“அப்ப நம்ம கூட இருந்தவங்களை? கஷ்டத்தில் கை தூக்கி விட்டவங்களை?”

 

“ஏன்? நம்ம கிட்ட நின்னுட்டு இவங்க என்ன கஷ்டப்பட்டான்னு தெரியுமான்னு ஊருக்கே சொல்றதுக்கா. அவர்கள் எல்லாரையும் கஷ்டத்துக்கூட சேர்த்து தலை மூழ்கிறனும். இவ என்னடா நம்மை என்ஜாய் கூடப் பண்ண விட மாட்டிங்கிறா” என்று மகளைப் பற்றி மகனிடம் புகார் கூறினாள். 

 

“நம்ம வீட்டு பொண்ணாம்மா இவ. கல்யாணம் பண்ணித் தந்ததும் எப்படி நம்ம செய்றதெல்லாம் இவளுக்குத் தப்பா தெரியுது பாரு?”

 

“ஓவரா பேசாதிங்க. மாட்டுக் கொட்டகைல இருந்துட்டு இப்ப இந்த இடத்தை வசதி இல்லைன்னு சொல்றிங்களே உங்களுக்கு மனசாட்சியே இல்லையா?”

 

“அந்த அரண்மனைல எத்தனை ரூம் இருக்கும். அதில் ஒண்ணில் நம்மைத் தங்க வைக்க இந்தப் பணக்காரனுங்களுக்கு மனசு வந்ததா பாரேன்… இது என்ன இடம் தெரியுமா? ராஜ குடும்பத்தில் வேலை செய்றவங்க தங்குறவங்க இடம். இது நம்ம தங்க வேண்டிய இடமா?”

 

“அதானே நம்மதான் பிச்சக்காரங்களாச்சே… எதுக்கு இவ்வளவு பெரிய மரியாதை எல்லாம் தந்து வேஸ்ட் பண்ணுறாங்க. டேய் ரமேஷ் இப்படி எல்லாம் பேசிப் பேசித்தான் இந்த நிலமைல இருக்க. இப்பயாவது திருத்திக்கோ. இல்லைன்னா இதைவிட மோசமான நிலமைக்கு போய்டுவ” கூடப் பிறந்தவளின் பேச்சு காதில் விழுதால்தானே. 

 

“நான் இந்த அரண்மனையை சுத்திப் பாத்துட்டு வரேன்” என்றான் மகன். 

 

“நானும் நடந்து போயி நைசா பேச்சு கொடுத்து இந்த வீட்டு நிலமையைத் தெரிஞ்சுக்குறேன்” என்று கிளம்பினாள் தாய். 

 

இதுங்கள நம்பி இருந்ததுக்கு இப்படி நட்டாத்தில் நிக்க வேண்டியிருக்கே என்று வேதனையில் மகள். 

 

அத்தைக்காரிக்கு  ரொம்ப தூரம் நடக்க முடியவில்லை. நாய்கள் வேறு எங்கும் திரிந்தன. 

 

‘அம்மாடி, இதுங்கல்லாம் நாயா இல்லை கன்னுக்குட்டியா? எவ்வளோ உயரம். கடிச்சா என்னாகுறது?’

பயந்து கொண்டே தான் தங்கியிருந்த வீட்டை சுற்றி நடக்க ஆரம்பித்தாள். 

 

சிறு பெண் ஒருத்தி எங்கோ சென்று வந்திருப்பாள் போலிருக்கிறது. சமையல் அறையிலிருந்து சோளக்கதிர் ஒன்றைக் கடித்தபடி இவர்களை புதிராகப் பார்த்தாள் பின்னர் அவர்களது அறைக்குப் பக்கத்தில் இருந்த மற்றொரு அறைக்குள் சென்றுவிட்டாள். 

 

யாரிவள்? இந்த அறையில் யார் இருக்கிறார்கள்? பக்கத்து வீட்டில் இருந்த ஜன்னல் திறந்திருக்க அவர்கள் பேசுவது நன்றாகக் கேட்டது. தமிழ் போல இருக்கே நைசாக சாளரத்தின் அடியில் பதுங்கியவண்ணம் அவர்கள் பேசியதைக் கேட்க ஆரம்பித்தாள். 

 

“இவங்க எல்லாரும் யாரும்மா?” ஓவியா தனது அம்மா காளியம்மாவிடம் கேட்டாள். 

 

“சத்தம் போடாதடி, நம்ம செம்பருத்தியோட சொந்தக்காரங்க. அத்தை, கூட வந்திருக்கிறது அவங்க பொண்ணும் பையனும் போலருக்கு”

 

“இதுதான் அந்த முறைப்பையனா?”

 

“ஆமா”

 

“இவங்களை எதுக்கு இங்க தங்க வச்சிருக்காங்க?”

 

“என்னென்னவோ நடக்குது போ… சும்மாவா இவங்களைத் தங்க வச்சிருப்பாங்க. ஏதாவது பலே திட்டமா இருக்கும்?”

 

“என்ன பலே திட்டம். என்கிட்டே சொல்லும்மா ப்ளீஸ்”

 

இன்னும் நன்றாக பதுங்கியபடி காதைத் தீட்டிக் கொண்டாள் அத்தைக்காரி. 

 

“இப்ப நடக்குற பிரச்சனை இருக்குதுல்ல அதுல செம்பருத்தி….”

 

மெதுவாகத்தான் பேசினாள் காளியம்மா. ஆனால் அது தெளிவாக காதில் விழுகிறதே. 

 

“நிஜம்மா அதுக்காகத்தான் இவங்களை தங்க வச்சிருக்காங்களா?” 

 

“பின்ன வேற எதுக்காம். நம்ம எல்லாரும் எப்படி தப்பிச்சோம் பாத்தியா. நம்ம பாஸ் இருக்காங்களே அவங்க மூளையை எடுத்து மியூசியத்தில்தான் வைக்கணும்” வியந்து போற்றியபடியே காளியம்மா அங்கிருந்து நகர, சற்று நேரம் கழித்து அங்கிருந்து நகர்ந்து முகம் சிவக்க தங்களுக்காக ஒதுக்கப்பட்ட அறைக்குள் நுழைந்தாள் அத்தை. 

 

நன்றாகக் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்த மகனை அடித்து எழுப்பினாள். 

 

“ரமேஷு, டேய் ரமேஷு எந்திரிடா சோம்பேறி”

 

“அடடடே கொஞ்ச நேரம் மனுசனை நிம்மதியா தூங்க விட மாட்டியா”

 

“அடேய் பாவிப்பயலே, இங்க நம்மளை வச்சு ஒரு திட்டம் போட்டிருக்காங்கடா… “

 

“என்னம்மா சொல்ற”

 

“சொல்றேன், சுரைக்காய்க்கு உப்பில்லைன்னு” கடுகடுத்தபடி தான் கேட்டதை சொன்னாள்.

 

“நெசம்மாவா?” அதிர்ச்சியில் விழிகள் தெறித்து விடும்படி ரமேஷ் விழித்தான். 

 

“நமக்கு வலிய வந்த கோடிகளை லேசில் விடக்கூடாதும்மா… ஆனா இந்தப் பிரச்சனையை எப்படி சமாளிக்கிறது?”

 

“அதுக்கு நான் ஒரு தீர்வு யோசிக்கிறேன். இதில் இருந்து தப்பிக்கிறோம். கோடிகளை அள்ளுறோம். முக்கியமா நம்மை ஏமாளியாக்கின அவளை ஒரு வழி பண்ணுறோம். அவ பஞ்சத்துக்கு வில்லி ஆனா நான் பிறவியிலேயே வில்லி” 

2 thoughts on “தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 28”

Leave a Reply to P Bargavi Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 4தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 4

அத்தியாயம் – 4   ஒரு வழியாக மனதை திடப்படுத்திக் கொண்டு முகத்தையும் தலைமுடியையும் சீர்படுத்திக் கொண்டு வெளியே வந்தாள்  செம்பருத்தி. அப்படியே பாத்ரூம் வழியாக ஓடிப் போகக் கூட முடியவில்லை. ஜன்னல்கள் இல்லை, இருந்த சிறு ஜன்னலில் இவள் நுழைந்து

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 31தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 31

அத்தியாயம் – 31   இன்று, லங்கையில் சேச்சியின் கதையை ஆவலுடன் கேட்டுக் கொண்டிருந்தனர் அனைவரும். இருட்ட ஆரம்பித்தது. ஒருவரின் முகத்தை மற்றவர் பார்க்க கூட முடியாத அளவிற்கு இருள் கனமான திரையை எழுப்பியிருந்தது. வெளியில் இருந்த மின்விளக்குகளை காளியம்மாள் ஓவியா

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 15தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 15

அன்புள்ள தோழமைகள் அனைவருக்கும் இனிய ரமலான் வாழ்த்துக்கள்!   அன்புடன், தமிழ் மதுரா. அத்தியாயம் – 15   வீட்டின் அந்த இரவுப் பொழுது மிகவும் உணர்ச்சிகரமானதாக இருந்தது. அபிராம் உணவு உண்ணும் மேஜையில் அமர்ந்திருந்த பொழுதுதான் செம்பருத்திக்கு அவன் யார்