Tamil Madhura சுகமதியின் இரவும் நிலவும் சுகமதியின் ‘இரவும் நிலவும் – 12’

சுகமதியின் ‘இரவும் நிலவும் – 12’

இரவும் நிலவும் – 12

 

வீட்டு வாசலில் வந்து வண்டி நிற்கவும் தான் அகல்யாவுக்கு சுவாசமே சீரானது. எங்கே வழியில் விழுந்து வைப்போமே என அவள் பயந்ததை அவள் அல்லவா அறிவாள். வண்டியிலிருந்து இறங்கிய பிறகும் கை, கால்கள் நடுங்குவது போல ஓர் உணர்வு!

 

தன்னையுமறியாமல் ஆழமாக ஒன்றிரண்டு மூச்சுக்களை நுரையீரல் தாங்குமளவு நிரப்பி வெளியிட்ட பிறகே, ஓரளவு தெளிந்து கேட்டை திறக்க சென்றாள்.

 

தான் மட்டும் தனியாக இருக்கும்போது வருணை எப்படி உள்ளே அழைப்பது என்ற சங்கடத்தில், அவனுக்கு நன்றி சொல்லி விடைகொடுக்க நினைத்து, கேட்டின் வாசலிலிருந்து திரும்பியவள் திகைத்தாள்.

 

இவளை போல எந்தவித சங்கடங்களும் அவனுக்கு இல்லை போலும்! வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு விறுவிறுவென வந்தவனின் வேகத்தில் தன்போல இரண்டடி விலகி நின்று வழியை விட்டிருந்தாள்.

 

பிறகு வேகமாக அந்த கேட்டை சாத்திவிட்டு, ஓட்டமும், நடையுமாகச் சென்று சாவி வைத்திருக்கும் இடத்திலிருந்து அதை எடுத்து கதவைத் திறந்து விட்டாள்.

 

வருண் போய் சோபாவில் அமர்ந்ததும், மின்விசிறியை இயக்கிவிட்டு, சமையலறையுள் நுழைந்தவள், ஆரஞ்சு பழங்களை எடுத்து இரண்டாக வெட்டி கொட்டைகளை அப்புறப்படுத்தி விட்டு அதன் சாறை பிழிந்து கொண்டிருக்க,

“அவன் யாரு?” என்ற வருணின் அதிகார குரல் வெகு அருகில் கேட்க, அவளுக்கு தூக்கிவாரி போட்டது.

 

அவசரமாகத் திரும்பியவள், சமையலறை வரை வருணை எதிர்பாராமல் விக்கித்து நின்றாள்.

 

அதை அலட்சியம் செய்தவன், “என்னை கட்டிக்க எத்தனை பேரு காத்துட்டு இருக்காங்க பாருன்னு எனக்கு காட்டணும். அப்படித்தானே? நாளைக்கும் உன் காலேஜுக்கு வந்தா உன் பின்னாடி இன்னொருத்தன் வருவானா?” என்றதும் அவளுக்கு அவனது கண்மூடித்தனமான கோபத்தில் சிரிப்பும் ஆத்திரமும் ஒருசேர வந்தது.

 

சலிப்போடு கையை காற்றில் அசைத்துவிட்டு, கண்களில் அலட்சிய ஃபாவம் காட்டிவிட்டு, அவனுக்கு முதுகுகாட்டி திரும்பி நின்று கொண்டவள், தான் விட்ட வேலையைத் தொடர, “என்னடி பதில் சொல்ல முடியாதா?” என கத்தினான்.

 

என்னது டி’யா உள்ளே கனன்ற ஆத்திரத்தோடு, வெடுக்கென திரும்பியவள், “ஸ்ஸ்ஸ்…” என்று வாயில் விரல் வைத்துக் காட்டினாள். அவளது கண்கள் இரண்டும் அகல விரிந்து உக்கிரமாக இருந்ததில் இப்பொழுது அவன் திடுக்கிட்டான்.

 

குட்ட குட்ட குனிவதா என அவள் சிலிர்த்து எழுந்து நின்றிருந்தாள் சண்டை கோழியாய்!

 

அவனது திடுக்கிட்ட தோற்றம் திருப்தியைத் தர, “நீங்க வருவீங்கன்னு நான் என்ன கனவா கண்டேன் என் பின்னாடி வாடான்னு ஆளை செட் பண்ணறதுக்கு. கொஞ்சம் கூட யோசிச்சே பேச மாட்டீங்களா?” எனக் காட்டமாகக் கேட்டாள்.

 

அவள் சொல்வதிலிருந்த நியாயம் புரிந்தாலும், ஒத்துக்கொள்ள மனம் வர வேண்டுமே!

 

வாயை இறுக மூடி என்ன சொல்லலாம் என யோசிக்கும் அவனது தோற்றத்தில், சிரிப்பு வர பார்க்க, அதைக் காட்டாமல் மறைத்தவள், தான் பிழிந்த ஜூஸை சர்க்கரை கலந்து ஊற்றிக் கொடுத்து, “முதல்ல குடிங்க… அப்பறம் மத்ததை பேசலாம்…” என சொல்ல,

 

“என்ன நக்கலா?” என்று கேட்டாலும், ஜூஸை வாங்கி பேசாமல் குடித்தான்.

 

மிச்சம் வைக்காமல் வேகமாகக் குடித்தவன், டம்ளரை வைக்கப் போக, ஜூஸ் உள்ளே இறங்கிய வேகத்தைக் கவனித்தவள், “இன்னும் தரவா?” என்று அகல்யா கேட்டாள்.

 

வருணோ, “அதெல்லாம் தேவையில்லை…” என முறைப்பாகச் சொல்ல, அவனையே ஆராய்ச்சியாகப் பார்த்தவளை, “என்ன?” என்று விசாரித்தான்.

 

“இல்லை… காலேஜ் பஸ்ல போகும்போது ஒரு பைக் உங்களோடது மாதிரியே அடிக்கடி காலேஜ் ரோட்டுல பார்ப்பேன். உங்க வண்டி நம்பர் சரியா தெரியாததால… உங்களோடதா இருக்காதுன்னு தான் நினைச்சிட்டு இருந்தேன். நாலைஞ்சு முறை அந்த பைக்கை பார்த்திருக்கவும் நம்பர் தன்னால மனசுல பதிஞ்சிடுச்சு…” என அடுக்கியவளை பார்த்து இப்பொழுது, “ஸ்ஸ்ஸ்…” என வருண் மிரட்டினான்.

 

“சும்மா அந்த வழியா வந்திருப்பேன். இல்லை எங்கேயாவது டீ குடிக்க நின்னிருப்பேன்… அதை எல்லாம் சேர்த்து வெச்சு கதை உருவாக்குவியா நீ” என்றான் காட்டமாக.

 

அகல்யாவின் கண்கள் சிரிக்க, நம்பாத பாவனையைக் காட்டினாள். அவனிடம் விடைபெறலாம் என்று கேட்டின் அருகே சென்று திரும்பிப் பார்த்தபோது தான் அவனது வண்டி எண்ணை கவனித்து திகைத்திருந்தாள். என்னவோ உந்த தன் சந்தேகத்தை அவனிடம் கேட்டும் விட்டிருந்தாள்.

 

“வேற என்ன இருக்க போகுது? நீயே காலேஜ் பஸ்ல போற… பின்ன உன்னைப் பார்க்கவா நான் அங்கே வந்து நின்னிருப்பேன்” தோளைக் குலுக்கியபடி அவன் அலட்சியமாகச் சொல்ல,

 

“ஹ்ம்ம் இது கொஞ்சம் பொருத்தமா இருக்கு… சரி வேற யாரைப் பார்க்க வந்தீங்கன்னு நீங்களே சொல்லிடுங்க… உங்க ஆபிஸ் டைமில் சம்பந்தமே இல்லாத இடத்துக்கு… அதுவும் சரியா எங்க காலேஜ் முடியும் நேரம், டீ குடிக்க வர மாட்டீங்கன்னு அரை வேக்காடா இருந்தாலும் எனக்குப் புரியும்…” என்று இறுதி வரியை மட்டும் உள்ளே போய் விட்ட குரலில் தலையைக் குனிந்து சொல்லியிருந்தாள்.

 

முன்னே கேட்ட கேள்விக்கு, ‘அது உனக்குத் தேவையில்லாதது…’ என்று வாயடைக்கும்படி தான் பதில் சொல்லியிருப்பான். ஆனால், அவள் கடைசியாகக் கேட்டது அவனைப் பதறச் செய்தது.

 

“ம்ப்ச்… அதை இன்னும் நினைச்சிட்டு இருக்கியா? அது அப்ப எதுவோ கோபம்… ஒன்னும் செய்ய முடியாம நின்ன நிலைமை… இருந்தாலும் உன்மேல என்னோட கோபத்தைக் காட்டியிருக்க கூடாது. ரொம்ப வருத்தம் இருந்தபோதும், உடனே மன்னிப்பு கேட்கவும் அப்ப இருந்த கோபத்துல எனக்கு தோணவே இல்லை… என்ன இருந்தாலும் நான் அப்படி பேசியிருக்கக் கூடாது. ரொம்ப சாரி…” என்றான் உணர்ந்து.

 

அவளுக்கு என்ன எதிர்வினையாற்ற என்றே தெரியவில்லை. அரைவேக்காடு என்றான்! உன்னையெல்லாம் யாரு கட்டிக்குவாங்க என்று முகத்திற்கு நேராகப் பேசினான். அதையெல்லாம் சாதாரணமாகக் கடக்குமளவு பக்குவம் அவளுக்கில்லையே! இன்றுவரையும் அவள் நொந்து கலங்கும் கொடிய வார்த்தைகள்! அதை எப்படி எளிதில் மறக்கவோ மன்னிக்கவோ முடியும். ஆனால், எங்கே இப்பொழுதே தன் கோபம் கரைந்துவிடுமோ என்று உள்ளூர அச்சம் எழுந்தது.

 

“ரொம்ப கோபம் இருக்கும் இல்லையா?” என்றான் வருண் மீண்டும்.

கோபம் தான்! என்னவோ அதை இழுத்து வைக்க முடியும் போலவும் தெரியவில்லை! யாசிக்கும் அவன் விழிகளும், இளகிக் கெஞ்சிக்கொண்டிருக்கும் அவன் முகமும் அவளை எளிதில் புரட்டிப் போட்டுவிடுவதாக இருந்தது.

 

பேச்சை மாற்றி, “நீங்க ஆபிஸுக்கு போகணுமே?” என்றாள் அவன் முகம் பாராமல், பார்வையைக் கடிகாரத்தில் நிலைக்கவிட்டு.

 

அவனது விழிகள் சுருங்கியது. அவளது முகத்தில் எதையோ தேடி அலசியது. எதையும் கண்டுகொள்ள முடியவில்லை போலும்! “நீ இப்படி உனக்குள்ளேயே ஒடுங்கி இருக்கிறதுக்கும், முன்ன மாதிரி கலகலப்பா இல்லாததுக்கும் நான் தானே காரணம்?” என அழுத்தமாகக் கேட்டு நிறுத்தினான்.

உண்மையில் அதில் வருணுக்கு மிகவும் குற்றவுணர்வு! சுபிக்ஷா, அகல்யாவை மௌன மகாராணி என்று அழைக்கும்போதெல்லாம் இவனுக்குள் குத்தும்! அவளிடம் மன்னிப்பைக் கேட்க வேண்டும் என்று கூட அதன்பிறகு தான் தோன்றியது! அந்த காரணத்தை தனக்குத்தானே சாக்கிட்டு தான் அவளின் கல்லூரி வாயிலில் பந்தாவாகத் தவம் இருந்தான். உண்மை காரணம் அதுவல்ல என்பதை… கொஞ்ச நாள் காத்திருப்பிலும், அவளைப் பார்க்கவே முடியவில்லையே என்ற கடுப்பிலும் தானாகப் புரிந்து கொண்டிருந்தான்!

 

இவன் ஏன் இப்படிப் படுத்துகிறான் என அகல்யாவிற்கு அலுப்பாக இருந்தது. அவனைக் கடந்து ஹாலுக்கு செல்ல முயன்றவளிடம், “உன்னைப் பார்க்கத் தான் உன் காலேஜ் வரைக்கும் வருவேன்… நாலைஞ்சு முறை இல்லை… வாரத்துக்கு ஒரு முறை, சில சமயம் ரெண்டு முறை கூட வந்திருக்கேன்… உன்னைப் பார்க்கக் கூட முடியாது. எப்பவாவது காலேஜ் பஸ்ஸை விட்டுட்டு ஆட்டோவிலோ, இல்லை நார்மல் பஸ்ஸிலோ போவியோன்னு எத்தனை நாள் காத்திருந்திருக்கேன் தெரியுமா?” என்றிருந்தான்.

 

அதில் சிறு நடுக்கம் பிறக்க, அவளால் மேற்கொண்டு அவனைக் கடந்து நடக்கமுடியவில்லை. அவனோ அவளை நெருங்கி நின்று, “ஏன்னு கேட்க மாட்டியா?” என்று குரலைத் தணித்து கேட்டான். அவளின் நடுக்கம் அதிகரித்தது.

 

நகரச் சொல்லி மூளை எச்சரித்த போதும், கால்கள் நகர மறுத்தது. காற்றில் அசைந்தாடிய அவளின் முன்னுச்சி முடிகளைக் காதோரம் ஒதுக்கி, “நீ கேட்காட்டியும் நானே சொல்லலாம்ன்னு இருக்கேன்…” என சொன்னதும், அவள் படபடத்துப் போனாள். உள்ளங்கைகள் வேர்க்க தொடங்கியது.

 

விழிகள் விரிந்து, அவனை அச்சத்தோடு நோக்க, அவளின் பார்வையில் அவன் முகம் சிறுத்தது. “நான் ஒன்னும் சொல்லலை… போ…” என்று எரிச்சலாக மொழிந்தவன், அவளை விட்டு விலகி வேகமாக வெளியேறி விட்டான்.

 

அவளுக்கு சூழலைக் கையாள தெரியாமல், கண்கள் கலங்கிவிட்டது. அதுவும் அவன் கோபத்தோடு பேசிவிட்டு சென்றதில் துக்கம் தொண்டையை அடைக்க, அங்கேயே தளர்ந்து அமர்ந்து அழத் தொடங்கி விட்டாள்.

 

அவளும் வேறு என்ன செய்ய முடியும்? ஏற்கனவே அண்ணன், அண்ணி வாழ்க்கை எந்த நிலையில் இருக்கிறதோ என்கிற அச்சம் உறுத்திக் கொண்டிருக்கிறது… இவர்களுக்குள் எதுவும் பிரச்சினை இருந்து, அது வருணுக்குத் தெரிய வந்தால், என்ன சொல்வானோ என்ற கலக்கம் வேறு! இந்த சூழலில் இதுபோன்று முடிவெடுப்பதென்பது முட்டாள்தனத்தின் உச்சகட்டம் அல்லவா!

 

கூடவே, அன்று அத்தனை பேசியவன் எப்படி இளகினான்? தேவையில்லாமல் பேசிவிட்டோம் என்று அனுதாபப்பட்டா? அப்படி இரக்கப்பட்டு என்றால், நிச்சயம் அவளுக்கு இந்த உறவு வேண்டாம் என்பதிலும் திடமாகவே இருந்தாள்.

 

உடலும் மனமும் சோர்ந்திருக்க, எதையும் செய்யப் பிடிக்காதபோதும், சோம்பி இருந்தால், கண்டதையும் யோசிக்கத் தோன்றும் எனப் புரிந்து வீட்டைச் சுத்தம் செய்ய தொடங்கினாள்.

 

பிடித்த பாடல்களை ஒலிக்க விட்டு, வீட்டு வேலை செய்யத் தொடங்கியவள், கொஞ்ச நேரத்தில் அதில் ஒன்றியும் போனாள்.

 

என்றும் பிரிந்திடா வண்ணம் உந்தன் கையை இறுக்கியே கோர்க்க தா…!

பூமி அறிந்திடா காதல் ஒன்றைத் தருவேன் நிரப்ப உன் நெஞ்சம் தா…!

தனிமையில் உன்னை நான் நீங்காத உரிமை வேண்டும் தா…!

 

வழக்கம்போல இன்றும் பாடல் வரிகளுக்குள் மூழ்கி, தன் வேலைகளை தன் போக்கில் செய்து கொண்டிருந்தவள், கீழே இருந்த படுக்கை அறையில் அண்ணியின் பொருட்கள் நிறைந்திருப்பதைக் கண்டு திகைத்தாள்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சுகமதியின் ‘இரவும் நிலவும் – 11’சுகமதியின் ‘இரவும் நிலவும் – 11’

இரவும் நிலவும் – 11   “அண்ணா… அது ஒரு ஹெல்ப்…” சுபிக்ஷா வருணிடம் தயங்கிக் தயங்கி கேட்டு நிறுத்தினாள்.   முன்மாலை நேரத்தில், அலுவலகத்தில் வேலையில் இருப்பவனை அழைத்து… இத்தனை தயக்கத்தோடு கேட்டால் அவனுக்கு எப்படி இருக்கும்? கொஞ்சம் பதறி

சுகமதியின் ‘இரவும் நிலவும் – 1’சுகமதியின் ‘இரவும் நிலவும் – 1’

இரவும் நிலவும் – 1 தஞ்சாவூர் மாநகரில் அமைந்திருந்தது தனராஜனின் இல்லம். காலை நேர பரபரப்பில் அனைவரும் மூழ்கியிருக்க, சுபிக்ஷா மட்டும், வீட்டின் நடுவே வைக்கப்பட்டிருந்த பித்தளை உருளியில் (flower pot) புதிய நீரை மாற்றி, அதில் ஒரு சொட்டு மஞ்சளும்,

சுகமதியின் ‘இரவும் நிலவும் – 3’சுகமதியின் ‘இரவும் நிலவும் – 3’

இரவும் நிலவும் – 3   சுபிக்ஷா மௌனமாகவே இருந்தாள்.   அதை அவன் மதிப்பதாக இல்லை. “எப்படி வீட்டுக்கு போவேன்னு கேட்டேன்” என்றான் மீண்டும் அழுத்தமாக.   அவனை அண்ணாந்து பார்த்தவள், “டாக்ஸி பிடிச்சு போயிப்பேன்” என்று அவனை விட