Tamil Madhura யாழ் சத்யாவின் ஹாய் செல்லம் யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 12

யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 12

செல்லம் – 12

 

கடையில் அந்த மாதக் கணக்குகளின் வரவு செலவைச் சமப்படுத்தும் முயற்சியில் முனைந்திருந்தாள் பார்கவி. கடையின் தொலைபேசி அழைக்கவும் எடுத்துக் காதில் வைத்தாள்.

 

“ஹலோ..”

 

“ஹலோ.. ஓம் சொல்லுங்கோ..”

 

“உங்கட கடையில வேலை செய்யிற மனோ அண்ணைக்கு அக்சிடெண்ட் ஆகிருக்கு.. பெரியாஸ்பத்திரிக்குக் கொண்டு போறாங்கள். நீங்க அவரிட குடும்பத்துக்குச் சொல்லி விடுங்கோ..”

 

அழைப்பெடுத்தவன் கூறியதும் தொலைபேசியை வைத்து விட்டான். பார்கவிக்கு ஒரு நிமிடம் கண்களில் இருள் மட்டும் தான் தெரிந்தது. எழுந்தவள் தலை சுற்றவும் மறுபடியும் அமர்ந்தாள். 

 

“இல்ல.. நான் இப்ப உறுதியாக இருக்க வேணும்.. ராஜ்க்கு எதுவும் ஆகாது. சின்னக் காயம் எதுவுமாகத்தான் இருக்கும்..”

 

தன்னைத் திடப்படுத்திக் கொண்டவள் நேராக ஆதவனிடம் சென்றாள். 

 

“ஆதி..! மனோவுக்கு அக்ஸிடெண்ட் ஆகிட்டுதாம்.. நான் இப்ப பெரியாஸ்பத்திரிக்குப் போறன். நீங்க கடையைப் பார்த்துக் கொள்ளுங்கோ. நான் ஆஸ்பத்திரிக்குப் போய்ட்டு என்ன ஏதென்று சொல்லுறன்..”

 

“நானும் கூட வரவா அக்கா.. இல்ல.. வேற யாரையாவது கூட்டிட்டுப் போங்கோவன்..”

 

“நான் ஆட்டோ பிடிச்சுத்தான் போகப் போறன். அங்க போய் பார்த்திட்டு அடுத்து என்ன செய்யிறது என்று சொல்லுறன்..”

 

“சரி கவியக்கா..”

 

வெளியே சென்றவள் ஒரு ஆட்டோவைப் பிடித்து வைத்தியசாலையை அடைந்தாள். அவசரசிகிச்சைப் பிரிவுக்கு ஓடியவள் அங்கிருந்த ஊழியர் ஒருவரிடம் மனோவின் பெயரைச் சொல்லி விசாரித்தாள். 

 

“இங்க தான் இருக்கிறார். மினிபஸ்காரன் போட்டிக்கு ஓடியிருக்கிறான். முன்னால போறவனை முந்த வெளிக்கிடேக்கப் பாவம் நடுவில இவரு சிக்கிட்டாரு. ஆள் தப்புறது கஸ்டம் தான்..”

 

அவசரசிகிச்சைப் பிரிவில் தினமும் மரணங்களை பார்த்து வந்த அந்த ஊழியர் சர்வ சாதாரணமாகக் கூறி விட்டார். ஆனால் கேட்ட பார்கவிக்கோ இதயம் ஒரு தடவை நின்று துடித்தது.

 

அழக்கூடத் திராணியற்றவளாக அங்கு போடப்பட்டிருந்த இருக்கை ஒன்றில் சென்று அமர்ந்தாள். 

 

‘என்ர வாழ்க்கைய விட்டுத் துலைஞ்சு போனால் தான் எனக்கு நிம்மதி..’

 

கடைசியாக மனோவைப் பார்த்து தான் சொன்ன வார்த்தைகள் காதில் ஒலிக்க செய்வதறியாது அமர்ந்திருந்தாள் பார்கவி. 

 

“பிள்ளை.. உங்கட டெலிபோனா அடிக்குது..? முதல்ல சைலண்டில போட்டிட்டு அங்கால போய் கதையுங்கோ..”

 

ஊழியரின் குரலில் அவசரமாக கைப்பேசியை எடுத்துப் பார்த்தாள். ஆதவன் தான் அழைத்திருந்தான்.

 

“மனோண்ணாவுக்கு எப்பிடியிருக்கு..?”

 

இத்தனை நேரமும் அழுகின்ற எண்ணங்கூட இல்லாது அதிர்ந்து போய் இருந்தவளுக்கு தெரிந்தவராய் ஒருவர் கேட்கவும் அழுகை பீறிட்டது. தான் இருக்கும் இடத்தை எண்ணி அவசரமாக நகர்ந்தவள், சற்று ஒதுக்குப் புறமாகப் போய் பேசினாள்.

 

“ரொம்ப சீரியஸ் என்று சொல்லுறாங்கள்.. பிழைக்கிறதே கஸ்டம் என்று வேற சொல்லுறாங்க.. எனக்கு என்ன செய்யிறது என்றே தெரியேல்ல ஆதி..”

 

“நீங்க ஒண்டும் யோசிக்காதையுங்கோ அக்கா. இங்கயும் கடையில எல்லாருக்கும் விசயம் தெரிஞ்சிட்டுது. நான் கடையைப் பூட்டச் சொல்லிட்டேன். மனோண்ணா ஓ பொசிட்டிவ் தானே இரத்தம். அந்த இரத்தம் உள்ள எல்லாரையும் கூட்டிக் கொண்டு நான் உடனடியாக அங்க வாறன். நீங்க தைரியமாக இருங்கோக்கா. அவருக்கு ஒண்டும் ஆகாது.”

 

ஆதவன் வார்த்தைகள் தைரியம் தரவும் மறுபடியும் அவசரசிகிச்சைப் பிரிவு வாயிலில் சென்று அமர்ந்தாள். அப்போது அங்கு வந்த தாதி ஒருவர்,

 

“மனோராஜ்ட சொந்தக்காரங்க யாராவது வந்திருக்கிறீங்களா?”

 

“ஓம்..”

 

“உடனடியாக ஓ பொசிட்டிவ் இரத்தத்துக்கு ஏற்பாடு செய்யுங்கோ..”

 

“இப்ப அவருக்கு எப்பிடி இருக்கு சிஸ்டர்? ரத்தம் குடுக்க ஆக்கள் வருகினம் சிஸ்டர். பத்து நிமிசத்துல வந்திடுவினம். “

 

“தைரியமாக இருங்கோ.. டொக்டர்ஸ் எல்லாம் தங்களால முடிஞ்சதை செய்யினம். நல்ல காலம் தலையில பெருசா சேதம் இல்லை. ஸ்கானில இப்போதைக்குப் பெருசா ஒரு பிரச்சினையும் தெரியேல்ல. இடக்காலும் இடக் கையும் தான் நல்ல சேதமாகிட்டு. ஒப்பிரேசன் முடியத்தான் தெளிவாக எதுவும் சொல்ல முடியும்.  நீங்க பயப்படாம இருங்கோம்மா..”

 

கொஞ்சம் கனிவானவராக இருந்த அந்த தாதி பார்கவியிடம் ஆறுதலாகவே கூறி விட்டுச் சென்றார். சிறிது நேரத்திலேயே கடையில் வேலை செய்த ஆறு பேரோடு ஆதவன் வந்திருந்தான். அனைவரும் அடிக்கடி இரத்தம் கொடுத்துப் பழகியிருந்தவர்கள் என்பதால் உரிய அட்டையோடு வரவும் உடனடியாக அவர்களை அழைத்துச்சென்று இரத்தம் எடுத்தார்கள். 

 

பத்து மணி நேர அறுவைச் சிகிச்சையின் பின்னர் ஐசியூவுக்கு மாற்றப்பட்டான் மனோ. உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்று கூறும் வரை பார்கவி வாயில் ஒரு சொட்டுத் தண்ணீர் கூடப் படாமல் தெரிந்த அனைத்துக் கோவில்களுக்கும் வேண்டுதல் வைத்தவாறு இருந்தாள். 

 

“நீங்க வீட்ட போங்கோக்கா.. நான் இரவைக்கு இங்கேயே இருக்கிறன். ஒராள் தான் இருக்கலாமாம்.”

 

“இல்லை ஆதி. நான் இருக்கிறன். நீங்கள் போங்கோ. நீங்களே கடைப் பொறுப்பைப் பார்த்துக் கொள்ளுங்கோ ஆதி. கடையை நீங்கள் கவனிச்சுக் கொண்டால் நான் ராஜைப் பார்த்துக் கொள்ளுறன். ப்ளீஸ்..”

 

இவர்கள் இருவரைப் பற்றியும் அறிந்தவன் என்பதால் ஆதவனும் சரியென்று புறப்பட்டுச் சென்றான். 

 

இரவு முழுவதும் அங்கிருந்த கதிரையொன்றிலேயே அமர்ந்திருந்தாள் பார்கவி. ராஜ் கண் விழித்து விட்டான் என்ற அந்த ஒற்றைச் சேதிக்காகத் தவமிருந்தாள். ஆனால் அவனோ அவளை மேலும் தவிக்க விட எண்ணி கோமா நிலைக்குச் சென்றிருந்தான். இன்னமும் அவனைப் பார்க்கக் கூட முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள் பார்கவி. 

 

காலை ஆறிலிருந்து ஏழு மணி வரை பாரவையாளர்கள் நேரம். ஆதவனும் ஆறு மணிக்கே வந்திருந்தான். 

 

இப்போது மனோவைப் பார்க்க இவர்கள் அனுமதிக்கப்பட முதலில் ஆதவனைப் போய் பார்க்கச் சொன்னாள் பார்கவி. அவள் மனநிலையை புரிந்து கோண்டவனாய் அவனும் போய் பார்த்தான். 

 

தங்களுக்குப் படியளப்பவன் நிலை கண்டு ஆண்மகன் அவனே துடித்துப் போனான். பார்கவி எப்படித் தாங்கப் போகிறாளோ என்பதுதான் இப்போது அவன் மனதில் வந்தது. கலங்கிய கண்களை துடைத்தவாறு வெளியே வந்தவன் பார்கவியைப் பார்த்தான். 

 

“கவியக்கா.. ஒண்டும் பயப்பிடாதையுங்கோ.. உடம்பு முழுக்க கட்டுப் போட்டிருக்கினம். செயற்கையாத்தான் சுவாசம் குடுத்து இருக்கு.. இன்னும் மயக்கத்திலதான் இருக்கிறார்..”

 

அவளை முதலே தயார்படுத்தி அனுப்பினால் நல்லது என்று நினைத்தவன் கண்ட காட்சியைக் கூறினான்.

 

“இல்ல ஆதவன்.. நான் போய் பார்க்கேல்ல..”

 

“அக்கா..”

 

அதிர்ச்சியானான் ஆதவன்.

 

“ராஜ்ஜ இப்பிடிப் பார்க்கும் சக்தி எனக்கு இல்ல ஆதி. முடிஞ்சா தினமும் காலையில நீங்க வந்து பாருங்கோ.. நான் இங்கேயே இருக்கிறன்.. ப்ளீஸ்..”

 

“என்னக்கா இது.. நீங்க சொல்ல வேணுமே.. நான் மூன்று நேரமும் வந்து பார்ப்பன்.. கடை ஒன்பது மணிக்குத்தானே திறக்கிறது. நீங்க வீட்ட போய் குளிச்சு உடுப்பு மாத்திட்டு வாங்கோ. அதுவரைக்கும் நான் இங்க இருக்கிறனக்கா..”

 

அவன் கூறியதும் சரியென்று பட வீட்டுக்குச் சென்றாள் பார்கவி. குளித்து உடை மாற்றியவள் சுடச்சுட தேநீர் போட்டுக் குடித்தாள். சாமி அறைக்குச் சென்று விளக்கேற்றியவள், 

 

“ராஜை எப்பிடியாவது நல்லபடியாகப் பிழைக்க வை முருகா.. நான் உயிரோட இருக்கிற வரைக்கும் அவன் கூடவே இருந்து அவனை நல்லபடியாக பார்த்துக் கொள்ளுவன். 

 

கண்கள் கசிந்துருக வேண்டியவள் திருநீற்றைப் பூசிக் கொண்டு வைத்திய சாலைக்குச் சென்றாள். 

 

இவளை கண்டதும் ஆதவன் எழுந்து வந்தான். 

 

“அண்ணாவை திரும்பவும் தியேட்டருக்கு கொண்டு போயிருக்கிறாங்கள். காலில திரும்பவும் ஏதோ ஒப்பிரேசன் செய்ய வேணுமாம். நான் வேணும் என்றா இங்கேயே நிற்கவா..?”

 

“இல்லை ஆதவன்.. நீங்கள் கடைக்குப் போங்கோ.. நான் இங்க சமாளிப்பன்..”

 

சரியென்று கூறியவன் மறுபடியும் ஒரு பொட்டலத்தோடு வந்தான். 

 

“வடைதான் கவியக்கா. சாப்பிடுங்கோ ப்ளீஸ். நீங்கள் தெம்பாக இருந்தால்தான் அண்ணாவை கவனித்துக் கொள்ளலாம்.”

 

மௌனமாகத் தலையாட்டியவள், வாங்கிக் கொண்டு போய் நோயாளியோடு தங்கியிருப்போர் உணவுண்ண ஒழுங்கு செய்திருந்த அறைக்குச் சென்று ஐந்து நிமிடங்களில் உண்டு விட்டு வந்தாள். 

 

ஆதவன் கடைக்குப் புறப்பட்டுச் சென்று விட்டான். பார்கவி ஐசியு வாயிலிலேயே காத்திருக்க மறுபடியும் மனோராஜ்ஜை ஐசியூவுக்குக் கொண்டு வந்தார்கள். இடது கால் மேலே உயர்த்தி வைக்கப்பட்டிருந்தது. செயற்கை சுவாசம் வழங்கப்பட்டுக் கொண்டிருக்க பல திரைகள் அவனருகே. இரத்தமும் சேலைனும் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தது. அவனை அந்த வழியே கொண்டு செல்லும் போது முப்பது செக்கன்களே கண்களில் பட்ட அவன் கோலம் இந்த ஜென்மத்துக்கும் மறக்காது பார்கவிக்கு. 

 

கழிப்பறைக்கு ஓடிச் சென்றவள் வாயைப் பொத்திக் கொண்டு கதறி அழுதாள். ஆதவன் முதலே சொல்லியிருந்தாலும் கூட நேரில் பார்த்தவளுக்கோ வேதனை தாங்க முடியவில்லை. வைத்தியர்கள் அழைத்தாலும் என்று உணர்ந்தவள் முகத்தைக் குளிர்ந்த நீரால் கழுவி விட்டு மறுபடியும் ஐசியூ அறையை நோக்கி விரைந்தாள். 

 

வெளியே வந்த தாதியிடடம், 

 

“சிஸ்டர், மனோராஜ்க்கு இப்போது எப்பிடி இருக்கு? கண் முழிச்சிட்டாரா?” 

 

“நீங்கதான் அவரிட பொஞ்சாதியா? அவரிட காலில உடைஞ்ச எலும்பைப் பொருத்தத்தான் ஒப்பிரேசன் செஞ்சிருக்கினம். அவர் இன்னும் மயக்கத்தில தான் இருக்கிறார். உயிருக்கு இப்போதைக்கு ஆபத்து இல்லை. பயப்பிடாதையுங்கோ..”

 

“நன்றி சிஸ்டர்..”

 

“இதில ஒரு சைன் போடுங்கோ..”

 

தாதி ஒரு பத்திரத்தில் கையொப்பம் வாங்கிச் சென்றதும் அங்கிருந்த இருக்கையில் சோர்வாய் அமர்ந்தாள் பார்கவி. அவளைப் போன்றே சோகம் கப்பிய முகத்தோடு பலவித மக்களும் தங்கள் உறவுகளின் உயிர்ப்புக்காய் காத்திருந்தனர்.

 

மதியம் மறுபடியும் ஆதவன் வந்திருந்தான். தன்னுடைய தந்தையையும் கூட்டி வந்தவன், மனோவை உள்ளே சென்று பார்த்து விட்டு வந்தான்.

 

“கவியக்கா.. நீங்கள் வீட்டுக்குப் போய் ரெஸ்ட் எடுங்கோ.. அப்பா இரவைக்கு இங்க இருப்பார்.. நீங்கள் காலையில வாங்கோக்கா.. நீங்கள் இப்பிடி சோர்ந்து போய்ட்டால் மனோண்ணா எழுப்பி வந்ததும் யார் அவரைக் கவனிக்கிறது?”

 

“ஆதி சொல்லுறது சரிதானேம்மா. மனோட அப்பா என்ர ப்ரெண்ட் தான். மனோ எனக்கும் ஒரு பிள்ளைதானம்மா. யோசிக்காமல் வீட்டுக்குப் போ..”

 

“நீங்க வயசான நேரத்தில ஓய்வெடுக்காமல்..”

 

பார்கவி இழுக்கவும் புன்னகைத்தார் ஆதவனின் தந்தை.

 

“நான் நர்ஸாக இருந்தவனம்மா  இரவு டியூட்டி பார்த்து நல்ல அனுபவப்பட்டவன். அறுபது வயசானவன் போலவா இருக்கு என்னைப் பார்க்க? பிள்ளைக்காகச் செய்யிறதில ஒரு கஷ்டமும் இல்லை.. நீ போய்ட்டு வா பிள்ளை..”

 

அவர் கூறவும் அதற்கு மேல் மறுக்க மாட்டாமல் அரை மனதோடு ஆதவனோடு வீட்டுக்குக் கிளம்பினாள் பார்கவி. 

 

கடைப் பொறுப்பு முழுவதையும் ஆதவன் கவனித்துக் கொண்டான். பகல் முழுவதும் பார்கவி வைத்தியசாலையில் இருந்தாள். காலையில் வீட்டிலேயே சாப்பிட்டு விட்டுப் போவாள். மதியம் ஆதவனின் அப்பா உணவோடு வந்து அவளுக்குக் கொடுத்து விட்டு மனோவையும் பார்த்து விட்டுச் செல்வார். இரவில் ஆதவனின் அப்பா அல்லது கனகண்ணையோ அல்லது கடையில் வேலை செய்யும் பையன்களோ யாராவது மாற்றி மாற்றி நின்றார்கள். 

 

ஏழு நாட்கள் ஆகியும் மனோ கண் விழிப்பதாக இல்லை. அனைவருக்கும் என்னாகப் போகின்றது என்ற பயம் ஒரு மூலையில் எழாமல் இல்லை. மனோவை உள்ளே சென்று பார்ப்பதை தவிர்த்துக் கொண்டே வந்த பார்கவி அன்று ஒரு முடிவெடுத்தவளாய் நடுங்கும் இதயத்தோடு உள்ளே சென்றாள். 

 

வேரற்ற மரமாய் வீழ்ந்து கிடந்தவனை பார்த்தவள் இதயமோ இரத்தக் கண்ணீர் வடித்தது. இடக் கரம் அசைக்க முடியாதது போல கட்டுப் போட்டிருக்க அவன் வலக் கரத்தைப் பற்றியவளுக்கோ பேச்சு மூச்சற்றுப் போனது. 

 

“என்னை மன்னிச்சுடுங்கோ ராஜ்.. சத்தியமாக நான் அன்றைக்கு வேணும் என்றே சொல்லேல்ல. எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்பா.. ஆனால் அது காதலா என்றெல்லாம் எனக்குத் தெரியாது. கல்யாணம் செய்தால் இந்த ஊர் சனம் தப்பாகக் கதைக்குமே என்று தான் அதைப் பற்றிக் கதைச்சாலே கோபப்பட்டனான். 

 

ஆனால் அது உங்களை இந்த நிலைமைக்குக் கொண்டு வந்து விடும் என்று நான் கனவில கூட நினைக்கேல்ல. இப்பிடிக் கண்ணை மூடிக் கிடந்து என்னை சாகடிக்காதையுங்கோ.. எனக்கு இந்த உலகத்தில உங்களை விட்டால் வேற யார் இருக்கினம்..? நீங்க எழும்பி வரேல்லயோ நானும் செத்துப் போய்டுவன்.. தயவுசெய்து எழும்பி வந்திடுங்கோ ராஜ்..”

 

அவன் காதருகே அழுதவாறே கூறியவள் அதற்கு மேலே தாங்க முடியாதவளாய் வெளியே ஓடினாள். 

 

அதன் பிறகு தினமும் மூன்று நேரமும் அவனைப் போய் பார்க்கும் துணிவு வந்திருந்தது பார்கவிக்கு. அவனோடு இத்தனை நாட்களாக மனம் விட்டுப் பேசாதது எல்லாம் அந்த ஐந்து பத்து நிமிடங்களில் பேசி விட்டு வருவாள். இப்படியாக பத்து நாட்கள் எல்லோரையும் பயப்படுத்தி விட்டுக் கண் விழித்தான் மனோராஜ். அதன் பின்னர் அவன் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் தென்பட்டது. மேலும் பத்து நாட்கள் கழித்து சாதாரண அறைக்கு மாற்றினார்கள்.

 

ஆனால் பார்கவியோ அவனை போய் பார்ப்பதை நிறுத்தினாள். காரிகையின் எண்ணம் என்னவோ? 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 10யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 10

செல்லம் – 10   அன்றிரவு தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டாள் பார்கவி. வரதர் ஐயா கூறிச் சென்றதும், அன்று மனோராஜ் கேட்டதுமே சிந்தையில் சுழன்று கொண்டிருந்தது. கதை வாசித்தோ, பாடல்கள் கேட்டோ, பேஸ்புக்கை நோண்டியோ எந்த வேலையிலும் மனம் ஈடுபட

யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 11யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 11

செல்லம் – 11   பார்கவி நடந்ததைக் கூறி விட்டு எழுந்து சென்று விட்டாள். ஆனால் மனோராஜினால் அந்த அதிர்ச்சியிலிருந்து வெளிவரவே முடியவில்லை. ஒரு பெண்ணின் வாழ்க்கை அழிவதற்குத் தான் காரணம் ஆகி விட்டதை அவனால் கொஞ்சம் கூட ஜீரணிக்க முடியவில்லை. 

யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 5யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 5

செல்லம் – 05   அதிகாலையிலேயே விழிப்பு வந்து விட்டது பார்கவிக்கு. வேலைக்குத் தயாராக இன்னமும் நிறையவே நேரம் இருந்தது. கைப்பேசியை எடுத்தவள் முகப் புத்தகத்தை வலம் வந்தாள். அவள் தொடராக வாசிக்கும் சில கதைகளின் அத்தியாயங்கள் வந்திருக்கவே அதை வாசித்தவள்,