Tamil Madhura யாழ் சத்யாவின் ஹாய் செல்லம் யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 11

யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 11

செல்லம் – 11

 

பார்கவி நடந்ததைக் கூறி விட்டு எழுந்து சென்று விட்டாள். ஆனால் மனோராஜினால் அந்த அதிர்ச்சியிலிருந்து வெளிவரவே முடியவில்லை. ஒரு பெண்ணின் வாழ்க்கை அழிவதற்குத் தான் காரணம் ஆகி விட்டதை அவனால் கொஞ்சம் கூட ஜீரணிக்க முடியவில்லை. 

 

அடுத்து வந்த நாட்களில் பார்கவி என்னவோ வழக்கம் போலவே சாதாரணமாகத்தான் அவனோடு பேசினாள். ஆனால் அவன்தான் குற்ற உணர்வில் கூனிக் குறுகிப் போனான். 

 

தானே அவளது வாழ்வை அழித்து விட்டு, தன்னையே மணந்து கொள்ளும்படி கேட்டதை எண்ணி எண்ணி வெக்கினான். பார்கவியின் ஆரம்ப நாட்களின் கோபத்திற்கும் எரிச்சலுக்கும் இப்போது காரணம் புரிந்தது. ஏனோ அவளின் பெருந்தன்மை தான், அவள் தொடர்ந்து வேலை செய்வதும் அவனோடு சாதாரணமாகப் பேசுவதும் கூட என்பது விளங்கியது. 

 

அவனை மணந்தால் அவளது பெற்றோரின் இழப்பும், அவள் இத்தனை வருடங்களாக பட்ட கஷ்டங்களும் கூட ஞாபகம் வந்து கொண்டேதானே இருக்கும் என்று எண்ணிக் கலங்கியவனால் முன்பு போல சிரித்த முகத்தோடு வளைய வர முடியவில்லை. 

 

கடமைக்கு கடைக்கு வருபவன், வாழ்க்கையே பறி கொடுத்தவன் போலானான். அடிக்கடி மழிக்க மறக்கும் தாடியும், கசங்கலான அவன் உடைகளும் கூட அவனின் மாற்றத்தை வெளியே காட்ட ஆரம்பித்தன. பார்கவியின் கண்களிலும் இது தப்பவில்லை.

 

“ராஜ்..! என்ன நடந்தது என்று இப்ப இப்பிடி இருக்கிறியள்? இன்னும் ரெண்டு நாளில கடையைத் திறக்கப் போறம். இந்த நேரத்துல இப்பிடி ஷேவ் பண்ணாம, அயர்ன் பண்ணாத உடுப்புகளோடயே கடைக்கு வரப் போறியள்.. ஏதோ இழவு விழுந்த வீட்டுக்கு வாற போற வந்து போறியள்.. எவ்வளவு சந்தோசமாக கடை வேலை எல்லாம் பாக்கிறம். நாங்கள் ஆசைப்பட்ட போலவே இப்ப எல்லா திருத்த வேலையும் செய்து புத்தம் புதுக் கடையாக இருக்கு.. இந்த நேரத்தில போய் இப்பிடி இருந்தால் பாக்கிறவங்கள் என்ன நினைப்பாங்கள்? கடைக்கு வாற சனம் தான் என்ன நினைக்கும்..?”

 

“என்னால உனக்குச் செய்த அநியாயத்தை மறக்க முடியேல்ல பாரு.. உன்ர முகத்தை நிமிர்ந்து பார்க்கக் கூட எனக்குத் தைரியம் இல்லை. எவ்வளவு சந்தோசமாக இருந்த பிள்ளை நீ.. உன்ர வாழ்க்கை நாசமாக நான் காரணம் ஆகிட்டன் என்றதை என்னால தாங்கிக் கொள்ளவே முடியேல்ல பாரு.. உன்னட்ட மன்னிப்புக் கேட்கக் கூட அருகதையற்ற ஆளாகப் போயிட்டன்டி..”

 

இறங்கிய குரலில் கூறியவனை ஆதூரத்தோடு பார்த்தாள் பார்கவி. 

 

“நீங்க வேணும் என்று எதையும் செய்யேல்ல ராஜ்.. ஒரு விதத்தில நன்மை தான் செய்திருக்கிறியள்.. சாரங்கனை போல ஒருத்தனோட என்னால சந்தோசமாக வாழ்ந்திருக்க முடியுமா சொல்லுங்கோ.. சந்தேகப் பேய் அவன்.. அப்பிடிப்பட்ட ஒருத்தனோட என்ர கலியாணம் நின்று போனதில எனக்குச் சந்தோசம் தான்.. 

 

உண்மை உங்களுக்குத் தெரியட்டும் என்று தான் நான் நடந்ததைச் சொன்னனான். அஞ்சாறு வருசத்துக்கு முந்தி நடந்த விசயத்துக்கு நீங்க இப்ப கவலைப்பட்டு ஒண்டும் ஆகப் போறதில்லை.. நடந்தது நடந்து போச்சு.. இப்ப எங்களுக்கு கடை தான் முக்கியம்.. அதால என்னைப் பற்றி யோசிக்காம கடையை பற்றி மட்டும் யோசியுங்கோ.. முந்திப் போல கலகல என்று இருங்கோ.. அந்த மனோராஜ் தான் நல்லம்..”

 

கூறிவிட்டு தலைக்கு மேல் கிடந்த வேலையில் ஐக்கியம் ஆகி விட்டாள் பார்கவி.

 

அவள் பேசியது கொஞ்சமேனும் ஆறுதல் அளிக்க, யதார்த்தம் நெஞ்சில் அறைய கடை வேலைகளை பார்க்க ஆரம்பித்தான் மனோ. 

 

கடையும் பழையபடி திறந்து நன்றாகவே வியாபரம் நடைபெற்றது. புதுக்கடை எப்படி இருக்கு என்று பார்க்க வந்தவர்களும் ஒன்லைனில் பார்த்து நேரே வந்து வாங்குபவர்களும் என்று கடையில் எல்லோருக்கும் வேலை நெட்டி முறித்தது. லாபம் கூட சம்பளத்தையும் மனோராஜ் அதிகரிக்க, எல்லோரும் சந்தோசமாகவே தான் வேலை பார்த்தார்கள்.

 

பார்கவி வழக்கம் போல மனோராஜிடம் பேசினாலும் கூட அவனிடம் சிறு ஒதுக்கம் இருக்கவே தான் செய்தது. கடை விடயங்கள் தவிர்த்து ஒரு வார்த்தை கூடப் பேசி விட மாட்டான். அவளுக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை. கடை வேலையே நிறைய இருந்த போது தங்களின் வாழ்க்கை பற்றி சிந்திக்க முடியாது காலத்தை நகர்த்திக் கொண்டிருந்தார்கள்.

 

அன்று நாகரிகமாக உடை உடுத்திய ஒருவன் கடைக்கு வந்திருந்தான். கீழ் தளத்தில் வேலை பார்த்த ஒரு விற்பனை பெண்ணிடம், 

 

“பார்கவி என்று இங்க யாரும் வேலை செய்யினமோ?”

 

“ஓம்..”

 

“அவவை ஒருக்கால் சந்திக்க ஏலுமோ.. நான் அவட ப்ரெண்ட்தான்..”

 

அந்தப் பெண் கீழே ஆதவனிடம் விடயத்தை சொல்லி மேலே அலுவலக அறையில் இருக்கும் பார்கவியிடம் தெரிவிக்கச் சொன்னாள். ஆதவனும் இன்டர்போனில் விசயத்தைச் சொன்னான். 

 

சில நேரங்களில் கூடப் படித்தவர்கள், தெரிந்தவர்கள், உறவினர்கள் என்று யாராவது இப்படி வருவதுண்டு. பார்கவியும் தெரிந்தவர்கள் தான் என்று கொஞ்சம் விலைக் கழிவு கொடுப்பதுண்டு. பார்கவியும் யாராக இருக்கும் என்ற யோசனையோடு இறங்கி வந்தாள். வந்தவள் இறுதிப் படிகளை தாண்டும் முன்னே அதிர்ந்து போய் நின்று விட்டாள். 

 

காரணம் வந்திருந்தது சாரங்கன். என்ன தான் பழையவற்றை மறக்க முயன்றிருந்தாலும் அவள் வாழ்வில் புயல் வீசிச் சென்றவனை மறுபடியும் கண்ட போது மனதில் ஒரு பதட்டம் எழத்தான் செய்தது. 

 

‘இவன் எதற்கு என்னை பார்க்க வேண்டும் என்று சொன்னான்?’ என்ற கேள்வியோடே அவனை பார்க்க, அவனோ இவளை கண்டதுமே ஆரம்பித்து விட்டான்.

 

“வாவ்..! சூப்பரா இருக்கிறாய் பார்கவி டார்லிங்.. ஜிம்முக்கெல்லாம் போயிருப்பியோ பேபி.. உனக்கு டார்லிங், பேபி என்றெல்லாம் கூப்பிட்டாத்தானே பிடிக்கும்.. இப்பிடி ஸ்லிம் ஆகிட்டாய். மொடலிங் எல்லாம் வேற செய்யிறீங்க போல.. போட்டோஸ் எல்லாம் பேஸ்புக், இன்ஸ்டால தூள் பறக்குது.. கலியாணம் கிலியாணம் கட்டின மாதிரி தெரியேல்லயே.. இன்னும் என்ர நினைப்பில இருக்கிறியோ.. இல்லை கலியாணம் கட்டினா உன்ர சோக்கு வாழ்க்கைக்கு இடைஞ்சல் என்று தனியா இருக்கிறியோ..”

 

அவன் பேசிக் கொண்டே செல்ல பார்கவி நாக்கு மேலண்ணத்தில் ஒட்ட பேசும் வார்த்தைகள் தெரியாத ஊமையாக நின்றிருந்தாள். அவனை கண்டதே அதிர்ச்சி என்றால் அவன் பேசிய விதம் அவளை வாயடைக்க வைத்திருந்தது. 

 

அப்போதுதான் வெளியே சென்றிருந்த மனோராஜ் ஹெல்மெட்டை கழட்டியபடியே உள்ளே வந்தவன் நேராக ஆதவனிடம் தான் சென்றான்.

 

“ஆதி.. பாருவை ஒருக்கால் வரச் சொல்லு.. அவசரமாக ஃபாங் வரைக்கும் போக வேணும்..”

 

“மனோண்ணா..! ஒருக்கால் என்னென்று போய் பாருங்கோ.. பார்கவி அக்கா முகம் சரியில்லை. அந்த ஆள் யாரென்று தெரியேல்ல. கண்டபாட்டுக்குக் கதைக்கிறான்..”

 

ஆதவன் மெல்லிய குரலில் கூறவும் அப்போது தான் மனோராஜ் சூழலை கவனித்தவன், சாரங்கன் அருகே சென்றான். ஆனால் சராங்கனோ, மனோவைக் கண்டதும் அவனிடமே திரும்பினான்.

 

“நீங்க தானே மனோ..?”

 

“ஓம்.. நான் தான்.. என்ன விசயம்?”

 

“உங்கட கடையா இது..?”

 

“ஓம்..”

 

“ஆஹா.. சூப்பர்.. என்னடி அப்ப எங்களுக்க ஒண்டுமே இல்லை என்று நீலிக் கண்ணீர் வடிச்சாய்.. இப்ப வரைக்கும் இவனோட தானே இருக்கிறாய்.. நான் செய்த புண்ணியம் உன்னட்ட இருந்து தப்பினது.. நீ டெலிபோனில நல்லவள் போல கதைச்சதை நம்பிக் கட்டியிருந்தால் இண்டைக்கு என்ர நிலைமை என்னாகிறது? நீங்களும் பேஸ்புக்ல போட்டோ எல்லாம் போட்டு நல்லாவே தொழில் செய்யுறியள் போல.. ஒரு நாளைக்கு எவ்வளவு வருமானம் இவளால வருது..?”

 

சாரங்கன் நக்கல் தொனியில் இரட்டை அர்த்தம் படப் பேசிக்கொண்டே செல்ல, மனோராஜ் அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தான். சாரங்கன் திகைத்துப் போய் பேச்சை நிறுத்தி விட்டு மனோவை முறைத்தவாறு கத்த ஆரம்பிக்க, மனோவும் செக்கியூரிட்டி கார்ட்டுமாக சாரங்கனை ஒரே இழுவையில் கொண்டு போய் கடைக்கு வெளியே விட்டார்கள்.

 

“இன்னொரு தடவை பாருவை பற்றி ஒரு வார்த்தை தப்பாகப் பேசினாலும் நீ சுவிஸ் திரும்பிப் போக ஏலாத படி செய்து போடுவன். ஜெயில்ல தான்டா நீ இருக்க வேணும்..”

 

மனோராஜ் கத்தி விட்டுக் கடைக்குள் வந்தான். வாடிக்கையாளர்கள் நடந்த கலவரத்தை வேடிக்கை பார்த்தவர்கள், மனோவிடம் என்ன ஏனென்று விசாரிக்க ஆரம்பித்தார்கள். 

 

“பேஸ்புக்கில போடுற போட்டோஸ்ல இருக்கிற எங்கட கடை பொம்பிளை பிள்ளைகளை பற்றித் தப்பாகக் கதைச்சான். அதுதான்.. ஸொரி..”

 

வாடிக்கையாளர்களிடம் மன்னிப்புக் கேட்டு விட்டு பார்கவியைத் தேடி அலுவலக அறைக்கு விரைந்தான். அவன் எதிர்பார்த்த படியே அங்கு அவள் அழுது கொண்டிருந்தாள். அவளை நெருங்கியவனோ, அவள் இந்தப் பேச்சுக் கேட்பதற்கெல்லாம் காரண கர்த்தா தான் தானே என்பது உறைக்க, ஆறுதல் சொல்லவும் தோன்றாது சமைந்து போய் நின்றிருந்தான். 

 

அவனின் வரவில் அசைவை உணர்ந்து நிமிர்ந்து பார்த்தாள். மனோ சோகம் கப்பிய முகத்தோடு பரிதவித்துப் போய் நின்றிருந்ததைப் பார்த்தவள், அழுகையைக் கட்டுப்படுத்தி விரைந்து தன்னை சீர்படுத்திக் கொண்டாள். 

 

“அது வந்து.. அவனை கண்டதும் கொஞ்சம் பயந்து போனனா.. பிறகு அவன் அப்பிடிக் கதைக்கவும் என்ன செய்யிற என்று தெரியேல்ல.. அதுதான் கோபத்தில அழுகை வந்திட்டுது. மற்றபடி ஒண்டும் இல்லை ராஜ்.. ஃபாங்குக்கு போன அலுவல் என்ன ஆச்சு..?”

 

அழுது நமநமத்த குரலில் சாதாரணம் போல காட்டிக் கொண்டே கேட்டாள் பார்கவி. 

 

“என்னை மன்னிச்சிடு பாரு.. என்னால தானே நீ கண்ட கண்ட பரதேசிட்ட எல்லாம் இப்பிடியானதெல்லாம் கேட்க வேண்டியதாப் போச்சு.. ரியலி ஸொரிடி..”

 

‘அதை விடுங்கோ ராஜ்.. நல்லா அவனுக்கு ஒண்டு குடுத்தியள் பாருங்கோ.. எனக்கு அதே போதும்.. நானும் நல்லா நாலு குடுக்காம விட்டிட்டன் என்றது தான் என்ர கவலை இப்ப..”

 

அவள் வருவித்த சிரிப்போடு கூறவும் அவனும் கஷ்டப்பட்டுப் புன்னகைத்தான். 

 

“அந்த பன்னாடை சுவிஸ் திரும்பப் போற வரைக்கும் நீ தனியாக எங்கயும் போகாதை பாரு.. வேலைக்கு வரேக்கயும் வீட்ட போகேக்கயும் நானே வந்து ஏத்திக் கொண்டு வந்து விட்டுட்டுப் பிறகும் நானே கூட்டிக் கொண்டு போறன்.”

 

சாரங்கன் கடைக்குத் தேடி வந்து சந்தித்தது அவளுக்கும் சிறு பயத்தைத் தோற்றுவித்திருக்க உடனே சம்மதித்தாள். 

 

அந்த சம்பவத்திற்குப் பிறகு இருவரும் சற்றே முன்பு போல பழக ஆரம்பித்தார்கள். அந்த துணிவில் மனோ மறுபடியும் அதைக் கேட்டான்.

 

“நாங்க கல்யாணம் செய்வமா பாரு..?”

 

அவளோ இந்தத் தடவை பத்திரகாளியானாள். 

 

“சாரங்கன் சொன்னதைக் கேட்டனீங்க தானே ராஜ்.. ஊர் முழுவதும் அப்ப இதைத் தான் கதைப்பினம். அப்ப நான் காலம் முழுக்கக் கெட்டவள் என்றே பேரெடுக்க வேணுமா..? சூப்பர் மார்க்கெட்டில வேலை பாக்கேக்கயே நான் உங்களை விரும்பினதாகத்தான் எல்லாரும் நினைப்பினம். கடைசியில சாரங்கன் நல்லவன் ஆயிடுவான். இந்தப் பழி கேட்கத்தானா நான் உயிரோட வாழுறன்?

 

எனக்கு இப்ப உண்மையா உங்களில கோபம் வருது ராஜ்.. பழசையெல்லாம் ஒதுக்கிட்டு ஏதோ சாதாரணமா வாழப் பழகியிருந்தன். திரும்ப எதுக்கு என்ர வாழ்க்கையில வந்தனீங்கள்? ஒரு தடவை என்ர வாழ்க்கைய நாசமாக்கினது போதாதா? நீங்க என்ர வாழ்க்கைய விட்டே துலைஞ்சு போனால் தான் எனக்கு நிம்மதி..”

 

வெடித்துக் கத்தியவளிடம் என்ன பதில் கூறுவது என்று தெரியாது ஹெல்மெட்டை எடுத்துக் கொண்டு கடையை விட்டு வெளியேறினான் மனோராஜ்.

 

அவள் காயங்களுக்கு மருந்தாகுவானா? இல்லை அவனே ரணமாகுவானா? 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 13யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 13

செல்லம் – 13   மனோராஜ் விபத்துக்குள்ளான செய்தி அறிந்ததும் வரதர் ஐயா கனடாவிலிருந்து உடனே புறப்பட்டு வந்திருந்தார். கடையையும் பெரும்பாலும் ஆதவனோடு சேர்ந்து அவர்தான் பார்த்துக் கொள்வார்.    “அந்தக் குளிருக்க கிடந்து நடுங்கிறதுக்கு நான் இங்க இந்தப் பிள்ளையளை

யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 2யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 2

செல்லம் – 02   காலையில் வழக்கம் போல அலாரம் அடிக்கவும் துடித்துப் பதைத்து எழுந்து வேலைக்குத் தயாரானாள் பார்கவி. இரவும் உணவு உண்ணாதது வயிறு தன் வேலையைக் காட்ட, அவசரமாக குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து பார்த்தாள்.    தோசைமா நான்

யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 6யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 6

செல்லம் – 06   ஞாயிற்றுக் கிழமைக்கே உரிய சோம்பலுடன் கண் விழித்தாள் பார்கவி. வீட்டிலே பார்க்க ஆயிரம் வேலைகள் குவிந்து கிடந்தன. ஆறு நாட்களும் கடைக்கே ஓடிவிட வீட்டுவேலைகள் நிறைந்து கிடந்தன. போட்ட துணிகள் எல்லாம் கூடையில் குவிந்து, ‘எங்களை