Tamil Madhura யாழ் சத்யாவின் ஹாய் செல்லம் யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 5

யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 5

செல்லம் – 05

 

அதிகாலையிலேயே விழிப்பு வந்து விட்டது பார்கவிக்கு. வேலைக்குத் தயாராக இன்னமும் நிறையவே நேரம் இருந்தது. கைப்பேசியை எடுத்தவள் முகப் புத்தகத்தை வலம் வந்தாள். அவள் தொடராக வாசிக்கும் சில கதைகளின் அத்தியாயங்கள் வந்திருக்கவே அதை வாசித்தவள், அதற்கு முகப் புத்தகத்தில் கருத்துக்களை பதிவிட அதற்கு மற்றைய வாசகிகளின் பதில் என்று அதன் பிறகு நேரம் போனதே அவளுக்குத் தெரியவில்லை.

 

அலாரம் அடிக்கவும் தான் கைப்பேசியைப் போட்டு விட்டு அவசரம் அவசரமாக குளியலறைக்கு ஓடினாள். தயாராகி வந்தவள் முதல் நாள் மீந்து போய் குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்த உணவை, உண்டது பாதி உண்ணாதது மீதியாக வாய்க்குள் திணித்து கொண்டு கடையை நோக்கிப் பறந்தாள். 

 

அன்று மனோராஜ் கடையின் திருத்த வேலை பற்றிய ஒழுங்குகளை செய்வதற்காக அவன் நண்பனை வரச் சொல்லியிருந்தான். அதற்காக பார்கவியை வழக்கத்தை விட வேளைக்கு வரச் சொல்லியிருந்தான். எப்படி மறந்தாளோ வழக்கமான நேரத்திற்குத்தான் கடையை அடைந்தாள். அங்கு மனோராஜ், நண்பனோடு ஏதோ பேசியபடியிருக்க அந்த நண்பனும் கையில் சிறு குறிப்பேடொன்றில் ஏதோ குறித்துக் கொண்டிருந்தான். 

 

அவர்களை கண்டதும் தான் தனது தப்பு உறைக்க மெதுவாக அவர்களருகே சென்றவள், 

 

“வணக்கம் சேர்.. லேட்டாகிட்டுது. ரியலி ஸொரி..”

 

“பரவாயில்லை.. நேற்று நீ சொன்ன விசயம் எல்லாம் நான் சொல்லிட்டன். வேற ஏதும் புதுசா இருந்தா சொல்லு..”

 

“இல்ல.. வேற ஒண்டும் இல்லை..”

 

“அப்ப சரி.. போய் வேலையைப் பார்..”

 

கோபம் எதுவுமின்றி சாதாரணமாகவே இவளோடு உரையாடிய மனோ, நண்பனோடு வெளியேறி விட்டான். நேற்றுக் கொடுத்த அடிக்காவது நிச்சயமாகக் கோபப் படுவான் என்று எண்ணியிருந்தவளுக்கு அவனது அமைதியான போக்குச் சற்று ஏமாற்றத்தைத் தந்தது என்று கூடச் சொல்லலாம். 

 

அதை ஒதுக்கி விட்டுத் தனது வேலைகளை கவனிக்கலானாள். சிறிது நேரம் வேலையில் ஒன்றியவள், மனோ கடைக்குத் திரும்பியிருக்கவில்லை என்பதைக் கவனித்து விட்டு ஆதவனிடம் சென்றவள்,

 

“ஆதி! நான் ஒருக்கால் ஃபாங் வரைக்கும் போய்ட்டு வாறன். வருணை மத்தியானத்துக்கு எனக்கு ஒரு மரக்கறி சாப்பாடு வாங்கி வைக்கச் சொல்லுங்கோ..”

 

கூறிவிட்டு வெளியே சென்று விட்டாள். வங்கி வேலை முடித்துக் கொண்டு இவள் மறுபடியும் கடைக்குத் திரும்ப ஒரு மணி நேரத்திற்கு மேல் கடந்திருந்தது. உச்சி வெயில் மண்டையைப் பிளக்க முகம் சிவந்து கடைக்குள் வந்து நுழைந்தவளின் முகத்திலோ தென்பட்ட காட்சியைக் கண்டதும் எள்ளும் கொள்ளும் வெடித்தது. 

 

மனோராஜ் அங்கு வேலை செய்யும்  இளம் பெண்களோடு சிரித்துக் கதைத்துக் கொண்டிருந்தது தான் இவள் கோபத்துக்குக் காரணம். அவர்களோடு பேசியபடி வாயிலை நோக்கித் திரும்பிய மனோவோ, பத்ரகாளியாக கண்களில் உஷ்ணத்தோடு நின்றவளை கண்டதும் பம்ம ஆரம்பித்தான். விற்பனைப் பெண்களிடம் விடைபெற்றுக் கொண்டு எதுவும் நடவாத பாவனையில் படியேறி அலுவலக அறையை அடைந்து ஒரு பைலைத் தூக்கிக் கொண்டு வேலையில் ஆழ்ந்தான். அல்லது வேலை செய்பவனை போல நடித்தான் என்பது சாலப் பொருந்தும். 

 

ஆனால் அன்று விதி அவனை விடுவதாக இல்லை. அவனுக்குப் பின்னாலேயே கோப மூச்சோடு வந்து நின்றாள் பார்கவி. ஏதும் அறியாப் பாலகனாய் அவளை ஏறிட்டு விழித்தான் மனோராஜ். அவள் கனல் விழிகளிலிருந்து அவள் ஏதோ விடயத்திற்குப் பலமான அடியே தரப் போகிறாள் என்று புரிந்தவனாகத் தானே முந்திக் கொண்டான். 

 

“இங்க பாருங்கோ பார்கவி. கடைக்கு இப்ப நான் தான் முதலாளி.. நீங்க முந்திப் போல உங்கட இஷ்டத்துக்கு வாறதும் போறதுமாக இருக்க ஏலாது. இண்டைக்கு வேளைக்கு வரச் சொல்லியும் பிந்தி வாறிங்கள். பிறகும் சொல்லாமக் கொள்ளாம உங்கட இஷ்டத்துக்கு வெளிய போய்ட்டு வாறியள்.. பிறகு நான் எதுக்கு இங்க?”

 

அவன் குரலில் கொஞ்சம் சுதியேற்றி அவளை உறுத்து விழிக்க, இவளுக்குத் தான் பேச வந்தது மறந்து போய் அவமானத்தில் முகம் கறுத்துச் சிறுத்தது. 

 

“மன்னிச்சுக் கொள்ளுங்கோ.. இனி இப்பிடி நடக்காது..”

 

தான் சொல்ல வேண்டியதை விடுத்து, இறுகிய குரலில் மன்னிப்பைக் கூறிவிட்டு தனது இடத்தில் வந்து அமர்ந்தாள். உள்ளமோ அனலாய் கொதித்தது. வேலையில் கவனம் செலுத்த முடியாமல் அடிக்கடி மனோராஜின் பக்கமே பார்வை சென்று வந்தது. அவனோ எதையும் அறியாதவனாய் கோப்புகளில் மூழ்கியிருந்தான். அதுமட்டுமன்றி அவளிடமும் அடிக்கடி சந்தேகம் கேட்டுக் கொண்டிருந்தான். 

 

மதியம் இரண்டு மணி தாண்டியிருக்கவும், ஆறிப் போயிருந்த உணவை உண்டு விட்டு வந்தவள் கண்களில் மறுபடியும் அந்தக் காட்சி பட்டது. இரண்டாம் மாடியில் வேலை செய்யும் பெண்கள் சூழ மனோ ஏதோ பேசிச் சிரித்துக் கொண்டிருந்தான். அவர்களும் எல்லோரும் வாயெல்லாம் பல்லாக நின்றிருந்தார்கள். பார்கவிக்கோ இதைக் காணக் காண உடம்பெல்லாம் தகித்தது. அதற்குமேல் பொறுக்க முடியாதவளாக அவர்கள் அருகே சென்றவள்,

 

“சேர்..! மெயில் ஒண்டு அனுப்ப வேணும். நீங்க வந்து சரி பார்த்தால் அனுப்பலாம்..”

 

பார்கவி கூறவும் அவளை யோசனையோடு பார்த்தான் மனோராஜ்.

 

“எந்த மெயில்? நான் ஒண்டும் அனுப்பச் சொல்லேலையே..”

 

வாய் கூறினாலும் கூட கால்கள் அவைபாட்டில் பார்கவி பின்னால் நடைபோடத் தொடங்கியிருந்தன. 

 

பார்கவி அலுவலக அறையை அடைந்ததும் இவனது இருக்கைக்கு அருகே சென்று நின்று கொண்டிருந்தாள். மெயில் என்பது சாட்டுத்தான் என்று புரிய தனது இருக்கையில் சென்று அமர்ந்தான்.

 

“என்ன பார்கவி? என்ன விசயமாக என்னோட கதைக்க வேணும்?”

 

நேரடியாகவே அவள் கண்களை பார்த்துக் கேட்டான். ஒரு நொடி தயங்கியவள், பிறகு நிமிர்வாய் அவன் கண்களை நோக்கினாள்.

 

“இங்க பாருங்கோ.. நீங்கள் தான் இங்க முதலாளி. உங்களுக்குத்தான்  இந்தக் கடையில முழு உரிமையும் இருக்கு எண்டது எனக்கு வடிவாத் தெரியும். ஆனால் இது லண்டனில்லை.. எங்கட ஊர் எண்டதும் உங்களுக்கு எப்பவும் ஞாபகம் இருக்க வேணும். 

 

நீங்க முதலாளி எண்டால் அதுக்குரிய லிமிட்டோட வேலை செய்யிறவையிட்ட இருந்து கொஞ்சம் தள்ளியே நிக்க வேணும். அதுவும் வேலை செய்யிற இளம் பிள்ளையளோட எப்ப பார்த்தாலும் பம்பல் அடிச்சுக் கொண்டிருக்கிறது நல்லதில்லை..

 

நீங்கள் ஒரு ப்ளே ஃபோய்.. எல்லாரோடயும் இப்பிடித்தான் கதைக்கிறனியள் என்று பாவம் அதுகளுக்குத் தெரியாது தானே.. நீங்கள் வேற அவையளை செல்லம், டார்லிங், ஃபேபி என்று கூப்பிடுறீங்கள். இளம் பிள்ளையள் அதுகள். பருவ வயசு. வயசுக் கோளாறில மனசில ஆசையை வளர்த்திட்டால் பிறகு அதுக்கு யார் பொறுப்பு? 

 

உங்கட நன்மைக்கும் சேர்த்துத்தான் சொல்லுறன்.. வந்தா வேலை விசயமாக மட்டும் பொம்பிளைப் பிள்ளையளோட கதையுங்கோ.. கிழமையில ஒரு நாள் கூட்டம் வைச்சு கடை சம்பந்தமான பிரச்சினைகளை கதைக்கலாம். அதை விட்டிட்டு இப்பிடிக் கூடி நின்று கொட்டமடிச்சு நீங்க சமத்துவம் வளர்க்கத் தேவையில்ல. 

 

நாலு வருசமாக நான் பார்க்க வேலை செய்யிற பிள்ளையள்.. அதுகளிட வாழ்க்கை எப்பிடியும் போகட்டும் என்று பார்த்துக் கொண்டிருக்க என்னால முடியாது. இந்த பேஸ்புக்ல மெசேஜ் பண்ணிற வேலை எல்லாம் வைக்க வேணாம். 

 

இது ஒரு துணிக் கடையாக இருந்தாலும் ஒரு ஒபிஸ் போல இருக்க வேணும் என்றதுதான் என்ர விருப்பமும் வரதர் ஐயாட விருப்பமும். இனியாவது புரிஞ்சு கொண்டு நடப்பிங்கள் என்று நம்பிறன்..”

 

மூச்செடுக்காது நீளமாகப் பேசி முடித்தவள், அவனிடமிருந்து எந்தப் பதிலையும் எதிர்பார்க்காது தனது இடத்தில் போய் அமர்ந்தாள். மனோராஜோ அவள் கூறிய விடயங்களை கேட்டு வாயடைத்துப் போய் அமர்ந்திருந்தான். 

 

அவள் ஏன் இவ்வளவு கோபப் படுகிறாள் என்று அவனால் கொஞ்சம் கூட ஊகிக்க முடியவில்லை. ஃப்ளேஃபோய் என்று கூறியது கூட உள்ளே வலித்தது அவனுக்கு. கடையில் வேலை செய்யும் யாருக்கும் அவன் பேஸ்புக்கில் மெசேஜ் அனுப்பவில்லை. ஆகவே அது அவளுக்கு அனுப்பியதைக் குறிப்பிடுகிறாள் என்றாலும் கூட அவள் முன் வைத்த குற்றச் சாட்டுக்களை ஏற்க மனம் முரண்டு பிடித்தது. 

 

புதிய முதலாளி எப்படியிருப்பானோ என்ற பயம் இல்லாது அனைவரும் நண்பர்களாகவே இருக்க வேண்டும் என்பது அவன் ஆசை. அதனால்தான் கடையில் வாடிக்கையாளர்கள் குறைவான நேரத்தில் அவன் ஊழியர்களோடு கலந்து பேசியது. சாதாரணமாகவே சிரிக்கப் பேசும் குணம் உடையவன் அவன். அதற்கு இவள் இப்படியொரு பட்டம் தருவாள் என்று எண்ணவில்லை. யோசனையோடு அவளையே பார்த்தவன் மனதில் அந்த எண்ணம் உதித்தது. 

 

‘முன்பு என்னை காதலித்திருப்பாளோ.. அதனால்தான் கோபப் படுகிறாளோ? ஆனால் அப்போது கொஞ்சம் கூட அவள் நடவடிக்கையில் அப்படியொரு எண்ணம் வெளிப்பட்டிருந்தது இல்லையே. அண்ணா என வாய் நிறையக் கூப்பிடுவாளே. அப்பிடியிருக்க நிச்சயமாக வாய்ப்பில்லை. அப்போ எதற்காக என் மீது இத்தனை கோபமும் வெறுப்பும்? நான் என்ன தான் செய்தேன்..’

 

மனதில் உதித்த கேள்விகளுக்கு விடை அறியாது அவளையே பார்த்திருந்தான். கணக்குப் பார்த்துக் கொண்டிருந்த பார்கவி நிமிரவும் இவன் அவசரமாகப் பார்வையைத் தாழ்த்திக் கொண்டான். 

 

எங்கே மறுபடியும் அடித்து விடுவாளோ என்ற பயத்தில் தாடையை வருடியவன் துணிவை வரவழைத்துக் கொண்டு அவளை அழைத்தான். 

 

“பார்கவி! ஒரு விசயம்..!”

 

அவள் காது கொடுத்துக் கேட்பாளா என்ற எண்ணத்தில் மெதுவாய் நிறுத்தினான். அவளோ பதில் பேசாது கேள்வியாய் நிமிர்ந்து பார்த்தாள். அதையே சம்மதமாக எடுத்துக் கொண்டவன்,

 

“இனிமேல் வேலை முடிஞ்சு லேட்டாகப் போறது என்றால் தனியாகப் போக வேணாம். உங்கட எல்லாரிட பாதுகாப்புக்கும் கூட நான்தானே பொறுப்பு..”

 

ஏதோ சொல்ல வாயெடுத்து விட்டுச் சம்மதம் எனத் தலையசைத்தாள். 

 

“அப்பிடி ஏதும் லேட்டாகினால் நான் கூட வாறன்..”

 

எதுவும் கூறாது அவனை முறைத்தவள் எழுந்து சென்று விட்டாள். அவள் போவதையே பார்த்தவன் கன்னம் தப்பியதே போதும் என வேலையைக் கவனிக்க ஆரம்பித்தான். 

 

அன்று கடை மூடியதும் புறப்பட ஆயத்தமானவளிடம்,

 

“நாளைக்கு ஸ்டார் ரெஸ்ட்ராரென்டுக்கு லஞ்சுக்கு வாங்கோ..”

 

அவள் ஏதோ சொல்ல வர, இவன் முந்திக் கொண்டான். 

 

“ஆதவனையும் வரச் சொல்லியிருக்கிறன். என்ர ப்ரெண்ட்டும் வருவான். வரதன் மாமாவும் வருவார். கடை திருத்திறதைப் பற்றிக் கதைக்கத்தான்..”

 

“சரி சேர்..”

 

அவனிடம் சம்மதம் கூறினாலும் பொய் சொல்கிறானோ எனத் தோன்ற கீழே விரைந்தவள், கணக்குப் பார்த்துக் கொண்டிருந்த ஆதவனிடம் சென்று நின்றாள்.

 

“நாளைக்கு உம்மளையும் சேர் லஞ்ச்சுக்கு வரச் சொல்லியிருக்கிறாரா?”

 

“ஓமக்கா.. நானும் கனகண்ணையும் வாறம்..”

 

“சரி. அப்ப நாளைக்குச் சந்திப்பம்..”

 

கனகு அங்கு இருபது வருடங்களாக வேலை செய்பவர். மனோ உண்மையாகவே கடையைப் பற்றிக் கலந்து ஆலோசிக்கத்தான் வரச் சொல்லியிருக்கிறான். ஆகவே போகத்தான் வேண்டும் என முடிவெடுத்தவள் வீட்டுக்குப் புறப்பட்டாள். 

 

மனதில் ஏனோ முன்பிருந்த வெறுமை மாறி இனம் புரியாத பல உணர்வுகள். வீட்டிலே எந்த வேலையையும் செய்யத் தோன்றாமல் கைப்பேசியில் கதை ஒன்றை எடுத்து வாசித்தவாறு அதிலேயே மூழ்கி விட்டாள். 

 

பாவையவள் வாழ்வினில் வசந்தம் வந்திடுமா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 7யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 7

செல்லம் – 07   ரெஸ்டாரன்ட்டில் உணவு உண்டு முடித்ததும், பார்கவி நேராக பல்பொருள் அங்காடிக்குத்தான் சென்றாள். தேவையான பொருட்களை பார்த்துக் கூடைக்குள் போட்டபடி இருந்த போது,  பின்னாலே மனோராஜின் குரல் கேட்டது.   “பாரு! ஒரு நிமிஷம்.. உன்னோட நான்

யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 1யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 1

செல்லம் – 01   “ஹாய் செல்லம்!”   பார்கவியின் அகராதியில் பிடிக்காத இரு சொற்கள் என்றால் இதைத்தான் சொல்வாள். எத்தனை இயல்பாக இந்த வார்த்தையை சொல்லி விடுகிறார்கள். ஆனால் யாரால்? யாருக்கு? எச்சந்தர்ப்பத்தில்? இதனை உபயோகிக்க வேண்டும் என்பதில் தானே

யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 10யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 10

செல்லம் – 10   அன்றிரவு தூக்கம் வராமல் படுக்கையில் புரண்டாள் பார்கவி. வரதர் ஐயா கூறிச் சென்றதும், அன்று மனோராஜ் கேட்டதுமே சிந்தையில் சுழன்று கொண்டிருந்தது. கதை வாசித்தோ, பாடல்கள் கேட்டோ, பேஸ்புக்கை நோண்டியோ எந்த வேலையிலும் மனம் ஈடுபட