Tamil Madhura சுகமதியின் இரவும் நிலவும் சுகமதியின் ‘இரவும் நிலவும் – 6’

சுகமதியின் ‘இரவும் நிலவும் – 6’

இரவும் நிலவும் – 6

 

சில நொடிகள் மௌனமாய் கழிய, சுபிக்ஷா தன்னுள்ளே நடக்கும் போராட்டத்தை வெளியில் இம்மி கூட காட்டாதவளாய், “ஏன்?” என்று வினவினாள்.

 

இவளுக்கு எப்படி எடுத்துச் சொல்வது என்ற குழப்பத்தில் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தான் நவநீதன். அவனது யோசனை அவளுக்கும் புரிந்தது. ஆக, இவன் இந்த திருமணத்தை மறுப்பதில் வெகு உறுதியாகத்தான் இருக்கிறான் என்பது தெளிவாக புரிந்துவிட, அவளுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.

 

காதல் என்பதை வார்த்தைகளில் பரிமாறிக்கொள்ளவில்லை என்றாலும் அவள் உணர்ந்திருக்கிறாளே! ஒருவேளை அவள் உணர்ந்ததாக நினைத்ததெல்லாம் அவளது சொந்த கற்பனைகளோ? குழப்பத்தில் தலை வலிப்பது போல உணர்ந்தாள்.

 

அவளுக்கு, அவன் மீதிருக்கும் எல்லையற்ற நேசம் அவளை இவ்வாறு உருவகப்படுத்தத் தூண்டி விட்டதோ! காதல் மயக்கத்தில் செய்த பிழைகள் தானோ இதுவெல்லாம்… அப்படியானால் இன்னும் என்னென்ன பிழைகளைச் செய்திருக்கிறேன்? செய்து கொண்டும் இருக்கிறேன்? என்ற எண்ணத்தில் அவளுள் ஒருவித அச்சம் சூழ்ந்தது.

 

முதலில் இந்த காதலும் தான் ஏன் இந்த வேகத்தில் உள்நுழைந்து இப்படி வேக வேகமாக விருட்சமென வளர்ந்து நின்று என்னை ஆட்டிப்படைக்கிறது? அவளுக்கு விளங்கவேயில்லை. ஆனால் இதிலிருந்து மீள முடியும் போலவும் அவளுக்கு தெரியவில்லை!

 

இவளின் யோசனைகளைத் தடையிடுவதைப்போல் ஒரு பெருமூச்சுடன் நவநீதன் தொடர்ந்தான். “உனக்கே என்னை பத்தி புரிஞ்சிருக்கும் சுபிக்ஷா. நான் தனியாவே இருந்து பழகிட்டேன். அதுதான் எனக்கு பிடிச்சும் இருக்கு. என் லைஃப் ஸ்டைல் சுத்தமா வேற… அண்ட் என் மூட் எப்ப எப்படி மாறும்ன்னு எனக்கே தெரியாது. அதுதான் எல்லார் கிட்டயும் எப்பவும் நான் விலகியே இருப்பேன்” என்றவன், ‘உன்கிட்ட நெருங்கி வந்தது என்னையும் மீறி நடந்த விஷயம்’ என மனதிற்குள் சொல்லிக் கொண்டான்.

 

இதெல்லாம் ஒரு காரணமா என்று தான் சுபிக்ஷாவிற்கு தோன்றியது. அதையே முகத்திலும் காண்பிக்க, “உனக்கு இதெல்லாம் பெரிய காரணமா இல்லாம இருக்கலாம். ஆனா இதெல்லாம் வாழ்க்கையை ரொம்ப அஃபெக்ட் செய்யும். இதைச் சொல்லி எல்லாம் புரிய வைக்க முடியாது. ஆனா, உனக்கு நிறைய கஷ்டம் வரும்ன்னு மட்டும் என்னால சொல்ல முடியும்” என முன்னுரையும் இல்லாமல் முடிவுரையும் தெளிவில்லாமல் சொதப்பலாக ஒரு விளக்கவுரையை நவநீதன் தந்து கொண்டிருந்தான்.

“பிளீஸ் நவீன். எதை எதையோ பேசிட்டு இருக்கீங்க. ஒன்னுக்கொன்னு சம்பந்தம் இருக்கிற மாதிரியே தெரியலை. சரி சொல்லுங்க… உங்க வீட்டுல இருந்து ஏன் வந்து நம்ம கல்யாணத்தைப் பத்தி பேச போறாங்க. உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா?”

இந்த நேரடியான கேள்வியை நவநீதன் எதிர்பார்க்கவில்லை. ஒரு முழு நிமிடம் அவனால் பதில் கூடச் சொல்ல முடியவில்லை. உதடுகளை அழுந்த மூடி நின்றிருந்தவன் என்ன சொல்வான் என்பதிலேயே தன் முழு கவனத்தை வைத்திருந்தவளுக்கு இதயம் வேகமாக அடித்துக் கொண்டது.

அவனோ மௌனத்தைக் கலைக்கவில்லை. “உங்க மௌனத்தை நான் எப்படி எடுத்துக்கணும் நவீன்?” என்றாள் அலுப்புடன்.

“நான் ஏற்கனவே சொல்லிட்டேனே சுபி… க்ஷா… இந்த விஷயம் என் கையை மீறி போயிடுச்சு. என்னால எதுவும் செய்ய முடியலை. நீ நிறுத்த முடியுமா?”

ஏற்கனவே காயம் பட்ட இடத்தில், மீண்டும் வலிக்க நோகச் செய்வது எப்படி என்பதை செயல்முறையில் காட்டிக் கொண்டிருப்பவனை அடிபட்ட பார்வை பார்த்தாள்.

 

சாமி வரம் கொடுக்கும் பூசாரி கொடுக்காது என்று சொல்லுவார்கள்! ஆனால், சுபிக்ஷா விஷயத்தில் எல்லாம் நேர் எதிர்! இங்கே அவள் பல பூசாரிகளைச் சரிக்கட்ட போராடிக் கொண்டிருக்க, இந்த நேரத்தில் சாமி வரம் தர முரண்டு பிடித்தால் அவளும் என்ன செய்வாள்?

காதல் எதையும் சாதிக்குமாமே! அது நிஜமே என்பது போல… வெந்நீர் ஊற்றில் கூட நீந்த முடியும் என்ற வைராக்கியத்தை அவளுக்குத் தந்து கொண்டிருக்கிறதே! இவனானால் இப்படிச் சொல்கிறானே என்று குழம்பிப் போனாள்.

 

உண்மையில் காதல் இருக்குமளவு… பக்குவமோ நிதர்சனமோ அவளுக்கு இல்லை… இருந்திருந்தால் இவன் இவ்வளவு தூரம் சொல்கிறானே… அண்ணனும் ஒத்துக்கொள்ளாமல் இத்தனை நாட்கள் தள்ளிப் போடுகிறானே என்றெல்லாம் யோசனை வந்திருக்கும்.

 

ஆனால், பக்குவமற்ற இளம் வயது… வாழ்க்கையைப் பற்றி பெரிதாக அனுபவமோ புரிதலோ இல்லாத வாழ்க்கைமுறை எல்லாம் சேர்ந்து காதல் தான் பிரதானம் என்று அவளைப் பிதற்ற வைத்தது. எல்லா தடைகளையும் உடைத்தெறிந்து மனத்திற்கினியவனை கரம் பிடிக்க அவளது ஒவ்வொரு அணுவும் துடித்தது.

மொத்தத்தில் காதல் அவளது சிந்தனையை மழுங்கடித்தது. சில எச்சரிக்கைகளைப் பொருட்படுத்தாமல் தன் பிடியிலேயே நிற்க வைத்தது. அது நவநீதனையும் அசைத்தது.

 

தனக்குள் ஓர் உறுதியான முடிவை எடுத்தவள், அவன் விழிகளை நேராகப்பார்த்து, “எனக்கு பிடிச்ச விஷயத்தை பிடிக்கலைன்னு பொய் சொல்ல எனக்கு விருப்பமில்லை நவீன்” என்று திடமாக உரைத்தவள், சொன்ன வேகத்தில் அங்கிருந்து வேகவேகமாக நகர்ந்து விட்டாள்.

 

நவநீதன் அவளின் காதலின் வெளிப்பாட்டில் பிரமித்து போனான். உண்மையில் அவனுக்கும் அவள்மீது கடலளவு நேசம் இருக்கிறது தான்! ஆனால், அவனால் அதைத் திடமாக அவளிடம் பகிர முடியாது. என்ன ஆனாலும் சரி அவள் வேண்டும் என்று உறுதியோடு நின்று அவள் கரம் பிடிக்க முடியாது. ஆனால், இதையெல்லாம் அனாயசமாக சுபிக்ஷா செய்து விடுவாள் என்று தோன்ற அவன் உதட்டினில் புன்னகை அரும்பிற்று.

நான் இத்தனை தூரம் சரி வராது. வேண்டாம். முடியாதுன்னு சொல்லறேன். அப்பவும் என்கிட்ட இப்படிப் பேச எப்படி இவளால முடியுது? அப்ப சுபிக்கு என்னை எந்தளவு பிடிச்சிருக்கும்? இன்னும் சொல்லப்போனா எனக்கு அவளை பிடிச்சதை விட, அவளுக்குத் தான் என்னை பலமடங்கு அதிகமா பிடிச்சிருக்கும். எத்தனை திடமா சொன்னா… அந்த திடமே அவளுக்கு ஒரு கிரீடம் வெச்ச மாதிரி எத்தனை அழகா இருந்துச்சு…

ஒரு மாதிரி மெய்சிலிர்த்த நிலையில் சிலாகிப்பாய் நினைத்துக் கொண்டிருந்தான். அவளின் காதல் அவனுக்குள் பேருவகை தந்தது.

 

இந்த திருமணத்தைத் தானாக நிறுத்த முயற்சிக்க வேண்டாம் என்று எண்ணிக் கொண்டான். அதைத்தவிர அவளது காதலுக்கு வேறெந்த விதத்தில் அவனால் மரியாதை தந்துவிட முடியும்?

 

கூடவே இந்த திருமண பந்தத்தை முடிந்தளவு வெற்றிகரமாகக் கொண்டு செல்ல வேண்டும் என்பதிலும் அவன் வெகு உறுதியோடு இருந்தான். ஆனால், அவன் அதற்காக செய்யும் முயற்சிகள் எதிர்வினை ஆற்றக்கூடும்  என்பது அப்பொழுது அவனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

எதிர்பாராத பரிசுகளை எதிர்பாராத தருணத்தில் அள்ளித்தருவது தானே வாழ்க்கை!

சுபிக்ஷாவும் இத்தனை சீக்கிரம் அனைத்தும் நடந்தேறும் என்று எதிர்பார்க்கவில்லை. அன்று என்ன தைரியத்தில் நவநீதனிடம் அப்படிச் சொல்லி வந்தாளோ, வந்ததிலிருந்து நடந்த சம்பவங்கள் எல்லாம் அசுர வேகம் தான்!

அந்த வாரத்திலேயே நவநீதனின் குடும்பத்தினர் இவர்கள் வீட்டில் பேச்சை எடுத்து விட்டார்கள். அது இவளுக்குத் தெரிய வந்திருக்காது தான் இவளின் தமையன் வினோதன் இவளிடம் வந்து முறைத்துக் கொண்டு நின்றிருக்காவிட்டால்…

அவன் பார்வையே உஷ்ணமாக இருக்க இப்ப என்ன பிரச்சினை என குழம்பியபடியே, “என்ன ஆச்சுண்ணா?” என்றாள் கலவரத்துடன்.

“என்ன? என்ன ஆச்சு? நான் தான் விசாரிச்சிட்டு இருக்கேன் இல்ல… அதுக்குள்ள என்ன அவசரம்?”

“ஒன்னும் புரியலைண்ணா” என்றாள் மெய்யான குழப்பத்துடன்.

வினோதனோ அதற்கும் காய்ந்தான். “அதெப்படி தெரியாம இருக்கும். சரி நீ என்கிட்டே என்ன சொன்ன? உனக்கு அவனை பிடிச்சிருக்குன்னு தானே சொன்ன?”

அதில் தங்கைக்கு மூக்கு விடைத்தது. “அவன்னா? யாரை சொல்லறீங்க?” என்றாள் கோபக்குரலில்.

இவ ஒருத்தி என்ற அலுப்புடனும், அவன்னு கூட சொல்லக் கூடாதாக்கும் என்ற எரிச்சலுடனும், “இப்ப அதுவா பிரச்சினை?” என்றான் பல்லைக் கடித்தபடி.

“கண்டிப்பா… அதுவும் பிரச்சினை தான்” என்றாள் அவள் அழுத்தம் திருத்தமாக.

உஃப் என்ற உஷ்ண பெருமூச்சை வெளியிட்டவன், “சரி நவநீதன்… அவரை உனக்கு பிடிச்சிருக்குன்னு தானே என்கிட்ட சொன்ன? இப்ப என்ன அவர் வீட்டுல இருந்து சம்பந்தம் பேச வந்திருக்காங்க. அப்படின்னா என்ன அர்த்தம்?” என்றான் கடுப்புடன்.

“நாங்க ரெண்டு பேரும் காதலிக்கறோம்ன்னா… ஆமாம் காதலிக்கறோம்ன்னு தைரியமா என்னால சொல்ல முடியும்ன்னு உங்களுக்குத் தெரியும். அதோட உங்ககிட்ட நான் மறைச்சிருக்க மாட்டேன்னு உங்களுக்குத் தெரியும்” என்றாள் நிமிர்வுடன்.

ஆம்! அது வினோதனுக்கும் தெரியும் தான்! ஆனால், இது எப்படி? அவன் குழம்பிப் போனான்.

“சரி அவங்க ஏன் வந்தாங்கன்னு ஆராய்ச்சி எல்லாம் எதுக்கு? அம்மா, அப்பா கேட்டா உனக்கு இஷ்டம் இல்லைன்னு சொல்லிடும்மா. அண்ணன் உன் நல்லதுக்கு தானே சொல்வேன். உனக்குக் கெடுதலா எதுவும் செய்வேனா சொல்லு. இப்ப உனக்கு இந்த முடிவெடுக்கக் கஷ்டமா இருக்கலாம். ஆனா இது உன்னோட நல்லதுக்காகத்தான்மா” தங்கையின் தலையை ஆதரவாக வருடி வினோதன் பேசினான்.

இப்படி மறுத்துச் சொன்னால் தங்கை வேதனைப்படுவாள் என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருக்க முடியுமா? தலைக்கு மேலே வெள்ளம் போகும் நிலை என்றால் சுதாரித்துத் தானே ஆக வேண்டும்.

சுபிக்ஷா அண்ணனிடமிருந்து விலகி நின்று கொண்டாள். கோபம் கோபமாக வந்தது. “அதென்ன… அவரும் அதே தான் சொன்னாரு. அவரை கட்டிக்கிட்டா கஷ்ட படுவேனாம். அவங்க வீட்டுல எங்க ரெண்டு பேரையும் ஒன்னா பார்த்துட்டு தப்பா புரிஞ்சுகிட்டு கல்யாணம் பேச நினைக்கிறாங்களாம். அதுனால நான் கல்யாணத்தை வேண்டாம்ன்னு சொல்லறதாம். இப்ப நீங்களும் என்னோட நல்லதுக்கு தான் சொல்லறேன்னு சொல்லறீங்க…

உங்களுக்கெல்லாம் எப்படி சொன்னா புரியும்ன்னு எனக்குத் தெரியலை. நான் அவரை கட்டிக்காம இருந்தா தான் கஷ்டப்படுவேன்னு…” என்றாள் கண்கள் கலங்க.

வினோதனுக்கு வேதனையாக இருந்தது. “இல்லை சுபிம்மா… எனக்கு எதுவுமே சரியா படலைடா. முதல்ல அவர்… அந்த நவநீதன் ஒரே ஊருல இருந்தும் அவங்க அம்மா, அப்பா கூட இல்லைம்மா. தனியா தான் இருக்காரு…”

அவனை முடிக்க கூட விடாமல், “எனக்கும் தெரியும்ணா” என்றாள் அவள்.

“என்னை பேச விடும்மா. அப்பறம் அவருக்கு ஒரு தங்கை. அந்த பொண்ணுக்கு அத்தனை செல்லம் அந்த வீட்டுல… எனக்கு தெரிஞ்சு அந்த பொண்ணு ரொம்ப மெஸுர்ட் மாதிரி தெரியலை… சாரி டு சே திஸ்… அது கொஞ்சம் அரை வேக்காடு மாதிரி தெரியுதும்மா… கண்டிப்பா அதோட பொறுப்பும் இவர் தலையில தான் விடியும். இப்படி பிக்கல் பிடுங்கலோட ஒரு லைஃப் ஸ்டைல் உனக்கெதுக்கு மா?”

“என்ன பேச்சு பேசறீங்க ணா? நீங்க இவ்வளவு செல்ஃபிஷா இருப்பீங்கன்னு நான் நினைக்கவே இல்லை. நம்ம அம்மா, அப்பாவுக்கு பிறகு எனக்கு நீங்க இருப்பீங்கன்னு நம்பிக்கையவே நீங்க இப்ப உடைக்கறீங்கண்ணா” என்றவளின் விழிகளில் நீர் பெருக்கெடுத்தது.

“சுபி… என்ன இப்படி சொல்லிட்ட?” வினோதன் அதிர்ந்து போனான்.

“பின்ன… அவரோட தங்கச்சி பொறுப்பு அவர்கிட்ட வந்துடுமோன்னு பயப்படற நீங்க… எந்த விதத்துல உங்க தங்கச்சியை பொறுப்பா பார்த்துப்பீங்க?”

முகத்தில் அறை வாங்கியதைப் போல உணர்ந்தான். அப்பொழுதும் அவன் தன் தங்கையைக் குறித்து கவலைப்பட்டதைத் தவறென்று நினைக்கவில்லை. எந்த பெற்றவர்களும் உடன் பிறந்தவர்களும் தங்கள் வீட்டுப்பெண் எந்த கஷ்டமும் படக்கூடாது என்றுதான் நினைப்பார்கள். அவனுக்கும் அதே எண்ணம் தான்!

ஆனால், தான் சொன்னதை வைத்து தங்கை இப்படி ஒரு கேள்வி கேட்பாள் என அவன் எதிர்பார்க்கவே இல்லை. காரணமே இல்லாமல் நவநீதன் மீதும், அவனின் தங்கை மீதும் அத்தனை ஆத்திரம் வந்தது.

இருண்டு வாடிப் போயிருந்த தமையனின் முகத்தைப் பார்த்து, “எனக்கு அவரை ரொம்ப பிடிச்சிருக்கு ணா. எல்லா மனுஷனும் நிறை, குறைகள் நிறைஞ்சவங்க தான்! அவர்கிட்ட இருக்கும் குறைகள் எனக்கு பெருசா தெரியலை. இனி தெரியும்ன்னும் தோணலை… எனக்கு என் வாழ்க்கையில அவர் மட்டும் தான் வரணும்… இந்த கல்யாணத்துக்கு உங்க விருப்பப்படி நான் மறுப்பு சொன்னா… வேற எந்த மாப்பிள்ளைக்கும் நான் சம்மதம்ன்னு சொல்ல மாட்டேன்ணா…” என்றாள் உறுதியான குரலில்.

எல்லா வழிகளும் அடைபட்டது போல உணர்ந்தவன், நவநீதனோ அவன் குடும்பமோ அல்லது தங்கள் பெற்றவர்களோ யாராவது மறுப்பு தெரிவித்தால் நன்றாக இருக்கும் என நினைத்தான். அதற்கு தன்னாலான முயற்சிகளைச் செய்ய வேண்டும் என்றும் எண்ணிக்கொண்டான். தங்கையின் பிடிவாதத்திற்கு அவனால் வளைந்து கொடுக்க முடியவில்லை.

1 thought on “சுகமதியின் ‘இரவும் நிலவும் – 6’”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

சுகமதியின் ‘இரவும் நிலவும் – 11’சுகமதியின் ‘இரவும் நிலவும் – 11’

இரவும் நிலவும் – 11   “அண்ணா… அது ஒரு ஹெல்ப்…” சுபிக்ஷா வருணிடம் தயங்கிக் தயங்கி கேட்டு நிறுத்தினாள்.   முன்மாலை நேரத்தில், அலுவலகத்தில் வேலையில் இருப்பவனை அழைத்து… இத்தனை தயக்கத்தோடு கேட்டால் அவனுக்கு எப்படி இருக்கும்? கொஞ்சம் பதறி

சுகமதியின் ‘இரவும் நிலவும் – 14’சுகமதியின் ‘இரவும் நிலவும் – 14’

இரவும் நிலவும் – 14 “அண்ணி… நான் பிறந்த பிறகு தான் இத்தனை பிரச்சினையும். அண்ணனுக்கு மனசளவுல நிறைய கஷ்டம் போல! ஆனா அம்மா அப்பாவுக்குமே அதேயளவு கஷ்டம் தானே அண்ணி! குடும்பத்துல எல்லாருக்கும் கஷ்டம் கொடுத்த என்மேல எல்லாரும் பாசத்தைக்

சுகமதியின் ‘இரவும் நிலவும் – 7’சுகமதியின் ‘இரவும் நிலவும் – 7’

இரவும் நிலவும் – 7   நவநீதன், சுபிக்ஷா திருமணம் நடக்க வேண்டும் என்று அதிக முனைப்போடு செயல்பட்டது அகல்யா என்றால், ஏதாவது வழி கிடைக்காதா இந்த திருமண பேச்சிற்கு தடை சொல்வதற்கு எனத் தீவிரமாக ஆராய்ந்து கொண்டிருந்தவன் வருணே!