Tamil Madhura யாழ் சத்யாவின் ஹாய் செல்லம் யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 4

யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 4

செல்லம் – 04

 

மனோராஜூம் பார்கவியும் கடையைப் புனரமைப்பதற்கான தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார்கள்.

 

“நீ சொல்லுறது போல கல்யாண புடவைகளை மூன்றாம் மாடிலயே வைப்பம். அங்க நிறைய இடமும் இருக்கு..”

 

“கல்யாண உடுப்பு எடுக்க வாறவை உடன எடுத்திட்டுப் போக மாட்டினம். அவை நிண்டு நிதானமாக எடுக்க ஒதுக்குப் புறமாக இருந்தால் கூட நல்லம். ஆம்பிளையளிட உடுப்புகளையும் மூன்றாம் மாடிக்கே மாத்துவம்.. இப்ப கல்யாண சாரிகள் கீழ இருக்கிற படியா எல்லாரும் நின்று நிதானமாக பார்த்து வாங்க இடம் காணாது..”

 

“சரி பாரு! அப்ப கீழ என்ன வைக்கிறது?”

 

“கீழ சாதாரண சேலை, பொம்பிளைகளிட உடுப்பு வைக்கலாம்? அதுதான் எப்பவுமே வியாபாரமாகிற பொருள். கடையில் அடிக்கடி சனம் வந்து போகிறது போல ரோட்டில போறவையிட கண்ணில படும். சனம் நிறையப் போற கடைதான் நல்ல கடை என்றது எங்கட மக்களிட அபிப்பிராயம்.”

 

“ஓமோம். விளங்குது.. முதல் மாடியில சின்னப் பிள்ளைகளிட உடுப்பும் கர்ப்பிணிப் பெண்களுக்கான உடுப்பும் வைக்கலாம்..”

 

“இரண்டாம் மாடியில துணி வகை எல்லாத்தையும் வைக்கலாம்.. அதோட சேர்த்து ஃபேன்ஸி நகைகள், மேக்கப் ஐட்டம்ஸ், கிரீம் வகை கூட நீங்க விரும்பினா வைக்கலாம்..”

 

“இதுவும் நல்லாத் தான் இருக்கு..”

 

“லிப்ட் ஒன்று போட வேணும்.. வயசானவை ஏறியிறங்கக் கஷ்டப்படுகினம். நான் ஒருக்கா இங்க கடைக்கு வாற கான்ட்ராக்டர் ஒராளை கேட்டனான். அவர் சொன்னவர் பின்பக்கமாகப் போடலாமாம் என்று. நீங்களும் வேற யாரையும் கூட்டி வந்து விசாரிச்சுப் பார்த்தால் நல்லம்..”

 

“ஓம் பாரு.. நானும் இதைப் பற்றி யோசிச்சன். அதுவும் நாங்கள் கல்யாண உடுப்புகளை மூன்றாம் மாடியில வைச்சால் வயசானவை எல்லாம் ஏறிப் போகக் கஷ்டம். அதனால கட்டாயமாக லிப்ட் போடத்தான் வேணும். என் ப்ரெண்ட் ஒருத்தன் கட்டிட வேலை பாக்கிறவன் இருக்கிறான். நான் நாளைக்கே அவனைக் கூட்டிக் கொண்டு வந்து எவ்வளவு முடியும் எவ்வளவு நாள் வேலை எல்லாம் கணக்குப் பார்த்திடுறன்..”

 

“மேல மொட்டை மாடியில இருக்கிற ரெண்டு அறைகளும் தான் இப்ப ஸ்டோர் ரூமாகப் பாவிக்கிறம். அந்த அறையையும் கொஞ்சம் திருத்த வேணும். ஒரு இடத்தில மழைக்கு ஒழுகுது. அந்த அறைக்க எதுவும் வைக்கேலாமாக் கிடக்கு. ரெண்டு அறையளுக்கயுமே சுவரில தட்டுகள் அடிச்சால் வடிவாக அடுக்கி வைக்கலாம்.”

 

“சரி பாரு.. இதையும் நாளைக்கே அவனைக் கொண்டு பாக்கிறன்..”

 

மனோராஜூம் பார்கவியும் மிகவும் சுவாரஸ்யமாகக் கடையைத் திருத்துவதற்கான திட்டங்களில் ஈடுபட்டிருந்த போது கடைப் பையன் வந்து குறுக்கிட்டான்.

 

“மன்னிக்க வேணும் கவி அக்கா. ஃபாங்கில போய் காசு போட வேணும். நீங்க வந்தீங்க என்றால் ஆதி அண்ணா உடன போய்ட்டு வந்திடுவாராம்.”

 

பார்கவி மனோவை நிமிர்ந்து பார்த்தாள். அவனுக்கு இன்னமும் கடையின் பழக்கவழக்கங்கள் முழுதாகத் தெரியவில்லை என்று புரிந்தது. இவள் விளக்கம் கொடுக்கத் தோன்றாமல் கீழே விரைந்தாள். மனோவும் அவளை பின் தொடர்ந்தான். கடைப் பையன் தான் மனோவின் பார்வையிலேயே விளக்கம் சொல்ல ஆரம்பித்தான். 

 

“அது வந்து ஸேர்.. காசு அம்பதாயிரத்துக்கு மேல இரவில இங்க வைக்கிறேல்ல. ஃபாங்க் மூடுற நேரம் கொண்டு போய் ஃபாங்கில போட்டிடுவம். அதுக்குப் பிறகு ஏதும் பெரிய தொகை வியாபாரம் நடந்தால் அதைப் பாதுகாப்பாக வைப்பினம் போல.. காசு விசயம் எல்லாம் ஆதி அண்ணாவும் கவி அக்காவும்தான் பாக்கிறவை..”

 

“ஓ.. சரி.. சரி.. இதுக்கும் இன்ஷூரன்ஸ் போடுற வேலைகளும் பார்க்க வேணும்..”

 

தனக்குத்தானே கூறியவன் தனது கைப்பேசியிலும் அதைக் குறித்துக் கொண்டான். கீழே சென்றதும் ஆதவனிடம் சரியாகக் கணக்குப் பார்த்துப் பொறுப்பை எடுத்தவள் பில் போட ஆரம்பித்தாள். மனோராஜூம் அங்கேயே கடையைச் சுற்றிப் பார்ப்பது போல இவள் நடவடிக்கைகளை கவனித்துக் கொண்டு தானிருந்தான். அவன் இப்படி அங்கும் இங்கும் இவளையே சுற்றுவதைப் பார்த்தவளுக்கு ஒருபுறம் சிரிப்பும் வந்தது. 

 

அரை மணி நேரத்தில் ஆதவனும் வந்து விட மறுபடியும் கணக்குப் பார்த்து ஆதவனிடம் காசாளர் பொறுப்பைக் கொடுத்து விட்டு அலுவலக அறைக்கு விரைந்தாள். மனோவும் அவளையே பின் தொடர்ந்தபடி பேச்சுக் கொடுத்தான்.

 

“என்ன கஷியர் பொடியனில நம்பிக்கை இல்லையோ.. எதுக்கு ஒவ்வொரு தடவையும் காசை எண்ணி வாங்கிப் பிறகும் எண்ணிக் கொடுக்கிறாய்?”

 

“நம்பிக்கை எல்லாம் இருக்கு.. ஆனா எல்லாரும் சாதாரண மனுசர் தானே. ஆயிரம் யோசினை உள்ளனாங்கள். பிழை விடுறது இயல்பு. இப்படிக் கவனமாக இருந்திட்டால் ஏதும் பிரச்சினை வந்தாலும் யாரிட்ட காசு இருக்கும் போது கூடிச்சுதோ குறைஞ்சுதோ என்று தெரிய வந்திடும். அதனால ஒருத்தரை ஒருத்தர் சந்தேகப்படாமல் ஒழுங்காக வேலை செய்யலாம். இதெல்லாம் சொல்லித் தந்ததே நீங்கள் தானே..”

 

அவளை அறியாமல் சொல்லி விட்டு நாக்கைக் கடித்தவள் இன்னும் விரைந்து நடந்தாள். அவள் இடை வரை நீண்ட பின்னல் அசைந்தாடுவதையே யோசனையோடு பார்த்தவாறு நடந்தான் மனோராஜ்.

 

‘அப்படியானால் இவள் என்னையும் மறக்கவில்லை. அந்த நாள் ஞாபங்களையும் மறக்கவில்லை. வேலை செய்யும் காலங்களில் மனோண்ணா மனோண்ணா என்று எவ்வளவு அன்பாக இருப்பாள். இப்போது ஏன் என்னை இப்படி வெறுக்கிறாள்?’

 

மறுபடியும் அதே கேள்வி மண்டையைக் குடைந்தாலும் பார்கவி தன்னை மறக்கவில்லை என்று தெரிந்ததுமே அவனறியாமல் அவனில் ஒரு இதம் பரவியதை சுகமாக உணர்ந்தான். மனதுக்குப் பிடித்த ஒரு பாடலை மெலிதாகச் சீட்டியடித்தபடி தனது இருக்கையில் சென்று அமர்ந்தவன் மறுபடியும் பைல்களோடு ஒன்றினான். இடையிடையே பார்கவியிடம் தனது சந்தேகங்களையும் கேட்கத் தவறவில்லை. ஆறு மணி போல எல்லோரிடமும் விடைபெற்றும் சென்று விட்டான். 

 

‘பேருதான் பெரிய முதலாளி என்று.. வந்த முதல் நாளே ஆறுமணி அடிக்க முதல் வீட்டுக்கு ஓடுறதைப் பாரன்..’

 

பார்கவி மனசுக்குள் அவனுக்குப் பழிப்புக்காட்டத் தயங்கவில்லை.

கடையை வழக்கமாக ஆறு மணிக்குப் பூட்டுவார்கள். அன்று ஒரு வழக்கமான வாடிக்கையாளர் பெரிய தொகை விற்பனையோடு தாமதப்படுத்தி விடக் கடையைப் பூட்ட எட்டு மணியாகி விட்டது. சில நேரங்களில் இப்படி நடப்பதும் உண்டு தான். பார்கவியும் சில பையன்களை மட்டும் வைத்துக் கொண்டு மீதிப் பேரை வீட்டுக்கு அனுப்பி விடுவாள். அதுவும் பெண் பிள்ளைகளை எப்போதுமே ஆறு மணிக்குப் பிந்திப் பத்து நிமிடங்கள் கூடத் தாமதிக்க விட மாட்டாள். 

 

எல்லோரும் சாப்பிட்டார்களா என்று கவனித்துத்தான் மதியங்களில் அவள் சாப்பிடுவாள். இப்படி அவள் வேலையாட்களில் மிகவும் கவனமாக இருப்பதால்தான் எல்லோருமே இவளில் உண்மையான அன்பும் மதிப்பும் வைத்திருந்தார்கள். 

 

ஆதவன் எட்டு மணிக்குக் கடையைப் பூட்டிவிட்டுப் புறப்படும் போதுதான் பார்கவியும் வீட்டுக்குக் கிளம்பினாள். போகும் வழியில் தான் வீட்டிலே சமைக்க எதுவும் இல்லை என்ற ஞாபகம் வந்தது. கடைசியாகப் பொருட்கள் வாங்கச் சென்ற போது மனோராஜைக் கண்டதும், தேவையான எதுவும் வாங்காமல் வீடு திரும்பியிருந்தாள். இருந்ததை வைத்துச் சில நாட்கள் சமாளித்தவளுக்கு இப்போது எந்தக் காய் கறியும் இல்லை என்பது நல்லகாலமாக நினைவு வந்தது. அந்தப் பல்பொருள் அங்காடியும் இரவு ஒன்பது மணி வரை திறந்துதான் இருக்கும். 

 

வேண்டியதை வாங்கிக் கொண்டு வீடு திரும்பும் போது பார்கவிக்கு இன்னொரு பெரிய மோட்டர் சைக்கிள் தன்னைப் பின் தொடர்வது போன்ற ஒரு உணர்வு எழுந்தது. தனது ஸ்கூட்டி முன் கண்ணாடியில் தொடர்ந்து அவதானித்தவளுக்கு இதயம் துடிக்கும் சத்தம் வெளியே கேட்க ஆரம்பித்தது. 

 

அமாவாசை இரவு நன்றாகவே இருண்டிருந்தது. ஆதவன் அப்போதும் கேட்டவன்தான். வீடு வரை கூட வருகிறேன் என்று. அவன் வீடோ இவள் வீட்டுக்கு எதிர்ப்புறம். தனக்காக வீணாக அலைய வேண்டாம் என்று மறுத்திருந்தாள். ஸ்கூட்டியில் தானே வேகமாகச் சென்று விடலாம் தானே என்ற அசட்டுத் தைரியம் தான். 

 

இவள் வேகத்தைக் கூட்டவும் அந்த மோட்டார் சைக்கிளும் வேகமாகவே வந்து இவள் அருகில் வரவும் இவள் உண்மையிலேயே மிகவும் பயந்து போய் சடன்பிரேக் பிடித்து நின்று விட்டாள். திடீரென பிடித்த பிரேக்கில் இவள் குலுங்கி நிற்கவும் இவள் நிற்பாள் என்று எதிர்பார்க்காத மற்றைய மோட்டார் சைக்கிளும் இவளுக்குச் சற்று முன்பு போய் கிரீச்சென்ற சத்தத்தோடு பிரேக் அடித்து நின்றது. 

 

அந்த இருட்டுக்குள் ஹெல்மெட்டோடு நின்றவனை யார் என்று தெரியாமல், உதவி கூறிக் கத்தவும் வாய் வராமல் அசையாமல் நின்றாள் பார்கவி. நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது. தொண்டை வறண்டு வயிற்றுக்கும் தொண்டைக்குமாய் ஒரு உருண்டை உருண்டு கொண்டிருந்தது. அடிவயிற்றில் இனம் புரியாத கலவரம். பயத்திற்குரிய முழு இலட்சணத்தையும் உணர்ந்து கொண்டிருந்தவளை நோக்கி மோட்டார் சைக்கிளை திருப்பியவன் அவளுக்கு மிக அருகில் வந்ததும் மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருந்தவாறே ஹெல்மெட்டைக் கழட்டினான். 

 

“ஹேய் செல்லம்.. பயந்திட்டியா? நான் தான்.. சூப்பர் மார்கெட்டில இருந்து நீ தனியாகப் போறதைக் கண்டனான். இந்த இரவு நேரத்தில தனியாகப் போக வேணாமே என்றிட்டுப் பின்னால வந்தனான். நான் தான் என்று சொல்லுவம் என்றிட்டுத் தான் கிட்ட வந்தனான். அதுக்குள்ள நீ பயந்து போய் நிப்பாட்டிட்டாய் போல..”

 

பார்கவிக்கு அது கயவன் இல்லை என்று தெரிந்ததால் வந்த நிம்மதியா? இல்லை இப்படிப் பயந்து விட்டோமே என்று வந்த ஆற்றாமையா? இப்படிச் செய்து விட்டானே என்று வந்த கோபமா? தெரியவில்லை. அவள் இரு கண்களிலிருந்தும் பொலபொலவெனக் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது. 

 

மோட்டார் சைக்கிள் முன் பக்கத்து வெளிச்சத்திலும் தூரத்திலிருந்த மின் விளக்குத் தந்த ஒளியிலுமாக அவள் கண்ணீரைக் கண்டவனோ பதறி விட்டான். 

 

“ஏன் பாரு அழுகிறாய்..?”

 

கூறியவன் அடுத்த நொடியே தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு இறங்கி அவளை நெருங்கினான். 

 

“அழாதை பேபி.. இப்ப என்ன நடந்து போச்சு.. தனியாகப் போறாய் என்று தானே செல்லம் கூட வந்தனான். நீ இப்பிடிப் பயந்து போய்விடுவாய் என்று நான் நினைக்கேல்ல.. ரியலி ஸொரிடா குட்டி.. அழாதை பாருக்குட்டி..”

 

கூறிக் கொண்டே அவள் கண்களை துடைக்க முனைந்தான். ஆனால் அவளோ அவனை உறுத்து விழித்தவள் பட்டென்று அவன் கையைத் தட்டி விட்டாள். அதே வேகத்தில் அவன் கன்னத்தில் ஒன்று கொடுத்து விட்டு ஸ்கூட்டியைக் கிளப்பிக் கொண்டு விரைந்து விட்டாள். சில நிமிடங்கள் திகைத்து நின்றவன் அடிவாங்கிய கன்னத்தை தடவி விட்டு ஒரு பெருமுச்சோடு அவளை பின் தொடர்ந்தான். அவள் வீட்டுக்குள் செல்லும் வரை நின்று பார்த்து விட்டு நாலு வீடு தள்ளியிருந்த தனது வீட்டை அடைந்தான் மனோராஜ். 

 

வீட்டுக்குச் சென்று ஹெல்மெட்டைக் கழட்டி வைத்து விட்டு நேராக வரவேற்பறையிலிருந்த ஸோபாவில் வீழ்ந்தான். அவன் நெஞ்சமெங்கும் நிறைந்திருந்த ஒரேயொரு கேள்வி, 

 

“பார்கவி எதனால் என்னை இவ்வளவு வெறுக்கிறாள்?”

 

கடையில் நின்ற இந்த ஒரே நாளிலேயே இவள் மற்றவர்களை நடாத்தும் விதத்தையும் மற்றவர்கள் இவளிடம் ‘அக்கா அக்கா’ என்று உருகுவதையும் இவளை விட வயதானவர்கள் கூடப் பேர் சொல்லி அழைத்தாலும் ‘வாங்கோ போங்கோ’ என்று மரியாதையாகவே நடத்துவதையும் நன்கு கவனித்திருந்தான். இத்தகைய மதிப்பு, மரியாதை, அன்பு அவ்வளவு இலகுவில் கிடைத்து விடக் கூடிய ஒன்றல்ல. உண்மையாக உணர்ந்து பழகினால் மட்டுமே வரக் கூடியது. 

 

ஆண்கள், பெண்கள், வயதானவர்கள், இளையவர்கள் என்று எல்லோரிடமும் அன்பை பரிமாறுபவள் தன்னிடம் மட்டும் ஏன் இத்தனை ஆவேசம், கோபம், வெறுப்பு?

 

அவன் அறிந்த பார்கவி அன்பானவள்தான். சிரித்த செந்தழிப்பான முகத்திற்குச் சொந்தக்காரி. பார்ப்போரைத் திரும்பிப் பார்க்கும் பேரழகி ஒன்றும் கிடையாது தான். ஆனால் அவளின் துருதுரு கண்களாலேயே கவர்ந்து விடுவாள். கலகலவென பேசியபடி வளைய வரும் பார்கவியிடம் எப்போதும் வம்பிழுப்பது மனோராஜூக்கு மிகப் பிடித்தமான விடயம். 

 

“ஹேய் பாருக்குட்டி.. எங்கட சூப்பர் மார்கெட் அரிசியிலயா இப்பிடி வளருறாய்?”

 

“ப்ளீஸ் மனோண்ணா.. இப்பிடி குட்டி என்றெல்லாம் கூப்பிடாதையுங்கோ.. மற்றது நான் அப்படி ஒன்றும் குண்டில்லைச் சரியோ..”

 

“கேரளாவில தான் உன்னைப் போல கொழுகொழுவென்று ஆக்கள் இருப்பினம். அங்க குட்டி என்று தான் பொம்பிளைப் பிள்ளையளைக் கூப்பிடுவினம் தெரியும் தானே..”

 

“அது கேரளாவில தானே அண்ணா. நான் இங்க தானே இருக்கிறன். நீங்க கேரளாவில போய் குட்டி என்று கூப்பிடுங்கோ.. என்னை பார்கவி என்று கூப்பிட்டால் போதும்.. இல்லையோ மற்ற ஆக்களைப் போல கவி என்று கூப்பிட்டால் கூடச் சரி தான்..”

 

“நான் வேணும் என்றால் கவிக்கு ஒத்த கருத்துள்ள சொல்லால கூப்பிடவோ? அந்தப் பேர் உனக்கு இன்னும் பொருத்தமாக இருக்கும்..”

 

“என்ன..?”

 

சிறு பிள்ளையின் ஆர்வத்தோடு அவன் குணமறிந்தும் வினாவுவாள்.

 

“குரங்கு..!”

 

“மனோண்ணா.. ப்ளீஸ்.. இதெல்லாம் ஓவர்..”

 

“ஏன் கவி என்றால் குரங்கு என்று படிச்சது மறந்து போச்சே..”

 

“ஓமோம்.. மறந்து போய் தான் உங்களிட்ட வாயைக் குடுத்திட்டன்.. இனிமேல் உங்களோட கதைக்கவே மாட்டன்..”

 

கோபித்துக் கொண்டு அன்று முழுவதும் அவனோடு பேசாமல் இருப்பாள். அவனை காணும் நேரங்களில் எல்லாம் முறைத்துக் கொண்டு திரிவாள். ஆனால் அதெல்லாம் சில மணித்தியாலங்களே. “மனோண்ணா..” என்றபடி பழையபடி வந்து கலகலப்பாள். அப்போதெல்லாம் அவள் போலி முறைப்பை மிகவும் ரசிப்பான் மனோ. 

 

ஒற்றைப் பிள்ளையாக வளர்ந்தவனுக்கு ஏனோ அவளோடு ஏட்டிக்குப் போட்டி கதைத்து வாயாடி வம்பு வளர்ப்பதில் ஒரு தனி சந்தோசம். அவளும் அதே விளையாட்டுப் புத்தியோடிருந்த படியால் அவர்கள் உறவு நன்றாகவே இருந்தது. உயர்தரம் முடித்ததும் பல்கலைக்கழகம் அனுமதி கிடைக்கவில்லை பார்கவிக்கு. அப்போது தான் மனோராஜின் பல்பொருள் அங்காடியில் காசாளாராக வேலைக்குச் சேர்ந்திருந்தாள். 

 

பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த மனோராஜூம் பல்கலைக்கழகம் இல்லாத நேரம் எல்லாம் கடையை கவனித்துக் கொள்வான். பெற்றவரும் சிறிய தந்தையும் கொள்முதல்களை கவனித்துக் கொள்ள இவன் முன்னிருபதுகளிலேயே மேற்பார்வை செய்ய ஆரம்பித்து விட்டான். அப்படிப் போகும் நேரங்களில் எல்லாம் இவன் பொழுது போக்கு பார்கவியை ஏதாவது சொல்லி அவளோடு சண்டை போடுவது தான். 

 

பழைய நினைவுகளிலேயே தூங்கியவனுக்குக் கனவிலே கூட அவளின் முகம் தான் வந்தது. ஆனால் இள வயது சிரித்த முகத்திற்குப் பதிலாக தற்போதைய கோப முகம் வந்து அவனைப் பயமுறுத்தியது. கனவிலும் கூட அவளின் வெறுப்புக்குக் காரணம் தேட ஆரம்பித்தான்.

 

காரணம் அறிவானா? அவள் அன்பைப் பெறுவானா? 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 5யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 5

செல்லம் – 05   அதிகாலையிலேயே விழிப்பு வந்து விட்டது பார்கவிக்கு. வேலைக்குத் தயாராக இன்னமும் நிறையவே நேரம் இருந்தது. கைப்பேசியை எடுத்தவள் முகப் புத்தகத்தை வலம் வந்தாள். அவள் தொடராக வாசிக்கும் சில கதைகளின் அத்தியாயங்கள் வந்திருக்கவே அதை வாசித்தவள்,

யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 14யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 14

செல்லம் – 14   அடுத்த நாள் தாமதமாகத்தான் விடிந்தது பார்கவிக்கு. ஏழு மணிக்கு எழுந்தவளுக்கு அப்போதுதான் தான் இருக்கும் இடம் நினைவுக்கு வர அவசரமாக எழுந்து காலைக்கடனை முடித்துத் தயாராகினாள்.   காலை எட்டு மணி எனவும் கவிதாவின் குரல்

யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 13யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 13

செல்லம் – 13   மனோராஜ் விபத்துக்குள்ளான செய்தி அறிந்ததும் வரதர் ஐயா கனடாவிலிருந்து உடனே புறப்பட்டு வந்திருந்தார். கடையையும் பெரும்பாலும் ஆதவனோடு சேர்ந்து அவர்தான் பார்த்துக் கொள்வார்.    “அந்தக் குளிருக்க கிடந்து நடுங்கிறதுக்கு நான் இங்க இந்தப் பிள்ளையளை