Tamil Madhura யாழ் சத்யாவின் ஹாய் செல்லம் யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 3

யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 3

செல்லம் – 03

 

மனோராஜைக் கண்டதும் வெறுப்பின் உச்சியிலும் கோபத்திலும் பார்கவியின் முகமே சிவந்து விட்டது. புது முதலாளியாக இவன் இருப்பான் என்று கனவிலும் இவள் நினைத்திருக்கவில்லை. அதிர்ச்சியை விட வெறுப்பே மண்டிக் கிடந்தது. வேலையாவது மண்ணாவது என்று எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டுப் போய் விடுவோம் என்று முடிவெடுத்தவளை வரதர் ஐயாவின் குரல் தடுத்தது.

 

“அட.. உனக்கு முதலே கவிம்மாவைத் தெரியுமா மனோ.. ரொம்ப நல்லதாப் போச்சு.. கடையை விக்கிறதை விட நான் கவலைப்பட்ட விசயம் கவிம்மா இனி எப்பிடிச் சமாளிக்கப் போறாளோ என்றுதான். முதலிலேயே உங்களுக்குள்ள அறிமுகம் இருந்தது நல்லதாப் போச்சு.. என்ன கவிம்மா தெரிஞ்ச ஆள் வந்ததில சந்தோசம் தானே உனக்கு..”

 

என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் ஒரு நொடி இருவரையுமே மாறி மாறி பார்த்தாள். பிறகு ஏதோ முடிவெடுத்தவளாய்,

 

“யார் வந்தால் என்ன ஐயா? நான் என்ர வேலையைப் பாக்கப் போறன். அதுக்கு அவை சம்பளம் தரப் போகினம்.. அவ்வளவுதான்..”

 

விட்டேத்தியாகச் சொன்னவளை வரதர் ஐயாவே வியப்புடன் பார்த்தார். 

 

“என்ன செல்லம் இப்பிடிச் சொல்லுறாய்? எனக்கு எவ்வளவு சந்தோசமாக இருக்குத் தெரியுமா? அங்கிள் ஒருத்தரையும் வேலையை விட்டு நிப்பாட்டக் கூடாது என்று சொல்லிட்டார்.. பொறுப்பாக இருக்கிற ஆள் என்னைப் புரிஞ்சு நடந்து கொள்ள வேணுமே.. என்ர ஐடியாக்கள் விளங்குமோ என்னவோ என்று யோசிச்சுக் கொண்டே வந்தன்.  உன்னைக் கண்டதும் எவ்வளவு நிம்மதியாக இருக்குத் தெரியுமா? இப்பத்தான் என்ர டென்சன் குறைஞ்சுது.. பாருவும் நானும் சூப்பர் மார்கெட்டில ஒண்டாத்தானே வேலை செய்தம் அங்கிள். அப்பவே நல்ல பழக்கம்..”

 

“ஆ.. சரி.. சரி.. எனக்கு இப்பத்தான் நிம்மதியாக இருக்கு.. நீங்க ரெண்டு பேருமே இனி கடையைப் பாத்துக் கொள்ளுங்கோ.. தம்பி! கடையைப் பற்றின சகல விசயமும் கவிம்மாவுக்குத் தெரியும். என்ன என்றாலும் இனி அவளையே கேட்டுக் கொள்ளு.. எனக்குக் கொஞ்சம் வேலையிருக்கு.. நான் போய்ட்டு வாறன்..”

 

இருவரிடமும் விடை பெற்றுக்கொண்டு போய்விட்டார் வரதர் ஐயா. அவர் போனதும் அங்கிருந்த ஸோபாவில் அமர்ந்த மனோ பார்கவியையே பார்த்திருந்தான். அவள் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியின்மை அவன் கண்களிலிருந்து தப்பவில்லை. 

 

“என்ன குடிக்கிறியள்?”

 

“பியர், வைன் என்று சொல்ல ஆசைதான்.. அதெல்லாம் இங்க கிடைக்காது தானே.. அதால ஒரு கோக்கோ பெப்சியோ இருந்தால் தா டார்லிங்..”

 

அலுவலக அறையிலேயே ஒரு ஓரமாகக் குளிர்சாதனப் பெட்டி ஒன்று இருந்தது. அதிலிருந்த கோக் ஒன்றை உடைத்து ஸ்ரோ போட்டுக் கொடுத்தாள். 

 

“நீ குடிக்கேலையா டியர்?”

 

கேட்டவாறே கோக்கை உறிஞ்சத் தொடங்கினான். 

 

“இங்க பாருங்கோ சேர்.. நீங்க என்ர முதலாளி.. நான் இங்க வேலை செய்யிற ஆள்.. அதால ஒழுங்காக என்ர பெயரைச் சொல்லிக் கூப்பிடுங்கோ.. என்ர பெயர் பார்கவி.. இப்பிடிச் செல்லம், பேபி என்று கூப்பிடுற வேலையெல்லாம் என்னோட வைச்சுக் கொள்ள வேணாம். இல்லை அப்பிடித்தான் கூப்பிடுவியள் என்றால் நான் இப்பவே வேலைய விட்டுப் போறன்.. வரதர் ஐயாவுக்காகக் கூடப் பார்க்க மாட்டன்.”

 

ராஜ் ஒரு நொடி எதுவும் பதில் பேசாது அவளையே ஆழ்ந்து பார்த்தான். அவளின் வாழ்க்கையில் நடந்த பெருந்துன்பத்தைப் பற்றி அறிந்திருந்தும் கூட அவனால் ஏன் இவள் தன்னைத் தெரிந்து கொண்டது போல காட்டவில்லை என்று புரிந்து கொள்ள முடியவில்லை. ஏன் இவள் இவ்வளவு எரிந்து விழுகிறாள் என்றும் அறிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அக்கினியாய் தகித்த அவள் பார்வை மட்டும் அவன் மேல் அவள் வெறுப்பை வாரி உமிழ்ந்து கொண்டிருக்கிறாள் என்பதை அவனுக்குத் தெளிவாகப் புரிய வைத்தது.  மேலும் பேசினால் மறுபடியும் அடித்து விடுவாளோ என்ற பயத்தில் அவன் கை அடி வாங்கிய கன்னத்தைப் பொத்திக் கொண்டது.

 

முன்பு பல்பொருள் அங்காடியில் வேலை பார்க்கும் போது பார்கவி காசாளராக இருந்தாள். மனோராஜ் தான் மேற்பார்வையாளராக இருந்தான். உண்மையில் அது அவனது அப்பாவினதும் சித்தப்பாவினதும் பல்பொருள் அங்காடிதான். அண்ணன், தம்பி இருவரும் கூட்டாக ஒற்றுமையாக நடத்தி வந்தார்கள். 

 

இப்போது தந்தையை இழந்த பின்னர் சித்தப்பா தொடர்ந்து தன்னிடமே முழுக் கடையையும் தந்து விடுமாறு கேட்க இவனும் தன் பங்குப் பணத்தைப் பெற்றுக் கொண்டு கொடுத்து விட்டான். தாய்க்கும் சேர்த்துப் பாசம் காட்டி வளர்த்த தந்தையே இல்லாமல் போன பிறகு அவனுக்கு அந்தப் பல்பொருள் அங்காடியில் அப்படியொன்றும் ஒட்டுதல் இருக்கவில்லை. 

 

திரும்பவும் லண்டனுக்கே போவோமோ என்று யோசித்துக் கொண்டிருந்த போதுதான் அவன் பார்கவியைக் கண்டது. அவளைப் பற்றி அறிந்து கொண்டதும் தன்னுடைய எண்ணத்தை மாற்றிக் கொண்டவன் வரதர் ஐயா கடையை விற்கப் போவதை அறிந்து தானே வாங்கிக் கொண்டான். ஒரே இரவில் அவன் தன்னுடைய எதிர்காலம் முழுவதற்குமாய் முடிவெடுத்திருந்தான்.

 

வாழ்க்கையில் எந்தக் குறிக்கோளும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருந்தவனுக்கு இப்போதிருந்த ஒரே குறிக்கோள் பார்கவியை பழையபடி சிரித்த முகமாக்குவதுதான். ஆனால் அவனைக் கண்டதுமே கொதி எண்ணெயில் போட்ட கடுகாகப் பொரிந்து தள்ளுபவளிடம் பேசவே பயமாயிருந்தது அவனுக்கு.

 

அவள் போக்கிலே சென்று தான் அவளை வழிக்குக் கொண்டு வர வேண்டும் என்று முடிவெடுத்தான். முக்கியமாக அவளை இங்கே வேலையைத் தொடர வைப்பது தான் அவளை புரிந்து கொள்ள ஒரே வழி என்று நினைத்தவனாய் அவளிடம் பேச ஆரம்பித்தான். 

 

“எனக்கு வரவு செலவு கணக்கெல்லாம் ஒருக்கால் தாறிங்களா? அங்கிள் மாத வாரியாகத் தரேல்ல. நீங்கள் அப்படித் தாறிங்களா?”

 

மரியாதை குரலில் உருகி வழியக் கேட்டவனிடம் அவளால் அதற்கு மேலும் கோபப்பட முடியாமல் அவன் கேட்ட பைல்களை எடுத்துக் கொடுத்தாள். 

 

அவனும் மதியம் வரை அதிலேயே ஆழ்ந்து விட்டான். அவனைப் பற்றி அக்கறைப்படாமல் தனது வேலையைக் கவனித்த பார்கவிக்கு கடையில் வேலை செய்யும் பையன் வந்து அழைத்ததும் தான் வேலையிலிருந்து தலையை நிமிர்த்தி நடப்புக்கு வந்தாள். 

 

“அக்கா.. சாப்பாடு கொண்டு வந்தனிங்களா? இல்லை வாங்கி வரவா?”

 

“எனக்கு மரக்கறிப் பார்சல் ஒண்டு..”

 

கூறியபடி கடைப் பையனிடம் காசைக் கொடுத்தவள் ஞாபகம் வந்தவளாய் மனோவைப் பார்த்தாள். கடைப் பையனும் கண்களால் அவனைக் காட்டி வினாவினான். பைல்களில் தலையைப் புதைத்து இருந்தவனின் மேசைக்கு அருகில் சென்றவள்,

 

“உங்களுக்குச் சாப்பாடு வாங்கி வாரதா?”

 

“என்ன?” 

 

ஒன்றும் புரியாதவனாய் அவளையே மறுபடியும் வினாவினான்.

 

“மத்தியானம் ஆகிட்டுது. சாப்பிட என்ன செய்யப் போறியள்? வெளிய போய்ச் சாப்பிடுவீங்களா? இல்லை இங்கேயே வாங்கி வாரதா?”

 

இழுத்துப் பிடித்த பொறுமையோடு வினாவினாள்.

 

“நான் வெளியே போய் சாப்பிடுறன்.. தாங்ஸ்..”

 

கூறியவன் பைல்களை மூடி விட்டு எழுந்து வெளியே சென்றான். அவனுக்கு பார்கவியின் முகம் பாராத தனிமை வேண்டியிருந்தது. அத்தோடு கடையைப் பதிவு செய்யும் விடயமாக முடிக்க வேண்டிய அலுவல்களும் நிறைய இருந்தன. என்னதான் வேலையில் கவனம் செலுத்தினாலும் மனதின் ஓரம் பார்கவியின் சோகம் கப்பிய முகம் தான் வந்து கொண்டிருந்தது. 

 

‘எப்படியிருந்த பெண்ணுக்கு ஏன் இப்படி ஒரு வாழ்வு? ஆண்டவன் இருப்பதே பொய் தானோ?’

 

பெரிதாய் பெருமூச்சோடு கடைக்குச் சென்று அலுவலக அறைக்குள் அவன் நுழைந்த போது நேரம் மாலை மூன்று மணி. அப்போதுதான் பார்கவி சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். பன்னிரெண்டு மணிக்கே சாப்பாடு வாங்கி வந்தாயிற்று. இப்போது வரை உண்ணாமல் அப்படியென்ன வெட்டிக் கிழித்தாளாக்கும்? 

 

கேட்கத் தோன்றிய வாயை அடக்கிக் கொண்டு தனது இருக்கையில் சென்று அமர்ந்து பைல்களோடு சங்கமமாகினான். புதிய தொழில் இது. அடியும் தெரியாமல் நுனியும் தெரியாமல் காலை வைத்திருக்கிறான். அப்பா கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை வீணாக்கி விட அவன் விரும்பவில்லை. 

 

பார்கவியின் வாழ்வை சீர்படுத்துவதோடு சேர்த்து தொழிலில் தானும் ஜெயிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தான் மனோராஜ். தந்தைக்குச் செய்யும் இறுதி மரியாதை அதுவாகத்தான் இருக்கும் என்று முடிவெடுத்தவனாய் மிகத் தீவிரமாகவே தொழிலைக் கற்றுக் கொள்வதில் முனைந்திருந்தான். வரதர் ஐயாவும் அவனுக்குப் பக்கபலமாக அனைத்துத் தகவல்களையும் வியாபாரத்தின் நெளிவு சுழிவுகளையும் விளக்கினார். முன்பே அவர்களது  பல்பொருள் அங்காடியில் வேலை பார்த்திருந்தமையால் அவனுக்கும் சில பொதுவான வியாபார உத்திகள் தெரிந்தே இருந்தன. அதனால் இலகுவாகவே கற்றுக் கொண்டான்.

 

பார்கவிக்குக் கடையைப் பற்றிய அனைத்துத் தகவல்களும் விரல் நுனியில் இருந்தன. முக்கியமான விடயங்கள் எல்லாம் மனப்பாடமாகவே வைத்திருந்தாள். மனோவுக்கு அதுவே பெரிய உறுதுணையாக இருக்க கடையை எப்படி முன்னேற்றுவது என்று பார்கவியோடு சேர்ந்தே ஆலோசனையில் ஆழ்ந்தான். 

 

“பாரு.. ஸொரி.. பார்கவி! அங்கிள் சொன்னவர் உங்களுக்கு நிறைய ஐடியா இருக்கு என்று.. சொன்னீங்கள் என்றால் அடுத்து என்ன செய்யிற என்று திட்டம் போடலாம்.. இப்பிடியே கடையைத் தொடர்ந்து நடத்த முடியாது. பெரிதாக எந்த லாபத்தையும் காணேல்ல..”

 

அலுவலக அறையேயானாலும் அவனோடு அந்தச் சிறிய அறையில் அமர்ந்து வேலை பார்க்க வேண்டும் என்ற நிலையே அவளுக்குப் பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. யாரை இனி சந்திக்கவே கூடாது என்று எண்ணினாளோ அவனையே தினம் தினம் சந்திக்கும் அவல நிலை யாருக்கும் வரக் கூடாது என்று எண்ணினாள். வேலையை விட்டுச் சென்று விடுவோம் என்ற எண்ணத்தை முளையிலேயே கிள்ளி எறிந்தாள். காகத்திற்குப் பயந்து பருந்து, வல்லூறுகளிடம் சிக்கிக் கொள்ள அவள் விரும்பவில்லை. 

 

மனோராஜையும் அவளுக்கு நன்கு தெரியும். நல்லவன்தான் ஆனால் என்ன அவளது வாழ்க்கையில் மட்டும் வில்லனாகிப் போய் விட்டானே, அவளை அறியாமல் எழுந்த பெருமூச்சோடு தனது திட்டங்கள் அடங்கிய பைலை எடுத்து அவனிடம் கொடுத்தாள். 

 

பார்கவிக்கு இந்த நான்கு வருடங்களாகக் கடையைத் தவிர வேறு சிந்தனை எதுவும் இல்லை. தன்னுடைய கவலைகளை மறக்க சதா கடையைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பாள். அப்படியான நேரங்களில் எழுந்த எண்ணங்களை எல்லாம் அழகாய் குறித்து வைத்திருந்தாள். நூறு பக்கத்துக்கும் மேலிருந்த அந்தக் கோவையைப் பார்த்த போது மனோராஜின் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தன. அதேநேரம் அவளால் இந்தக் கடையைப் பிரிந்து வாழவும் முடியாது என்பது தெள்ளத் தெளிவாகப் புரிந்தது அவனுக்கு. கடையை வாங்கிய தன் முடிவை எண்ணி மகிழ்ந்தவாறே அவளது எண்ணங்களை ஒவ்வொன்றாகப் புரட்ட ஆரம்பித்தான். 

 

பார்கப் பார்க்க பார்கவியின் கடை பற்றிய விசால அறிவை அவனால் வியக்காமல் இருக்க முடியவில்லை. 

 

“சீரியஸாக சொல்லுறன் பாரு.. நீ சொல்லி இருக்கிற இவ்வளவையும் செய்தால் இலங்கையிலேயே எங்கட கடைதான் நம்பர் வன் சேல்ஸ்ல இருக்கும்.. புடைவைக் கடையைப் பற்றி ஒண்டும் தெரியாம வாங்கிட்டேனே.. என்ன செய்யப் போறேனோ தெரியேல்லயே என்று கலங்கிட்டிருந்த என்ர வயித்தில பாலை வார்த்திட்டாய் டார்லிங்.. தாங் யூ ஸோ மச் பேபி..”

 

அவனின் பாரு, டார்லிங், பேபி அழைப்புகள் எல்லாம் அவளில் ஒரு சூறாவளியைக் கிளப்பினாலும் கூட அவனின் உணர்ச்சிவசப்பட்ட வெளிப்படையான பாராட்டு அவள் மனதை அமைதிப்படுத்தியது.

 

அவளுக்காகவே புதிய தொழிலில் காலடி எடுத்து வைப்பவன் வெல்வானா? அவனை பார்த்தாலே வெறுப்பை உமிழ்பவள் அவன் வெற்றிக்கு வழிகோலுவாளா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 4யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 4

செல்லம் – 04   மனோராஜூம் பார்கவியும் கடையைப் புனரமைப்பதற்கான தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார்கள்.   “நீ சொல்லுறது போல கல்யாண புடவைகளை மூன்றாம் மாடிலயே வைப்பம். அங்க நிறைய இடமும் இருக்கு..”   “கல்யாண உடுப்பு எடுக்க வாறவை உடன

யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 12யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 12

செல்லம் – 12   கடையில் அந்த மாதக் கணக்குகளின் வரவு செலவைச் சமப்படுத்தும் முயற்சியில் முனைந்திருந்தாள் பார்கவி. கடையின் தொலைபேசி அழைக்கவும் எடுத்துக் காதில் வைத்தாள்.   “ஹலோ..”   “ஹலோ.. ஓம் சொல்லுங்கோ..”   “உங்கட கடையில வேலை

யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 11யாழ் சத்யாவின் ‘ஹாய் செல்லம்’ – 11

செல்லம் – 11   பார்கவி நடந்ததைக் கூறி விட்டு எழுந்து சென்று விட்டாள். ஆனால் மனோராஜினால் அந்த அதிர்ச்சியிலிருந்து வெளிவரவே முடியவில்லை. ஒரு பெண்ணின் வாழ்க்கை அழிவதற்குத் தான் காரணம் ஆகி விட்டதை அவனால் கொஞ்சம் கூட ஜீரணிக்க முடியவில்லை.