Tamil Madhura செம்பருத்தி தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 20

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 20

அத்தியாயம் – 20

 

‘ஐ’ என்றால் அது காந்தம் என்றால், அந்த ‘ஐ’களின் ‘ஐ’ இவன்தானா? 

‘ஐ’ என்றால் அது அன்பு என்றால், அந்த ‘ஐ’களின் ‘ஐ’ இவன்தானா? 

 

அவினாஷ் வந்துவிட்டான், அவள் கண் முன் நின்றுவிட்டான் என்பதை நம்பவே சில நிமிடங்கள் பிடித்தது செம்பருத்திக்கு. அந்தக் காந்தக்கண்ணழகனின் அன்புக்குள் சிறை பட்டிருந்தது அவளது இதயம் மட்டுமில்லை. அங்கிருந்த அனைவரின் உள்ளமும்தான். 

 

அவினாஷ் என்று கேக் துண்டினை வெட்டி அன்புடன் சேச்சி வாயில் திணிக்க, தம்பி என்று காளியம்மாவும், அண்ணா என்று ஓவியாவும் இருபக்கமும் கைகளைப் பிடித்து இழுக்க, 

 

“அய்யாவுக்கு மதுர ஸ்டைல் முட்ட  பரோட்டா நானே செஞ்சு எடுத்துட்டு வரட்டுமா?” என்று லவங்கம் கேட்க 

 

அன்பில் திணறிக் கொண்டிருந்த அவினாஷோ “இன்னைக்கு உங்களுக்கு ரெஸ்ட் லவங்கம். நீங்க எல்லாரும் என்ஜாய் பண்ணுங்க”

 

“அவி, என் கையால ஏதாவது சமைச்சுத் தந்தே ஆவேன்” அடம் பிடித்த பெர்த் டே சேச்சியின் அன்பை மறுக்க முடியாமல்

“இந்தாங்க ஜப்பானிலிருந்து உங்களுக்காக வாங்கிட்டு வந்தது. வெரி ஸ்பெஷல்” என்று ஒரு சோயா சாஸ் பாட்டிலைத் தந்தான். 

 

“ஐயோ சொர்ணம், தங்கம் மாதிரி ஸ்பெசலாச்சே தா தா” என்று அதனை வாங்கி அப்படியே முகர்ந்து பார்த்தார். 

 

“நூறு சதவிகிதம் நேச்சுரல். இந்த பாட்டில் இயற்கை முறைல பேரல்ல நாலு வருஷமா ஊற வச்சுத்  தயார் செஞ்சது. வொயின் மாதிரி விலை உயர்ந்ததுன்னு வச்சுக்கோயேன்” என்று முகம் விகாசிக்க சொன்னார் லீலாம்மா. 

 

“டார்லிங், இந்த கேக், டின்னர், நான் இது எல்லாத்தையும் விட இந்த பாட்டிலைப் பாத்ததும்தான் உங்க முகம் பிரைட்டா மாறுது” செல்லமாகக் கோபித்துக் கொண்டான் அவனைக் கண்ட விநாடியிலிருந்து ஆயிரம் வாட்ஸ் பல்பாய் ஒளிரும் ஒருத்தியின் முகத்தை நோக்காமலேயே. 

 

அதன் பின்னர் கிட்சன் ஸ்டாப்பை அழைத்து சேச்சிக்கு வேண்டியதை எடுத்துத் தர சொல்லிவிட்டு அந்தக் கும்பலிலிருந்து மெதுவாக விடுவித்துக் கொண்டு நகர்ந்தான். 

 

தனது ஓரக்கண்ணால் அவனை சிறை எடுத்துக் கொண்டிருந்த செம்பருத்தியின் அருகில் இருந்த நாற்காலியை அடி மேல் அடி எடுத்து நெருங்கின அவனது கால்கள். செம்பருத்தி படபடத்த அவளது இதயத்தைக் கட்டுப்படுத்தினாள்.

 

நீ யார் என்று நானறியேன்,  என்னை உனக்குப் பிடிக்குமா சிறிதுமறியேன். இந்த அன்பு கைகூடுமா ஈசன்தான் அறிவான் இருந்தாலும் 

 

எத்தனை இரவு உனக்காக விழித்திருந்தேன்! எத்தனை நிலவை உனக்காக வெறுத்திருந்தேன்!

 

“எப்படி இருக்க செம்பருத்தி?” என்ற அந்தக் குரல் அவளது மனதின் ஆழத்தில் ஊடுருவி தித்தித்தது. 

 

அவள் மனதில் கண்டிப்புக் குரலில் அபிராம் திட்டினான் வேலை பார்க்க வந்த சமயம் பேந்த பேந்த விழித்துக் கொண்டிருந்தவளிடம் பேசும் அதே குரலில் “ஏன் இப்படி ஆந்தை மாதிரி கொட்ட கொட்ட முழிக்கிற. சீக்கிரம் ரியாக்ட் பண்ணிப்  பழகு. இது சூப்பர் ஃபாஸ்ட் உலகம். இந்த மாதிரி ஸ்டில் போஸ் எல்லாம் கவனிச்சு உன் மனசைப் படிக்க இங்க யாருக்கும் நேரமில்லை, நேரமிருக்குறவங்களும் மந்திரவாதி இல்லை”

 

இவன் வேற மனசுக்குள்ள கூட  திட்டிக்கிட்டே வந்து நின்னுடுவான் என்று தன்னை மீட்டுக் கொண்டு இயல்பு உலகிற்கு வந்தாள்.

 

“நல்லாருக்கேன் அவினாஷ். நீங்க எப்படி இருக்கிங்க?”

 

“நாட் பேட். அப்பறம் புது இடம், புது சூழ்நிலை பிடிச்சிருக்கா?”

 

“ரொம்ப பிடிச்சிருக்கு” என்றால் அவனது கண்களை நோக்கியவாறு. 

 

“உ.. உனக்குப் பிடிச்சிருக்குறது எனக்கு ரொம்ப சந்தோஷம். நீ சந்தோஷமா இருக்கியா?”

 

“நூறு சதவிகிதம். நீங்க ஏன் இவ்வளவு இளைச்சுட்டிங்க”

 

“ஒரே அலைச்சல் செம்பருத்தி. நீயும் தான் பாதியா மாறிட்ட” அப்போதுதான் அவளது குர்த்தியை கவனித்தவன். தாடையைத் தடவிக் கொண்டே யோசித்தான். 

 

“அன்னைக்கு இந்த உடை உபயோகப் படல போலிருக்கே”

 

“இன்னைக்குத்தான் நான்  போடணும்னு இருந்ததால அன்னைக்குப் போட முடியலையோ?” அவனைப் போலவே தாடையைத் தடவிக் கொண்டே பதிலளித்தாள். 

 

“என்னைக் கிண்டல் பண்ற அளவுக்கு உனக்கு தைரியம் வந்துருச்சா… ஹா… ஹா… “

 

“அதுக்கு அவ்வளவு தைரியம் வேணுமோ?”

 

“உன் தைரியத்துக்கு என்ன குறைச்சல்? முதல் சந்திப்பிலேயே நியாயத்துக்காக தைரியமா சண்டை போட்டது நினைவிருக்கு”

 

“இப்ப தைரியமா கேக்குறேன். நீங்கதான் என்னை இந்த வேலைக்குத் தேர்ந்தெடுத்திங்களா அவினாஷ்? எதனால? அபிராம் சார் மனசைக்  கலைக்காத அளவுக்கு ஒரு பொண்ணு வேணும்னா?” அழகற்ற பெண் வேண்டும் என்று அவினாஷா தேர்ந்தெடுத்தான் என்று அவள் மனதில் பல மாதமாக  உறுத்திய கேள்வி அது. 

 

“தப்பு, அபிராமால் மனசு கலையாத ஒரு பொண்ணு வேணும். வெரி ஸ்ட்ராங் அண்ட் டிடர்மைன்ட். ஈஸியா பின்வாங்காத ஒருத்தி. நல்லா பாத்தேன்னா அவனை சுத்தி இருக்குறவங்க எல்லாரும் அப்படித்தான் இருப்பாங்க. சரி இப்ப சொல்லு  உன்னை எத்தனை தடவை உங்கய்யா கெட் அவுட் சொன்னார்?”

 

“பத்து, இருபது, நூறு… “ என்று எண்ணியவளைக் கண்டு. 

 

“போதும், போதும்… நீ வீக் மைண்டட் என்றால் சொல்லிருக்க மாட்டான்”

 

“போதும் அவினாஷ். ஏன் எல்லாரும் அவரைப் பத்தி இப்படி சொல்றிங்க? எவ்வளவு நல்லவர் தெரியுமா? ஒரு தப்பான பார்வை பாத்தது கிடையாது. என்னை விடுங்க அவரைக் கவரும் அம்சம் எதுவும் என்கிட்டே இல்லை. ஆனால் இத்தனை பொண்ணுங்க அந்த வீட்டில் இருக்கோம் அப்டிங்கிறதே அவரோட நல்ல குணத்துக்கு ப்ரூப்”

 

“அட உங்கய்யா நல்லவருதான். ஆனால் செம்பருத்தி… அபிராம் கண்ணாடி மாதிரி. நீங்க எல்லாரும் நல்லதை அவனுக்குக் காட்டினிங்க அதையே அவனும் பிரதிபலிச்சான்”

 

“யாருமே இல்லாத எனக்கு இன்னைக்கு வீடு பூரா துணை இருக்கு. ஆனால் நாங்க அத்தனை பேர் இருந்தும் அபிராம் தனியா இருக்கார். ரூமுக்குள்ளையே அடைஞ்சு இருக்கார். அவருக்கு அன்பைத் தரும் ஒரு துணையை ஏற்பாடு செஞ்சா இதெல்லாம் மறையுமா?”

 

“மறையலாம். அவங்க அம்மா ஒரு பொண்ணை தேர்ந்தெடுத்து இருந்தாங்க. அந்தப் பொண்ணு அபிராமைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க. ஒரு வேளை அது நடந்திருந்தால் எல்லாம் மாறியிருக்கலாம். வேறு விதமான பிரச்சனைகள் வந்திருக்கலாம்”

 

“நம்ம வேணும்னா அவங்க கிட்ட இன்னொரு தடவை பேசிப் பார்க்கலாமா?”

 

“நான், எங்கம்மா அப்பா எல்லாரும் ட்ரை பண்ணிட்டோம். இருந்தும்  அந்தப் பெண்ணைக் கன்வின்ஸ் பண்ண முடியல”

 

“கன்வின்ஸ் பண்ண முடியாதது  விபத்துக்கு அப்பறமா?”

 

அவினாஷ் பதில் சொல்லவில்லை. அபிராமின் வேதனையைப் புரிந்து கொள்ள முடிந்தது. விபத்துக்குப் பின்னர் கல்யாணத்தை மறுத்த அந்தப் பெண்ணால் காயம் பட்டிருக்கிறான். இவளுக்கு முன்பு வேலையிலிருந்து நிகிலா மனது காயப்பட்டிருந்த இடத்தில் தட்டியிருக்கிறாள். சுலபமாக அவளது வலையில் வீழ்ந்துவிட்டான் அபிராம். 

 

இவள் இப்படி கனக்குப் போட்டுக் கொண்டிருக்க, இன்னமும் தான் அழகில்லை அப்படின்னு ஒரு தாழ்வு மனப்பான்மை இவ கிட்ட இருக்கே. பல வருடங்களாக வளர்ந்து வேரூன்றி இருப்பது எப்படி மாதங்களில் சரியாகும். செம்பருத்தி அவளது பயணத்தில் இன்னும் தொலைவு செல்ல வேண்டும் என்பதை உணர்ந்த அவினாஷ் பெருமூச்சுவிட்டான். 

 

“உனக்கு எதனால இப்படி ஒரு நினைப்பு வந்ததுன்னு தெரியல, உன்னை செலெக்ட் பண்ணது நானில்லை. ஆனால் சுகுமாரன் அங்கிள் அப்ரூவலுக்கு அனுப்பியதும் உன்னோட பாசிட்டிவிட்டி அபிராமை சீக்கிரம் மீட்டெடுக்கும்னு நினைச்சே உடனே ஜாயின் பண்ண சொன்னேன். 

 

உனக்கு முன்னாடி இருந்த நிகிலா காமத்தைக் காமிச்சா பதிலுக்கு உங்க அய்யாவும் அவ பின்னாடியே சுத்தினார். இன்னொன்னு தெரியுமா காதல் பறவைகள் ரெண்டு பேரும்  ஊரை விட்டு ஓடிப் போக இருந்தாங்க. சொத்தெல்லாம் விக்க முடியாதுன்னு தெரிஞ்சதும் நிகிலா வீட்டில் இருந்த அபிராமோட   அம்மா மந்தாகினியின் நகை, பணம், வெள்ளிப் பாத்திரம் எல்லாம் சுருட்டிட்டு ஓடிட்டா… அது கூடத் தெரியாம உங்க அய்யா போதை மயக்கத்தில் இருந்தார். அவளை  மடக்கி பிடிச்சு எல்லாத்தையும் மீட்டோம்”

 

“நல்ல வேளை”

 

“எனக்கு கெட்ட வேளை . உங்கய்யா நான் காதல் கிளியை பிரிச்சுட்டேன்னு வானத்துக்கும் பூமிக்கும் குதிச்சு ஒரு ருத்ர தாண்டவமே ஆடிட்டார்”

 

“ஹே நீங்க என்ன ரொம்ப நேரமா பேசிட்டு இருக்கிங்க? அக்காவை முன்னாடியே உங்களுக்குத் தெரியுமா?” என்றபடியே அங்கு ஓடி வந்து இருவருக்கும் நடுவே இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டாள் ஓவியா. 

 

“தெரியும். உனக்கு ஸ்கூல் எல்லாம் எப்படி போகுது?”

 

“சூப்பரா போகுது. அக்காவும் கூட காலேஜில் சேர்ந்திருக்காங்க”

 

“சோசியாலஜி… எதனால இந்த ஸ்பேசிலைசேஷன்? ”

 

“ஒரு ஆர்வம் தான். எனக்கு இந்த சமூகத்தைப் பத்தித் தெரிஞ்சுக்கணும்னு ரொம்ப ஆசை”

 

“எதனால?”

 

“ஆன்லைனில்  போல்ஸ், லைக்ஸ்  அண்ட் டிஸ்லைக்ஸ் மூலம் அபிப்பிராயத்தை உண்டாக்க முடியுது, போற போக்கில் அவங்கவங்க  தட்டிட்டு போற நெகட்டிவ் விமர்சனம் மூலம் இந்த சமுதாயத்தால் ஒருத்தரைக் காயப்படுத்த முடியுது. பாடி ஷேமிங்க் பண்ண முடியுது. 

சோசியல் மீடியா மூலமா ஒன்னு கூடி நல்லதும் பண்ண முடியுது, கூட்டமா சேர்ந்து ஒருத்தரை புல்லி பண்ணி, களங்கத்தை உண்டாக்கி தற்கொலைக்குத் தூண்ட முடியுது. கிட்டத்தட்ட கட்டுபாடில்லாத காட்டு விலங்குகள் முகத்தை மறைச்சுட்டு உலவுற சமூகத்தின் மாதிரியாத்தான் அதைப் பார்க்கிறேன். 

ஒரு குழந்தையை மனிதனா முழுமையா உருவாக்குறதும், அவனை நல்லவனாவே  உலவ விடுறதும்  அவனை சுத்தி இருக்குற சமூகம்தான். அரசியல், மதம், ஜாதி, பொருளாதாரம்னு அதோட தாக்கத்தைப் பத்தித் தெரிஞ்சுக்கணும்னு தான் எடுத்தேன். என்னவோ அதெல்லாம் என்னை ரொம்ப கவருது அவினாஷ்”

 

“வெரி இன்டெரெஸ்ட்டிங். என்னவோ பேப்பர் சப்மிசன் கூட பண்றியாமே?”

 

“ஆமாம் பள்ளிக்கூடம் பத்தி. சமூகமும் சிறார் கல்வியும்னு இந்த டாபிக் கூட அபிராம் சார் தான் தேர்ந்தெடுத்தார். ஓவியா ஊரில் இருந்தப்ப அம்மா கரகாட்டம் ஆடுறவங்கன்னு தெரிஞ்சதும் கூடப் படிக்கிற பசங்க எல்லாரும் இவ கூடப்  பேசுறதையே நிறுத்திட்டாங்களாம். ஒரு குழந்தை மனசில் இதெல்லாம் எவ்வளவு பெரிய காயத்தை உருவாக்கும். படிப்பெல்லாம் இதெல்லாம் பாதிக்கப்படும் இல்லையா. இதெல்லாம் யோசிச்சுத்தான் இந்த டாபிக்கைத் தேர்ந்தெடுத்தோம்.”

 

“அதுதான் எங்கம்மாவோட இன்டெரெஸ்ட் கூட. எங்கம்மா ஒரு டீச்சர் தெரியுமா?” என்றான் பெருமையாக

 

“தெரியாது அவினாஷ்”

 

“ரொம்ப அன்பானவங்க. தைரியம் அதிகம். தனி ஒரு ஆளா மும்பைல இத்தனை தூரம் வளர்ந்திருக்காங்க. உனக்கு இதில் என்ன சந்தேகம்னாலும் எங்கம்மாவைக் கேளு” என்று தொடர்பு எண்ணைச் சொன்னான். 

 

‘டேய் உன் நம்பரைத் தருவேன்னு நினைச்சா உங்கம்மா நம்பரைத் தர்றியே’ என்று எண்ணிக்கொண்டே மங்கையர்க்கரசியின் எண்ணை சேமித்துக் கொண்டாள். 

 

“இந்த தடவை சைனா மொபைல் இல்லை போலிருக்கே. புது மாடல் போன் வேற…” என்றான் கிண்டலாக. 

 

“இல்லைதான்… ஆனால் இந்த தடவை காப்பியைத்  தட்டி விடலையே!”

 

சுவீட் நத்திங்ஸ் பேச்சை முடிவின்றி வளர்க்கவே அங்கு இரு உள்ளங்களின் விருப்பமும் இருந்தது. ஆனால் சூழ்நிலை அவ்வாறு விடவில்லையே… வீட்டிற்குக் கிளம்பித்தானே ஆக வேண்டும். 

 

ஆனால் அங்கு வீட்டிலோ தலைக்கு ஏறிய போதையுடன் தட்டுத் தடுமாறி நடந்து நீச்சல் குளத்திற்கு அருகே வந்த அபிராம் கண்முன் உலகமே கலங்கலாய் ஆடியது. எது தரை, எது தண்ணீர் என்று தெரியாமல் அதில் அப்படியே தலைகீழாக விழுந்தான். கீழே வேகமாக விழுந்தவனுக்கு மேலே எழ  சக்தியில்லை. அவனது இதயம் மூச்சுக் காற்றுக்காகத் தத்தளிக்கத் துவங்கியது. 

 

3 thoughts on “தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 20”

  1. super. starting avlo interestinga padipen. story end varumbodhu adutha epi kku wait pannanumenu oru sogam…..waiting for your
    update sissy….

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 15தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 15

அன்புள்ள தோழமைகள் அனைவருக்கும் இனிய ரமலான் வாழ்த்துக்கள்!   அன்புடன், தமிழ் மதுரா. அத்தியாயம் – 15   வீட்டின் அந்த இரவுப் பொழுது மிகவும் உணர்ச்சிகரமானதாக இருந்தது. அபிராம் உணவு உண்ணும் மேஜையில் அமர்ந்திருந்த பொழுதுதான் செம்பருத்திக்கு அவன் யார்

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 30தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 30

அத்தியாயம் – 30   கட்டிடக் கலையின் சாட்சியாக இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக கம்பீரமாக நிற்கும் பாகமங்கலம் அரண்மனை.அதன் முன்பு கார்கள்  வழுக்கிச் செல்ல வாகாக  விரிந்திருந்த தார்சாலை.    பாலைவனத்தைக் கூட சோலைவனமாக மாற்றும் திறன் படைத்த சிறந்த தோட்டக்காரர்கள்

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 17தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 17

அத்தியாயம் – 17   “பேரே தெரியாம வேலைக்கு சேர்ந்தவளே! இன்னைக்கு நான் பிரீ, உனக்கு நேரமிருந்தா உங்கய்யா கதையை, பெரிய வீட்டு ஹிஸ்டரியைச் சொல்லேன் கேட்போம்” ஜலப்பிரியா அன்று பெரிய குடும்பத்தைப் பற்றிக் கேட்டதும்    “நம்ம செய்யுற தப்பெல்லாம்