Tamil Madhura செம்பருத்தி தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 17

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 17

அத்தியாயம் – 17

 

“பேரே தெரியாம வேலைக்கு சேர்ந்தவளே! இன்னைக்கு நான் பிரீ, உனக்கு நேரமிருந்தா உங்கய்யா கதையை, பெரிய வீட்டு ஹிஸ்டரியைச் சொல்லேன் கேட்போம்”

ஜலப்பிரியா அன்று பெரிய குடும்பத்தைப் பற்றிக் கேட்டதும் 

 

“நம்ம செய்யுற தப்பெல்லாம் ஆர் சி மேம் சொல்ற மாதிரி ‘புத்திக் கொள்முதல்’டி. அபிராம் பேரைக் கண்டுபிடிக்க கஷ்டமா இருந்த மாதிரி இனிமேல் இருக்கக் கூடாதே. என்னால முடிஞ்ச அளவுக்கு மத்தவங்க கிட்ட பேசினது மூலம் அவங்க வரலாறை கண்டுபிடிச்சேன். இப்பயே டிஸ்கிளைமர் போட்டுடுறேன். இதெல்லாம் மத்தவங்க சொன்னதுதான். எவ்வளவு தூரம் உண்மைன்னு பகிர்ந்துக்கிட்டவங்களுக்கே தெரியாது. ஏன்னா குடும்பம் பெருசாக பெருசாக உண்மைகள் எல்லாம் கண்டுபிடிக்க முடியாதபடி மற்ற தகவல்கள் மறைச்சுடும்”

 

வீட்டினரிடம் குறிப்பாக சேச்சியிடம் பேசியதும், மற்றவர்களின் வாயிலாக செம்பருத்தி  அறிந்து கொண்ட பெரிய குடும்பத்தின் ஹிஸ்டரியைச் சொன்னாள். 

 

மந்தாகினி தனது செல்வ புத்திரன் அபிராமின் மேல் அளவு கடந்த அன்பு வைத்திருந்தார். கல்லூரிப் பேரழகியான மந்தாகினி தேவியின் கடைக்கண் பார்வை வீரபாகுவின் மேல் பட, வீரபாகுவும் அன்பை வட்டியுடன் திரும்பிச் செலுத்த, அவர்களின் காதலுக்கு  இடையில் நின்றது அந்தஸ்து. 

 

மந்தாகினி சாதாரண வீட்டுப் பெண். வீரபாகுவோ  ஜமீந்தார் பரம்பரை. அந்தக்காலத்தில் இருந்த சிவகங்கை, ராமநாதபுரம் ஜமீன்களுடன் நல்ல நட்புடன் இருந்தனர் பாகமங்கலம் நிலச்சுவான்தார்கள். 

 

திருவிதாங்கூர் கொச்சி அரசக்குடும்பங்களும்,  1800 களில் மதராஸ் ப்ரெசிடென்சியில் முக்கியத்துவம் பெற்றிருந்த ராமநாதபுரம் சிவகங்கை ஜமீன்களும் அடிக்கடி விஜயம் செய்யும் இடம். அரச  குடும்பங்களுடன் அவர்களுக்கு இருக்கும்  நட்பே இருநூறு ஆண்டுகள் என்று சொன்னால் பாகமங்கலம் குடும்பத்தினரின் செல்வாக்கு புரியும். 

 

ஆனால் தமிழர்களுக்கு என்று ஒரு அடிப்படை குணம் உண்டு. அதுதான் அடக்கம். எவ்வளவு செல்வாக்கு இருந்தாலும் அதனை வெளிச்சம் போட்டு விளம்பரம் தேடிக்கொள்ளாமல், சுய ஆதாயம் தேடாமல் இன்று வரை இருப்பதால் இப்போது கூட இவர்களுக்கு செல்வாக்கு உண்டு. 

 

வெள்ளைத் தாளில் இருக்கும் கறுப்புப் புள்ளியைப் போன்ற அவர்களது சறுக்கல்தான் பாகமங்கலத்தின் அடுத்த வாரிசான வீரபாகுவின் காதல் திருமணம். 

 

பாகமங்கலம், நாகமங்கலம் இவையெல்லாம் மிக நெருக்கமான ஜமின்கள். தங்களுக்குள் சம்பந்தம் செய்துக் கொள்வார்கள். இரட்டை ஜமீன்கள் என்று கூட சொல்லலாம். 

 

பாகமங்கலம் ஜமீன் மஹாபாகேஸ்வரன் அந்த காலத்தில் பல ஜமீன்கள்  தங்களது நோக்கம் அறியாமல் மக்களின் வரிப்பணத்தைத் தங்களது வருமானமாக நினைத்துக் கொண்டு அதனை   மது மாது என்று களியாட்டங்களில் ஈடுபட்டு  அழிந்ததைக்  கண்டு மிகவும் யோசித்தார். 

 

வெள்ளையன் அவர்களது பலவீனத்தில் தானே அடித்துப் பிடுங்குகிறான். நாம் நமது வாரிசுகளை இந்த பலவீனங்கள் இல்லாமல் வளர்க்க வேண்டும் என்று முடிவு செய்தார். 

 

அவரது இங்கிலாந்து விஜயத்தில் அங்கிருக்கும் அரசியல் வாதிகளை குறிப்பாக பிரதமர்களை உருவாக்கும் ஈட்டன் பள்ளி, கிங்ஸ் பள்ளிகளை  சென்று பார்வையிட்டார். 

 

அதே வெள்ளையர்கள் மூலம் தங்களுக்கான அரசியல் மற்றும் நிர்வாகம், இன்வெஸ்ட்மென்ட் பேங்கிங் சம்பந்தமான பாடத்திட்டத்தை உருவாக்கச் செய்தார். பள்ளிப்பருவம் முழுவதும் ஹாஸ்டலில் தங்கி குருகுலக் கல்வியைப் போன்று அந்த பாட திட்டத்தில் பயில வேண்டும் என்பதே அவரது கட்டளை. 

 

மற்ற குடும்பத்தினர் அந்தப் பள்ளியில் பயில ஆர்வம் காட்டவில்லை. நன்றாக யோசித்தவர், ஆர்வமுள்ள அவரது உறவினர் குடும்பத்து மக்களுக்கும், ஜமீனில் நன்றாகக் படிக்கும் புத்திசாலிகளையும் அதில் சேர்க்க வழி செய்தார். 

 

“எனக்கு ஏன் பாடமெல்லாம் வித்யாசமாக இருக்கு? மத்தவங்க கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் இவ்வளவுதான் படிக்கிறாங்க. அதைத்தவிர இங்கிலிஷ், தமிழ்” என்றனர் ராஜ வாரிசுகள்.

 

“மத்தவங்க படிச்சு அதில் எந்த துறைல போகுற அளவுக்குத் தகுதி இருக்கோ அதில் தங்களோட வாழ்க்கையை அமைச்சுக்குவாங்க. ஏன்னா சாதாரண மக்களுக்கு எதிர்காலத்தில்  என்னவாகப் போறோம்னு அவங்களுக்கே தெரியாது. எல்லாத்தையும் படிப்போம் எந்தத் துறையில் அப்போதைக்கு வேலைவாய்ப்பு இருக்கோ அதில் செட்டிலாவோம்னு எண்ணம்தான் அதிகம். 

 

நீங்க அப்படி இல்ல. உங்களுக்குன்னு கடமைகள் இருக்கு. அந்தக் கடமையை நிறைவேத்த உங்களைத் தயார் படுத்துறதுதான் எங்க வேலை. அதுக்காக ஸ்பெஷலா உருவாக்கப்பட்டதுதான் உங்க பாடத்திட்டம். 

 

உங்களுக்கு பல மொழிகள் தெரிஞ்சிருக்க வேண்டியது கட்டாயம். தமிழ் , ஆங்கிலம் மட்டுமில்லாம பக்கத்து சமஸ்தானத்து குடும்பங்களோடு பேச வசதியா தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, உருது இதெல்லாம் சரியான உச்சரிப்போட பேசக் கத்துத் தரோம். 

 

உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கோ இல்லையோ அது தனிப்பட்ட விஷயம். ஆனால் உங்களோட கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்களில் முதல் மரியாதை உங்களுக்குத்தான். அதனால நீங்க சார்ந்த சமயத்தைப் பத்தி தெரிஞ்சுக்கணும். தேவாரம், திருவாசகம், திருப்புகழ் எல்லாத்திலும் பரிட்சயம் வேணும். 

 

உங்க ஜமீனில் எல்லா மதத்து மக்களும் இருக்காங்கல்ல அவங்களைப் பத்தி புரிஞ்சுக்க ஒரு சமயம் பத்தின அறிவு மட்டும் எப்படிப் போதும்? அதுக்காகத்தான் பைபிள் கிளாஸ், இஸ்லாமிய சமூகம் பத்தி சொல்லித்தர வாத்தியார்கள். நம்ம ஊரில் நடக்கும் பல சமயத் திருவிழாக்கள். அதுக்கு என்ன செய்யணும் என்ற முறைகள் எல்லாம் சொல்லித் தருவோம். குறிப்பிட்ட வயசுக்குப் பிறகு நீங்களும் உங்க வீட்டுப் பெரியவங்க கூட போயி கலந்துக்கணும். 

 

 கலைஞர்களை ஊக்குவிக்கிறது கடமைகளில் ஒன்னு. போட்டிகள் நடத்துவிங்க, பரிசுகள் தருவிங்க. கலையைப் பத்தின புரிதல் இல்லாம தேர்வு செய்யுறது சாத்தியம் இல்லையே. தேர்வுக் குழு சொல்றதை பரிசீலிக்க உங்களுக்கும் அடிப்படை அறிவு வேணும். அதுக்காகத்தான் கலைகள் பாடம். 

 

இது தவிர பொருளாதாரம், அரசியல், நாட்டோட வரலாறு மட்டும் இல்லாம ராயல் ஹிஸ்டரி, கம்யூனிகேஷன் ஸ்கில், நீங்க வரிவசூல் பண்ணி வாழ்க்கை நடத்தல, உங்களுக்கு சொந்தமான தொழில்கள் ஏராளமா இருக்கு. அதை நடத்தி அதில் வரும் வருமானத்தில்தான் ஜமீனை நடத்திட்டு இருக்கீங்க. அந்த சேவையைத் தொடர பிசினெஸ் அறிவு ரொம்ப முக்கியம். 

 

இன்வெஸ்ட்மென்ட் பேங்கிங் இப்ப வளர்ந்து வரும் துறை. உங்க எதிர்காலத்தில் நீங்க முதலீடு செய்ய தெரிஞ்சுக்க வேண்டியது. 

 

வெளிநாட்டு தொடர்புகளுக்கு இப்போதைக்கு ஆங்கிலம் மட்டும் போதும்னு அய்யா சொல்லிருக்காங்க. பிற்காலத்தில் வேற மொழி கத்துத் தர்றது பத்தி பரிசீலிக்கப் படும். 

 

இது எல்லாத்தையும் தவிர உடற்பயிற்சி. கண்டிப்பா உங்க உடல் ஆரோக்யத்தைப் பேணும் வாழ்வியல் முறைக்கு தயார்படுத்தனும்”

“போதும் வாத்தியாரய்யா தெரியாம கேட்டுட்டேன். லிஸ்டு நீளமாயிட்டே போகுது. நீங்க சொல்ற எல்லாத்தையும் மத்த குடும்பத்து பசங்க படிக்கிற மாதிரி தெரியலையே. எங்களை மட்டும் ஏன்தான் இப்படிக் கொல்லுறிங்கன்னு தெரியல”

 

“மக்களில் ஒருவனா இருக்க ஏதாவது ஒரு துறையில் ஆழமான அறிவு போதும். ஆனால் தலைவனாக  விரும்பறவன் எல்லா விதத்திலும் தன்னைத் தகுதி படுத்திக்கணும். அதில் தவறினா அவங்களை அந்த நாற்காலி கீழ தள்ளிட்டு தகுதியா இருக்கறவங்களைத் தானா தேடிப் போகும். கை பிடிச்சு உக்கார வைக்கும்”

 

மற்றவர்கள் பெரியவர் சொன்னதை மீறாமல் படிக்க, அதில் விதிவிலக்காக இருந்தவர்தான் வீரபாகு. விதிகள் அவருக்கு அடக்குமுறையாய் பட்டது. அது தப்பில்லை. எல்லாரும் ஒரே மாதிரியா படைக்கப்பட்டிருக்கின்றனர்? தனித்தன்மை தானே மனிதரின் சிறப்பு. 

 

“நான் என்ன படிக்கணும், என்ன சாப்பிடணும், என்ன மாதிரி உடை உடுத்திக்கணும்னு நீ என்ன சொல்றது. ஒரு சாதாரண மனுஷனுக்கு இருக்குற உரிமை கூட இல்லாம என்ன ராஜான்னு பட்டம்?மத்த ஜமீனில் இப்படி இல்லையே. எனக்கு மட்டும் என்ன விதிவிலக்கு?” என்றபடி உரிமைக்குரல் எழுப்பினார். 

 

கேள்வி கேட்க வேண்டுமே அதுதானே தலைவனின் முக்கியமான தகுதி.

 

எனக்குப் பிடிச்சதைத்தான் படிப்பேன் என்று அந்தக் கால மெட்றாஸில் கல்லூரி வரை எட்டிப் படித்தவர் வீரபாகு. அவருக்குத் திருமணம் கூட சொந்தத்தில் ஏற்பாடாகி இருந்தது. ஆனால் அவர் பின்னணி தெரியாமலேயே அவரிடம் தனது மனதை பண்டமாற்றம் செய்து கொண்டாள் மந்தாகினி. அது திருமணத்தில் முடிய, அவரை  வீட்டினுள் அடி எடுத்து வைக்கக் கூடாது என்றனர் குடும்பத்தினர். 

 

காதல் மனைவியைக் காப்பாற்ற வேலை தேடிக் கொண்டிருந்த வீரபாகுவை  விட்டுத் தர மனமின்றி வீடும் தொழிலும் தர முன்வந்தார்கள். பஞ்சாயத்து முடிந்து, மந்தாகினியின் நாடான கேரள தேசத்தில் தங்க முடிவு செய்து கொச்சியில் நட்சத்திர விடுதி, அவர்கள் ஓய்வெடுக்க கட்டிய சிறிய அரண்மனை என்று செட்டிலானார் வீரபாகு. 

 

தொழில் நல்ல முறையில் நடக்க, அடுத்ததாக கொச்சியில் பிரான் பார்ம், பக்கத்தில் கிராம்பு எஸ்டேட், ரப்பர் தோட்டம் என்று விரிவு படுத்தினார். அதற்காக பாதி நாள் வெளியூர் செல்ல வேண்டி இருந்தது. 

 

அப்போதுதான் ஒரு நாள் அவரது உறவினர் பெண்ணையும் இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார். இது மந்தாகினிக்குப் பேரிடியாக இருந்தது. அன்று தொடங்கியதுதான் அமைதியற்ற வாழ்க்கை. தனக்கு ஒரே பற்றுக் கோடாக அபிராமைப் பற்றிக் கொண்டார். பெரிய வீட்டில் அடுத்து தன்னைக் கொன்றுவிடுவார்கள் என்று நம்பத் தொடங்கினார். 

 

வீரபாகுவின் குடும்பத்தினரின் தொடர்பை கத்தரித்து விட்டு, தனக்கு நம்பிக்கையானவர்களைக் கொண்டு அவருக்கும் அபிராமுக்கும் இடையே அரணை அமைத்துக் கொண்டார். 

 

மகன் விளையாட்டில் மிகவும் ஆர்வம் காட்டியது அவருக்கு நல்ல வாய்ப்பாக இருந்ததால் அதனைக் காரணம் காட்டி ஸ்போர்ட்ஸ் சம்பந்தமான பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பள்ளியில்  ஹாஸ்டலில் சேர்த்துவிட்டு விடுமுறை சமயத்தில் தான் மட்டும் சென்று பார்த்தார். 

 

தந்தைக்கும் மகனுக்குமான தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது. 

தனக்கு தும்மல் ஏற்பட்டால் கூட பெரிய வீட்டில் சூனியம் வைத்து விட்டனர் என்று நம்பும் அளவுக்கு அவரது மனநிலை மோசமாக இருந்தது. அதன் தாக்கம் அபிராமுக்கும் இருந்ததில் வியப்பில்லையே. 

 

 சில சொத்துக்களை அபிராமின் பேருக்கு மாற்றச் சொல்லி வீரபாகுவிற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். அவரும் மறுபேச்சின்றி மாற்றினார். ஆனால் அதனை விற்க முடியாது என்ற படி அதில் ஒரு கொக்கியைப் போட்டார். 

 

அபிராம் அடிப்படையில் நல்லவன்தான் ஆனால் தாயின் கவனம் முழுவதும் ஏதோ ஒரு சக்தியிடமிருந்து மகனைக் காப்பாற்றுவதாக ஒரு கற்பனையிலேயே இருக்க, தந்தையோ டென்னில் பாலினைப் போல இந்த வீடு அந்த வீடு என்று ஓடிக் கொண்டிருந்தார். இதற்கு நடுவே அவருக்கு இரண்டாவது வீட்டின் மூலம் மகனும் இருப்பது உறுதியான பொழுது மனமே உடைந்து விட்டனர். 

 

பாகமங்கலத்தின் அடுத்த வாரிசாக தன் மகனை நியமிக்க வேண்டும் என்று அடுத்த யுத்தத்தைத் தொடங்கினார் மந்தாகினி. அமைதியைத் தேடி மது, மாது என்று தனது பாதையை மாற்றிக் கொண்ட அபிராமிற்கு இன்னும் அந்த தகுதி வரவில்லை என்று முரண்டு பிடித்தார் வீரபாகு. 

 

மன அழுத்தத்தின் விளைவால் விரைவிலேயே உலக வாழ்க்கை மந்தாகினிக்கு முடிந்தது. தாயின் மறைவிற்குப் பின்னர் யாரையும் நம்பாத அபிராம் மனதே உடைந்து விட்டான். 

 

தாயின் இறப்பிற்கு காரணமே  தந்தையின் இரண்டாவது திருமணம்தான் என்ற முடிவுக்கு வந்தான். இயல்பிலேயே நல்லவனான அவனால் இரண்டாவது குடும்பத்தைக் குலைக்க எந்த ஒரு குறுக்கு வழியும் நாட முடியவில்லை. அவர்களும் கூட அவனுக்கு சிறிதும் தொந்தரவு தராமல் சொல்லப்போனால் அவனது வாழ்க்கையை சீர்படுத்த இன்று வரை மெனக்கெடுவது கூட ஒரு காரணமாக இருக்கலாம். 

சண்டைக்கு செல்பவனைக் கட்டி அணைத்து அன்பு காட்டினால் பகையை எப்படி முடிப்பது? தாயின் ஆத்மா எப்படி சாந்தி அடையும். கவலையை மறக்க அடுத்தக் கட்டமாக அவன் நாடியது பெண்கள் மற்றும் அவர்களால் பழக்கமான போதை வஸ்துக்கள். 

 

ஒவ்வொரு வருடமும் மாரத்தான் போட்டிகளில் கலந்து கொள்ளுமளவுக்கு பயிற்சி பெற்றிருந்த அபிராமின் உடல் நலத்தை ஒவ்வொரு செங்கலாக நகர்த்தி பெயர்த்தெடுத்தது மதுவும், மாத்திரைகளும். 

 

மனம் எப்போதும் போதையில் தள்ளாடும்போது சாதாரண வாழ்க்கை வாழ்வதே சிரமம். இதில் தொழிலை எங்கிருந்து கவனிப்பது? சொத்துக்களை நிர்வாகிக்காமல் பலத்த நஷ்டம். அபிராமோ வாரிசு பட்டம் வேறு கேட்டு நோட்டிஸ் மேல் நோட்டிஸ் விடுகிறான். ஏதோ அங்கிருந்த பழைய ஆட்களில் ஒருவரான சுகுமாரன் ஓரளவு பொறுப்பேற்றுக் கொண்டு வேலைகளை செய்கிறார். இருந்தாலும் அனைவரையும் அபிராமின் செய்கைகள் கலவரப்படுத்தியது. 

 

அந்த காலத்தில் வெளிநாட்டு பைக்கில் ஹெல்மெட்டால் முகத்தை மூடிக்கொண்டு பேய் வேகத்தில் கொச்சியின் ஆள் அரவாரமற்ற சாலைகளில் ஜோடியுடன் பறக்கும் வாலிபனைத் தடுத்து நிறுத்தும் துணிவு யாருக்கும் வந்ததில்லை. 

 

“அய்யா… பைக் ஓட்டும்போது கண்ட மாத்திரை சாப்பிடாதிங்க. இது பெரிய பிரச்சனையில் முடியும்” என்று சாஃப்டாக சொல்லத்தான் முடிந்தது. 

 

ஒரு மழை நாள் நாள் அவர்கள் பயந்தவாறே பைக் வழுக்கி படு பயங்கரமான அந்த விபத்து. அவன் பின் அமர்ந்திருந்த அழகி தப்பித்து விட்டாள். அவளது மற்றொரு தோழனை அழைத்து அவனது காரில் அங்கிருந்து கிளம்பினாள். 

 

“ஹே அபிராம் அந்தப்  புதரில் விழுந்துட்டான், அவனுக்கும் படுபயங்கரமா அடி பட்டிருக்கும் போலிருக்கு… நீ எப்படி தப்பிச்ச?”

 

“ஸ்கிட் ஆகத் தொடங்கினதும் நான் அப்படியே குதிச்சுட்டேன். அவன் பேலன்ஸ் தவறி விழுந்துட்டான். பைக் மேல லாரி ஏறி தூள் தூளாயிருச்சு”

 

“ஓ மை காட்! போலீசுக்கு போன் பண்ணிருக்கியா?”

 

“நீ பைத்தியமா? அவன் பயங்கர ஹைல இருக்கான். போலீஸ் பிடிச்சா நம்ம எல்லாரும் மாட்டிக்குவோம். வேற யாராவது போன் பண்ணட்டும். நம்ம இங்கிருந்து குவிக்கா கிளம்பிடலாம்”

 

தூக்கி எறியப்பட்டு, கெண்டங்காலில் இருந்து இடுப்பு வரை உலோகம் குத்தி தசையைக் கிழித்திருக்க, மாரத்தான் ஓடும் அளவுக்கு தேர்ச்சி பெற்றிருந்த கால்கள் அசைக்க முடியாதபடி முறிந்து கிடந்தன. அபிராமின் கண்கள் எத்தனையோ முறைகள் தான் ரசித்த அந்த நீள வாழைத்தண்டு கால்கள் இன்னொருவரின் வண்டியில் ஏறி அந்த இடத்தை விட்டு நகர்ந்ததைப் பார்த்தபடியே மூடின.

1 thought on “தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 17”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 29தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 29

அத்தியாயம் – 29   “அபி… “ ராதிகாவின் குரல் அபிராமை இந்த உலகிற்கு இழுத்து வந்தது.    ராதிகாவை நிமிர்ந்து பார்த்தான்.   “மௌனம் போதும் அபி.இதுவரை நடந்தது தப்போ சரியோ எனக்கு தெரியாது. ஆனா நீங்க மங்கை ஆன்ட்டியைப்

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 18தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 18

அத்தியாயம் – 18   அவினாஷ் விமானப்பயணத்தின் முடிவில் டோக்கியோவில் இறங்கியபோது மிகுந்த களைப்புடன் காணப்பட்டான். அவனுக்கு ஓயாத வேலைகள். அவனது வேலைகளைப் பார்ப்பதுடன் சேர்த்து அபிராமின் தொழிலையும் கவனிக்க வேண்டும். இது அதிக சுமைதான். ஆனால் சுமையைத் தாங்கும் வயதுதானே

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 10தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 10

அத்தியாயம் – 10   காலை குளிக்கும்போது கூட அதே நினைப்பு செம்பருத்திக்கு. யார் இந்த சிங்கம்? ஏன் இவ்வளவு பில்ட் அப் இவனுக்கு. இதுவரை சொன்னதில் ஒருத்தன் கூட நல்லவிதமான அபிப்பிராயத்தை சொல்லல. தான் அறிந்த விஷயங்களைப் புள்ளியாய் எடுத்துக்