எனக்கொரு வரம் கொடு – 24
கற்பகத்திற்கு சௌதாமினி செய்து வந்த காரியத்தில் துளியும் உடன்பாடில்லை. அவள் பாட்டிற்குக் கணவனோடு சண்டை போட்டுக்கொண்டு பிறந்தகம் வந்தால், அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? அந்தளவு முதிர்ச்சியற்றவளா மகள்? என வேதனையாக இருந்தது.
இந்த பெண் ஏன் இப்படிச் செய்தாளோ? என்ற கவலை ஒருபுறம் என்றால், அவளது வருத்தம் சுமந்த முகம் அதைப்பற்றி அவளிடம் கேட்கக்கூட விடாமல் தடை செய்தது.
இயல்புபோல முகத்தை வைத்துக்கொண்டு நடமாடியவளின் போலித்தனம் அவருக்குப் புரியாமல் இல்லை. எதற்கு இந்த வீம்பு என்றுதான் தோன்றியது. சரி கோபம் தணியட்டும் என்று பொறுத்து பார்த்தால், கோபம் தணிவதாகத் தெரியவில்லை. கணவன், மனைவி இருவருமே தத்தம் நிலையிலிருந்து இறங்கி வருவதற்குத் தயாராக இல்லை என்று தெளிவாகப் புரிந்தது.
சர்வாவிற்கு தொடர்ந்து அழைப்பு விடுத்துக் கொண்டுதான் இருக்கிறார். அவன் பிடிகொடுத்து பேசவில்லை. சௌதாமினியிடம் ஜாடை மாடையாகச் சொல்லிப் பார்த்தார், நேரடியாகவும் விசாரித்துப் பார்த்தார் எதற்கும் அவள் அசைந்து கொடுக்கவில்லை.
சௌதாமினி இங்கு வந்த சில நாட்களிலேயே அருண் பாஸ்கர், சாமியப்பன் இருவரையும் கைது செய்த செய்திகளைப் பார்த்து விட்டிருந்தாள். கணவனுக்குக் கிடைத்த பாராட்டும் கௌரவமும் அவளுக்கு உவகையைத் தந்திருந்தது.
அவள் எண்ணிப் பயந்த விஷயங்கள் எல்லாம் தூள் தூளாகியிருக்க, கணவன் வந்து இனி தன்னை அழைத்து செல்வான் என்று காத்திருந்தவளை, அவன் வந்து காணவே இல்லை. அவள் எண்ணி காத்திருந்தது போல எதுவுமே நடக்கவில்லை. அவள் வீசி வந்த வார்த்தைகளின் வீரியம் புரியாமல், அதை முற்றிலும் மறந்தவளாகக் கணவனை எதிர்நோக்கி காத்திருந்தவளுக்கு ஏமாற்றம் மட்டுமே மிச்சம்.
சர்வாவை பிரிந்து இருப்பது வேறு கொடும் வேதனையைத் தந்தது. சித்தியும், அத்தையும் அவ்வப்பொழுது வந்து சமாதானம் பேசுகிறார்கள் தான். ஆனால், உடையவன் வருகைக்கு தானே மனம் ஏங்குகிறது.
ஒருவழியாகக் கணவன் இனி தன்னை அழைத்துச் செல்ல வரப்போவதில்லை என்று புரிந்தபோது அந்த வேதனையைத் தாங்க மாட்டாமல் அழுது கரைந்தாள்.
சித்தி மீண்டும் சமாதானம் பேச வர, “அவர்கிட்ட பேசலாம் தானே சித்தி” என்றாள் கவலையாக.
அவளை தன் மடியில் கிடத்தி ஆதரவாக அவளின் தலையை வருடியபடி, “மாப்பிள்ளை உனக்கு மேல இருக்காரு சௌதா” என்றார். “உங்க ரெண்டு பேருக்கும் என்ன பிரச்சினைமா? அவருக்கு உன்மேல ஏதோ கோபமோ வருத்தமோ இருக்கும்போல. அது நல்லா புரியுது. உனக்கு எதுவும் தெரியுமா டா? நீ கொஞ்சம் இறங்கி போலாமே! அவரா தேடி வந்துதான் உன்னை கட்டிக்கிட்டாரு. உன்மேல நிறைய பாசம் வெச்சிருக்காரு. இப்ப ஒதுங்கி இருக்காருன்னா எனக்கு என்னவோ சரியா படலை” என்று எடுத்துச் சொன்னார்.
ஆம்! அவனாக வந்து தான் திருமணம் செய்தான். தன்னை தாங்கினான். அதை புரிந்திருந்தும், அவனை விரும்பியபோதும், அவனைக் குற்றம் கூறி வார்த்தையால் வதைத்து நோகடித்து விட்டோமோ… என்ற ஞானோதயம் சௌதாவிற்கு வருவதற்குள் ஒன்றரை மாதங்கள் கடந்திருந்தது.
இப்பொழுது அவளின் அச்சங்களை எல்லாம் தவிடு பொடியாக்கியிருந்தான் கணவன். அவளுக்கு அருண் பாஸ்கர் மீதிருந்த அச்சங்கள் விலகியிருந்தது. சித்தப்பாவின் சிகிச்சைக்குக் கூட சித்தியிடம் சொல்லி மேற்கொண்டு பார்க்கச் சொல்லியிருந்தாள்.
அவன்மீது கோபங்களே இல்லை. இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால் அவளுடைய முழு கோபமும் அவள்மீதே தான். அவனைப் புண்படுத்தி, உணர்ச்சிப்பூர்வமாக மிரட்டி, அவனது கடமையை செய்ய விடாது தடுக்க முயற்சி எடுத்து என்று எத்தனை எத்தனை இன்னல்களைப் பரிசாக அளித்திருக்கிறாள்.
காதல் ஒருவனைக் கைப்பிடித்தே… அவன் காரியம் யாவினும் கைகொடுத்து… என்று பாரதி சொல்லி வைத்தபடி நடந்து காட்டாவிட்டாலும், இடைஞ்சலாக நின்று போனோமே எனக் கலங்கினாள்.
அவனை தேடிச் செல்லும் தைரியமற்றவளாய் முடங்கி இருந்தவளுக்கு, அவள் தன்னை தேடி வந்து விடமாட்டாளா என ஏங்கிக் காத்துக் கிடக்கும் சர்வாவின் தவிப்பு எப்படி புரியும்?
சரியாக உண்ணாமலும், உறங்காமலும் தனக்குள்ளேயே நத்தையாய் சுருங்கிக் கிடந்தவளுக்கு உடல்நிலை மோசமானது தான் மிச்சம்.
“நீயும் சந்தோஷமா இல்லை. அவனையும் வதைக்கிற… என்ன சௌதா இதெல்லாம்? புருஷன் கூட பேச அப்படி என்ன வீம்பு உனக்கு? நீயா தானே வீட்டை விட்டு வந்த… அப்ப திரும்பியும் நீயாதானே போகணும்” என அவளை வசை பாடியபடி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆயுத்தமானார் கற்பகம்.
“ஹாஸ்பிட்டல் போயிட்டு உன்னை உன் புருஷன் வீட்டுக்கே கொண்டு போயி விட போறேன். சண்டை போடறீங்களோ சமாதானமோ… எதுவா இருந்தாலும் ரெண்டு பேரும் ஒன்னா இருந்தே செஞ்சுக்கங்க” மகளை வசைபாடிக் கொண்டிருந்த கற்பகம் வாசலில் நிழலாட நிமிர்ந்து நோக்கினார்.
சர்வேஸ்வரன் தான் நின்று கொண்டிருந்தான். காலையில் அழைத்து சௌதாவுக்கு முடியவில்லை. வயிற்று வலியால் அவதிப் படுகிறாள். ஹாஸ்பிட்டல் அழைத்துப் போகிறேன் என்று மருமகனுக்குத் தகவல் தந்திருந்தார் தான். ஆனால், அவன் வந்து நிற்பான் என்றெல்லாம் அவர் நினைக்கவில்லை.
அதிர்ந்து சில நொடிகள் நின்றவர், பின்பு சுதாரித்து, “உள்ளே வாங்க மாப்பிள்ளை…” என வரவேற்றிருந்தார்.
விழிகளால் மனைவியை அளந்தபடியே உள்ளே வந்தவன், “என்ன ஆச்சு அத்தை” என விசாரித்தான்.
“உருப்படியா சாப்பிட்டா தானே மாப்பிள்ளை. சாப்பிடறதில்லை. சரியா தூங்கறது இல்லை. அப்பறம் எப்படி உடம்பு நல்லா இருக்கும்”
“அவளுக்கு ஆபரேஷன் செஞ்சப்ப தந்த மாத்திரை எல்லாம் அத்தை?” என்றான் அவசரமாக.
“அதையும் எங்கே ஒழுங்கா எடுக்கிறா. திட்டி அலுத்து போச்சு” என அவர் சொல்ல, மனைவியை முறைத்தான் அவன்.
குற்றவுணர்வில் தலை குனிந்து கொண்டாள் அவள். “நானே ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போயிக்கறேன் அத்தை” என அவர் தந்த காபியைப் பருகியபடி சொன்னான்.
“தாராளமா கூட்டிட்டு போங்க. ஆனா திரும்பி இங்க கொண்டு வந்து விடாதீங்க. நீங்களாச்சு உங்க பொண்டாட்டி ஆச்சு. ஒன்னா இருந்தே சண்டை கட்டிக்கங்க” என்றார் அவர்.
அவர் சொன்ன வேகத்துக்கு சர்வாவுக்கு சிரிப்பு தான் வந்தது. ‘உங்களுக்கு சமாளிக்க முடியாது. நான் மட்டும் சமாளிக்கணுமாக்கும்’ என பேசத் துடித்த இதழ்களை அரும்பாடுபட்டு அடக்கியவன், மெலிதாக முறுவலித்தான்.
“என்ன மாப்பிள்ளை?” கற்பகம் அவன் செய்கை புரியாமல் கேட்டார்.
“ஒன்னும் இல்லை அத்தை. ஆமா, மாமா ட்ரீட்மெண்ட் இப்போ எப்படி போகுது” என்று பேச்சை மாற்றினான்.
“முன்னாடியே நீங்க ட்ரீட்மெண்ட் தொடங்கி இருக்கலாம். இந்நேரம் குணமாகி இருப்பாருன்னு சொன்னாங்க மாப்பிள்ளை. ஆனா எங்க சௌதா தான் ஏதோ சுவாமி சொன்னாங்கன்னு இத்தனை நாளும் எந்த ட்ரீட்மெண்ட்டுக்கும் ஒத்துக்கவே இல்லை. இப்ப அவளே ட்ரீட்மெண்ட் தரலாம்ன்னு சொல்லறா… நினைச்சு நினைச்சு ஒவ்வொண்ணும் சொல்லறா என்னன்னே புரியலை” என அவர் புலம்ப, சர்வாவிற்கு காரணம் புரியுமே ஆக மனைவியின் முகத்தை ஆராய்ந்ததைத் தவிர அவனிடம் எந்தவித பிரதிபலிப்பும் இல்லை.
மனதின் ஓரம், தன்னிடம் அவளின் குறைகளை வருத்தங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கலாம் என்ற எண்ணம் எழுவதைத் தடுக்க முடியவில்லை. அதில் அவனுக்குச் சுணக்கம் தான் என்றபோதிலும் அவளது சுபாவமும் அவன் அறிந்தது தானே!
சௌதாவிற்கு அவனது ஆராயும் பார்வை அவஸ்தையாக இருந்தது. ஏன் என்னிடம் இதையெல்லாம் மறைத்தாய் என அவன் இதுவரையும் கேட்டதே இல்லை. அந்த சூழலிலும் என் நிலை புரிந்து என்னை ஆதரித்தவனை வார்த்தையால் வதைத்து வந்தேனே… இனி எப்படி சமாதானம் செய்வது எனப் புரியாமல் கண்ணில் நீர் கோர்த்துக் கொண்டது.
நேரடியாக தன்னிடம் ஒரு வார்த்தை கூட பேசாதவனிடம் எப்படி இந்த பேச்சை முன்னெடுக்க என தெரியாமல் கலக்கமாக அவள் இருக்க, “கிளம்ப சொல்லுங்க அத்தை” என்றான் அவன் சித்தியிடம்.
அமைதியாக எழுந்து அவனோடு இணைந்து கொண்டாள். ஆயிரம் பத்திரம் சொல்லி கற்பகம் வழியனுப்பி வைத்தார். காரில் அவளுடைய பழைய மருத்துவ அறிக்கைகளும் இருக்க, அவளுக்கு யோசனையானது. சாதாரண வயிற்று வலிக்கு இது எதற்கு என்று. எதற்கும் இருக்கட்டும் என்று கொண்டு வந்திருப்பான் போல என நினைத்தாலும், என்னவோ ஓர் உறுத்தல் எழுவதைத் தடுக்க முடியவில்லை.
கேள்வியும் குழப்பமுமாக அவனை ஏறிட்டு பார்க்க, அவன் இவளைக் கண்டுகொள்ளவே இல்லை. அவள் பிரிந்து வந்த கோபம் மட்டுப்பட மறுத்தது கணவனுக்கு. அப்படி என்ன மிரட்டல் வேண்டி இருக்கு? சண்டை போட்ட உடனே கிளம்பி வந்துட்டா… இனியொருமுறை அப்படி யோசிக்கட்டும். போயிட்டு வான்னு வேடிக்கை எல்லாம் பார்க்க மாட்டேன். உண்டு இல்லைன்னு ஆக்கிடறேன். சரி கிளம்பித் தான் போனாளே திரும்பி வந்தாளா? மனதிற்குள் பொரிந்து கொண்டிருந்தாலோ என்னவோ சர்வாவின் தாடை இறுகி முகமும் கடினமுற்றிருந்தது.
அவனது இறுகிய தோற்றம் பேசவே விடாதபோது, எங்கிருந்து மன்னிப்பை வேண்டுவாள்? அவனைப் பார்ப்பதும் பிறகு பார்வையை வேறுபுறம் திரும்புவதும் என அவள் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருக்க அவன் கண்டுகொள்ளவே இல்லை. கண்களில் நீர் அரும்பிற்று சௌதாவிற்கு. வெளியே வேடிக்கை பார்ப்பவள் போல முகத்தைத் திருப்பிக் கொண்டு விழி நீரினை துடைத்துக் கொண்டாள்.
மருத்துவமனை சென்ற பிறகும் இருவருக்குள்ளும் எந்தவித பேச்சுக்களும் இல்லை. அவள் சரியாக மருந்து எடுக்காததற்குச் சரமாரியாக திட்டு விழுந்தது. ஆபரேஷன் செய்திருக்கும் உடம்பு, இப்படி உண்ணாமல் உறங்காமல் கெடுத்துக் கொள்வதா என்று அந்த மருத்துவர் கடிந்து கொண்டார். நன்றாக வாங்கி கட்டிக்கொள் என்கிற பாவனையுடன் கணவன் அமைதியாக அமர்ந்து கொண்டான்.
இனி ஒழுங்காக இருப்பேன் எனப் பலமுறை அவள் சொல்லியாயிற்று! ஆனாலும் அவர் திட்டுவதை நிறுத்துவதாகவே இல்லை. ஒருவழியாக அவளை வெளியே அனுப்பிவிட்டு சர்வாவிடம் சிறிது நேரம் அவர் பேசிக்கொண்டிருந்தார்.
இதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கும் மேல் தங்கியிருந்தபடியால் மருத்துவர்கள், செவிலியர்கள் எல்லாம் அவளுக்கு நன்கு பரிட்சியம். அந்த உரிமையில் தான் மருத்துவர் அந்தளவு கடிந்து கொண்டார்.
இப்பொழுது இவள் வெளியே காத்திருந்தபோது அந்த வழியே சென்ற செவிலியர் ஒருவரும் இவளிடம் நின்று பேச, எதற்கு வந்திருக்கிறாள் என்றெல்லாம் விசாரித்தார். கூடவே அவளின் மெலிவு அவருக்கு வேற விதமாகத் தோன்ற, “பிள்ளை உண்டாகி இருக்கியாமா? எனக்கு அப்பவே தெரியும். உன் நல்ல மனசுக்கு எந்த குறையும் வராதுன்னு…” என்று உணர்ச்சிவசப்பட்டவராகச் சொன்னார்.
அவள் இல்லை என்று மறுத்துக் கூறும் முன் அவர் உணர்ச்சிவசப்பட்டது குழப்பம் தர, அது அவளின் முகத்திலும் பிரதிபலித்தது. “நீ கலங்கவே வேண்டாம். கண்டிப்பா பிள்ளை நல்லபடியா பிறக்கும்” என அவர் ஆசி போலக் கூற உறுத்தல் அதிகமானது. அவள் மெதுவாக, “சும்மா வயிறு வலிக்குதுன்னு மட்டும் தான் பார்க்க வந்தோம் சிஸ்டர்” என்று அவரிடம் சொல்லிவிட, ஆறுதலாக அவளின் கையை தட்டிக் கொடுத்தவர், “சீக்கிரம் அமையும்” என்று சொன்னார்.
அதற்குள் சர்வா வந்துவிட, அவனிடமும் ஓரிரு வார்த்தைகள் பேசிய செவிலியர் வேலை இருப்பதாகச் சொல்லி விடைபெற்றுக் கொண்டார்.
அவர் அகன்றதும், “டாக்டர் என்ன சொன்னாங்க?” என்று கேட்டாள் அத்தனை நேரம் இருந்த மௌனத்தை உடைத்து.
“சும்மா தான் பேசிட்டு இருந்தேன்…” என அவன் பட்டும் படாமலும் கூற, “அது தான் என்னன்னு கேட்டேன்?” என அழுத்திக் கேட்டாள் அவள்.
அவன் பார்வை விநாடிக்கும் அதிகமாக அவள் முகத்தில் நிலைத்து ஆராய்ந்தது. பிறகு மீண்டும், “சும்மா தான்னு சொல்லிட்டேனே” எனச் சொல்லிவிட்டு நகர, அவளுக்கு எல்லாமே ஒன்றோடு ஒன்று முரணாக இருப்பது போலவே தோன்றியது.
அதற்குள் இருவரும் கார் இருக்குமிடம் வந்திருக்க அதில் ஏறி அமர்ந்தவள், “நீங்க என்கிட்டே ஏதோ மறைக்கறீங்க. இல்லாட்டி ஏன் டாக்டர் கிட்ட தனியா பேசணும். நான் இருக்கும்போதே பேசி இருக்க வேண்டியது தானே?” என்று கேள்வி கேட்டாள்.
“ஏன் நீ எதுவோ என்கிட்ட மறைச்சதே இல்லையோ?” சுள்ளென்று கேட்டவன், அவள் முகம் வாடவும்… “ம்ப்ச்… அது ஒன்னுமில்லை உன் ஹெல்த் பத்தி கேட்டேன். இதுக்கு போயி குறுக்கு விசாரணை செய்வியா?” எனக் குரலைத் தணித்துக் கேட்டான்.
அவள் முகம் தெளியவில்லை. “என்கிட்ட எதுவோ மறைக்கறீங்க?” என்றாள் தவிப்பாக.
இவளுக்கு ஏன் இந்த சந்தேகம் இப்பொழுது எழவேண்டும் என்று அவனுக்கு ஆற்றாமையாக இருந்தது. நீண்டதொரு பெருமூச்சை இழுத்து விட்டவன், என்ன சொல்வது என தெரியாமல் சில நொடிகள் தடுமாறிக் கொண்டிருந்தான்.
அவன் தோளில் சாய்ந்தவள், “என்ன சரு எனக்குக் குழந்தை பிறக்காதா?” என்று கேட்டிருக்க, அப்பட்டமாக அதிர்ந்தான் அவன். அவள் அந்த செவிலியர் பேசியதை வைத்து ஒரு ஊகமாகத் தான் கேட்டாள். ஆனால், அவனது அதிர்ச்சி அவளது ஊகம் உண்மையென்பதை அவளுக்கு உணர்த்தி விட, அவனில் தலையைப் புதைத்து கண்ணீரில் கரையலானாள்.
“ஸ்ஸ்ஸ்… குழந்தை மட்டும் தான் முக்கியமா சௌதி? என் காதல், பாசம் இதுக்கெல்லாம் முன்னாடி… குழந்தை மட்டும் தான் உனக்கு முக்கியமா என்ன? ஏன் இப்படி அழற?” அவளைத் தேற்றும் வழி தெரியாமல் தடுமாறினான் காவலன்.
“உங்களுக்கு என்ன பைத்தியமா? இப்ப வேணா எனக்கு நீ உனக்கு நான்னு பேசிக்கலாம். ஆனா காலத்துக்கும் இது எப்படி போதும்?” என்றாள் கண்ணீரோடு.
“நீ என்கிட்ட உதை வாங்க போறடி. சும்மா மனுஷனை கடுப்பேத்திட்டு…”
அவன் அதட்டலில் அவள் திருதிருக்க, “அப்ப குழந்தை…” என்றாள் பாவமாக.
“தத்தெடுத்தக்கலாம்…” என அவன் முடித்துவிட, “வேற வழியே இல்லையா?” என்றாள் சன்னக்குரலில்.
“வாய்ப்பே இல்லைன்னு டாக்டர் சொல்லிட்டாங்க. ஆனா அதுக்காக எனக்குக் கொஞ்சம் கூட வருத்தம் இல்லை” என அவளது தலையை வருடியபடி சொன்னவன், “ஏன்னா… எனக்கு எல்லாத்தையும் விட நீ முக்கியம்” என்று கூற, அவனை அண்ணாந்து பார்த்தவள், “நானும் அப்படி சொல்லணுமாக்கும்” என்றாள் முறைப்போடு.
“சொல்லாம எங்க போக போற…” என அவளை இறுக்கியவன் அவளது உதட்டையும் மெலிதாக கடித்து வைக்க,
“யாராவது வாயை கடிப்பாங்களா?” என அவன் சட்டையிலேயே தேய்த்தாள் அவள்.
“அது மத்தவங்ககிட்ட கேட்டா தான் தெரியும். ஆனா நான் கடிப்பேன் பா…” என மீண்டும் கடிக்க வர, “ஏன் சரு சேட்டை பண்ணற?” என்றாள் பாவமாக.
“பின்ன ஏன்டி விட்டுட்டு போன?” அவன் முறைக்க, “என் பயம் எனக்கு? உங்களுக்கென்ன?”
“ஏன்டி இந்த மாதிரி எத்தனை கேஸை நான் பார்க்கணும். இப்படி ஒன்னுக்கே பயந்தா”
“இல்லை இனி தைரியமா இருந்துக்கறேன்.”
“நல்லா இருந்த போ…”
“நிஜமா தாங்க… உங்களை எல்லாரும் பாராட்டும் போதும், பெருசா பேசும் போதும்… எனக்கு எப்படி இருந்தது தெரியுமா? இந்த கேஸ்ல ஒரு நுனி கூட கிடைக்காம இருந்ததாமே! நீங்க கேஸை முடிச்சது பத்தி எல்லாரும் புகழ்ந்து பேசி ஆர்ட்டிகளே வந்திருந்துச்சு… எப்படிங்க” என்றாள் ஆச்சரியமாக.
“உன்னால தான்…” என சர்வா சொல்ல,
“என்னாலயா? எப்படிங்க?” என்றாள் குழப்பமாக.விளையாடுகிறானா என அவன் முகத்தை ஆராய்ந்தாள் அப்படி எதுவும் இல்லை போல!
சர்வா அமைதியாக விளக்கம் தரத் தொடங்கினான். “ஆரம்பத்துல எனக்கு உன்கிட்ட பேச சாக்கு தேவைப்படவும் தான்… எனக்கு தெரிஞ்ச சிகிச்சையைச் செல்லத்துரை மாமாவுக்கு தரலாம்ன்னு சொல்லறதுக்காக உன்கிட்ட பேச வந்தேன். எப்பவுமே நீ என்னைப் பார்த்தா தலை தெறிக்க ஓடுவ தான்… அப்படின்னாலும் அன்னைக்கு நிறைய வித்தியாசம்… அன்னைக்கு உன் முகத்துல வந்துபோன ஃபாவங்கள், உன் உடம்போட விறைப்பு, மிரண்டு பார்த்த பார்வை, கை விரல் நடுக்கம் எல்லாம்… எல்லாமே… என்னை ரொம்பவே யோசிக்க வெச்சது. போலீஸ்காரன் மூளை இல்லையா? அங்கேயே ஏதோ உறுத்த எனக்கு சந்தேக விதை விழுந்திடுச்சு. ஏற்கனவே ஹாஸ்ப்பிட்டல்ல நீ மாமாவோட முதலாளி கிட்ட எந்த உதவியும் வாங்காத விஷயம், அவங்ககிட்ட வேலைக்கு கேட்டு பாருன்னு சொன்னப்ப நீ மறுத்த விஷயம் எல்லாம் உறுத்திட்டே இருந்துச்சு
அதுதான் மாமா வேலை செஞ்ச இடம், அவங்க வேலை என்ன? எங்கே வேலை? மாமாவுக்கு எப்படி அடி பட்டது? அவங்க முதலாளி யாரு, அவரு வேற என்னவெல்லாம் தொழில் செய்யறாங்கன்னு தனியா என்கொயரி பண்ணினேன்.
சில விஷயங்கள் முன்னுக்குப் பின் முரணா இருந்தது. என்னோட சந்தேகம் மேலும் வலுவடைஞ்சது. அதிலேயும் ஒரு பிரபலமான கேஸ் கூட லிங்க் ஆகிற மாதிரி எனக்கு ஒரு ஊகம்… அதுக்கு முழு ஆதாரம் இல்லாததால என்னால மேற்கொண்டு புரஸீட் பண்ணவும் முடியலை.”
அவள் யோசனையாக அவனைப் பார்க்க, அது புரிந்தாற்போல அதற்கும் விளக்கம் தந்தான். “உங்க அப்பாவோட முதலாளி அருண் பாஸ்கர் பத்தி எனக்கு வேற ஒரு தகவலும் வந்துச்சு. அவர் குடோன்ல ஒரு தொன்மையான சிலையை கண்டுபிடிச்சாங்க அப்படிங்கிற மாதிரி. ஆனா அந்த ஆளு அப்ப பணத்தை அள்ளி வீசி வெளிய வந்துட்டான். அப்பவே எனக்கு ரொம்ப சந்தேகம். மரகத லிங்கம் சிலை கடத்தல் பத்தி இவனுக்கு தெரிஞ்சிருக்குமோன்னு எனக்கு ஒரு ஊகம்.
ஏன்னா தொன்மையான சிலைகள் தஞ்சாவூர் அருளானந்தம் பகுதியில ஒரு வீட்டுல மறைச்சு வெச்சிருக்கிறதா ஒரு இன்பர்மேஷன் வந்தது. அதுக்கு கொஞ்சம் கூட ஆதாரம் கிடைக்கலை. அருண் பாஸ்கரோட அப்பா சாமியப்பன் அந்த ஏரியால தான் இருந்தாரு. கூடவே மாமா விஷயமா நீ கேஸ் வேண்டாம்ன்னு சொல்லிட்ட. ட்ரீட்மெண்ட்டும் பெருசா இன்டெர்ஸ்ட் காட்டலை. இதெல்லாம் ஒன்னுக்கு ஒன்னு தொடர்பு இருக்கிற மாதிரியே எனக்கு தோணுச்சு.
‘யூ டோன்ட் ஹேவ் டு பீ புஷ்ட் வென் யூ ஆர் எக்ஸைட்டேட் ஆன் சம்திங். தி விஷன் புல்ஸ் யூ’ன்னு சொல்லுவாங்களே அந்த மாதிரி… சரியான நேரத்துல எனக்கு வந்த பிராஜெக்ட் தான் இது… சரி சொந்த ஊருல போஸ்டிங்ன்னு நான் உடனே அக்சப்ட் பண்ணிக்கிட்டதா எல்லாரும் நினைச்சிருப்பாங்க. ஆனா உண்மை என்னன்னு எனக்கு மட்டும் தான் தெரியும்.
என் உள்ளுணர்வுகள் தப்பா கூட இருக்கலாம். ஆனா அதை சரிபார்க்காம ஜஸ்ட் லைக் தட்ன்னு என்னால விட்டுட முடியாது.
என்னோட சந்தேகங்களை இன்னும் தெளிவு படுத்திக்க நீ தான் என்னோட முதல் சாய்ஸ். அதுதான் மறுபடியும் உன்னை அணுக நினைச்சேன். அப்பதான் வசந்தனோட நடத்தையில சில மாற்றங்கள் சரியில்லைன்னு புரிஞ்சு அதை ஒரு வாய்ப்பா பயன்படுத்தி உன்னை நெருங்கப் பார்த்தேன். அப்போ நீ முன்னிலும் அதிகமா விலகி ஓடின. அதுக்கும் மேலேயும் என்ன வேணும் சொல்லு… உன்னைப்பத்தின என்னோட சந்தேகங்கள் வலுவாகிடுச்சு…உனக்குள்ள சில ரகசியங்கள் இருந்ததுன்னு என்னால தெள்ளத்தெளிவா யூகிக்க முடிஞ்சது.
மலர் ஹாஸ்பிட்டல்ல எலும்புக்கூடு கிடைச்சவுடனேயே முதல்ல லோக்கல் ஸ்டேஷனுக்கு தான் அந்த கேஸ் போச்சு… அந்த தகவல் எனக்கும் கிடைக்கவும், அந்த ஹாஸ்பிட்டல் பேரைச் சொன்னதும் எனக்கு மாமா அட்மிட் ஆன இடம்ங்கிறது தான் முதல்ல ஞாபாகத்துல வந்தது. அதுதான் அந்த கேஸை பெர்சனலா நானே என் டீமோட சேர்ந்து எடுத்துக்கிட்டேன்.
அந்த கேஸ் கூட எனக்குச் சாதகமா தான் அமைஞ்சது…”
அவன் தன் வேலையைப் பற்றிப் பகிர்ந்து கொள்ள அவளது முகம் சுருங்கியிருந்தது.
“என்ன?” எனக் குழப்பமாக வினவினான்.
“அப்ப… ந… நம்ம கல்யாணம் கூட உங்க கேஸ் ப்ரோஸீடன்ஸ்ல ஒரு ஸ்டெப் தானா?” என்றாள் தயங்கியவாறு. அத்தனை அவசரமாகத் திருமணம் முடித்தானே பொறுமையே காக்காமல் என்ற எண்ணத்தில் கேட்டு விட்டாள்.
ஒற்றை விரலால் அவளின் முகத்தை உயர்த்தி, “உனக்கு என்ன தோணுது?” என அவளைக் கூர்மையாகப் பார்த்தவாறே கேட்டான்.
அவள் இதழ்களை அழுந்த மூடி மௌனம் காத்தாள். “மனசார உனக்கு இந்த சந்தேகம் இருக்கா?” மீண்டும் துருவினான்.
இல்லைதான்! இருந்தாலும்…
“கேட்கிறேனல்ல…” என்றான் இன்னும் அழுத்தமாக.
“பின்னே எனக்கு அத்தனை பயமா இருந்தப்பவும்… நீங்க… நீங்க ரொம்ப அலட்சியமா நடந்துக்கிட்டீங்களே…” அவளால் கேட்காமல் இருக்க முடியவில்லை. ஏனெனில் பணயமாக வைக்கப்பட்டது அவளது சித்தப்பாவின் உயிர் ஆயிற்றே!
“உன்னோட பயமே அவசியமில்லை. என்னை நீ முழுசா நம்பியிருந்தா…” அவளைக் குற்றம் சாட்டியது அவனது குரல்.
நம்பிக்கை கடலளவு இருக்கிறது தான்! ஆனாலும் உயிர்பயம் ஏற்பட்டு விட்ட பிறகு அந்த நம்பிக்கை எம்மாத்திரம்?
அவளின் கசங்கிய முகம் பார்த்து, “பாரு எனக்குப் பொறுமை எல்லாம் இருந்ததே இல்லை. ஆனா இப்படி நீ பாவமா முகத்தை வைக்கும்போது வேற என்னதான் நான் செய்ய முடியும்?”
அவள் புரியாமல் நோக்கவும், “அதட்டக் கூட முடியலை…” என்றான் பாவமாக. அதில் அவள் புன்னகைத்துவிட, “இந்த புன்னகை என்ன விலை?” என கண்சிமிட்டிப் பாடினான்.
அவள் புன்னகை மேலும் விரிந்தது.
சர்வேஸ்வரன் ஆத்மார்த்தமாகக் கூறினான். “சின்ன வயசுல உன்னை சீண்டறதும், அழ விடறதும் ரொம்ப பிடிக்கும். உங்க அம்மா, அப்பா இறந்தப்ப நீ அழுதபாரு… அப்பதான் புரிஞ்சது நீ அழறதை என்னால தாங்கிக்கவே முடியாதுன்னு. அன்னைக்கு எனக்கு தூக்கமே இல்லை. கண்ணை மூடினா உன் அழுகை முகம் தான் வரும். அதுக்கு பிறகும் பல நாள் அதே முகம் என்னை ரொம்ப தொல்லை செஞ்சிட்டே இருந்தது. நீயும் நானும் வேற வளர்ந்துட்டோமா… கன்னாபின்னான்னு ரசாயன மாற்றம். எப்பவும் எனக்குள்ள உன்னோட நியாபகம் மட்டும் தான்! ஆசையா உன்னைத் தேடி வந்தா என்னைப் பார்த்தாலே தலை தெறிக்க ஓடின. சரி சின்ன வயசுல உன் மனசை கலைக்க வேண்டாம்ன்னு நானும் விட்டுட்டேன்.
ஆனா என்னைத் தொல்லை பண்ணின உன் அழுகை முகம் என் மனசிலிருந்து மறையவே இல்லை… அது முழுசா மறக்குமளவு உன்னோட புன்னகை முகம் எனக்குள்ள நிறையணும்… எனக்கு அந்த வரத்தைத் தருவியா?” ஆவலாகக் கேட்டவனின் கரை காணக் காதல் அவளுக்கு எல்லையில்லா மகிழ்ச்சியைத் தந்தது.
இவளின் புன்னகை முகத்தை வரமாய் யாசிக்கும் கணவனின் கரை காணாத நேசம் இவளுக்கு வரமெனத் தோன்றியது. வெட்கத்துடன் புன்னைத்துக் கொண்டாள்.
“என்ன வரத்தை அள்ளி தரணும்ன்னு முடிவு பண்ணிட்ட போலவே…” என்று ஆசையாகக் கூறியவன் ஆவலோடு அவளை நெருங்கினான்.
“அச்சோ இது கார்… நம்ம இன்னும் ஹாஸ்ப்பிட்டல்ல தான் இருக்கோம்” எனப் பதறி விலகினாள் சௌதாமினி. அவனுடைய உல்லாச புன்னகை அவளை மயக்கியது. நாணத்துடன் அவன் தோளில் மீண்டும் புதைந்து கொண்டாள்.
*** சுபம் ***