எனக்கொரு வரம் கொடு 23 – சுகமதி

எனக்கொரு வரம் கொடு – 23

களங்கள் புதிதாய் இருக்கலாம்! எதிரிகள் புதிதாக இருக்கலாம்! ஆனால், களம் காண்பதோ எதிரிகளை எதிர்கொள்வதோ சர்வேஸ்வரனுக்குப் புதிதில்லையே! அவன் வேலையே அதுவாகத்தானே இருந்து வருகிறது.

பல களங்கள் கண்டவன்; இந்த அருண் பாஸ்கர் போல பற்பல எதிராளிகளைப் போர்க்களத்தில் எதிர்கொண்டு வெற்றிவாகை சூடியவன்! அவனால் இது முடியும் என்ற நம்பிக்கை சௌதாமினிக்கு இருந்திருக்க வேண்டும்!

ஆனால், அவளிடம் நம்பிக்கையை காட்டிலும் அச்சமே மேலோங்கி நின்றிருந்தது! ஒருவேளை அவன் மீது நேசம் கொண்டு இந்த திருமணம் கூடி வந்திருந்தால் அவளுக்கும் நம்பிக்கை பிறந்திருக்க வாய்ப்பிருக்கலாம்!

ஆனால், அவளால் அதுபோலவெல்லாம் யோசிக்கவே முடிந்ததில்லையே! சித்தப்பாவை நன்றாகக் கவனித்துக் கொள்ள வேண்டும். அவர் வருமானம் இல்லாத இந்த இக்கட்டான சூழலில் குடும்பத்தினர் யாருக்கும் எந்த குறையும் வந்துவிடக் கூடாது. அவர் விட்டுச் சென்ற கடமையைச் செய்ய வேண்டும் இப்படி தனக்குத்தானே அவள் விதித்துக் கொண்ட கட்டளைகள், அதைக் காப்பாற்ற ஓடிய ஓட்டங்கள் ஏராளம். இதில் இளைப்பாற ஏது நேரம்?

இளைப்பாறவே நேரம் இல்லாதபோது… காதலுக்கும் கனவுக்கும் எங்கிருந்து நேரத்தை ஒதுக்கி இருப்பாள்?

இன்னமும் அச்சம் மட்டுமே அவளுள் பிரதானம்! அத்தனை பெரிய விபத்தை ஏற்படுத்தி விட்டவன்… அதன்பிறகும் கண்ணப்பன் மாமாவை வஞ்சம் வைத்துக் கொன்றவன், மிகவும் வசதி படைத்தவன்… அவனிடம் மோதுவது என்ன அவன் இருக்கும் திசைக்குச் செல்வது கூட ஆபத்து என்று ஒதுங்கிப் போனவள் தான் சௌதாமினி.

அருண் பாஸ்கர் செய்த பிழை என்ன என்பது அவளுக்கு அணுவளவும் தெரியாது. ஏதோ ஒரு பிழை. அதையறிந்த செல்லத்துரை சித்தப்பாவையும், கண்ணப்பன் மாமாவையும் அவன் உயிரோடு விட்டுவைக்கத் தயாரில்லை. சித்தப்பாவிற்கு புத்தி சுவாதீனம் சரியில்லாததால், அவர் பிழைத்திருக்கிறார் என்றளவில் மட்டுமே அவளுடைய ஞானம்!

அதனாலேயே சித்தப்பா குணம் ஆகக்கூடாது என்பதில் அத்தனை கவனம் காத்தாள்.

ஆனால், இப்பொழுதோ கணவன் அந்த அருண் பாஸ்கரை நெருங்குகிறானே என்று அச்சம் தான் வந்தது! அந்த அச்சத்திற்கு முதன்மை காரணங்கள் ஒன்று சித்தப்பாவிற்கு இதன்மூலம் ஏதேனும் ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்பதும், மற்றொன்று சர்வாவிற்கு என்னென்ன இன்னல்கள் நேரக்கூடுமோ என்பதுமே!

கணவனுக்கு அவனால் எதுவும் ஆபத்து நேர்ந்தால் அதை அவளால் எண்ணிப்பார்க்கக்கூட முடியவில்லை. அச்சோ சர்வா இதிலிருந்து விலகியிருக்கக் கூடாதா என உள்ளுக்குள் அரற்றினாள்.

எங்கே இந்த விசாரணையின் முடிவு சித்தப்பா திசைக்கும் திரும்புமோ? அவரது உயிரை மீண்டும் பணயம் வைக்கும் சூழல் வந்துவிடுமோ என எண்ணும்போதே அவளுக்கு உள்ளுக்குள் நடுங்கியது. இல்லை இல்லை இது நடக்கவே கூடாது எனப் பரிதவித்துப் போனாள்.

சிவந்த முகமும், நலுங்கிய தோற்றமும், கலங்கிய விழிகளுமாக இருந்தவளை அவசரமாக நெருங்கிய சர்வா, “உடம்பு எதுவும் சரியில்லையா சௌதி? நீ போன் பண்ணி இருந்ததா ஓவியா சொன்னா” என ஆதரவாக அணைத்தபடி கேட்டான்.

அவன் நெஞ்சில் புதைந்தவள், “சரு…” என்ற விசும்பலுடன் கண்ணீர் வடித்தாள்.

அவன் பதறிப்போனான். “என்ன சௌதி… என்ன ஆச்சுமா?”

பதில் சொல்லும் மனநிலையில் அவள் இல்லை. தொடர்ந்து விசும்பிக் கொண்டே இருந்தாள். சர்வா கண்ணப்பன் குறித்துத் தெரிந்திருக்கும் அதற்காகக் கலங்குகிறாள் போல என்று தான் நினைத்தான்.

“நீ உங்க அத்தையை போயி பார்க்கலையா டா” என்றான் ஆதரவாகத் தலையை வருடியபடி.

அவன் கேட்கும் வரையிலுமேயே அவளுக்கு தனபாக்கியம் குறித்து எண்ணங்களே எழவில்லை. அந்தளவில் மனபாரம் அவளை அழுத்திக் கொண்டிருந்தது.

“சரு… இது… இது ரொம்ப ரிஸ்க்கான கேஸ்” என்று புலம்பினாள்.

நாம் என்ன கேட்கிறோம் இவள் என்ன சொல்கிறாள் என்ற யோசனையில் அவனது புருவங்கள் சுருங்கியது. அதோடு எந்த வழக்கில் தான் ஆபத்து இல்லை, அவன் வேலையே அதுதானே என்றும் தோன்றிற்று. ஆனால் அழுபவளிடம் அதை எப்படி எடுத்துச் சொல்ல என்ற குழப்பமும் எழ, “நான் கவனமா இருப்பேன்டா. இதுக்கா கலங்குற?” என்றான் பரிவான குரலில்.

“சரு… அவன் ரகசியம் தெரிஞ்சுக்கிட்ட ஆளுங்க கண்ணப்பன் மாமாவும், சித்தப்பாவும் தான். இப்ப கண்ணப்பன் மாமா உயிரோட இல்லை. இந்த நிலையில அவனை கைது செஞ்சா… கண்டிப்பா அவன் உங்களை எதுவும் செஞ்சிடுவான். எத்தனை கொலை, கொள்ளைன்னு திரிஞ்சவனோ… அவனுக்கு வெளியில எவ்வளவு செல்வாக்கு இருக்கோ… எனக்கு ரொம்ப பயமா இருக்கு சர்வா… அதோட சித்தப்பா… அவருக்கு அவருக்கு எதுவும் ஆபத்து வந்துடுமா?”

“ஸ்ஸ்ஸ்… ரிலாக்ஸ்… நான் பார்த்துப்பேன் டா. நீ ஏன் இத்தனை வொரி செய்யற? நீ பயப்படற மாதிரி எதுவும் ஆகாது” என்றான் பொறுமையாக. அம்மா, அப்பா இழப்பே அவளை நிலைகுலையச் செய்திருந்தது. மீண்டும் சித்தப்பாவை இழந்துவிடுமோ என்கிற கலக்கம் அவளை வாட்டி வதைக்கிறது என்பது அவனுக்கும் புரியாமல் இல்லை. ஆனால், இவள் இத்தனை பயம் கொள்ள வேண்டுமா என்றும் இருந்தது.

“இல்லை… இது சரியா வரும்ன்னு எனக்கு தோணலை. நீங்க இதுல இருந்து விலகிடுங்களே” என்றாள் கலக்கத்துடன்.

முயன்று கடைப்பிடித்த பொறுமை எல்லையைக் கடந்தது சர்வாவுக்கு. “நீ இந்தளவு கோழையா இருக்க வேண்டாம் சௌதி…” என்றான் கடினமான குரலில்.

உண்மையில் சௌதி தன் குடும்பத்தைத் தான் பெரிதாக நினைத்தாள்; நினைத்துக் கொண்டிருக்கிறாள்; ஆனால், கடமையைப் பெரிதாக எண்ணும் சர்வேஸ்வரனுக்கு குடும்பம், தன் உயிர் எல்லாமே இரண்டாம் பட்சம் தான்! இந்த முரண்பாடு அத்தனை எளிதில் ஒருங்கிணைவது சிரமமே! இருவருமே இந்த விஷயத்தில் அவரவர் பிடியிலேயே நிற்பவர்கள்.

“நான் கோழையாவே இருந்துட்டு போறேன்… எனக்கு நீங்க முக்கியம், சித்தப்பா முக்கியம். உங்க ரெண்டு பேரோட உயிரை பணயம் வெச்சு நான் எதையும் யோசிக்க தயாராயில்லை. தயவு செஞ்சு இந்த கேஸில் இருந்து எந்த சிக்கலும் இல்லாம வெளிய வர பாருங்க” என்றாள் அழுகையும் கோபமுமாய்!

“உச்சு… உனக்கென்ன பைத்தியமா சௌதி? நான் என்ன கேஸ் பார்க்கிறேன் தெரியுமா? இதுக்காக எத்தனை மாசம் தூங்காம அலைஞ்சிருக்கேன் தெரியுமா? இப்பதான் கொஞ்சம் முன்னேறி இருக்கேன். இப்ப போயி கண்டதையும் பேசிட்டு… உனக்குப் பயமா இருந்தா அது உன்னோட. அதுல என்னை ஏன் அவதிப் பட வைக்கிற” என்றான் எரிச்சலாக.

“நான் திரும்பத் திரும்ப சொல்லிட்டே இருக்கேன். நீங்க மதிக்காட்டி எப்படி” என்று சௌதா ஆத்திரப்பட்டாள்.

“பயப்படலாம் தப்பில்லை. ஆனா இந்தளவு ஏன் பயந்து சாகற. அவன் தப்பு பண்ணினவன். அவனுக்கான தண்டனையை சட்டப்படி தர வேண்டாமா?”

“பொல்லாத தண்டனை. ஊரு உலகத்துல தப்பு பண்ணினவன் எல்லாருக்கும் தண்டனை வாங்கி தந்துட்டீங்களா? எத்தனையோ பேரு சுதந்திரமா மேலும் மேலும் தப்பு பண்ணிட்டு சுத்தலை”

“உனக்கு நிஜமாவே பைத்தியம் தான் பிடிச்சிருக்கு… உனக்கு இதுக்கும் மேல விளக்கம் சொல்ல எனக்குத் தெம்பில்லை” என்றவன் உணவை மறந்து உறங்கச் சென்றான்.

அவளோ அப்பொழுதும் சண்டையை விடும் எண்ணம் இல்லாமல், “நீங்க என் பேச்சுக்கு மதிப்பு தராட்டி நான் இங்க இருக்க மாட்டேன். எங்க வீட்டுக்கே போறேன்” என்று அறிவித்தாள்.

அலுப்புடன் அவளை நோக்கியவன், “சும்மா எதையாவது உளராதே சௌதி. உன்னை இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வர நான் என்ன பாடுபட்டிருக்கேன் தெரியுமா? வீட்டை விட்டு போறேன்னு எல்லாம் இனி பேசாத” என்றான் கண்டிப்புடன்.

“நான் உளறறேனா? எத்தனை முறை உங்களுக்கு சொல்லறது இதெல்லாம் வேண்டாம்ன்னு…உங்களுக்கும் சித்தப்பாவுக்கும் ஏதாவது ஆயிட்டா நான் என்ன செய்வேன்?” என்று கண்ணீரோடு கத்தினாள் சௌதாமினி.

அச்சோ இவளுக்கு எத்தனை முறை சொல்வது என்கிற அலுப்புடன், “என்னை நம்பு சௌதி அப்படி எதுவும் நடக்க விடமாட்டேன்…” என்றான் சோர்ந்த குரலில்.

“இல்லை இதுல உங்களை நம்பறது நம்பாதது எல்லாம் விஷயம் இல்லை. நான் உங்க மேல வெச்ச நம்பிக்கையை விட என்னோட பயம் தான் அதிகம்” வறட்டு பிடிவாதம் பிடிப்பவளை என்ன செய்வது என்று புரியாமல் பார்த்தான் கணவன்.

“எதுவும் ஆகாதுடா… தைரியமா இரு பிளீஸ்” என்றான் மீண்டும் ஒருமுறை.

“சும்மா சொல்லாதீங்க சரு… அன்னைக்கும் நீங்க என்கூடவே தான் இருந்தீங்க. எவனோ ஒருத்தன் என்னை கத்தியால குத்திட்டு போகலை. நம்ம எதிரபார்க்காத போது என்ன வேணா நடக்கலாம். பிளீஸ் புரிஞ்சுக்கங்க…” என்றாள் பிடிவாதமான குரலில்.

சர்வாவின் முகம் கடினமானது. தாடையும் கை முஷ்டியும் இறுகியது. கடினமான குரலில், “என் வேலை எப்பவுமே இப்படி ஆபத்துகள் நிறைஞ்சது தான்… உனக்கு அத்தனை பயமா இருந்தாலோ இல்லை என்மேல நம்பிக்கை இல்லாம இருந்தாலோ நீ என்னை கல்யாணமே செய்திருக்கக் கூடாது” என்றான்.

சௌதாவை அவன் பிடிவாதமும் வார்த்தைகளும் வெகுவாக சீண்டியது. தான் என்ன சொல்கிறோம் என்பதையே யோசிக்காது, “நானா உங்களைக் கல்யாணம் செய்துக்கறேன்னு சொன்னேன். நான் எப்ப விருப்பப்பட்டு கேட்டேன் என்னை நீங்க என்கிட்ட இப்படிக் கேட்கிறதுக்கு… உங்க விருப்பம் போல தானே பிடிவாதம் பிடிச்சு என்னை என் விருப்பமே இல்லாம கல்யாணம் செய்துக்கிட்டீங்க” என அவள் ஆத்திரத்தில் கொட்டிய வார்த்தைகள் அவனை மேலும் இறுக்கமடைய செய்தது.

அதற்கு மேல் அவன் எதுவும் பேசவில்லை. அமைதியாகப் படுத்துக் கொண்டான். அவனுக்குள் கோபம் கொதித்துக் கொண்டிருந்தது. திருமணமாகி இத்தனை நாட்கள் கடந்தும் சௌதாவிடமிருந்து இதுபோன்ற பேச்சை அவன் எதிர்பார்க்கவில்லை. அப்படியானால் இன்னமும் அவளுக்கு என்னோடு இருக்க விருப்பமில்லையா? என் கட்டாயம், என் வற்புறுத்தல் தான் இன்னமும் அவளை இங்கே பிடித்து வைத்திருக்கிறதா? என்று எண்ணங்கள் பயணிக்க ஒருமாதிரி வெறுத்த நிலையில் இருந்தான்.

அந்த அமைதி அவளுக்குப் பதற்றத்தைத் தந்த போதிலும், அவள் முடிவிலிருந்து அவள் இறங்குவதாக இல்லை.

மறுநாள் அவன் எழுந்தபோது அவள் தன் தாய்வீடு செல்ல கிளம்பிக் கொண்டிருந்தாள். அவன் எதுவுமே பேசாமல் தன் வேலைகளைக் கவனிக்கத் தொடங்கினான். அவளுக்கும் கண்டு கொள்ளும் எண்ணம் இல்லை போலும்!

அமைதியாகக் கிளம்பியவன் என்ன நினைத்தானோ, கிளம்பிக் கொண்டிருந்தவளின் தோள்களைப் பற்றித் திருப்பி, அவளது நெற்றியிலும் கன்னத்திலும் முத்தமிட்டு, “பார்த்து இரு…” என்று மட்டும் சொன்னவன், விறுவிறுவென்று அவ்விடத்தை விட்டு நகர்ந்திருந்தான்.

சௌதாமினியின் விழிகள் கண்ணீரால் நிறைந்தது. அவன்மீது நம்பிக்கை எழ மறுக்குமளவு அவளை தின்று கொண்டிருந்த அச்சத்தைத் தாண்டி வரத் தெரியாமல் அவள் அவனைப் பிரியும் முடிவை எடுத்தாள். இது எத்தனை வருத்தத்தைக் கணவனுக்கும், தங்கள் இரு குடும்பத்திற்கும் தரும் என்பதைப்பற்றிக் கூட யோசிக்கும் மனநிலை அவளுக்கு இல்லை. ஏன் தானுமே என்ன பாடு படுவோம் என்று அந்த நேரத்தில் அவளுக்கு யோசனை எழவில்லை தான்!

என்னவோ ஒரு வீம்பு… அத்தை ரேவதி மறுத்து பேச முயன்ற போது கூட அவரை பேசவே விடாமல் தடுத்து, சமாளித்து தன் பிறந்த வீட்டிற்கு நடையைக் கட்டியிருந்தாள்.

சௌதாவின் இந்த செய்கையில் சர்வா வெகுவாக காயப்பட்டுப் போனான். தன் வேலை இப்பொழுதுதான் ஏறுமுகத்தில் செல்ல தொடங்கியிருக்க இந்த நேரத்தில் உடனிருக்க வேண்டிய அவன் மனைவி அவனை விட்டுப் பிரிந்திருப்பது மிகுந்த வலியை வேதனையை பரிசளித்துக் கொண்டிருந்தது. இருந்தும் இயல்பு போல நடமாடிக் கொண்டிருந்தான். அவள் அமிலமாய் கொட்டி சென்ற வார்த்தைகள் வேறு ஒருபுறம் வாட்டி வதைத்தது.

பிரசாந்த் கூட, “ஆர் யூ ஓகே சார்?” என்று தயக்கமாக விசாரித்தான். சிறு தலையசைப்பு மட்டுமே அவனுக்கான பதில்.

சர்வா அருண் பாஸ்கரை அவன் பாணியில் விசாரிக்கத் தொடங்கியிருந்தான். முதல் சில நாட்கள் சண்டித்தனம் செய்தவன், நாட்கள் செல்ல செல்ல தாக்குப் பிடிக்க முடியாமல் உண்மைகளைக் கொட்டத் தொடங்கியிருந்தான்.

தொன்மையான சிலைகளைக் கடத்துவது தான் தங்களின் பிரதான தொழில் என்பதை அவன் ஒருவழியாக ஒப்புக் கொண்டான். அதுபற்றிய உண்மை தெரிந்து கொண்டதால் தான் கண்ணப்பனை கொன்றதாகவும் ஒப்புக் கொண்டான்.

சர்வா மரகத லிங்கம் குறித்து விசாரிக்க, தெரியவே தெரியாது என சாதித்தவன், சர்வாவின் தனித்துவமான விசாரணையில் தன் தந்தை சாமியப்பன் அந்த சிலையை பேங்க் லாக்கரில் பதுக்கி வைத்திருப்பதை ஒருவழியாகச் சொல்லி விட்டான்.

பேங்க் லாக்கரிலா சர்வா இதை எதிர்பார்க்கவே இல்லை.

அருண் பாஸ்கரின் வாக்குமூலத்தின் மூலம் அதன்பிறகு வேலைகள் எல்லாம் துரிதமாக நடந்தேறியது. சாமியப்பன் வீட்டில் தொன்மையான சிலைகள் கைப்பற்றப் பட்டதோடு, பேங்க் லாக்கரில் இருந்த மரகத லிங்கமும் மீட்டெடுக்கப்பட்டது. சாமிநாதனை கைது செய்திருந்தனர்.

வங்கி லக்கரில் இருந்த சிலையை மீட்டு நவரத்தினங்களை ஆய்வு செய்யும் வல்லுநர்கள் சோதனை செய்து உறுதியும் செய்திருக்க, சென்னை அசோக் நகரிலுள்ள சிலைகடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகர்களிடம் சிலை ஒப்படைக்கப்பட்டிருந்தது.

சென்னை அசோக் நகர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஐ.ஜி., செண்பகராஜன் சர்வா இந்தளவு முடித்துத் தருவான் என்று எதிர்பார்க்கவே இல்லை. அவனை வெகுவாக பாராட்டினார்.

டி.ஐ.ஜி., ஜெயந்த் முரளியும் அவனை வெகுவாக பாராட்டினார். “என் நம்பிக்கையை காப்பாத்திட்ட யங் மேன்” என அவனை வெகுவாக புகழ்ந்து தள்ளினார்.

பத்திரிக்கை, தொலைக்காட்சி என அனைத்திலும் செய்தி பரவ, அன்றைய நாயகன் சர்வேஸ்வரன் தான்!

WRITER NOTE :

மரகத லிங்கம் தொடர்பான உண்மையான கேஸ் இதுதான்…

https://m.youtube.com/watch?v=CW1Bax1sRdg

இங்கு முழுக்க முழுக்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தான் கண்டு பிடிச்சிருப்பாங்க. நம்ம கதைக்காக சில மாறுதல்கள். மற்றபடி பெயர்கள் கூட ஓரளவு பொருந்தும் படி தான் எழுதியிருக்கேன்.

கூடவே அந்த லிப்டில் இருந்து எலும்புக்கூடு கிடைத்த கேஸ்…

https://www.youtube.com/watch?v=hWANocqJ5Sg

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

எனக்கொரு வரம் கொடு 19 – சுகமதிஎனக்கொரு வரம் கொடு 19 – சுகமதி

எனக்கொரு வரம் கொடு – 19 இதழ்களில் புன்னகை உறைந்திருக்க, அதை மறைக்க முயன்று தோற்றபடி கணவனுடன் வெளியில் செல்ல கிளம்பிக் கொண்டிருந்தாள் சௌதாமினி. சர்வேஸ்வரன் கவனிக்கும்போது மட்டும் சிரமப்பட்டு முகத்தில் எதையும் காட்டிக்கொள்ளவில்லை. ஆனால், அவனுக்கும் அவளைக் கவனிக்கும் மனநிலை

எனக்கொரு வரம் கொடு 12 – சுகமதிஎனக்கொரு வரம் கொடு 12 – சுகமதி

எனக்கொரு வரம் கொடு – 12   சர்வேஸ்வரன், சௌதாமினி இருவருக்கும் நிச்சயத்திற்கான தேதி குறிக்கப்பட்டிருந்தது. கற்பகம் மிகுந்த உற்சாகத்துடன் வளைய வந்தார். செல்லத்துரைக்கும் மனைவியோடு சேர்ந்து மகளின் திருமண விஷயம் பற்றிப் பேசுவது மிகுந்த உற்சாகமளிப்பதாகவே இருந்தது.   அவர்களின்

எனக்கொரு வரம் கொடு 20 – சுகமதிஎனக்கொரு வரம் கொடு 20 – சுகமதி

எனக்கொரு வரம் கொடு – 20 தஞ்சாவூர் மனநல மருத்துவமனைக்கு சர்வேஸ்வரனும் சௌதாமினியும் வந்து சேர்ந்திருந்தனர். கணவனுக்கு நிதானமாக ஒவ்வொரு பகுதியாகச் சுற்றி காட்டிக் கொண்டிருந்தாள் சௌதா. பலரும் கைத்தொழில் எதிலாவது தங்களை முழு அர்ப்பணிப்போடு ஈடுபடுத்தி இருப்பதை மிகுந்த ஆச்சரியத்தோடு