எனக்கொரு வரம் கொடு – 22
டிஐஜி ஜெயந்த் முரளி உச்சக்கட்ட எரிச்சலில் இருந்தார். மலர் ஹாஸ்ப்பிட்டல் கேஸை விட்டுவிடு… நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கேஸை முடிக்கும் வழியைப் பார் என படித்துப் படித்துச் சொல்லியிருக்கிறார், இந்த சர்வேஸ்வரனோ செவி சாய்க்காமல் மீண்டும் குட்டையைக் குழப்பினால்? இவனை நம்பி எத்தனை பெரிய பொறுப்பை ஒப்படைத்திருக்கிறோம் இவனானால் இப்படி இருக்கிறானே என்று வெந்து கொண்டிருந்தார்.
அவரின் முகத்தின் கடுமை அவர் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார் என்பதை அவனுக்கும் மொழி பெயர்த்திருக்க வேண்டும்! “இந்த அருண் பாஸ்கர் சில மாசங்களுக்கு முன்னால் ஒரு சிலை கடத்தல் கேஸ் விஷயமா கைதாகி இருந்தார் சார்” என்றான்.
“இதென்ன புது கதை?” அவர் எரிந்து விழுந்தார். ஆனால், இனி இவரது முழு ஆதரவு இல்லாமல் மேற்கொண்டு அவனால் முன்னேற முடியாதே! ஆக, தன் பக்க விளக்கத்தை முழுவதுமாக பகிர நினைத்தான்.
“சார் பிளீஸ் நான் சொல்லறது ரொம்ப கான்பிடென்ஷியல் விஷயம். இதுக்கு ஆதாரம்ன்னு பெருசா என்கிட்ட எதுவும் இல்லை. ஆனா, நிறைய உறுதியான சந்தேகங்கள் இருக்கு. நீங்க கொஞ்சம் என்னை பேச விடுங்க…” என்றான் அவன்.
“சர்வா… நீ நம்ம நிலைமை புரியாம பேசிட்டு இருக்க. ஏற்கனவே ஐ.ஜிக்கு சிலை கடத்தல் கேஸை நம்ம எடுக்கிறதுல விருப்பம் இல்லை… நம்ம வேலை கெடுதுன்னு நினைக்கிறார். நாம என்னடான்னா இத்தனை மாசம் ஆன அப்பறமும் எந்த க்ளூவும் கிடைக்காம… இப்ப தான் இவன் மேல சந்தேகம் இருக்கு… அவன் மேல சந்தேகம் இருக்கும்ன்னு சொல்லிட்டு இருக்கோம். டூ யூ அண்டர்ஸ்டேண்ட் ஹவ் இட் ரிப்லெக்ட்? கண்டிப்பா இந்த கேஸை நீங்க பார்த்தது போதும். ஸ்டாப் திஸ் நான்சென்ஸ்ன்னு அந்த ஆளு கத்த போறாரு… நானா வாலண்டியரா போயி சர்வா இதை நல்லா செய்வான் அவன்கிட்ட கொடுப்போம்ன்னு செண்பகராஜன் கிட்ட பேசி வாங்கி இருக்கேன்…
அது எல்லாத்துக்கும் மேல… அந்த மரகத லிங்க சிலை? அதோட மதிப்பு என்னன்னு உனக்கும் தெரியும் தானே! அதை தொலைக்கறதும் கண்டுபிடிக்க முடியாம திணறறதும் அது நமக்கு எவ்வளவு பெரிய அவமானம்? அப்பறம் நாம இந்த பொஷிஷன்ல இருக்கிறதுக்கும் இந்த யூனிஃபார்ம் போடறதுக்கும் என்ன யூஸ்? அதை மீட்கிறது நம்ம தலையாய கடமை சர்வா…” என்றார் இயலாமையுடன்.
“சார்… பிளீஸ் அலவ் மீ டு எக்ஸ்பிளைன். கண்டிப்பா நான் உங்க நம்பிக்கையை காப்பாத்துவேன். பிளீஸ் பிலீவ் மீ…” என்றான் இறங்கி வந்தவனாக மிகவும் தணிந்து. அவரது இயலாமையும் தவிப்பும் அவனை தன்னால் தணிய வைத்திருந்தது. இல்லையென்றால் இவர் அவனைப் பேசவே விடாமல் செய்வதற்குப் பொறுமையை இழந்து அலட்சியம் காட்டி இருப்பான்.
அவரும் என்ன நினைத்தாரோ கையை மட்டும் சொல்லு என்பது போல அசைத்தார்.
“சார் வி.ஓ.சி ஸ்டேஷன்ல அருண் பாஸ்கர் இடத்துல கிடைச்ச ஒரு பாரம்பரிய சிலைக்காக கேஸ் போட்டிருக்காங்க. அதுல அவனை விசாரிக்கவும் செய்திருக்காங்க… ஆனா, அந்த கேஸ் பதிவு பண்ணின தடயமும் இல்லை… அவனை விசாரிச்ச தடயமும் இல்லை. அவனுக்கு பதில் இன்னொருத்தன் அந்த கேஸில் ஆஜர் ஆனதும் இல்லாம… பணமும் நிறைய விளையாடியிருக்கு…” என்றவன் தன்னிடம் இருந்த கோப்புகளை அவரிடம் காட்டினான்.
“இது அருண் பாஸ்கரோட இரும்பு பேக்டரி விவரம்… என்ன தான் தலைகீழா நின்னாலும் அவனோட வருஷ வருமானம் இந்தளவு தான் வரும்… ஆனா இது அவனோட எக்ஸ்பென்சஸ் லிஸ்ட்… அவனோடது மட்டும். அவன் கிரெடிட் கார்ட், பேங்க் ஸ்டேட்மெண்ட்… ரெண்டுக்கும் கொஞ்சமாவது பொருந்துதா பாருங்க…
இப்படி செலவழிக்கிறவனுக்கு அந்த வருமானம் எப்படி போதும்?அவன் செலவுக்கு வரும் வருமானமே போதாதுங்கிற போது, அவனால சொத்து எப்படி சேர்க்க முடியும்? இது அவனோட சொத்து கணக்கு சார். அவனுக்கு சோர்ஸ் ஆப் இன்கம் வேற எதுவுமே இல்லை… அப்படியிருக்க இது சாத்தியமே இல்லை சார். அவனுக்கு பரம்பரை சொத்து வந்திருக்கலாம்ன்னு நினைச்சாலும் அவன் அப்பன் கதையும் இதே தான்…
அவன் அப்பன் சாமியப்பன் ஆரம்ப காலத்துல ரொம்ப சாதாரண மனுஷன். இப்பவும் அவன்கிட்ட பேருக்கு ஒரு தொழில் இருக்கு தான்… ஆனா அவனோட சொத்து கடல் மாதிரி இருக்கு தஞ்சாவூர்ல… ஆக அவனுங்க தொழில் மூலம் அவனுங்களுக்கு வருமானம் வரதை விட… வேற ஏதோ வழியில பெருகுது. அதுவும் பல மடங்கு…
என்னோட யூகம் என்னன்னா அருண் பாஸ்கர் பத்தி அவன் பேக்டரில வேலை செஞ்ச செல்லத்துரை, கண்ணப்பன் ரெண்டு பேருக்கும் நாலு வருஷத்துக்கு முன்ன அரசல் புரசலா எதுவும் தெரிஞ்சிருக்கும். அதுனால உள்ளேயே விபத்து மாதிரி ஒன்னை ஏற்பாடு பண்ணிட்டான். அதுல கண்ணப்பன் தப்பிச்சுட்டாரு… செல்லத்துரைக்கு பலத்த காயம். அவர் இப்ப மனநிலை பாதிக்கப்பட்டு இருக்காரு. கண்ணப்பனை அதுக்கப்பறம் தீர்த்து கட்டிட்டாங்க. அவரோட எலும்புக்கூடு தான் மலர் ஹாஸ்ப்பிட்டல் லிப்ட்டில் கிடைச்சது…
அருண் பாஸ்கர் ஆட்களை எடை போட தெரியாதவன் சார். கொஞ்சம் முரடன்… அவனுக்கு ஸ்டேபிள் மைண்ட் கிடையாது. அவனை தட்டி விசாரிச்சா… கண்டிப்பா ஏதாவது சாதகமா நமக்கு கிடைக்கும் சார். என் சந்தேகம் அவன் தான் கண்டிப்பா செய்திருப்பான்னு இல்லை. ஆனா இவனை விசாரிச்சா எங்கே இருக்கலாம்ன்னு ஆச்சும் சொல்லுவான். கண்டிப்பா இவனுங்களுக்கு இது சம்பந்தமா தொழிலில் இருப்பவங்களை தெரிஞ்சிருக்கும்.
இப்ப எதுவும் கெட்டு போகலை சார். ஐஜி சார் விருப்பப்படி கிரைம் பிரேன்ச் கேஸும் பிராக்ரஸ்ல இருக்கு. அவரை சாமளிக்க நீங்க இந்த கேஸை சொல்லிக்கலாம். அவனை நான் விசாரிக்க போறதும் கண்ணப்பன் கேஸ் சம்பந்தமா தான்… அந்த விவரம் கிடைச்ச பிறகு… சிலை கடத்தல் தொடர்பா விசாரிச்சுக்கிறேன். இது நமக்கு எக்ஸ்டரா லாபம் தானே சார்… அவன் மூலமா சின்ன துரும்பு கிடைச்சாலே போதுமே…” தன்னால் இயன்ற வரை விளக்கம் தந்து, தான் செய்யவிருக்கும் வேலைக்கு அனுமதி கேட்டான்.
அவனது பேச்சில் அவர் கொஞ்சம் சமாதானம் ஆனது போல தான் தோன்றியது. “ஓகே… கோ எஹீட்… ஆல் தி வெரி பெஸ்ட்” என்றார் அவர். பெரிதாக முகம் தெளிவில்லை அவருக்கு.
அதெப்படி யார் கடத்தியிருக்கக் கூடும் என இந்த அருண் பாஸ்கருக்கு தெரியும்? செண்பகராஜனும் அவருடைய டீம் ஆட்களும் தமிழ்நாடு முழுவதும் சிலை கடத்தல் தொடர்பான கேஸ் பதியப்பட்டவர்களை அவர்கள் பாணியில் விசாரித்தாயிற்றே! ஒன்று அவர்கள் கத்தியிருந்தால் ஒப்புவித்திருக்க வேண்டும். இல்லை யார் என்று தெரிந்திருந்தால் சொல்லியிருக்க வேண்டும். எதுவுமே இல்லை என்னும்போது… இவன் மட்டும் எப்படி யார் கடத்தியிருக்கக் கூடும் என சொல்ல முடியும்? என்பது தான் அவரது எண்ணம்!
ஆனால், சர்வா சொன்னது போல… அவன் இறங்குவது லிப்ட் கேஸ் தொடர்பாக… அது எப்படியும் வெற்றி தான்! ஏன் என்றால் அந்த மலர் ஹாஸ்ப்பிட்டல் வாட்ச்மேன் மோகன் தான் தெளிவாக வாக்கு மூலம் கொடுத்திருக்கிறானே… அவன் இந்த செயலை செய்ய காரணம் அருண் பாஸ்கர் என்று! ஆக எப்படியும் அந்த கேஸ் முடித்து விடும். சிலை கடத்தல் தொடர்பாக விவரம் கிடைத்தால் நல்லது என்பது போல தானே சொல்லி செல்கிறான். சரி செய்யட்டும் என்று நினைத்தார் அவர்.
மெல்லிய புன்னகையுடன் நன்றி கூறி விடைபெற்றான் சர்வேஸ்வரன்.
அதன்பிறகு துரிதகதியில் அருண் பாஸ்கரை காதும் காதும் வைத்ததுபோல கைது செய்தாயிற்று.
கைது செய்து முடித்த கையோடு… ஓவியா, பிரசாந்த் இருவரிடமும் பிரஸ் மீட்டிற்கு ஏற்பாடு செய்து அவன் தந்த தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும்படியும், கண்ணப்பனின் குடும்பத்திற்கும் முறைப்படி தகவல் தரும்படியும் சொல்லிவிட்டான்.
அதன்படி கண்ணப்பனின் மனைவி தன்பாக்கியத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்க… அந்த செய்தி அவரின் உறவின, நட்பு வட்டங்களிடையேயும் பரவியது சௌதாமினி உட்பட!
செய்தி சேனல்களிலும் மலர் ஹாஸ்ப்பிட்டலில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடு கண்ணப்பனுடையது என்கிற தகவலும், அவரைப்பற்றிய விவரங்களும் ஒளிபரப்பாகத் தொடங்கியது. இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. கூடிய விரைவில் குற்றவாளிகள் பற்றிய விவரங்களையும் தெரிவிப்போம் என்கிற தகவல்களும் பகிர்ந்து கொண்டிருந்தனர் ஓவியாவும் பிரசாந்த்தும்.
சௌதாமினி அதையும் பார்த்து விட, அவளுக்கு உடல் வெடவெடக்க தொடங்கியது. நின்று கொண்டிருந்தவள்… தொப்பென்று அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டாள்.
‘அப்ப கொன்னு தான் இருக்காங்களா? அதுவும் எந்த மாதிரி மூச்சு திணற வெச்சு… அதுலேயும் அவர் உடம்புக்கு இறுதியா அஞ்சலி கூட செலுத்த முடியாம பண்ணிட்டாங்களே பாவிங்க…’ நினைக்கும்போதே நெஞ்சு பதறியது. இதையெல்லாம் மீறி ஓவியாவும், பிரசாந்த்தும் நினைவிலேயே நின்றனர். இவர்கள் அவரின் கீழே வேலை பார்ப்பவர்கள் தானே என கலங்கினாள்.
பல நாட்கள் முன்பு மலர் ஹாஸ்ப்பிட்டலில் வெகுநாட்களாகச் செயல்படாமல் இருந்த லிப்ட்டினுள் எலும்புக்கூடு கிடைத்திருக்கிறது என்ற செய்தியில் சர்வாவை கண்டது அரைகுறையாக நினைவில் வந்து அவளைப் பதறச் செய்தது. அப்படியானால் இந்த கேஸை பார்ப்பது சர்வா தானா? அச்சோ! அவனுக்கா இந்த வேலை அமைய வேண்டும்… அதிர்ச்சியிலும் அச்சத்திலும் அவளின் முகம் வெளிறி கண்கள் சிவந்து போயிற்று. கண்ணில் தேங்கி நின்ற நீர் வழிந்தோடத் தொடங்கிற்று.
அவசரமாக சர்வாவை தொடர்புகொள்ள முயன்றாள். அவளுக்கு உடனேயே இதைத் தெரிந்து கொண்டே ஆக வேண்டும். ஆனால், அவனை இவளால் தொடர்பு கொள்ள முடியவில்லை. முக்கிய வேலைகளில் இருந்தவன் தன் கைப்பேசி அழைப்புகளை ஏற்கவில்லை. அது சைலன்ட் மோடில் ஓர் ஓரமாகக் கிடந்தது.
அவன் எடுக்கவில்லை என்றதும் இன்னும் பதற்றம் கூடியது மனையாளுக்கு. இந்த கேஸ் வேண்டாம் சரு என்று மானசீகமாக அவனிடம் கேட்டுக் கொண்டிருந்தாள். அவனால் விடக்கூடிய கேஸா இது?
அவசரமாக தன் கைப்பேசியில் ஓவியா, பிரசாந்த் யாரேனும் நம்பர் இருக்கிறதா என்று ஆராய்ந்தாள். நல்லவேளையாகக் கிடைத்தது. ஓவியா அழைப்பை ஏற்றதும், “அவர் போன் எடுக்கவே மாட்டேங்கறாரு… எதுவும் பிரச்சனை இல்லையே” என்றாள் அச்சமும் பதற்றமுமாய். அவன் முக்கிய வேலைகளின் போது இவ்வாறு தான் செய்வான் என்று அவளுக்குத் தெரிந்திருந்தாலும் அந்த நேரத்தில் அவளால் அப்படி சாதாரணமாகக் கடக்க முடிந்தால் தானே?
“மேம் சார் முக்கியமான கேஸ் விஷயமா இருக்காரு” என்றாள் ஓவியா ஆறுதலாக.
“எந்த… எந்த கேஸ்? அந்த… லி… லிப்ட் கேஸ் தானே?” இன்னும் பதறியது அவளின் குரல்.
“ஆமாம் மேம். நத்திங் டு வொரி… நீங்க ரிலாக்ஸா இருங்க. சார் வந்ததும் உங்ககிட்ட பேச சொல்லறேன்”
ஓவியா சொல்லி முடிக்கவில்லை, “அரெஸ்ட் பண்ணிட்டீங்களா?” என்றாள் மீண்டும் நடுக்கமாக.
“மேம் ரெண்டு பேரை பண்ணியிருக்கோம். ஆனா எந்த பிரச்சனையும் இல்லை மேம்” சௌதா இப்படி அழைத்ததே வித்தியாசமாக இருந்தது என்றால், அவளின் பதட்டமும் பயமும் ஓவியாவுக்கு ஒன்றும் விளங்கவில்லை.
“கண்ணப்பன் மாமாவோட முதலாளி அருண் பாஸ்கரையும் கைது பண்ணி இருக்கீங்களா?” மெலிந்து போன குரலோடு அவள் கேட்க, பெயர் முதற்கொண்டு சரியாகச் சொல்கிறாரே என ஓவியா தான் அதிர்ந்து போனாள்.
“அது… மேம்…” என என்ன பதில் சொல்ல எனப் புரியாமல் ஓவியா தயங்க, “பிளீஸ் ஓவியா சொல்லுங்க…” என்றாள் சௌதா கெஞ்சுதலாக.
“மேம் நீங்கி வொரி செய்யாதீங்க மேம். சார் நல்லா இருக்கார். நீங்க சொன்னவங்களை தான் விசாரணை செய்துட்டு இருக்காங்க” என்று ஓவியா சொன்னதுமே அவளுக்கு கண்கள் இருட்டிக்கொண்டு வரும்போல இருந்தது.
அந்த அருண் பாஸ்கரிடமிருந்து சித்தப்பாவை பொத்தி பொத்தி பாதுகாத்து வந்தாளே… இப்பொழுதானால் கணவன் அவனிடம் மாட்டிக் கொள்வான் போல இருக்கிறேதே… துக்கத்தில் தொண்டை அடைத்துக் கொண்டது.
“மேம்… மேம்…” அவளின் திடீர் மௌனத்தில் ஓவியா சத்தமிட, “ஹான்…” என்றவள், “அவர் வந்தா உடனே வீட்டுக்கு வர சொல்லுங்க…” என்று மட்டும் முயன்று வரவைத்த குரலில் சொன்னவள் அழைப்பைத் துண்டித்திருந்தாள்.
அவளின் மனக்கண்ணில் சித்தப்பாவின் உயிரைக் காக்கப் போராடிய தருணங்கள் வந்து போனது. ஆரம்ப காலகட்டத்தில் இது ஒரு விபத்து என்றுதான் அவளும் நினைத்திருந்தாள் கண்ணப்பன் மாமா காணாமல் போகும் வரை…
அவர் காணவில்லை என்றது மேலும் ஒரு பெரிய இடி. அன்று மருத்துவமனை வந்தார். வெகுநேரம் உதவிக்காகக் கூடவே நின்றிருந்தார். பிறகு விடைபெற்றுச் சென்றார். எல்லாம் எல்லாம் அவளுக்கு நினைவில் இருக்கிறது. பிறகு வீட்டிற்குப் போகாமல் எங்கு போயிருப்பார். விபத்து ஏதும் நடந்திருக்குமா? எங்காவது அவசர வேலையாக வெளியூர் போயிருப்பாரா? எத்தனை எத்தனை தேடல்கள், தவிப்புகள் எதற்கும் பதில் கிடைக்கவில்லை.
தனபாக்கியம் அத்தையைக் காண இவள் சென்றிருந்தாள். அத்தை மனமொடிந்து போய்விடுவார்களே என்ன சொல்லித் தேற்ற முடியும் எனத் தவித்தாள். கற்பகம் மருத்துவமனையில் இருக்க, இவள் மட்டும் சென்றிருந்தபடியால்… தனபாக்கியம் தன் மன கவலைகள் மொத்தத்தையும் அவளிடம் கொட்டினார்.
“அன்னைக்கு அந்த விபத்துலேயே இவர் உயிர் போயிருக்க வேண்டியது தான் சௌதா… இவரும் செல்லத்துரை அண்ணனும் பிழைச்சதே பெரிய விஷயம்! அன்னைக்கே உங்க மாமாவுக்கு அத்தனை கோபம்… இப்படி பாவம் பண்ணறாங்களே! அதுவும் சாமி விஷயத்துல துணிஞ்சு… அழிஞ்சு தான் போவாங்க… அது இதுன்னு என்ன என்னவோ புலம்பிட்டு இருந்தாரு. எனக்கு அப்ப எதுவுமே புரியலை… அவர் திரும்பத் திரும்ப புலம்பின விஷயத்துல இவங்க முதலாளி தான் இவங்களை கொல்ல பார்த்தாருன்னு மட்டும் புரிஞ்சது. நான் என்ன ஏதுன்னு கேட்டா என்கிட்ட சொன்னா தானே! மனுஷன் ஒன்னுமே தெளிவா சொல்லலை சௌதா…”
தனபாக்கியம் சொல்லச் சொல்ல அவளுக்கு எதுவுமே தெளிவாக விளங்கவில்லை.
“ஒருவேளை உங்க மாமாவை அவங்க கடத்தி இருப்பாங்களோ…” என அவர் நடுங்க,
“மாமா வந்திடுவாரு அத்தை…” என்றாள் தவிப்பும், கண்ணீருமாய்!
“சௌதா… எனக்கு பயமா இருக்குடா… இவங்க அவரை எதுவோ பண்ணிட்டாங்கன்னு தோணுது…”
“இல்லை அத்தை பயப்படாதீங்க அப்படி எல்லாம் எதுவும் இருக்காது அத்தை…”
“இல்லை சௌதா இல்லை… அப்படிதான்… இந்த பாவிங்க அவரை என்னவோ பண்ணிட்டாங்க… இல்லாட்டி இத்தனை நாளும் அவர் கிடைக்காம இருப்பாரா? நல்லா கவனி சௌதா மாமாவை காவு கொடுத்தது போதும்! உங்க சித்தப்பா இந்த அளவுல உங்களுக்கு கிடச்சிட்டாரேன்னு ஆறுதல் பட்டுக்க மா. இவருக்கு மட்டும் குணம் ஆனா, கண்டிப்பா கொன்னுடுவாங்க. ஏன்னா அவங்க ரகசியம் எதுவோ இவங்களுக்கு தெரிஞ்சிருக்கு. அதுதான் கொலை வரை போயிருக்காங்க.
படுபாவிங்க அவரை என்ன செஞ்சாங்களோ… என்னாலே கடைசியா அவர் முகத்தைக் கூட பார்க்க முடியலையே… முறைப்படி இறுதி சடங்கு கூட செய்ய முடியலையே. எப்படி துடிச்சு தவிச்சு செத்தாரோ… அவனுங்க எல்லாம் நல்லா இருப்பானுங்களா? தெய்வமே உனக்கு கண் இல்லையா? இன்னும் எத்தனை காலத்துக்கு இல்லாதவங்களை மிதிப்பானுங்களோ” என்று அழுது அரற்றினார்.
ஏற்கனவே குடும்ப பாரத்தை ஏற்றுச் சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தவள், இப்பொழுது தனபாக்கியம் சொன்ன விஷயங்களால் மனதளவில் நொறுங்கிப் போனாள். அந்த வயது பாரம் சுமக்கும், சமாளிக்கும் வயதும் இல்லையே!
ஏதோ சட்டத்திற்குப் புறம்பான விஷயம் அதனால் தான் கொலை வரை போயிருக்கிறார்கள் என்று தெளிவாகத் தெரிந்த பிறகும், அவளால் அவள் சித்தப்பாவை தாண்டி எதையுமே யோசிக்க முடியவில்லை. அதன்பிறகு அவளது களங்களும் போராட்டங்களும் எண்ணில் அடங்காதவை! இன்று வரையிலும்!