Tamil Madhura யாழ் சத்யாவின் 'இரு மலர்கள்' யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 27’

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 27’

அத்தியாயம் – 27

ஒளியேற்றுவானா ஸாம்?

 

அடுத்த நாள் மதிய இடைவேளையின் போது வைத்தியர் விடுதி வரவேற்பறையில் கவிக்காகக் காத்திருந்தான் ஸாம். எதற்காக வரச் சொன்னாள், என்ன விசயமாக இருக்கும் என்று மனதிற்குள் பலத்த யோசனை. இருந்தாலும் எதையும் இது தான் என்று முடிவு பண்ண முடியவில்லை. அவளே வந்து சொல்லட்டும். தன் முடிவை எப்படிச் சொல்வது என்று மனதிற்குள் ஒத்திகை பார்க்க ஆரம்பித்தான். 

 

 

அவனை நீண்ட நேரம் காத்திருக்க வைக்காமல் வந்து அமர்ந்தவள்,

 

 

நேற்று ட்ரிப் எல்லாம் நல்லாப் போச்சுதா…? அருண் நல்லா என்ஜோய் பண்ணினா போல… நைட் அப்பாக்கும் எனக்கும் வாய் ஓயாமல் சொல்லிட்டு இருந்தா…”

 

 

ஓ… நல்லது… மயங்கி விழுந்தது சொன்னாளா…?”

 

 

ஐயோ… இல்லையே ஸாம்… என்ன நடந்தது…?”

 

 

பயப்பிடாதையும் கவி… பெருசா ஒண்ணுமில்லை… கடற்கரைக்கு கிட்ட அவங்களைக் கண்டதும் பழைய ஞாபகம் வந்திருக்கும் போல… அதுதான் அதிர்ச்சில மயங்கிட்டா…”

 

 

இவ்வளவு காலமும் அவள் வீட்ட விட்டு வெளில வெளிக்கிடாததுக்குக் காரணமே இது தான். இப்ப தான் நீங்க கூப்பிட்டதும் துணிஞ்சு வந்தாள். வந்த இடத்திலயும் இப்பிடி ஆச்சு…”

 

 

ஹூம்… அதுதான் நான் ஒரு விசயம் யோசிச்சன் கவி… அவ இங்க இருந்தால் தானே அவங்களை கண்டால் பழசை நினைச்சு கவலைப் படுவாள்… இந்த நாட்டை விட்டே வேற எங்கேயும் போய்ட்டா அந்த சூழ்நிலை மாற்றம் அவளையும் கொஞ்சம் பழைய அருணியா மாத்துமோ என்று தோணுது…”

 

 

நீங்க சொல்லுற சரிதான் ஸாம்… நானும் அப்பாவும் இதைப் பற்றி நிறையத் தரம் கதைச்சிருக்கம்..ஆனால் அவளைத் தனியாக இந்த நிலையில வேற நாட்டுக்கு வெளி ஆட்களை நம்பி அனுப்பப் பயமா இருந்துச்சு… அதுதான் அதைவிட எங்களோடயே இருக்கிற நல்லம் என்று யோசிச்சிட்டு இப்பிடியே விட்டிட்டம்…”

 

 

அதுவும் சரி தான்…”

 

 

சொல்லி விட்டு அவனும் ஏதோ யோசனையில் ஆழ இவளும் எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் மௌனமாய் இருந்தாள். சில நிமிடங்கள் நிசப்தத்தில் கழிய இருவரும் ஒரே நேரத்தில்,

 

 

கவி… நான் அருணியைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளவா?”

 

 

ஸாம்…. நீங்க அருணியைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளுறியளா?”

 

 

இருவர் முகத்திலும் புன்னகை மலர திரும்பவும் ஒரே நேரத்தில்,

 

 

அருணி ஓகே சொல்லுவாளா?” 

 

 

என்றனர்.

 

 

உங்களிட்ட எப்பிடிக் கேக்கிற என்று யோசிச்சிட்டு இருந்தன் ஸாம்… நேற்று நானும் அப்பாவும் இதைப் பற்றிக் கதைச்சம்… நீங்க வந்த பிறகு தான் அருணி வீட்ட விட்டே வெளில வந்திருக்கிறாள்…. கொஞ்சமாவது பழைய கலகலப்பு திரும்பிருக்கு… அவள மாத்திற சக்தி உங்களுக்கு மட்டும் தான் இருக்குது ஸாம்…”

 

 

ஹூம்…. அவள் என்ர சொல்லுக் கேட்டு மாறினாள் சந்தோசம் தான் கவி… நேற்று நான் சும்மா தான் யோசிச்சன் அவளை லண்டன் கூட்டிட்டுப் போய்ட்டால் மாறிடுவாள் என்று…. எந்த விசயமும் தெரியாமலேயே நிரோஜன் சொன்னான் அருணிய கல்யாணம் பண்ணிக்கோடா என்று… எனக்கும் அதே சரியா பட்டுச்சு… உமக்கும் அப்பாக்கும் சம்மதம் என்றாலும் அருணி சம்மதிக்க வேணுமே…”

 

 

அதுதான் எனக்கும் தெரியேல்ல ஸாம்… கேட்டுப் பார்ப்பம்… மாட்டன் என்றால் ஒண்டும் செய்யேலாது… அது சரி யார் இப்ப அவளிட்ட கேக்கிறது…”

 

 

அங்கு ஒரு சிறந்த முடிவு எடுக்கப் பட்டிருந்தாலும் கடைசியில் அதை செயற்படுத்துவது யார் என்பது பூனைக்கு யார் மணி கட்டுவது போல் வந்து நின்றது. பலத்த யோசனையின் பின்னர் ஸாமே மணி கட்டுவதாக ஏக மனதாகத் தீர்மானிக்கப் பட்டது. 

 

 

ஸாம் விடைபெற்றுச் சென்றதும் சந்திரஹாசனிடம் விடயத்தைக் கூறியவள் மாலையில் ஸாம் வீட்டிற்கு வருவதையும் அந்நேரம் அருணியோடு அவன் சுதந்திரமாக பேச இடம் கொடுத்தால் தான் அருண்யா தன் மனதிலுள்ளதை வெளிப் படுத்துவாள் என்பதால் அவர்களுக்கு தனிமை கொடுத்து தந்தையை தாயை அழைத்துக் கொண்டு வெளியே போய்விட்டு வருமாறு பணித்தாள். அவரும் மகிழ்ச்சியாக சம்மதித்தார். ஒரு மகள் வாழ்க்கையாவது வெளிச்சத்திற்கு வருகிறது என்றால் அந்த  பாசமிக்க தந்தையால் மகிழாமல் தான் இருக்க முடியுமா?

 

 

மாலையில் சந்திரஹாசன் வீட்டிற்கு சென்ற ஸாமை அருண்யா தான் வரவேற்றாள். அழைப்புமணி ஒலித்ததும் லென்ஸ்ஸின் வழியாக அது ஸாம் என்று தெரிந்ததும் சந்தோசமாக கதவைத் திறந்தாள். 

 

 

அவளின் அஞ்ஞாதவாச காலத்தில் யாராவது வீட்டுக்கு வந்தால் இவள் அறைக்குள் முடங்கி விடுவாள்.

 

 

வாங்கோ ஸேர்… என்ன சொல்லாமல் கொள்ளாமல் திடீரென்று.. அப்பா அம்மாவைக் கூட்டிக்கொண்டு வெளில போய்ட்டார்… அக்காவும் இன்னும் கொஞ்ச நேரத்தில வந்திடுவாள்… என்ன குடிக்கிறியள்…? ரீயா…? கோப்பியா..? இரவைக்கு சாப்பிட்டிட்டுத் தான் போகோணும்… சரியா…?”

 

 

மகிழ்ச்சியாய் உபசரித்தவளை ஸாமின் குரல் இடை வெட்டியது.

 

 

உம்மோட கொஞ்சம் கதைக்கோணும் அருண்…”

 

 

என்ன ஸேர்… சொல்லுங்கோ…”

 

 

என்னைக் கல்யாணம் பண்ணி லண்டனுக்கு வாறீரா அருண்…?”

 

 

நேராகப் போட்டுடைத்தான் அந்த நல்லவன். இவளோ கொதித்தெழுந்து விட்டாள்.

 

 

உங்களுக்கு என்ன மறை கழண்டிட்டே… யாரைப் பார்த்து என்ன கேள்வி கேட்கிறியள்…? நான் கவிட தங்கச்சி என்டது மறந்து போச்சே… அக்காவ லவ் பண்ணி சரி வரேல்ல என்றவுடன தங்கச்சியக் கேட்கிறியளே… நீங்களும் கடைசில சாதாரண ஆம்பிளைதான் என்று நிரூபிச்சிட்டிங்களே… உங்களில எவ்வளவு மரியாதை வைச்சிருந்தன் தெரியுமா…ச்சீ…”

 

 

கோபமாய் தொடங்கி வெறுப்பாய் முடித்தவளை நேர் பார்வை பார்த்தான்.

 

 

என்ன பொரிஞ்சு முடிஞ்சா…? என்ன ஏது என்று கேட்காமல் எப்ப பார்த்தாலும் சுடு சட்டில போட்ட கடுகு மாதிரி வெடிக்கிறதா…?”

 

 

அவன் சொன்னதைக் கேட்டதும் ஏதோ விசயம் இருப்பதைப் புரிந்து கொண்டு அசடு வழிந்தவாறே மன்னிப்பு கேட்டாள்.

 

 

ஸொரி ஸேர்… ஏதோ டென்சன்ல நீங்க சொன்னதைக் கேட்டதும் கோபத்தில ஏதோ கத்திட்டன். நான் சொன்ன எதையும் மனசில வைச்சுக் கொள்ளாமல் என்ன விசயம் என்று சொல்லுங்கோ… அதுக்கு முதல் ரீ போட்டுக் கொண்டு வாறன்…”

 

 

வீட்டுப் பெண்ணாய் உபசரிக்க மறக்காமல் தேநீரும் வாய்ப்பனும் கொண்டு வந்தாள். வாய்ப்பனை எடுத்து உண்டவாறே அதன் ருசியில் நம்ப மாட்டாதவனாய் அவளைப் பார்த்துக் கேட்டான்.

 

 

உண்மையா நீர் செய்ததா..? எப்ப குசினிப் பக்கம் போகத் தொடங்கினீர்…?”

 

 

அவளும் சிரித்துக்கொண்டே,

 

 

நானே என்ர கையால செய்தது தான்… எல்லாம் கைப் பழக்கம் தான்… சித்திரமே கைப் பழக்கமாம்… சமையல்  எல்லாம் ஒரு வேலையா…? செய்யச் செய்யப் பழகிட்டு… சரி நீங்க இனி என்ன விசயம் என்று சொல்லுங்கோ…”

 

 

மறக்காமல் ஸாம் என்ன எண்ணத்தில் கல்யாணம் பற்றிக் கேட்டான் என்பதைக் கேட்டாள்.

 

 

கவி சொன்னா… உமக்கு வன்னிக்க சண்டைக்க மாட்டினதோட இலங்கைல இருக்க விருப்பம் இல்லையாம் என்று… ஆனால் வெளியாட்கள் யாரையும் நம்பி வெளிநாட்டுக்கு அனுப்ப விரும்பாததில அனுப்பேல என்று…”

 

 

ஹூம்… அது உண்மை தான்…”

 

 

இப்ப ஸ்ரூடன்ற் விசா எல்லாம் லேசாக கிடைக்காது… நீரும் கம்பஸும் முடிக்கேல.. அதுதான் ரெஜிஸ்டர் பண்ணினால் ஸ்பொன்சர் பண்ணுறது சுகம்… விசா பற்றின கவலை இல்லாமல் நீரும் நிம்மதியாக இருக்கலாம்… என்ர வீட்டிலேயே லண்டன்ல இருக்கலாம்… நானும் எவ்வளவு நாளைக்குத் தனியாவே அந்த நாலு சுவரையும் பார்க்கிறது… என்ர டக்ஸ் ஃபேர்ம்லயே பார்ட் டைமா வேலை செய்து கொண்டு மேல படிக்கலாம்… வருசத்துக்கொருக்கால் ஒரு மாதம் லீவில வந்து அக்கா, அப்பாவைப் பார்க்கலாம்…”

 

 

அவன் சொல்லச் சொல்ல விரிந்த காட்சிகள் மனதிற்கு இதமாய் சுதந்திர வானில் அவள் சிறகடித்துப் பறக்க வழி காட்டுவது போலிருந்தது. இருந்தாலும் அந்த கல்யாணம் என்ற வார்த்தை அவள் மனதைப் பிசைந்து ஏதோ பண்ணியது.

 

 

கேட்கவே நல்லாத் தானிருக்கு ஸேர். ஆனால் கல்யாணம் வந்து வெறும் ஸ்பொன்சருக்காக மட்டும் தான்… என்னால உங்களுக்கு மனைவியாக எல்லாம் வாழ முடியாது…”  

 

 

தெளிவாக ஆனால் உறுதியாக தனது முடிவைச் சொன்னாள். 

 

 

ஏன் அருண்… நான் வேற சாதி, மதம் என்றபடியாலா அல்லது அக்காவை லவ் பண்ணினவன் என்ற படியாலா..?

 

 

சாதி, மதத்தை என்னால மாற்ற முடியாது… ஆனால் கவி எப்போது இன்னொருத்தன் பொண்டாட்டியாகினாளோ அப்பவே நான் அவள் மேல இருந்த காதலை தூக்கி எறிஞ்சிட்டேன் என்றது உமக்கே தெரியும்… இப்பகூட யாதவ் காணமல் போன விசயம் தெரிஞ்சதும் அவளைக் கல்யாணம் பண்ணச் சொல்லிக் கேட்டது அவளை நான் முன்பு காதலிச்சதுக்காக இல்லை.. எனக்குத் தெரிஞ்ச பொண்ணு ஒன்று தனிமரமா நிக்குதே என்ற ஆதங்கத்தில தான்…”

 

 

ஏதுமறியாத அப்பாவியாய் அவளையே வினவினான்.

 

 

நோ… நோ… உங்களுக்கு விசரே சேர்… அதெல்லாம் இல்லை… என்னால ஒரு சாதாரண குடும்ப வாழ்க்கையை வாழ முடியாது…”

 

 

அவள் தன் துயரம் எண்ணி வருந்துவது புரிந்தும் சில நேரங்களில் ரணத்தை ஆற்றுவதற்கு மேலும் ரணமாக்கித் தான் மருந்து போட வேண்டும் என்றதை ஞாபகப் படுத்திக்கொண்டு தன் மனதையும் கல்லாக்கிக் கொண்டு திரும்பவும் கேட்டான்.

 

 

அதுதான் ஏன் என்று கேட்கிறன் அருண்…?”

 

 

ப்ளீஸ்… வேணாம்… என்னை விடுங்கோ… இதைச் சொல்லி தான் நான் கல்யாணம் பண்ணி லண்டன் வர வேணும் என்றால் நான் லண்டன் வரேவேயில்ல…”

 

 

கூறிவிட்டு அழத் தொடங்கியவளை கண்கள் கலங்க இவனும் பார்த்தான்.

 

 

அப்ப நான் பிறத்தியா அருண்…? உம்மட ஃபெஸ்ட் ப்ரண்ட் இல்லையா…? எனக்கு சொல்ல மாட்டீரா…?”

 

 

அவன் குரலில் என்ன மாயமிருந்ததோ அவன் மென்மையாக கேட்ட விதத்தில் தன்னை இழந்தவள்,

 

 

நான் இப்ப வேர்ஜின் இல்ல… எட்டுப் பேர் சேர்ந்து காம்ப்க்க இருக்கேக்க ரேப் பண்ணிட்டாங்கள்…”

 

 

அந்த சம்பவம் நினைவுக்கு வந்தவளாய் வெடித்து விம்மி அழத் தொடங்கினாள் அருண்யா. கதறுபவளைத் தேற்றும் வழியறியாது திகைத்து நின்றான் ஸாம். அவள் வேதனையைத் தன் வேதனையாய் உணர்ந்தவன், அவளை ஆறுதல் படுத்த முனைந்தவாறே தானும் சேர்ந்து கண்ணீர் வடித்தான். அப்போது தான் வேலை முடித்து வீட்டுக்குள் வந்த கவின்யா இருவரையும் பார்த்து ஓரளவு விடயத்தை ஊகித்து நிலைமையை தன் கைக்குள் பொறுப்பெடுத்தாள். 

 

 

என்ன ஸாம்… நீங்களே அழுதால் அவளை யார் பார்க்கிறது….? போங்கோ… கெதில கிணத்தடில போய் முகம் கழுவிட்டு வாங்கோ…” அவனை மெதுவாய் கடிந்து கிணற்றடிக்கு எழுப்பி அனுப்பியவள் இப்போது அருண்யா பக்கம் திரும்பினாள்.

 

 

அருண்… எழும்பு… எட்டு வருசமாகுது… இன்னும் எவ்வளவு நாளைக்குத் தான் இப்பிடியே அழுதிட்டு சின்னப்பிள்ளை மாதிரி இருக்கப் போறாய்… போ.. கெதில போய் முகத்தைக் கழுவிட்டு வா… இப்பிடியா நீயும் அழுது வீட்டுக்கு வந்த மனுசனையும் அழ வைப்பாய்…?”

 

 

அருண்யாவை அதட்டி குளியலறைக்கு அனுப்பினாள். வெளியே சென்றிருந்த சந்திரஹாசனும் தெய்வநாயகியும் திரும்பியிருக்க  நான்கு கப்பில் தேநீர் கொண்டு வந்து வைக்கவும் மற்ற இருவரும் வரவும் சரியாக இருந்தது. தாயாருக்கும் பாலைக் கொண்டுவந்து புட்டியில் பருக்கினாள். 

 

 

முகம் கழுவி விட்டு வந்த ஸாம் பெரியவர்களைக் கண்டதும் பணிவாய் வணங்கினான். 

 

 

எப்படி இருக்கீங்க ஆன்ட்டி? திரெப்பி எல்லாம் ஒழுங்காக செய்யுறீங்களா? செய்தால்தான் கெதில எழும்பி நடக்கலாம் என்ன?”

 

 

அவனுக்குத் தான் செய்த அநியாயத்தைப் பற்றி சிறிதும் எண்ணிப் பார்க்காமல் கனிவாய் நலம் விசாரிப்பவனைக் கண்டு தெய்வநாயகியின் உள்ளமோ குற்றவுணர்ச்சியில் கூனிக் கூறுகியது. கண்களில் கண்ணீர் எட்டிப் பார்க்க, பேச முடியாமல் தவித்தார். அவர் குழறலாய் சொன்னவை புரியாமல் ஸாம் விழிக்க, அப்போது அங்கே வந்த அருண்யா தெளிவு படுத்தினாள்.

 

 

உங்களுக்கு செய்த பாவத்துக்குத் தானாம் தன்னை கடவுள் இப்படி செய்திட்டாராம். தன்னை மன்னிச்சுக் கொள்ளட்டாம்.”

 

 

சந்திரஹாஸனோ, கவியோ கூட இதை எதிர்பார்க்கவில்லை. அருண்யா திருமணத்துக்கு சம்மதித்தாலும் தெய்வநாயகி என்ன சொல்லுவாரோ என்று கவலைப் பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு அவர் மன்னிப்பு கேட்டது பலத்த மகிழ்ச்சியை விளைவித்தது. 

 

 

ஐயோ… ஆன்ட்டி…! என்ன பெரிய வார்த்தை எல்லாம் சொல்லிக்கொண்டு… நடந்தவைக்கெல்லாம் யாரும் பொறுப்பில்லை… எல்லாம் விதி… அதை நினைச்சு கவலைப்பட்டும் பிரயோசனமில்லை. இனி நடக்கப் போறதைப் பார்க்க வேண்டியது தான்.” 

 

 

ஸாம் இவ்வாறு கூறியது எல்லோருக்குமே இதமளித்தது.நால்வரும் தேநீரை எடுத்து அருந்தியவாறே சிறிது நேரம் அமைதி காக்கவும், கவி மௌனத்தைக் கலைத்தாள்.

 

 

அருண்… ஸாம் எனக்கும் விசயம் சொன்னவர்… நானும் அப்பாவும் நீ ஸாமைக் கலியாணம் கட்டி லண்டன் போறதைத் தான் விரும்பிறம்… நீ என்ன சொல்லுறாய்…?”

 

 

எனக்கும் லண்டன் போறது விருப்பம் தான்… ஆனால் என்னால ஒரு சராசரி மனைவியாக வாழ முடியாது…”

 

 

அவள் முடிக்க முதலே ஸாம் குறுக்கிட்டான். 

 

 

அதுதான் ஏன் என்று கேட்கிறன்… நான் எனக்கு வேர்ஜின் பொண்ணு தான் வேணுமென்று கேட்டனா? உமக்கு நடந்தது ஒரு அக்சிடென்ற்… ஒரு அக்சிடென்ற்ல கை, கால் போறேல்லையா…? அது மாதிரி தான் இதுவும்…  நான் ஒரு முடவனோ, குருடனோ என்றால் என்னைக் கல்யாணம் பண்ண மறுப்பீரா?

 

 

அந்த விபத்தை கெட்ட கனவாக மறந்திட்டு சாதாரணமாக வாழுற வழியைப் பார்ப்பீரா அல்லது அதையே சொல்லிச் சொல்லி சாகும் வரைக்கும் இப்பிடியே நாலு சுவத்துக்க அடைஞ்சிருக்கப் போறீரா…

 

 

உடலளவில் வேர்ஜின் இல்லை எண்டுற தான் உமக்குப் பிரச்சினை என்றால் நானும் பிரம்மச்சாரி இல்லை… நானும் லண்டன்ல ஒரு வெள்ளைக்காரியோட ஒரு வருசம் லிவிங் டூ கெதரா வாழ்ந்தனான் தான்… அதால நாங்கள் ரெண்டு பேரும் நல்ல பொருத்தம் தான் அருண்….”

 

 

அவள் வாயை அடைக்க, அவளின் இந்த மனநிலையை மாற்றி சாதாரண பெண்ணாகத் திருமணத்திற்கு அவளை ஒப்ப வைப்பதற்க்காத் தன்னைத் தாழ்த்தி எந்த வித தயக்கமுமின்றித் தன்னைக் கலாச்சாரம் பிறழ்ந்தவனாகக் காட்டிக் கொண்டான். 

 

 

அவனின் லிவிங் டு கெதர் வாழ்க்கை முறையைக் கேட்டு அதிர்ந்து போய் ஸாமா இப்படி என்ற பாவனையில் கவியும் சந்திரஹாசனும் அவனைப் பார்க்க, அது அருண்யாவின் மனதை மாற்றுவதற்குச் சொன்ன பொய் என்று அவனைப் பார்த்தவர்களுக்கு புரிந்தது.

 

 

எல்லாம் மனசு தானே அருண்… உம்மளில எந்த பிழையும் இல்லாமல் இருக்கேக்க நீர் ஏன் இந்த சமூகத்தைப் பார்த்து பயப்பிடுறீர்…? நாங்க முதல்ல இப்ப மாதிரியே நல்ல ப்ரண்ட்ஸ் ஆகப் பழகுவம்… காலம் செல்லச் செல்ல எல்லாம் சரியாகும் அருண்… முதல் நீர் பொஸிட்டிவ்வாகத் திங்க் பண்ண வேணும்… எடுத்த எடுப்பிலேயே நீர் இப்பிடி நெகெட்டிவ்வா நிப்பீர் என்றால் உம்மட வாழ்க்கைய இப்பிடியே சாகும் வரைக்கும் நரகமாகவே அனுபவிச்சிட்டுப் போம்…

 

 

இப்போ எங்களுக்குள் இருக்கிற இந்த அன்பு காதலாக மாற நாங்கள் தான் முயற்சி எடுக்க வேணும் அருண்…”

 

 

ஸாம் சொல்லுறது சரி தானே அருண்… லண்டன் போனால் இட மாற்றம்… வெள்ளைக்காரங்கள்.. வேற கலாச்சாரம்… நீயும் படிப்பு, வேலை என்று போக உனக்கும் மனசுக்கு நிம்மதியாக இருக்கும் அம்மா… இங்க இருக்கத் தானே வெளில போனாலே யூனிபோர்ம் போட்ட எவனயாவது கண்டாலும் உன்னைச் சீரழிச்சது அவனாக இருக்குமோ என்று பயந்து சாகிறாய்… கண்ணம்மா… கடவுள் வாய்ப்பை நம்மைத் தேடித்தரும் போது நாங்க தான் சரியாக யூஸ் பண்ணிக் கொள்ள வேணும்… நீ இன்னமும் சின்னப் பிள்ளை இல்லைம்மா… நீ தான் வடிவா யோசித்து முடிவெடுக்க வேணும்…

 

 

உன்னை நித்தமும் பார்த்து அக்கா வேற தன்னால தானே உன்ர வாழ்க்கை இப்பிடி ஆச்சு என்று குற்ற உணர்வில தவிக்கிறாள்

 

 

நான் சொல்ல வேண்டியதைச் சொல்லிட்டன் அருண்… இனி முடிவு உன்ர கையில…”

 

 

தெய்வநாயகியும் தலையை அசைத்து குழறலாய் கணவன் சொல்வதை ஆமோதித்தார். 

 

 

கண்கள் கலங்க தந்தை கூறியதைக் கேட்டு விட்டத்தை வெறித்தவாறு ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபட்டாள் அருண்யா. அவளை அப்படியே தனிமையில் விட்டு விட்டு கவி குளித்து உடை மாற்றி இரவுச் சமையலைக் கவனிக்க சமையலறைக்கு சென்றாள். தெய்வநாயகியை அவரது அறையில் படுக்க வைத்து விட்டு, ஸாமும் சந்திரஹாசனும் தோட்டத்திற்கு சென்று நாட்டு நடப்பு அலசி ஆராய்ந்தவாறே செடிகளுக்குத் தண்ணீர் விட ஆரம்பித்தார்கள்.

 

 

அருண்யாவின் முடிவு என்ன

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 2’யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 2’

அத்தியாயம் – 02 யாரோ அவர்கள்? மதியம் பாடசாலை முடிந்ததும் வாயிலில் காத்து நின்ற அருண்யாவையும் ஏற்றிக் கொண்டு வீடு நோக்கி துவிச்சக்கர வண்டியை மிதித்தாள் கவின்யா.  “அக்கா! இன்றைக்கு புதன்கிழமை என்ன? அச்சச்சோ… மறந்தே போனனே… கெதியா வீட்ட போக்கா…

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 14’யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 14’

அத்தியாயம் – 14 யாதவின் காதல் கைகூடுமா? பெற்றோர் என்ன பதிலோடு வரப் போகிறார்களோ தெரியவில்லை என்று மிகுந்த பதட்டத்தில் இருந்தான் யாதவ். ஒவ்வொரு நிமிடங்களும் ஒவ்வொரு யுகங்களாய் எப்போது கவியை திரும்ப காண்பேன் என்று தவித்தான். மனமெங்கும் காதல் பட்டாம்

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 29’யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 29’

அத்தியாயம் – 29 ஸாம்அபிஷேக் – அருண்யா    அதிகாலை ஐந்து மணிக்கே அந்த நட்சத்திர விடுதியை அடைந்து விட்டார்கள். காரிலேயே இருவரும் நன்கு தூங்கியிருக்க மலையகத்தின் கூதல் காற்று சிறு குளிரோடு உடம்பை ஊடுருவிச் செல்ல காரை விட்டு இறங்கி