எனக்கொரு வரம் கொடு – 21
சில கேஸ்கள் இதுபோல வரும். சரியாக உறங்க முடியாது. சரியான பாதை கிடைக்காது. தொடங்கிய இடத்திலேயே நிற்கிறோம் என்கிற அலுப்பைத் தரும். அதுமாதிரியான கேஸாகத்தான் சர்வேஸ்வரனுக்கு இது அமைந்து விட்டது.
இது அவனது திறமைக்கு சவாலான கேஸ்! அடுத்து என்ன செய்வது, எந்த வகையில் முன்னேறுவது என எந்தவொரு துப்பும் கிடைக்காமல் ஒவ்வொரு நாளும் தலையை பிய்த்துக் கொள்ளும்படியாக இருக்கும். இருந்தும் எங்காவது தேடுவான். எந்த வகையிலாவது முன்னேற நினைப்பான். பலன் பூஜ்ஜியமாக இருந்தபோதும் அவன் தன தேடலை மட்டும் இன்றளவும் நிறுத்தியதில்லை!
ஏதோ ஒரு தொன்மையான சிலை பாரம்பரியம் மிக்க சிலை காணாமல் போய்விட்டது என்பது மட்டுமல்ல குற்றச்சாட்டு! இதன் மதிப்பே வேறு வகை! அந்த சிலையும் சாதாரணமானது அல்ல. அதாவது கல்லை குடைந்து சிற்பம் அமைத்து என்ற வகையறாவில் இல்லை.
அது பச்சை மரகதத்தால் ஆன சிவலிங்கம். கையடக்க அளவில் இருந்தாலும் அதன் மதிப்பு சர்வதேச சந்தையில் ஐநூறு கோடி பெரும்.
மரகதத்தால் செய்யப்பட்ட லிங்க சிலைகள் சோழர் ஆட்சிக் காலத்திலிருந்தே ஒருசில தொன்மையான கோயில்களில் மட்டுமே இருந்துள்ளன. இந்த மரகத லிங்கம் திருக்குவளை தியாகராஜ கோயில் தருமபுரம் ஆதினத்திற்குச் சொந்தமானது.
நாகப்பட்டின மாவட்டம் திருக்குவளையிலுள்ள தியாகராஜர் கோயிலில் இருந்த இந்த தொன்மையான பச்சை மரகத லிங்கம் கடந்த 2016-ஆம் ஆண்டு திருடு போனது. பெட்டகத்தில் பாதுகாப்பாக வைத்திருந்த மரகதலிங்கம் காணவில்லை என தருமபுர ஆதீனத்தின் நிர்வாகி சௌரிராஜன் என்பவர் திருக்குவளை காவல் நிலையத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு புகார் அளிக்கப்பட்டதன் பேரில், வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருந்தது.
மரகத லிங்கத்தை சிலைகடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கிட்டத்தட்ட ஐந்தாறு வருடங்களாகத் தேடி வருகின்றனர். அவர்களால் இதுவரையிலும் அதைக்குறித்து எதையுமே கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு சிறு துப்பும் கிடைக்காமல் வெகுவாக போராடி களைத்துப் போயிருக்கின்றனர். அனுதினமும் தோல்வியைச் சந்திப்பது எந்தமாதிரியான மனவுளைச்சலை தரும்! அவர்கள் நிலையும் அதுவே! அனுதினமும் தேடி சலிக்கின்றனர். சுற்றாத இடம் இல்லை. விசாரிக்காத ஆட்கள் இல்லை என்னுமளவு இந்த ஆறு ஆண்டுகளும் படாத பாடு படுகின்றனர்.
இந்த சமயத்தில் தான் அசோக் நகரிலுள்ள சிலைகடத்தல் தடுப்பு பிரிவு அலுவலக டி.ஐ.ஜி., செண்பகராஜன், இந்த கேஸ் குறித்த விசாரணை தொடர்பாகத் திருக்குவளை வந்திருக்க, அவருக்குத் தஞ்சாவூர் டி.ஐ.ஜி., ஜெயந்த் முரளி உதவி செய்திருந்தார். இருவரும் ஏற்கனவே நல்ல நண்பர்கள் என்பதோடு, ஜெயந்த் முரளி வேண்டிய உதவிகள் அனைத்தையும் நல்ல முறையில் செய்து தந்திருந்த படியாலும், செண்பகராஜன் தன் கேஸின் சிக்கல்கள் குறித்துக் குறிப்பிட்டிருந்தார்.
ஏற்கனவே ஆதீனத்திற்குச் சொந்தமான சிலை காணாமல் போயிருந்தது ஜெயந்த் முரளிக்கும் தெரியும் என்றாலும், ஐந்து ஆண்டுகளாகியும் அந்த சிலையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதே பெரும் உளைச்சலைக் கொடுத்தது. நம் நாட்டின் பொக்கிஷம் அதை தொலைத்துவிட்டு நிற்பதா என்று கையறு நிலை ஒருபுறம், யார் இதை செய்தார்கள் என்று கூடவா கண்டுபிடிக்க முடியவில்லை என்ற இயலாமை மறுபுறம் என அவரையும் அலைக்கழிக்கத் தான் செய்தது.
அப்பொழுது ஜெயந்த் முரளி தானாக முன்வந்து தான் சர்வேஸ்வரனைப் பற்றி குறிப்பிட்டு, அவனையும் பார்க்க சொல்லட்டுமா? மிகவும் திறமையானவன், நம்பிக்கையானவன் என்றெல்லாம் எடுத்து சொல்ல… இதுவரையிலும் இப்படி வேறு துறையினரிடம் ஒப்படைத்ததில்லை என்பதால் செண்பகராஜன் வெகுவாக தயக்கம் காட்டினார்.
அதற்காக குற்றப்பிரிவு ஆட்களிடம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஆட்கள் உதவி கேட்டதில்லை என்பதில்லை. ஏன் ஒவ்வொரு ஊராக அலையும் போதும், இங்கு இந்த மாதிரியான குற்றப் பின்னணி கொண்டவர்களின் விவரங்கள் வேண்டும் என்று வாங்குவதே குற்றப்பிரிவு ஆட்களிடம் தான்! இப்பொழுது அதுபோல இல்லையே! தாங்கள் செய்யும் மொத்த வேலையையும் இன்னொருவரிடம் ஒப்படைக்க வேண்டும் அது தொழில் முறையில் சாத்தியம் தான் என்றபோதும் அவ்வளவு எளிதாக அதற்கு மனம் வரவில்லை. ஒரு வகையில் குழந்தையைத் தத்து கொடுப்பது போலான போராட்டம்.
அவரின் தயக்கம் புரிந்து, “இதில் எந்த தப்பும் இல்லை. கிரைம் பிரேன்ச்சில் இருக்கும் எங்களால் முடியாத கேஸ்களை சிபிசிஐடிகிட்ட ஒப்படைக்கிறது இல்லையா? கேஸில் முன்னேற்றம் காட்டணும். அதேசமயம் குற்றவாளிகள் தண்டிக்கப்படணும். அது தானே நமக்கு முக்கியம். உனக்கு இதுக்கு பர்மிஷன் இருந்தா கன்சிடர் பண்ணி பாரு… நீங்க இந்த கேஸ்ல இருந்து விலகணும்ன்னு எந்த அவசியமும் இல்லை. என்ன உங்களை மாதிரியே சர்வாவும் இதை பார்க்கட்டும். அவனுக்கு தகவல்கள் தந்துட்டா போதும். பக்காவா முடிச்சிடுவான்” என்று ஜெயந்த் முரளி எடுத்துக் கூறினார்.
“எனக்கு இதுக்கான அத்தாரிட்டி இருக்கு. ஆனா அதே சமயம் இது எப்படி ஒத்துவரும்ன்னு யோசனையாவும் இருக்கு…” என சொன்ன செண்பகராஜனின் முகம் தெளிவற்று இருந்தது.
“சரி உனக்கு விருப்பம் இல்லைன்னா வேணாம். எனக்கு தோணினதை நான் சொன்னேன்” என அப்பொழுதே அந்த பேச்சு முடிந்தும் விட்டிருந்தது.
ஆனால், செண்பகராஜன் இதுகுறித்து வெகுவாக ஆலோசித்தார். ஏனென்றால் ஜெயந்த் முரளி இத்தனை தூரம் சொல்லும்போது ஏன் முயன்று பார்க்கக் கூடாது என்று தோன்ற தொடங்கியிருந்தது. சர்வாவை பற்றித் தெரிந்து கொண்டார். அவனுடைய ரெக்கார்டஸ் எலலாவற்றையும் அலசினார். அவருக்கு வெகு திருப்தியாக இருக்கவே, சரி அவன் ஒருபுறம் பார்க்கட்டும்; ஏதாவது சிறு தகவல் கிடைத்தால் கூட நல்லது தானே என அவர் எண்ணினார். ஏனெனில் ஆறு வருடங்களாக ஒரு துருப்பு சீட்டு கூட கிடைக்காத கேஸை சர்வா முடிப்பான் என்றெல்லாம் அவருக்கு நம்பிக்கை இல்லை. அவரை பொறுத்தவரை அவனிடம் ஒப்படைப்பதும் தன்னாலான ஒரு முயற்சி அவ்வளவே!
ஆனால், அவன் அருகில் நெருங்கியிருப்பான். அவனுக்கு ஓர் அனுமானம் இருக்கும். அது மிகச் சரியானதாக இருக்கும் என்றெல்லாம் அவருக்கு அப்பொழுது தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான்! ஏன் சர்வேஸ்வரனுக்கே இன்னும் தன் அனுமானம் சரியென்ற நம்பிக்கை, ஆதாரம் எதுவும் கிடைத்திருக்கவில்லையே! விரக்தியில் எரிச்சலிலும் தானே சுற்றித் திரிகிறான்.
நினைத்துப்பாருங்கள் அவனை அனுதினமும் படுத்தும் ஒரு வழக்கில், அவனுக்கு அவன் நினைத்த விதத்தில் ஒரு துருப்புச்சீட்டு கிடைத்தால், அதைக்கொண்டு அவன் அந்த வழக்கில் முன்னேற முடியும் என வந்தால், யாராலும் அவனைத் தடுக்க முடியுமா? யார் தடுத்தாலும் தான் அவன் செவி சாய்ப்பானா? அவன் ஒவ்வொரு நாளும் போராடிய போராட்டம் அதற்கு விடுமா?
செண்பகராஜன் வேண்டுமானால் யாரிடமும் கலந்தாலோசிக்க அவசியமில்லாமல், சர்வேஸ்வரனிடம் கேஸை ஒப்படைக்கக் கூறியிருக்கலாம். ஆனால், ஜெயந்த் முரளி ஐ.ஜியிடம் கேட்க வேண்டியதிருந்தது. அவர் சிலபல நிபந்தனைகளுடன் தான் சர்வா இந்த கேஸை எடுக்கவே ஒத்துக் கொண்டார். இப்பொழுது பல மாதங்களாக சர்வா இதிலேயே மூழ்கியிருக்க, அதிலேயே அவருக்குப் பலத்த அதிருப்தி! அதோடு இது இன்னொரு பிரிவின் வேலை, இதில் போய் தாங்கள் தலையிட்டு தங்கள் வேலையையும் கெடுத்து எதற்கு? என்று அவருக்கு கோபம். அதன்பொருட்டே அவர் டி.ஐ.ஜி ஜெயந்த் முரளியை விரைவாக முடித்துக் கொடுக்கும்படி துரிதப்படுத்த, அவர் சர்வாவை விரட்டிக் கொண்டிருக்கிறார்.
சர்வா எந்த வகையிலும் முன்னேற முடியாத எரிச்சலில் இருக்க, நல்லவேளையாக அவனுக்கு அடுத்து முன்னேற ஏதுவாக சில தகவல்கள் கிடைத்தது. அது அவன் தேவையில்லாமல் ஆஜர் ஆன லிப்ட் கேஸின் மூலம் தான்!
ஓவியா அந்த எலும்புக்கூடு யாருடையது என்பதை ஆதாரப்பூர்வமாகக் கண்டுபிடித்திருக்க, பிரசாந்த்தும் அவனுடைய பாணியில் அந்த பழைய வாட்ச்மேன் மோகனை விசாரித்து… தேவையான விவரங்களைக் கறந்து விட்டிருந்தான்.
சில மணி நேரங்களில் அந்த அலுவலகம் மிகுந்த பரபரப்பானது. “வெல் டன் கைஸ்…” என இருவரையுமே வெகுவாக பாராட்டிய சர்வா சற்று நெகிழ்ந்து போய் இருந்ததை அவர்களால் கண்டுகொள்ள முடிந்தது. என்ன அதற்கான காரணம் தான் புரியவில்லை.
அருண் பாஸ்கருக்கு எதிராகச் சிறு ஆதாரம் கிடைக்காதா? அவனை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடியாதா? என ஒவ்வொரு நாளும் போராடிக் களைத்தவனுக்கு இந்த தகவல்கள் எத்தனை வரப்பிரசாதம் என அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை தான்!
ஓவியா, பிராசாந்த் இருவருக்கும் மீண்டும் வேலையைத் தந்தான். முறைப்படி கண்டுபிடித்த எலும்புக்கூடு யாருடையதோ, இப்பொழுது அவர்களின் குடும்பத்தினருக்குத் தான் தகவல் தந்திருக்க வேண்டும். ஆனால், அதை சற்று நிறுத்தி வையுங்கள் என்றான். குறிப்பாக பிரஸ் மீட் இப்பொழுது வேண்டாம் என்று உறுதியாகச் சொல்லிவிட்டான். ஆர்வக்கோளாரில் விஷயத்தைக் கசிய விட்டு விடுவார்களோ என்பது அவனுக்கு! அருண் பாஸ்கர் துளியும் சுதாரித்து விடக்கூடாது என்பதில் அத்தனை கவனமாக இருந்தான்.
வழக்கம்போல ஓவியாவுக்கும், பிரசாந்த்திற்கும் தலையும் புரியவில்லை. வாலும் புரியவில்லை!
கண்ணப்பனின் தகவல்கள் அடங்கிய கோப்பையோடு அங்கிருந்து ஓவியா நகர, வாட்ச்மேன் மோகன் தந்த தகவல்கள் குறித்தான கோப்பையோடு பிரசாந்த் அகன்றான்.
ஆம்! அந்த எலும்புக்கூடு செல்லத்துரையோடு சேர்ந்து பணியாற்றிய அவரின் நண்பன் கண்ணப்பன் என்பது உறுதியாகியிருந்தது.
மலர் ஹாஸ்ப்பிட்டல் என்றதும், மின்வெட்டாய் சர்வாவிற்கு தன் மாமா செல்லத்துரை அந்த மருத்துவமனையில் தான், தலையில் ஏற்பட்ட பலத்த காயத்திற்குச் சிகிச்சை எடுத்துக்கொள்ள வந்திருந்தார் என்பது நினைவில் வர, அவனுக்கு ஏற்கனவே கான்ஸ்டபிள் ஞானசேகர் மூலம் கிடைத்த தகவல் மூலம் அருண் பாஸ்கர் ஏதோ ஒரு சிலை கடத்தல் கேஸில் மாட்டி, பிறகு பணம் விளையாடியதன் பயனாய் அந்த கேஸிலிருந்து தடயமே இல்லாமல் விலகியிருந்தான் என்பதும் தெரிந்திருக்க… அதற்கெல்லாம் முத்தாய்ப்பாய் செல்லத்துரை மாமா அருண் பாஸ்கரின் இரும்பு பேக்டரியில் வேலை செய்தவர் என்பதும் சேர… அவனுக்குச் சம்பந்தமே இல்லாத போதும் அந்த மலர் ஹாஸ்பிட்டல் கேஸில் தன்னை இணைத்துக் கொண்டான்.
எந்த தகவல்களையுமே இணைக்க முடியாது. ஏனென்றால், எதற்குமே அவனிடம் ஆதாரம் இல்லை. எல்லாம் செவி வழி வந்த செய்திகளும், அவனின் அனுமானங்களும் மாத்திரமே! ஏன் இதையெல்லாம் இணைத்துப் பார்த்தான் என்றும் அவனுக்கும் தெரியாது.
மலர் ஹாஸ்ப்பிட்டல் கேஸ் எடுத்ததில் கிடைத்த சில சாதகமான விஷயங்கள் அவன் சந்தேகத்தை நிவர்த்தி செய்ய ஓரளவு ஏதுவாக கிடைத்தது தான்! அது பிறரிடம் ஆதாரமாகப் பகிருமளவு பெரியளவு இல்லை என்றாலும், அவன் எண்ணிச் செயலாற்றுவது தவறில்லை என்று உறுதி கூறியது. ஆம், தவறில்லை என்று மட்டுமே! உனது எண்ணங்கள் எல்லாம் சரியென்ற நம்பிக்கையையும் அது விதைத்திருக்கவில்லை.
அந்த எலும்புக்கூடு மனிதன் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இறந்திருக்கலாம் என்பது அதில் ஒரு விஷயம்! அந்த விஷயம், எத்தனை ஆண்டுகளாக லிப்ட் செயலிழந்து இருந்தது என்பதன் மூலமும், எலும்புக்கூட்டின் மருத்துவ ஆராய்ச்சி அறிக்கை மூலமும் உறுதி செய்யப்பட்டிருந்தது.
இந்த தகவல் கிடைத்தபோது அப்படியொரு ஆசுவாசம் அவனுள். ஏனென்றால், அவனின் மாமா செல்லத்துரையும் அதே மருத்துவமனையில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக தான் அட்மிட் ஆகியிருந்தார். ஆக அவன் கணக்கு ஏதோ ஒரு வகையில் நேராகத்தான் பயணிக்கிறது என எண்ணினான்.
மற்றொரு விஷயம் கூட ஒத்துப்போனது அவனே எதிர்பார்க்காதது. அது அந்த எலும்புக்கூடு மனிதனின் வயது… அவர் இறந்தபோது நாற்பத்தைந்து இருந்திருக்கலாம் என்பது தகவல். கணக்குப்படி பார்த்தால் இப்பொழுது நாற்பத்தி ஒன்பது… அது செல்லத்துரை மாமாவின் வயதோடு ஒத்துப் போனது. இது பெரிய விஷயம் இல்லை தான் என்றாலும் அவனுக்கு வெகுவாக உறுத்தியது.
உடனேயே மாமாவின் பேக்டரியில் வேலை செய்த யாரும் கடந்த நான்கு ஆண்டுகளாகக் காணாமல் போயிருக்கிறார்களா என்று தனியாக விசாரித்துத் தெரிந்து கொண்டான். கண்ணப்பனின் விவரங்கள் கிடைத்திருந்தது. கிளை தகவல்களாக, அவர் செல்லத்துரை மாமாவின் நெருங்கிய நண்பர் என்பதும்… மாமாவிற்கு நடந்த பெரும் விபத்தின் போது இருவரும் ஒன்றாகத்தான் இருந்தார்கள் என்பதும்! அன்று அந்த விபத்தில் இருவரும் பிழைத்ததே பெரிய விஷயம் என்ற தகவல் உட்பட கிடைத்திருந்தது.
அப்பொழுதே அவனுக்கு உறுத்திய விஷயம், அன்று கண்ணப்பனைக் கொல்ல முடியவில்லை என்பதால், மீண்டும் திட்டம் தீட்டிக் கொன்று விட்டார்களா என்பது தான்! வழக்கம்போல இதுவும் அவனின் அனுமானம் மட்டுமே! ஆதாரமற்ற அனுமானம்!
ஏன் இதையெல்லாம் இணைக்கிறான் என்றால், இதற்கெல்லாம் மூல காரணம் சௌதாவின் ஆரம்பத்திய நடவடிக்கை மட்டுமே! என்னதான் கான்ஸ்டபிள் ஞானசேகர் மூலம் அருண் பாஸ்கர் குறித்து தகவலொன்று கிடைத்திருந்த போதிலும்… அருண் பாஸ்கர் குறித்து மாமாவிற்கு எதுவோ தெரிந்திருக்கிறது என்று அனுமானிக்க வைத்தது நிச்சயம் சௌதாமினியே!
மாமாவிற்குத் தலையில் அடிபட்டு உயிர் பிழைத்ததே பெரும் விஷயம் என்று மருத்துவர்கள் சொன்னபோது மொத்த குடும்பமும் ஆடிப்போனது தான்! அவர் உயிர் பிழைத்ததே பெரிய விஷயம் என்று மனதைத் தேற்றி கொண்டவர்களுக்கு, இடியாய் இறங்கிய செய்தி தான் அவரின் மனநலம் பாதிக்கப்பட்ட நிலை!
அனுதினமும் அந்த குடும்பத்தினர் மருத்துவமனையில் பட்டபாடு சொல்லில் அடங்காதது. அவனும் காவல் துறையில் சேர்ந்த புதிது என்பதால், முழுவதாக அவர்களுடனேயே அவனாலும் இருக்க முடியாமல் போயிற்று! அவனது பணி வேறு தென்காசி பக்கத்தில் இருக்க, மாமா அடிபட்ட விவரம் கேள்விப்பட்டு அவன் வந்து சேரவே நாட்கள் பிடித்தது. ஆனால், விஷயம் கேள்விப்பட்டதும், தன் அன்னையையும் நண்பர்களையும் உடனேயே உதவிக்கு அனுப்பி விட்டிருந்தான்.
ஆனால், அப்பொழுதே சர்வா உடன் இருந்திருந்தால், கண்ணப்பன் காணாமல் போன விவரங்களும் அவனுக்குத் தெரிய வந்திருக்கும். ஏனெனில் கண்ணப்பன் செல்லத்துரையை மருத்துவமனையில் பார்த்து விட்டு வருவதாகத்தான் கடைசியாகச் சொல்லிவிட்டு வீட்டிலிருந்து புறப்பட்டது. இங்கு சௌதாமினி குடும்பத்தினரும் அவர் வந்ததை உறுதிப் படுத்தினார்கள். ஆனால், அதன்பிறகு என்ன ஆனது? அவர் எங்குச் சென்றார்? என்று யாருக்கும் தெரியவில்லை.
இந்த விவரங்கள் எல்லாம் எலும்புக்கூட்டின் வயது தெரிந்தபிறகு சர்வா விசாரித்துத் தெரிந்து கொண்டது.
மாமாவின் நிலை அப்படி ஆன பிறகு, அந்த வீட்டின் தலை மகளாய் முழு பொறுப்பும் சௌதாமினியை வந்தடைய, சர்வாவின் உதவியை அவள் ஏற்கவே இல்லை. அவளே பார்த்துக் கொள்வதாகக் கூறி ஒதுங்கி விட்டாள். மனம் வலித்தாலும், அவளின் தன்மானம் மதிக்கத்தக்கது தானே! ஏன் தந்தையை இழந்த இவன் யாரிடம் கையேந்தி நின்றான். இவன் செய்த செயலை தானே இப்பொழுது அவள் செய்ய நினைக்கிறாள் என்று அவனுக்கும் பெருமிதம் தான்!
“மாமா வேலை செஞ்ச இடத்துல நஷ்ட ஈடு கிடைக்கும் சௌதி. அவர் வேலையில இருந்தப்ப தானே அடி பட்டுச்சு. அதோட அவரோட நிலையை எடுத்து சொன்னா உனக்கு உன் கல்வி, தகுதிக்குத் தகுந்த மாதிரி அவங்களே வேலை ஏற்பாடு செஞ்சு தருவாங்க…” என்று அவன் எடுத்துச் சொன்னபோது, மிரட்சியுடன் அவள் நிர்தாட்சண்யமாய் மறுத்த விதத்தில் அவனுள் இருந்த காவலன் விழித்துக் கொண்டான்.
‘இதில் மிரண்டு விழிக்க என்ன இருக்கிறது?’ அப்பொழுதே அவனுக்கு என்னவோ உறுத்தியது. அதற்குத்தக்க போலீஸ், விசாரணை என வந்தபோதும் அவள் சரியாக ஒத்துழைக்கவில்லை என்று தெரியவந்தது. “ஏதோ கெட்ட நேரம் எங்க சித்தப்பாவுக்கு இப்படி ஆயிடுச்சு. பிளீஸ் இதோட விட்டுடுங்க. இதை மேற்கொண்டு வளர்க்க எங்களுக்குத் துளியும் விருப்பம் இல்லை. இது ஒரு விபத்து தானே அதைக் கிளறி என்ன செய்ய போறீங்க” என சௌதா ஏன் சொன்னாள் எனப் புரியவில்லை என அம்மா புலம்பியது அவனை வெகுவாக யோசிக்க வைத்தது.
இந்த சந்தேக விதைகள் உறுத்திக் கொண்டே இருக்க, உடனேயே செல்லத்துரை மாமாவின் முதலாளி குறித்துத் தெரிந்து கொண்டான். அருண் பாஸ்கர் இரும்பு பேக்டரி வைத்திருந்தான். ஏற்றுமதி செய்து பணம் சம்பாதித்து வருகிறான் என்ற தகவல்கள் கிடைத்தாலும், அவனுடைய செல்வ செழிப்பைப் பார்த்து இவ்வளவா என அவனுக்கு இருந்தது. அப்பொழுது உறுத்தினாலும் பெரிதாக அவன் எதுவும் நினைக்கவில்லை. ஏதோ பெரிய இடத்தில் பிரச்சினை வேண்டாம் என சௌதா ஒதுங்க நினைக்கிறாள் போல என்று மட்டும் தான் அவனின் எண்ணம். ஆக அப்படியே அதை ஆராயாமல் விட்டு விட்டான்.
பின்பு காஸ்டபிள் ஞானசேகர் இவனின் உதவியை நாடி வந்ததும், அப்பொழுது பொதுவாகச் சமீபத்தில் ஸ்டேஷனில் நடந்த மோசடியை அவர் குறிப்பிட்டுக் கூறி, பணத்துக்காக எதுவும் செய்யக்கூடிய ஆட்கள் என இன்ஸ்பெக்டர் குறித்துச் சொல்ல… அப்படி வெளிவந்தது தான் அருண் பாஸ்கர் விஷயம்.
சரியாக அந்த நேரத்தில் மரகத லிங்க சிலை காணாமல் போன கேஸ் இவனிற்கு வர, இவன் ஏன் அருண் பாஸ்கரை கண்காணிப்போமா என நினைத்தானோ தெரியவில்லை… ஆனால், அப்படித் தொடங்கியது தான் இந்த கேஸ்.
அருண் பாஸ்கர் செய்யும் தொழிலுக்கும் அவனது வசதி வாய்ப்புக்கும் இருக்கும் முரண்பாடு, ஒரு சிலை கடத்தல் கேஸில் இணைந்த வேகத்தில் கழண்டு கொண்ட அவனின் பாங்கு, சௌதா செல்லத்துரையின் முதலாளி என்றாலே அரண்டு போனது… இது எல்லாம் எல்லாம் அவனைக் குழப்பி அடிக்க, தன் அனுமானத்தோடு களத்தில் இறங்கி விட்டான்.
அதில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் தடுமாறிய சமயத்தில் தான் மாமா அட்மிட் ஆகியிருந்த மலர் ஹாஸ்ப்பிட்டல் லிப்டில் ஒரு எலும்புக்கூடு கிடைத்திருக்க, அந்த களத்திலும் தன்னை இணைத்து… இதோ தன் முதல் படியை வெற்றிகரமாக எடுத்து வைக்கிறான் சர்வேஸ்வரன்.
— தொடரும்…
WRITER NOTE :
இந்த பகுதியில் சர்வா ஏன் சந்தேகப்பட்டான் என்பதையும், அவனது அனுமானங்கள், சந்தேகங்கள் ஏன் உருவானது என்பது குறித்தும் என்னால் முடிந்தளவு விளக்கங்கள் சொல்லியிருக்கிறேன். சர்வா புறமிருந்து வேறு ஏதேனும் கேள்விக்கு விடை விட்டு போயிருக்கிறதா என்று தெரிவியுங்கள்.
சௌதா பகுதி விளக்கங்கள் அவள் ஏன் பயந்தாள், மிரண்டாள் என்பதையும் ஓரளவு வாசகர்களால் அனுமானிக்க முடியும் என்றாலும், அதன் மூல காரணம் அடுத்த அத்தியாயத்தில் கண்டிப்பாக வந்துவிடும்.
இந்த கதையின் இரண்டாம் பகுதி தொடங்கியதிலிருந்தே சிறு சிறு தகவல்கள் தந்து ஒவ்வொரு முடிச்சாய் அவிழ்க்க தொடங்கி விட்டேன். அப்பொழுதே உங்களில் பலரும் கதையின் போக்கை அனுமானித்திருக்கலாம். ஏதேனும் விட்டு போயிருந்தால் மறக்காமல் சொல்லுங்கள். தொடர்ந்து என்னோடு பயணிப்பவர்களுக்கு நேசங்களும், நன்றிகளும்…