Tamil Madhura செம்பருத்தி தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 14

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 14

அத்தியாயம் – 14

 

அடுத்த சில வாரங்கள்  எப்படி ஓடியது என்றே செம்பருத்திக்குத் தெரியவில்லை. காலை எழுந்து ரெடியாகி காளியம்மாவின் பழைய சோறு நீராகாரத்திற்குப் போட்டியாக அவளும் சென்று நிற்பாள். அபிராமின் கடிதங்களைப் பிரித்துப் படித்து அவன் சொல்லும் பதிலைக் கேட்டுக் கொண்டு அதற்குத் தக்கன பதில் கடிதம் எழுதுவாள். சிலவற்றிற்கு பணம் அனுப்ப சொல்வான். செக் தருவான். அதை எல்லாம் உரியவரிடம் பத்திரமாக சேர்ப்பிக்க வேண்டும். ஆனால் அவளுக்கு மற்றுமொரு பிரச்சனையாக இருந்தது அலுவலக மொழிக் கடிதம். 

 

மங்கிலால் கடையில் பில் போடுவதும், அக்கவுண்ட்ஸ் பார்ப்பதுமாக இருந்தவளுக்கு இந்தக் கடிதம்தான் ஒரு தடை.  கடையில் வேலை செய்யும்போது  நம்பிக்கையின் அடிப்படையில்  அது போன்ற சிறு தொழில்களில்  பாதி விவரங்களை போனிலேயே பேசி முடித்து விடுவார்கள். ஒவ்வொரு பைசாவும் எழுதி கணக்கு வைத்துக் கொண்டாலும், சம்பளமோ கடனோ தரும்போது இப்படித்தான் எழுத வேண்டும் என்ற விதிமுறை எல்லாம் கிடையாது. ஐந்தாயிரம் ரூபாய் சம்பளமாகப் பெற்றுக் கொண்டேன், கடனாகப் பெற்றுக் கொண்டேன் என்று எழுதி வாங்குவதுதான். 

 

“பேட்டி, செங்கல்வராயன் வந்தா சரக்கு கொடுத்துடாதே. ஆறு மாசம் பாக்கி நிக்குது. என்கிட்டே பேச சொல்லு” என்று வசூல் விவரங்களை அவரே பார்த்துக் கொள்வார். 

 

இங்கோ ஒவ்வொரு விஷயங்களும் கடிதங்கள் மூலமே நடக்கிறது. பணம் அவ்வளவாகப் புழங்குவதே இல்லை. செக், பாங்க் டிரான்ஸபெர் இப்படித்தான். எல்லாவற்றிற்கும் முறையான கடிதங்கள் பதில்கள் பரிமாற்றம் நிகழ்கிறது. காய்கறி இவ்வளவு செலவாகிறது என்று சொல்லிவிட முடியாது. அதற்கும் பில் பெறப்பட்டு கோப்புகளில் சேர்க்கப் படுகிறது. 

 

இங்கு வரும் கடிதங்களைப் பரிசீலித்து குறைந்தபட்சம் ஒரு டசன் கடிதங்களுக்காவது பதில் எழுத வேண்டி இருக்கிறது. அதுவும் ஆங்கிலத்தில் வேறு. அலுவலகக் கடிதம் எழுதுவதற்கு ஒரு முறை இருக்கிறது. அந்த சூத்திரத்தைப் பற்றி அவள் கவலைப்பட்டதே இல்லை. லீவ் லெட்டரையே மனப்பாடம் செய்து அதனை மட்டும் எழுதிக் கொடுத்து தேர்வும் பெற்றுவிட்டாள். எப்போதும் As I am suffering from fever மட்டும்தான். தலைவலி, கால்வலி, ஃப்ளு ஜுரம் என்று காரணத்தை மாற்றி கூட எழுத முயன்றதில்லை.

 

இந்தக் கடிதங்கள்தான் பூதமாய் பயம் காட்டியது. உதவி கேட்பவர்களுக்கு செய்கிறேன் என்று சொல்லி எப்படி பதில் எழுதுவது. அதைவிட இது முடியாது என்றும் எழுத வேண்டி இருந்தது. எப்போதுமே ஆமாம் என்று சொல்வதைவிட இல்லை என்று சொல்வது மகாக் கடினம். 

 

இவர்களைப் பார்த்தால் ஏமாற்றும் ஆட்களாகவும் தோன்றவில்லை.அபிராமை மறுத்து பேசவும் முடியாது. ஏனென்றால் கீழ்ப்படிந்து நட, எதிர்த்துப் பேசாதே, சொல்வதை மட்டும் செய், முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்களில்லை  என்றே பழக்கப்படுத்தப்பட்டு வளர்த்தெடுக்கப் பட்டவர்கள்தானே நாம்.

 

“இதே தொண்டு நிறுவனத்திடமிருந்து இதே உதவி கேட்டு முன்னாடியே கடிதம் அனுப்பி இருந்தாங்க. செக் பண்ணிடு” என்று ஒரு கேள்விக் குறியுடன் கடிதம் வரும்போது இரண்டு மூன்று நாட்கள் உட்கார்ந்து பழைய கடிதங்களை ஆராய்ந்து விட்டு 

 

“ஆமாம் சார்.வாட்டர் ஹீட்டர் பழுது என்று இது வரைக்கும் புதுசு வாங்க மூணு தடவை பணம் வாங்கி இருக்காங்க.  மூணும் சில மாத இடைவெளியில். இது நாலாவது கடிதம்”

 

“அப்ப பொய்க் கடிதம்தான். முடியாது இனிமே இந்த உதவி கேட்காதேன்னு சொல்லி பதில் எழுதிடு” என்று சொல்லிவிட்டு எழுந்து விட்டான்.  

 

பதில் எழுத இவளுக்குத் தான் தயக்கமாக இருந்தது. அதன்பின் மறுபடியும் இரண்டு நாள் கழித்து அவனிடம் சென்று 

 

“அந்தத் தொண்டு நிறுவனம்…”

 

“அதுதான் அன்னைக்கே முடியாதுன்னு சொல்லச் சொல்லிட்டேனே?”

 

“சார். அந்த நிறுவனத்தில் அடிக்கடி மின் சாதனங்கள் எல்லாம் பழுதடையுறதா தகவல் வந்திருக்கு. மின்சார சப்ளைல பிரச்சனை இருக்கலாம். அது வேற பழைய கட்டிடத்தில் நடக்குற இல்லம். வொயரிங் பிரச்சனையாக் கூட இருக்கலாம்”

 

யோசித்தவன் “கோபன்கிட்ட சொல்லி நம்ம எலக்ட்ரிஷியனை இல்லத்துக்கு அனுப்ப சொல்லு”

 

அவர்கள் அனுப்பிய எலெக்ட்ரிஷியன் பழுதான பழைய மின் இணைப்புக்களை சரிபார்த்து இன்றைய நவநாகரீக மின் இயந்திரங்களை உபயோகிக்கும் வண்ணம் சீரமைத்துத் தர வேண்டும் என்று சொல்லி செம்பருத்தியின் அனுமானம் உண்மை என்று உறுதி செய்தான். 

 

“வெரி குட்” என்று அபிராம் சொன்னதே அவளை அன்று முழுவதும் தரையில் கால் பாவாது நடக்கும் பிரம்மையைத் தோற்றுவித்தது. 

 

எப்படி இருந்தாலும் இரவு வேலை முடிந்ததும் காளியம்மா, சேச்சி, ஓவியா, கோபன் சில சமயம் பாலன் இவர்களுடன் ஒரு அரை மணி நேரமாவது அரட்டை அடித்துவிட்டே  அவளது அறைக்குச் செல்வாள். வாரம் ஒரு நாள் ஞாயிறு விடுமுறை. மதிய  உணவுக்கிற்குப் பின் ஓவியாவுடன் அந்த சின்னஞ்சிறு தீவினை சுற்றிப் பார்ப்பாள். சில சமயம் மனிதர்களின் மறுபக்கத்தையும் அறிந்து கொள்ள உதவியாக இருந்தது. அதில் ஒன்று ஓவியாவுக்கு இருபது வயது என்று அறிந்து கொண்டது. 

 

அந்த விடுமுறை தினத்தன்று மாலை என்னவோ காளியம்மாவும் சேச்சியுடன் சர்ச்சுக்குக் கிளம்பிவிட்டாள். 

 

“மேரி மாதா இவளுக்கு நல்ல படிப்பு கொடுக்கட்டும் சேச்சி. இவ பன்னெண்டாவது பாசாகுறதுக்கள்ள எனக்கு நெஞ்சு வலியே வந்துடும் போலிருக்கு” என்று புலம்பிக் கொண்டே சென்றார். 

 

ஓவியாவைப் படிக்கச் சொல்லிவிட்டு தானும் மேற்படிப்பிற்கு விண்ணப்பிப்பதற்காக படிவங்களை பிரிண்ட் எடுத்துக் கொண்டு வீட்டினுள் இருந்த நீச்சல் குளத்திற்கு அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டாள். 

 

அவளைத் தேடிக் கொண்டே பாடப் புத்தகத்தைத் தூக்கிக் கொண்டு வந்துவிட்டாள் ஓவியா. 

 

“படிக்காம என்ன பண்ணுற? உங்கம்மா பாவம் எப்படி புலம்புறாங்க? அப்படி எத்தனை மார்க்குதான் வாங்குன?”

 

“82”

 

“இதுக்கா உங்கம்மா திட்டுனாங்க?”

 

“எல்லா பாட மார்க்கையும்  கூட்டினா வர்றது அவ்வளவுதான்”

 

“அப்ப  எல்லா பாடத்திலையும் பெயில். காளிம்மாக்கா திட்டுறதில் தப்பே இல்லை”

 

“படிப்பு வந்தாதானேக்கா படிப்பேன். படி படின்னா எங்கிருந்து படிக்க? எங்கம்மா அப்பா யாருமே படிச்சதில்லை. அதனால எனக்கும் படிப்பு மண்டைல ஏற மாட்டிங்குது. இருபது வயசிலதான் பன்னெண்டு படிக்கிறேன். இது முடிச்சதும் அய்யாவோட நர்சிங் காலேஜில எங்கம்மா சீட்டுக்கு சொல்லி வச்சிருக்கு”

 

“நர்சிங் எல்லாம் நல்ல படிப்பு. மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பு எத்தனை பேருக்குக் கிடைக்கும்”

 

“எனக்கு வேணும்னு யாரு கேட்டா? நர்சிங் சேவையை விரும்புறவங்களுக்கு இதைத் தந்தாத்தான் அந்தப் படிப்புக்கு ப்ரோஜனம்”

 

“அப்ப என்னதான் உனக்குப் படிக்கணும்”

 

கண்களில் கனவுடன் “எனக்கு டான்ஸ் படிக்கணும்கா… கலர் கலரா ட்ரெஸ் போட்டுட்டு சலங்கை கட்டிட்டு ஆடும்போது இந்த உலகமே எவ்வளவு அழகா இருக்கும் தெரியுமா?” என்றாள்.

 

“டான்சா… எனக்கு தெரிஞ்ச ஒரே டான்ஸ் குத்துப்பாட்டு அப்பறம் திருவிழாவை சமயத்தில் நடக்குற மானாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் தான்”

 

“அதுதான்கா… அதே டான்ஸ்தான்”

 

வெளியே யாரும் வருகிறார்களா எட்டிப் பார்த்துவிட்டு வந்தவள் 

 

“க்கா அம்மா வர இன்னும் அரைமணி நேரம் இருக்கு. நான் டான்ஸ் ஆடுறேன் பாத்துட்டு எப்படி இருக்குன்னு சொல்றியா”

 

“இதா பாரு, பரீட்சை முடிஞ்சதும் இந்த ஆட்டம் பாட்டம் எல்லாம் வச்சுக்கோ. இப்ப படிப்பு மட்டும்தான்”

 

“இப்படியே சொல்லுக்கா… அந்த ராட்சசி என்னடான்னா டான்ஸ் ஆடினா கால்ல சூடு போடுவேன்னு சொல்லிருக்கு. எனக்குப் பிடிச்சதை வேண்டாம்னு சொல்றிங்க. பிடிக்காததை செய்ய சொல்லி டார்ச்சர் பண்ணுறீங்க”

 

முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்ட ஓவியாவைப் பார்க்கப் பார்க்க பாவமாக இருந்தது. 

 

“சரி ஒரே ஒரு நிமிஷம்தான். அதுக்கப்பறம் இந்த பாடம் பூராவும் என்கிட்டே படிச்சு ஒப்பிக்கணும். சரின்னா பாக்குறேன்”

 

“சரிக்கா… சத்தியமா படிக்கிறேன்”

 

வேகமாய் அங்கிருந்த அலமாரியைத் திறந்து காலி வொயின் பாட்டில் ஒன்றை எடுத்தவள் அதனைத் தனது தலையில் வைத்துக் கொண்டு ஆடாமல் நின்றாள். 

 

“பாட்டில் விழுந்து உடையப்போகுதுடி. சும்மாவே ஆடு”

 

“அதெல்லாம் உடையாது. இதை கரகம்னு நினைச்சுக்கோ. இப்ப பாட்டைப் போடு”

 

ஓவியா பாட்டைப் போட்டுவிட்டு ஆட ஆரம்பித்தாள். 

 

“ஒண்ணாங்கல்லை எடுத்துப் போட்டுக்கோ, என் முத்தம்மா 

ஒட்டியாணம் செஞ்சு போட்டுக்கோ….

 

ரெண்டாங்கல்ல எடுத்துப் போட்டுக்கோ, என் முத்தம்மா 

ரத்தின கொலுசு செஞ்சு போட்டுக்கோ….

 

மூவனம் ராவணன் சந்தையிலே, முத்துராசா பந்தியிலே

மூவாட்டி ஆத்துல, ராமேஸ்வரத்தில…

மூவா மூவா நல்லெண்ண, மூணாழாக்கு வேப்பெண்ண 

மூணு தோப்பு இலுப்பெண்ணெ, முழுகி குளிச்ச விளக்கெண்ண

மூணாங்கல்ல எடுத்துப் போட்டுக்கோ, என் முத்தம்மா 

முத்துச்சரம் செஞ்சு போட்டுக்கோ…. “

 

அவளது கால் தரையிலேயே நிற்காமல் அந்த இடத்தில் சுற்றி சுற்றி ஆட ஆரம்பிக்க, விழிகளை இமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருந்தாள் செம்பருத்தி. 

 

இம்மி கூட பாட்டில் தலையில் இருந்து நகராமல் நிற்க, நளினமான அங்க அசைவுகளுடன் அந்த நையாண்டி பாட்டிற்கு நடனம் ஆடும் இவள் பெண்ணா இல்லை நடனத்திலேயே மயக்கும் இந்திர லோகத்து சுந்தரியா?

 

அந்த தாளத்திற்கு இவளுக்கே நடனம் ஆட வேண்டும் போல இருந்தது. அப்படி இருக்கும்போது மற்றவர்களைக் கேட்கவா வேண்டும். சத்தம் கேட்டு அங்கு வந்த சிலரும் மெலிதாக கைகளை அசைத்து கூட ஆட, அந்த இடமே கலகலப்பாக ஆனது. எல்லாம் காளியம்மா வரும்வரை தான். 

 

“ஏய்… ஓவியா… “ என்ற காட்டுக் கத்தல் கேட்க, பேருக்குத் தகுந்தாற்போல காளியம்மனின் அவதாரமாக நின்றுக் கொண்டிருந்தாள். 

 

அவ்வளவு நேரம் சுழன்று ஆடிக் கொண்டிருந்த ஓவியா நிற்க கூட முடியாமல் தடுமாற, 

 

“அந்த பாட்டில் கீழ விழுகக் கூடாது. ஜாக்கிரதையா ஆட்டத்தை முடிச்சு வணக்கம் வை”

 

காளியம்மாவின் கோபத்தைப் பார்த்த அனைவரும் நைசாக நழுவி விட்டிருக்க. அந்தப் பெண்ணை தனியாக மாட்டிவிட மனமின்றி அங்கேயே நின்றாள் செம்பருத்தி. 

 

“அக்கா… இந்த பாட்டு முடிஞ்சதும் படிக்கிறேன்னு சத்தியம் பண்ணிருக்காக்கா… அதான்… “ தயங்கித் தயங்கி சொன்னாள் செம்பருத்தி. 

 

“நீ பேசாம இரு… “ என்று செம்பருத்தியை அடக்கினார் காளியம்மா. 

 

ஓவியா பாட்டிலை எடுத்து வைத்த மறுவினாடி. அவரது கைகள் பளார் பளார் என அவளது கன்னங்களைப் பதம் பார்த்தது. 

 

“உன்னை டான்ஸ் ஆடக்கூடாதுன்னு எத்தனை தடவை சொல்றது. திருந்த மாட்ட…  “

 

“அக்கா… விடுங்கக்கா விடுங்கக்கா… “ என்று செம்பருத்தி நடுவில் நின்று கொள்ள…

 

அதற்குள் சேச்சியை யாரோ கூட்டிக் கொண்டு வந்துவிட…

 

“காளியம்மா… விடுடி, சின்ன பொண்ணு ஏதோ ஆடிட்டா… அதுக்காக இப்படியா அடிப்ப”

 

“ எல்லாம் தெரிஞ்ச நீங்களே இப்படி கேக்கலாமா சேச்சி. அவ கரகாட்டம் ஆடிருக்கா… அதுவும் சாராய பாட்டிலைத் தலையில் வச்சுக்கிட்டு… ஏண்டி நம்ம குலம் காக்குற மாரியம்மாவை வச்ச தலைல இப்படி சாராய பாட்டிலை வச்சுக்கிட்டு ஆட எப்படிடி தோணுச்சு”

 

சேச்சியின் பிடியில் இருந்து விடுவித்துக் கொண்டு மறுபடியும் பாய்ந்து வந்து ஓவியாவை அடிக்க, 

 

“இங்கென்ன சத்தம்… “ என்று உறுதியாக ஒரு குரல் கர்ஜித்தது. 

 

நீச்சல் குளத்தை ஒட்டியிருந்த அந்த சின்ன பால்கனியிலிருந்து அபிராமின் குரல்தான் காளியம்மாவை அடக்கியது. 

 

“செம்பருத்தி… என்ன ஆச்சு? ஓவியா என்ன தப்பு செஞ்சா?”

 

“டான்ஸ் ஆடினா சார்”

 

“டான்ஸ் ஆடுற வயசுதானே அவளுக்கு… “

 

“அய்யா… “ திணறினாள் காளியம்மா.

 

“உங்க வழக்கப்படி பாட்டு முடியுற வரைக்கும் கரகத்தை நிறுத்தாம ஆடிட்டு நிக்கணும் அப்படித்தானே… “ என்றான் காளியம்மாவிடம்.

 

“கோபன்… அந்த குடத்தை எடுத்து காளியம்மாகிட்ட தா… “

 

அங்கிருந்த அலமாரியில் இருந்து வெள்ளிக் குடத்தை காளியம்மாவிடம் தர, அவரும் கண்ணீரை அடக்கியபடி அதில் அரிசியை  நிரப்பி ஓவியாவின் தலையில் வைத்தாள். ஓவியாவோ பேந்த பேந்த பயத்தில் விழித்தாள். 

 

“ஓவியா… மூணாம் கல்லு வரை பார்த்துட்டேன். இனி  நாலாங்கல்லில் இருந்து ஆரம்பி” என்றான் அதே பால்கனி தூணில் சாய்ந்து  நின்று கொண்டு. 

 

அப்ப  இங்க நடக்குறது எல்லாத்தையும் பார்த்துட்டே இருந்திருக்கான் என்று செம்பருத்தி நினைத்த பொழுது தனது நடனத்திற்குக் கிடைத்த அங்கீகாரத்தைக் கண்டு குஷியுடன் விட்டதிலிருந்து தொடர ஆரம்பித்தாள் ஓவியா…

 

“நாலாங்கல்ல  எடுத்துப் போட்டுக்கோ, என் முத்தம்மா 

நாகரத்தினம் செஞ்சு போட்டுக்கோ…. “

 

முத்தம்மா அஞ்சாம் கல்லில் அரக்கு மஞ்சளை அள்ளிப் பூசிக் கொண்டு அடுத்த அடுத்த கற்களில் அட்டியல், ஏழுசரம், எட்டுசரம், ஒட்டியாணம் பத்துசரம் எல்லாம் அணிந்து கொண்டாள். 

 

எல்லோரின் மனமும் நிமிடத்திற்குள் ஓவியாவின் நடனத்தில் லயித்தது. வெற்றிகரமாக நடனம் ஆடி முடித்ததும் அனைவரும் கைதட்டி ஆரவாரிக்க, காளியம்மாவின் கால்களைத் தொட்டு வணங்கி நடனத்தை முடித்தாள் ஓவியா. 

 

அந்த கலைச் செல்வியை தொடரச் சொல்லி வாழ்த்தவும் வழியில்லாமல் , நிறுத்தவும் சொல்ல  முடியாது கண்களில் கரகரவென நீர் வழிய நின்ற அம்மாவை அப்படியே கட்டிக் கொண்டாள்.

 

“உன் ஆசைப்படியே படிக்கிறேன்மா… ஆனா ஒரு நாளைக்கு அரைமணி நேரம் டான்ஸ் மட்டும் ஆடிக்கிறேன். நல்ல பாட்டு கேட்டா என் காலு தானா ஆட ஆரம்பிச்சுடுது” 

 

காளியம்மாவும் தேம்ப “இந்த கரகாட்டத்தை ஆடி என்னடி சாதிக்கப் போற… இப்ப நம்மை ஆடக் கூட்டிட்டுப் போறவன் கவுரவமா நடத்துவான்னு நினைக்கிறியா? அரைகுறை ட்ரெஸ் மாட்டிவிட்டு, அசிங்கமா எல்லாரு முன்னாடியும் பேசச் சொல்லுறான். அப்படி இருந்தாத்தாண்டி நமக்கு சாப்பாடு. அதெல்லாம் வேண்டாம்னு தானே இங்க ஒதுங்கி வந்தோம்”

 

“நான் வீட்டுக்குள்ளேயே ஆடிக்கிறேன்மா… என்னால இதை நிறுத்த முடியல. ப்ளீஸ்மா… நான் டான்ஸ் ஆட வேணாம்னு நினைச்சா என் காலை வெட்டிப் போட்டுடு”

 

“உஷ்… அம்மா சம்மதிப்பாங்க… நீ ஒழுங்கா படிக்கணும். மொத்த மார்க் 82 எல்லாம் வேலைக்கு ஆகாது. ஒவ்வொரு பாடத்துலையும் 70க்கு மேல எடுத்தா உனக்கு பிடிச்ச படிப்பா நானே படிக்க வைப்பேன்.”

 

ஓவியாவின் முகம் பிரகாசமானது. 

 

“டான்ஸ் படிக்க வைக்கிறிங்களா சார்”

 

“உனக்கு ஆர்வமிருந்தா டான்ஸ்லேயே ரிசர்ச் வரை படிக்க வைக்கிறேன்.  இட் இஸ் எ ப்ராமிஸ்”

 

“அம்மா… நர்சிங்… “ தயங்கினாள். 

 

“அரைகுறை ட்ரெஸ் போட வேண்டாம். அசிங்கமா பேச வேண்டாம். கலையை முறையா படிச்சுட்டு இளைய தலைமுறைக்கு முறையா எடுத்துட்டு போகலாம்னா அம்மா வேண்டாம்னா சொல்லப் போறாங்க?”

 

காளியம்மாவிற்கு பதிலே பேச முடியாது மூச்சடைத்து விட்டது. 

“செம்பருத்தி டான்ஸ் எல்லாம் சொல்லித் தர காலேஜு இருக்கா என்ன? “ என்றார் செம்பருத்தியை இழுத்துக் கொண்டு நடந்தபடி. 

 

“பைன் ஆர்ட்ஸ் டிகிரி இருக்குகா… இந்த மாதிரி நாட்டுப்புற கலைகளைப் பத்தி ஆராய்ச்சி செய்ய… “ என்று அவர்களிடம் விளக்கிக் கொண்டே சென்றாள். 

 

தனது பேப்பர்களை நீச்சல் குளத்தின் மேஜையிலேயே வைத்துவிட்டு வந்தது நினைவிற்கு வர, எடுத்து வர சென்றாள் செம்பருத்தி. 

 

இருட்ட ஆரம்பித்திருந்த அந்த நேரத்தில் வானத்தைப் பார்த்தபடி அங்கேயே நின்று இருந்தான் அபிராம் . 

 

இருட்டில் அவள் கீழே நின்றது தெரியாமல் பாலனிடம் சொல்லிக் கொண்டிருந்தான். 

 

“எப்படி பட்டாம்பூச்சி மாதிரி சுத்தி சுத்தி ஆடினா அந்தப் பொண்ணு. ஆடுறதை நிறுத்தணும்னா காலை வெட்டணுமாம். புவர் கேர்ள், கால் இல்லாதவங்க கஷ்டம் எல்லாம் இவளுக்கு என்ன தெரியும் பாலன்” 

 

“அய்யா நீங்க ஆயுர்வேத சிகிச்சை தொடர்ந்து எடுத்துக்கிட்டா நல்ல முன்னேற்றம் தெரியும்”

 

“பழையபடி நடக்க முடியுமா? இல்லை முன்னாடி கலந்துக்கிட்ட மாதிரி மாரத்தான் ரேஸ்ல ஓட முடியுமா?”

பாலன் ஒன்றும் சொல்லவில்லை. 

 

“கம்பீரமா ஏறி ஓடி வந்த படியில் விந்தி விந்தி நடந்து வர்றது எவ்வளவு கொடுமை தெரியுமாடா? ”

 

“அய்யா… “

 

“விடுடா… நானே என் ரூமுக்கு போய்க்கிறேன்”

 

“ரெண்டு நிமிஷம் கழிச்சு வாங்கய்யா… “

 

“எத்தனை நாள் வீட்டுல இருக்குறவங்க எல்லாரையும் கமுக்கமா வெளிய அனுப்பிட்டு நான் நடக்க வழி செய்யப்போற… என்னை ஏண்டா வாழவும் விட மாட்டிக்கிறிங்க சாகவும் விட மாட்டிக்கிறிங்க?”

 

“அப்படி எல்லாம் பேசாதிங்கய்யா… கடவுள் நிச்சயம் நல்லது செய்வார்”

 

“செஞ்சார்… செஞ்சு கிழிச்சார்… எனக்கு ஒரு சிகிரெட் கொடுத்துட்டு போ… “

 

அந்த சிகிரெட் குடித்து முடித்ததும் மெதுவாகத் திரும்பி சற்று சாய்ந்து சாய்ந்து நடந்து அவனது அறைக்கு சென்ற அபிராமைக் கண்டதும் ஏனோ செம்பருத்தியின் மனதை யாரோ இறுக்கி கசக்கியத்தைப் போல தோன்றியது. அன்றைய நாளின் உணர்ச்சிப் பூர்வமான நிகழ்வுகளின் தாக்கத்தால் அவளையும் அறியாமல் அவள் கண்களிலிருந்து கண்கள் கர கரவென்று வழிய ஆரம்பித்தது.

4 thoughts on “தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 14”

  1. மிகவும் அருமை. இன்றைய காலகட்டத்தில் நாட்டுப்புற கலைஞர்கள் பலரையும் தவறான கண்ணோட்டத்தில் காட்சி படுத்துகிறார்கள் என்பது உண்மையே. அதனாலேயே பலரும் அந்த கலைகளை விட்டு வந்து விட்டனர் என்பது கசப்பான உண்மை.

  2. Really a nice episode . கரகாட்ட பெண் கலைஞர்களின் எதார்த்த துயரத்தை ஒரே வரில அழகா சொல்லிட்டீங்க. செம்பாவுக்காக a very long waiting. அடுத்த எபி சீக்கிரம் கொடுக்கவும்.

Leave a Reply to janani2030 Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 27தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 27

அத்தியாயம் – 27 அதிர்ச்சியில் உறைந்து அப்படியே அபிராம் சிலையாய் உட்கார்ந்திருந்தான். இதுவரை யாரும் அபியின் சுண்டுவிரலைக் கூடத் தீண்டியதில்லை. இன்று லீலாம்மாவா அடித்தது. அதுவும்  பல சமயங்களில் அந்த பிஞ்சு பருவத்தில் அவனின் பயம், அச்சம் எல்லாம் ஓட ஓட

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 30தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 30

அத்தியாயம் – 30   கட்டிடக் கலையின் சாட்சியாக இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக கம்பீரமாக நிற்கும் பாகமங்கலம் அரண்மனை.அதன் முன்பு கார்கள்  வழுக்கிச் செல்ல வாகாக  விரிந்திருந்த தார்சாலை.    பாலைவனத்தைக் கூட சோலைவனமாக மாற்றும் திறன் படைத்த சிறந்த தோட்டக்காரர்கள்

தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 28தமிழ் மதுராவின் ‘செம்பருத்தி’ – 28

அத்தியாயம் – 28    அவர்கள் மூவரையும் அவினாஷ் அவனது அறையில் சந்தித்த பொழுது  “நீதான் இந்த வீட்டு பெரிய மனுஷனோ… எங்கய்யா எங்க வீட்டுப் பொண்ணு” என்று பாய்ந்தாள் அத்தை.    “உங்க பொண்ணா யாரது?”   “கட்டிக்கரும்பா ஒண்ணே