எனக்கொரு வரம் கொடு – 20
தஞ்சாவூர் மனநல மருத்துவமனைக்கு சர்வேஸ்வரனும் சௌதாமினியும் வந்து சேர்ந்திருந்தனர். கணவனுக்கு நிதானமாக ஒவ்வொரு பகுதியாகச் சுற்றி காட்டிக் கொண்டிருந்தாள் சௌதா.
பலரும் கைத்தொழில் எதிலாவது தங்களை முழு அர்ப்பணிப்போடு ஈடுபடுத்தி இருப்பதை மிகுந்த ஆச்சரியத்தோடு சர்வாவால் காண முடிந்தது. அவன் இந்தளவு நேர்த்தியை எதிர்பார்த்து வந்திருக்கவில்லை.
அங்கிருந்த செவிலியர்கள் ஆக்குபேஷனல் தெரபி (occupational therapy) பற்றி சர்வாவிடம் எடுத்துச் சொன்னார்கள். ஏற்கனவே சௌதா சொல்லிவிட்டால் என்றபோதும் ஆர்வமாக விளக்குபவர்களிடம் மறுக்க அவனுக்கு மனம் வரவில்லை.
அங்கிருந்த நோயாளிகள் உயிர்ப்போடு இருப்பதை அவனாலும் உணர முடிந்தது. நமது கற்பனையின்படி யாரும் கம்பிகளின் பின்னால், விசித்திரமான செயல்பாடுகளுடன் இருப்பதில்லையோ? பெரும்பாலானவர்கள் இயல்பாகத் தான் செயல்படுகிறார்கள் என எண்ணிக்கொண்டான்.
உண்மையில் அவர்களின் சிறு சிறு செயல்கள் தான் மாறுபட்டு இருந்தது. மற்றபடி அவர்கள் சாதாரணமாகவே இருந்தார்கள். அவர்களிடம் இன்னுமொரு நேர்த்தி… அத்தனை அருமையாய் சொற்படி கேட்டு, புரிந்து செயலாற்றினார்கள்.
ஒருவேளை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது மிகவும் பின்தங்கி இருந்திருக்கலாம். அதன் பின்னர் நிச்சயம் இது நல்ல முன்னேற்றம் தான் என ஆச்சரியத்தோடு நினைத்துக் கொண்டான்.
ஒரு மூத்த செவிலியர் அதைப்பற்றியும் அவனிடம் விளக்கிச் சொன்னார். அவரவர் நோயின் தீவிரத்திற்கு ஏற்ப பராமரிக்கப்பட்டு வருகிறார்கள். மிகவும் தீவிரமாக மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தனியாக பராமரிக்கப்படுவார்கள் என்று சொன்னார். இவன் சிறு தலையசைப்போடு அவர்கள் சொல்வதைக் கேட்டுக்கொண்டே வந்தான்.
கடைசியாக பேசி முடிக்கும் தருணம், “உங்க மனைவியை இங்க நிறைய பேருக்கு பரிச்சயம் சார். அடிக்கடி வருவாங்க. ரொம்ப நல்ல பொண்ணு…” என்று மனதார சொன்னார் அந்த செவிலியர்.
சிறு சிரிப்புடன் ஆமோதித்தவனின் பார்வை சௌதாவை தான் வட்டமிட்டது. ஒரு வயதான பெண்மணியிடம் ஆதரவாக எதையோ பேசிக் கொண்டிருந்தாள்.
“சரி சார் நீங்க பாருங்க…” என அந்த செவிலியர் அவனிடமிருந்து விடைபெற்று கொண்டார். அவருக்கு ஓர் உயர் பதவியில் இருப்பவன் இங்கு வருகை தந்ததில் மிகுந்த மகிழ்ச்சி போலும்!
இதோ செல்லும் இந்த செவிலியர் பற்றியும் சௌதா சொன்னாள் தான்… அவரின் ஈடுபாடு, அர்ப்பணிப்பு, குழந்தைகளைப் போல ஒவ்வொருவரையும் பராமரிக்கும் பாங்கு என அனைத்தையும் சொன்னாள். அவள் மனம் விட்டு அவனிடம் பேசுவது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவளுடன் மனதளவில் தான் நெருங்கிவிட்டதை எண்ணி எண்ணி மகிழ்ந்தான்.
செவிலியர் நகர்ந்ததும் அமைதியாகச் சென்று சௌதாவோடு இணைந்து கொண்டான். இவள் பேசிக்கொண்டிருந்த மூத்த பெண்மணி, இவனை பார்த்ததும் சிரிக்கலாமா வேண்டாமா என்று குழப்பத்தில் இருப்பது அவனுக்கு தெளிவாகப் புரிந்தது.
“நீங்க போலீஸ்ன்னு சொல்லி இருந்தேன். அதுதான் இந்த ரியாக்ஷன்…” என காதுக்குள் கிசுகிசுத்தாள் மனையாள்.
புரிந்தது என்னும் விதமாகத் தலையசைத்தவன், சிறு சிரிப்புடன், “எப்படி இருக்கீங்க?” என அவரிடம் விசாரித்தான்.
இதை அந்த அம்மா எதிர்பார்க்கவில்லை போலும்! திருதிருவென விழித்தபடி தலையை உருட்டினார்.
மனைவியோ இரக்கமே இல்லாமல், “நீங்க இருந்தா பேச மாட்டாங்க போல… போயி மறுபடி ஒரு ரௌண்ட் சுத்தி பாருங்க… நான் இவங்ககிட்ட பேசிட்டு வந்துடறேன்” என கிசுகிசுத்தாள்.
அடிப்பாவி என்று தான் தோன்றியது சர்வாவிற்கு. இருந்தும் சிறு சிரிப்போடு தலையை ஆட்டிவிட்டு நகர பார்த்தவனின் கைப்பற்றித் தடுத்தவள், “பொண்டாட்டி சொன்னா உடனே தலையை ஆட்டிடறீங்க” என ஆச்சரியமும் காதலுமாகக் கேட்டாள்.
“பின்ன எனக்கு அதைவிட வேற என்ன முக்கியமான வேலை?” என்று காதலோடு பதில் சொன்னவன், அவளின் முன்னுச்சி முடிகளைக் கலைக்க எழுந்த கையை பொது இடம் என்ற நாகரீகம் கருதிக் கட்டுப்படுத்திக் கொண்டான்.
அது அவளுக்கும் புரிந்ததோ என்னவோ அவனது உயரத்துடித்த வலது கரத்தை பார்த்துவிட்டு அவனைப் பார்த்து பரிகசித்துப் புன்னகைத்தாள்.
கவனிச்சுக்கிறேன் என வாயை அசைத்து ஆள் காட்டி விரலால் பாத்திரம் காட்டி, போலியாக மிரட்டி விட்டு நகர்ந்து விட்டான் கணவன்.
வெளியில் இதுவரை அவள் சொன்னதில்லை என்றபோதும் அவன் விரல்கள் அவளின் முன்னுச்சி முடிகளை ஒதுக்குவதாகட்டும், அவன் மெலிதாக நெற்றியோடு நெற்றியை முட்டுவதாகட்டும், பட்டும் படாமலும் நெற்றியில் இதழ் பதிப்பதாகட்டும்… அனைத்துமே அவளுக்கு அத்தனை அத்தனை பிரியம். இதுபோன்ற சிறு சிறு செய்கைகளால் காவலன் அவனே அறியாமல் அவளை களவாடிக் கொண்டிருந்தான்.
அவன் நகர்ந்ததும், சிறு புன்னகையோடு மீண்டும் அந்த மூத்த பெண்மணியிடம் தன் கவனத்தைத் திருப்பியிருந்தாள் சௌதாமினி.
“சொல்லுங்கம்மா…” என அவள் மீண்டும் ஆதரவாகக் கேட்கவும்,
“என்ன சம்பாரிச்ச உன்னை வீட்டுல வெச்சு பார்த்துக்கிறதுக்குன்னு கேட்கிறான் மா…” என்று சொன்னவர் கண்ணீரைத் துடைக்கக் கூட தோன்றாமல் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார்.
சௌதாமினி அவரின் கைகளை ஆதரவாகப் பற்றி மிருதுவாக வருடி விடவும், “நான் என்னம்மா சம்பாரிக்க முடியும்? காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டேன். புருஷன் என்னை விட்டுட்டு இன்னொருத்தியோட போயிட்டான். அப்ப இருந்து என் மகனை வளர்க்கவே படாத பாடு பட்டேன். சாப்பிடவே கஷ்டப்பட்ட காலத்துல, நான் வேற என்னத்த சம்பாரிச்சு சேர்த்து வெச்சிருக்க முடியும்மா?” என்று அவர் கேட்ட கேள்விகள் அனைத்தும் நியாயமானதே!
வாழ்வாதாரமே ஆட்டம் காணும் சமயத்தில் சொத்தை சேர்ப்பதைப் பற்றி எப்படி யோசிக்க முடியும்? இவருடைய கணவர்… மனைவி மற்றும் குழந்தையின் பொறுப்பை உதறிச் செல்லவில்லையா? இந்த அம்மா அந்த இக்கட்டான நேரத்திலும் மகனின் பொறுப்பை உணர்ந்து தானே செயல்பட்டார்! ஒன்றும் விட்டுவிடவில்லையே? மகனைத் தத்து கொடுக்கவோ ஆசிரமத்தில் சேர்க்கவோ எத்தனை நேரம் ஆகியிருக்கப் போகிறது? அவரிடம் எப்படி அவனால் இப்படிக் கேட்க முடிந்தது?
எதிரில் அமர்ந்திருப்பவரை என்ன சொல்லித் தேற்றுவது என்று கூட சௌதாமினிக்கு புரியவில்லை.
“இப்ப அவனைப்பத்தி நினைக்காம என்னால இங்கேயே காலத்தை ஓட்ட முடியுதும்மா… அவன் எங்கேயோ பொண்டாட்டி புள்ளைங்களோட சந்தோஷமா இருக்கட்டும்” என்றார் மூத்தவர்.
“உங்களுக்கு உங்க பிள்ளையை பார்க்கணும் போல ஆசையா இருக்காம்மா?”
மறுப்பாக தலையசைத்தவர், “நான் பாசம் கொட்டி வளர்த்த பையன் என்னை வெறுப்பா பார்க்கிறதைப் பார்க்கும் சக்தி எனக்கில்லைமா” என்று தழுதழுத்த பதில் குரலில் கூறினார்.
ஆறுதல் சொல்லவும் வார்த்தைகளற்று அமரும் சூழல் சௌதாமினிக்கு. சில நேரங்களில் ஆறுதல் என்ற பெயரில் எதுவும் திணிக்காமல் இருப்பதும் சிறந்ததே! அவளுடைய அனுபவம் அவளுக்கு இதை உணர்த்தியிருந்தது. ஆக அந்த பேச்சை அத்தோடு விட்டு விட்டாள். அங்கு இருக்கும் மற்றவர்களைப் பற்றிப் பேசி அவர்களின் பேச்சைத் திசைமாற்றினாள்.
இங்கிருக்கும் ஒவ்வொருவரின் பின்பும் இதுபோல சோகமான கதைகள் நிறைந்திருக்கிறது. இதை விட கொடுமை முழு குணமானவர்களும் கூட… ஆதரவற்ற தங்கள் நிலையாலும், இந்த சமுதாயத்தை எப்படி எதிர்கொள்வது என்ற அச்சத்தாலும் இங்கிருந்து வெளியில் செல்லவே அச்சம் காட்டுகிறார்களாம்.
அவர்களுக்கு இந்த சமுதாயத்தை எதிர்கொள்வதற்கான நம்பிக்கையை விதைத்துக் கொண்டிருக்கிறார்கள் இங்கு பணிபுரிபவர்கள்.
சர்வா தன் பணிக்குச் செல்ல வேண்டும். ஆனால், சௌதா வெகு ஈடுபாட்டோடு இங்கிருப்பதை கவனிக்கவும், “இங்க முடிச்சிட்டு நீ வீட்டுக்கு கிளம்பிக்கறியா? எனக்கு நேரமாச்சு…” என வந்து நின்றான்.
“இல்லை கிளம்பலாம்… பேசி முடிச்சுட்டேன். இன்னொரு முறை வந்துக்கிறேன்…” என அவளும் எழுந்து கொண்டாள்.
“இல்லை இருக்கிறதுன்னா இரு… ஒன்னும் பிராப்ளம் இல்லை”
“இல்லைங்க நிஜமா தான் சொல்லறேன். கிளம்பலாம். எப்பவும் இந்தளவு நேரம் தான் இருப்பேன்”
“ஹ்ம்ம் சரி வா… உன்னை வீட்டுல டிராப் பண்ணிட்டு அப்படியே கிளம்பிக்கிறேன்” என்று அவளிடம் சொன்னவன், மற்றவர்களிடமும் விடைபெற்று மனைவியோடு கிளம்பினான்.
செல்லும் வழியில், “கொஞ்ச பேரு பூரண குணமான மாதிரி தெரியுது…”
“ஹ்ம்ம்… மாதிரி எல்லாம் இல்லை. நிஜமாவே பூரண குணமாயிட்டாங்க. நான் பேசிட்டு இருந்தேன் இல்லை அந்தம்மாவும் குணமானவங்க தான்”
“ஓ… அப்பறமும் ஏன் குணமானவங்க எல்லாம் இன்னும் இங்கேயே இருக்காங்க? சில காலம் அப்சர்வேஷன்ல இருக்கணுமா என்ன? ஆனா அதுக்கு அவசியம் இல்லை தானே…”
“அவசியம் இல்லை தான்! ஆனா அவங்க போக்கிடம் இல்லாதவங்களா இருந்தா?”
சௌதாவின் இந்த பதிலில் அவனுக்கு அதிர்ச்சி தான்! “என்ன சொல்லற? சொந்த பந்தம் எல்லாம்…” என அதிர்ச்சி விலகாமலேயே கேட்டான்.
“சரு இவங்க எல்லாம் இங்க வந்து நிறைய வருஷம் ஆச்சு… இவங்க இல்லாத ஒரு வாழ்க்கையை இவங்க குடும்பமும் வாழ்ந்து பழகிட்டாங்க. இனி இவங்க அவங்களுக்கு பாரம் தான். கூடவே அவமானமாவும் நினைப்பாங்களாம்…”
“என்ன சொல்லறதுன்னே தெரியலை…” என்றான் பெருமூச்சுடன்.
“இவங்க எல்லாரும் இப்ப போயி தனியா சர்வைவ் செய்யணும் சரு. யாருக்கும் சொந்த ஊருக்குப் போக விருப்பமே இல்லை. இன்னும் சொல்லப்போனா தெரிஞ்சவங்க யாரையும் பார்த்திட கூடாதுன்னு நினைக்கிறாங்க. ஏன்னா மத்தவங்களோட பார்வையில இவங்க இன்னமும் மனநலம் சரியில்லாதவங்க தான்… அந்த ஏளனத்தையும் உதாசீனத்தையும் எத்தனை முறை இவங்களால எதிர்கொள்ள முடியும்? அது இவங்களை முடக்கிடும் தானே? சிலரை சொந்தக்காரங்களே ஏத்துக்கிறாங்க, அவங்களுக்கு குடும்ப சப்போர்ட் இருக்கும்… சிலருக்கு இதுபோல நிலைமை” என்றாள் பெருமூச்சுடன்.
நிதர்சனம் உண்மையில் ஏற்க முடியாத கசப்பாகத்தான் இருந்தது! மௌனமாய் அந்த கனத்த நிமிடங்களைக் கடந்தனர்.
சௌதாவை வீட்டில் விட்டுவிட்டு சர்வேஸ்வரன் ஒருவரைக் காண சென்றிருந்தான். தஞ்சாவூர் எல்லையைத் தாண்டி அவனுடைய கார் பயணித்துக் கொண்டிருந்தது. அங்கு ஒரு ஹோட்டலில் அவனுடைய வாகனத்தை நிறுத்தியவன், டேக்ஸி ஒன்றை வரவழைத்து மீண்டும் தன் பயணத்தைத் தொடர்ந்தான்.
வழியில் ஒருவர் அவனோடு இணைந்து கொண்டார். மீண்டும் பயணம் ஆரம்பமானது. டேக்ஸியில் சிறிது தூரம் சென்றவர்கள் ஓர் இடத்தில் இறங்கிக் கொண்டனர்.
டேக்ஸி புறப்படும் வரையும் இருவரிடமும் பொதுவான பேச்சுவார்த்தைகள் தவிர வேறு எதுவும் இல்லை.
வண்டி பார்வை வட்டத்திலிருந்து மறைந்ததும், “சொல்லுங்க ஞானசேகர்? உதவி மட்டும் உடனே வேணும்ன்னு வந்து நிக்கறீங்க? இதுவே ஒரு வேலை தந்தா கொஞ்சம் கூட இம்ப்ரூவ்மென்ட் இல்லையே” குற்றம் சாட்டும் தொனியில் கேட்டான்.
“சார் உங்களுக்கே தெரியும் நீங்க கேட்ட விவரம் எல்லாம் எடுத்து தரது எத்தனை ரிஸ்க்ன்னு… நான் வேலை செய்யற ஸ்டேஷனுக்கு எதிரான வேலையைச் செய்ய சொன்னீங்க சார்”
“முன்னாடி என்கிட்ட நீங்க உதவிக்கு வந்ததும், உங்க சொந்தக்கார பையனைத் தப்பா தூக்கிட்டாங்க காப்பாத்துங்கன்னு தான்… அப்பவும் அது நீங்க வேலை பார்க்கிற ஸ்டேஷனா தான் இருந்தது” கட் அண்ட் ரைட்டாக அவன் பேசிய விதத்தில் அவருக்கு உதறியது. பின்னே சுத்தலில் விட்டுக் கொண்டே இருந்தால் அவனும் தான் என்ன செய்ய முடியும்?
“இப்ப என்ன சொல்லறீங்க? உங்களால முடியலையா?” உறுமலாக வந்த கேள்வியில், “அச்சோ அந்த மாதிரி எல்லாம் எதுவும் இல்லை சார். அது விஷயமா கொஞ்ச விவரம் கிடைத்ததைச் சொல்லத்தான் உங்களைக் கூப்பிட்டேன்…” எனப் பதறியபடி பதில் தந்தார் கான்ஸ்டபிள் ஞானசேகர்.
“சீக்கிரம் சொல்லுங்க…” என்று அப்பொழுதும் எரிச்சல் காட்டினான். ஒற்றை விவரம் கூட இவர் மூலம் இன்னும் விவரமாய் கிடைத்திருக்கவில்லை. ஆரம்பத்தில் நடந்த ஒரு சறுக்கலை சொன்னதைத் தவிர வேறு எதையுமே உருப்படியாகச் சொல்லியிருக்கவில்லை. வேறு எந்த வகையிலும் அவனாலும் முன்னேற முடியாத எரிச்சல் இவரிடம் இறங்கியது.
“சார் இந்த ஏரியாவில் ஒரு பழைய சிவன் கோயில் இருக்கு சார்… அது ரொம்ப சிதிலமடைஞ்சு இருக்கு. கோயிலை யாரும் பராமரிக்கிறதும் இல்லை. கோயிலுக்கு பூஜை புனஸ்காரம் எதுவுமே நடக்கிறதில்லை. கொஞ்சம் வருஷங்கள் முன்னாடி கோயிலை சுத்தம் செய்யறோம்ன்னு தன்னார்வலர் தொண்டு நிறுவனம் ஒன்னு வந்திருந்தாங்க. அவங்க கோயிலைச் சுத்தம் செய்துட்டு போனாங்க. மறுபடியும் அவங்க எதுக்காகவோ இங்க வந்தபோது தான், கோயிலில் இருந்த ஒரு சிலை காணோம்ன்னு கவனிச்சிருக்காங்க. அதைப்பத்தி உடனே கம்பளைண்ட் ரெஜிஸ்டரும் பண்ணிட்டாங்க சார்…”
“எந்த ஸ்டேஷன்ல?”
“திருவோணம்’ல சார்…”
“ஹ்ம்ம்…” என்றவன் மேலே தொடரும்படி சைகை செய்தான்.
“சார் அந்த விஷயம் எப்படி வி.ஓ.சி ஸ்டேஷனுக்கு வந்ததோ தெரியலை… இன்ஸ்பெக்டர் அந்த பசங்களைக் கூப்பிட்டு கேஸை வாபஸ் வாங்க சொல்லி காதும் காதும் வெச்ச மாதிரி பேசி முடிச்சிட்டாரு சார்…”
“அவனுங்களே சோஷியல் சர்வீஸ் பண்ணறவங்க… பணத்துக்கு விலை போக மாட்டாங்களே…”
“அதுல தான் சார் அந்த ஆளு கில்லாடி. நீங்க இப்படி கம்பளைண்ட் கொடுத்தா சிலை திருடினவன் உஷாராகி தப்பிச்சுடலாம். நாங்க அவனைக் கண்காணிக்க முடியாம போயிடும். இதை கொஞ்சம் வேற விதமா தான் ஹேண்டில் செய்யணும்ன்னு ஏதேதோ பேசி கன்வீன்ஸ் பண்ணிட்டாரு சார்…”
“காதும் காதுமா வெச்சு பேசி முடிச்ச விஷயம் மட்டும் உங்களுக்கு எப்படி வந்துச்சு?”
“சார் அந்த பசங்களை கூட்டிட்டு வந்தது நான் தான்… அதுக்கு என்னை தான் அனுப்பி இருந்தாங்க. அதுனால அந்த பசங்க கிளம்பும்போது அவங்ககிட்ட பேசி விஷயத்தை வாங்கிட்டேன் சார்…”
“இந்த நியூஸ்ல என்ன பிரயோஜனம் இருக்குன்னு என்னை உச்சி வெயில்ல இத்தனை தூரம் அலைய விட்டிருக்கீங்க” சர்வா எரிச்சல் காட்டினான்.
“சார்… அந்த பசங்க காணாம போன சிலையோட போட்டோவை எனக்கு காட்டினாங்க சார். உங்களுக்கு காட்டறதுக்காக நான் ஒரு காஃபி வாங்கினேன். இங்க பாருங்க சார் அந்த போட்டோ…” என அவர் காட்டவும், அதை சர்வா வாங்கி பார்த்தான்.
“முன்னாடி அருண் பாஸ்கரை ஒரு கேஸ்ல பிடிச்சோம்ன்னு சொன்னேனே சார். அது இந்த சிலை அவன் குடோன் பக்கத்தில கிடைச்சதால தான் சார்…” என்றார் ஞானசேகர் படபடப்புடன்.
தாடையைத் தடவி சில நொடிகள் யோசித்தான் சர்வேஸ்வரன். “ஹ்ம்ம்… ஆனா அந்த கேஸ்ல வேற ஒருத்தன் ஆஜர் ஆயிட்டான். இவன் வெளியில வந்துட்டாங்கிறதை தவிர உங்களுக்கு இன்னமும் ஒன்னும் தெரியலை…” என்று கடுமையான குரலில் சொன்னவன், “நிஜமாவே தெரியாதா? இல்லை என்னை சுத்தல்ல விட பார்க்கறீங்களா?” என்று உறுமலோடு கேட்டிருந்தான்.
“அச்சோ சார்… நிஜமாவே அந்த விஷயம் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டரோட முடிஞ்சு போச்சு… வேற யாருக்கும் எதுவும் தெரியலை சார்…” என்று மீண்டும் பதறினார்.
“இதையே தான் நீங்க திரும்ப திரும்ப சொல்லிட்டு இருக்கீங்க… உங்க ஸ்டேஷன்ல இருக்கிற கேஸ் அதைப்பத்தி விவரத்தை கூட உங்களால கலெக்ட் செய்ய முடியலை… உங்களையெல்லாம் எவன்தான் போலீஸில் எடுத்தானோ?”
“சரி வேற வேற எதுவும் உருப்படியான விஷயம் இருக்கா இல்லையா?”
‘இவர் இன்வால்வ் ஆனா, உடனே எல்லா விவரமும் கிடைச்சிடும். இவர் ஏன் அனபீஷியலா இதெல்லாம் ப்ரொஷீட் பண்ணறாருன்னு தெரியலையே…’ என மனதிற்குள் புலம்பியவர், “சார் இந்த விஷயம் சொல்லத்தான்…” எனத் தயக்கமாக இழுத்தார்.
அவன் பார்வையில் உக்கிரம் கூடியது. “ஏன் இப்படி இருக்கீங்க ஞானசேகர்? சர்வீஸ்ல சேர்ந்து எத்தனை வருஷம் ஆச்சு? இன்னுமா இந்த மாதிரி சின்ன வேலைகளைக் கூட செய்ய தெரியாம முழிப்பீங்க. நிஜமா உங்ககிட்ட விவரம் கேட்கிறதும், மண்குதிரையோட ஆத்துக்குள்ள இறங்கறதும் ஒன்னு தான்… வேஸ்ட் ஆஃப் டைம்” என ஆத்திரம் குறையாமல் திட்டி தீர்த்தான்.
“சார் நிஜமாவே கேஸ்ல ஆஜர் ஆனவன் பேரு கூட எனக்குத் தெரியாது சார். அத்தனை சீக்ரெட்டா அந்த இன்ஸ்பெக்டர் மெயின்டைன் செய்யறான். எப்படி இந்த கேஸ் வந்ததுன்னே தெரியலை சார். ஆனா நல்ல பொன்முட்டை இடற வாத்து மாதிரி, இந்த கேஸ் வந்ததுல இருந்து இன்ஸ்பெக்டர் கிட்டயும், சப் இன்ஸ்பெக்டர் கிட்டயும் பணமா கொட்டுது சார்… நல்ல வளமா மாறிட்டாங்க…”
“உங்களுக்கெல்லாம் பங்கு கிடைக்கலைன்னு ஆதங்கம் அப்படித்தானே…”
“அச்சோ இல்லை இல்லை சார்… நாலஞ்சு வருஷமா கை சுத்தம் தான் சார். இப்ப எல்லாம் ரொம்ப கவனமா இருக்கேன்”
“என்னவோ போங்க… இனி உங்க மூலமா இந்த கேஸ்ல ஒரு துரும்பு கூட கிடைக்காதுன்னு புரியுது. உங்களை நம்பி இருக்கிறதும் வீண். இதுவரை நீங்க தந்த தகவல்களே போதும். வேற எதுவும் உருப்படியா வந்தா மட்டும் என் பெர்ஷனல் நம்பருக்கு கூப்பிடுங்க. இப்ப கிளம்புங்க” என்று அவரை அனுப்பியவன், சோர்வோடு தானும் புறப்பட்டான்.
அவனுக்கு சில சந்தேகங்கள் இருக்கிறது தான். இதெல்லாம் இந்த மாதிரி நடந்திருக்கலாம். இதற்கான காரணம் இவர்களாக இருக்கலாம் என்பது போல… ஆனால் எதற்குமே ஆதாரம் கிடைத்தபாடில்லை. சோர்வும் இயலாமையும் மிகுந்த எரிச்சலையும் கோபத்தையும் தந்திருந்தது.