எனக்கொரு வரம் கொடு 19 – சுகமதி

எனக்கொரு வரம் கொடு – 19

இதழ்களில் புன்னகை உறைந்திருக்க, அதை மறைக்க முயன்று தோற்றபடி கணவனுடன் வெளியில் செல்ல கிளம்பிக் கொண்டிருந்தாள் சௌதாமினி.

சர்வேஸ்வரன் கவனிக்கும்போது மட்டும் சிரமப்பட்டு முகத்தில் எதையும் காட்டிக்கொள்ளவில்லை. ஆனால், அவனுக்கும் அவளைக் கவனிக்கும் மனநிலை எல்லாம் இல்லை. என்னவோ எட்டாம் அதிசயமாய் வெட்க வெட்கமாய் வந்தது.

நேற்று மனைவிக்குத் தந்த சிறுசிறு முத்தங்களே அவன் சிலாகிப்பதற்கு போதுமானதாக இருக்க, இன்று இந்த பெரிய முத்தம்… ஆம்! அவன் பாஷையில் இந்த இதழ் தீண்டல் என்னவோ பெரும் சாதனை தான்! அந்த ஆகப்பெரும் சாதனையான முத்தம், அவனை வெகுவாக படுத்தி எடுத்துக் கொண்டிருந்தது.

என்னவோ தானே தன் கட்டுப்பாட்டில் இல்லாதது போலத் தோன்றியது. மந்திரித்து விட்ட கோழி போல ஒரு மார்க்கமாகத் திரிந்தவன், அமைதியாக வெளியில் சென்று அன்னையுடன் அமர்ந்து கொண்டான்.

அவன் வெளியேறியதும் தான் மூச்சுக்காற்றே சீரானது சௌதாவிற்கு. அதன்பிறகு துரிதமாகக் கிளம்பி விட்டாள்.

ரேவதிக்கு இருவரின் தோற்றத்திலும் ஒன்றும் புரியவில்லை. காவல்காரன் திருட்டு முழி முழிப்பதும் வினோதமாக இருந்தது. புறப்பட்டு வெளியே வந்த மருமகள் முகம் பார்க்க மறுப்பதும் பெரும் வினோதமாக இருந்தது.

இருவரையும் மாறி மாறி பார்த்தவர், இருவருமே பேசும் வழியை காணோம் என்றதும், “பார்த்து போயிட்டு வாங்க…” என வழியனுப்பி வைத்தார். அதற்கும் வாயிலிருந்து முத்து சிதறி விழுந்து விடும் என்பது போல, ஒரு வார்த்தை கூட உதிர்க்காமல் தலையை அசைத்துவிட்டு விடைபெற்றாள் சௌதா.

அவளது செய்கையைப் பார்த்து, “என்ன ஆச்சு இவளுக்கு இன்னைக்கு?” என அவர்கள் தலை மறைந்ததும் வாய்விட்டே புலம்பினார் ரேவதி.

சௌதாமினி வெளியில் சென்றதும் பைக்கை உருட்டிக் கொண்டிருந்தான் சர்வேஸ்வரன். கார் எடுக்க வேண்டியது தானே மனதிற்குள் சுணங்கியவளுக்கும் என்னவோ கூச்சமாகத் தான் இருந்தது.

சர்வாவோ, “டராபிக்கா இருக்கும். கார்ல போனா லேட் ஆயிடும்…” என்றான் அவளது பார்வைக்கு விளக்கமாக. இவளும் எதுவும் பேசாமல் அமைதியாக ஏறிக்கொள்ளப் போனாள்.

“ரெண்டு பக்கமும் கால் போட்டு உட்காரு” என்று மீண்டும் சொன்னான்.

அவள் கடுப்பாக, “ம்ப்ச் இந்த வண்டி டிசைன் அப்படி…” என்று அலுத்துக் கொண்டான் அவன்.

“அதுக்கு எதுக்கு இந்த மாதிரி வண்டி வாங்கணும். சாதாரணமா வாங்கியிருக்க வேண்டியது தானே…” அவன் காதில் விழுமாறு முணுமுணுத்தவள், அமைதியாக ஏறி அமர்ந்து கொண்டாள். காவலன் கள்ளச் சிரிப்பு சிரித்துக் கொண்டான். ஆனால், என்ன நேரமோ என்னவோ பைக் ரொமான்ஸ் எல்லாம் அவனுக்குச் சுத்தமாக வரவில்லை.

என்னவோ மனம் வெகுவாக தடுமாற்றத்தில் இருந்தாலோ என்னவோ வாகனம் மித வேகத்தில் சென்று கொண்டிருந்தது.

சௌதா சற்று எட்டி ஸ்பீடோ மீட்டரைப் பார்த்துவிட்டு, “எதுக்கு இப்ப நகர்வலம் போயிட்டு இருக்கீங்க” என்று முறைத்தாள்.

‘இவ வேற நிலைமை புரியாம…’ என மனதோடு புலம்பியவன், கொஞ்சமே கொஞ்சம் வேகத்தை கூட்டினான். சுத்தம் இன்னைக்கு போன மாதிரிதான் என்று தோன்றியது மனையாளுக்கு.

ஆமா எங்கே போக போறோம் அவளுக்கு இன்னமும் அது தெரியவில்லை. அவனோ பிரபல மால் ஒன்றிற்கு அழைத்து சென்றான்.

இருவரும் அமைதியாகவே நடக்க, அவள் தோளோடு தோள் உரச கூட சங்கடப்பட்டவனை அவள் வினோதமாக பார்த்தாள். என்னடா இன்னைக்கு போலீஸ் பயங்கரமா பம்புது என்னவா இருக்கும்? என யோசித்தவளுக்கு, தன்னோடான நெருக்கம் தான் அவனை உள்ளுக்குள் தகிக்க செய்கிறது என்று இன்னமும் புரியவில்லை.

சர்வா அமைதியாக மாலில் இருந்த தியேட்டருக்குச் செல்ல, பாருடா டிக்கெட் எப்போ புக் செஞ்சாராம்? என அவளுக்கு வியப்பாகத்தான் இருந்தது. அவனோ அமைதியாகச் சென்று டிக்கெட் கவுண்டரில் டிக்கெட் கேட்க, அவளுக்குச் சிரிப்பை அடக்கவே முடியவில்லை.

ஓ இவர் வந்து டிக்கெட் கேட்டா… இந்தாங்கன்னு சொல்லித் தந்து அனுப்பிடுவாங்களாமா? ஷோ டைமிங் கூட தெரியாம, என்ன படம் ஓடுதுன்னு கூட தெரியாம எத்தனை சேட்டை?

அவனோ முகத்தைச் சுருக்கிக் கொண்டு திரும்பி வந்தான். “இந்த மால்ல நாலஞ்சு தியேட்டர் இருக்கும் போல… ஒன்னுலேயும் டிக்கெட் இல்லைன்னு சொல்லறான்…” என லூசுப்பசங்க என்ற பாவனையில் சொல்ல, “கடைசியா எப்போ மூவி பார்த்தீங்க?” என சிரிக்காமல் விசாரித்தாள் சௌதா.

அவளது குரலில் எதுவோ புரிய, இவ எதுவும் கிண்டல் செய்யறாளோ என யோசித்தவன், அதை விடுத்து பொறுப்பாகவே, “சரியா ஞாபகம் இல்லை… கடைசியா தலைவர் படம் ஏதோ பார்த்த ஞாபகம்…” என பதில் சொன்னான்.

“என்ன லிங்கா மூவி பார்த்திருப்பீங்களா?” என அவளே ஏழெட்டு வருடங்கள் முன்பு வந்த படத்தை குறிப்பிட்டு கேலியாகக் கேட்க, அது விளங்காதவனோ, “இல்லை ஷங்கர் படம்…” என பதிலளித்தான்.

“எந்திரன் 2 வா?” என அவள் வாயைப் பிளக்க, “இல்லைம்மா சிவாஜி படம்… ஸ்ரேயா எல்லாம் இருக்குமே… மொட்டை பாஸ்…” என கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களுக்கு முன்பு வந்த திரைப்படத்தைக் கூறி அவளது தலையைச் சுற்ற வைத்தான்.

அவளது பாவனையைப் பார்த்து, “என்னாச்சு சௌதி?” என அவன் விளங்காமல் கேட்க, ‘ஆரம்பிச்சுட்டாரா சௌதி, அரேபியான்னுட்டு…’ என கடுப்பாக நினைத்தவள், இழுத்துப் பிடித்த பொறுமையுடன், “மூவி போக முதல்ல டிக்கெட் புக் செய்யணும்… சும்மா நானும் போலீஸுன்னு திரிஞ்சா ஆச்சா?” எனத் திட்டினாள்.

“ஓஹோ… சரி உனக்குத் தான் தெரிஞ்சிருக்கே முன்னாடியே சொல்ல வேண்டியது தானே…” என அவளிடம் திருப்பி கேட்டான்.

“ஆமா… எங்க வீட்டுக்காரர் வானத்துல இருந்து திடீர்ன்னு குதிச்சு உடனே வெளிய கிளம்ப சொல்லுவாருன்னு நான் என்ன கனவா கண்டுட்டு இருந்தேன்” என அவள் அதற்கும் முறைக்க, “ஓ… மேடம் கனவுல கூட இந்த மாதிரி சம்பவங்கள் எல்லாம் நடக்க மாட்டீங்குதுன்னு சொல்லற… விடு எனக்கு கிஷோர்ன்னு ஒரு வெட்டி பையன் பிரண்டா இருக்கான். அவன் கிட்ட கேட்டா இதுக்கெல்லாம் நல்லா ட்ரைன்னிங் தருவான். அப்பறம் எப்படி அசத்தறேன்னு பாரு…” என குப்புற விழுந்தும் மண் ஒட்டவில்லை என்ற பாவனையில் தோரணையாகச் சொல்ல, அது அவளைக் கவரத்தான் செய்தது.

மெலிதாக சிரித்தவளிடம், “மூவி முடிச்சுட்டு, டின்னர் கூட்டிட்டு போகணும்ன்னு நினைச்சேன். ஹோட்டல் எல்லாம் அடிக்கடி போவேன் தான் ஆக புக் பண்ண தேவை இல்லை. பட் டின்னருக்கு முன்னாடி என்ன பண்ணலாம்? ப்ளீஸ் கிவ் மீ சம் சஜஷன்…” என அவளிடமே கேட்டு வைத்தான்.

“மால்ல தானே இருக்கோம். வாங்க சுத்துவோம்…” என அவளும் சொல்ல, “குட் ஐடியா…” என இணைந்து கொண்டான். குட்டி பர்சேஸ் முடிப்பதற்கும் டின்னர் நேரம் தொடங்குவதற்கும் சரியாக இருந்தது.

ஹோட்டல் சென்றும் சமத்துக் கணவனாக நடந்து கொண்டவனைப் பார்க்கையில் அவளுக்குக் கர்வமாகக் கூட இருந்தது. சஞ்சலங்கள் பெருமளவு குறைந்து மகிழ்வான சூழலில் இருந்தாள்.

வீட்டிற்குச் சென்ற பிறகு, “நாளைக்கு காலையிலேயும் எங்கேயும் போகலாம் சௌதி… மதியம் வரை நான் பிரீ தான். எங்க போகலாம்ன்னு நீயே முடிவு பண்ணி வை…” என ஆசையாகச் சொன்னவனை முறைத்தவள், “சௌதி சௌதின்னு கூப்பிடாதீங்களேன்…” என்றாள் முகம் சுளித்து.

அழகாக புன்னகைத்தவன் சற்றே அவளை நெருங்கி வந்து, “உனக்குன்னு பிரத்தியேகமா ஒரு பேரை சொல்லி கூப்பிடணும்ன்னு எனக்கு தோணும். எல்லாரும் சௌதா, மினி சௌமின்னு உன்னைக் கூப்பிடவும், அதென்ன மத்தவங்க மாதிரியே நானும் கூப்பிடறது… அப்படின்னு ஒரு வீம்பு வந்து, ஸ்பெஷலா கூப்பிடணும்ன்னு நான் இப்படி கூப்பிட தொடங்கிட்டேன். என்ன பண்ண எனக்குச் செல்ல பேரு வைக்க எல்லாம் தெரியலையே…” என்றவன் அவள் அவனிடமிருந்து விலகுவதை உணர்ந்து,

அவளை இடையோடு பின்னிருந்து அணைத்தபடி வெகுவாக குரலைத் தணித்து, “நீ வேணா சொல்லி கொடேன் உன்னை எப்படி கூப்பிடன்னு” என்று அவள் காது மடல் உரசி கிசுகிசுப்பாக கேட்டான்.

முதல்முறை அவனிடமிருந்து விலகத் தோன்றாமல் தன் உடல் சிலிர்ப்பை அவன் அறியக் கூடாதே என்ற தவிப்புடன் நின்றிருந்தாள் சௌதா.

அவள் விலக மறுத்ததை அவள் உணர்ந்தாளோ என்னவோ சர்வா உணர்ந்திருந்தான். காதை உரசிய இதழ்கள் தொடர்ந்து அவளது கழுத்தின் ஓரம் ஊற, ஏதோ ஒரு பெரும் சூழலில் சிக்கியதை போலப் பரிதவித்துப் போனவள் வேகமாகத் திரும்பி அவனை அணைத்துக் கொண்டாள்.

இருவருக்குள்ளும் எவ்வித தடைகளும் இல்லையா என்றால், அதற்கான பதில் திருப்திகரமானது இல்லை தான்! ஆனால், மனதோடு புதைந்திருக்கும் ரகசியங்களை இருவருமே மனம் விட்டு பேசவும் தயாராக இருக்கவில்லையே! அதற்காக அவர்களுக்குள் இருக்கும் காதல் பொய்யெனப் போய்விடாதே! அவரவர் சூழல், அவர்களை அவ்வாறு நடந்து கொள்ள வைக்கிறது.

தடைகளைத் தகர்த்தெறியவும் முடியாமல், தன் மனைவியைத் தள்ளி வைத்திருக்கவும் முடியாமல் மனதோடு போராடியவனுக்கு மேற்கொண்டு முன்னேற அச்சமாக இருந்தது. அவளை இறுக்கமாக அணைத்தவன் தன் தேவையை அவளுக்கு உணர்த்திய கையோடு அவளை விட்டுப் பிரிந்து நின்றான்.

என்ன முயன்றும் அவனால் முன்னேற முடியவில்லை. எதுவுமே சரியாகவில்லை என்பது ஒருபுறம் என்றாலும், என்னவோ அவசரப்படுகிறோமோ என்ற அச்சமும் இன்னொருபுறம் அவனைச் சூழ்ந்தது. திருமணம் அவன் கட்டாயத்தில் அவசரகதியில் தானே நடந்திருந்தது.

அவன் தவிப்பு புரிய மீண்டும் அவனை அணைத்து நின்றாள் மனையாள் தன் சம்மதத்தை உணர்த்தும் விதமாக! அதன்பிறகு சர்வேஸ்வரன் தனது முன்னேற்றத்தைத் தடுக்க நினைக்கவில்லை.

கூடலின் பொழுதுகள் நீண்டு கொண்டே போக, சௌதா அயர்ந்து தான் போனாள்.

அடுத்த நாள் முதலில் விழித்தது சர்வேஸ்வரன் தான். மனையாளை எழுப்ப மனம் இல்லாமல் வெகுநேரம் சுற்றித் திரிந்தவன், “எங்கே போகலாம்ன்னு எதுவும் முடிவு பண்ணி இருக்கியா?” என மனைவியின் முன்னுச்சி முடிகளை ஒதுக்கியவாறு கேட்டான்.

அவள் புரண்டு படுத்தாள். “அப்ப நான் வேளைக்கே கிளம்பவா? எங்கேயும் வெளிய போக வேண்டாமா?” என மீண்டும் கேட்க, “அது தூங்கி எழுந்து பேசிக்கலாமே சரு பிளீஸ்…” என்றாள் கெஞ்சுதலாக.

“எப்ப எந்திரிப்ப? அம்மா வேற நீ சாப்பிட வரலையேன்னு என்கிட்ட கேட்டுட்டே இருக்காங்க” பரிதாபமாக அவன் சொல்லி முடித்ததும் தான் பதறி அடித்துக் கொண்டு எழுந்தமர்ந்தாள்.

“சாப்பிடவா? அப்ப மணி என்ன?” என அவசரமாகக் கடிகாரத்தைப் பார்க்க அது ஒன்பது எனச் சிரித்தது.

“நான் இதுவரை இத்தனை நேரம் தூங்கினதே இல்லை… எல்லாம் உங்களால…” என அவன் தோளில் அடித்தவள், “இன்னைக்கு என்னோட வெளியே வரதா சொல்லி இருக்கீங்க பேச்சு மாறாதீங்க நான் போயி சீக்கிரம் கிளம்பி வரேன்” எனக் குளியலறைக்குள் புகுந்தாள்.

துரிதமாகக் கிளம்பி, உணவு உண்டு இதோ கணவனோடு கிளப்பியும் விட்டிருந்தாள். தஞ்சாவூரில் இருந்த மனநல மருத்துவமனை ஒன்றிற்கு அவள் போகலாம் என்று சொல்ல, அவள் சித்தப்பாவின் மனநிலை பாதிக்கப்பட்ட பிறகு அவள் அடிக்கடி அங்குப் போவதை அறிந்திருந்தவன், அவள் சொற்படி அங்கேயே அழைத்துச் சென்றான்.

அவன் விளக்கம் கேட்கவில்லை என்றபோதும், அவளாகவே, “இல்லை முன்ன எல்லாம் இவங்களை பத்தி பெருசா நான் யோசிச்சது இல்லை… ஆனா சித்தப்பாவுக்கு இப்படி ஆன பிறகு அடிக்கடி வரேன் தான்… அப்பா தானே அவங்களோட பழக்க வழக்கங்களும் அதை அங்கே வேலை செய்யறவங்க சமாளிக்கிற விதமும் நமக்குப் புரியும். ஆனா அவங்ககிட்ட எல்லாம் பழகின அப்பறம் தான் புரிஞ்சது சர்வா…” என்றபோது, தீவிரமாகக் கணவன் இடையிட்டான் “இந்த சருன்னு கூப்பிடறது எல்லாம் நம்ம ரூமுக்குள்ள மட்டும் தானா?” என்று.

“நான் என்ன சொல்லிட்டு இருக்கேன்… உங்களோட….” என அவள் முறைக்க, “இல்லைடி நீ கூப்பிட்டது அழகா இருந்துச்சு…” என ஐஸ் வைக்க, பல்லைக் கடித்தவள், “சரி சரி சருருரூரூ… போதுமா…” என்க, “பிகு பண்ணாம சொல்லுடி…” என்று முறைத்தான்.

அவனை முறைத்துவிட்டு விட்ட இடத்திலிருந்து மீண்டும் தொடர்ந்தாள். “எதிர்பார்ப்பே இல்லாத அன்பு செலுத்தும் மனுஷங்க சர்… சரு… அவங்க எல்லாம். கொஞ்சம் கூட தன்னலம் பார்க்க மாட்டாங்க. குழந்தைங்க மாதிரி தான் அவங்களும். தலைவலி, காய்ச்சல்ன்னா கூட வாய்விட்டுச் சொல்லத் தெரியாது…” என அவள் சொல்லச் சொல்ல,

“கோபத்தைக் கூட எப்படி வெளிக்காட்டன்னு தெரியாது” என்றான் சர்வா செல்லத்துரையின் நினைவில்.

“ஹ்ம்ம் ஆமா சரு அவங்களோட கோபத்தை ரொம்ப பக்குவமா தான் ஹாண்டில் செய்யணும். அவங்க சோர்வா இருக்கும்போது நாம அவங்ககிட்ட பேசணும். அவங்க கிட்ட நம்ம மனசு விட்டு பேசணும். நமக்கு சமம்ன்னு புரிய வெச்சிட்டே இருக்கணும். சின்ன சின்ன வேலைகள் கொடுத்து அவங்களை உயிர்ப்பா வெச்சிருக்கணும்…” என்று சொல்லிக்கொண்டே சென்றவள், “சித்தப்பாவுக்கு தோட்டம் வைக்கும் வேலையை நாங்க தந்த மாதிரி… நீங்க ரொம்ப சப்போர்ட்டா இருந்தீங்க சரு…” என்றாள் மனதார.

அவள் கைகளை ஆதரவுடன் பற்றி வருடிக் கொடுத்தான். “அவங்க மனசு விட்டு பேசுவாங்களா சௌதி…” என்றவன் சங்கடமாகச் சிரித்து விட்டு, “வேற எப்படி கூப்பிடறது பேபி, டார்லிங், பட்டு, செல்லம்… இது எதுவும் ட்ரை செய்யவா” என்று கேட்க, “பரவாயில்லை சரு உங்களுக்கு தோணுற மாதிரி கூப்பிடுங்க நான் ஆராய்ச்சி எல்லாம் இனி செய்யலை…” என்றாள்.

அவள் சாதாரணாமாகத்தான் அதை மொழிந்தாள். ஆனால் காதல் சொட்டியது. மெல்லிய குரலில் “ஐ லவ் யூ சௌதி…” என்றான் காதலன். அவளோ பதில் சொல்லாமல் ஜன்னலின் மறுபுறம் வேடிக்கை பார்க்க, ‘நீயும் சொல்லேன்டி’ என அவன் மனம் ஆசையாக அவளிடம் எதிர்பார்த்தது. அவள் எப்பொழுது சொல்வாளோ என்னும் அவனது ஏக்கம் எப்பொழுது தான் தீருமோ?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

எனக்கொரு வரம் கொடு 9 – சுகமதிஎனக்கொரு வரம் கொடு 9 – சுகமதி

எனக்கொரு வரம் கொடு – 9   அதிர்ச்சி மொத்தமும் சௌதாமினிக்கு மட்டும் தான். செல்லத்துரையோ சிறு பிள்ளையின் துள்ளலோடு இருந்தார். பட்டவர்த்தனமாகத் தெரியாவிட்டாலும் சர்வேஸ்வரனின் நிலை கூட அதுவே தான் என்பதை அவனின் பூரித்த முகம் கட்டியம் கூறியது.  

எனக்கொரு வரம் கொடு 5 – சுகமதிஎனக்கொரு வரம் கொடு 5 – சுகமதி

எனக்கொரு வரம் கொடு – 5   அந்த மருத்துவமனை வளாகமே மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது. தடயவியல் நிபுணர்கள் வந்தவர்கள் ஏதேனும் ஆதாரம் கிடைக்கிறதா என்று தங்கள் சோதனையை தொடங்கியிருந்தனர்.   சர்வேஸ்வரனும் ஏதேனும் துப்பு கிடைக்கிறதா என்பதுபோல நோட்டம் விட்டுக்

எனக்கொரு வரம் கொடு 10 – சுகமதிஎனக்கொரு வரம் கொடு 10 – சுகமதி

எனக்கொரு வரம் கொடு – 10 சர்வாவின் எண்ணம் என்னவாகவிருக்கும் என்பதை உணவருந்த வரும்போது சித்தியின் பேச்சு சௌதாமினிக்கு தெரிவித்தது. “சர்வா எதுவும் சொல்லமையே கிளம்பிட்டானே மா… இங்கே சாப்பிட கூட இல்லை…” சித்தியின் கவலை அவருக்கு. மகளை அளவிடுவது போலப்