எனக்கொரு வரம் கொடு – 18
திறந்திருந்த ஜன்னலின் ஓரம் அமர்ந்து கொண்டு, கைவிரல் நகங்களைத் தீவிரமாக ஆராய்ந்து கொண்டிருந்தாள் சௌதாமினி. உண்மையில் கணவனிடம் அவளுக்கு என்னென்ன எதிர்பார்ப்புகள்? நேற்று சர்வேஸ்வரன் கேட்டதிலிருந்து அவளுக்குள்ளும் இதே வினா தான்!
எதுவுமே இல்லை என அடித்துக் கூறி மறுக்க முடியாதபடி அவளுள் ஓர் எதிர்பார்ப்பு இருக்கிறது தான்! ஆனால், அதை ஒரு காவலனாக, இந்த நாட்டின் குடிமகனாக தன் கணவனால் நிச்சயம் செய்ய இயலாது என்பது அவளுக்கே நிச்சயம்! அதை எண்ணும்போதே நீண்ட பெருமூச்சு எழுந்தது.
‘நான் தான் எத்தனை சுயநலவாதியாக இருந்து வருகிறேன்’ என எண்ணியவளின் கண்கள் நீரை பொழிய, அதைத் துடைக்கக் கூட தோன்றாமல், அப்படியே அசைவற்று அமர்ந்திருந்தாள்.
அவள் மனதினுள் இப்பொழுது ஒரே வேண்டுதல் தான். நான் என் கணவனிடம் எதையும் எதிர்பார்க்கும் சூழலில் என்னை நிறுத்தி விடாதே! எங்கள் வாழ்க்கையில் இனியும் எந்த இடரையும் தாங்கும் வல்லமை எனக்கு இல்லை என்பது மட்டும் தான்!
ஆனால், அதே மாநகரில் அவள் வேண்டுதலுக்கு எதிர்த்திசையில் சில பணிகள் வேகமெடுத்து நடக்கத் தொடங்கியிருந்தது. விதி வலியதா? வாய்மை வலியதா? யான் அறியேன்!
தன்னை மறந்து, தன் சிந்தனையில் சுழன்று கொண்டு கண்ணீர் வடித்தபடி அமர்ந்திருந்தவளை ரேவதி கவனித்ததை சௌதாமினி அறியவில்லை.
மருமகளின் கண்ணீர் எதற்கென்று புரியாமல், ஒருவேளை கணவன், மனைவி இருவருக்குள்ளும் ஏதேனும் சண்டையாக இருக்குமோ என்ற எண்ணத்தில், உடனடியாக மகனுக்கு அழைத்து விட்டார் ரேவதி.
“ம்ம்… சீக்கிரம் சொல்லுங்க மா. மீட்டிங்ஸ் இருக்கு…” அழைப்பை ஏற்றவுடன் அவசரம் காட்டினான் மகன்.
சர்வாவின் அவசரத்தில் அன்னையின் நிதானம் பறந்தது. “ஏன்டா சௌதாவை தான் கட்டிப்பேன்னு அத்தனை அடம் பிடிச்சு கட்டிக்கிட்ட? இப்படி சண்டை போடத் தான் கட்டிட்டு வந்தியா?” என்றார் சுள்ளென்று.
“என்னது சண்டை போட்டேனா? நானா?” வெளிப்படையாக அதிர்ந்தான் மகன். இப்பொழுது தான் அணைப்பு, சிறு முத்தம் என அவன் முன்னேறியிருக்க அன்னை இப்படிக் கேட்டு வைத்தால் அவனும் தான் வேறென்ன செய்வான்?
அவனது அதிர்வு புரிய, “அப்ப நீ எதுவும் அவ கூட சண்டை போடலையா?” என்றார் ரேவதி சந்தேகமும் குழப்பமுமாக.
“ம்ப்ச்… முதல்ல என்ன நடந்ததுன்னு சொல்லுங்க மா…” விவரத்தைச் சொல்லாமல் சுற்றி சுற்றி கேள்வி கேட்டால் எப்படி பதில் சொல்வது என்றிருந்தது அவனுக்கு.
“இல்லை… இன்னைக்கு அவ முகமே சரியில்லை. ரொம்ப வாடி போயி இருந்தது. தனியா உட்கார்ந்துட்டு இருந்தா…” தயங்கித் தயங்கி அவர் ஒவ்வொன்றாய் சொல்ல, “அழுதுட்டு இருந்தாளா மா?” என்றான் கவலை தொனிக்க.
“ம்ம்…”
“சரி அவளை டிஸ்டர்ப் பண்ணாம விடுங்க. அடிக்கடி அவங்க சித்தப்பாவை பத்தி கவலை வந்திடும் மேடமுக்கு…” என்றான் அவளைப் புரிந்தவனாய்.
“ஓ…” என விஷயத்தை உள்வாங்கியவர், “அங்கே வேணா கூட்டிட்டு போயிட்டு வரட்டுமா?” என்று அக்கறையாகக் கேட்டார்.
“இல்லம்மா நேத்து தான் கற்பகம் அத்தை வந்திட்டு போனாங்க. இன்னைக்கே நீங்க ரெண்டு பேரும் போயி நின்னா என்னவோ ஏதோன்னு நினைச்சுப்பாங்க. முடிஞ்சா நான் இன்னைக்கு சீக்கிரமா வீட்டுக்கு வர பார்க்கிறேன். அவளை எங்கேயும் வெளிய கூட்டிட்டு போயிட்டு வரேன்” என்றான் சர்வா.
“நீ சீக்கிரம் வருவியா? நான் எவ்வளவு சீரியஸா பேசிட்டு இருக்கேன். நீ காமெடி பண்ணிட்டு இருக்க…” ரேவதி மகனை அதட்ட, “அம்மா… இப்ப நீங்க தான் காமெடி பண்ணறீங்க” என பல்லைக் கடித்தான் காவலன்.
“நீ நேர்ல வந்து நின்னா வேணா நம்பறேன். இப்ப அமைதியா போனை வை போ…” என ரேவதி அலட்சியமாகச் சொல்லிவிட்டு அழைப்பை துண்டிக்க, நமக்கு எதிரி வீட்டுக்குள்ளேயே தான் இருக்கு என சலிப்பாக முணுமுணுத்தான் அவன்.
சர்வேஸ்வரன், அவனுடைய அசிஸ்டண்ட்ஸ் பிரசாந்த் மற்றும் ஓவியாவுடன் ஒரு மீட்டிங்கை ஏற்பாடு செய்திருந்தான். அவர்கள் இருவரும் தாங்கள் இதுவரை மலர் ஹாஸ்பிட்டல் கேஸ் சம்பந்தமாகச் சேகரித்த மொத்த தகவல்களோடு அவன்முன் ஆஜராகியிருந்தனர்.
உண்மையில் சர்வேஸ்வரன் அவர்களை அழைத்தது, மலர் ஹாஸ்பிட்டல் கேஸ் எந்த அளவில் இருக்கிறது என்பதை மேலோட்டமாக கேட்டுவிட்டு, அதை தற்போதைக்கு கிடப்பில் போட வேண்டும் என்று சொல்லத்தான்.
ஏனென்றால், சிலை கடத்தல் கேஸில் டி.ஐ.ஜி., ஜெயந்த் முரளி மிகவும் பிரஷர் தருகிறார். எனவே அந்த பணியில் இன்னும் சில நம்பகமான நபர்களை இணைக்கலாம் என சர்வா யோசித்திருக்க, அதற்குத்தான் இவர்களை அந்த கேஸினுள் இணைப்பதற்காக இந்த மீட்டிங்கை ஏற்பாடு செய்திருந்தான்.
முதலில் ஓவியா, கடைசியாகத் தந்து சென்ற பதிமூன்று பைனல் லிஸ்ட்டில் இருந்து ஷார்ட் லிஸ்ட் செய்த பட்டியலைக் காட்டி சர்வாவிடம் விளக்கினாள். இப்பொழுது இறுதி பட்டியலில் இரண்டே இரண்டு நபர்கள் தான் வந்திருந்தனர்.
சர்வேஸ்வரன் யூகித்து வைத்திருந்த பெயரும் அந்த இறுதி பட்டியலில் இருக்க, அவன் பார்வை அந்த பெயரில் விநாடிக்கும் குறைவான நேரம் நிலைத்து மீண்டது. அவன் மனக்கண்ணில் கவலை தோய்ந்த, ஓய்ந்து போன தோற்றத்தில் திருமணத்திற்கு வந்திருந்த தனபாக்கியம் வந்து போனார். ஒருவித இயலாமையிலும் கையறு நிலையிலும் தன்போல நீண்டதாய் ஒரு பெருமூச்சு எழுந்தது.
எப்பொழுதோ நடந்த குற்றம் இப்பொழுது வருத்தம் காட்டுவதில் தான் என்ன சரியாகப் போகிறது? அன்று தவறு செய்தவர்களுக்கு இன்று தண்டனை பெற்றுத் தந்தாலாவது பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்குக் கொஞ்சமேனும் ஆறுதல் கிடைக்கலாம்! நிச்சயம் நியாயம் கிடைத்தே தீர வேண்டும் என்பதில் மட்டும் தீர்மானமாய் இருந்தான். மூச்சுக்கு ஏங்கி அந்த ஆன்மா எப்படித் துடிதுடித்து இருந்திருக்கும்? அவரை காணாது அவரது குடும்பத்தினர் எத்தனை வேதனை அடைந்திருப்பார்கள்? இத்தனை வேதனைகளை பரிசளித்தவர்களுக்குத் தண்டனை கிடைக்காவிட்டால் எப்படி? அவன் உள்ளுக்குள் கருவி கொண்டிருந்தான்.
“சார்…” என அவனது சிந்தனையைக் கலைத்து, அவனது முகத்தையே குழப்பமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் ஓவியா.
அவன் நிமிர்ந்து நோக்கவும், “இந்தமுறை ரொம்ப கவனமா தான் சார் செஞ்சேன். இந்த முறையும் எதையும் விட்டுடேனா?” என்று கேட்டாள்.
“நோ நோ… குட் ஒர்க்…” என்றான் மனமார. அவளது விளக்கங்களின் தெளிவு அவனை பாராட்டத் தூண்டியது. உண்மையிலேயே ஓவியா அதிக மெனக்கெட்டு இருந்தாள் என்பது அவளது விளக்கத்திலேயே புரிந்தது.
ஹப்பாடா என இப்பொழுது தான் மூச்சே சீரானது ஓவியாவிற்கு.
அடுத்து பிரசாந்த் முறை! “இவன்தான் சார் நாம தேடிட்டு இருக்கிற மலர் ஹாஸ்பிட்டல் பழைய வாட்ச்மேன் மோகன். இப்ப வேலூரில் இருக்கிறான். லோக்கல் ஸ்டேஷன்ல அவனை கண்காணிக்க சொல்லியிருக்கேன் சார்” என ஒரு புகைப்படத்தை எடுத்துக் காட்ட, எலும்பும் தோலுமாய் பெரிய கண்ணாடி அணிந்து இருந்த உருவம் அது மோகன் தானா என்ற சந்தேகத்தைத் தந்தது.
அதே கோப்பையில் மருத்துவமனை ரெக்கார்டில் இருந்து எடுக்கப்பட்ட மோகனின் படத்திற்கும், இப்பொழுது காட்டிய படத்திற்கும் துளியும் சம்பந்தம் இல்லை.
இரண்டு படங்களையும் மாறி மாறி பார்த்தபடி பிரசாந்தை கேள்வியோடு சர்வா நோக்க, “சார் இது மோகன் தான் சார். அடையாளம் தெரிய கூடாதுங்கிறதுக்காக கடந்த ஒரு வருஷமா வெறும் ஒருவேளை மட்டும் சாப்பிட்டு இப்படி இளைச்சிருக்கான் சார். கொரானா தடுப்பூசி போட ஆதார் நம்பர் தந்திருப்பானே… அதை வெச்சு தான் சார் இவனை ட்ரேஸ் செஞ்சோம்” என பிரசாந்த் விளக்கம் சொல்லி முடிக்க, ஒரே வருடத்தில் தோற்றத்தில் இத்தனை மாறுபாடு கொண்டு வர முடியுமா என சர்வாவுக்கு ஆச்சரியமாக இருந்தது.
அதுவும் இத்தனை மெனக்கெட்டுச் செய்திருக்கிறான் என்றால், நிச்சயம் காவல்துறையின் கண்ணில் மண்ணை தூவுவதற்காக மட்டும் இருக்காது என்று சர்வாவுக்கு உறுதியாக புரிந்தது.
இத்தனை தூரம் மெனக்கெட்டவனை மெச்சுதலாகப் பார்த்து, “வெல்டன்” என்று பாராட்டினான் சர்வேஸ்வரன்.
கல்யாணம் ஆகிட்டா சேஞ்ச் தெரியும்ன்னு ஓவியா சொன்னாளே அது இதுதானா என சர்வாவின் பாராட்டில் ஆச்சரியப்பட்டுப் போனான் பிரசாந்த்.
இருவருக்கும் பாராட்டு கிடைத்ததை இருவருமே அதிசயம் போல நினைத்தனர். அவர்களது வியந்த பார்வையை சர்வா சட்டை செய்யாமல், தன் மனக் கணக்குகளில் மூழ்கியிருந்தான்.
மலர் ஹாஸ்பிட்டல் கேஸை தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம் என்று யோசித்த சர்வா, இப்பொழுது விசாரணை முக்கிய கட்டத்தை எட்டி இருப்பதைப் பார்த்ததும், தனது முடிவிலிருந்து பின்வாங்கினான்.
கேஸ் இவர்களின் பிராக்ரஸ் படியே செல்லட்டும். கடத்தல் சிலை பற்றிய கேஸில் நாம் வழக்கமாக முன்னேறுவது போலவே முன்னேறுவோம் என முடிவெடுத்தவன், அடுத்துச் செய்ய வேண்டிய வேலைகள் குறித்து இருவருக்கும் இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் தந்தான்.
அதன்படி, பிரசாந்த் வாட்ச்மேன் மோகனை சீக்ரெட்டாக கைது செய்து அவனை கஸ்டடியில் எடுத்து விசாரணை செய்து விவரங்களைச் சேகரிக்க வேண்டும்.
ஓவியா கடைசியாகப் பட்டியலில் இருக்கும் இருவரின் வீட்டிலும் ரகசியமாக விசாரணை செய்து அவர்களது டி.என்.ஏ., சேம்பிள்களை கலெக்ட் செய்து, தங்களுக்கு கிடைத்திருக்கும் எலும்புக்கூடு யாருடையது எனக் கண்டுபிடிக்க வேண்டும்.
இருவரின் வேலைகளும் பரம ரகசியமாக இருக்க வேண்டும் என்பதைத் திரும்பத் திரும்ப வலியுறுத்திச் சொல்லி அனுப்பி வைத்தான்.
ஒரு கொலை கேஸ்… இதில் இத்தனை பத்திரம் சொல்லவும், ரகசியம் பாதுகாக்கவும் என்ன இருக்கிறது? அதிலும் இந்த கொலை நடந்து நிச்சயம் சில ஆண்டுகள் ஆகியிருக்கும். குற்றவாளிகளே இப்பொழுது அதனை மறந்து உலாவி கொண்டிருப்பார்கள் என எண்ணியவர்களுக்கு சர்வா ஏன் இப்படிச் சொல்கிறான் என்பது மட்டும் புரியவே இல்லை என்றாலும், சர்வா காரணம் இல்லாமல் எதையும் சொல்ல மாட்டான் என்று இருவருமே அவனை முழுமையாக நம்பினர். அதனால் அவன் சொற்படியே தங்கள் வேலைகளைத் திட்டமிட்டனர்.
நல்லவேளையாக இதற்கு பின்புலத்தில் இருக்கும், அதாவது சர்வா இருப்பதாகச் சந்தேகிக்கும் கேஸ் பற்றி இவர்கள் இருவருக்கும் தெரிந்திருக்கவில்லை. தெரிந்திருந்தால் என்ன நிலையில் இருப்பார்களோ தெரியவில்லை.
மலர் ஹாஸ்பிட்டல் கேஸ் பெரியளவில் முன்னேறி இருப்பதால், சர்வா கொஞ்சம் இலகு மனநிலையில் இருந்தான். கேஸில் அவனே எதிர்பார்க்காமல் ஏற்பட்ட முன்னேற்றம் அவனை மிகவும் இலகுவாக இருக்க வைத்தது.
மீட்டிங் முடிந்ததும், அன்னை ரேவதி சொன்ன விஷயம் நினைவில் வர, மனைவியை நினைத்து அவனுக்குக் கவலையாக இருந்தது. ‘என்கிட்ட எல்லாம் ஒப்படைச்சிட்டு, இனியாவது நீ சஞ்சலம் இல்லாம இருக்க வேண்டியது தானே? எதுக்கு இத்தனை தூரம் உன்னை நீயே வருத்திக்கிற?’ மனைவியை எண்ணி நீண்ட பெருமூச்சு வந்தது.
அவளுக்கு இன்னும் என்னென்ன கவலைங்க தான் இருக்கோ? நேத்தே அவ விருப்பம் இல்லாம பரதநாட்டியம் ஆட வேண்டிய சூழல், கட்டாயம்ன்னு ரொம்ப வருத்தத்துல இருந்தா… ஆனா, அவ்வளவு ஆர்வமா ஈடுபாட்டோட ஆடறவளுக்கு நிஜமாலுமே பிடிக்கலையா என்ன? ஒரு கலையரசியே இப்படி சொன்னா அவளோட பேன்ஸ் எல்லாம் எப்படி தாங்குவாங்க… எல்லாம் எடுத்து சொல்லலாம் தான் ஆனா அதுக்குள்ள மேடம் அழுமூஞ்சி ஆயிட்டாங்க… மனைவியின் எண்ணங்களே அவனுக்குப் பிரதானமாக இருந்தது.
இனியும் இங்குத் தாமதிப்பது வேலைக்கு ஆகாது எனப் புரிய, அவளைத் தேடி வீட்டிற்குச் சென்று விட்டான்.
மனையாள் மெத்தையில் சுருண்டு படுத்திருந்தாள். அவளது கன்னங்கள் அவள் அழுத தடத்தை கோடிட்டு காட்டி, அவனிடம் அவள் சோகத்திற்குச் சாட்சி கூறியது.
சீக்கிரம் உன்னோட சஞ்சலம் எல்லாம் தீர்ந்திடும் என்று அவளது முன்னுச்சி முடிகளை வருடி இதமாகச் சொன்னவன், மென்மையாக அவளின் நெற்றியில் இதழ் பதித்தான். தூங்கிட்டு இருக்கிறவளுக்கு முத்தம் தருவதையே வேலையாக வைத்திருப்பவனை எந்த பட்டியலில் சேர்ப்பது என்றே தெரியவில்லை.
சர்வா உறங்குபவளையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தான். உன் பிரச்சினை எல்லாம் தீர்ந்து நீ நிம்மதியா இருக்க போறதை கூடிய சீக்கிரம் நான் பார்ப்பேன் எனக் காதலோடு எண்ணிக் கொண்டவனின் பார்வை அவளது இடையில் பதிந்ததும் வருத்தமானது.
புடவை கலைந்திருக்க, வெற்றிடையை பார்த்தவனின் மனம் காதலால் மயக்கத்தால் தடுமாறி இருக்க வேண்டிய தருணம்! ஆனால், மனையாள் பட்ட காயம் பார்வையில் பட, அதைத்தொடர்ந்து மருத்துவர்கள் சொன்ன செய்தியும் சேர்ந்து கொள்ள அவன் மனம் பாரமானது.
குழந்தை குறித்து அவளின் சித்தியிடம் பேசும்போது, அவள் முகம் காட்டிய ஜாலங்கள்… எத்தனை பூரிப்பு, ஆசை, வெட்கம்… இத்தனை எதிர்பார்ப்புகளோடு இருப்பவள் பிள்ளை பிறக்காது என்பதை எப்படித் தாங்கிக் கொள்வாளோ!
மீண்டும் மனையாளின் முன்னுச்சி முடிகளை ஆதரவாக ஒதுக்கியவன், “என்னை நீ புரிஞ்சுக்கணும் சௌதி…” என்றான் ஏக்கமாக. ‘எனக்கு நீ மட்டும் போதும். நீயும் அதே மாதிரி நினைக்க வேண்டாம்… ஆனா நமக்கான குழந்தையைக் கடவுள் வேற யார்கிட்டயோ தந்திருப்பாருன்னு மட்டும் நீ புரிஞ்சு ஏத்துக்கிட்டா போதும்… இந்த விஷயத்துல உன்னை எப்படிச் சமாளிக்க போறேன்னு தான் இன்னமும் புரியலை’ பெருமூச்சுடன் மனதிற்குள் புலம்பியவனுக்கு மிகவும் கவலையாக இருந்தது.
இவன் உடைமாற்றி வருவதற்குக் குளியலறை செல்ல, சௌதாவும் விழித்து விட்டாள். விழித்தவள் குளியலறையில் கணவன் இருப்பதை உணர்ந்து, ‘என்ன நேரமாவே வந்துட்டாரு’ என யோசனையானாள்.
என்னவோ மீண்டும் அலுப்பாக இருப்பது போலிருக்க, பழையபடி ஜன்னலருகே சென்று சாய்ந்து அமர்ந்து கொண்டாள். ஓய்ந்து வாடிய தோற்றம்!
“என்ன ஜன்னல் கம்பியை எல்லாம் எண்ணியாச்சா?” கணவனின் கேள்வியில் முறைப்புடன் அவனைத் திரும்பிப் பார்த்தாள்.
அவளது முறைப்பில் புன்னகை தவழ என்ன என்றான் புருவம் உயர்த்தி.
“என்னவோ திருடனுங்க கிட்ட ஜெயில் கம்பியை எண்ணிட்டியான்னு கேட்கிற மாதிரி கேட்கறீங்க” என்றாள் முறைப்பு மாறாமல்.
“அம்மாடியோவ்!” எனச் சிரித்தவன், “என்னவோ தெரியலைடி என்னை ரொம்ப அட்ராக்ட் செஞ்சிட்டே இருக்க… ரொம்ப கியூட் நீ…” அவளது கன்னத்தை இரு விரல்களால் அழுத்திப் பிடித்து முகத்தை ஆட்டி சொல்ல, அவனையே குறுகுறுவென பார்த்தாள்.
அவளது முகத்தை விடுவித்து, “என்னடி?” என்றான் ஆராய்ச்சியாக.
“நம்பிட்டேன் போங்க…” என்றாள் நம்பாத பாவனையில்.
“ஹே நம்பும்மா… நான் இந்த விஷயத்துல ஸ்ரீராமன் தான். எனக்கு உன்மேல தோணின மயக்கம் வேற யாரு மேலயும் தோணலை. தோணவும் தோணுது. இல்லாட்டி நான் ஏன் உன்னை அத்தனை குட்டிக்கரணம் போட்டு கல்யாணம் செய்ய போறேன். சொல்லு…”
“ஹ்ம்ம்.. அதேதான் நானும் கேட்கணும்ன்னு ரொம்ப நாளா நினச்சேன். நான் அவ்வளவு மறுத்தும், நீங்க ஏன் பிடிவதமா என்னை கட்டிக்கிட்டீங்க… கொஞ்சம் என் மனசு மாறும் வரை பொறுத்திருந்திருக்கலாமே” என தன் நீண்டநாள் சந்தேகத்தைக் கணவனிடம் கேட்டாள்.
“ஹாஹாஹா… பின்ன உன்கிட்ட பொறுமையா இருக்க சொல்லறியா? அப்படி இருந்திருந்தா நீ கல்யாணத்துக்கு சம்மதிச்சிருப்பியா என்ன? உன் தம்பிங்க, சித்தப்பா, சித்தி இதை எல்லாம் தாண்டி உன்னால எதையும் யோசிச்சே இருக்க முடியாது”
அவன் சொல்லச் சொல்ல அது உண்மையென்று அவளுக்கும் புரிந்தது. அவன் சற்று அதிரடியாகத்தான் அனைத்தையும் நடத்திக் கொண்டான் என்றாலும், அதை மீறி வேறு எதுவுமே தன்னிடம் செல்லாது என்பதும் தெளிவாகப் புரிந்தது.
“என்ன மேடம் சந்தேகம் கிளியர் ஆச்சா?” என அவன் வினவவும், மையமாகத் தலையசைத்தாள்.
அதை பார்த்தபடியே, “ஆனா பாரேன்… கல்யாணத்தை அதிரடியா செஞ்சுக்க தெரிஞ்ச நான், மத்த விஷயத்துல அநியாயத்துக்கு நிதானமா இருக்கேன். இதைப் பத்தி நீ என்ன நினைக்கிற?” என அவளைப் பார்வையால் அளந்தபடியே சீண்டினான்.
முதலில் புரியாவிட்டாலும், அவனது பார்வையில் புரிந்து விட, “நிதானமா இருக்கிறதுல ஒன்னும் தப்பில்லை. இன்னும் ஒன்னு, ரெண்டு வருஷம் போகட்டும். நிதானமா செயல்படுங்க…” என அவனைப் பதிலுக்கு இவள் சீண்ட,
“என்ன? என்ன சொன்ன?” எனக் கேட்டபடி அவளை ஜன்னல் கம்பியோடு சிறை பிடித்தான் காவலன்.
சௌதாவின் இமைகள் பட்டாம்பூச்சியாகச் சிறகடிக்க, ஜன்னல் வழியே வந்த காற்றிலும் கணவனின் அருகாமையிலும் பூவுடல் சிலிர்க்க, அழகாகத் தடுமாறிய அவளின் சிப்பி இதழ்களை தன் வசமாக்கியிருந்தான் கணவன்.
அழகாய் நீடித்து கொண்டிருந்த நொடிகளை, ரேவதியின் குரல் கலைத்தது. “வீட்டுக்கு வந்து எத்தனை நேரமாச்சு? அவளை வெளிய கூட்டிட்டு போறேன்னு சொன்ன… எப்ப தான் கிளம்பறதா இருக்க?” உள்ளே இருக்கும் நிலவரம் தெரியாமல் அவர் ஹாலிலிருந்து சத்தமிட, பதறி விலகியவன், “இதோ கிளம்பறோம் மா…” எனப் பதிலுக்குக் கத்தியிருந்தான்.