எனக்கொரு வரம் கொடு 17 – சுகமதி

எனக்கொரு வரம் கொடு – 17

 

சர்வேஸ்வரன் வீட்டிலும், அவனது அறையினுள்ளும் மெல்ல மெல்ல அழகாகப் பொருந்திப் போனாள் சௌதாமினி.

 

காவலன் தினமும் வேலை வேலை என்று அலைகிறான். எங்கே நெருக்கம் காட்டி விடுவானோ என அவள் அனாவசியமாய் அச்சம் கொள்ள வேண்டியதில்லை என்ற சூழல் தான் இன்னமும் நிலவி வருகிறது. அத்தனை விலகல் காட்டிக்கொண்டிருந்தான்.

 

ஆனால், உண்மையில் இது நிம்மதி தரும் சூழல் தானா? அவளுக்கே குழப்பமாக இருந்தது. என்னமோ அவன் மொத்தமாகத் தன்னை தவிர்ப்பது போல விலகியிருப்பது அவளுக்கு கொஞ்சமும் உவப்பாக இல்லை என்பதே அவளறிந்த உண்மை!

 

அவனை முழு மனதோடு ஏற்கவும் முடியாமல், அவனது விலகல் தன்மையைத் தாங்கிக்கொள்ளவும் முடியாமல் என்ன மாதிரியான மனநிலை இது என அவளுக்கு தன்னைக்குறித்தே சலிப்பாகத்தான் வந்தது.

 

“என்னம்மா கல்யாணத்துக்கு அப்பறமாவது அவன் கொஞ்சம் மாறுவான்னு நினைச்சேனே… இப்பவும் வேலை, வேலைன்னு தான் அலைஞ்சிட்டு இருக்கான்” மாமியார் ரேவதி நேரடியாகக் கேட்க முடியாமல் சுற்றி வளைத்து தயக்கமாகக் கேட்டு நிறுத்தினார்.

 

முகத்தில் எந்தவித மாறுதலையும் வெளிக்காட்டாமல், “உங்க மகனைப் பத்தி அப்படி எப்படி நினைப்பீங்க அத்தை. பொண்டாட்டி வந்தா மாறி போற ஆளையா நீங்க பெத்து வெச்சிருக்கீங்க…” என செல்ல சலிப்பும், கிண்டலுமாக வந்தது சௌதாவின் பதில்.

 

மெலிதாக சிரித்தாலும் சிறு எதிர்பார்ப்புடன் ரேவதி தன் மருமகளை நோக்க, அதை உணர்ந்தாற்போல் கவனமாகத் தலைகுனிந்து மலர் தொடுத்துக் கொண்டிருப்பதில், மும்மரம் போலத் தன்னை காட்டிக் கொண்டாள்.

 

அவள் மழுப்புவதிலும், தன்னை கவனமாக தவிர்ப்பதிலுமேயே நிதர்சனம் புரிந்து விட ஒரு பெருமூச்சை வெளியிட்டவருக்கு இவர்களது வாழ்வைக் குறித்து கவலை பிறந்தது.

 

“உனக்கு… என்மேல கோபம் எதுவும் இல்லையேம்மா?” அவள் வீடு தேடி வந்து வைத்துவிட்டு போன கோரிக்கையைக் காற்றில் பறக்க விட்டிருந்த குற்றவுணர்வு அவரிடம் இன்னமும் ஒட்டிக்கொண்டிருக்க அதைக் கேட்டும் விட்டிருந்தார்.

 

“என்ன அத்தை… உங்க கைமீறி நடந்ததை என்னால புரிஞ்சுக்க முடியாதா? இனி இந்தமாதிரி பேசாதீங்க” என்று மருமகள் இன்முகமாகவே சொல்லிவிட, அவரின் மனது அவளின் பதிலில் ஆசுவாசப்பட்டது.

 

இன்னுமொரு சந்தேகம் உறுத்த, “அப்ப அவன் மேல…” எனத் தயக்கமாகக் கேட்டார் மூத்தவர்.

 

‘அந்த கோபத்தை எல்லாம் உங்க மகன் முன்னாடியே மாத்திட்டாரு… இப்பதான் என்னை சுத்தமா கண்டுக்காம கோபப்படுத்தறாரு’ என மனதிற்குள் எண்ணியவள், வெளியில் தன் முகத்தை இயல்பாகக் வைத்துக்கொண்டு, “அவருக்கு அன்பை வெளிப்படுத்தும் முறை தெரியாட்டியும், அவரோட அன்பில் பொய் இல்லை அத்தை. அதனால நீங்க எதை நினைச்சும் கவலைப்படாதீங்க” என அவர் மனம் மேலும் குளிரும் வண்ணம் பதிலளித்தாள்.

 

அதில் நெகிழ்ந்தவர், அவளது தலையை ஆதரவோடு வருடி விட்டு எழுந்து செல்ல, மீதமிருந்த மலர்களைத் தொடுப்பதில் கவனம் வைத்தாள்.

 

முன்பெல்லாம் நாட்டியம், விழா என்று ஓய்வின்றி இருந்தவளுக்கு இப்படி வீட்டிலேயே இருப்பது புது அனுபவமாக இருந்தது. நேரம் போவதே இல்லை என்றபோதும், எதிலாவது தன்னை ஈடுபடுத்தி நேரத்தைக் கழிக்கப் பழகியிருந்தாள்.

 

இரவு சமையலை தான் கவனித்துக் கொள்வதாக அத்தையிடம் போய் நின்றாள். “அதுக்குள்ள என்னமா? இன்னும் கொஞ்ச நாள் ரெஸ்ட் எடு. இதெல்லாம் நான் வழக்கமா பார்க்கிறது தான்… நீ கொஞ்ச நாள் அப்பறம் தொடங்கலாம்” என ரேவதி மறுத்தார்.

 

“அத்தை ஹாஸ்பிட்டல்ல இருந்து நான் நல்லா இருக்கேன்னு டிஸ்சார்ஜ் பண்ணி பல நாள் ஆச்சு” என முறைத்து நின்றாள் அவள்.

 

“இருந்தாலும் மா…” எனத் தயங்கியவரிடம், “நான் பூரணமா குணமாயிட்டேன் அத்தை. பிளீஸ்…” எனச் சொல்லி அவரை அனுப்பி வைத்து விட்டாள்.

 

என்ன சமைக்கலாம் என்று யோசனை சென்றதும், சர்வா சென்ற வாரம் அத்தையின் கைமனத்தில் தயாராகியிருந்த மசால் தோசையை விரும்பி உண்டது நினைவில் வர, சிறு புன்னகை தவழ கிழங்குகளைக் கையில் எடுத்தாள்.

 

அத்தை செய்த பக்குவத்தை நினைவில் வைத்து, ஒவ்வொன்றிலும் தனி கவனம் எடுத்து அவள் சமைத்திருந்தாள். உணவு தயாரானதும் ரேவதிக்குப் பரிமாறிவிட்டு அவரது முகத்தை முகத்தை இவள் பார்க்க, “பரவாயில்லையே… நல்லா சமைச்சிருக்க…” என புகழ்ந்து தள்ளினார் அவர்.

அதில் மகிழ்ந்தவள், “நிஜமாவா அத்தை…” எனத் திரும்பத் திரும்ப ஆசையாகக் கேட்டு திருப்திப் பட்டுக் கொண்டாள்.

அவர் மாத்திரை உண்டுவிட்டு உறங்கச் சென்றுவிட்டார். திருமணத்தின் பிறகு கணவனுக்கு பரிமாறும் வேலையை இவளுக்கு ஒதுக்கி விட்டிருந்தார். சௌதாவும் கூட கணவனுடன் ஒரே அறையில் வாசம் செய்தாலும், இந்த நிமிடங்களை வெகுவாக ரசிப்பாள்.

கொஞ்ச நேரம் காத்திருந்தவள், அவனை காணோம் என்றதும், தான் உண்டுவிட்டு அவனுக்கு தேவையானதை ஹாட் பாக்ஸில் தயாரித்து வைத்துவிட்டு தங்கள் அறைக்கு வந்துவிட்டாள். இதுவும் அவன் கட்டளை தான்! சொன்னபடி நடக்காவிட்டால் சாமியாடி விடுவான். அவனோடு இது ஒரு தொல்லை! சில விஷயங்கள் அவன் சொன்னபடிதான் நடந்தாக வேண்டும். இன்னமும் அதே திமிரின் பேரரசன் தான்!

தான் சமைத்தது அவனுக்குப் பிடித்திருக்கிறதா? என்ன சொல்லப்போகிறான்? இப்படி எதுவுமே தெரிந்துகொள்ள முடியவில்லையே அலுப்பாக இருந்தபோதும், வேறு வழியில்லாததால் அமைதியாகப் படுத்திருந்தாள்.

அவனது ஜீப் வந்து நிற்கும் ஒலி நன்றாகவே கேட்டது. எழுந்து செல்ல மனம் பரபரத்தபோதும் இந்தநேரத்தில் எழுந்து சென்றால், அதற்கும் வாங்கிக்கட்டிக்கொள்ள நேருமே எனத் தன்னை வெகுவாக கட்டுப்படுத்தி அமைதியாக படுத்துக் கொண்டிருந்தாள்.

நேரம் நகர்வேனா என சண்டித்தனம் செய்து கொண்டிருக்க, இவள் உறங்குவது போன்ற பாவனையை மாற்றிக்கொள்ளவே இல்லை.

இந்நேரம் உள்ளே நுழைந்திருப்பான்; ஷூவை ரேக்கில் வைக்காமல் எங்கோ கழட்டி ஒரு ஓரமாக காலாலேயே ஸ்டைலாக தள்ளி விட்டிருப்பான்; நேரமாகிவிட்டதால் உடை மாற்றாமல் நேராக உணவுண்ண தான் செல்வான்; உண்ணத் தொடங்கியிருப்பானோ? அவனுக்கு பிடித்திருக்கிறதா இல்லையா? மெதுவாகச் சென்று எட்டிப் பார்க்கலாமா? ச்சு… விடாக்கண்டன் கண்டுகொள்வான்.

இன்னுமா உண்ணாமல் இருக்கிறான் என அவளின் யோசனை செல்லும்போதே அறையின் கதவு திறக்கும் சத்தம் கேட்டது. நல்லவேளை நீண்ட நேரமாக உறங்குவது போன்ற பாவனையிலேயே இருப்பதால், எந்த சந்தேகமும் அவனுக்கு எழ வாய்ப்பில்லை.

ஆனால், இன்னும் எத்தனை நேரம் இப்படி உறங்குவது போலப் பாவனை செய்வதோ! அலுப்பாக எண்ணியவளுக்கு இன்னும் சிறிது நேரத்தில் திடுக்கிட்டு எழுந்தமர வேண்டியிருக்கும் என்று அப்பொழுது தெரியவில்லை.

என்ன இவன் துளி கூட சத்தம் செய்யவில்லை. என்னதான் செய்து கொண்டிருக்கிறான் அவளது மனம் சிந்தித்துக் கொண்டிருக்க, அவளின் சிந்தனையின் நாயகனோ கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த மனைவியைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான். கணவன் பார்வை கொண்டு அவளை அளப்பது அவனது வாடிக்கை. அதிலும் அவளின் மென்பாதங்கள் அவனைக் கொள்ளை கொள்ளும் பேரழகு!

வழக்கமாக அவள் உறங்கும் நேரத்தில் இவன் வீடு வர நேர்ந்தால், அவன் இதழ்கள் சில வரங்களை பெரும். இன்றும் அந்த வரம் பெற நினைத்தவன், மெல்ல அவளது மென்பாதம் நோக்கி குனிந்தான்.

காவலனுக்குக் கவிதை எல்லாம் சொல்லத் தெரியவில்லை. ஆனாலும் அவளின் பாதம் பார்த்து சௌதா போதையில் எதையோ உளறிக் கொண்டிருந்தான்.

அவனின் உளறல் மொழிகள் அவளை என்னவோ செய்தது. கால்களில் மூச்சுக்காற்று படும் நெருக்கத்தில் அவன் இருக்க, என்ன செய்கிறான் இவன் என உள்ளுக்குள் தவித்துப் போனாள்.

சர்வேஸ்வரனோ வெகு நிதானமாகக் குனிந்து, அவனது மீசை முடி உராய அவளின் கால்களில் இதழ் பதிக்க, பதறியடித்துக் கொண்டு எழுந்தமர்ந்தாள் கணவனின் முதல் முத்தத்தில்!

முதல் முத்தமா? அவளின் மனம் அந்த நேரத்திலும் நியாயம் கேட்டு வைக்க, ‘திருமணத்தின் பிறகு…’ என சொல்லி அடக்கப் பார்த்தாள். அப்பொழுதும், ‘அப்படியா?’ என நேரம் காலம் தெரியாமல் அது கேட்டு வைக்க, ‘சரி நான் அறிய இதுதான் முதல் முத்தம்’ என எரிச்சலாக மனதிற்குள் சொல்லிக் கொண்டிருந்தவள், வெளியில் பதற்றத்துடன் அமர்ந்திருந்தாள்.

அவனோ அவளது அசைவில் மிட்டாய் பறிபோன குழந்தையின் கடுப்புடன் அவளை ஏறிட்டுப் பார்த்தான். பிறகு நிதானமாக எழுந்து குளியலறைக்குத் திரும்பி நடந்தவன், “இன்னும் தூங்காம என்ன செய்யற?” என்றான் கடுப்புடன்.

‘இப்ப எதுக்கு சிடுசிடுக்கிறான்?’ என அவனுக்குக் கேட்காத வண்ணம் முணுமுணுத்தவள், பதில் சொல்லும் திராணியற்று அமர்ந்திருந்தாள். இன்னமும் கால் குறுகுறுப்பது போல உணர்வு!

அவளது பதிலை எதிர்பாராமல் குளியலறை சென்றவன், உடையை மாற்றி விட்டுத் திரும்பி வர அந்த சத்தம் கேட்டு அவசரமாகப் படுக்கையில் சரிந்தாள். சரியான திருடன் என எண்ணியவளுக்கு அவனின் திருட்டுத்தனம் பிடித்துத் தான் இருந்தது.

போர்வைக்குள் சிரிக்கும் மனையாளை பார்த்தவனின் மனம் மிகவும் இலகுவாக இருந்தது. அதே உணர்வுடன் படுக்கையில் சரிந்தவன் விரையில் நித்திரையில் ஆழ்ந்தான்.

அந்த வாரத்தில் சௌதாவின் சித்தி அவளைக் காண வந்திருந்தார். அன்று சர்வாவினாலும் அவர் வரும் நேரம் வீடு வர முடிந்தது.

கற்பகம் மகளிடம் பேசும்போது, “ஏன் இப்ப எல்லாம் நாட்டியம் ஆடறதை நிறுத்திட்ட சௌதா…” என விசாரித்தார்.

அவர் முகத்தில் கவலையைப் பார்த்தவள் உடனே சுதாரித்தாள். ஏதாவது சொல்லிச் சமாளித்தே ஆக வேண்டும். இல்லாவிட்டால், உண்மை காரணத்தைச் சித்தி கண்டறிந்து விடுவார் என உள்ளுக்குள் பதறியவள், அவசரமாக ஒரு பொய் காரணத்தை யோசித்தாள். இதுபோல பேச்சு வரும் அதற்குத் தக்க பதில் சொல்ல வேண்டியிருக்கும் என முன்பே யோசித்து வைக்காத தன் மடத்தனத்தின் மீது இப்பொழுது கோபப்பட்டுத் தான் என்ன பயன்?

ஏதோ நல்ல வேளையாகத் திருப்திகரமாக ஒரு யோசனை உதித்து விட்டது!

“அது சித்தி… வந்து… குழந்தை வந்துட்டா நேரம் சரியா இருக்குமே… அதுதான் இப்பவே விழா, கச்சேரி எல்லாம் நிறுத்திக்கலாம்ன்னு…” சின்ன விளக்கம் தான் அதை சொல்வதற்குள் வெகுவாக திணறிப் போனாள். பேச்சு அப்படிப்பட்ட விஷயத்தை பற்றியதாயிற்றே! சின்னஞ்சிறு குழந்தை… அவள் உதிரத்தில் ஜனனித்து, அவன் உருவத்தில் மடியில் தவழ்ந்தால் எப்படி இருக்கும்? மனம் ஒருவித எதிர்பார்ப்பில் குதூகலித்தது.

கற்பகம் மகளின் பதிலில் பூரித்துப் போனார். “ஆமாம் ஆமாம் அதுதான் சரி… அப்பறம்… அப்பறம்… ரொம்ப தள்ளிப் போட வேணாம் கண்ணு… புரியுதா?” என சித்தி ஆவலோடு கேட்டதற்கு மையமாகத் தலையசைத்து வைத்தாள்.

அவளது மனநிலை வெகு இலகுவாக இருந்தது. பிறகு கற்பகம் விடைபெற்று சிறிது நேரத்தில், சர்வா அவளை அறைக்கு அழைத்தான். காபி வேண்டும் என்று சாக்கிட்டு!

அவள் தந்த காபியை நிதானமாகப் பருகியவாறே, “ஹ்ம்ம்… அத்தைகிட்ட எதுவோ சொல்லிட்டு இருந்த மாதிரி இருந்துச்சு” என்றான் காவலன்.

அச்சோ கேட்டு விட்டானோ? உள்ளே துணுக்குற்றவள், சமாளிப்பாய் ஒரு சிரிப்பை உதிர்த்து, “நா… நானா… என்ன?” என்றாள் அறியாதவள் போல.

அந்த பாவனை அவனை ஈர்க்க, காலியான காபி டம்ளரை ஓர் ஓரமாக வைத்தவன், அவளை நெருங்கி, அவளின் மூக்கின் மீது மூக்கை உரச, அவன் செய்கையில் அதிர்ந்து வேகமாக விலக எண்ணினாள்.

அவள் தன் காலை ஓரெட்டு பின்னே வைப்பதற்குள் சுதாரித்தவன் அவளை தன் கை வளைவில் நிறுத்தி, “குழந்தை வரணும்ன்னா… இப்படி விலகி நின்னுட்டே இருந்தா சரி வராது. புரியும் தானே?” என்றான் இடக்காக.

அவள் மிரண்டு விழிக்கவும், “முத்தம் தர கூட தடா போடறியே என்னைப் பார்த்தா பாவமா இல்லையா? இதுல எப்ப குழந்தை எல்லாம்… எனக்குக் கண்ணை கட்டுது” என்றவன், மெல்ல அவளை விட்டு விலகி இருந்தான்.

கோபம் வருகிறதோ தவிப்பாக அவனை ஏறிட, அவனிடம் விளையாட்டு முகபாவம் தான்! இன்னும் நிறைய நாட்கள் இப்படி இழுத்தடிக்க முடியாது என்ற நிதர்சனம் உரைக்க, அவனைச் சீக்கிரமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தனக்குள் முடிவெடுத்தாள்.

அவளது புருவ சுழிப்பைப் பார்த்தவன், அவளைக் கட்டிலில் அமரவைத்து, “என்ன ஓடுது உனக்குள்ள? எதுவும் பிரச்சினையா?” என்றான் அக்கறையுடன்.

“அதெல்லாம் எதுவுமில்லை” என மென்குரலில் மறுத்தவளிடம்,

“இல்லை உண்மையான காரணம் என்னன்னு எனக்கு சொல்லு… ஏன் இப்ப எந்த நிகழ்ச்சியிலேயும் கலந்துக்க விரும்பலை… ஒருவேளை அன்னைக்கு ஒருத்தன் துணிஞ்சு உன்னை நெருங்கிட்டானே அந்த பயம் இன்னும் இருக்கா…”

“அச்சோ… அதெல்லாம் எதுவும் இல்லைங்க” என்றாள் பதறியபடி.

“அப்பறம் வேற என்னதான் பிரச்சினை?” அவனது புருவங்கள் முடிச்சிட்டது.

உண்மையான காரணம் மனதில் எழ, சட்டென்று சௌதாவின் கண்கள் கலங்கி விட்டது. “ம்ப்ச் என்னடா இது?” கட்டிலில் அமர்ந்து, அவளை தன்மேல் ஆதரவாக சாய்த்துக் கொண்டான். ஏன் கலங்குகிறாள் எனப் புரியாமல் அவன் குழம்பினான்.

சௌதா மென்குரலில், “எனக்கு நாட்டியம் பிடிக்கும் தான்… ரொம்ப ரொம்ப… ஆனா அது ஹாஃபியா ஓகே. அதுவே புரொபஸனா நான் யோசிச்சதே இல்லை சர்வா. குடும்ப சூழல் என்னை அப்படிக் கொண்டு வந்து நிறுத்திடுச்சு. குடும்பம் கொஞ்சம் சீரானதும், நிறுத்திக்கலாம்ன்னு தான் நினைச்சேன். ஆனா, சித்தி கலங்குவாங்க. என்னவோ அவங்களுக்காக நான் பெரிய தியாகம் செஞ்ச மாதிரி, எனக்குப் பிடிக்காத விஷயத்தை அவங்களுக்காக சகிச்சிக்கிட்ட மாதிரி நினைச்சு வருத்தப்படுவாங்க. அதுதான் இப்ப வாய்ப்பிருக்கவும் நிறுத்திட்டேன்” என்றாள்.

ஒரு பெண் குடும்ப பாரத்தை ஏற்கும் போது, தனக்குப் பிடித்த பணி, பிடிக்காத பணி என்று தேர்ந்தெடுக்க முடியாதே! சில நேரம் கடும் இன்னல்களைச் சந்திக்க நேர்ந்தாலும் சகித்தாக வேண்டிய சூழ்நிலை தான் உருவாகும்! குடும்ப பாரத்தை ஏற்கும் ஆண்களும் இதில் விதி விலக்கெல்லாம் இல்லை என்பதே நிதர்சனம்!

சர்வேஸ்வரன் மனைவியின் இடர் புரிந்து மனதிற்குள் வேதனை கொண்டான். இத்தனை நாட்களும் அவளாக விரும்பி ஏற்றுக்கொண்ட பணி என்றுதான் அவன் நினைத்திருந்தான். நாட்டியத்தில் அவளது அர்ப்பணிப்பு அத்தகையதாக தான் இருந்தும் வந்தது. இப்பொழுது உண்மை நிலை அறியவும் அவள் எத்தனை தூரம் சிரமப்பட்டு இந்த துறையை தேர்ந்தெடுத்திருப்பாள், இதற்காக மனதிற்குள் எத்தனை போராட்டங்களை எதிர்கொண்டிருப்பாள் எனக் கலக்கமாக நினைத்தான்.

மெதுவாக அவளின் கன்னம் வருடியபடி, “எத்தனை ஈடுபாட்டோட ஆடுவ. உன்னோட ஒவ்வொரு அசைவும் எத்தனை அழகா இருக்கும். கண்ணைக் கூட சிமிட்டாம பார்த்துட்டே இருக்கலாம் போல இருக்கும். இவ்வளவு திறமையும் வெறும் ஹாஃபி மட்டும் தானா? இருந்தாலும் உனக்கு இத்தனை ஆகாது…” என்று தன் சந்தேகத்தை மனதை மறையாது கேட்டான்.

சர்வேஸ்வரன் சொன்னதைக் கேட்டதும், அவளுக்குள் அத்தனை நேரம் இருந்த மனப்போராட்டம் முழுவதுமாக ஓய்ந்து மறைந்திருந்தது. ஏனென்றால், அவன் சொன்ன விஷயம் அவளுள் அத்தனை ஆச்சரியத்தைத் தந்தது.

அவனையே விழி விரியப் பார்த்தவள், “முதல் முறை…” என்றாள்.

அவளின் முக மாறுதல் புரியாமல், “என்ன?” என்றான் குழப்பமாக. பின்னே அவளின் சோகம் முழுவதும் இத்தனை எளிதில் மறைந்தால் ஆச்சரியம் எழாமல் எப்படி இருக்கும்?

முகம் சிவந்துவிட, “நீங்க என்னை… என் நடனத்தை பாராட்டறதை சொன்னேன்” என்றாள் உள்ளே போய்விட்ட குரலில்.

அவளையே குறுகுறுவென பார்த்தவன், “வேறென்னவெல்லாம் என்கிட்ட எதிர்பார்க்கிற?” என கேட்கவும் திடுக்கிட்டாள். எதிர்பார்த்தேனா? நானா? அவளது விழிகள் வட்டமென விரிந்தது.

அந்த வட்டமென விரிந்த விழிகளை மென்மையாக முத்தமிட்டு அவளை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான் சர்வேஸ்வரன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

எனக்கொரு வரம் கொடு 14 – சுகமதிஎனக்கொரு வரம் கொடு 14 – சுகமதி

எனக்கொரு வரம் கொடு – 14 சர்வேஸ்வரனின் செய்கையில் அரண்டு போன சௌதாமினி வேகமாக கரம் உயர்த்தி அவனை இறுக அணைத்துக் கொண்டாள். அதில் அவன் பிடி தளர, அதே வேகத்தில் அவன் தோளில் அழுந்த புதைந்து கொண்டவள், “இப்படி எல்லாம்

எனக்கொரு வரம் கொடு 6 – சுகமதிஎனக்கொரு வரம் கொடு 6 – சுகமதி

எனக்கொரு வரம் கொடு – 6   சர்வேஸ்வரனுக்கு வெகுநாட்களாகவே பிரகதீஷ் குறித்துத் தெரிந்திருந்தது. அவன் விடாமல் சௌதாமினியின் நாட்டிய விழாக்களில் பங்கேற்பது மட்டுமல்லாமல், அவளிடம் பேச முயற்சிப்பதையும் தெரிந்து வைத்திருந்தான். உபயம் சௌதாமினியின் ஒப்பனையையும், கால் சீட்டையும் பார்த்துக்கொள்ளும் வளர்மதி

எனக்கொரு வரம் கொடு 5 – சுகமதிஎனக்கொரு வரம் கொடு 5 – சுகமதி

எனக்கொரு வரம் கொடு – 5   அந்த மருத்துவமனை வளாகமே மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது. தடயவியல் நிபுணர்கள் வந்தவர்கள் ஏதேனும் ஆதாரம் கிடைக்கிறதா என்று தங்கள் சோதனையை தொடங்கியிருந்தனர்.   சர்வேஸ்வரனும் ஏதேனும் துப்பு கிடைக்கிறதா என்பதுபோல நோட்டம் விட்டுக்