Tamil Madhura யாழ் சத்யாவின் 'இரு மலர்கள்' யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 14’

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 14’

அத்தியாயம் – 14

யாதவின் காதல் கைகூடுமா?

பெற்றோர் என்ன பதிலோடு வரப் போகிறார்களோ தெரியவில்லை என்று மிகுந்த பதட்டத்தில் இருந்தான் யாதவ். ஒவ்வொரு நிமிடங்களும் ஒவ்வொரு யுகங்களாய் எப்போது கவியை திரும்ப காண்பேன் என்று தவித்தான். மனமெங்கும் காதல் பட்டாம் பூச்சிகள் சிறகடிக்க கவிதை என்றால் அது ரெண்டு வரியில் இருக்குமா?  நாலு வரியில் இருக்குமா என்று கேட்டவன் உள்ளமோ கவிதையாய் வடிக்க தொடங்கியது. 

வலது கையில் அடிபட்டு மாவுக்கட்டு போட்டிருந்ததால் அவனால் பேனை பிடித்து எழுத முடியவில்லை. அன்று காலை பணியிலமர முதல் அவனைப் பார்த்து செல்ல அனு வந்திருந்தாள்.

தனது டயரியை அவளிடம் எடுத்து கொடுத்து,

நான் சொல்லுறதை இதிலே எழுது அனு…”

அவளும் அவன் தனது வேலை நிமித்தமாக ஏதோ சொல்லப் போகிறான் என்று நினைத்து டயரியை வாங்கி அவன் கட்டில் ஓரத்தில் வைத்து தனது பேனையை எடுத்து கொண்டு எழுத ஆயத்தமானாள்.

இண்டையான் டேற், டைம் போடு…”

ஓகேடா… போட்டிட்டன்…”

நோய்களின் அறிகுறி அறிந்தவளே…”

யாதவ் ஆரம்பித்தது தான் தாமதம் அனு திகைத்து போய் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

என்னடா இது…? நானும் ஏதோ பிஸ்னஸ் விசயமா சொல்லப் போறாய் என்று நினைச்சால் கவிதை சொல்லுறியா மகனே… அப்ப இடையில இடையில மானே தேனே எல்லாம் போடவா…”

நீ ஒண்ணும் போட வேணாம்..

நான் சொல்லுறதை மட்டும் எழுது…”

எல்லாம் என்ர தலைவிதிடா… விடிய வெள்ளன வேலைக்கு போக முதல் இருந்து காதல் கவிதை எழுதணும் என்று… உனக்கென்ன… நீ சொல்லு ராசா… சொல்லு… நான் எழுதித் துலைக்கிறன்…”

நோய்களின் அறிகுறி அறிந்தவளே!
என் காதல் நோயின் அறிகுறியும்

கண்டு கூறடி கண்ணே!
உன்னைக் கண்டதிலிருந்து இதயம் வசமில்லை என்னிடம்!”

இருந்தாலும் சும்மா சொல்லப்படாது அசத்திறாடா அண்ணா…”

உண்மையா நல்லாருக்காடி… அடுத்த கவிதை சொல்லுறன் கேளு…” 

குழந்தையாய் இயம்பி விட்டு முகமெல்லாம் மகிழ்வாய் சிந்தனை வயப்பட்டவனை வியப்பாய் பார்த்தாள் அனுஷியா.

காதல் ஆண் மகனொருவனை இத்தனை தூரம் மாற்றும் வல்லமை படைத்ததா? காணும் நேரம் எல்லாம் சுகநல விசாரிப்புகளோடு சென்று விடுவான் யாதவ். சதா வேலை வேலை என்று அதே தியானம். ஆனால் இப்போது அவன் சிறு வயதில் கண்ட குழந்தை மனமுடைய யாதவ் ஆக தெரிந்தான்.


உனக்கென்ன!
பச்சைத் தண்ணீராய்
இருந்த எனை…
கொதிநீராய் மாற்றும்
விந்(த்)தை செய்தாயே!!!
உனைச் சேராத – என் மனமோ
உலைக்களமென கொதிக்க – உன்
ஒற்றைப் பார்வையின்
ஒளிக்கீற்றுக்காய் – என் வெற்று வாழ்வு
ஏங்கிக் கிடப்பதை அறிவாயா!!!
வெம்மையில் – என்  உயிர்
உருகுமுன் – உன் அண்மையில்
எனை அணை(ழை)த்துக் கொள்!!!

ஒவ்வொரு வரியாக அவன் ரசித்துச் சொல்ல சொல்ல அனு எழுதினாள். 

ஆ… இன்னொண்டு சொல்லுறன் எழுதுடி…”

டேய்… முடியலடா… நான் வேலைக்கு போகணும்… இதுதான் கடைசி சரியா…?”

ஓகே ஓகே… இண்டைக்கு இதோட காணும்… மிச்சம் நாளைக்கு…”

அடப்பாவி….  அப்ப நீ ஒரு முடிவோட தான் இருக்கிறாய்…” 

என்றவள் அவன் அடுத்து சொன்ன கவிதையை அவன் காலில் போட்டிருந்த மாவுக்கட்டில் எழுதலானாள்.

என்னடி இதில எழுதுறாய்? எல்லாரும் பார்த்து சிரிக்க போறாங்கடி…”

அழுகையாய் சொன்னவனுக்கு,

இதில எழுதினால் தானே உன்ர ஆள் பாப்பா. பாத்து நீ நல்லா முத்தின கேஸ் என்று தெரிய வரும்… அவளுக்கு மட்டுமில்ல எல்லாருக்கும்…”

கடைசில உன்ர குணத்தைக் காட்டிட்டியேடி குரங்கு… உன்னை எழுத சொன்ன என்னைச் சொல்லணும்…” தன்னையே நொந்து கொண்டு தனது காலில் எழுதியிருந்ததை வாசித்தான்.

எளிதில் தீப்பிடிக்கக் கூடிய 

நீரியம் (H2) நீ!
உனை கொழுந்துவிட்டு எரியவைக்கும்
பிராண வாயு (O2 ) நான்!
நாம் இணைந்தால் 

அணைக்கும்
நீர்மமாய் (H2O) நம் காதல்!”

கவி பார்த்து விட்டு என்ன நினைப்பாளோ தெரியவில்லையே என்று மீண்டும் பதட்டமானவன் கவியின் வருகைக்காக காத்திருந்தான்.

அவன் எதிர்பார்ப்பை வீணாக்காமல் வைத்தியநிபுணர் ரவிசங்கர் தன் மாணவப்பட்டாளம் புடைசூழ யாதவ்வின் வார்ட்டுக்கு வந்தார். ஒவ்வொரு நோயாளியாகப் பார்த்து யாதவ்வை சுகம் விசாரித்தவர் அவன் காலைப் பார்த்ததும் தன்னையறியாமல் வாய் விட்டு நகைத்தார். 

ஸொறி ஸேர் …! இது என்ர தங்கச்சிட வேலை…”

பரவாயில்லை… அழகான அறிவியல் கவிதை தான்… இங்க தான் யாருக்கோ சொல்லாமல் சொல்லுறிங்க போல… நடத்துங்க…”

ரவிசங்கர் கூறவும் இவனையும் மீறி இவன் பார்வை கவி முகம் நோக்கத் தவறவில்லை. ஆனால் அந்தோ பாவம் அவளோ அப்போதுதான் தனது குறிப்பு புத்தகத்தில் மிகக் கவனமாக ஏதோ எழுதிக் கொண்டு இருந்தாள். இவனும் ஒரு ஏக்கப் பெருமூச்சை வெளிப்படுத்தி ரவிசங்கருக்கு ஓர் அசட்டுப் புன்னகையை பரிசளித்து விட்டு அவர் சொல்வதைக் கவனிக்கத் தொடங்கினான்.

உங்க கால் கட்டு இன்னும் வன் வீக்ல கழட்டி எலும்பு பொருந்தி இருக்கா என்று பாக்கணும்… இன்னும் டூ வீக்ஸ் நீங்கள் இங்கேயே பெட் ரெஸ்ட் எடுக்க வேண்டி இருக்கும்… உடம்பு வலி குறைஞ்சிருக்கா இப்ப…?”

ஓம் டொக்டர்… இப்ப குறைஞ்சிட்டு…”

ஓகே.. நல்லது… டபிலட்ஸ்ஸ தவறாம போடுங்கோ… டேக் கெயார் யங்மான்…” 

அவர் தன் படை, பட்டாளம் சூழ அடுத்த கட்டிலை நோக்கி நகர்ந்தார். இவன் ஒரு காதல் பார்வையை கவியை நோக்கி வீச அவள் இவனிடம் ஒரு தலையசைப்புடன் விடைபெற்றாள். இவனோ அதை நம்ப முடியாமல் பார்த்திருந்தான்.

மதிய உணவு நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. இவன் தாகம் அதிகம் எடுக்க இடது கையால் தண்ணீர் போத்தலை எடுத்து திறக்க முனைந்தான். இடது கையிலும் சுற்றி கட்டுப் போட்டிருந்த படியால் அவனால் திறக்க முடியாமல் தனது தேவைக்கு இன்னொருவரையும் நாட விரும்பாமல் அவஸ்தை பட்டுக் கொண்டிருந்தான். 

அன்றைய பயிற்சி வகுப்பு முடிந்து மற்றைய வைத்திய மாணவர்கள் மதிய உணவு இடைவேளைக்காக வெளியே சென்றிருக்க கவி அங்கே கடமையிலிருந்த வைத்தியரோடு கதைத்துக் கொண்டிருந்தவள் எதேச்சையாக யாதவ் தண்ணீர் போத்தலோடு போராடுவதைப் பார்த்து விட்டு அவனிடம் விரைந்தாள்.

அவனிடமிருந்து போத்தலை வாங்கி திறந்து அருகிலிருந்த சிறிய கபேர்ட்டின் மேல் வைத்து விட்டு. அவனை முதுகு புறமாக கைகொடுத்து தோளாடு அணைத்து எழுப்பி கட்டிலிலே பின்புறம் அணையாக தலையணையை வைத்து அவனை சற்றே சாய்ந்த வாக்கில் அமர்த்தி விட்டு தானே தோளோடு அணைத்து தண்ணீரை பருக்கலானாள்.

யாதவ் தான் காண்பது கனவா, நனவா என்று புரியாமலே தண்ணீரை அருந்தலானான். பார்வையாளர்கள் நேரம் ஆரம்பித்து இருக்க உணவுடன் வந்த சுந்தரலிங்கம் தம்பதி இந்த காட்சியைக் கண்டு அப்படியே அசந்து போய் ஸ்தம்பித்து நின்று விட்டார்கள்.  

ஒரு தாய்க்கே உரிய பரிவுடன் சிறு குழந்தை ஒன்றிற்கு தண்ணீர் புகட்டுவது போல அன்பாக கொடுத்து கொண்டிருந்த கவின்யாவைப் பார்த்ததுமே வசந்தா முடிவெடுத்து விட்டார். ‘நீ தான் என் மருமகள் பெண்ணே… ஆனால் எனக்கு மகள் இல்லாத குறையை உன்னை வைத்து தீர்த்து கொள்கிறேன்’ என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டார்.

ரெண்டு பேரும் என்ன பொருத்தமா இருக்காங்க… இப்படியே காலம் பூராக சந்தோசமா வாழ வை நல்லூர் கந்தா’ மனமுருக வேண்டிக் கொண்டார் சுந்தரலிங்கம்.

இவர்கள் உள்ளே நுழையவும் தண்ணீர் போத்தலை மூடி வைத்து விட்டு யாதவ்வின் காலில் எழுதியிருந்த கவிதையை வாய் விட்டு வாசித்து கொண்டிருந்தாள் கவின்யா.

என்னடா கறுமம் இது…? காலில போய் கவிதை எழுதி வைச்சிருக்கிறாய்…” 

தலையிலடிக்காத குறையாக வசந்தா கேட்டார். 

நா எப்பிடிம்மா இந்த கைகளால எழுத முடியும்? டயரில எழுதுண்ணு அனுட்ட சொன்னனம்மா… அவள் தன்ர குணத்தைக் காட்டிட்டாள்… உங்கட ப்ரண்ட் அனுஷியா தான்..”

தாயிடமும் மீதியை இவளிடமும் பாவப்பட்ட பிள்ளை போல முகத்தை வைத்துக் கொண்டு கூறினான் யாதவ்.

அனுவக்கா வேலையா இது… அதுக்கேன் அவவை திட்டிறிங்க? அழகான கவிதை, அழகாக தானே எழுதி இருக்கா… சரி நீங்கள் கதையுங்க… நா போய்ட்டு வாறன் ஆன்ட்டி,  அங்கிள்… ஆ… அப்புறம் ஒரு விசயம்… அண்ணாக்கு துணையாக யாரும் கூடவே இருந்தால் நல்லம். பாவம் தண்ணி குடிக்கவே அந்தரப்படுறார்… சரி… நான் வாறன்… டேக் கெயார் அண்ணா…”

என்றபடி போனவளைப் பார்த்து விக்கித்துப் போய் அமர்ந்திருந்தான் யாதவ்மித்ரன். பின்னே அவள் நினைவாய் அவன் காதல் கவிதைகளாய் வடித்துக் கொண்டிருக்க அவன் மனம் கவர்ந்தவளோ அண்ணா என்றழைத்தால் பாவம் அவனும் தான் என்ன செய்வது. அவள் பரீட்சை முடியும் வரை வாய் மூடி மௌனம் சாதித்தே ஆகிய கட்டாயத்தில் வாளாதிருந்தான் யாதவ். 

வசந்தா ஒவ்வொரு கவளமாக உணவை ஊட்டி விட பள்ளி செல்லும் மழலையாய் வாங்கி உண்டு கொண்டிருந்தவன் உள்ளம் எல்லாம் கவியின் சிந்தனையிலேயே இருந்தது. திடீரென ஞானம் வந்தவனாக,

நான் ஹொஸ்பிடலால வந்ததும் மூண்டு பேருமா காஞ்சிபுரத்திற்கு போய் எல்லா சாரியளையும் எங்களுக்கு பிடிச்ச மாதிரி சொல்லி நெய்விச்சு எடுத்து வருவமப்பா…”

அதுக்கென்ன… போய் வந்தா போச்சு… வெடிங் ஹோலில ரெண்டு மாசத்தால வாற எந்த ஓடரும் எடுக்க வேணாம் என்று சொல்லிட்டன்…” 

வெரிகுட்பா… நானே சொல்லுவம் என்றிருந்தன்… இந்தியால உடுப்பை எடுத்துக்கொண்டு சிங்கப்பூர்ல போய் நகைகளை எடுத்திட்டு வருவமப்பா…”

ஓகே தம்பி… நீ இதுகளைப் பற்றி டென்சன் இல்லாம இரு. அப்பா விஸா, ரிக்கற் அலுவல்களைப் பார்த்து கொள்ளுறன்…”

சரிப்பா… அனுவுக்கு லீவ் கிடைக்கும் என்றால் அவளையும் கூட்டிட்டு போவம்… அவளுக்கு கொஞ்சம் கவிட டேஸ்ட்டுகள் தெரியும்… ஆனால் இந்த குரங்கு தனக்கு லீவ் இல்லை அது இதென்று ஏதாவது ஸீனைப் போடும்…”

அப்பாவும் பிள்ளையும் நான் சொல்லுறதைக் கொஞ்சம் கேட்கிறியளா…?”

என்னம்மா….? நகையெடுக்க டுபாய் போகப் போறிங்களா…?”

கேட்ட மகனைப் பார்த்து முறைத்தார் வசந்தா.

கலியாணத்துக்கு உடுப்பு, நகைக்கு முதல் தேவை பொம்பிளை. கவி இன்னும் சம்மதம் சொல்லேல என்றதை ஞாபகம் வைச்சுக் கொள். அனுட அண்ணாவை தானும் அண்ணனா நினைச்சுக் கதைச்சிட்டுப் போகுது அந்த பிள்ளை… அது மனசில வேற யாரையும் நினைச்சு வைச்சிருந்தா நீ பிறகு ஏமாந்து போவாய்டா… அப்புறம் அதை உன்னால தாங்க முடியாது… அதனால அம்மாட கதையைக் கேட்டு கவிக்கு சோதினை முடியிற வரை கொஞ்சம் பொறுமையா இரு கண்ணா…”

வசந்தா சொன்னதைக் கேட்டு நீர் விட்டணைத்த அடுப்பாய் பொசுக்கென வற்றிப்போனது யாதவ்வின் உற்சாகம் எல்லாம். ஆனாலும் தாய் சொன்னதன் யதார்த்த நிலை விளங்கி அமைதியானான்.

நாட்களும் கடந்தன. இரு வாரங்களில் வீடு திரும்பிய யாதவ் கொழும்பு செல்லவில்லை. தொலைபேசியிலேயே முடிந்த வரை தொழிலைக் கவனித்தான். அவன் நேரிலேயே சென்றாக வேண்டிய விடயங்களுக்கு சுந்தரலிங்கம் சென்று வந்தார். தாயாரின் அரவணைப்பிலும் அன்பான உணவிலும் ராப்பகல் பாராத கவியின் நினைவுகளிலும் அவன் வேகமாகவே குணமடைந்து கொண்டிருந்தான்.

அங்கே ஸாமோ கவியின் பெறுபேறுகளிற்காக வேண்டிக் கொண்டு எப்போது போய் பெண் கேட்பது என்று யோசித்து கொண்டிருந்தான். இனியும் தாமதம் செய்ய தன்னாலியலாது என்று கவியின் பரீட்சை முடிந்த அடுத்த நாளே  கவியின் வீடு செல்லப் போவதாக அருண்யாவிடம் தெரிவித்தான்.

அந்த அவசரக்குடுக்கையும் அதை உடனடியாக கவியிடம் சொல்லி அவளும் மிகவும் மகிழ்ச்சியோடு பரீட்சைகளை ஒரு கை பார்த்து கொண்டிருந்தாள். 

இறுதியில் கவின்யாவின் கரம் பிடிக்கப் போகும் கண்ணாளன் யார்?

ஆறு வருடங்களாக பொறுமையாக காத்திருக்கும் ஸாம் அபிஷேக்கா? அல்லது இரண்டு மாதங்களே காத்திருக்க முடியாமல் தவிக்கும் யாதவ்மித்ரனா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 6’யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 6’

அத்தியாயம் – 06 கவி சந்தித்தாளா ஸாமை?    கவின்யாவுக்கு பல்கலைக்கழக விரிவுரைகள் ஆரம்பமாகியது. பல்கலைக் கழக வாழ்விலே முதலாவது நாள்.      வெண்ணிற பருத்தி ஷல்வாரில் இடப் பக்கத் தோளில் ஷோலை நீள வாக்கில் போட்டிருந்தாள். இடது கையில்

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 26’யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 26’

அத்தியாயம் – 26 நல்ல முடிவாய் எடுப்பானா ஸாம்?     அடர்ந்து பரந்து நிழல் பரப்பியிருந்த பெரிய சவுக்கு மரத்தின் கீழே ஜமுக்காளம் பரப்பி உணவுப் பொருட்களைக் கடை பரப்பி சுதனின் கர்ப்பிணி மனைவி காவல் இருக்க மீதி அனைவரும்

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 2’யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 2’

அத்தியாயம் – 02 யாரோ அவர்கள்? மதியம் பாடசாலை முடிந்ததும் வாயிலில் காத்து நின்ற அருண்யாவையும் ஏற்றிக் கொண்டு வீடு நோக்கி துவிச்சக்கர வண்டியை மிதித்தாள் கவின்யா.  “அக்கா! இன்றைக்கு புதன்கிழமை என்ன? அச்சச்சோ… மறந்தே போனனே… கெதியா வீட்ட போக்கா…