எனக்கொரு வரம் கொடு – 16
ஆக்ரோஷத்தோடு நின்றிருந்த செல்லத்துரைக்கு திடீரென கரங்கள் நடுங்கியது. உடல் வேர்க்கத் தொடங்கி விட்டது. கண்கள் வெறுப்பையும் இயலாமையையும் அச்சத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக உமிழ்ந்து கொண்டிருந்தன. வேகமாக மூச்சு வாங்கினார். அவரை அந்த நிலையில் கண்ட சர்வேஸ்வரன், தனது முட்டாளத்தனத்தை நொந்து கொண்டான்.
எது எப்படியாகினும் இந்த வழியில் தான் முயன்றிருக்கக் கூடாதோ எனக் காலதாமதமாக உணர்ந்து வருந்தினான். ஒருநிமிடம் திக்கற்ற நிலை!
அவரை உடனடியாக ஆசுவாசப்படுத்தியாக வேண்டும். இல்லாவிட்டால், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல நேரிடுமே என அச்சம் கொண்டவன், “மாமா…” என அவரை இதமாக உலுக்கி, அவரது நெஞ்சை நீவி விட்டு, குடிப்பதற்கு நீரை அருந்தக் கொடுக்க முயற்சித்தான். முயற்சி மட்டுமே! எதுவும் பலனளிக்கவில்லை.
செல்லத்துரையின் முரட்டுத்தனத்தை சர்வேஸ்வரன் முதன்முறை காண நேரிட்டது. அவனை தன்னிடம் நெருங்கவே விடாமல் மூர்க்கமாக அவனை எதிர்த்துக் கொண்டிருந்தார். அதில் அருகிலிருந்த பொருட்கள் எல்லாம் சிதறியது.
அவரின் மூர்க்கத்தனத்தையும் ஆவேசத்தையும் பார்க்கப் பார்க்க என்ன செய்வதென்று தெரியாத நிலைக்கு சர்வேஸ்வரன் சென்றான். நிலைமையைச் சமாளித்தே ஆக வேண்டிய சூழல் ஒருபுறம், என்ன நடக்குமோ என்ற பதற்றம் மறுபுறம் எனத் திணறி திண்டாடிப் போனான்.
தோட்டத்தில் நடந்த களேபரம் வீட்டினுள் இருந்த வசந்தனையும் எட்டி இருந்தது போல! வேகமாகத் தோட்டத்தை எட்டி பார்த்துவிட்டு, அதே வேகத்தோடும் பதற்றத்தோடும் அங்கு ஓடி வந்து சேர்ந்தான்.
“என்ன மாமா திடீர்ன்னு என்ன ஆச்சு?” என்று சர்வாவிடம் விசாரித்துக் கொண்டே தன் தந்தையை லாவகமாக நெருங்கி, அங்கிருந்த கல்லில் தட்டி விழுவது போல தரையில் குப்புறக் கவிழ்ந்து விழுந்திருந்தான்.
சர்வேஸ்வரன், ‘நல்லா தானே வந்தான்? இப்ப இவனுக்கு என்ன ஆச்சு?’ என அங்கே நடப்பதை, பதற்றத்தில் அனுமானிக்க முடியாமல் குழப்பமுற்றான்.
வசந்தன் எதிர்பார்த்தபடியே, செல்லத்துரை கீழே விழுந்த மகனின் மீது தன் கவனத்தை நொடியில் திருப்பியிருந்தார். “வாசு… வாசு பையா என்ன ஆச்சு?” எனப் பதறி அவனருகே வந்து கீழே அமர்ந்தார்.
அவனோ கண்களை மூடி வலியெடுப்பது போல அனத்தினான். அப்பொழுது தான் செல்லத்துரைக்குச் சுற்றமே உரைத்தது போலும்! மகனைத் தூக்க முடியாமல் திணறியவர், சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, “சர்வா சீக்கிரம் வா… வாசுவைத் தூக்கலாம்” என அழைத்தார்.
இப்பொழுதே மூச்சு சீரானது காவலனுக்கு! கூடவே வசந்தனின் திட்டமும் புரிந்தது. அதுசரி நமக்கு இது பழக்கமற்ற சூழலாக இருந்திருக்கலாம். இது போன்ற சூழலை குடும்பத்தினர் ஏற்கனவே எதிர்கொண்டிருப்பார்களே என்று எண்ணியதும் தான் அவனது பதற்றமே தணிந்தது.
மாமாவின் அழைப்பிற்கு வேகமாக வந்தவன், வசந்தனை எழுப்பி விட, அவனும் படாத அடிக்கு அனத்தியபடியே எழுந்தமர்ந்தான்.
‘நடிப்புன்னா எப்படி இருக்கணும் தெரியுமா?’ சர்வாவின் மனக்கண்ணில் சிவாஜி உருவம் வந்து நின்று, ஆக்ரோஷமாகக் கேள்வி கேட்டு வசந்தனை கை காட்டியது. சர்வாவும் சிவாஜி காட்டியதையும் சொன்ன விஷயத்தையும் ஒப்புக்கொண்டு இளையவன் செய்வதை பிரமிப்பாகப் பார்த்தபடி நின்றிருந்தான்.
பதறி துடித்துக் கொண்டிருந்தது செல்லத்துரை மட்டுமே!
“எனக்கு ஒன்னும் இல்லைப்பா…” என்று சோர்ந்து போன குரலில் வசந்தன் சொல்ல, “சின்ன வயசுல இருந்தே இப்படித்தான் சர்வா. விழுந்துட்டே இருப்பான். கொஞ்சம் கூட கவனமே இருக்கிறதில்லை” எனச் செல்லத்துரை புலம்பினார். சர்வாவும் அதைக் கெட்டியாக பிடித்துக் கொண்டான்.
அவனும் அவருக்கு ஈடாக அவருடன் ஒத்து பேசி அவரை திசை திருப்ப, அது நன்றாகவே வேலை செய்தது. “ஆனா பாரேன் சர்வா அப்பவெல்லாம் இவனை நான் தோளை விட்டு இறக்க மாட்டேன். தூக்கியே தான் வெச்சிருப்பேன். இப்ப இவனைத் தூக்க முடியலை பாரேன். நல்லா வளர்ந்துட்டான்” என்றார் பெருமிதமும் ஆனந்தமுமாக. கண்ணில் மெலிதாக நீர் சேர்ந்து கொண்டது.
தந்தைகளின் பாசப் பரிமாணங்கள் மொழி பேதமற்ற வண்ணக் கவிதைகள்… அழகோவியங்கள்!
தன் சூழலை மொத்தமாக மறந்து மகனுக்காகப் பதறித் துடித்த தந்தையின் பாசம் சர்வாவின் மனதையும் கனிவடையச் செய்தது. இத்தகைய பாசத்துக்குரியவர் தன்னை மறந்த நிலையில் இருக்க வேண்டுமா? யார் பாவத்திற்கு யார் சிலுவை சுமப்பது?
மீண்டும் மீண்டும் சர்வாவின் மனதில் எழுவது மாமாவிற்கு இது தேவையற்ற தண்டனை என்பது தான்! ஆனால், அந்த தண்டனையைத் தொடர வைத்துக் கொண்டிருப்பது அவரது மகள் அல்லவா? செய்வதறியாத நிலையில் பெருமூச்சுடன் நிதர்சனத்தைக் கடந்தான்.
செல்லத்துரையிடம் மெல்ல மெல்ல மகன்கள், தோட்டம், திருமண விஷயம் என ஏதேதோ பேச்சுக் கொடுத்து அவரை முழுவதுமாக திசை மாற்றுவதற்குள் அவன் திணறி, திண்டாடிப் போனான். வசந்தனும் அவருக்குத்தக்க அவருடன் பேச்சு தந்தான்.
அவர் ஆசுவாசம் ஆனதும் தான் சர்வாவின் மூச்சே சீரானது. வசந்தன் அவருக்குத் தர வேண்டிய மாத்திரை மருந்துகளைத் தந்து அவரை உறங்க வைத்தான்.
அவர் உறங்கியதும் ஹாலில் அமர்ந்திருந்த சர்வாவிடம் வந்தவனின் பார்வை அவனை கேள்வி கேட்டது. சர்வா இவனிடம் என்ன சொல்லிச் சமாளிக்க என்பது போல யோசனையில் ஆழ்ந்தான்.
சர்வாவிடம் பதில் இல்லாது போக, “அப்பா கிட்ட எதைப்பத்தி பேசுனீங்க மாமா?” என்று நேரடியாகவே கேட்டிருந்தான்.
சர்வா இப்பொழுதும் அமைதி காத்தான். “அவருக்கு விபத்து நடந்தது பத்தி… வேலையை பத்தி… இல்லைன்னா …” என்றவன் எதையோ சொல்ல எடுத்து பாதியிலேயே நிறுத்தியிருந்தான். காவலனின் பார்வை கூர்மையானது.
“இல்லைன்னா…” என இளையவனை மேலும் தூண்டினான்.
இதழ் பிரியாமல் சிரித்தவன், “மாமா இப்ப நான் தான் உங்ககிட்ட கேள்வி கேட்கணும். சொல்லுங்க மாமா… அப்பாகிட்ட எதைப்பத்தி பேசுனீங்க? ஏன் அவரு அப்படி ரியாக்ட் செஞ்சாரு?” மீண்டும் துருவினான்.
இப்பொழுது சிரிப்பது சர்வாவின் முறையானது. “உங்க ரூல்ஸ் என்ன என்னன்னு சொல்லு முதல்ல. மாமாகிட்ட எதைப்பத்தி எல்லாம் பேச கூடாதுன்னு உங்க அக்கா ஆர்டர்?”
விழி விரித்தவன், “அக்காவா? எதை… எதை சொல்லறீங்க? அப்படி எல்லாம் எதுவும் இல்லை” என்றான் வியப்பும் மெல்லிய தடுமாற்றமுமாக.
“ஹ்ம்ம் அந்த சொல்லாம விட்ட விஷயம் என்ன? உங்க அப்பாவோட பிரண்ட் கண்ணப்பன் தானே? அவரை பத்தியும் பேச்செடுக்க கூடாது சரியா? அதுதான் உங்க அப்பாவுக்கு உடம்பு சரியில்லாத பிறகு, ரொம்ப நல்ல பழக்கம் இருந்தபோதும் அவரோட மனைவி கூட இங்க வருவதை தவிர்க்கிறாங்க. சரியா?”
இவ்வளவு துல்லியமாகக் கேட்பவனிடம் என்ன சொல்வது எனப் புரியாமல், பேந்த பேந்த விழித்தான் இளையவன்.
“சரி கல்யாணத்துக்கு எப்படியும் கூப்பிட்டுத் தானே ஆகணும். அப்ப என்ன செய்யறதா இருக்கீங்க?” கேள்வியாகப் புருவம் உயர்த்தியவனைச் சிறிது எச்சில் கூட்டி விழுங்கியபடி பார்த்தான். நிச்சயம் அக்கா இத்தனை தகவல்கள் தர வாய்ப்பே இல்லை. இன்னும் சொல்லப்போனால் அப்பாவைப் பற்றி அக்கா அறிந்த விஷயங்கள் இந்த குடும்பத்தில் இருக்கும் மற்ற மூவருக்கும் கூட தெரியாது. அவள் என்னவோ அப்பாவின் விஷயத்தில் அத்தனை கவனம் எடுத்துக் கொள்வாள்.
“அது… மாமா…” எனத் தயங்கினான்.
“சொல்ல விருப்பம் இல்லையா? இல்லை இதுவும் சொல்ல கூடாதுன்னு ஆர்டர் எதுவுமா?”
“அப்படி எதுவும் இல்லை மாமா. தனபாக்கியம் அத்தை வரும்போது சொல்லுவாங்க அப்ப அப்பாவை தனியா யாராவது கூட்டிட்டு போயிடலாம்ன்னு இருக்கோம்”
“ஹ்ம்ம்… சரி… நான் கிளம்பறேன். அண்ட் உன் கெஸ் கரெக்ட் தான். நான் மாமாகிட்ட நீ சொன்னதை பத்தி எல்லாம் தான் பேசினேன்” என ஒப்புக்கொடுத்து விட்டு விடைபெற்றவனை அயர்ந்து போய் பார்த்தான் வசந்தன்.
என்னவோ அக்காவும் மாமாவும் இந்த விஷயத்தில் எதிரும் புதிருமாக இருப்பார்கள் என அவன் உள்மனம் எச்சரித்தது. இது எங்குக் கொண்டு போய் முடியுமோ என மெலிதாக அச்சம் கொண்டான். ஒருவேளை இதற்காகத்தான் அக்கா திருமணத்தில் நாட்டம் இல்லாதது போல இருந்தாளோ என அவனது யோசனை சென்றது.
எங்கு சென்றாலும் பாரங்கல்லில் முட்டிக்கொண்டு நிற்பது போன்றிருக்கும் நிலை சர்வாவை வெகுவாக சோதித்தது. தன்புறம் நடக்கும் இன்வெஸ்டிகேஷனும் அதிக சிரமங்களைச் சந்திப்பதால் அடுத்து என்ன என்று வெகுவாக தடுமாறினான்.
ஆனால், காலமும் நேரமும் யாருக்காகவும் காத்திருப்பதில்லையே! சர்வேஸ்வரனின் வாழ்வின் மிகவும் முக்கிய கட்டமான திருமண நாள் வந்தது.
சௌதாமினி உடல் தேறி இருந்தாள். பூபாலனும் வசந்தனும் திருமண வேலைகளில் பம்பரமாக சுழன்றனர். பூரிப்பு இல்லாவிட்டாலும் இருவருமே இன்முகத்துடன் தான் அனைத்து சடங்குகளையும் எதிர்கொண்டனர்.
சௌதாமினியை மனைவி ஆக்கிய தருணத்தில் சர்வேஸ்வரன் சற்று நெகிழ்ந்து கூடப் போனான். அவளை நல்ல முறையில் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று மனதார நினைத்தான்.
சர்வா முழு மகிழ்ச்சியாக இல்லை எனப் புரிந்ததோ என்னவோ அவ்வப்பொழுது ஆராய்ச்சியாக சௌதா அவனை ஏறிட்டுப் பார்த்தாள். அதைப் புரிந்தாற்போல், “இன்னமும் வொர்க் டென்ஷன் தான்” என்று சர்வா பதிலளித்தான்.
“ஓ…” என்று ராகம் இழுத்தவளின் குரலில் என்ன இருந்தது என அவனுக்குப் புரியவில்லை.
சிறு சிரிப்பு எழ, “அப்படியா முகத்துல ஒட்டி இருக்கு…” என அவளிடம் கிசுகிசுப்பாக காதோடு நெருங்கிக் குனிந்து கேட்டான்.
வேகமாக விலகியவள் அவசரமாகச் சுற்றிலும் பார்வையை ஓட்ட, “இதெல்லாம் கூட இல்லாட்டி தான் நம்மளை வித்தியாசமா பார்ப்பாங்க” என்ற சர்வாவின் குரலில் கலைந்து அவனை முறைத்தாள்.
“சரி சொல்லு ஹனிமூனுக்கு எங்கே போகலாம்…” திடீரென அவன் கேட்க அவள் திடுக்கிட்டு அவனைப் பார்த்து திருதிருவென முழித்தாள்.
“என்ன ஹனிமூன் இல்லையா?” சோகம் போல முகத்தை வைத்துக் கேட்க, “அது… அது…” என அவள் திணறியதைப் பார்க்கவே சிரிப்பாக வர, அவன் கண்கள் சிரிப்பதைக் கண்டு முறைத்துவிட்டு அவள் முகம் திருப்பிக் கொண்டாள்.
“கால் எதுவும் வலிக்குதா… வா கொஞ்ச நேரம் உட்காரு…” எனக் கரிசனம் காட்டியவன், அவளை அழைத்துச் சென்று அமரவும் வைக்க,
ஆசுவாசமாக அமர்ந்தவளிடம், “பின்ன இப்பவே டையர்ட் ஆயிட்டா ராத்திரிக்கு கஷ்டம் இல்லையா?” என்ற அவனது கேள்வியில் தூக்கிப்போட அவனைப் பார்த்து முறைத்துவிட்டு எழுந்து கொள்ளப் பார்த்தாள்.
அவன் விட்டால் தானே, மேடைக்கு உறவினரை வரவேற்று வந்த கற்பகம் கூட, “பரவாயில்லை மா. நீ நின்னுட்டே இருக்கணும்ன்னு அவசியம் இல்லை. நீ ரெஸ்ட் எடும்மா. எல்லாருக்கும் உனக்கு உடம்பு முடியாம இருந்தது தெரியும். யாரும் தப்பா எடுத்துக்க மாட்டாங்க” என்று கூறினார்.
கூட வந்த உறவினர்களும் அதையே வலியுறுத்த, வேறு வழியில்லாமல் அமர்ந்து கொண்டாள்.
திருமண கூட்டம் சற்று ஓய்ந்திருந்த நேரத்தில், கண்ணப்பனின் மனைவி தனபாக்கியம் வந்திருந்தார்.
விழிகள் பொங்க, “அத்தை…” என்று அழைத்து ஆறுதலாக அவரது கரத்தை இறுக பற்றிக்கொண்டவளுக்கு அவரது தோற்றத்தைக் கண்டு பலத்த அதிர்ச்சி!
அவரது தோற்றத்தையே கலக்கத்தோடு பார்த்தபடி நின்றிருந்தவளின் கரத்தை மெல்ல தட்டிக்கொடுத்து, “நிதர்சனத்தை ஏத்துக்கணும் சௌதா… மாமா எங்கேயோ நல்லா இருப்பாரு. ஏதாவது விபத்துல சுயநினைவில்லாம இருக்கலாம்… சீக்கிரமே நம்மை தேடி வந்திருவாருன்னு எவ்வளவு நாள் தான் நம்மளை நாமே ஏமாத்திக்க முடியும்? நாலு வருஷத்துக்கும் மேலேயும் புருஷன் வரலை… இவளுக்கு எதுக்கு பூவும், பொட்டும்ன்னு என் காதுபடவே பேசிக்கறாங்க. மாமா இனி வரப்போறதில்லைடா… நான் அதை ஏத்துக்கிட்டேன். நீயும் ஏத்துக்க… மனசைத் தளர விடாத. நீ சந்தோஷமா வாழணும்டா…” என்று அவர் சொல்லச் சொல்ல அவளுக்குக் கண்கள் பொங்கியது.
“ஸ்ஸ்ஸ்… சௌதாம்மா எல்லாரும் பார்ப்பாங்கடா” தனபாக்கியம் தவித்துப் போனார்.
“அத்தை… நாம ஆயிரம் எதிர்பார்த்தாலும் உள்ளுக்குள்ளே ஒரு பயம் இருந்ததே அவர் இந்த உலகத்துல இல்லையோன்னு… அதுவே இப்ப நிஜமாயிடுச்சே அத்தை. மாமா உடலாவது நமக்கு கிடைச்சிடாதான்னு நீங்க என்கிட்ட வேதனைப்பட்டீங்களே அத்தை… நமக்கு அந்த பாக்கியம் கூடவா இல்லை. என்ன பாவம் செஞ்சோம் அத்தை… இப்படி ஒரு நிலையில தவிக்கிறோமே…” என மேடையிலேயே கதறியவளைச் செய்வதறியாது பார்த்தார் தனபாக்கியம்.
இறுதி மரியாதை செய்ய உடல் கூட கிடைக்காதது எத்தனை துயரத்தை ஒரு குடும்பத்தைப் பரிசளிக்கும் என சர்வேஸ்வரனாலும் அவர்களது மன வேதனையை உணர முடிந்தது. தன்னால் இந்த குறையையேனும் நிவர்த்தி செய்ய முடியும் சீக்கிரமே அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என நினைத்துக் கொண்டான். ஆனால், தடாலடியாக முன்னேறவும் முடியாமல் இது என்ன வேலையோ என அந்த நேரத்தில் அவனுக்குச் சலிப்பு எழுவதையும் அவனால் தடுக்க முடியவில்லை.
சில நேரங்களில் இந்த பதவி கூட பெரும் தடையென அவனுக்குப் புரிந்தது.
சௌதாவின் அழுகையில் கற்பகம் வேகமாக மேடைக்கு வர, தனபாக்கியம், உண்மை காரணத்தை சொல்லாமல் வேறு விதமாகச் சமாளித்தார். “அது உங்களை பிரிஞ்சு இருக்க போறா இல்லையா… அதுதான் மனபாரம் தாங்க முடியாம என்னைப் பார்த்ததும் அழுது தீர்த்துட்டா…” என்று சொல்லி மழுப்பினார்.
கற்பகமும் அதையே உண்மையென நம்பி மகளுக்கு ஆறுதல் சொல்லி, தானும் கண்கலங்கி விட… தனபாக்கியம் அர்த்தத்தோடு சௌதாவை பார்த்தார். பொதுவாகக் கற்பகம் முன்பு இவர்கள் இருவரும் தங்கள் மனக் கவலைகளைப் பகிர்ந்து கொள்வதில்லை. இந்த முறையும் அது புரிந்தாற்போல் சௌதா நடந்து கொண்டாள். அனைத்தையும் அமைதியாகக் கவனித்தபடி நின்றிருந்தான் சர்வேஸ்வரன்.
திருமணம் முடிந்த மகிழ்வே இல்லாதது போல மனச்சோர்வோடு இருந்தாள் சௌதாமினி. அவளுள் இனம் புரியாத அச்சம் சுழன்று கொண்டே இருந்தது. அடிக்கடி அவளின் பார்வை அவளது சித்தப்பா செல்லத்துரையையே தழுவி மீண்டது.
சர்வேஸ்வரனுக்கும் எந்தவித எதிர்பார்ப்புகளோ, ஆசைகளோ இல்லாத சூழல் தான்! அவன் பார்த்து வரும் கேஸில் முன்னேற்றம் காட்டியே ஆக வேண்டிய நெருக்கடி. அதில் விழி பிதுங்கிப் போய் இருந்தான் என்று சொல்லலாம்.
மலர் ஹாஸ்ப்பிட்டல் கேஸ் ஒருபுறம் கிடப்பில் இருக்க, தஞ்சாவூர் அருளானந்தம் பகுதியில் மேற்கொண்டுள்ள ரகசிய ஆபரேஷனும் கிடப்பிலேயே இருந்தது. என்னவோ தன் வேலையில் முன்னேற்றமே இல்லாதது போலச் சோர்வடைந்தான். இதுவரை அவன் எந்த கேஸிற்கும் இப்படித் திணறியதோ, தடுமாறியதோ இல்லை. சிறிதளவேனும் முன்னேற்றம் இருந்து கொண்டே இருக்கும்.
இப்பொழுதும் சர்வேஸ்வரன் மலர் ஹாஸ்ப்பிட்டல் கேஸை எடுத்தால் நல்ல முன்னேற்றம் வரும் தான். ஆனால் அதற்கு அவனுக்கு அனுமதி இருக்கவில்லை. அவன் அதை எடுப்பதே பெரும் பிரச்சினையில் முடியும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.
சிலை கடத்தல் கேஸை அவன் முடிக்காமல் வேறு எதிலுமே அவனால் தலையிட முடியாது. ஆனால், மலர் ஹாஸ்ப்பிட்டல் கேஸை முடித்தால், இந்த கேஸில் முன்னேற்றம் வரும் என அவன் ஆணித்தரமாக நம்புகிறான். தன் மனதிற்குள் இருப்பதை யாருக்கு அவனால் புரிய வைக்க முடியும்? அதுவும் ஆதாரங்கள் இல்லாத பொழுது? தான் டெட்லாக் சூழலில் மாட்டியிருப்பது புரிந்து வெகுவாக சோர்ந்து போனான்.
இதுபோன்ற சூழலில் தங்கள் வாழ்வைத் தொடங்குவது குறித்து எந்தவித எதிர்ப்பார்ப்பும் இருவருக்குள்ளும் இல்லை. சர்வேஸ்வரனுக்கு சௌதாவின் சூழலும் சேர்த்து புரியும் என்பதால், அன்றைய இரவில் அவன் அவளிடம், “பயப்படாம தூங்கு. கட்டாயப்படுத்தி கல்யாணம் செஞ்சிருக்கேன். மத்ததெல்லாம் கொஞ்ச நாள் போகட்டும்…” எனச் சொல்லி அவளை அதிர்ச்சியாக்கினான். இவன் இதுபோல சொல்லக்கூடும் என அவள் எதிர்பார்க்கவில்லை என்று அவள் பார்வையிலேயே புரிந்தது.
எந்த மனநிலையில் இருக்கிறான் என அவனை சௌதாவால் கணிக்க முடியவில்லை. இருந்தும் அவளுள் ஒரு ஆசுவாசம். அவளுக்கும் சற்று நேரம் தேவைப்படத்தான் செய்தது இந்த புது வாழ்வில் ஒன்றிப் போக.
“என்ன மேடம் வேற எதிர்பார்த்திருப்பாங்க போல…” அவன் சிறு புன்னகையுடன் வினவ,
“உச்சு… சும்மா இருங்க…” எனப் பதிலுக்குப் புன்னகைத்தாள் அவள்.
அவள் முகத்தில் தெரிந்த ஆசுவாசம் அவனுக்குப் புகைச்சலை தான் தந்தது. இருந்தும் தான் அவளைச் சற்று கட்டாயப்படுத்தித் தான் திருமணம் செய்திருக்கிறோம் என்ற நிதர்சனமும் உரைக்க, சிறிது காலம் போகட்டும் என்று தன்னைத்தானே தேற்றிக் கொண்டான். அதோடு அவனும் இப்பொழுது எதற்கும் தயாராக இருக்கவில்லை தான்!
காலம் இவர்களின் வாழ்வில் என்னவெல்லாம் வைத்துக் காத்திருக்கிறதோ பொறுத்திருந்து பார்ப்போம்.