Tamil Madhura யாழ் சத்யாவின் 'இரு மலர்கள்' யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 8’

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 8’

அத்தியாயம் – 08

ராக்கிங்கில் இருந்து தப்புவாளா கவி?

 

 

காலை ஆறு மணி. வழக்கம்போல அடித்த அலாரத்தை நிறுத்தி விட்டு திரும்பவும் போர்வையால் இழுத்து மூடிக்கொண்டு தன்னவளோடு யாழ் பல்கலைக்கழக கைலாசபதி அரங்கம் அருகே இருந்த பெரிய மரத்தை சுற்றி டூயட் பாடிக் கொண்டிருந்தான் ஸாம் அபிஷேக். 

 

 

கவி நேற்றைய தினம் அணிந்திருந்த சுடிதாரோடு இருந்தாள். தேவதையாக தெரிந்தவளுக்காக இன்னும் எத்தனை வருடக் காத்திருப்போ என்று ஏங்கிப் பெருமூச்சு விட்டவனின் மோன நிலையை கைப்பேசியின் அழைப்பு குலைத்தது.

அலுப்பாய் எடுத்து “ஹலோ” சொன்னவனுக்கு அடுத்த பக்கமிருந்து நிரோஜனின் குரல் காதைத் துளைத்தது.

 

 

என்னடா இன்னும் எழும்பேலையா? ஏழு மணி பஸ் எடுக்கிறியா? ஏழேகால் பஸ்ஸா?”

 

 

ஏன்டா… பின்னேரம் தானே லெக்சர்ஸ் இருக்கு… மத்தியானம் போல போவம்டா..” தூக்க கலக்கத்தோடயே அலுப்பாய் பதிலுறுத்தான் ஸாம்.

 

 

உனக்கென்ன விசரே… லூஸன் மாதிரி கதைக்கிறாய்… கவியை யாரும் ராக் பண்ணினால் இங்க படுத்துக் கிடந்து என்ன செய்யப் போறாய்? நல்லாத்தான் இருக்கு… உன்ர ஆளில இருக்கிற அக்கறை…” 

 

 

ஐயோ… ஓமடா… அதை நான் யோசிக்கவே இல்லை. ஏழு மணி பஸ்ஸிலயே போவம். மற்றவங்களிட்ட நீயே சொல்லு”

 

 

தொலைபேசியை வைத்தது தான் தாமதம். குதித்தெழுந்து குளியலறைக்கு சென்று தயாராகினான் ஸாம். அடித்துப் பிடித்து ஓடிச் சென்று ஏழுமணி பேருந்தைப் பிடித்து விட்டவன் உள்ளே ஏற மற்ற மூன்று நண்பர்களும் அமர்ந்திருந்தனர். நிரோஜனுக்கு பக்கத்தில் காலியாக இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டான். அவர்களுக்கு பின்னிருக்கையில் சுதர்சனும் சுதனும் இருந்தார்கள். 

 

 

நண்பர்கள் நால்வரும் அரசியல், சினிமா என்று அலசி ஆராய்ந்து கொண்டிருந்தார்கள். வல்வெட்டித் துறையில் அந்த பேருந்து நிலையத்தில் மக்களை ஏற்றுவதற்காக பேருந்து தரித்த போது ஸாமின் உள்ளுணர்வு ஏதோ உணர்த்த பின்னுக்கு திரும்பி சுதனுடன் கதைத்துக் கொண்டிருந்தவன் வாயிலைப் பார்த்தவன் இனிய அதிர்ச்சியில் அப்படியே உறைந்து விட்டான்.

 

 

மெல்லிய ரோஜா நிறத்தில் பெரிய பெரிய வெள்ளைப் பூக்கள் போட்ட பருத்தி சுடிதாரில் ஒரு ரோஜாப் பூக் குவியலே நடந்து வருவது போல வந்து கொண்டிருந்தாள் அவன் கனவுகளின் நாயகி. 

 

 

பேருந்தில் ஏறியதும் உள்ளே ரெண்டடி எடுத்து வைத்து எங்காவது இருப்பதற்கு இருக்கை இருக்கிறதா? என்று விழிகளாளேயே துழாவியவளின் பார்வை இறுதி இருக்கைக்கு முன்னால் இருந்த ஸாமைக் கண்டு இனிதே அதிர்ந்து பின் ஒரு மலர்ந்த புன்னகையை முகத்தில் பூசியது.

 

 

கவிதையே தெரியுமா? என் கனவு நீதானடி
இதயமே தெரியுமா? உனக்காகவே நானடி
இமை மூட மறுக்கின்றதே ஆவலே
இதழ் சொல்ல துடிக்கின்றதே காதலே”

 

 

பேருந்திலே பாடலும் பொருத்தமாக ஒலிக்க இவள் மெதுவாக அவர்களை நோக்கி நகர்ந்தாள்.

 

 

டேய் மச்சி… சிற்றுவேசன் சோங் செமை… முடிஞ்ச வரைக்கும் அவள கரெக்ட் பண்ணுற வழிய பாரு” என்று ஸாமின் காதில் கிசுகிசுத்து விட்டு,

 

 

கவி… நீ இங்க வந்து இரு…. அஞ்சலி வரேல்லயா…?”

 

 

பரவாயில்லை அண்ணா… நான் நிக்கிறன். அஞ்சுக்கு காய்ச்சல் அண்ணா. ரெண்டு மூணு நாளைக்கு வர மாட்டாள்.”

 

 

உனக்கென்ன விசரே… ஒரு மணித்தியாலமா நிண்டு கொண்டு வரப்போறியே” என்று கவியைக் கடிந்து கொண்டே தான் எழுந்து கொண்டு ஸாமின் பக்கத்திலே அவளை அமருமாறு பணித்தான் நிரோஜன்.

 

 

அதிகமாக வார்த்தையாடி மற்றவர்கள் கவனத்தை கவர விரும்பாமல் அவளும் அமர்ந்து கொண்டாள். 

 

 

ஸாமிற்கு சிறிது நேரம் தான் காண்பது கனவா நனவா என்பதே புரியவில்லை. கவின்யா அவன் அருகே… தோளும் தோளும் உரச ஒரு பஞ்சுப் பொதி ஒன்று தன்னை அணைத்திருப்பதைப் போன்ற ஆனந்தத்துடன் இருந்தான் ஸாம். 

 

 

அவளோடு பேசுவதா? வேண்டாமா? பேசுவதென்றால் என்ன பேசுவது? காதலைச் சொல்லி விடுவோமா? வேண்டாமா? பலதையும் எண்ணிக் குழம்பிய மனதிற்கு பதில் சொல்லத் தெரியாமல் தவித்து கொண்டிருந்தான்.

 

 

இவளுக்கும் அதே உணர்ச்சிகள்.  தன்னவன் தந்த அருகாமை இனம் புரியாத ஓர் படபடப்பைத் தர என்ன பேசுவது என்று புரியாமல் மனதிற்குள்ளேயே அவனோடு பேசிக் கொண்டிருந்தாள். 

 

 

பேருந்து ஓட்டுனர் அடித்த திடீர் பிறேக்கில் முன்னிருக்கை கைப்பிடி கம்பியோடு தலையை மோத சென்றவளை தனது கையை அணையாகக் கொடுத்து கவியின் நெற்றி காயப்படாது காப்பாற்றினான் ஸாம். 

 

 

கண்களாலேயே நன்றி தெரிவித்தவள் அவன் பேசாது தான் எப்படி பேசுவது என்ற குழப்பத்தில் கட்டுக்கடங்காது துடித்துக் கொண்டிருந்த மனதை அடக்கும் வழியை தேடிக் கொண்டிருந்தாள்.  

 

 

இருவரும் என்ன பேசுவது என்ற குழப்பத்திலேயே ஆழ்ந்திருக்க மணித்துளிகள் கடந்து பல்கலைக் கழகத்தையும் சென்றடைந்தனர்.

 

 

ராக்கிங் பயம் மனதை வாட்ட அஞ்சலியும் இல்லாமல் தனியே போவது மனதைப் பிசைய ஸாம் தன்னை காப்பாற்றுவான் என்ற துணிவே துணையாக ஸாம் பின் தொடர தனது பீடத்தை நோக்கி சென்றாள்.

 

 

வழியிலேயே மறித்த மருத்துவ பீட இரண்டாம் ஆண்டு மாணவர்கள்,

என்ன மெடம்… நேற்று உங்களை காணேல்ல… எங்க போயிருந்திங்க?”

 

 

அது வந்து….”

 

 

அதுதான் வந்தாச்சே….”

 

 

மனேஜ்மன்ற் பக்கல்ட்டி ராக்கிங் பண்ணினவங்க… அவங்க விடவும் ஒரியென்டேசனுக்கு டைம் ஆகிட்டு.. நேரா அங்க போய்ட்டம்… சொறி அண்ணா….” எழும்பாத குரலில் மெதுவாக உரைத்தாள்.

 

 

மச்சான். .. இவதான்டா டிஸ்றிக் ஃபெஸ்ட்… பெரிய இடம்… மாமா வேற இங்க லெக்சரராம்…. ரொம்ப வதைக்காத… அவளும் சோளி, சுரட்டில்லாத நல்ல பிள்ளை தான்டா…”

 

 

கவின்யாவைப் பற்றி நன்கு அறிந்திருந்த ஹாட்லி கல்லூரியை சேர்ந்த இரண்டாம் ஆண்டு மாணவன் சாவகச்சேரியைச் சேர்ந்த தனது நண்பனுக்கு காதிலே மெதுவாக உரைத்தான். 

 

 

பகிடிவதை சட்டப்படி குற்றமாக அறிவித்து தடை செய்யப்பட்டு இருந்ததால் அவனும் நண்பனின் கூற்றை ஏற்று,

 

 

இது என்ன சுடிதாரோடு வந்திருக்கிறாய்? வெல்கம் பார்ட்டி வரைக்கும் கம்பஸ்க்கு வாற ட்ரெஸ் கோட் தெரியாதா?” 

 

 

அவனின் குரலின் கடுமையில் கலங்கிய கண்களை கீழே குனிந்து மறைத்தபடி,

 

 

எனக்கு தெரியாது அண்ணா… நாளையில இருந்து அப்பிடி வாறன்”

 

 

சரி… சரி…. அழாதை… கால் முட்ட கறுத்த நீளப் பாவாடையும் கைமுட்ட சீத்தைத் துணி ப்ளவுஸ்ஸும் போட்டு வரோணும். தலை ரெட்டைப் பின்னல் போட்டு கறுப்பு ரிபன் கட்டி வரோணும். சரியா? இப்ப தலையை மட்டும் ரெட்டைப் பின்னல் போட்டு இதால கட்டு…” என்று கூறி அருகிலிருந்த வாழை மரத்தில் நார் உரித்துக் கொடுத்தான்.

 

 

இதோட விட்டாங்களேடா சாமி’ என்று மனதை ஆசுவாசப் படுத்திக் கொண்டு தனது ஒற்றை ஜடையை அவிழ்க்க ஆரம்பித்தவள் பார்வை, சிறிது தொலைவில் நின்று இங்கே நடப்பதையே பார்த்து கொண்டிருந்த ஸாமைக் கண்டு புன்னகையால் மலர்ந்தது. 

 

 

அவன் தன்னை நினைத்து வருந்துவதை உணர்ந்தவள் தனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை என்றும் அவனைப் போகச் சொல்லியும் கைகளால் சைகை காட்டினாள். அவள் மலர்ந்த முகத்தைப் பார்த்து திருப்திப் பட்டவனாக ‘சரி’ என்று தலை அசைத்தவன் அவள் இரட்டைப் பின்னல் போடும் அழகையே ரசித்துக் கொண்டிருந்தான்.

 

 

இரண்டு ஜடைகளையும் பின்னி முடித்து கீழே வாழைநாரால் கட்டி விட்டு, “அண்ணா நான் போகட்டா? நேரம் ஆகிட்டு…”

மெதுவாக விளித்தவளைப் பார்த்து அந்த மாணவர்கள் கும்பலே அசந்து விட்டது. 

 

 

ஒற்றை ஜடையின் நுனியை மடித்துக் கட்டியிருந்த போது தெரியாது இருந்த அவள் கூந்தல் அழகு இப்போது பிரமிக்க வைத்தது. இரு நீண்ட கருநாகங்களாக இடையையும் தாண்டி அசைந்த பின்னல்களை பார்த்து அந்த ஆண்களாலே வியக்காமல் இருக்க முடியவில்லை. 

 

 

உனக்கு நல்ல வடிவான நீள முடி கவின்யா… என்ன எண்ணெய் வைக்கிறனீர்? என்ர ஆளுக்கும் இருக்கே… எலி வால் மாதிரி. …”

 

 

சோகமாக சொன்னான் ஒரு சீனியர் மாணவன். 

 

 

நன்றி அண்ணா… செவ்விளநீர் தேங்காய் எண்ணெய்க்குள் கரிசலாங்கன்னி, பொன்னாங்காணி, கறிவேப்பிலை, செவ்வரத்தம்பூ எல்லாம் போட்டு அம்மா காய்ச்சி தாறவ. அதோட எங்கட பரம்பரையில எல்லாருக்கும் நீள முடிதான்… நான் வேணும் என்றால் எண்ணெய் கொண்டு வந்து தரட்டே அண்ணா…” அவனின் உண்மையான பாராட்டு உணர்ந்து வெள்ளந்தியாய் உரைத்தவளுக்கு,

 

 

ஓம் கவி. கொண்டு வந்து தாரும. அதை வைச்சாவது அவளுக்கு வளருதா பாப்பம். சரி நீர் இப்ப வகுப்புக்கு போம்”

 

 

என்று விடை கொடுத்தான் அந்த மாணவன். தனது கூந்தல் அழகினாலேயே ஒரு கும்பல் மாணவர்களின் ராக்கிங் பிரச்சினைகளை தனக்கு சாதகமாக கையாண்டவள் இன்னும் தன்னையே பார்த்து கொண்டிருந்த ஸாமிற்கு கையாட்டி விடை கொடுத்து விட்டு தனது விரிவுரை நடக்கும் கூடத்திற்கு சென்றாள். 

 

 

இரட்டை ஜடைகள் அசைந்தாட ஒரு தென்றலாய் மிதந்து சென்றவளைப் பார்த்து பெருமூச்சொன்றை வெளியேற்றினான் ஸாம் அபிஷேக். அவன் மனதோ ‘எப்போதடா இந்த நீண்ட கருங்குழலில் தனது விரல்களை நுழைத்து அளைந்து விளையாடலாம் என்ற பேரேக்கம் கொண்டது. 

 

 

அது என்னவோ பாண்டிய அரசனில் இருந்து இன்றைய எங்கள் தலைமுறை ஆண்கள் வரை பெண்களின் கூந்தலில் ஒரு மயக்கம். கூந்தல் அழகிலே கூட தங்கள் மனதைப் பறி கொடுத்து டூயட் பாடி விடுகிறார்கள். 

 

 

மாலையில் விரிவுரைகள் முடித்து வெளியே வந்த கவி அங்கே மரத்தின் கீழே ஸாமும் நண்பர்கள் குழாமும் காத்திருப்பதைப் பார்த்து வதனத்திலே மென்னகை துலங்க வாயிலை நோக்கி சென்றாள். இவர்களும் பின் தொடர்ந்தார்கள். 

 

 

ஒருநாளும் தனியாக யாழ்ப்பாணம் வந்து போகாத அவளுக்கு அவர்கள் பின்தொடர்கையே ஒரு பாதுகாப்பு உணர்வைத் தோற்றுவித்தது.

 

 

பல்கலைக்கழகத்திலிருந்து அவர்கள் ஊருக்கு நேராகப் பேருந்து கிடையாது. யாழ் நகருக்கு சென்று அங்கிருந்து தான் அவர்கள் ஊருக்குரிய பேருந்தைப் பிடிக்க வேண்டும். 

 

 

அனைவரும் யாழ் நகரை அடைந்ததும் கவி நிரோஜனை நெருங்கி

அண்ணா… நாளைக்கு ட்ரெஸ் கோட்ல கம்பஸுக்கு வர வேணும். அதால உடுப்பு எடுக்கப் போறன். ஃபாங்ல போய் காசு எடுக்க வேணும்”

 

 

அவள் சொல்லி முடிக்க முதலே,

ஓகே கவி… நாங்க கூட வாறம்… பயப்பிடாமல் போம்…” 

 

 

கவின்யா தனியாக செல்வதற்கு பயப்பட்டதன் காரணம், பல வருட யுத்தங்களின் பின் இப்போது தான் சமாதான பேச்சு வார்த்தைகள் ஆரம்பித்ததைத் தொடர்ந்து வடபகுதியையும் தென் பகுதியையும் இணைக்கும் ஏ9 பாதை திறக்கப் பட்டுள்ளது. அதனால் தென் பகுதி சிங்கள மக்களெல்லாம் யாழ்ப்பாணம் நாக விகாரையை தரிசிக்கவும் யாப்பண விசித்திர பூமியைச் சுற்றிப் பார்க்கவும் படையெடுத்து வந்து கொண்டிருந்தனர். சிங்கள வியாபாரிகளும் தென் பகுதிப் பொருட்களையெல்லாம் வீதியெங்கும் கடை பரப்பியிருந்தனர். இதனால் யாழ் நகர் எங்கும் மிகுந்த சனசஞ்சாடி மிக்கதாகவும் இளைஞர்கள் கூட்டங்களாலும் நிரம்பி வழிந்தது. வெளி மாவட்ட இளைஞர்களின் கிண்டல் கேலிகளை சந்திக்க நேரும் என்பதற்காக தான் கவி தன் நண்பர்கள் துணையை நாடியது.

 

 

அவர்கள் வருவதாக சொன்னது ஆறுதல் அளிக்க, ஸாமிடம் கண்களாலேயே அனுமதி பெற்று இலங்கை வங்கி தானியங்கி இயந்திரத்தில் சென்று பணத்தை எடுத்து கொண்டு யாழ் நகரின் பிரபல புடவை நிலையமான ராசி சில்க்ஸ்ஸை நோக்கி சென்றாள். 

 

 

மற்றவர்கள் கவனத்தை கவராமல் அவளைப் பின் தொடர்ந்து இவர்களும் கடைக்கு சென்றார்கள்.  இரண்டு நீள கறுத்தப் பாவாடைகளும் சீத்தைத் துணி போல் தோற்றம் தரக் கூடிய பெரிய பெரிய பூக்கள், வட்டங்கள், கோடுகள் போட்ட பருத்தித் துணியில் முழு நீளக்கை மேற்சட்டைகள் ஐந்தும் கவி எடுத்துக் கொண்டாள்.

 

 

சேர்ட் எடுக்கிறோம் என்று கடையையே இரண்டு பண்ணி விட்டு கவி கிளம்பியதும் கடைப் பையன்களின் திட்டையும் இலட்சியம் செய்யாது இவர்களும் சென்று பருத்தித்துறை 751 ஆம் இலக்க அரச பேருந்தில் ஏறிக் கொண்டார்கள். 

 

 

பாதி இருக்கைகள் நிரம்பி இருக்க கவி சென்று கடைசி இருக்கை யன்னலோரத்தில் அமர்ந்து கொண்டாள். ஸாம் அவள் பக்கத்தில் அமர நிரோஜன், சுதன், சுதர்சன் தொடர்ந்து அருகருகே அமர்ந்து கொண்டார்கள். 

 

 

வேறு எந்த ஆணும் அருகில் அமராமல் ஸாம் இருந்ததே நிம்மதியாக உணர்ந்த கவி, நிரோஜனிடம் எட்டி பணத்தை கொடுத்து

 

 

அண்ணா… ப்ளீஸ் சரியான தாகமா இருக்கு… சாப்பிட வடையும் குடிக்க ஏதாச்சும் எல்லாருக்குமா  வாங்கிட்டு வாறிங்களா? பஸ் வெளிக்கிட இன்னும் இருபது நிமிசம் இருக்குத்தானே…”

 

 

ஆண் பையன்கள் இப்படி ஓஸியில் பணம் வந்தால் விடவா போறார்கள். கவியிடம் பணத்தை எட்டி வாங்கிய சுதர்சன்,

 

 

நானும் சுதனும் போயிட்டு வாறம்” என்று மகிழ்ச்சியாக புறப்பட்டான்.

 

 

டேய் மலாயன் கபேயில வடை வாங்குடா” இறங்கிச் சென்றவர்களுக்கு ஸாம் குரல் கொடுத்தான்.

 

 

சென்றவர்கள் யாழ்ப்பாணத்தில் வடைக்கு பெயர் போன மலாயன் கபே வடையோடும் பச்சை மிளகாய் சம்பல் பார்சலோடும் நெக்டோ சோடா பெரிய ஒன்ரரை லீற்றர் போத்தலோடும்  வந்தார்கள். 

 

 

நிரோஜன் சம்பல் பார்ஷலைப் பிரித்துப் பிடித்து மடியில் வைத்திருக்க மற்றவர்கள் ஆளுக்கொரு வடையை எடுத்து சம்பலில் தோய்த்து உண்ண ஆரம்பித்தார்கள். கவி சம்பலை மறுத்து விட்டு ஒவ்வொரு கடியாக அந்த மெதுவடையை ருசித்துக் கொண்டிருந்தாள்.

 

 

திடீரென ஸாம் தான் பாதி உண்டிருந்த தனது வடையை கவியின் கையிலே வைத்து விட்டு அவள் பாதி முடித்திருந்த வடையை தன் கைக்கு மாற்றி விட்டு எதுவுமே நடவாத மாதிரி தொடர்ந்து உண்ண ஆரம்பித்தான். 

 

 

கவியோ ஒரு கணம் திகைத்தவள் பின்னர் நடந்ததை உணர்ந்து கன்னங்கள் வெக்கச் சிவப்பில் பூரிக்க அவன் எச்சில் பட்ட வடையை மேலும் ரசித்து உண்டாள். கடைக்கண்களால் அவள் தான் சுவைத்துக் கொடுத்த மீதி வடையை உண்பதைப் கண்டும் காணாததுமாய் பார்த்து ரசித்தவன் அவள் தன் மீது கொண்ட காதலை ஒப்புக்கொள்வதை உணர்ந்து மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தான். 

 

 

இவர்கள் இருவரதும் இந்த காதல் நாடகத்தை எழுந்து நின்று சாப்பிட்டு கொண்டிருந்த சுதர்சன் கவனித்து விட்டு,

 

 

பிள்ளையாரப்பா… இன்றைக்குப் போலவே எப்பவும் இதுகள் ரெண்டும் இணை பிரியாமல் சந்தோசமா இருக்கோணும்” என்று மனசார வேண்டிக் கொண்டான்.

 

 

அவன் வேண்டுதலைப் பார்த்து விதி நகைத்ததைப் பாவம் அந்த உண்மை நண்பன் உணர்ந்து கொள்ளவில்லை. 

ஸாம் – கவி காதல் கை கூடுமா? இல்லையா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 15’யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 15’

அத்தியாயம் – 15 யாருக்கு மாலை?   பரீட்சைகள் முடிந்த அன்றைக்கே கவின்யா வல்வெட்டித்துறையிலுள்ள தனது வீட்டுக்கு வந்து விட்டாள். வந்த நேரமிருந்து ஓய்வெடுக்காது வரவேற்பறையையே சுத்தப்படுத்தி அழகுபடுத்தி கொண்டிருந்த மகளைப் புரியாமல் பார்த்தார் தெய்வநாயகி.      “இவ்வளவு நாளும்

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 4’யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 4’

அத்தியாயம் – 04 திட்டுவது ஏனோ? சில பல மாதங்கள் உருண்டோடின. எல்லோர் வாழ்க்கைகளிலும் பல மாற்றங்களும் நடந்தேறின. இரு பாடசாலைகளதும் கட்டடங்கள் சில இன்னும் இராணுவத்தினர் வசம் இருந்தாலும் சோதனைச் சாவடிகள் நீக்கப்பட்டு சோதனைகளின்றி மாணவர்கள் நேரடியாக பாடசாலைக்குச் செல்ல

யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 20’யாழ் சத்யாவின் ‘இரு மலர்கள் – 20’

அத்தியாயம் – 20 அருண்யா எங்கே…? காலையில் எழுந்ததுமே தந்தையிடம் இரவு ஸாம் அழுததைப் பற்றிக் கூறித் தான் சென்று பார்த்து வருவதாக ஸாம் வீட்டிற்கு சென்று விட்டாள் அருண்யா. ஸாமின் மனநிலையை புரிந்து கொண்டவர் மகளைத் தடுக்கவில்லை.  அந்த நல்ல