எனக்கொரு வரம் கொடு 15 – சுகமதி

எனக்கொரு வரம் கொடு – 15

சௌதாமினி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த வரைக்கும் யாருக்குமே விஷயம் கசியாது லாவகமாகச் சூழலைக் கையாண்டான் சர்வேஸ்வரன். அவன் முன்பே கேட்டுக்கொண்டதற்கிணங்க அவளுடைய கருப்பை குறித்த விஷயம் மட்டும் யாரிடமும் பகிரப்படவே இல்லை. அவளுடைய மெடிக்கல் ரிப்போர்ட்ஸ் கூட அவனிடமே சேர்க்கப்பட்டது.

மருத்துவமனை, வேலை என இருபக்கமும் ஓயாது அலைந்ததால் அவன் உடல் எடை கூட நன்கு குறைந்திருந்தது. பார்த்தாலே வித்தியாசம் தெரியுமளவு! என்னவோ அது அவன்மீதான மதிப்பை மற்றவர்களிடம் உயர்த்தியும் காட்டிற்று! அவர்களைப் பொறுத்தவரையும் அது சர்வா சௌதா மீது கொண்ட நேசத்தின் வெளிப்பாடு. அவளுக்கு ஒன்று என்றால் துடித்துப் போகிறான் என்று பெருமையாக எண்ணினார்கள்.

உண்மையில் அவன் நேசம் அவர்கள் நினைப்பதை விடவும் மேலாகவே இருந்தது. அதை அவன் யாருக்கும் பிரகணப்படுத்த விரும்பியதே இல்லை என்பதே உண்மை!

சௌதா கூட அவனிடம், “ஏன் இப்படி அலையறீங்க. வர வர ரொம்ப சோர்ந்து போயிட்டீங்க. தினமும் என்னைப் பார்க்க வர வேணாம். உங்களுக்கு நேரம் இருக்கும்போது வந்துட்டு போங்க. மத்த நாள் எல்லாம் போன் பண்ணுங்க. நான் நல்லா தான் இருக்கேன்…” என அவனது சோர்வு பார்த்துச் சொல்லிப் பார்த்தாள். அவனது வேலையும் நேரம் காலம் பார்க்காமல் அலைவது, கூட தானும் சேர்ந்து அலைக்கழிக்க வேண்டுமா என்று அவளுக்கு தர்மசங்கடம்.

“ம்ப்ச்…” என்ற சிறு சலிப்பு தவிர அவனிடம் பதில் இல்லை.

“இப்படி செஞ்சது யாரு?” அவளும் பலமுறை, பலவிதமாகக் கேட்டு விட்டாள். பதில் சொல்லாமல் மௌனம் காத்துக் கொண்டே இருக்கிறான்.

“உனக்கு யார் மேல சந்தேகம்?” இம்முறை அவன் அவளிடம் கேள்வி கேட்க,

“என்ன பேசறீங்க? நான் யாரைச் சந்தேகப்பட போறேன்…” என்றாள் குழப்பத்துடன். அவளுக்கு ஒருவர் மீதுமே அதுவரை சந்தேகம் எழுந்ததே இல்லை.

ஆனால், அவனது திடீர் கேள்வியில் மின்வெட்டாய் அவளுக்குள் ஒரு அச்சம் வந்து போனது. அது அவளது முகத்தையும் சேர்த்து கலவரப்படுத்து, “ஏன் சர்வா… சித்தப்பா எப்படி இருக்காங்க?” என்றாள் திணறலாக.

பிரசாந்த் சர்வேஸ்வரனிடம், பிரகதீஷ் குறித்துச் சொல்லியிருந்தான். ஆக அதை வைத்துத் தான் இவளிடம் உனக்கு யார் மீது சந்தேகம் என வினவினான். அந்த பிரகதீஷ் அத்தனை தொல்லை தந்தும் இவள் அது குறித்து தன்னிடம் எதுவும் தெரிவிக்கவில்லையே என்னும் எரிச்சல், ஆதங்கம் மலையளவு இருந்த போதும்… வாடிய கொடி போல துவண்டு போய் இருப்பவளிடம் நேரடியாகக் கோபம் காட்டவும் அவனால் முடியவில்லை.

இப்பொழுது சௌதா சம்பந்தமே இல்லாமல் கலவரமாகவும் அவனது புலன்கள் கூர்மையானது. “புரியலை… உங்க சித்தப்பாவுக்கு என்ன?” என அழுத்தமாக அவளைப் பார்த்து வினவினான்.

அவனது கூர்மையில் அவள் சற்று சுதாரித்தாள். “அது.. அது… சித்தி, தம்பிங்களை எல்லாம் பார்க்கிறேன். சித்தப்பாவை பார்க்க முடியறதில்லையா… அதான்… அது அவரு நல்லா இருக்காரான்னு… அது வந்து சித்தி எப்படியும் என்கிட்ட இது சம்பந்தமா எதுவும் சொல்ல மாட்டாங்க…” என்னவோ உளறிக் கொட்டியவளைப் பார்க்கப் பார்க்க அவனுக்கு எதுவோ சரியில்லை என்று நிச்சயமாகத் தோன்றியது.

அவனைச்சுற்றி பல முடிச்சுகள்! அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது என அவனது உள்ளுணர்வுகள் சொன்னாலும்… சாட்சியாகவோ ஆதாரமாகவோ எதுவுமே அவன் கையில் இல்லை. எந்த முடிச்சாவது அவிழாதா என அவனும் அவனுக்குத் தெரிந்த அனைத்து வழிகளிலும் முட்டி மோதி பார்த்துக் கொண்டு தான் இருக்கிறான். ஆனால், பலன் மட்டும் பூஜ்ஜியமாகவே இருந்து வருகிறது.

இதோ இவளுள்ளும் ஓர் ஆழ்ந்த ரகசியம் இருக்கிறது. அது தனக்கு துருப்புச்சீட்டாக அமையும் எனவும் புரிகிறது. ஆனால், எப்படிக் கேட்டாலும் வாயே திறக்காத இவளை வைத்துக்கொண்டு என்ன செய்வது எனப் புரியாமல் அவனுக்கு ஆயாசமாக இருந்தது.

ஒருவேளை சௌதாவின் காதலனாக, உறவினனாக மட்டும் தான் அணுகுகிறோமோ? அவளைக் காவலனாக அணுக வேண்டுமோ? என அவனை குடைந்து கொண்டே இருக்கும் உள்ளுணர்வுக்கும் அவனால் முழு ஈடுபாடு காட்ட முடியவில்லை.

அவளைக் காவலனாக அவனால் எப்படி அணுக முடியும்?

அதற்கான சந்தேக வித்திற்கு ஆதாரமாக எதுவுமே அவனிடம் இல்லை என்பது ஒருபுறம் என்றாலும், அவள் அவனது மிகப்பெரிய பலவீனம்! அவனால் அந்த பலவீனத்தைக் கடந்து இதுவரையிலும் வர முடிந்ததில்லை! அவளை அதட்டி உருட்டி திருமணம் செய்து கொள்ள முடிந்தவனால், அவளிடம் அதட்டி உருட்டி விஷயத்தை வாங்க முடியவில்லை. அதற்கான முயற்சியையும் அவன் மேற்கொண்டதில்லை.

ஆனால், அவனது பலவீனத்தைக் கடந்து வந்தால் மட்டுமே அவனது வழக்கின் சிக்கல்கள் எல்லாம் முடிவுக்கு வரும் என அவனுக்கு எப்பொழுது புரியுமோ என்று தெரியவில்லை.

அதைப் புரிந்து அவன் செயலாற்றும் போது அவர்களுள் எழும் பிரிவை அவன் எவ்வாறு சமாளிப்பான் என்பதும் புரியவில்லை!

சிந்தனையில் மூழ்கி இருந்தவனைப் பார்க்கவே அவளுக்குத் தொண்டையிலும் வயிற்றிலும் எதுவோ உருளும் நினைவு!

“என்ன சர்வா…” என்றாள் உள்ளே சென்றுவிட்ட குரலில்.

அவளை ஒரு நொடி ஆழ்ந்து பார்த்தவன் மறுப்பாகத் தலையசைத்தான். அவள் பயத்தில் எச்சில் கூட்டி விழுங்கிக் கொண்டாள். அதைக் கவனித்தவன், “வொர்க் டென்ஷன்…” என்றான் பட்டும் படாமல்.

அவன் சொன்னதும் ஒருவிதத்தில் உண்மைதான் என்றாலும், இப்பொழுது அவன் சிந்தனை அதைக்குறித்து இருந்திருக்கவில்லையோ என அவளுக்கு உறுத்தியது.

“சர்வா… அது என்னைக் குத்தினது…” என மீண்டும் தயக்கமாக இழுத்தாள். இப்பொழுது அதற்கான பதில் அவளுக்கு வெகுவாக தேவையாக இருந்தது.

அவளுக்கிருக்கும் தவிப்பைப் புரிந்துகொள்ள முடிந்தாலும் அதை இம்மியும் பொருட்படுத்தாமல், “அவனை பிடிச்சாச்சு… இனி அவனைப்பத்தி எந்த கவலையும் வேண்டியதில்லை…” என்று மேலோட்டமாக மட்டும் பதில் சொன்னவனின் குரல் இறுகியிருந்தது.

அந்த இறுக்கமே மேற்கொண்டு எதையும் அவனிடம் விசாரிக்க அவளால் முடியவில்லை. சட்டென்று ஒரு மௌனம் சூழ்ந்து கொண்டது அவ்விடத்தில்!

‘உஃப்’ என்ற அவனது பெருமூச்சு சத்தத்தில் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

அவளது கையை அழுந்தாமல் பற்றிக் கொண்டவன், “என் மேல யாருக்குமே நம்பிக்கை இல்லை… என்கிட்ட கேஸை ஒப்படைச்ச ஹையர் அஃபிஷியருக்கு நான் கேஸை முடிப்பேன்னு நம்பிக்கை இல்லை… எங்க அம்மாவுக்கு உன்னை நான் நல்லா பார்த்துப்பேன்னு நம்பிக்கை இல்லை… உனக்கு நான் எல்லா பிரச்சினைகளையும் சமாளிப்பேன்னு நம்பிக்கை இல்லை…” என்று ஒருமாதிரி குரலில் சொன்னவன், அவளை நிமிர்ந்தும் பார்க்காமல் அவளை விட்டு விலகி அறையை விட்டு அவசரமாக வெளியேறிச் சென்றான்.

பொதுவாக சர்வா இப்படி மனம் திறப்பவன் இல்லை. அவனது அழுத்தங்கள் அவனையுமறியாமல் அவளிடம் இப்படி பேச வைத்து விட்டது.

அவன் விலகிச் சென்றதுமே சௌதாவின் கண்கள் கண்ணீரைப் பொழியத் தொடங்கி விட்டது. ‘சாரி சர்வா… என்னால முடியலை…’ என்று பரிதாபமாக தனக்குள்ளேயே சொன்னவளுக்கும் முழு விஷயமும் தெரியாது. ஆனால், அவளுக்குத் தெரிந்த விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளும் துணிவும் அவளுக்கு இருக்கவில்லை.

சர்வாவின் கைப்பேசி சிணுங்கிக் கொண்டிருந்தது. காரை ஓரமாக நிறுத்தி அதை எடுத்து பார்த்தான். தடயவியல் நிபுணர் கிஷோரிடமிருந்து அழைப்பு வந்திருக்கவும் சர்வாவுக்கு குழப்பம் வந்தது.

‘இவன் எதுக்கு இந்த நேரத்துக்கு கூப்பிடறான்?’ என்ற யோசனையோடே அழைப்பை ஏற்றவன், “சொல்லு கிஷோர்…” என்றான்.

“பிஸியா இருக்கியா?” கிஷோர் சிறு தயக்கத்துடன் வினவினான்.

“இல்லை இல்லை… வொர்க் முடிச்சிட்டேன். ஆன் தி வே டு ஹோம்…” என சர்வா சொல்லிவிட்டு, “எனிதிங் எமெர்ஜென்ஸி?” என வினா எழுப்பினான்.

“லைட்டா மச்சி… டி.ஐ.ஜி., கூப்பிட்டிருந்தாரு டா” எனவும்,

“என்னாவாம் அவருக்கு…” என்றான் சர்வா எரிச்சல் குரலில்.

“அந்த மலர் ஹாஸ்ப்பிட்டல் கேஸ்… அது எதுக்கு சர்வாவுக்கு ரிப்போர்ட் பண்ணுனீங்க, லோக்கல் இன்ஸ்பெக்ட்டர் தானே டேக் கேர் பண்ணியிருக்கணும். அவர்கிட்ட ரிப்போர்ட் பண்ணாம சர்வா கிட்ட ஏன் ரிப்போர்ட் பண்ணுனீங்கன்னு கேட்டு காதுல ரத்தம் வர வெச்சுட்டாரு டா” எனப் பரிதாபமாகப் புகார் வாசித்தான்.

“ஓ… நீ என்ன சொன்ன?” சர்வாவின் குரல் இறுகியிருந்தது.

“நான் போனப்ப லோக்கல் ஸ்டேஷன்ல இருந்தும் வந்திருந்தாங்க சார். பட் அவங்க கிரௌட் தான் மேனேஜ் பண்ணுனாங்க. சர்வா அண்ட் டீம் தான் கேஸை விசாரிச்சாங்கன்னு சொன்னேன்…”

“ஹ்ம்ம்…”

“டேய் நான் என்ன கதையா சொல்லிட்டு இருக்கேன். அந்த லோக்கல் இன்ஸ்பெக்டருக்கும் நல்லா டோஸ் விழுந்திருக்கும்ன்னு நினைக்கிறேன்…”

“ஹ்ம்ம் ஓகே டா… நான் பார்த்துக்கிறேன்” என சர்வா யோசனையோடே பதிலளித்தான்.

“ஆனா கேஸ் தொடங்கி நீங்க இந்நேரம் பாதி இன்வெஸ்டிகேஷன் போயிருப்பீங்க. இதை ஏன்டா இப்ப கேட்கிறாரு” என கிஷோர் புரியாமல் கேட்கவும்,

“ரெட் லைன் மச்சி…” என்று முடித்து விட்டான் சர்வா. அது ஒரு கோட் வோர்ட் போல… அவன் அந்த விஷயம் குறித்து எதுவும் சொல்லக்கூடாது என்பது அதன் அர்த்தமாகும். கிஷோரும் அதைப் புரிந்து கொண்டு, “ஓகே மச்சி டேக் கேர்” என்றதோடு உரையாடலை முடித்துக் கொண்டான்.

தனக்கு கொடுத்த சீக்ரெட் கேஸில் முன்னேற்றம் காட்டாததால் எழுந்த கடுப்பில், இப்பொழுது இந்த பிரச்சினையை டி.ஐ.ஜி இழுக்கிறார் என சர்வாவுக்கு புரியாமல் இல்லை.

ஆனால், அது கொஞ்சம் இழுபறி கேஸ் என்பது டி.ஐ.ஜி அறியாத விஷயமா? என இப்பொழுது இவனுக்குக் கடுப்பானது.

கூடவே இவன் இந்த மருத்துவமனை கேஸை எடுத்ததும், இரண்டு கேஸ்களுக்கும் இடையே எதுவோ தொடர்பு இருக்கிறது என்று தனக்குள் எழுந்த கணிப்பினால் தானே! கணிப்பை ஆதாரங்களின்றி வெளியிடவும் முடியாதே!

எல்லாம் சுற்றிச் சுற்றி முடிச்சுகள் விழுவதும், முட்டுச்சந்தில் சென்று மாட்டிக் கொள்வதுமாக இருந்தால் அவனும் தான் என்ன செய்வான்?

நாளை டி.ஐ.ஜியை சந்திக்க வேண்டும் என்ற கடுப்புடன் மீண்டும் வண்டியைக் கிளப்பினான்.

மறுநாள் சர்வா எதிர்பார்த்தது போலவே அவனுக்கு டி.ஐ.ஜி ஜெயந்த் முரளியுடன் சந்திப்பு ஏற்பாடாகியிருந்தது. ஏற்கனவே கிஷோர் தகவல் தந்திருந்தபடியால் டி.ஐ.ஜி எதைப்பற்றிக் கேட்கப்போகிறார் என்று தெரிந்திருந்தவனுக்கு அவரை எதிர்கொள்வதில் எந்த சிக்கலும் இருந்திருக்கவில்லை.

“கேஸோட பிராக்ரஸ் என்ன?” கடுப்போடு கேட்டார் அந்த மனிதர்.

சர்வாவும் நிதானமாக இதுவரை கண்டுபிடித்ததை எல்லாம் சொல்லிக்கொண்டே வந்தான்.

“2016 ல வந்த கேஸ் இது… என்னதான் ரொம்ப சிரமமான கேஸ் மெதுவா போகும்ன்னு சொன்னாலும் இப்படியா?” கடுப்போடு கேட்டவரிடம் அதையும் விடவும் கடுப்பாக அவன் முறைத்தான்.

“சார்… ரொம்ப வருஷமா அசோக் நகர்ல இருக்க ஸ்பெஷல் ஆபிசர்ஸ் தானே இந்த கேஷை பார்த்துட்டு இருக்காங்க. நான் இந்த கேஸுக்குள்ள வந்து எட்டு மாசம் தானே ஆகுது…” என்றான் ஏக கடுப்புடன்.

“உங்க ரெக்கார்டஸ் எல்லாம் நல்லா இருக்குன்னு தான் சிலை கடத்தல் பிரிவு டீம்கிட்ட பேசி உங்களையும் கேஸ்ல இன்வால்வ் பண்ண வெச்சேன். பொதுவா மத்த டீம் ஆளுங்களை அவங்க இன்வால்வ் பணிக்கவே மாட்டாங்க. இந்த கேஸ் எவ்வளவு இம்பார்ட்டண்ட்ன்னு உங்களுக்கே தெரியும்…” அவரும் காரமாகவே கேட்டார்.

“சார் என்கிட்ட சில கான்பிடன்ஷியல் டீட்டைல்ஸ் இருக்கு. அதுகொண்டு மேற்கொண்டு ப்ரொஷீட் செய்ய எந்த துருப்பு ஷீட்டும் எனக்கு இதுவரை கிடைக்கலை. நமக்கு யாரு குற்றத்தை செஞ்சாங்கன்னு கண்டுபிடிக்கிறது எவ்வளவு முக்கியமோ அதேயளவு முக்கியம் ஆதினத்துக்குச் சொந்தமான லிங்கத்தை மீட்டெடுக்கிறதும்…”

“நீங்க 90 கிலோமீட்டர் தாண்டியுள்ள நாகப்பட்டினத்துல தொலைஞ்சதை எந்த புரூப்பும் இல்லாம தஞ்சாவூர்ல தேடணும்ன்னு கேட்டு வந்திருக்கீங்க. இதுக்காக உங்களை என் பெர்சனல் ரெகமெண்டஷன்ல மாத்தியும் இருக்கேன். இவ்வளவு சலுகைகளுக்கப்பறமும் நாம பிராக்ரஸ் காட்டாட்டி எப்படி? பத்தாதுக்கு அந்த மலர் ஹாஸ்ப்பிட்டல் கேஸ்ல வேற தேவையே இல்லாம நீங்க இன்வால்வ் ஆகியிருக்கீங்க…” என்று அதிருப்தியோடு கேட்டார். அவருக்கும் அதற்கு ஈடான பிரஷர் அவருடைய மேலிடத்திலிருந்து இருந்தது. அதை அவனிடமும் பாரபட்சமின்றி கொட்டினார்.

“சார் கிவ் மீ சம் ஸ்பேஸ்… நான் சில விஷயங்களை ஆதாரங்கள் இல்லாம ஷேர் பண்ண முடியாத சிட்டுவேஷன்ல இருக்கேன். அண்ட் அந்த மலர் ஹாஸ்ப்பிட்டல் கேஸ் முழுக்க முழுக்க என்னோட அஸிஸ்டண்ட்ஸ் பார்க்கிறாங்க. நான் மட்டும் தான் சீக்ரெட்டா இந்த கேஸ்ல இன்வால்வ் ஆகியிருக்கேன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும். ஏற்கனவே சிலை கடத்தல் சிறப்புப் பிரிவு அதிகாரிகள் அஞ்சு வருஷமா எதுவும் பிராக்ரஸ் காட்டலைன்னு தானே நாம இதுல அடிஷனலா இன்வால்வ் ஆகியிருக்கோம். அப்ப இந்த கேஸ்ல இருக்க சிரமங்கள் நான் எடுத்து சொல்லித்தான் உங்களுக்கு தெரியணுமா? நான் மத்த கேஸஸ்ல இன்வால்வ்மெண்ட் காட்டறது வெளியுலகத்துக்கு ஒரு மாயையைக் கூட உருவாக்கும் இல்லையா? பிலீவ் மீ நான் சீக்கிரம் அடுத்த ஸ்டெப் எடுக்கறேன்…”

தன்னை நிரூபித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் சர்வா இருந்தான்.

“ஓகே… நாம இதுல இன்வால்வ் ஆகிட்டோம். நம்ம மூலம் பிராக்ரஸ் நடந்தா தான் நமக்கு பேரே… கொஞ்சம் கவனமாவே கேண்டில் பண்ணுங்க. எண்ட் ரிசல்ட் நமக்கு சாதகமாத்தான் இருக்கணும்” அவருக்கும் அவன் போக்கில் விடுவதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை.

“கண்டிப்பா சார்…” என்று விடைபெற்று வந்தவனுக்கு அடுத்து என்ன எனக் குழப்பமே மிஞ்சியது.

தஞ்சாவூர் அருளானந்தம் பகுதியில் ஒரு வீட்டில் தொன்மையான சிலைகள் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது என்று நம்பகமான இடத்திலிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் தான் அவன் தஞ்சாவூருக்கு மாற்றல் கேட்டதே! கூடவே அவனுக்கு வேறொரு யூகமும் இருக்கவே உடனே டி.ஐ.ஜியிடம் கேட்டு மாற்றல் வாங்கி வந்துவிட்டான்.

அருளானந்தம் பகுதியிலுள்ள முக்கிய பிரமுகர்கள் அனைவரின் இடங்களிலும் ரகசியமாகக் கண்காணிக்கும் பணியும் தொடங்கியிருந்தான்.

அவன் சந்தேகம் சிலரிடம் வலுப்பெறுகிறது. ஆனால், சமுதாயத்தில் உயர் நிலையில் இருப்பவர்களிடம் வெறும் சந்தேகத்தை வைத்து மட்டும் அவனால் விசாரணையைத் தொடங்க முடியாதே! யாராவது ஒருவர் சுதாரித்தாலும் இத்தனை நாள் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் வீண் என்னும் நிலை!

எங்குமே மேற்கொண்டு ப்ரோஷீட் செய்ய முடியாமல் இருக்க, அவனுக்கு அடுத்து என்ன என்று புரியவே இல்லை.

என்னவோ தோன்ற தன் சந்தேக வித்துக்களுக்கான பதில் சௌதாமினியை விடச் செல்லத்துரையிடம் எதுவும் தேறுமோ என்று எண்ணியவன், நேராக அவர் வீட்டிற்கு வாகனத்தை விட்டான்.

கற்பகம் மருத்துவமனை, வீடு என அலைவதால் செல்லத்துரை உறங்கும் நேரம் தான் அவர் மருத்துவமனைக்குச் செல்வது. “எனக்கு இப்ப பரவாயில்லை சித்தி. நான் தனியா மேனேஜ் பண்ணிப்பேன்” என சௌதா எவ்வளவு மறுத்தாலும், வசந்தன் வீட்டில் இருக்கும் நேரமும், செல்லத்துரை உறங்கும் நேரமும் அவர் மருத்துவமனையில் தான்!

சர்வா வீட்டிற்குச் சென்றபோது செல்லத்துரை தூங்கி எழுந்திருந்தார். இவனைப் பார்த்ததும் அவர் உற்சாகமானார்.

புன்னகைத்தவன், “தோட்டத்துக்குப் போகலாமா மாமா…” என வந்ததுமே அவரை தனியே அழைத்துச் சென்று விட்டான்.

பேச்சு கொடுக்கும் நோக்கில், “உங்க பிரண்ட்ஸ் பத்தி சொல்லுங்க…” என அவரோடு சேர்ந்து செடிகளுக்குத் தண்ணீர் விட்டபடியே அவன் விசாரிக்க,

“பிரண்ட்ஸ் யாரு இருந்தா… எனக்கு…” என உடனே யோசனைக்குத் தாவினார் அவர்.

“கண்ணப்பன்னு யாரையும் ஞாபகம் இருக்கா மாமா…” சிறு பதற்றத்தோடு தான் விசாரித்தான்.

“ஹான்… கண்ணப்பன்… நானும் அவனும் தான் ஒன்னா வேலை செஞ்சோம். எனக்கு ரொம்ப நெருக்கம்… அன்னைக்கு கூட நாங்க ரெண்டு பேரும் போனப்ப…” என்றவர் தலையை வெகுவாக தட்டி மேற்கொண்டு நினைவு கூற முடியாமல் திணறினார்.

“உங்களுக்கு அடி பட்டப்ப சொல்லறீங்களா…?” சர்வா எடுத்துக் கொடுத்தான்.

“எங்க மேல ஏதோ விழ வந்துச்சு என் தலையில கூட பலத்த காயம்… அதுதானே சர்வா…” அவனிடமே தன் சந்தேகத்தை கேட்டு வைத்தார்.

கூடவே அவராகவே, “நல்லவேளை அவன் மேல விழுகலை” என்னவோ ஒரு ஆசுவாசம் அவருக்குள்.

சர்வா விரக்தியாக நினைத்துக் கொண்டான். ‘அன்றே அவருக்கு எதுவும் நேர்ந்திருந்தால் அவரது உடலாவது அவர்களது குடும்பத்திற்கு கிடைத்திருக்கும்’ என்று!

கூடவே ஓரளவு தேறி வரும் மாமாவிற்கு நல்ல சிகிச்சையைக் கொடுத்தோமானால், சீக்கிரமே முழுவதும் தேறி விடுவார் என யோசித்தான். ஆனால், இந்த சௌதா முட்டுக்கட்டை போடுகிறாளே என்று எண்ணும்போதே இயலாமையில் பெருமூச்சு எழுந்தது.

சற்று திக்திக் மனதுடன் கோயிலின் புராதன சிலைகளின் புகைப்படங்கள் சிலவற்றை செல்லத்துரையிடம் காட்டி, “அழகா இருக்கு என்ன மாமா…” என விசாரிக்க,

“ஆமா… ஆமா… நான் இதேமாதிரி நிறைய நிறைய பார்த்திருக்கேன்…” என்றார் அவரும் பெருமையாக.

“நீங்க மட்டுமா?”

“இல்லையே கண்ணப்பனும் பார்த்தான். சிவன் சொத்து கொலை நாசம்ன்னு தெரியாதவனுங்க. எத்தனை சொத்து இருந்தாலும் பத்த மாட்டீங்குதுன்னு புலம்பக் கூட செஞ்சானே…”

சர்வாவிற்கு ஆச்சரியமாக இருந்தது. இவர் இந்தளவு நினைவுபடுத்திச் சொல்வது பெரிய விஷயம் என அவனுக்குப் புரிந்தது. இது எப்படி சாத்தியம் மாமாவின் உடல்நிலை நல்ல முன்னேற்றம் அடைந்து விட்டதா? ஆச்சரியமும் ஆனந்தமுமாக அவரை அளவிட்டான்.

இதுவரை அவனே எதிர்பார்க்காத விதமாகத் தேவையான பதில்கள் கிடைத்து வருகிறது. இன்னும் ஒரே ஒரு கேள்வி!

மீண்டும் திக் திக் மனதுடன், “ஏன் மாமா… அந்த அருண் பாஸ்கர் உங்க முதலாளி…” என அவனது பெயரை எடுத்தது தான் தாமதம் கண்கள் சிவக்க, மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க, கையிலிருந்த தண்ணீர் பாத்திரத்தை ஆத்திரத்தோடு கீழே தூக்கி வீசி என ஒரு புது அவதாரத்தில் காட்சி தந்தார் செல்லத்துரை.

இதுவரை அவரை இப்படி ஒரு தோற்றத்தில் கண்டிராத சர்வேஸ்வரன் பிரமித்து நின்றான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

எனக்கொரு வரம் கொடு 20 – சுகமதிஎனக்கொரு வரம் கொடு 20 – சுகமதி

எனக்கொரு வரம் கொடு – 20 தஞ்சாவூர் மனநல மருத்துவமனைக்கு சர்வேஸ்வரனும் சௌதாமினியும் வந்து சேர்ந்திருந்தனர். கணவனுக்கு நிதானமாக ஒவ்வொரு பகுதியாகச் சுற்றி காட்டிக் கொண்டிருந்தாள் சௌதா. பலரும் கைத்தொழில் எதிலாவது தங்களை முழு அர்ப்பணிப்போடு ஈடுபடுத்தி இருப்பதை மிகுந்த ஆச்சரியத்தோடு

எனக்கொரு வரம் கொடு 7 – சுகமதிஎனக்கொரு வரம் கொடு 7 – சுகமதி

எனக்கொரு வரம் கொடு – 7   ரேவதி சௌதாமினியின் திடீர் வரவை எதிர்பாராமல் திகைத்துப் போனவர், “வாடாம்மா வா… என்ன திடீர்ன்னு இந்த பக்கம்? சித்தி, சித்தப்பா எல்லாம் எப்படி இருக்காங்க?” என்று ஆவலோடு வரவேற்றார்.   “எல்லாரும் நல்லா

எனக்கொரு வரம் கொடு 10 – சுகமதிஎனக்கொரு வரம் கொடு 10 – சுகமதி

எனக்கொரு வரம் கொடு – 10 சர்வாவின் எண்ணம் என்னவாகவிருக்கும் என்பதை உணவருந்த வரும்போது சித்தியின் பேச்சு சௌதாமினிக்கு தெரிவித்தது. “சர்வா எதுவும் சொல்லமையே கிளம்பிட்டானே மா… இங்கே சாப்பிட கூட இல்லை…” சித்தியின் கவலை அவருக்கு. மகளை அளவிடுவது போலப்