எனக்கொரு வரம் கொடு 14 – சுகமதி

எனக்கொரு வரம் கொடு – 14

சர்வேஸ்வரனின் செய்கையில் அரண்டு போன சௌதாமினி வேகமாக கரம் உயர்த்தி அவனை இறுக அணைத்துக் கொண்டாள். அதில் அவன் பிடி தளர, அதே வேகத்தில் அவன் தோளில் அழுந்த புதைந்து கொண்டவள், “இப்படி எல்லாம் கோபப்படாத சர்வா… எனக்கு ரொம்ப பயமா இருக்கு…” என்றாள் அழுகைக் குரலில்.

 

அவன் கோபம் நொடியில் பஸ்பமானதைப் போல உணர்ந்தவன், அவளை ஆதரவாக வருடி, “ஸ்ஸ்ஸ்… இதென்ன சின்ன பிள்ளை மாதிரி… நான் தான் ஏதோ கோபத்துல செஞ்சா…” தன் கோபத்தை முழுவதுமாக விடுத்து மென்மையாகப் பேசினான்.

 

அவளது அழுகை நின்றபாடில்லை. “இல்லை நீ ரொம்ப கோபப்படற. எனக்கு ரொம்ப பயமா இருக்கு… உன் கொள்கை வேற! என்னோட நியாயம் எல்லாம் மொத்தமா வேற. பின்னாடி நமக்குள்ள நிறைய பிரச்சினை வருமோன்னு எனக்கு ரொம்ப பயமா இருக்கு… என்னை வேண்டாம்ன்னு சொல்லிடுவியா?” சிறுபிள்ளை போலத் தேம்பியவளைக் கண்டு அவன் மனம் இளகியது.

 

“உளறாதேடி. உன்னை விடறதுக்கா இத்தனை சண்டை போட்டு கல்யாணம் செய்யறேன். என் வாழ்க்கை முழுசும் நீ மட்டும்தான் வேணும்டி…” தன் அணைப்பை இறுக்கி ஆறுதல் கூறியவனிடம்,

 

“இல்லை இல்லை எனக்குப் பயமா இருக்கு…” என அவனை நம்பாமல் அரற்றினாள்.

 

“என்ன பிரச்சினைன்னு சொல்லேன் சௌதி. நான் பார்த்துக்க மாட்டேனா?” அவளின் கவலையைத் தீர்த்து வைக்கும் உண்மையான அக்கறை அவனிடம்.

 

“இல்லை… இல்லை… எதையும் கேட்காத… எனக்கு ஒன்னும் தெரியாது… ஆனா நான் தப்பு செய்யறேன். உண்மைக்கு புறம்பா நடக்கிறேன். சொந்த குடும்பத்துக்கே துரோகம் செய்யறேன். ரொம்ப சுயநலமா நடந்துக்கறேன். ஆனா எனக்கு வேற வழி தெரியலை சர்வா” என்று உதடு பிதுக்கிச் சொன்னவள்,

“இனியும் என்னால வாழ்க்கையில எதையும் இழக்க முடியாது. அதுக்கு பேசாம உன்னை நான் இப்பவே இழந்துடறேன். நமக்கு இந்த கல்யாணம் வேணாம் சர்வா. நாளைக்கு எங்களை பத்தி எதுவும் தெரிய வந்து, உனக்கு என்மேல வெறுப்பு வந்துட்டா நான் என்ன செய்வேன்? என்னால அதை தாங்கிக்கவே முடியாது. பேசாம இப்பவே கல்யாணத்தை நிறுத்திடு சர்வா” தன்போல உளறிக்கொண்டே செல்பவளை அவனுக்குச் சமாதானம் செய்யும் வழி தெரியவில்லை.

அவளின் முகம் பற்றி நிமிர்த்தி, “இங்க பாரு சௌதி… என்ன பிரச்சினை வந்தாலும் நீ வேண்டாம்ங்கிற முடிவை நான் எப்பவும் எடுக்க மாட்டேன். என்னை நம்பு! உனக்கு எப்பவும் உறுதுணையா இருப்பேன். நீ என்ன செஞ்சிருந்தாலும் அதை சரிபண்ணும் கடமை எனக்கு வந்துடும். நீ தப்பு செஞ்சிருக்க மாட்டேன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. உன் பக்க நியாயத்தை யோசிக்குமளவு காதலும் எனக்கு நிறைய இருக்கு. வீணா பயப்படாத… நீ இல்லாம எனக்கு எதுவுமே இல்லைடி…” என்றான் உறுதியும் அக்கறையும் காதலும் நிறைந்த குரலில்.

அவனது அக்கறையில் முழுதாக அச்சம் விலகாத போதும், கொஞ்சம் தெளிந்தவள், மீண்டும் அவனுள் இறுகப் புதைந்து கொண்டாள். அவனது உடலின் கதகதப்பும், அவனது அரவணைப்பும் அந்த நேரம் அவளுக்கு வெகுவாக தேவைப்பட்டது.

இத்தனை தூரம் அவனைப் பிரிந்து விடுவோமோ என்ற அச்சத்தில் அழுது ஆர்ப்பாட்டம் செய்பவளுக்கு அப்பொழுது தெரிந்திருக்கவில்லை, உண்மையில் பின்னாளில் பிரிய விளைவது அவளாகத்தான் இருப்பாள் என்று!

சௌதா சற்று ஆசுவாசம் கொள்ளட்டும் என்று அமைதியாக அரவணைத்து அமர்ந்திருந்தவன், அவள் சற்று தெளிந்ததும், “சரி போயி முகம் கழுவிட்டு வா… இருந்தாலும் நீ இப்படி வாட்டர் டேங்க்கை திறந்து விடக்கூடாதுடி… பாரு என் டிரஸ் எல்லாம்…” என தன் சட்டையைச் சுட்டிக்காட்ட,

அசடு வழிந்தவள் தன் கரம் கொண்டு அதை நேர்செய்ய முயற்சித்தாள். “வெளிய போனா என்னை போலீஸ்காரன்னு எவனும் நம்புவானா?” சட்டையில் இருந்த கண்ணீர் தடங்களையும் சுருக்கங்களையும் பார்த்து போலியாகச் சலித்துக் கொண்டவனை, பின்னால் தலை சரித்து ஆராய்ச்சியாகப் பார்த்தவள், “அழுக்கு துணியில போனா கூட நம்பிடுவாங்க. உங்க மூஞ்சியிலேயே எழுதி ஒட்டி இருக்கு…” என்று இலகுவான குரலில் சொல்லி அழகாக புன்னைகைத்தாள்.

“ஹ்ம்ம்… அழுத புள்ளை சிரிக்குதுன்னு சொல்லணும்… எங்கே?” எனச் சிறு பெருமூச்சை வெளியேற்றியவன், “அப்படி சொல்லப்போயி நீ மறுபடியும் அழ ஆரம்பிச்சுட்டா நான் என்ன செய்யறது?” என்றான் மீண்டும் போலி சலிப்புடன்.

“ஹ்ம்ம்… சொல்லித்த்தான் பாருங்களேன். இந்தமுறை வாட்டர் டேங்க் இல்லை வாட்டர் பாஃல்ஸையே திறந்து விடறேன்” அவளும் போலியாக மிரட்டிச் சிரித்தாள்.

அவளது மூக்கை பற்றி ஆட்டியவன், “சிரிச்சாலும் அழகா இருக்க. அழுதாலும் அழகா இருக்க…” என்று சொல்லிவிட்டு, குரலை வெகுவாக தணித்து, “வெட்கப்பட்டா எப்படி இருப்பன்னு பார்க்கலாமா?” எனச் சீண்டினான். அவனது கண்கள் கள்ளத்தனத்தில் ஒளிர்ந்தது.

என்ன செய்து வெட்கம் வர வைப்பானாம்? கணநேர கற்பனையில் அவளது உள்ளம் படபடக்க தொடங்கி விட்டது. உள்ளத்திற்கு இணையாக விழிகளும் பட்டாம்பூச்சி படபடப்பை தத்தெடுத்துக் கொள்ள,

“அதெல்லாம் எதுவும் வேணாம்…” என்றாள் அவளுக்கே கேட்காத குரலில்.

“ஆமாம் ஆமாம் வேணாம் வேணாம்… அதுதான் உன் முகம் இப்பவே வெட்கத்துல சிவந்து போச்சே… இதுக்கு மேலயும் முயற்சி செஞ்சா… முகத்தோட சேர்ந்து…” என பாதியில் நிறுத்தி அவளை முழுவதுமாக அளவிட்டான்.

உண்மையில் அவனது பார்வையிலேயே அவளது உடலும் சிவந்து போனது போல உணர்ந்தாள் சௌதாமினி.

“நான் முகம் கழுவ போறேன்…” அவசரமாக வாயிற்கு வந்ததை உளறிவிட்டு காரிலிருந்து வேகமாக இறங்கிக் கொண்டவளுக்குப் படபடப்பு குறைவதாகவே இல்லை. அழுது சோர்ந்திருந்த முகம் இப்பொழுது வெட்கத்திலும் பூரிப்பிலும் தனி சோபையோடு ஜொலித்தது. அவளை அருகிலிருந்த மரத்தின் பின்பிருந்து பார்த்துக் கொண்டிருந்த ஒருவனுக்கு அவளது தோற்றம் வெகு எரிச்சலைப் பரிசளித்தது.

எப்பொழுதும் சுற்றுப்புறத்தில் வெகு கவனமாக இருக்கும் சர்வேஸ்வரன், மிகவும் இலகுவான மனநிலையில் இருந்ததால் எதையும் கவனிக்கும் மனநிலையில் அப்பொழுது இருந்திருக்கவில்லை, அந்த சிறு சலசலப்பு சத்தம் கேட்கும் வரை!

சௌதாமினி காரை விட்டு இறங்கிய பிறகு காரின் கதவை மீண்டும் சாத்தியிருக்கவில்லை. அவள் தன் முகத்தைக் கழுவுவதில் கவனமாக இருந்தாள். திறந்திருந்த காரின் கதவின் வழியே ஏதோ சலசலப்பு சத்தம் கேட்க, சர்வேஸ்வரனின் புலன்கள் கூர்மையானது.

வேகமாக தன்புறம் இருந்த கதவைத் திறந்து கொண்டு அவன் இறங்குவதற்கும், முகத்தை மறைத்த ஒரு மனிதன் கத்தியோடு சௌதாவை நெருங்குவதற்கும் சரியாக இருந்தது.

அதிர்ச்சியில், “சௌதி…” எனச் சத்தமிட்டபடியே அவளை நெருங்க, அவன் சத்தத்தில் தன் கையிலிருந்த வாட்டர் பாட்டிலைக் கீழே விட்டுவிட்டு அவள் திரும்ப எத்தனிப்பதற்குள் அந்த முகம் தெரியாத மனிதன் அவளது வயிற்றில் கத்தியை இறக்கிவிட்டு அவசரமாக ஓடி மறைய பார்த்தான்.

அதற்குள் அவர்களை நெருங்கியிருந்த சர்வேஸ்வரன் அவனை ஓட விடாமல் காலை இடறி விழச் செய்ய, அவன் தலை குப்புற விழுந்தான்.

சௌதாமினியும் எப்பொழுதோ கீழே சரிந்திருந்தாள். எதிரில் இருப்பவன் மீது கோபம் ஒருபுறம், சௌதாவிற்கு என்ன ஆனதோ எனப் பதற்றம் மறுபுறம் என மொத்தமாக நிலைகுலைந்து போனான் சர்வேஸ்வரன்.

அவசரமாக அந்த முகம் மறைத்த மனிதனின் தலையிலிருந்த துணியை உருவி எடுக்க, அவன் பிரகதீஷ்! அவன் முகத்தில் ஓங்கி அறைந்தவன், அவன் டீஷர்ட்டை தலையோடு உருவி அவனது கையை பின்புறம் கட்டி, காரின் பின் இருக்கையில் அவனை ஏற்றினான்.

வேகமாக சௌதாவையும் நெருங்கி, கத்தியை லாவகமாக வெளியில் எடுத்து, பிரகதீஷ் முகத்திலிருந்து உருவிய துணியாலேயே அவள் காயத்திலிருந்து அதிக ரத்தம் வெளியேறாமல் இருக்க கட்டுப் போட்டு, அவளை மெதுவாக ஏந்தி முன் இருக்கையில் ஏற்றி சீட் பெல்ட் அணிவித்தான்.

அந்த அவசரத்திலும் பிரகதீஷ் பயன்படுத்திய கத்தியைப் பத்திரமாக எடுத்து வைத்தான்.

அனைத்தும் இயந்திர கதியில் வேகவேகமாக செய்தாலும் அவனது பதற்றமும் பயமும் அவனை வெகுவாக அச்சுறுத்தியது.

பிரகதீஷ் தான் மாட்டிக்கொண்ட பதற்றத்திலேயே அசையாமல் அமர்ந்திருந்தான். தவறு செய்த போது இருந்த துணிவு, அதை எதிர்கொள்ளும்போது அவனுக்கு இருந்திருக்கவில்லை. வெளியில் விஷயம் தெரிந்தால் என்ன ஆகுமோ என்னும் பதற்றத்திலேயே உறைந்து போய் அமர்ந்திருந்தான்.

சர்வா காரை இயக்கியவாறே பிரசாந்த்திற்கு அழைத்தவன், தான் செல்லப்போகும் மருத்துவமனையின் பெயரை சொல்லி விரைந்து வரும்படி பணித்தான். அங்கே அவசர சிகிச்சைக்கும் ஏற்பாடு செய்யும்படி கேட்டுக் கொண்டான். அவனும் தான் அருகிலேயே இருப்பதாகக் கூறி, உடனே வந்துவிடுவதாகச் சொல்லவும், கார் சர்வாவின் கைகளில் வேகமாகப் பறந்தோடியது.

மயங்கிய நிலையிலிருந்த சௌதாமினியை பார்க்கப் பார்க்க அவனுக்கு வேதனை தொண்டையில் அடைத்தது. “உனக்கு எதுவும் ஆகாது தானேடி…” மானசீகமாக அவளிடமே முறையிட்ட காவலனின் கண்கள் கண்ணீரைக் கொட்ட, தன் வண்டியின் வேகமும் குறைவதை உணர்ந்தான்.

முயன்று தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்தி மருத்துவமனைக்கு விரைந்து சென்றவன், அங்கு தயாராக இருந்த பிரசாந்த்திடம் பிரகதீஷையும், அவன் பயன்படுத்திய ஆயுதத்தையும் ஒப்படைத்து விட்டு, மேலோட்டமாக விவரத்தையும் சொல்லி மேற்கொண்டு பார்த்துக்கொள்ளும்படி சொல்லவும், பிரசாந்த்திற்கு குற்றவுணர்வாக இருந்தது.

அன்று மேடத்திடம் பிரச்சினை செய்தவனாயிற்றே! அன்றே சாரிடம் இவனைக் குறித்துத் தெரிவித்திருக்க வேண்டுமோ என்று காலதாமதமாக வருந்தினான்.

அதைக்குறித்துச் சொல்லி வருத்தம் தெரிவிக்கவோ, அதை நினைத்துக் கலங்கவோ வழியில்லாமல் அடுத்தடுத்த வேலைகள் அணிவகுத்து நின்றது.

சர்வேஸ்வரன் பிரகதீஷை ஒப்படைத்ததோடு தன் வேலை முடிந்தது என்பதுபோல அங்கு பிரசாந்த்தின் ஏற்பட்டால் தயாராக இருந்த செவிலியரின் உதவியோடு சௌதாமினியை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தான்.

மருத்துவரும் தயாராக இருந்ததோடு, அவனே காவல்துறையில் உயர் பதவியில் இருந்ததாலும் சிகிச்சை உடனே தொடங்கப்பட்டது. வெளியிலிருந்த சர்வேஸ்வரனுக்கு நிலைகொள்ளவில்லை. அவளை என்னிடமே திருப்பி தந்துவிடு என்ற வேண்டுதல் தவிர அவனிடம் வேறு எதுவும் இருந்திருக்கவில்லை.

ஏன் அந்த நேரத்தில் வீட்டிற்குத் தகவல் சொல்ல வேண்டும் என்பது கூட அவனுக்கு மறந்து போனது.

சர்வேஸ்வரன், பிரகதீஷ் எதிர்பாராத நேரத்தில் காரை விட்டு இறங்கியதால், அவன் அவசரத்தில் கத்தியைக் குத்தியிருந்தான். சீக்கிரம் குத்திவிட்டுத் தப்பிக்கும் மனநிலை மட்டுமே அவனுக்கு அப்போது இருந்தது. நல்லவேளையாக அவன் குத்தியது ஆழமாக இறங்கியிருக்கவில்லை. அதாவது உயிரைப் பறிக்குமளவு! ஆனாலும் சற்று அதிக பாதிப்பு ஏற்படுத்தும் அளவிலான கத்தி குத்து தான் சௌதாவிற்கு!

வேகமாக வெளியில் வந்த மருத்துவர், “நீங்க அவங்களுக்கு…” எனத் தயக்கமாக இழுத்தார்.

“மை பியான்ஸி…” என்றவனின் குரல் வெகுவாக கலங்கி ஒலித்தது.

மருத்துவர் அவனிடம், சௌதாவிற்கு ஆபரேஷன் செய்யவேண்டும் என்றும், கருப்பையில் கொஞ்சம் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், எதுவாக இருந்தாலும் சிகிச்சை முடிந்த பிறகு தான் உறுதியாகிச் சொல்ல முடியும் என்றும் சொல்லி, அவனிடம் பாஃர்மில் கையெழுத்துப் போடும்படி கூறினார்.

கையெழுத்துப் போடும் முன்பு, “அவ உயிருக்கு எதுவும்…” மேற்கொண்டு கேட்க முடியாமல் தடுமாறினான் காவலன்.

“இல்லை… அவங்க நல்லநேரம் கத்தி ஆழமா இறங்கலை… நீங்களும் வேகமா கொண்டு வந்து சேர்ந்த்துட்டீங்க…” என்று சமாதானம் சொல்லி கையெழுத்தை வாங்கியவர், ஆபரேஷன் செய்ய விரைந்தார்.

சர்வேஸ்வரனின் சில மணி நேர தவிப்பான போராட்டத்திற்குப் பிறகு, மருத்துவர் ஆபரேஷன் முடிந்தது என்று சொல்லி, அவனிடம் பேசுவதற்காக தன் அறைக்கு அழைத்துச் சென்றார்.

அறையினுள் நுழைந்தவனை உட்கார சொல்லிவிட்டு, “அவங்க வீட்டுல இருந்து வேற யாரும் வரலையா மிஸ்டர்…” என இழுத்தவரிடம்,

“சர்வேஸ்வரன்” எனத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, “இன்னும் நான் யாருக்கும் இனபார்ம் பண்ணலை. ஹௌ ஈஸ் ஷீ?” என்றான் பதற்றமாக.

“ஷீ ஈஸ் பைன்” என்று சுரத்தே இல்லாமல் சொன்னவர், “நீங்க ரெண்டு பேரும் லவ்வர்ஸ் ஆர் என்கேஜ்ட்?” என ஆராய்ச்சியாகக் கேட்டார்.

இதெல்லாம் இவருக்கு எதுக்கு? என்னும் எரிச்சலோடு, “ரெண்டும் தான்” என்றான் கடுப்பாக.

“ஓ…” என்றவர் ஒரு சிறு இடைவெளியின் பின், “ஷீ மிஸ்டர் சர்வேஸ்வரன், ஒரு டாக்டரா அவங்களோட ஹெல்த் கண்டிஷனை நான் சொல்லிடறேன். அதுக்கு பிறகு இந்த கல்யாணம் நடக்கணுமா வேணாமான்னு நீங்க தான் சொல்லணும்” என அவர் பீடிகையோடு சொல்ல,

“டாக்டர்…” என்று அதட்டலாக மொழிந்திருந்தான். “என்ன நடந்தாலும் அவ தான் என்னோட மனைவி. அதுல எந்த மாறுதலும் இல்லை… இன்னொருமுறை இந்த மாதிரி பேசாதீங்க…” என்றான் கர்ஜனையாக.

அவனை ஆச்சரியமாகப் பார்த்தவர், சிறு புன்னைகையுடன், “குட்” என்று சர்டிபிகேட் தந்தார். கூடவே, “அவங்களோட கருப்பையில் கத்தி காயம் பட்டிருக்கு. எல்லா காயத்தையும் ஆபரேஷன்ல சரி பண்ணிட்டோம். ஆனா, அவங்களுக்கு கருப்பை இனி முன்ன மாதிரி இருக்க வாய்ப்பில்லை. அது பலவீனம் ஆயிடுச்சு. அவங்களால ஒரு குழந்தைக்குத் தாயாக முடியும்ன்னு எங்களால உறுதியா சொல்ல முடியாது. அதுக்கான வாய்ப்பு ரொம்பவும் கம்மி…” இவ்வளவு பெரிய அதிர்வான விஷயத்தை இத்தனை காதல் வைத்திருக்கும் ஒருவன் எப்படித் தாங்கிக்கொள்ளப் போகிறானோ என்று தவிப்போடு அவர் சொல்லி முடிக்க,

அவனோ வெகு சாதாரணமாகத்தான் இருந்தான். கூடவே, “அவ உயிரோட இருந்தா எனக்கு அதுவே போதும்… மத்ததெல்லாம் எனக்கு அக்கறை இல்லை…” என அலட்சியமாகச் சொல்லி முடித்தான்.

குழந்தைகளே இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்று எத்தனை சாதாரணமாகச் சொல்கிறான். கொஞ்சம் கூட அதைக்குறித்த வருத்தமோ, ஏக்கமோ அவன் முகத்தில் இல்லையே! அவனை ஆச்சரியமும் அதிசயமுமாகப் பார்த்தார் மருத்துவர்.

“எதுக்கும் நல்லா யோசிச்சுக்கங்க. உங்க வீட்டுல, சௌதாமினி கிட்ட எல்லாம் கலந்து பேசி முடிவை எடுங்க…” என்னவோ அந்த மருத்துவர் எடுத்துச் சொல்வது தன் கடமை என்ற எண்ணத்தில் அவனுக்குப் புரிய வைக்க நினைத்தார்.

அவனோ எரிச்சல் குரலில், “பாருங்க டாக்டர். இதுல யாரும் யோசிக்கவோ, முடிவெடுக்கவோ எதுவும் இல்லை. என்னோட முடிவு தான் இறுதியானது. அதை யார் நினைச்சாலும் மாத்த முடியாது. நீங்க இதைப்பத்தி சௌதிகிட்டயோ, இல்லை அவ வீட்டுலயோ, எங்க வீட்டுலயோ எதுவுமே சொல்ல வேண்டிய அவசியம் இல்லை… யார் வந்து கேட்டாலும் அவ நல்லா இருக்கா. ஆபரேஷன் நல்லா முடிஞ்சதுங்கிற தகவலை மட்டும் நீங்க தந்தா போதும். இதைப்பத்தி விஷயம் வெளிய போறத நான் சுத்தமா விரும்பலை…” என மருத்துவருக்கே கட்டளையிட்டுக் கொண்டிருந்தான்.

மருத்துவர் சிறு புன்னைகையோடு, “இது ஸ்டேஷன் இல்லை சர்வேஸ்வரன். ஹாஸ்பிட்டல். அண்ட் நானும் உங்க அசிஸ்டண்ட் இல்லை டாக்டர்” என்றார்.

“வாட்டெவர்…” என்று அலட்சியமாகத் தோளைக் குலுக்கியவன், “விஷயம் வெளிய போகாதுன்னு நம்பறேன்… அதோட அவளோட கேஸ் ஹிஸ்டரி மொத்தமும் என்கிட்ட மட்டும் தான் தரணும் டாக்டர். ஹாஸ்ப்பிட்டல்ல இப்பவே இன்பார்ம் பண்ணிடுங்க” என்று மீண்டுமொருமுறை உறுதிப் படுத்திக்கொண்டு தன் தேவையையும் முன் வைக்க,

அவன் தோரணையும் ஆளுமையும் அவனது காதலை மட்டுமே பறைசாற்றிக் கொண்டிருந்தது. ரசனையாக அதைப் பார்த்தவர், “ஷீ ஈஸ் வெரி லக்கி…” என்றார் உணர்ந்து.

அவரது இலகுவான தோற்றமும் குரலும் அவனையும் மலையிறக்கியது. “தேங்க்ஸ் டாக்டர் அவளை மீட்டுத் தந்ததுக்கு…” என்றான் அவனும் தணிந்து போன குரலில்.

சிறு புன்னகையோடே, “ஆல் தி பெஸ்ட் யங் மேன். உங்க நல்ல மனசுக்கும் காதலுக்கும் கடவுள் ஒரு குறையும் வைக்க மாட்டார்” என்று டாக்டர் வாழ்த்த, சிறு புன்னகையோடே அவரிடமிருந்து விடைபெற்றான்.

அவன் கவலை எல்லாம் இந்த விஷயம் எதுவும் எப்பொழுதும் சௌதாமினிக்கு தெரிய வரவே கூடாது என்பதில் தான் இருந்தது. பிறகு அவளைச் சமாளிப்பது வெகு கடினம் என அவனுக்கு தெரியாதா என்ன?

நினைப்பதெல்லாம் நினைத்தபடியே நடந்தேறுமா என்ன?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

எனக்கொரு வரம் கொடு 18 – சுகமதிஎனக்கொரு வரம் கொடு 18 – சுகமதி

எனக்கொரு வரம் கொடு – 18   திறந்திருந்த ஜன்னலின் ஓரம் அமர்ந்து கொண்டு, கைவிரல் நகங்களைத் தீவிரமாக ஆராய்ந்து கொண்டிருந்தாள் சௌதாமினி. உண்மையில் கணவனிடம் அவளுக்கு என்னென்ன எதிர்பார்ப்புகள்? நேற்று சர்வேஸ்வரன் கேட்டதிலிருந்து அவளுக்குள்ளும் இதே வினா தான்!  

எனக்கொரு வரம் கொடு 4 – சுகமதிஎனக்கொரு வரம் கொடு 4 – சுகமதி

எனக்கொரு வரம் கொடு – 4   சௌதாமினி தோழிகளோடு வெளியில் வந்திருந்தாள். அனைவரும் காலையில் புதிதாக வந்திருந்த திரைப்படம் ஒன்றைப் பார்த்துவிட்டு, மதிய உணவை ஹோட்டலில் முடித்துக்கொண்டு அருகிலிருந்த பார்க்கிற்கு வந்திருந்தார்கள்.   பெரும்பாலும் திருமணம் ஆனவர்களே! மீதம் இருப்பவர்களும்

எனக்கொரு வரம் கொடு 15 – சுகமதிஎனக்கொரு வரம் கொடு 15 – சுகமதி

எனக்கொரு வரம் கொடு – 15 சௌதாமினி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த வரைக்கும் யாருக்குமே விஷயம் கசியாது லாவகமாகச் சூழலைக் கையாண்டான் சர்வேஸ்வரன். அவன் முன்பே கேட்டுக்கொண்டதற்கிணங்க அவளுடைய கருப்பை குறித்த விஷயம் மட்டும் யாரிடமும் பகிரப்படவே இல்லை. அவளுடைய மெடிக்கல்