எனக்கொரு வரம் கொடு 13 – சுகமதி

எனக்கொரு வரம் கொடு – 13

 

நிச்சயதார்த்தம் எப்படி விரைவாக ஏற்பாடானதோ திருமணமும் அவ்வாறே… குறுகிய கால அவகாசத்துக்குள் சர்வா, சௌதாவின் திருமணம் ஏற்பாடாகியிருந்தது.

 

யார் பார்வையிலும் படாமல் இதற்கு மறைமுக காரணமாக சர்வேஸ்வரன்தான் இருந்தான். ஒவ்வொரு முறையும் அவன் தூண்டுதலின் பெயரில் தான் திருமணம் இத்தனை சீக்கிரம் கைகூடியிருந்தது.

 

திருமணத்தில் இருந்த ஆர்வம் மணப்பெண்ணை மீண்டுமொருமுறை சந்திக்க முனைவதில் மட்டும் அவனுக்கு இருந்திருக்கவில்லை! அதென்ன அவளுக்கு அப்படி ஒரு பிடிவாதம், மறுப்பு என அவனுக்குள் பெரும் கோபம் அவள்மீது!

 

கட்டுக்கோப்பான உடல்வாகுடன், நல்ல உயரத்துடன், அருமையான உத்தியோகத்தில், கண்ணுக்கு நிறைவாய் இருக்கும் தன்னை வேண்டா வெறுப்பாகத் திருமணம் செய்வது போலவே பாவ்லா காட்டிக்கொண்டு திரிகிறாளே என்னும் கடுப்பு அவனுக்கு!

 

ஆனால், அவன் காண வராதது குறித்து சௌதாமினியும் பெரிதாகக் கவலை கொள்ளவில்லை. இன்னும் சொல்லப்போனால் அவளுக்கு அந்த யோசனையே எழவில்லை என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். கல்யாணக் கனவுகளோ, எதிர்பார்ப்புகளோ, ஆர்வமோ இன்றி தன் வீட்டைப் பிரியப்போகும் துக்கத்துடன் நாட்களைக் கடத்தினாள்.

 

அவளின் இந்த செய்கை அவளைக் கூர்ந்து கவனிக்கும் கற்பகத்திற்குக் கவலையைத் தந்தது.

 

“என்னம்மா இப்படி இருக்க?” என மகளை நீண்ட நாட்கள் கவனித்த பிறகு வாஞ்சையுடனும் தவிப்புடனும் கேட்டார். வசந்தனின் முகத்திலும் அவளைக்குறித்த கவலை தெரிந்தது.

 

இருவரின் முகங்களையும் கவனித்தவள், “என்ன நீங்க ரெண்டு பேரும்… நானே உங்களையெல்லாம் விட்டுட்டு பிரியணுமேன்னு கவலையில இருக்கேன்” என்று முகம் வாடி விளக்கமளித்தாள்.

 

அவர்களது குழப்ப முகம் அப்பொழுதும் தெளியவில்லை.

 

கீழுதட்டை அழுந்த கடித்து தலையைக் குனிந்து கொண்டவளுக்கு தன் தவறு புரிந்தது. கல்யாண பெண்களின் கனவுகள் சுமந்த முகத்தை நட்பு வட்டத்திலும், உறவு வட்டத்திலும் அவளும் பார்த்திருக்கிறாள் தானே! சரு கூட அதை முனைப்போடு செய்யவில்லை என்றுதானே அன்று அத்தனை சண்டை போட்டான். அவன் கோபத்திலும் நியாயம் இருக்கிறதோ?

 

அதிலும் அப்படியொன்றும் அவன் திருமணத்திற்கு மோசமான சாய்ஸும் இல்லை. என்ன கொஞ்சம் பிடிவாதம் அதிகம்; அழுத்தமும், ஏன் கோபமும் கூட சற்று அதிகமே! ஆனால், கண்ணியவான் என்பதில் துளி சந்தேகமும் இல்லை. என்ன கொஞ்சம் அவசரம், ஆத்திரம் மட்டும். ஒரு முரட்டுக் குழந்தை போல!

 

என்னவோ சிலிர்ப்பு ஓடியது அவளுள்! உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை ஓடிய சிலிர்ப்பில் அவள் தனது எண்ணப்போக்கை நினைத்துத் தானே ஆச்சரியப்பட்டுப் போனாள்.

 

இந்த சர்வா எப்பொழுது ‘சரு’ ஆனான்!?! அதிலும் அவனைப்பற்றிய அபிப்ராயங்களும் தான் ஏன் மனதில் உலா வருகின்றன? திமிரின் பேரரசன் என்று அவளால் வசை பாடப்பட்டவன் இப்பொழுது முரட்டுக் குழந்தை ஆனது எப்படி? மஞ்சள் கயிறு மேஜிக் என்பார்களே! இதுவும் அதுபோலவா? திருமணம் பேசியிருந்தாலும் கூட இந்த மேஜிக் வேலை செய்யுமா என்ன? ஆனால், அதுவும் தான் எப்படி? அவனை எனக்கு ஒன்றும் அவ்வளவாகப் பிடிக்காதே!

 

தான் அப்படி நினைப்பதே எத்தனை அபத்தம் என இப்பொழுது விளங்கியது. அப்ப எனக்கு அவனை பிடிச்சிருக்கா? தன்னைத்தானே கேட்டுக்கொண்டவளுக்கு தெளிவான பதிலும் கிடைக்கவில்லை. அவனைப் பிடிக்காமல் இல்லை… அவனை விட்டு விலகி இருக்க வேண்டிய கட்டாயம் தனக்கு என்றளவு மட்டும் புரிந்தது.

 

ஆனால், விதி அவ்வாறு நினைக்கவில்லையே! அவனோடு இணைத்து வைத்துப் பார்ப்பதில் தானே ஆர்வம் காட்டுகிறது! ஆனால், விதியா? சர்வாவா? இதை நடத்திக் காட்டுவது யார்? சர்வாவே தான்! அவனின் பிடிவாதம் தான் இத்தனைக்கும் காரணம் என நினைத்தவளுக்கு முதல் முறையாகக் கோபத்திற்கு மாறாகப் புன்னகை அரும்பியது.

 

அவளின் முகத்தில் ஆர்வம், குழப்பம், தவிப்பு, கலக்கம், மெல்லிய புன்னகை என்ற கலவையான உணர்வுகளைப் பார்த்தவர்கள் ஒன்றும் புரியாமல் விழித்தார்கள். “என்ன யோசனை டா?” கற்பகம் புரியாமல் வினவவும் திடுக்கிட்டு நிமிர்ந்தவள் திருட்டு முழி முழித்தாள்.

 

அவளும் தான் என்னவென்று சொல்ல முடியும்? சர்வாவைப்பற்றி யோசித்ததையா? இல்லை ஏன் யோசித்தோம் என்று மனதிற்குள் குழம்பியதையா? என்னவோ கன்னங்கள் சூடேறுவதைப் போல உணர்ந்தாள். பரபரவென்று தேய்த்து விட்டால் நன்றாக இருக்குமோ?

 

இது இயற்கையாக எழுந்த மாற்றம்! அவளே நினைத்தாலும் போலித்தனத்தில் உயிர்ப்பு வந்திருக்காது. இப்பொழுது அவள் வெட்கம் சுமந்த முகம் அத்தனை உயிர்ப்பாய் இருந்தது. கவிதையாய் தெரிந்தது. ஓவியமாய் மிளிர்ந்தது.

 

வசந்தன் சிறு புன்னகையோடு விலகிக்கொண்டான். அவனுக்கு அக்காவின் உயிர்ப்பான தோற்றத்திலேயே ஒரு நிறைவு!

 

கற்பகமும் மனம் நிறைந்து போனார்.

 

அதே மனநிலையோடு, “கல்யாண புடவை எடுக்க வர வெள்ளிக்கிழமை போகணும் சௌதாம்மா” என்றார் இளையவளின் கன்னம் வருடி! அவளும் இருந்த மனநிலையில் புன்னகை முகமாகவே சரியென்று தலையசைத்து மெல்லிய ஆர்வத்துடனும் அந்த நாளை எதிர்நோக்கிக் காத்திருந்தாள்.

 

ஆனால், புடவை எடுக்கும் கடையில் எல்லாம் தலைகீழ்! இரு குடும்பத்தினரும் ஆர்வமாகத் திருமணத்திற்கு ஜவுளி எடுக்கச் சென்றிருக்க, அங்குத் தேர்வு செய்தது மொத்தமும் சர்வா என்ற ஜீவன் மட்டுமே! ஒப்புக்குக் கூட மற்றவர்களிடம் அபிப்பிராயம் கேட்கவில்லை. ஏன் சௌதாவிடம் கூட அவன் அபிப்பிராயம் கேட்டுக்கொள்ளவில்லை.

 

ஒரு புடவையைத் தேர்ந்தெடுப்பதும், பணிப்பெண்களிடம் அதைக் கொடுத்து சௌதாவிற்கு அணிவித்துக் காட்டும்படி சொல்வதும்… அது பிடித்திருந்தால் தேர்வு செய்வதும் இல்லையா மீண்டும் புடவை குவியலை அலசுவதும்… என அவன் வேலையில் அவன் கண்ணாய் இருக்க,

 

கிடைத்த இடைவெளியில், “இப்படி எல்லா புடவையும் நீங்களே செலக்ட் செய்யறதுக்கு நாங்க எல்லாம் எதுக்கு கடைக்கு வரணும்?” என சௌதா அவனிடம் பொரிந்தாள்.

 

அவளைச் சுவாரஸ்யத்துடன் நிமிர்ந்து பார்த்தவன், “இந்த கல்யாணமே முழுக்க முழுக்க என்னோட விருப்பம். நீ என்னவோ ஒப்புக்கு பொம்மை மாதிரி நிக்க போற… இதுல புடவையை மட்டும் நீ ஆர்வமாவா செலக்ட் செஞ்சிட போற…” போலி ஆச்சரியத்துடன் ஒற்றை புருவம் உயர்த்தி கேட்டவன் மீது அவளுக்குக் கோபம் பெருகியது.

 

பிடித்திருக்கிறதோ பிடிக்கவில்லையோ திருமணம் என்ற ஒன்றிற்கு அவள் ஒப்புதல் அளித்து விட்டால் தானே? பின்னே புடவை தேர்ந்தெடுக்கும் உரிமை அவளுக்கும் இருக்க வேண்டுமல்லவா?

 

அவளது சினத்தைக் கவனித்தவன், “இல்லையே… இந்த கோபம் முறையில்லையே? நியாயப்படி உனக்கு நான் நல்லது தான் செஞ்சிருக்கேன். நீ புடவையை செலக்ட் செய்யறேன்னு வேண்டா வெறுப்பா இருக்க வேண்டிய அவசியமே இப்ப இல்லை. உன்னைப் பெரிய தொல்லையிலிருந்து காப்பாத்தி இருக்கேன். இதுக்காக நீ எனக்கு நன்றி தான் சொல்லியிருக்கணும்… அதை விட்டுட்டு இந்த கோபம் துளிக்கூட நியாயமே இல்லையே…” அப்பொழுதும் அவளை வம்புக்கு இழுத்தான் காவலன்.

 

புசுபுசுவென்று கோபம் தலைக்கேற, “சர்வா… இதெல்லாம் சுத்தமா சரியில்லை… கூட வந்தவங்களை எல்லாம் பார்த்தா உங்களுக்கு எப்படி இருக்கு?” பற்களைக் கடித்துக் கொண்டு பொரிந்து தள்ளினாள்.

 

அவனது புருவங்கள் வியப்பில் உச்சி மேட்டை அடைந்தது. வியப்போடே அவளது கன்னங்களைப் பற்றித் திருப்பி மற்றவர்களைக் காண செய்தான். அவர்களோ வெகு ஆர்வமாக அவன் தேர்வு செய்த புடவைகளைப் பார்ப்பதும், அதைப் புகழ்ந்து பேசுவதும், அவனுக்கு நல்ல ரசனை எனச் சான்றிதழ் வழங்குவதும் என்று மும்முரமாக இருக்க அவளுக்கு எரிச்சலாக வந்தது.

 

அவளின் காதருகே குனிந்து, “அவங்களுக்கெல்லாம் என் சாய்ஸ் ஓகே… உனக்குத் தான் ஒத்து வரலை போலயே… எது பிடிக்கலைன்னு சொல்லு மாத்தறதுக்கு கன்சிடர் செய்வோம்” என மென்குரலில் மெதுவாக விசாரித்தான். உண்மையிலேயே அவளது எண்ணத்திற்கு ஈடுபாட்டிற்கு மதிப்பு தரும் நோக்கில் தான் அவன் அவ்வாறு கேட்டது! ஆனால், கேட்கப்பட்ட நேரம் தான் சற்று தாமதம்! ஏற்கனவே காட்டுத் தீயென எரிந்து கொண்டிருந்தவளுக்குக் காய்ந்த விறகுகளை அள்ளிக் கொட்டியது போல ஆனது அவனது அனுசரணை.

 

இருந்த கோபத்தில், “எதுவுமே பிடிக்கலை… சுத்தமா பிடிக்கலை….” என்றாள் அவனை ஒரு மாதிரி பார்த்த வண்ணம். அவனையே பிடிக்கவில்லை என்ற குறிப்போடு அவள் சொன்ன விஷயம் அவனை வெகு சரியாகத் தாக்கி சீண்டியது. அவனுக்கு பொதுவாகவே பொறுமை குறைவு! இவளானால் எத்தனையோ முறை பேசி முடிவு செய்த விஷயத்தைத் திரும்பத் திரும்ப முதலிலிருந்து தொடங்க அவனுக்கு கோபம் கனலெனக் கனன்றது.

 

உச்சந்தலை வரை சுர்ரென்று ஏறிய சினத்தில், “இன்னொரு முறை இப்படிப் பேசின ஓங்கி ஒன்னு விட்டுடுவேன் பார்த்துக்க… பெரிய உலக அழகி இவ… இவளை கட்டிக்க கெஞ்சிக்கிட்டே திரியணும். வாலை சுருட்டிட்டு இருந்தா உனக்கு நல்லது. சும்மா சும்மா என்னைச் சீண்டின பொல்லாதவனாயிடுவேன். ச்சே! ஒரு நாளாவது உன்னைப் பார்த்தா நிம்மதியா கழியுதா? மோஸ்ட் இரிடேட்டிங்…” எரிச்சலில் அவள் சொன்ன ஒரு வார்த்தைக்கு அவள்மீது நெருப்பள்ளி கொட்டிக் கொண்டிருந்தான் சர்வேஸ்வரன்.

 

அவனது கடுமை தாங்க முடியாமல் தலை கவிழ்ந்தவளுக்குக் கண்ணீர் பெருகியது. அவசரமாக யார் கவனத்தையும் கவராமல் வாஷ் ரூமினுள் நுழைந்து கொண்டாள். அவளால் அழுகையை அடக்கவே முடியவில்லை. சர்வா இத்தனை கடுமை காட்டக்கூடும் என்று அவள் எதிர்பார்க்கவே இல்லை.

 

ஆனால், நன்கு யோசித்துப் பார்த்தால் அவனது குற்றச்சாட்டும் சரியென்றே பட்டது. அவளைக் காண நேர்கையில் எல்லாம் அவனது மனநிலையை வெகுவாக சோதித்துக் கொண்டிருக்கிறாள். இருவரும் யோசித்து மகிழ ஒரு நல்ல நிகழ்வு கூட இருவருக்கும் இடையில் இல்லை என எண்ணும்போதே அவளுக்குக் குற்றவுணர்வாய் இருந்தது.

 

அதற்காக அவன் இத்தனை மோசமாகப் பேசலாமா? அவன் விருப்பமே பிரதானம் என்று தானே கல்யாணம் பேசினான்! பிறகு மற்றதெல்லாம் எப்படி எதிர்பார்ப்பான்? தன்புற தவறு புரிந்த போதும் அவன் செய்கையை அவளால் ஒப்புக் கொள்ளவே முடியவில்லை.

 

அவள் சென்று வெகு நேரமாகியும் திரும்பாததால், அவளின் கைப்பேசிக்கு அழைப்பு விடுத்தான். சௌதாமினி அழைப்பை ஏற்றது தான் தாமதம், “மகாராணிக்காக இன்னும் எவ்வளவு நேரம் காத்திருக்கணும்?” என மேலும் சீறினான்.

 

சமாதானமாகப் பேச வேண்டும் என்ற எண்ணம் கூட இவனுக்கு இருக்காதா? மனம் வெகுவாக கலங்கியது.

 

எதுவும் பேசாமல் முகத்தைத் திருத்திக் கொண்டு அமைதியாக வெளியே வந்தாள். அந்த டெஸ்ட்டைல்ஸ் நிறுவனத்தோடு ஜீவல்லரி கடையும் இணைந்திருக்க, அனைவரும் தாலி காசு தேர்வு செய்வதற்குச் சென்றிருந்தனர். சர்வா மட்டும் இவளுக்காக காத்திருக்க, இவள் வந்து இணைந்ததும் வேகமாக நடந்தான்.

 

இவனுக்கு என்ன பெரிய கோபம்? நான் சொன்ன ஒரு வார்த்தைக்காகவா? அப்ப இவன் பேசின பேச்சுக்கு நான் எத்தனை கோபப்படறதாம்? உள்ளே எழுந்த எரிச்சலை, ஏமாற்றத்தை காட்டும் வழி தெரியாமல் அவனை அமைதியாகப் பின்தொடர்ந்தாள்.

 

தாலிக்காசு, தாலி செயின் இரண்டையும் தேர்ந்தெடுத்ததும், பெரியவர்கள் இவர்கள் இருவரிடமும் காட்டி அபிப்ராயம் கேட்ட போது எந்த உற்சாகமோ ஆர்வமோ இன்றி தலையசைத்தவர்களைப் பெரியவர்கள் புதிராகப் பார்த்தனர். இப்பொழுது என்ன பிரச்சினையோ என்று அவர்களுக்கு மனதிற்குள் கலக்கமாக இருந்தது.

 

அடுத்து மணமகனின் உடை தேர்வு முடிந்ததும் உணவுண்ண செல்வதாக ஏற்பாடு! சர்வேஸ்வரன் தாங்கள் இருவரும் வெளியே செல்ல வேண்டும் என்று வந்து நின்றான்.

 

“இப்ப என்னடா?” ரேவதி சலிப்போடு கேட்க,

 

“ம்ப்ச் அம்மா நாங்க எங்கே வெளிய போயிருக்கோம். இன்னைக்கு தான் கேட்கிறேன் மறுப்பு சொல்லறீங்க?” அவரை விடவும் சலிப்போடு சர்வா கூறினான்.

 

சௌதாமினியின் அடிவயிற்றில் புளியைக் கரைப்பது போல இருந்தது. சாதாரண நேரம் என்றால் பரவாயில்லை. இவனோ எல்லையற்ற கோபத்தில் இருக்கிறான் இப்பொழுது எங்கே தனியாக அழைத்துச் செல்கிறான்? அவளுக்குப் பதற்றத்தில் நன்கு வியர்த்தது.

 

“இன்னும் சொந்த பந்தத்துக்கு எல்லாம் கல்யாணத்துக்குத் துணி எடுக்க வேண்டியிருக்கேடா…” மகனை அனைவர் முன்பும் அதட்டவும் வழியில்லாமல் தன்மையாக எடுத்துச் சொன்னார் ரேவதி.

 

“அதெல்லாம் நீங்க எடுங்க…” விட்டேற்றியாகப் பதில் சொன்னவன் தன் முடிவில் உறுதியாக இருந்தான்.

 

“சாப்பிட்டாச்சும் போங்களேன் டா…”

 

“போற வழியில பார்த்துக்கறோம்…” என்றான் எரிச்சலோடு.

போச்சு இன்னைக்கு நேரமே சரியில்லை அச்சத்தோடு அரற்றிக் கொண்டிருந்தது சௌதாமினியின் மனம்.

 

சற்று நேரத்தில் சௌதாமினி சர்வாவுடன் பயணம் செய்து கொண்டிருந்தாள். அவளுக்கு மிகுந்த படபடப்பாக இருந்தது. அவன் காரை ஓட்டிய வேகத்திலேயே அவனது கோபம் தெளிவாகப் புரிந்தது. அவன் பேசிய பேச்சிற்கு தானே இன்னும் சமாதானம் ஆகாத நிலையில், அவனைச் சமாதானம் செய்ய வேண்டிய இக்கட்டில் இருப்பது அவளுக்கு சஞ்சலத்தைக் கொடுத்தது.

 

ஆனால், அவளுக்குச் சமாதானம் செய்யும் வழியும் தெரியும் போலத் தெரியவில்லை.

 

தவிப்போடு அவள் அமர்ந்திருக்கையிலேயே காரை ஒரு கிளை சாலையில் வேகமாக ஒடித்துத் திருப்பினான் சர்வேஸ்வரன்.

 

அதில் அவள் நிலை தடுமாற, குண்டும் குழியும் நிறைந்த மண் ரோட்டில் கார் அதே வேகத்தில் சென்று அவளது முதுகைப் புண்ணாக்கியது. அவள் சுதாரிக்கவே முடியாதபடி வாகனத்தை ஓட்டியவன் திடீரென்று சடன் பிரேக் போட்டு நிறுத்த அவள் வெகுவாக நிலை தடுமாறினாள். ஏதோ சீட் பெல்ட் போட்டிருந்தமையால் கொஞ்சம் தப்பித்தாள். இல்லையா இவன் படுத்திய பாட்டிற்கு இன்னும் நான்கு நாட்களுக்கு எழுந்திருக்கவே முடிந்திருக்காது.

 

ஓய்ந்து போய் அமர்ந்திருந்த நிலையிலும் அவனை அவள் திரும்பியும் பார்க்கவில்லை. அப்படி என்ன ஆத்திரம் இவனுக்கு? எதற்கு இப்படிப் படுத்துகிறான்? அச்சம் ஒருபுறம், கோபம் மறுபுறம் என இறுமாப்போடு இறுக்கமாக அமர்ந்திருந்தாள்.

 

“இப்ப சொல்லுடி? என்ன வெங்காயம் உனக்கு பிடிக்கலை?” அவனது கடுமையில் அதிர்ச்சியோடு அவனைத் திரும்பிப் பார்த்தாள். இத்தனை படுத்திய பிறகும் இவன் கோபம் மட்டுப்படவில்லையா? என்ன மனிதன் இவன்?

 

“பூங்கொத்து வாங்கிட்டு வந்து தந்திருக்கணுமா? இல்லை கண்ணே, மணியேன்னு பேசி காரியத்தை சாதிச்சிருக்கணுமா? மேடம் என்ன எதிர்பார்த்து நான் செய்யலைன்னு சொல்லறியா?” இறுதி வார்த்தைகளைக் குரலை உயர்த்தி உறுமலாக வெளியிட்டான்.

 

கண்கள் கலங்கி விட்டது. “ஏதேதோ பேசாதீங்க. நம்ம போகலாம். பிளீஸ்…” என்றாள் கெஞ்சுதலாக. என்னவோ அவளுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் பயம் அதிகரித்தது. தைரியத்தை தர வேண்டியவனே அவளைப் பயப்படுத்திக் கொண்டிருந்தான்.

 

“இப்ப கூட உனக்குப் பயம் தான் இல்லையா? அதுதானே காதல் இருந்திருந்தா ஏன் பிடிக்கலை பிடிக்கலைன்னு ஏலம் விட தோணுது? இப்படி கட்டிக்க போறவன் கிட்ட பயப்படத் தோணுது?”

 

அவன் கேள்வி நியாயமே என்றபோதும் அவளுள் காதல் வந்ததாக அவள் எப்பொழுது சொன்னாளாம்?

 

அவளை நெருங்கி வந்து கன்னத்தை அழுந்திப் பற்றி, “சொல்லு என்ன பிடிக்கலைன்னு இப்ப சொல்லு…” என்று கண்கள் சிவக்கக் கேட்டான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

எனக்கொரு வரம் கொடு 14 – சுகமதிஎனக்கொரு வரம் கொடு 14 – சுகமதி

எனக்கொரு வரம் கொடு – 14 சர்வேஸ்வரனின் செய்கையில் அரண்டு போன சௌதாமினி வேகமாக கரம் உயர்த்தி அவனை இறுக அணைத்துக் கொண்டாள். அதில் அவன் பிடி தளர, அதே வேகத்தில் அவன் தோளில் அழுந்த புதைந்து கொண்டவள், “இப்படி எல்லாம்

எனக்கொரு வரம் கொடு 3 – சுகமதிஎனக்கொரு வரம் கொடு 3 – சுகமதி

எளிதாகத் தீர்ந்திருந்தது. அதில் மனதினோரம் பெரும் மகிழ்ச்சி அவனுக்கு!   அவனது பார்வையை உணர்ந்தாளா அல்லது எண்ணப்போக்கை உணர்ந்தாளா தெரியவில்லை. “இப்ப உனக்கு சந்தோஷமா இருக்கணுமே? உன் பிரச்சினை எல்லாம் ஒன்னும் இல்லாம ஆயிடுச்சு” என்று சௌதா கேட்ட தொனியே சரியில்லாமல்

எனக்கொரு வரம் கொடு 11 – சுகமதிஎனக்கொரு வரம் கொடு 11 – சுகமதி

எனக்கொரு வரம் கொடு – 11   எழுந்து செல்ல நினைத்த சர்வேஸ்வரன், சௌதாமினியின் அலைப்புறும் விழிகளில் சற்று நிதானித்து, “இதுக்கு மட்டும் பதில் சொல்லு… என்மேல வெறுப்பு எதுவும் இருக்கா? என்னை கட்டிக்கவே கூடாதுன்னு…” என அவள் அருகில் அமர்ந்து