எனக்கொரு வரம் கொடு 12 – சுகமதி

எனக்கொரு வரம் கொடு – 12

 

சர்வேஸ்வரன், சௌதாமினி இருவருக்கும் நிச்சயத்திற்கான தேதி குறிக்கப்பட்டிருந்தது. கற்பகம் மிகுந்த உற்சாகத்துடன் வளைய வந்தார். செல்லத்துரைக்கும் மனைவியோடு சேர்ந்து மகளின் திருமண விஷயம் பற்றிப் பேசுவது மிகுந்த உற்சாகமளிப்பதாகவே இருந்தது.

 

அவர்களின் உற்சாகத்தையும் பூரிப்பையும் மகிழ்ச்சியையும் காணக்காண இவர்களின் சந்தோஷத்துக்காக எதையும் செய்யலாம் என்று சௌதாமினிக்கும் தோன்றியது. அதன் விளைவாக அவள் தன் மனதின் அலைப்புறுதல்களை எல்லாம் ஓரம் கட்ட நினைத்து, அதில் அவள் ஓரளவு வெற்றி கொண்ட சமயம் ஒரு புதிய பிரச்சனை கிளம்பி அவளை வெகுவாக நிலைகுலையச் செய்தது.

 

கோயிலில் அறிமுகமான பெண்மணி ஒருவர், கேரளாவில் நடக்கும் ஆயுர்வேத சிகிச்சை குறித்து கற்பகத்திடம் கூறியிருக்க, செல்லத்துரைக்கு அந்த சிகிச்சையைத் தந்து பார்க்கலாமா என சௌதாவிடம் கேட்டுப் பார்த்தார் அவர்.

 

கேட்கக் கூடாது விஷயத்தை கேட்டு விட்டதை போல முகம் வெளிறி நின்றிருந்த மகளைப் பார்த்ததும் கற்பகத்திற்கு ஒன்றும் புரியவில்லை. நெற்றி சுருங்க, “என்னம்மா?” என்றார் யோசனையுடன்.

 

அவசரமாக, “சித்தி… சித்தி… அது வந்து…” என தடுமாறியவளை, “என்னடா என்ன ஆச்சு? உனக்கு எதுக்கு இப்படி வேர்க்குது?” என ஆதரவாகக் கேட்டபடி அவளை சோபாவில் அமர வைத்து, அருகிலிருந்த நீரை எடுத்து அருந்தக் கொடுத்தார். மகளின் இந்த முரண்பாடான செய்கை அவரை வெகுவாக குழப்பியது. ஏனோ அது உள்ளுக்குள் ஒருவித அச்சத்தையும் தோற்றுவித்தது.

 

அவரது முகத்திலேயே அது பிரதிபலிக்கவும் செய்ய, அதை சௌதாவும் துல்லியமாக கண்டுகொண்டாள். அவளுள் இறங்கிய நீர் அவளைச் சற்று நிதானப்படுத்தியது. ஆழ்ந்த மூச்செடுத்து மேலும் தன்னை நிலைப்படுத்தியவள், “சித்தப்பாவுக்கு ஒவ்வொரு ட்ரீட்மெண்ட் தரும்போதும் அவர் ரொம்ப சிரமப்படறார் சித்தி. யார் என்ன சொன்னாலும், அவருக்கு வேற ட்ரீட்மெண்ட் பண்ண வேணாம். பிளீஸ் சித்தி. சித்தப்பா இப்படியே இருந்தாலும் போதும் அவரை சிரமப்படுத்தாதீங்க…” என்றாள் கரகரப்பான குரலில். திடமாக உச்சரிக்க நினைத்த வார்த்தைகள் தன் கட்டுப்பாட்டையும் மீறிக் கரகரக்க, அவளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

 

மகளின் அச்சம் சிகிச்சை குறித்துத் தான் போல எனக் கற்பகத்திற்கு ஆசுவாசம் எழுந்ததும், அதைக் குறித்து விவரிக்கும் பொருட்டு, “இதுக்கு தான் இப்படி பயத்துட்டியா? நான் கூட என்னவோ ஏதோன்னு பயந்தே போயிட்டேன்” என்று ஆசுவாசமாகச் சொன்னவரிடம் மறுப்பை முகத்தில் சுமந்தபடி இளையவள் ஏறிட்டாள்.

 

“அச்சோ இல்லை கண்ணு… நீ ரொம்ப குழப்பிக்கிற. இது ஆயுர்வேத ட்ரீட்மெண்ட் தான். நல்லா ட்ரீட்மெண்ட் தருவாங்க. நீ நினைக்கிற மாதிரி வலி, வேதனை எல்லாம் சித்தப்பாவுக்கு இருக்காதும்மா. எந்த சைட் எபக்ட்ஸும் இருக்காதுன்னு சொன்னாங்க. அவருக்குக் குணமான நல்ல விஷயம் தானே” எனக் கற்பகம் எடுத்துச் சொல்ல, மேலும் அரண்டு விழித்தாள்.

 

அவளது தோற்றமே சரியில்லை. பேயறைந்தவள் போலக் காட்சி அளித்தவளைப் பார்த்து வெகுவாக குழம்பியவரிடம், “வேண்டாம் சித்தி…” என்றாள் மன்றாடும் குரலில். இத்தனை நேரமிருந்த சுய கட்டுப்பாடுகள் மொத்தமாகத் தகர அவளது கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடியது.

 

அவளது குரல், பாவனை எல்லாம் கற்பகத்தின் கண்களையும் குளமாக்க, “என்னடா? என்ன விஷயம்?” என்றார் பதறியவராக. விஷயம் பெரியது என உள்ளுணர்வு உணர்த்திய போதும், இன்னதென்று அவரால் எதையும் கணிக்க முடியவில்லை.

 

அழுகை பொங்க, “பிளீஸ் சித்தி. என்கிட்ட இதைப்பத்தி எதுவும் கேட்காதீங்க. சித்தப்பாவுக்கு எந்த புது ட்ரீட்மெண்ட்டும் வேணாம். அவர் இப்ப இருக்கிற மாதிரியே இருக்கட்டும். இதுக்கு தான் எனக்கு இந்த கல்யாணமெல்லாம் சரிப்பட்டு வராதுன்னு சொன்னேன்… பேசாம நான் உங்களை எல்லாம் கவனிச்சிக்கிட்டு இங்கேயே நிம்மதியா இருந்திருப்பேன்…” என்று புலம்பியபடி சொன்னதும், கற்பகம் வெகுவாக அதிர்ந்து போனார்.

 

கணவருக்கு நேர்ந்த விபத்தினால் நிலைகுலைந்து தான் நின்றதால் தானே மொத்த பாரமும் இந்த சிறு பெண் மீது விழுந்தது. நிலைமையை சாமளித்திருக்க எனக்குத் தெரிந்திருக்க வேண்டாமா? இவளைச் சிரமப்படுத்தி… இவள் என்னவெல்லாம் பாரம் சுமந்து அந்த இக்கட்டான நிலைமையைக் கடந்து வந்தாளோ? இவள் அழுது அரற்றுவதைப் பார்த்தால் இன்னும் இவளது பாரம் தீர்ந்த பாடில்லை போலவே!

 

இப்பொழுதும் தனக்குத் திருமணம் வேண்டாம் என்று மறுத்து ஒதுக்கும் அளவு இவளை எந்த விஷயங்கள் மனதை அறுக்கிறதோ?

 

தன் கண்களை அவசரமாகத் துடைத்துக் கொண்டு, “அசட்டுத் தனமா பேசாத சௌதா. அவரை நான் நல்லா பார்த்துப்பேன். நீ பயப்படாம இரு… இப்ப என்ன அவருக்கு வேற எந்த ட்ரீட்மெண்ட்டும் தரக்கூடாது அவ்வளவு தானே… சரி நாங்க புதுசா எந்த ட்ரீட்மெண்ட்டும் தரலை. நீ சொன்னா நான் கேட்டுக்க மாட்டேனா டா? இதுக்கு போயி ஏதேதோ பேசிட்டு…” என உரைத்தவர்,

 

“என்ன பிரச்சினை கண்ணு. என்கிட்ட சொல்ல முடியாதா?” என அவளின் கூந்தலை ஒதுக்கிப் பரிவாகக் கேட்டார்.

 

ம்ம் ஹ்ம்ம் அவளால் சித்தியிடம் மட்டுமல்ல… அவளுக்குள் புழுவாய் அரிக்கும் வேதனையை யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாது! எந்த இக்கட்டான சூழலிலும்!

 

அவளின் முகத்தில் தெரிந்த தவிப்பையும், அலைப்புறுதலையும் பார்த்ததும், “இல்லைடா இல்லை… நீ எதுவும் சொல்ல வேணாம்” என கற்பகமே அவசரமாகக் கூறினார். ஆனால், அவரின் மனம் பெரும் பாராமானது. எதுவோ சரியில்லை என அச்சமும் வேதனையும் கொண்டார்.

 

அதன்பிறகு தொடர்ந்த நாட்களில் ஒருவித இறுக்கம் கற்பகத்தை ஆக்கிரமித்துக் கொண்டது. சௌதாவின் நிச்சய வேலைகள் கூட அவரது இறுக்கத்தைத் தளர்த்தவில்லை. இதைக் கவனித்த சௌதாமினிக்கு மிகுந்த சங்கடமாகிப் போனது. தான் மனதோடு போராடுவது போதாதா சித்தியும் போராட வேண்டுமா எனக் கடலளவு வேதனை கொண்டாள்.

 

சித்தியின் வேதனையைப் பொறுக்கமாட்டாமல், அவரை இயல்பாக்கும் பொருட்டு ஒரு நாள் அவளாகவே, “என்னவோ ஓர் உள்ளுணர்வு சித்தி. சித்தப்பா குணமாகாம இருக்கிறது தான் அவருக்கு நல்லதுங்கிற மாதிரி. நம்ம பெரிய கோயில்ல ஒருமுறை விழாவுக்குப் போயிருந்தேனே… அப்ப அங்கே பார்த்த ஒரு சுவாமி, சித்தப்பா இப்படி இருக்கிறது தான் அவருக்கு நல்லதுன்னு சொன்னாரு. அந்த சுவாமி நம்ம குடும்பத்தைப் பத்தி சொன்னதெல்லாம் ரொம்ப சரியா இருந்துச்சு சித்தி. அதுதான் அவர் சொன்னது எனக்குள்ள அழுத்தமா பதிஞ்சு போச்சு. அதிலிருந்து யாரு என்ன ட்ரீட்மெண்ட்டுன்னு சொன்னாலும் என்னவோ விபரீதமா நடக்க போற மாதிரி ஒரு பயம் வந்து என்னை கலங்கடிச்சிடுது. அதனால தான் அன்னைக்கு நீங்க அது சம்பந்தமா கேட்டப்பவும் ரொம்ப அரண்டு போயிட்டேன்” என எடுத்துச் சொல்ல,

 

கற்பகம் தெளிந்தவராக, “நிஜவாவே இவ்வளவு தான் விஷயமா?” என்றார் ஆசுவாசமாக. அவள் ஆம் எனத் தலையசைக்கவும், “இதை நீ என்கிட்ட சொன்னா நான் என்ன சொல்ல போறேன் டா” என்று கற்பகம் மனத்தாங்கலாகக் கேட்டார். அவளை அவர் துளிக்கூட சந்தேகிக்கவில்லை என்பதே அவளை வாள் கொண்டு அறுத்தது போல இருந்தது. இந்த வேதனைகள் எல்லாம் என்றேனும் ஒரு நாள் தீரக்கூடுமா? அவளது எண்ணங்களின்படி நடக்கவே நடக்காத என்று கணித்திருந்த விஷயத்தை எண்ணி அவளின் மனம் வெகுவாக ஏங்கியது.

அவளின் வாட்டத்தைப் பொறுக்க மாட்டாமல், “என்னடா? முன்னாடியே சொல்லி இருக்கலாமே?” என மீண்டும் கற்பகம் வினவ,

 

சன்னக்குரலில், “இதை நீங்க நம்பாட்டி… அதுதான் சித்தி பயமாயிடுச்சு” என்றாள்.

 

“ச்சு… இவ்வளவு தானா? நான் எப்படி பயந்துட்டேன் தெரியுமா? நீ சொல்லி நான் மறுக்க போறேனா கண்ணு. உனக்கு எது சரின்னு படுதோ அப்படியே செஞ்சுக்கலாம். என்னைவிட உனக்கு நல்லா விவரம் தெரியும்” எனப் பெருமையாகச் சொல்லவும்,

 

சன்ன சிரிப்புடன், “போங்க சித்தி…” என்று சிணுங்கலாகக் கூறியவள், கைப்பேசி ஒலி எழுப்புவதாக சாக்கிட்டு அறையினுள் புகுந்து கொண்டாள். உள்ளே நுழைந்தவளுக்கு கண்கள் குளமாகியிருந்தது. இன்னும் எத்தனை காலம், எத்தனை பேரிடம் இப்படி பொய்யும் நாடகமுமாகக் கழிக்க வேண்டியிருக்கும். அவளின் மனம் சோர்ந்து போனது.

 

இவளது மனநிலைக்கு மாறாக கற்பகம் மகளது விளக்கத்தில் வெகுவாக தெளிந்திருந்தார். சின்ன பொண்ணு… என்னவெல்லாம் குழப்பிக்கிறா? பாவம்! இனியாச்சும் அவ வாழ்க்கை சுகமா அமையணும். இந்த வயசுல எத்தனை கஷ்டம் தான் படுவா… என தனக்குள் எண்ணிக் கொண்டவர், மீண்டும் பழைய உற்சாகத்தோடு நிச்சய வேலைகளில் மூழ்கினார்.

 

அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்திருந்த நிச்சய நாளும் விடிந்தது. மிக நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே அழைப்பு! செல்லத்துரையின் வீட்டினில் எளிமையாக நிச்சயதார்த்தத்தை நடத்துவதாக ஏற்பாடு செய்திருந்தனர்.

 

விழாவுக்குரிய கொண்டாட்டத்தில் வீடு உறவினர்களால் நிறைந்து தனி களையுடன் மிளிர்ந்தது.

 

செல்லத்துரையை பட்டு வேஷ்டி சட்டையில் தயார்ப்படுத்தி ஓர் ஓரமாக அமர வைத்திருந்தனர். அவரும் அங்கு தடபுடலாக நடக்கும் ஏற்பாடுகளைச் சுவாரஸ்யமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். கற்பகம், வசந்தன், பூபாலன் மூவரும் ஆளுக்கொரு வேலையாக ஓடியாடிச் செய்து கொண்டிருந்தனர்.

 

சௌதாமினியோ செயற்கையாகப் பூசிக்கொண்ட புன்னகையோடு அவள் அறையில் அமர்ந்திருந்தாள். அவளின் நாட்டிய விழாக்களில் அவளை அலங்கரிக்கும் வளர்மதி அக்காவே நிச்சயத்திற்கும் அலங்காரத்தைக் கவனித்துக் கொண்டார்.

 

மிதமான அலங்காரத்தில் மெல்லிய ஜரிகையிட்ட ஆரஞ்சு வண்ண பட்டுடுத்தி பதுமையென அமர்ந்திருந்தவளை சுற்றி சில உறவுகளும், தோழிகளும் சலசலத்துக் கொண்டிருக்க… யாருக்கும் பதில் கூறும் மனநிலையில் இல்லாதவளோ மெல்லிய தலையசைப்பும், புன்னகையுமாக நேரத்தை கடத்திக் கொண்டிருந்தாள்.

 

சற்று நேரத்தில் தன் உறவுகளோடு சர்வேஸ்வரன் வந்து சேர்ந்திருக்க, சௌதாமினியை சபைக்கு அழைத்து வந்தனர். குனிந்த தலையை அவள் நிமிர்த்தவே இல்லை. சர்வாவின் விழிகள் ஆராய்ச்சியாக அவள்மீது படிந்தது. “சரியான நத்தை…” என முணுமுணுத்துக் கொண்டான்.

 

புடவை அடங்கிய சீர்வரிசை தட்டு அவளிடம் கொடுக்கப்பட, அவர்கள் வாங்கி வந்திருந்த பச்சை வண்ண பட்டை உடுத்தி அவளைத் தயார் செய்தனர்.

 

மீண்டும் சபைக்கு அழைத்து வந்து அவளை அமர வைத்து நிச்சய தாம்பூலம் மாற்றி, அவளுக்கும் சர்வாவுக்கும் நலுங்கு வைத்து… என எந்த நிகழ்விலுமே அவள் தன் தலையை நிமிர்த்துவதாகவே இல்லை. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த சர்வா கடுப்பாகிப் போனான்.

 

யாரும் அறியாமல் அவளது கையை சுரண்டலாம் என நினைத்தாலும், யாரேனும் பார்த்தால் அவ்வளவு தான் என்ற நினைப்பில் அமைதி காத்தான். சில நேரங்களில் செய்யும் வேலை கூட சத்ரு தான்!

 

சடங்குகள் முடிந்த கையோடு சௌதாவை அறைக்குள்ளும் அனுப்பி வைத்துவிட போச்சுடா என்றிருந்தது காவலனுக்கு. தெய்வம் போல வந்த போட்டோகிராபர் இருவரையும் தனியாகப் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று சொல்ல, அதிலேயும் அவனுக்கு எந்த விஷயமும் சாதகமாக அமையவில்லை.

 

போட்டோகிராபரின் வழிநடத்துதலின்படி சில பல புகைப்படங்கள் எடுத்த பிறகு வேலை முடிந்தது என்ற பாவனையில் சௌதாமினி அறைக்குள் புகுந்து கொள்ள, சர்வாவின் காதில் புகை வந்தது.

 

அவனை வெகுவாக சீண்டி விட்டது தெரியாமல் அறையினுள் தளர்வாக அமர்ந்திருந்தாள் சௌதாமினி. இவள் புகைப்படம் எடுக்க சென்றிருந்ததால், அனைவரும் விருந்துண்ண சென்றிருந்தனர். யாருமற்ற தனிமை அவளுக்கும் தேவைப்பட்டது.

 

இதெல்லாம் எப்போது முடியும் என்று அலுப்புடன் அமர்ந்திருந்தவளைக் கலைத்தது அழுத்தமான காலடி ஓசை. என்னவோ உறுத்த விழியுயர்த்தி பார்த்தவளை, கைகளை மார்பின் குறுக்கே கட்டியபடி அழுத்தமாக பார்த்தபடி நின்றிருந்தான் சர்வேஸ்வரன்.

 

அவனைக் கண்ட வேகத்தில் எழுந்து நின்றிருந்தாள். சிறிது நேரம் அவன் எதுவும் பேசாது போகவும், சற்று மிரட்சியோடு அவனைப் பார்த்திருந்தாள்.

 

அவனோ வெகு நிதானமாக, “அப்பறம்?” என்றான் தாடையைத் தடவியபடி.

 

இவன் எதை கேக்கறான்? என்ன யோசித்தும் அவளுக்குப் புரியவேயில்லை.

 

“இல்லை இன்னைக்கு நமக்கு நிச்சயம்ன்னு சொன்னாங்க…” அவன் நக்கலாகக் கேட்கவும், அந்த நக்கல் தொனி ஏன் என்று புரியாமல் விழித்தாள்.

 

சட்டென்று அவளை நெருங்கியவன் அவளின் புஜத்தை இறுகப்பற்றி, “உன்னை என்ன கட்டாயப்படுத்தியா கல்யாணம் செய்யறேன். யாருக்கோ நடக்கிற நிச்சயம் மாதிரி பொம்மை மாதிரி உலா வர” என்று பொரிந்தான்.

 

அவன் பற்றிய இடத்தை மிரட்சியோடு பார்த்தவள், அவசரமாக வாயிலை நோக்க கதவை முக்கால் பாகத்திற்கும் மேலாகவே சாத்தி வைத்திருந்தான்.

 

“என்னதான் பிரச்சினை உனக்கு?” அவனது சீறலில் கவனம் கலைந்தவள், “அதெல்லாம் ஒ… ஒன்னும் இல்லை… முதல்ல கையை விடுங்க…” என்றாள் பதற்றமும் தவிப்புமாக.

 

“என்னை நம்ப சொல்லறியா?” அதற்கும் அழுத்தமாகவே வினா எழுப்பினான்.

 

அவனது கூர்ப்பார்வை அவளை இன்னும் அச்சுறுத்தியது. “சர்வா… பிளீஸ்…” என்றாள் அச்சத்துடன்.

 

“எதுக்கு உன்னை பிளீஸ் செய்யணும். யாருக்கோ நடக்கிற கல்யாணம் மாதிரி பொம்மை மாதிரி சுத்தறியே அதுக்காகவா? உன்னோட சம்மதத்தைக் கேட்டபிறகு தானே நிச்சய ஏற்பாடு தொடங்குச்சு. வேலை வெட்டிய விட்டுட்டு கிளிப்பிள்ளைக்கு சொல்லற மாதிரி உனக்கு எடுத்துச் சொன்னேன் தானே… இன்னும் என்ன இப்படி ஒரு போஸ்…”

 

இவன் எதுக்கு இப்படி கோபப்படறான்? என்னவோ இவனை மறுக்க வாய்ப்பு கொடுத்த மாதிரி… இவன் தந்தது ஒரே ஒரு ஆப்ஷன் தானே!

 

அவளது எண்ணவோட்டத்தை புரிந்து கொண்டவன் போல, “பின்னே வருஷக்கணக்கா மகாராணி எப்ப மனசு மாறுவாங்கன்னு காத்திட்டு இருக்கணுமாக்கும். அப்படி காத்திட்டு இருந்ததால தானே அந்த பிரகதீஷ் இடையில வந்தான். இனியும் எத்தனை பேரு வருவானுங்களோ? எனக்கு உன்னை அடை காக்கிறது தான் வேலையாக்கும்”

 

அவன் பொரிந்த வேகத்தில், இவனை யாரு காத்திருக்க சொன்னாங்களாம்? என எண்ணினாள்.

 

முன் யோசனையின்றி இதையும் மனதிற்குள் நினைத்து, அது முகத்திலும் பிரதிபலிக்க செய்யவும், “என்ன? என்ன? நான் உன் பின்னாடி சுத்திட்டே இருக்கணுமா? எனக்கு உன்னை பிடிக்கும்ன்னு உனக்குத் தெரியாது” என்றான் அதட்டலாக.

 

அவள் அயர்ந்தே போனாள். இவன் எப்ப நம்ம பின்னாடி சுத்துனான்? என அவளுக்கு கண்ணைக் கட்டியது. கூடவே அதட்டலாகக் காதலைப் பிரேரணை (propose) செய்பவன் இவனாகத்தான் இருக்கும் என அவள் எண்ணிக் கொண்டிருந்த போதே,

 

“இனியொருமுறை இந்த சந்தேகம் உனக்கு வரக்கூடாது” என்று உறுதியான குரலில் கூறியவன், புஜத்தைப் பற்றியிருந்த கரத்தால் அவளின் இடையை வளைத்து தன்னோடு நெருங்கி நிற்க வைத்தான். அவசரமாய் ஓர் அணைப்பு!

 

அவனது திடீர் செய்கையை எதிர்பாராதவள் அவனது மார்பில் கரம் பதித்து அழுத்தி அவசரமாக அவனிடமிருந்து விலக நினைக்க, அதற்குத் துளியும் இடம் தராதவனோ அவளை மேலும் தன்னோடு சேர்த்து நெருக்கினான்.

 

அதில் பயத்துடன் அவனை ஏறிட்டுப் பார்த்தவளை ஒரு வேகத்தோடு முகமெங்கும் முத்தமிடத் தொடங்க, அதில் அதிர்ந்தவள் அவனை விளக்குவதில் முழு மூச்சில் ஈடுபட்டாள்.

எதற்கும் அசராதவன் தன் வேலையில் முழு கவனமாக இருக்க, முகத்தை எல்லா புறங்களிலும் திருப்பி தன் மறுப்பைத் தெரிவிக்கத் தொடங்கியிருந்தாள் மங்கை. அதில் பொறுமை இழந்தவன், இன்னொரு கரம் கொண்டு அவளது முகத்தை அழுந்த பிடித்து அவளின் இதழருகே குனிய அவளின் விழிகள் அதிர்ச்சியில் விரிந்து, அவளது மருண்ட பார்வை தன் மறுப்பை அப்பட்டமாகத் தெரிவித்துக் கொண்டிருந்தது.

ஒரே ஒரு நொடி அதைக் கவனித்தவன், என்ன நினைத்தானோ அவளது முகத்தையும் அவளையும் ஒரு சேர விடுவித்திருந்தான். அவன் விலகிய வேகத்தில் நிற்க முடியாமல் தடுமாறியவள், சற்று நிலைப்படுத்தி நின்றதும் அவனை முறைத்து நின்றாள்.

இவன் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறான். எனக்கென்று உணர்வுகளே இருக்காதா? எல்லாமே இவன் விருப்பம் தானா? உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், அப்படி ஒன்றும் விருப்பப்பட்டுக் கூட அவன் இதைச் செய்யவில்லை. அவனை நிரூபிக்கும் வேகம் மட்டுமே!

கோபமும் எரிச்சலுமாக அவளிருக்க, அவனோ வெகு அலட்சிய தோரணையில் நின்றிருந்தான்.

“நீங்க நிரூபிக்க நினைச்சிருந்ததை நிரூபிச்சு முடிச்சாச்சுன்னா நீங்க கிளம்பலாம்” என்றாள் கட்டுப்படுத்திய எரிச்சலுடன்.

அதில் திடுக்கிட்டவன் தன் செய்கையை அவமானமாக நினைத்தானோ என்னவோ முகம் கருக்க, “இல்லை… அது… அப்படியில்லை…” என விளக்கம் தர முயற்சிக்க,

 

தன் கையை உயர்த்தி அவன் முகத்திற்கு நேராகக் காட்டியவள், “நீங்க கிளம்பலாம்…” என்றாள்.

“இல்லை கோபத்துல தான்…” என்ன விளக்கம் சொல்ல என்று அவனுக்குத் தெரியவில்லை. ஆனால், இப்படி நடந்திருக்கக் கூடாது என்று மட்டும் உரைத்தது.

அவளுக்கும் அவனது விளக்கம் ஆயாசமாக இருந்தது. ஆம்! கோபத்தில் தான் செய்தான். பின்னே ஆசையாகவா? அதை வேறு திரும்பத் திரும்ப விளக்கம் சொல்லிக் கொண்டு…

அவளது முகத்தைப் பார்த்தவனுக்கு தன் செய்கை பெரும் தவறாகப் பட்டது. “கோபத்தோட அப்படி செஞ்சிருக்க கூடாது தான். ஆனா பொம்மை மாதிரி உயிர்ப்பே இல்லாம சுத்தி வந்து என்னை சீண்டினது நீ தான்! கல்யாணத்துல அதே தப்பை மறுபடியும் செஞ்சுடாத… அப்பறம் நான் ரொம்ப பொல்லாதவனாயிடுவேன் பார்த்துக்க…” என தன் தப்பை ஒப்புக்கொண்ட வேகத்தில் அதற்கு முழுக்காரணமே நீ தான் என்று பழியையும் சுமத்தி விட்டு, மேற்கொண்டு அந்த தப்பைச் செய்யாதே என்று கோடிட்டும் காட்டிவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றிருந்தான்.

செல்பவனின் முதுகை வெறித்தவளுக்கு அலுப்பாக வந்தது. மென்மையாகச் சிரித்துக் கொண்டு நின்றால் மட்டும் போதாது போல என்று தோன்ற, உயிர்ப்போடு, அவன் எதிரிப்பார்ப்பது போல ஆசையோடு வலம் வருவது தன்னால் ஆகுமா எனப் புரியாமல் அச்சம் கொண்டாள்.

இயல்பாக எழ வேண்டிய ஆசையையும் பரவசத்தையும் தன் மனதிலுள்ள பாரத்தால் செயற்கையாக வரவைக்க தனக்குள் உருபோட்டுக் கொண்டிருந்தாள் சௌதாமினி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

எனக்கொரு வரம் கொடு 14 – சுகமதிஎனக்கொரு வரம் கொடு 14 – சுகமதி

எனக்கொரு வரம் கொடு – 14 சர்வேஸ்வரனின் செய்கையில் அரண்டு போன சௌதாமினி வேகமாக கரம் உயர்த்தி அவனை இறுக அணைத்துக் கொண்டாள். அதில் அவன் பிடி தளர, அதே வேகத்தில் அவன் தோளில் அழுந்த புதைந்து கொண்டவள், “இப்படி எல்லாம்

எனக்கொரு வரம் கொடு 3 – சுகமதிஎனக்கொரு வரம் கொடு 3 – சுகமதி

எளிதாகத் தீர்ந்திருந்தது. அதில் மனதினோரம் பெரும் மகிழ்ச்சி அவனுக்கு!   அவனது பார்வையை உணர்ந்தாளா அல்லது எண்ணப்போக்கை உணர்ந்தாளா தெரியவில்லை. “இப்ப உனக்கு சந்தோஷமா இருக்கணுமே? உன் பிரச்சினை எல்லாம் ஒன்னும் இல்லாம ஆயிடுச்சு” என்று சௌதா கேட்ட தொனியே சரியில்லாமல்

எனக்கொரு வரம் கொடு 15 – சுகமதிஎனக்கொரு வரம் கொடு 15 – சுகமதி

எனக்கொரு வரம் கொடு – 15 சௌதாமினி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த வரைக்கும் யாருக்குமே விஷயம் கசியாது லாவகமாகச் சூழலைக் கையாண்டான் சர்வேஸ்வரன். அவன் முன்பே கேட்டுக்கொண்டதற்கிணங்க அவளுடைய கருப்பை குறித்த விஷயம் மட்டும் யாரிடமும் பகிரப்படவே இல்லை. அவளுடைய மெடிக்கல்