எனக்கொரு வரம் கொடு 11 – சுகமதி

எனக்கொரு வரம் கொடு – 11

 

எழுந்து செல்ல நினைத்த சர்வேஸ்வரன், சௌதாமினியின் அலைப்புறும் விழிகளில் சற்று நிதானித்து, “இதுக்கு மட்டும் பதில் சொல்லு… என்மேல வெறுப்பு எதுவும் இருக்கா? என்னை கட்டிக்கவே கூடாதுன்னு…” என அவள் அருகில் அமர்ந்து கேட்க, அவசரமாக மறுத்துத் தலையசைத்தாள். அவனுக்கு என்னவோ ஓர் ஆசுவாசம் அவள் வேகமாக மறுத்துத் தலையசைத்த விதத்தில்!

 

அதே இலகுவான மனநிலையோடு, “நான் உன்னை ரொம்ப டீஸ் பண்ணியிருக்கேன் என்ன?” என்று நிறுத்தி நிதானமாக அவன் கேட்க, இதற்கென்ன பதில் சொல்வது என அவளுக்குப் புரியவில்லை. அவன் சீண்டினான் தானே! அதுவும் போதும் போதும் என்றளவு!

 

அவளின் எண்ணவோட்டத்தை மொழி பெயர்த்தவன் போல, “அந்த மேகக் கூட்டங்களை பாரு சௌதி… ஒன்னோடு ஒன்னு உரசிக்குதே… அதை சண்டைன்னு சொல்ல முடியுமா? சொன்னாலும் அது எத்தனை அபத்தம்? என்னோட சீண்டல்கள் கூட அந்த மாதிரி தானே… நான் முன்னாடி உன்கிட்ட நடந்துக்கிட்ட முறைக்காக உனக்கு என் மேல கோபம் இருக்கலாம். ஆனா அந்த ஒரு காரணத்தை வெச்சு மட்டும் என்னை மறுக்கிறது முட்டாள்த்தனம்ன்னு உனக்கு தோணலையா?” என்று ஆழ்ந்த குரலில் அவன் கேட்க,

 

பதிலாக எதையும் சொல்ல முடியாமல் இமைகள் படபடக்க அவனையே பார்த்திருந்தாள் சௌதாமினி. இவனுக்கு இப்படி எல்லாம் பேசத் தெரியுமா என்று அவளுக்கு வியப்பாக இருந்தது. கூடவே அவளின் மனம், ‘எனக்கு மறுக்கும் வாய்ப்பை இவன் எப்போ கொடுத்தான்?’ எனத் தீவிரமாக அகழ்வாராய்ச்சி செய்தது.

திருமணத்தை சௌதாமினி மறுப்பதற்கு வேறொரு காரணம் அழுத்தமாக இருந்தபோதும், அதை இருவருமே அறிந்திருந்த போதும் தற்காலிகமாக அந்த பேச்சை ஒதுக்கி வைத்து பேசிக் கொண்டிருந்தனர்.

“நிறைய யோசிக்காத…” என்று புன்சிரிப்போடு சர்வா சொல்ல, அந்த குரல் அவளை வெகுவாக வசீகரித்தது. மென்னகையை உதிர்த்தவள் சரியென்று தலையசைத்தாள்.

“குட். இப்படி சிரிக்கும்போது எப்படி இருக்கு…” என ரசனையான குரலில் அவளின் கன்னத்தைத் தட்டி சொன்னவனைப் பார்த்து விழித்தவள் மெல்ல விலகி அமர்ந்தாள்.

சட்டென்று மூண்ட கோபத்தில், “ம்ப்ச்… சரியான நத்தைடி நீ…” ரசனை குரல் மாறி எரிச்சல் மிகுந்திருந்தது சர்வாவிடம். அதிசயத்தக்க விதமாக அவளுக்கு அவனது எரிச்சல் மனவாட்டத்தை தந்தது. தான் என்ன நினைக்கிறோம் என அவளுக்கே சரிவர விளக்கிக்கொள்ள முடியவில்லை.

அவளது குழப்பத்தை கவனியாதவன் போல, “சரி சரி சண்டை, சமாதானம்ன்னு ரொம்ப லென்த்தா ஓடுது… எனக்கு முக்கியமான ஒரு மீட்டிங் இருக்கு. நான் கிளம்பறேன். நீயும் பத்திரமா வீட்டுக்கு போ. போயிட்டு போன் பண்ணு புரியுதா?” என அதிகாரமாக அவன் சொன்ன போதும், சொன்ன விதம் புன்னகையையே தோற்றுவிக்க மீண்டும் மென்சிரிப்போடு தலையசைத்தாள்.

அவனது குறும்புப்பார்வை ‘மறுபடியுமா?’ எனக் கேட்டது. அதற்கு வாய்விட்டே சிரித்து விட்டிருந்தாள். அந்த புன்னகையை தனக்குள் நிரப்பிக்கொண்டு மனநிறைவோடு விடைபெற்றான் சர்வேஸ்வரன்.

பின்னாடியே செல்ல முயன்றவளைத் தடுத்தது பிரகதீஷின் ஆங்கார குரல்! “உன் சிரிப்பு பிரமாதம்! கூட வந்தவனோட இழைஞ்சதும் தான்…” தன் வழியை மறித்து ஆத்திரமாகப் பேசியவனைப் புரியாமல் விழித்தாள்.

“கண்ணை என்னமா உருட்டுற? விட்டா என்னை அடையாளமே தெரியலைன்னு சொல்லுவ போல…” அதற்கும் சீறினான்.

அலட்சியமாக கை அசைத்தவள், “நீங்க யாருன்னு எனக்குத் தெளிவா புரியுது. ஆனா, என் முன்னாடி வந்து ஏன் இதெல்லாம் பேசிட்டு இருக்கீங்கன்னு தான் எனக்குப் புரியவே இல்லை” என்று சௌதா கூற, கோபத்தில் அவனது நாசி விடைத்தது.

“எனக்கு என்ன குறைன்னு என்னை மறுத்த? அதுவும் மறுப்பை நேரடியா சொல்ல முடியாதளவு என்ன பிரச்சினை உங்களுக்கெல்லாம்? உச்சபட்சமா இவன் வந்து எங்க வீட்டுல இதெல்லாம் சரியா வராதுன்னு சொல்லிட்டு போறான். அதுசரி பைத்தியக்காரனோட குடும்பத்துக்கிட்ட வேற என்ன எதிர்பார்க்க முடியும்…”

முயன்று பயின்ற பொறுமை காத்தல் பறந்து விடும் போல இருந்தது சௌதாமினிக்கு. முன்பின் தெரியாத இவன் வந்து என்ன வேண்டுமானாலும் பேசலாம் அவள் பொறுத்துக்கொண்டு போக வேண்டுமா? அதுவும் அவள் உயர்வாக மதிக்கும் நேசிக்கும் சித்தப்பாவைப் பற்றி! சினத்தைக் கட்டுக்குள் வைக்க அவள் பெரும்பாடு படுகையில்,

“அம்மா, அப்பா இல்லாம அனாதையா வளர்ந்தபோதே உனக்கெல்லாம் இத்தனை திமிர் இருந்தா… எங்களை மாதிரி குடும்பத்தோட வளர்ந்திருந்தா கையிலேயே பிடிக்க முடியாது போலவே!” என மேலும் மேலும் நெருப்பை அள்ளிக் கொட்டிக் கொண்டிருந்தான். அவனை வெறித்துப் பார்த்தவளுக்கு, உண்மையில் இவன் தன்னை நேசித்து தான் மனம் புரிய கேட்டானா என்ற சந்தேகமே முளைத்தது.

முயன்று நிதானித்து, “உங்களைக் கல்யாணம் செய்துக்க முடியாத சூழல். அதை நாகரிகமா வந்து தான் உங்க வீட்டுல சொன்னோம். இதுல என்ன தப்புன்னு எனக்கு இன்னமும் புரியலையே…” என குரலை உயர்த்தாமல் பிரகதீஷிடம் வினவினாள். அவள் எங்கே அறியப் போகிறாள் மறுப்பைச் சொன்ன விதத்தில் எந்த பிரச்சினையும் இருந்திருக்கவில்லை. மறுப்பே அவனுக்கு பெரும் பிரச்சினை தான் என்று!

ஆத்திரத்துடன், “என்ன? என்ன புரியாது உனக்கு? அதெப்படி என்னை மறுக்கலாம்?” என்று எகிறினான் அவன்.

என்னவோ அரச கட்டளையை ஏன் மீறினாய் என்கிற பாவனையில் கேட்பவனிடம் மேற்கொண்டு என்ன சொல்வது என விளங்காமல், “உங்களோட கோபத்துல நியாயமே இல்லை. நிதானமா யோசிங்க அது உங்களுக்கே புரியும். இப்ப வழியை விடுங்க…” என அப்பொழுதும் தன்மையாகவே எடுத்துச் சொன்னாள்.

“நீயும் எங்க வீட்டுல பேசற மாதிரியே பேசற! அதுசரி! கோபப்பட எனக்கு நியாயமே இல்லை தான்… நீங்க எல்லாம் யாரு… என்ன… உங்களை எல்லாம் முறைப்படி கட்டிக்கணும்ன்னு நினைக்கிறதே தப்பு! இப்படி ஊர் சுத்த கூட்டிட்டு போயிட்டு தேவையானதை சாதிச்சிட்டு கழட்டி விட்டிருக்கணும்”

அருவருப்பாக உணர்ந்தாள் சௌதாமினி. சேற்றில் கல் எரியும் முயற்சியை அவள் செய்யவே இல்லை தான்! ஆனால், அந்த சேறு தன்மீது பொழியும் போதும் விலக முடியாத தன் நிலை அவளுக்கு மிகுந்த மனவுளைச்சலை தந்தது. எந்தவித ரசாபாசமும் இல்லாமல் இவனிடமிருந்து விலகிச் சென்றுவிட வேண்டும் என்று ஆயாசத்துடன் நினைத்துக் கொண்டாள்.

அவளின் முகத்தில் தோன்றிய அலைப்புறுதல்களோ கவலைகளோ துளியும் பாதிக்காதவனாய், “என்ன பதிலை காணோம்? பேமெண்ட் எப்படி?” என்று கொச்சையாகக் கேட்டான்.

“அவர்கிட்ட பேசிட்டு சொல்லட்டுமா? இல்லை உங்க வீட்டுக்கே அவரை அனுப்பிச் சொல்ல சொல்லட்டுமா?” நக்கலாகத்தான் கேட்டிருக்க வேண்டும். ஆனால், அவன் பேசிய வார்த்தைகளின் வீரியத்தால் மரத்த முகத்தோடு நிறுத்தி நிதானமாகக் கேட்டாள். கலையைக் கலையாகப் பார்க்காத, பெண்களை இம்மியும் மதிக்காத இவனுடையதெல்லாம் என்ன பிறப்போ என அவன் அருகே நிற்பதைக் கூட அருவருப்பாக உணர்ந்தாள்.

மீண்டும் சர்வேஸ்வரனை இடையில் இழுத்ததே அவனை வாயடைக்கச் செய்ய போதுமாக இருந்தது. கூடவே வீட்டிற்கு அனுப்பச் சொல்லவா என்று வேறு கேட்டதும் கப்சிப் என்ற நிலை! வீட்டில் ஏற்கனவே மதிப்பு குறைந்து விட்டதே! சர்வேஸ்வரன் வந்து நாசூக்காகத்தான் மறுப்பைத் தெரிவித்தான். அவன் சென்றதும் அதெப்படி மறுக்கலாம் என்று பிரகதீஷ் ஆடிய ஆட்டத்திற்கு வீட்டிலேயே பலத்த எதிர்ப்பு வந்திருந்தது. அது மேலும் அவனது சினத்தைச் சீண்டி விட்டிருந்தது.

தான் ஒன்று கேட்டு நடக்காமல் போவதா என்னும் ஆங்காரம் அவனை இத்தனை கீழ்த்தரமாக நடக்க வைத்தது. இப்பொழுதும் பின்வாங்க வேண்டிய நிலை எரிச்சல் தர, “ஏன் அப்படி என்ன உனக்குப் பதிலா அவன் வந்து சொல்லறது?” என்றான் நக்கலாக.

“ஏன்னா என்னைக் கல்யாணம் பண்ணிக்க போறவர் அவர் தான்…” என்று சௌதாமின் உச்சரித்த போது அவளிடம் ஓர் உறுதி இருந்தது. அவள் முகத்தில் பெருமையும் கர்வமும் நிறைந்திருந்தது.

அங்கே அவளை எதிர்பார்க்காத சர்வாவின் அசிஸ்டண்ட் பிரசாந்த் அவளைச் சிறிது நேரம் கவனித்த விதத்திலேயே, அவளின் உடல்மொழியில் எதுவோ சரியில்லாதது போல உணர்ந்து, “ஹலோ மேடம்! எப்படி இருக்கீங்க?” என அவர்களை நெருங்கி இயல்பாகக் கேட்க, அவளுக்கு அவனை யாரென்றே அடையாளம் தெரியவில்லை.

“மேடம்… நான் பிரசாந்த்… அன்னைக்கு என்னையும் ஓவியாவையும் பார்த்தீங்களே. நாங்க ரெண்டு பேரும் சாரோட அசிஸ்டண்ட்ஸ்” என்று நினைவுபடுத்த,

பிரௌசிங் சென்டரை குறிப்பிடுகிறான் எனப் புரிந்தது. ஆனால், ஒரே ஒரு முறை பார்த்திருந்ததால் இவளுக்கு முகம் சரியாக ஞாபகம் இருந்திருக்கவில்லை.

“ஓ சாரி… மறந்துட்டேன்! நான் நல்லாயிருக்கேன். நீங்க?” என்றாள் மென்னகையுடன்.

“மேம் நாங்க சார் கிட்ட வொர்க் பண்ணறோம்… அப்பறம் இந்த கேள்வி கேட்டா எப்படி? நொந்து நூடுல்ஸா வேலை செய்யறோம் மேம்…” என்று பாவமாக முகத்தை வைத்து சொன்னவனைப் பார்த்துப் புன்னகைத்தவள், “டென் மினிட்ஸ் முன்னாடி இதை சொல்லியிருந்தீங்கன்னா நல்லா இருந்திருக்கும். இப்ப தான் உங்க சார் கிளம்பினார்” என அவள் தீவிர பாவனையில் சொல்லவும்,

“ஹையோ மேடம்… அது நான் இல்லை… எனக்குள்ள புகுந்த பேய் தான்…” எனப் பதறியபடி பதில் சொன்னவனைப் பார்க்கப் பார்க்க சிரிப்பு பொங்கியது.

பிரகதீஷ் வந்தவன் யாரெனப் புரியவும் சத்தமில்லாமல் நழுவி விட்டான். அவனின் முதுகை வெறித்தவளுக்கு எரிச்சலாக வந்தது. இப்படியும் சிலர் இருக்கிறார்களே என கடுப்புடன் நினைத்துக் கொண்டாள்.

“மேடம் எனி பிராப்ளம்?” பிரகதீஷை ஆராய்ச்சியாக நோட்டம் விட்டபடியே பிரசாந்த் கேட்டான்.

“ம்ம்… ஹ்ம்ம்… நத்திங்” என்றவள், “தேங்க்ஸ்” என்றாள் ஆத்மார்த்தமாக. “அப்பறம் ஒன் மோர் ரிக்வஸ்ட். அவர்கிட்ட இதைப்பத்தி எதுவும் சொல்லாதீங்க பிளீஸ்…” என்றாள் அவசரமாக.

இது பிரசாந்த்திற்கு உறுத்தியது. இருந்தும், “இல்லை மேம் நான் எதுவும் சொல்ல மாட்டேன். அதோட உங்க விஷயம் நீங்க சொல்லறது தான் முறை மேம். ஆனா நான் சொல்லறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. சார் ரொம்ப டேலண்ட்டேட். உங்களோட பிராப்ளம்ஸ் அவர்கிட்ட சொன்னா நல்ல தீர்வா சொல்வாங்க. அதிலிருந்து உங்களை புரடெக்ட் செய்யவும் அவருக்கு சுலபமா இருக்கும். எங்களால முடியாத எந்த பெரிய பிரச்சனைகளையும் அவர்கிட்ட கொண்டு போறது தான் வழக்கம்” என்று சொல்லிப் புன்னகைக்க,

சொல்லலாம் தான்! ஆனால், அவனுடைய நேர்மையும் கடமை உணர்வும் கோபமும் ஆக்ரோஷமும் எல்லா விஷயங்களுக்கும் சரிப்பட்டு வராதே! அதிலும் இழப்புகளைத் தாங்கிக்கொள்ள முடியாத தங்களுக்கு என எண்ணியவளுக்குச் சுருக்கென்று இருந்தது.

பிரசாந்த் தந்த ஆலோசனை பிரகதீஷ் விஷயத்தில் தானே! நாம் ஏன் சம்பந்தமே இல்லாமல் சித்தப்பா விஷயத்தோடு இதை இணைத்துப் பார்த்தோம் என்று உள்ளுக்குள் மருண்டவள், “புரியது சார். ஆனா இது ரொம்ப பெரிய விஷயம் இல்லை. குரைக்கிற நாய்” என்றாள் அமைதியான குரலில். அது கடிக்கவும் செய்யலாம் என்ற யோசனை அப்பொழுது இருவருக்குமே வந்திருக்கவில்லை என்பது சோதனையான விஷயம் தான்!

அவளுடைய அமைதி, பிரசாந்த்திற்கும் அந்த விஷயத்தைப்பற்றி மேற்கொண்டு பெரிதுபடுத்த தோன்றாததால், “ஓகே மேம். டேக் கேர்” என்று விடைபெற்றான். ஆனால், பிரசாந்த் இந்த விஷயத்தில் யோசிக்கத் தவறியிருந்தான். பிரகதீஷிடம் தவறிருப்பதை பார்வையிலேயே கண்டு கொண்டவன், தான் வந்து அவர்கள் இருவரின் இடையே பேசியதும்… அவன் சொல்லாமல் கொள்ளாமல் அமைதியாக நழுவியதைக் கொஞ்சம் யோசித்திருக்கலாம். மனதில் தவறான எண்ணங்கள் இல்லாதவன், இப்படி இரகசியமாக நழுவ வாய்ப்பில்லையே என்பது அந்த நேரத்தில் அவனுக்கு யோசிக்கத் தோன்றவில்லை!

அன்று ஓவியாவிடம் பேசியபோது தான் சௌதாமினியை சந்தித்ததையும் அவளிடம் பேசியதையும் பிரசாந்த் தெரிவித்தான்.

“இன்னைக்கு மேடமுக்கு ஜலதோஷம் கன்பார்ம்… ஒரு ஐஸ் பேக்டரியை தலையில வெச்சுட்டு வந்திருக்கியாக்கும்”

“அவங்களை நீ பார்க்க முடியலைன்னு உனக்குப் பொறாமை பொங்குது…”

“ஆமா… ஆமா… பொங்கிட்டாலும்… நானே சார் கிட்ட எப்படி எல்லாம் வாங்கி கட்டிட்டேன்னு தெரியுமா?” எனத் தான் வாங்கிய வசவுகளைச் சொல்லி ஓவியா புலம்பி தள்ளினாள்.

அவனோ ஹாஸ்யத்தைக் கேட்டது போல விழுந்து விழுந்து சிரிக்க, “துன்பத்துல சிரிக்கலாம் தப்பில்லை… ஆனா அடுத்தவங்க துன்பத்துல சிரிக்கிறது ரொம்ப தப்பு மிஸ்டர் பிரசாந்த்…” என பல்லைக் கடித்துக் கொண்டு ஓவியா கூற, அப்பொழுதும் அவனது சிரிப்பை நின்றபாடில்லை.

“எனக்கு தந்த வேலையாச்சும் கொஞ்சம் மூவ் ஆகியிருக்கு சார்… நீங்க இன்னும் அந்த வாட்ச்மேன் மோகனை கண்டுபிடிக்கவே இல்லை…” என அவனது சிரிப்பை அவள் ஆஃப் செய்யவும்,

“அச்சோ! அதை வேற நியாபகப்படுத்தாத ஓவி… நானும் தேடறேன் தேடறேன்… கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடிக்கக் கூட இவ்வளவு தேடியிருக்க மாட்டாரு. அந்தளவு தேடிட்டேன். ஆனாலு அந்த ஆளு என் கையில சிக்கவே மாட்டேங்கறான்”

“நீ சரியா ஸ்கெட்ச் போட்டிருக்க மாட்ட…”

“என்ன… ஸ்கெட்ச்சு…” வடிவேலு மாடுலேஷனில் பிரசாந்த் கேட்கவும், ஓவியா எதையோ யோசித்தவள் போல…

“ஹே இந்த ஐடியா வொர்க்அவுட் ஆகும். ட்ரை செய்யறியா?” எனக் கூவினாள்.

“வேணாம் ஓவி. நானே நொந்து நூடுல்ஸ் ஆகியிருக்கேன். ஏதாவது காலை வாரி விடற மாதிரி எதுவும் சொல்லி கடுப்பை கிளப்பிடாத…” என அவன் எச்சரிக்கவும், “ச்சு போடா… உனக்குத் தான் நஷ்டம். நீயே யோசிச்சுக்க. என் யோசனை உனக்கெதுக்கு?” என அவள் பிகு செய்தாள்.

“என்ன ஓவி. நீ பில்டப் தரதை பார்த்தா ஏதோ உன் ஐடியா தேறும் போலவே… சொல்லு சொல்லு…” என ஆர்வமாக அவன் கேட்டதும்,

மேற்கொண்டு பிகு செய்யாமல், ஓவியா தன் திட்டத்தை அவனுக்குச் சொன்னாள். அதன்படி ஹாஸ்ப்பிட்டலில் கிடைத்த மோகனின் விவரங்கள் மூலம் அவனது ஆதார் எண்ணை கண்டுபிடித்து, அந்த எண்ணை உபயோகித்து அவன் எங்கு கொரானா தடுப்பூசி போட்டிருக்கிறான் எனக் கண்டு பிடிக்க வேண்டும் என விளக்கினாள்.

“ஹே சூப்பர் ஓவி…” என பிரசாந்த் ஆர்ப்பரித்தான். “ஆனா… அந்த மோகன் வேக்ஷின் போட்டிருப்பானா?”

“பிரசாந்த்து… இது கொரானாடா… இதுக்கு தப்பிக்க எல்லா நாடும் போராடிட்டு இருக்கு. இவன் ஒரு ஜுஜுபி… இவன் போராட மாட்டானா?” என ஓவியா சொல்ல,

“ஹாஹா… குட் பாயிண்ட்… நான் இந்த ஏங்கிள்ல விசாரிக்கிறேன். கிடைச்சா லாபம் தானே… பரவாயில்லை உனக்கும் மண்டையில கொஞ்சம் மசாலா இருக்கு…”

“பின்னே… உன்கூட சேர்ந்து வேலை பார்த்தும் எனக்கு மண்டையில மசாலா இருந்தா அது அதிசயம் தான…” என அவனையே திருப்பி வாரிவிட்டு சிரித்தாள் ஓவியா.

“ஒத்த ஐடியாவை தந்ததுக்கு நீ இத்தனை பில்டப் தரக்கூடாது”

“ஏதோ பாவமேன்னு உதவி பண்ணா… நீ மட்டும் என்னையே கலாய்க்கிற…”

“ஹிஹி நமக்குள்ள என்ன ஓவி…”

“அப்படி வா வழிக்கு. சரி நான் உனக்கு உதவி செஞ்சேனே எனக்கு ஒரு நாள் லன்ச் வாங்கி தந்திடு…”

“ஹோட்டல் எல்லாம் எதுக்கு ஓவி. ஹோட்டல் சாப்பாடு உடம்புக்கு ரொம்ப கெடுதல் தெரியுமா… எங்க வீட்டுக்கு வா நானே உனக்கு என் கையால விதவிதமா சமைச்சு தரேன்…”

“என்னது உன் சமையலா? ஆளை விடு! நான் எங்க வீட்டுக்கு ஒரே ஒரு ரெண்டாவது புள்ளை…” என அவள் அலறிய விதத்தில் இருவருக்குமே சிரிப்பு பொங்கியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

எனக்கொரு வரம் கொடு 3 – சுகமதிஎனக்கொரு வரம் கொடு 3 – சுகமதி

எளிதாகத் தீர்ந்திருந்தது. அதில் மனதினோரம் பெரும் மகிழ்ச்சி அவனுக்கு!   அவனது பார்வையை உணர்ந்தாளா அல்லது எண்ணப்போக்கை உணர்ந்தாளா தெரியவில்லை. “இப்ப உனக்கு சந்தோஷமா இருக்கணுமே? உன் பிரச்சினை எல்லாம் ஒன்னும் இல்லாம ஆயிடுச்சு” என்று சௌதா கேட்ட தொனியே சரியில்லாமல்

எனக்கொரு வரம் கொடு 24(நிறைவுப் பகுதி)எனக்கொரு வரம் கொடு 24(நிறைவுப் பகுதி)

எனக்கொரு வரம் கொடு – 24 கற்பகத்திற்கு சௌதாமினி செய்து வந்த காரியத்தில் துளியும் உடன்பாடில்லை. அவள் பாட்டிற்குக் கணவனோடு சண்டை போட்டுக்கொண்டு பிறந்தகம் வந்தால், அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? அந்தளவு முதிர்ச்சியற்றவளா மகள்? என வேதனையாக இருந்தது.  

எனக்கொரு வரம் கொடு 4 – சுகமதிஎனக்கொரு வரம் கொடு 4 – சுகமதி

எனக்கொரு வரம் கொடு – 4   சௌதாமினி தோழிகளோடு வெளியில் வந்திருந்தாள். அனைவரும் காலையில் புதிதாக வந்திருந்த திரைப்படம் ஒன்றைப் பார்த்துவிட்டு, மதிய உணவை ஹோட்டலில் முடித்துக்கொண்டு அருகிலிருந்த பார்க்கிற்கு வந்திருந்தார்கள்.   பெரும்பாலும் திருமணம் ஆனவர்களே! மீதம் இருப்பவர்களும்