எனக்கொரு வரம் கொடு 10 – சுகமதி

எனக்கொரு வரம் கொடு – 10

சர்வாவின் எண்ணம் என்னவாகவிருக்கும் என்பதை உணவருந்த வரும்போது சித்தியின் பேச்சு சௌதாமினிக்கு தெரிவித்தது.

“சர்வா எதுவும் சொல்லமையே கிளம்பிட்டானே மா… இங்கே சாப்பிட கூட இல்லை…” சித்தியின் கவலை அவருக்கு. மகளை அளவிடுவது போலப் பார்த்துக் கொண்டே தான் இதெல்லாம் சொன்னார், ஆனால் அவள் முகத்தில் உணர்வுகளைக் காட்டினாள் தானே!

எதுவும் விளங்காமல், “என்னாச்சு மா?” எனக் கொஞ்சம் கவலையுடனேயே மகளிடம் கேட்டார்.

சௌதா நிமிர்ந்தும் பாராமல், “எதுவும் இல்லை சித்தி. நீங்க சாப்பிடுங்க” எனப் பட்டும் படாமல் சொன்னாள்.

இந்த பதிலை என்னவென்று எடுத்துக்கொள்வது எனப் புரியாமல், “வீட்டுக்கு வந்தவங்களை ஒருவார்த்தை வான்னு கூட நீ கூப்பிடலையேமா?” எனக் குற்றம்சாட்ட முடியாமல் முகம் வாடிக் கேட்டவரைப் பார்த்ததும் அவளுக்குச் சங்கடமாக இருந்தது. கூடவே மெல்லிய கோபமும்!

அவர்கள் வந்த விவரம் எனக்குத் தெரியாதிருக்கும் என்று இந்த சித்திக்கு எண்ணமா? என கடுத்தாலும், பாவம் எனக்கு விவரம் தெரியும் என்று இவர்களுக்கு எப்படி தெரியும்? ஒட்டுக் கேட்டு வந்தது நான் தானே என உடனே தணிந்தாள். கூடவே, வீட்டிற்கு வந்தவர்களை வரவேற்று ஒரு வார்த்தை பேசியிருக்கலாம் என்பதும் உறுத்த, “இல்லை சித்தி… நான் இனி சரியா நடந்துக்கிறேன். தப்புதான்… சாரி” என்றாள் தணிந்த குரலில்.

விருந்தோம்பலில் குறை வைத்தது அவருக்குப் பிடிக்கவே இல்லை போலும். கொஞ்சம் சஞ்சலமும் மகள் வாழப்போகும் வீடல்லவா!

“கவனமா இருக்கணும் சௌதா. இன்னும் நீ சின்ன பொண்ணு இல்லை…” எனக் கற்பகம் சொல்ல மெளனமாக தலையசைத்துக் கொண்டவள், உணவோடு அழுகையையும் விழுங்கிக் கொண்டிருந்தாள் சின்ன பொண்ணாகவே இருந்திருக்கலாம் என்ற எண்ணத்தில்! கூடவே சித்தி இப்பொழுது இதைக் குறிப்பிட்டுச் சொல்வது தனக்குத் திருமண வயது வந்துவிட்டதை மீண்டுமொருமுறை விளக்கத் தானே எனப் புரிந்து சோர்ந்து போனாள்.

இப்பொழுது திருமண பேச்சையும் வேறு எடுத்து விடுவார்களே என சௌதாமினி தவிப்பாக நினைத்தாள். தடுக்கவோ மறுக்கவோ முடியாத இக்கட்டான நிலையில் தான் இருப்பது அவளுக்குத் தெளிவாகப் புரிந்தது.

அவள் எதிர்பார்த்த அம்பு அவளைத் தாக்கத் தொடங்கியது. கற்பகம் வெகுவாக தயங்கி திருமண விஷயத்தைச் சொல்லி, “உன்னை வற்புறுத்தறோம்ன்னு நினைக்காத மா. எங்க எல்லாருக்கும் சர்வாவை பிடிச்சிருக்கு. உனக்கும் பிடிச்சிருந்தா ரொம்ப சந்தோஷப்படுவோம். இந்த கல்யாணம் நடந்தாலும்…” என்றார் தடுமாற்றமான குரலில்.

என்னுடைய பல மறுப்புகள், இவருக்கு மறுப்பை எதிர்கொள்ளும் வலுவைக் குறைத்து விட்டதா? என்னிடம் ஏன் இப்படி யாசிப்பது போல கேட்கிறார். இந்த குரலுக்கு என்னால் மறுக்கவும் முடியவில்லை; இந்த திருமணத்தை ஏற்கும் வலுவும் இல்லையே? கழிவிரக்கத்தில் கண்கள் உடைப்பெடுக்க தயாராக, அதற்கு அணையிடுவதற்குள் திண்டாடிப் போனாள்.

அவள் மௌனம் பார்த்து, “நீ… நீ… என்ன சொல்லற சௌதா? கொஞ்சம் யோசிச்சு நல்ல முடிவா…” என்றவர் கலக்கம் சுமந்த முகத்துடன் இழுக்க, பார்க்கலாம் சித்தி எனச் சொல்ல நினைத்தவள் அதைச் சொல்ல முடியாமல் திணறினாள்.

“என்னம்மா?” என இன்னமும் பரிவாகக் கற்பகம் கேட்க, “எதுவும் சொல்லாம போயிட்டாங்கன்னு சொன்னீங்களே சித்தி” என வேறு பேச்சுக்குத் தாவிச் சமாளித்தாள்.

ஆனால், அதில் சித்தியினுள் இருந்த கவலைகள் மடை திறந்த வெள்ளம் போலச் சிதறியது. கூடவே, “என்னன்னு புரியலை மா… எப்ப சொல்லுவாங்களோ?” என அவளிடமே பரிதாபமாக கேட்டாள்.

தானாகச் சென்று ஒப்புக் கொடுக்காமல் திருமண விஷயம் அடுத்த அடி நகராது என்று உணர்ந்தவளுக்கு உள்ளம் வறண்டது. இவனாக வந்து வீட்டில் திருமணம் என்ற பேச்சை எடுத்துவிட்டு எதற்குச் சென்றான்? இனி சித்தியை எப்படிச் சமாளிப்பது? சரி துணிந்து முடிவெடுத்தவனுக்கு என்னைப்பற்றி என்ன திடீர் அக்கறை வந்தது? அதுதான் அவன் விருப்பமே பிரதானம் போல செயல்பட்டு விட்டானே! மேற்கொண்டும் அப்படியே தொடர்ந்திருக்க வேண்டியது தானே… இப்பொழுது இந்த இழுபறி எதற்காம்?

சித்தியின் கலக்கம் புரிந்து, “சீக்கிரம் பேசுவாங்க சித்தி. அவசரப்படாம இருங்க. அவங்கதானே வந்து பேசினாங்க. மேற்கொண்டு உறுதியும் அவங்களே தருவாங்க” என அப்போதைக்கு நிலைமையைச் சமாளித்தாள்.

பொலிவிழந்த முகம் அப்படியே இருக்க, மகளிடம் ஒப்புக்கென்று தலையசைத்து விட்டு அகன்றிருந்தாள் பெரியவள்.

சர்வாவிடம் தான் பேச வேண்டியதிருக்கும் என்ற நிர்ப்பந்தம் அவளது மனதின் அமைதியை குலைத்தது. சரி பிறகு பேசுவோம்; அதற்குள் நாம் இதுதான் வாழ்க்கை என நம்மை தயார்ப் படுத்திக் கொள்வோம் எனப் பெருமூச்சுடன் எண்ணிக் கொண்டவள், உண்ட பாத்திரங்கள் அனைத்தையும் ஒதுங்க வைத்துவிட்டு உறங்கச் சென்றாள்.

சர்வாவிற்கு ஒருவகை ஆத்திரம்! இவள் கதறிக் கதறி அழும் அளவு என்னைத் திருமணம் செய்து கொள்வது அத்தனை சிரமமான விஷயமா என உள்ளுக்குள் கனன்று கொண்டிருந்தான். தார்க்குச்சி போட்டு விரட்டியாகி விட்டது, இனி அவள் ஓடித்தானே ஆக வேண்டும் என ஏளனமாக நினைத்துக் கொண்டான்.

அவளை அவள் போக்கில் விடுவதற்கு சர்வேஸ்வரன் தயாராக மட்டும் இருக்கவில்லை! அவள் வாழ்வின் அடுத்த கட்டத்திற்குச் சென்றே ஆக வேண்டும் அதுவும் தன்னுடன் என்ற முடிவில் எஃகின் உறுதியோடு இருந்தான்.

மறுநாள் அவன் பல நாட்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த விவரங்கள் வந்து சேர்ந்திருந்தது.

ஓவியா கடந்த நான்கு ஆண்டுகளாகக் காணாமல் போனவர்களின் விவரங்களைச் சேகரித்துக் கொண்டு வந்து சர்வாவிடம் தந்திருந்தாள். அவளின் பணி மிகத்தெளிவாக இருந்தது. அதில் அவளின் மெனக்கெடல் நன்கு தெரிய, இன்னும் சற்று முன்னேயே கண்டுபிடித்து கொண்டு வந்திருக்கலாம் என்று எண்ணியபோதும், அதை சர்வா பெரிதாக வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

“சார் இவங்க எல்லாம் கடந்த நாலு வருஷமா காணாம போனவங்க லிஸ்ட்… இது ஆண்கள் அதுவும் நாம தேடற நாற்பத்தைந்து வயசை ஒட்டி இருக்கிறவங்க…”

“ஹ்ம்ம்…” என்றான் ஆமோதிப்பாய்! “இதுல யாரெல்லாம் அந்த ஹாஸ்ப்பிட்டலோட நேரடி, மறைமுக சம்பந்த பட்டிருக்காங்க” என சர்வா விசாரிக்க,

“இல்லை சார் காணாம இதுல யாரும் அந்த மருத்துவமனைக்கு எந்த விதத்துலேயும் தொடர்பில்லை சார்…” எனத் தயக்கத்தோடு ஓவியா கூறினாள்.

“யூ மீன்?”

“அந்த ஹாஸ்ப்பிட்டல்ல நேரடியா வொர்க் பண்ணறவங்க, காண்ட்ராக்ட் பேஸ்ல வொர்க் பண்ணறவங்க, சப்ளை பண்ண வரவங்க இந்த மாதிரி யாருமே இதுல இல்லை சார்…” எனத் தெளிவு படுத்த,

“ஹாஸ்ப்பிட்டல் பேரைச் சொல்லி விசாரிச்சீங்களா?” எனக் கூர்மையாகக் கேட்டான் சர்வேஸ்வரன்.

“அச்சோ! இல்லை சார். யாரு? என்ன பண்ணிட்டு இருந்தாங்க? எப்ப காணாம போனாங்க? எங்க வேலை செஞ்சிட்டு இருந்தாங்க? இதுமாதிரி விவரங்கள் தான் சேகரிச்சேன் சார்” என வேகமாக மறுக்க,

தங்களிடம் இறுதிப்பட்டியலில் இருக்கும் பதிமூன்று நபர்களின் விவரங்களையும் அவனிடம் தந்தாள்.

இழுத்து பிடித்த பொறுமையுடன், “அந்த ஹாஸ்ப்பிட்டலுக்கு நேரடி தொடர்பு இருக்கான்னு மட்டும் தான் நீங்க இன்வெஸ்டிகேட் பண்ணி இருக்கீங்க ஓவியா. இறந்தவர் அந்த ஹாஸ்ப்பிட்டல்ல ட்ரீட்மெண்ட்காக வந்திருக்கலாம். இல்லை அங்கே அட்மிட் ஆன யாரையும் பார்க்க வந்திருக்கலாம். யாருக்காவது ரத்தம் தேவைன்னு கொடுக்க வந்திருக்கலாம். ஏன் ரோட்டுல அடிப்பட்ட யாருக்கும் உதவி செய்யக் கூட வந்திருக்கலாம்… நீங்க இந்த மாதிரி கோணத்துல விசாரிச்சா மட்டும் தான், அந்த ஹாஸ்ப்பிட்டலுக்கும் இவங்களுக்கும் இருக்கும் சம்பந்தம் கிடைக்கும்” என்று விளக்கியவன்,

கூடவே, “ஒருவேளை அந்த ஆளு தஞ்சாவூர்காரரா இல்லாம கூட இருக்கலாம். ஆனால் அது அடுத்த ஸ்டெப். முதல்ல இந்த ஸ்டெப்பை கிளியரா முடிங்க… அட்லீஸ்ட் இதையாவது சீக்கிரமா முடிங்க. இவ்வளவு மந்தமா இன்வெஸ்டிகேஷன் போனா எப்ப கேஸை முடிக்கிறது?” என்று அவளது விசாரணையில் இருந்த ஓட்டைகளைக் குறிப்பிட்டுச் சொல்லியதோடு தன் கண்டிப்பையும் வெளிப்படுத்த,

லேசாக வியர்த்தவள், “சாரி சார்… ஸுயூர் சார்” என்று சல்யூட்டுடன் விடைபெற்றாள்.

ஓவியாவை அனுப்பி வைத்தவன், அவள் தந்துவிட்டுச் சென்ற விவரங்களைப் பார்வையிட்டான். அவனது பார்வை ஓரிடத்தில் நிலைபெற்று நின்றது. புருவங்கள் யோசனையுடன் சுருங்கியது.

அன்றே பூபாலனிடமிருந்து சர்வாவுக்கு அழைப்பும் வந்திருந்தது திருமணம் குறித்த பேச்சுவார்த்தைக்காக. சர்வா திருமண பேச்சுவார்த்தைகளோடு தனக்குத் தேவைப்பட்ட சில விவரங்களையும் அவனிடம் வாங்கியிருந்தான். அது அவனுக்கு நிறைய நிறைய யோசனைகளைத் தந்தது.

அடுத்த ஓரிரு நாட்களில் கற்பகம் மீண்டும் சௌதாவை அணுகினார். அவரின் தயக்கத்தை பார்த்து, “என்னன்னு சொல்லுங்க சித்தி” எனத் தூண்டினாள் இளையவள்.

“நான் பூபாலன் கிட்டச் சொல்லியிருந்தேன் மா… அவனுக்கும் ரொம்ப சந்தோசம்…” அப்பொழுதும் முழுதாக சொல்லாமல் நிறுத்தியவரை யோசனையாகப் பார்த்தாள்.

“அது பூபாலன் கிட்டச் சொல்லி சர்வா என்ன நினைக்கிறான்னு கேட்கச் சொன்னேன்” என தயக்கமாக இழுக்கவும், அச்சோ! இந்த சித்தி ஏன் இத்தனை அவசரப்பட வேண்டும் என அவளுக்குத் தவிப்பாக இருந்தது.

அவளின் அமைதியை தொடர்ந்து, “சர்வா ஏதோ முக்கியமான கேஸ் பார்த்துட்டு இருக்கேன். அது முடிஞ்சப்பறம் பேசலாம்ன்னு பூபாலன் கிட்ட சொல்லிட்டானாம்மா. உன்கிட்ட கூட அதைத்தான் சொன்னானாமே?” என விசாரிக்க,

இப்படி சமாளித்து வைத்திருக்கிறானா என விழித்தவள், ஒப்புக்குத் தலையசைத்து மட்டும் வைத்தாள். ஹப்பா இந்த கேஸ் இப்போதைக்கு முடியக் கூடாது என அவசர வேண்டுதலும் அவளிடம்!

அது எந்த கேஸ் எனத் தெரியவரும் போது இவள் அப்பொழுதும் இப்படி நினைப்பாளா என்பது சந்தேகமே! முடியக் கூடாது என்ற நினைப்பில் மாற்றம் இருக்காது தான்! ஆனால், இப்போதைக்கு என்பதை மட்டும் எப்போதைக்குமே முடியக் கூடாது என்ற வண்ணம் திருத்திக் கொள்வாள்.

ஆனால், சித்தியோ கவலையான குரலில், “போலீஸ்காரங்களுக்கு கேஸ் வந்திட்டே தான் இருக்கும். நீ சர்வா கிட்ட பேசேன் மா?” எனக் கெஞ்சலாகக் கேட்கவும், அவளுக்கு சிரிப்பு வந்துவிட்டது. இந்த சித்தி நான் சாமியாரா போயிடுவேன்னு பயந்துட்டு இருப்பாங்க போல என நினைத்தவளுக்கு அவரை நினைத்து பாவமாகப் போய்விட்டது.

 

“சரி சித்தி…” என அவள் சொல்லவும் சித்தி பரவசத்தில் அவளின் நெற்றியில் முத்தமிட்டு விட்டுச் சென்றார்.

நெற்றியின் ஈரத்தை விரல்களால் அளந்தவளுக்குக் கண்கள் கலங்கிவிட்டது. சித்தி இந்தளவு நெகிழ்பவர் இல்லையே! சிறு வயதில் கூட அவளுக்குக் கிடைத்திடாத வரம் இது! இப்பொழுது கிடைக்கவும் என்னவோ போல ஆகிவிட்டது.

இனியும் தாமதிக்க முடியாது என்பது புரிய, வேறு வழியின்றி அவனைத் தேடிச் சென்றாள்.

“உங்களை மீட் பண்ணனும்” என்ற மெசேஜை தட்டி விட்ட பிறகு கைப்பேசியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

வெகுநேரம் எந்த பதிலும் இல்லை. இரவு பதினோரு மணிக்கு இடமும் நேரமும் அவனது கைப்பேசி எண்ணிலிருந்து வந்து சேர்ந்திருந்தது.

பெரிய இவன் என எரிச்சல் வந்தது. ஆனால், சித்தியின் முகம் நினைவில் வந்து உறுத்த மறுநாள் அவன் குறிப்பிட்டுச் சொன்ன நேரத்திற்கு அவனைக் காணச் சென்றாள்.

புன்னகைக்க கூட மறந்தவன் போல அவன் அமர்ந்திருந்த இறுக்கமான தோற்றம் அவளுக்கு என்னவோ போல இருந்தது. அவளைக் கொஞ்சம் கூட அவன் மதிப்பதாக இல்லை.

“சித்தி… மேற்கொண்டு நீங்க எதுவும் சொல்லலை, பேசலைன்னு கவலை படறாங்க” என்றாள் நேரடியாக.

ஆர்டர் செய்த உணவை ஆராய்பவன் போல உண்டு கொண்டிருந்தவன், இவள் சொன்னதைக் கேட்டுக்கொண்டது போலக் கூட காட்டிக் கொள்ளவில்லை.

“உங்ககிட்ட தான் பேசிட்டு இருக்கேன்…” என அவள் மீண்டும் அழுத்திச் சொல்லவும், “முதல்ல சாப்பிடு அப்பறம் பேசலாம்” என்றான் இறுக்கமாக.

அந்த குரலுக்கு அவளால் மறுக்க முடியவில்லை. அமைதியா சாப்பிடறதுக்கு எதுக்கு ரெண்டு பேரும் ஒன்னா சாப்பிடணும் என உள்ளே கடுத்தாலும் வெளியே எதையும் காட்டிக் கொள்ளாமல் அமைதியாக உண்டாள். உண்டு முடித்ததும், “நீங்க ஏன் எதுவும் சொல்லலையாம்?” என்றாள் குறையாக.

அவன் பதில் சொல்லாமல் தீர்க்கமாக அவளைப் பார்த்தான். தான் அன்று பேசியதற்கும் அழுததற்கும் விளக்கம் சொல்ல வேண்டுமோ? முடியாது! முடியவே முடியாது! என எண்ணியவள், கூடவே, பின்ன எனக்கு பிடிக்காட்டி பிடிக்கலைன்னு தான் சொல்லுவேன் என முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டிருந்தாள். அதையும் அவன் இம்மி கூட மதிப்பதாக இல்லை எனவும் எரிச்சல் மிகுந்தது.

இவன் என்ன தான் நினைச்சுட்டு இருக்கான்? இவன் தானே வீட்டுல கல்யாண பேச்சை எடுத்தான் என்ற கடுப்போடு, “அப்ப நீங்க வீட்டுல வந்து பேசியே இருக்க கூடாது. என்னை நல்லா கார்னர் பண்ணிட்டீங்க… இப்ப இப்படி என்னை வரவெச்சு எனக்கென்னன்னு நீங்க அமைதியா இருந்தா என்ன அர்த்தம்” என்று எரிச்சல் பட்டாள்.

ஆனால், அவனுக்குத் திருமண விஷயத்தைப் பேசும் எண்ணம் எல்லாம் இல்லை போலும்! “உனக்கு என் மேல கோபமா? பயமா?” எனத் தீர்க்கமாகக் கேட்டான்.

அவள் புரியாமல் விழிக்க, “எனக்குத் தெரியும் சின்ன வயசுல உன்னை ரொம்ப சீண்டிட்டேன். நீயும் என்னைத் தவிர்க்க ஆரம்பிச்சுட்ட. ஆனா ஒரு கட்டத்துல உன்மேல எனக்கு ஆர்வம் வர தொடங்குச்சு. அது உனக்குமே தெளிவா புரிஞ்சுச்சு. புரிஞ்சு பிறகும் என்னைப் பார்த்தா இன்னும் விலகத் தொடங்கின… நானும் உன் வயசு கம்மியா இருந்ததால அதை பெருசா எடுத்துக்கலை… ஆனா இப்ப நீ என்கிட்ட காட்டற ஒதுக்கம்? இந்த கல்யாணம் நடந்திடுமோன்னு பதறும் பதட்டம்? சொல்லு எதுக்கு இவ்வளவு ஒதுங்கற?” அவளது நாடியைப் பிடித்து அவன் கேட்ட கேள்வியில் அவள் திணறி போனாள்.

அவள் எச்சில் விழுங்கி தடுமாறியபடி, “எனக்கென்ன பயம்? சும்மா உளறாதீங்க…” எனத் திடமாகச் சொல்ல நினைத்தாலும் திணறலாகத் தான் அவளால் கூற முடிந்தது.

“என்ன பயம்ன்னு நானே சொல்லட்டுமா?”என்றான் அழுத்தம் திருத்தமாக. நிச்சயம் விசாரிக்கும் தொனி தான்!

அவள் அச்சத்தோடு ஏறிட்டுப் பார்க்கவும், “உங்க சித்தப்பா சிகிச்சை பத்தி பேசிடுவேனோன்னு உனக்குப் பயம்? அதுக்காக தான் வசந்தனைப் பத்தி சொல்ல நினைக்கும்போதே என்னை நீ நெருங்க விடலை. சொல்லு என்கிட்ட எதை மறைக்கிற?” என்றான் அவளைத் துளைத்து விடும் பார்வையைப் பார்த்தபடி.

மீண்டும் எச்சில் விழுங்கத் தொடங்கியவளுக்குச் சமாளித்துப் பேசக் கூட திராணி இல்லை. வெகு சிரமத்தின் பிறகு, “எங்க சித்தப்பா இப்படியே இருந்தாலே எங்களுக்கு போதும். சிகிச்சைங்கிற பேருல அவரை கஷ்டப்படுத்த நான் விரும்பலை. சும்மா பார்க்கிற எல்லாரும் ஆளுக்கு ஒரு சிகிச்சையைப் பரிந்துரை பண்ணிட்டே இருக்காதீங்க…” என அலட்சியமாக அந்த விஷயத்தை ஒதுக்க நினைத்துப் பேசியவள் போலப் பேசியவளை அவனது கூர் விழிகள் அலைக்கழித்தது.

“ஏன் மாமா குணமாக வேணாம்ன்னு இவ்வளவு தீர்மானமா இருக்க?” அவளை அளந்தபடியே கேட்க, விழிகளில் நீர் திரையிட, “இந்த பேச்சை எடுக்க வேண்டாமே?” என்றாள் கெஞ்சுதலான குரலில்.

“எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லு…” அவள் கை பிடித்து கண் பார்த்து அவன் கேட்டபோது, “எதுவும் இருந்தா தானேங்க சொல்ல… அப்படி எதுவுமே இல்லை” என சாதாரணமாக பொய்யுரைத்தவள், “சித்திகிட்ட என்ன சொல்லட்டும்?” எனப் பேச்சை மாற்றினாள்.

ஒரு பெருமூச்சுடன், “இப்பவும் என்னை கல்யாணம் செய்யணுமான்னு உள்ளுக்குள்ளே நீ பயப்படறது எனக்கு புரியுது. ஆனால் எதுவா இருந்தாலும் சமாளிச்சு தானே ஆகணும். தயாரா இரு. நான் நம்ம வீட்டுல பேசறேன்” என்று அவளது மனப்போக்கைச் சரியாகக் கணித்துப் பேசியவன்,

“உன்னை வீட்டுல டிராப் செய்யணுமா?” எனக் கேட்க, “இல்லை… கார்ல தான் வந்தேன் நானே போயிக்கிறேன்” என்றாள் உள்ளே சென்ற குரலில். அவளின் இதயம் ரயில் எஞ்சின் போல தடதடத்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

எனக்கொரு வரம் கொடு 14 – சுகமதிஎனக்கொரு வரம் கொடு 14 – சுகமதி

எனக்கொரு வரம் கொடு – 14 சர்வேஸ்வரனின் செய்கையில் அரண்டு போன சௌதாமினி வேகமாக கரம் உயர்த்தி அவனை இறுக அணைத்துக் கொண்டாள். அதில் அவன் பிடி தளர, அதே வேகத்தில் அவன் தோளில் அழுந்த புதைந்து கொண்டவள், “இப்படி எல்லாம்

எனக்கொரு வரம் கொடு 2 – சுகமதிஎனக்கொரு வரம் கொடு 2 – சுகமதி

எனக்கொரு வரம் கொடு – 2   சௌதாமினி காலையில் எழுந்து பரபரப்பாகக் கிளம்பிக் கொண்டிருந்தாள். எந்நாளும் இல்லாத திருநாளாக அன்றையதினம், தன் தோற்றத்தில் வெகு அக்கறை எடுத்துக் கிளம்பிக் கொண்டிருந்தாள்.   ஆரஞ்சு வண்ண லெனன் புடவையும், அதை எடுத்துக்காட்டும்

எனக்கொரு வரம் கொடு 5 – சுகமதிஎனக்கொரு வரம் கொடு 5 – சுகமதி

எனக்கொரு வரம் கொடு – 5   அந்த மருத்துவமனை வளாகமே மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது. தடயவியல் நிபுணர்கள் வந்தவர்கள் ஏதேனும் ஆதாரம் கிடைக்கிறதா என்று தங்கள் சோதனையை தொடங்கியிருந்தனர்.   சர்வேஸ்வரனும் ஏதேனும் துப்பு கிடைக்கிறதா என்பதுபோல நோட்டம் விட்டுக்