எனக்கொரு வரம் கொடு – 9
அதிர்ச்சி மொத்தமும் சௌதாமினிக்கு மட்டும் தான். செல்லத்துரையோ சிறு பிள்ளையின் துள்ளலோடு இருந்தார். பட்டவர்த்தனமாகத் தெரியாவிட்டாலும் சர்வேஸ்வரனின் நிலை கூட அதுவே தான் என்பதை அவனின் பூரித்த முகம் கட்டியம் கூறியது.
வெறும் பூரிப்பு மட்டும் தானா? இல்லை நினைத்ததைச் சாதிக்கப் போகிற இறுமாப்புமா? என்னவோ அவனைப் பார்த்தாலே அவளுக்கு எரிச்சல் வந்தது. இவன் எதற்குத் திருமணத்தைப் பற்றி பேசுகிறான்? என அவன்மீது சினந்தாள். ஒருமாதிரி கையாலாகாத கோபம் அவளுக்கு மிகுந்த வலியையும் வேதனையையும் தந்தது.
செல்லத்துரையோ துள்ளல் நடையோடு பின்புற வாசலின் வழியே வீட்டினுள் செல்ல எத்தனிக்க, “மாமா… மாமா… உங்க கை, கால் எல்லாம் சேறா இருக்கு பாருங்க. அதை சுத்தம் பண்ணிட்டு போலாம் இருங்க” என்று அவரை நிறுத்தினான் சர்வேஸ்வரன்.
சௌதாமினி அதன்பிறகே அங்கே நின்று பராக்கு பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்ற சூழலை கிரகித்தவள், வேகமாக முன்வாசல் வழியாகவே வீட்டிற்குள் நுழைந்து கொண்டாள். உள்ளே இருந்த அத்தையைக் கண்டு அவளால் சம்பிரதாயமாகக்கூட புன்னகைக்கவோ, வரவேற்கவோ முடியவில்லை.
ஒருமாதிரி அவஸ்தையாக நின்றவளைக் கண்டு ரேவதிக்கும் சங்கடமாகவேதான் இருந்தது. அந்த பெண் வீடு தேடி வந்து கேட்டதென்ன? நாம் செய்திருப்பது என்ன என்ற குற்றவுணர்வு அவரை நொடியில் ஆட்கொண்டது.
கற்பகம் தான், “என்ன சௌதாம்மா இவ்வளவு நேரம் வெளியே என்ன செஞ்ச?” என்றார் பூரித்த முகமாக. அவரை கூர்ந்து பார்த்தவளுக்கு விளங்கிவிட்டது சித்திக்கும் இவர்கள் வந்த காரணம் புரிந்து விட்டதென்று!
‘இப்போதைக்கு திருமணம் வேண்டாம் என்னும் நிலைப்பாட்டில் நான் இருப்பது இவர்களுக்கு தெரியாதா என்ன?’ என்று மனம் சோர்ந்து போனாள். தன்னையறியாமல், தன் கட்டுப்பாட்டை மீறிக் கலங்கும் கண்களை அவர்கள் அறியாமல் சிரமப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டிருந்தாள்.
கற்பகம் பதிலுக்காக காத்திருப்பது புரிந்து, “அது… போன் சித்தி…” என்று தடுமாற்றமாகக் கூறியவள், சொன்ன கையோடு அறையினுள் நுழைந்து கொண்டு பிறர் கவனம் ஈர்க்காத வண்ணம் கதவையும் சாத்திக் கொண்டாள். செல்பவளைப் பார்த்த சிற்றன்னைக்குப் பெருமூச்சு வந்தது. ‘இப்படித்தான் அண்ணி…’ என ரேவதியிடமும் ஜாடை காட்டி வருந்தினார்.
அவருக்கு என்ன ஆறுதல் சொல்வதென்றே ரேவதிக்குத் தெரியவில்லை. அவருமே குற்ற குறுகுறுப்பில் இருந்ததால், சற்று தயக்கத்துடனும் வருத்தத்துடனும் தான் இருந்தார். ஆனால், அவரின் உள்மனமும் இந்த திருமணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று ஆசையும், ஆவலுமாக எதிர்பார்த்தது.
வசந்தனுக்கு அங்கு நடப்பது எதுவும் விளங்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் அவன் கவனிக்கவேயில்லை எனலாம். அத்தையை நலம் விசாரித்து விட்டு அவன் பாட்டிற்கு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஐக்கியமாகி விட்டான். போன் நோண்டுவது அக்காவிற்குப் பிடிக்காது என்பதால் அதை இயன்ற மட்டும் உபயோகிக்காமல் இருந்தான் சமர்த்து பிள்ளையாக!
அறையினுள் நுழைந்த சௌதா நம்மால் இதைத் தடுக்கவோ, மறுக்கவோ முடியுமா? எனக் கலக்கமாக நினைத்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. திருமணத்திற்கே அவள் தயாராகவில்லை எனும்போது, சர்வாவுடனான திருமணத்தை அவளால் எப்படி ஒப்புக்கொள்ள முடியும் என விளங்கவே இல்லை.
ஆனால், சித்தப்பாவின் துள்ளலும், சித்தியின் பூரித்த முகமும் அவளை இக்கட்டில் நிறுத்துவதைப் போல உணர்ந்தாள். அவர்களுக்காகத் திருமணத்தை ஒப்புக்கொள்வேனோ என்று எண்ணும்போதே உள்ளுக்குள் குளிர் பரவியதை ஒருவித திடுக்கிடலுடன் கவனித்தாள்.
திருமணம் என்றால் ஆசையும் சந்தோஷமும் பூரிப்பும் இருந்தால் சரி! இப்படி அச்சமும் கலக்கமும் செய்வதறியாத திகைப்பும் என்றால் எப்படிச் சரி வரும்? குறைந்தபட்சம் நிம்மதியாவது கிடைக்குமா என்று கலங்கினாள்.
எப்படி இந்த உறவு இந்த திசையில் திரும்பியது? எப்பொழுதும்… ஏறத்தாழ சின்னஞ் சிறுவயதிலிருந்து என்னைச் சீண்டிக்கொண்டு தானே இருப்பான்? இந்த மாற்றம் ஏன் நிகழ்ந்தது? என்ன யோசித்தும் அவளுக்கு இது மட்டும் விளங்கவே இல்லை.
அதோடு மாற்றம் அவனுக்கு வேண்டுமானால் தோன்றியிருக்கலாம்! என்வரையில் இது எத்தனை சிரமமான விஷயம்? இது அவனுக்குப் புரியவும் செய்யும் தானே! இருந்தும் ஏன் இப்படி ஒரு இக்கட்டில் நிறுத்தி வைத்து வேடிக்கை பார்க்கிறான். சரியான ராட்சசன் என அவனை மனதார கரித்துக் கொட்டினாள்.
சித்தப்பா வீட்டினுள்ளே நுழையும் அரவம், அவளது சிந்தனைகளைத் தற்காலிகமாகத் தடை செய்தது. பார்வையை அரைகுறையாகத் திறந்திருந்த ஜன்னலின் வழியே வரவேற்பறையில் பதித்தாள். முகத்தில் கலக்கம் குடி கொண்டிருந்த அவளது தோற்றம் பரிதாபகரமாக இருந்தது. அதைக் கவனிப்பவர் தான் யாருமில்லை! அங்கிருந்த அத்தனை பேருக்கும் உவகை தரும் விஷயம் அவளுக்கு மட்டும் வருத்தத்தை அல்லவா தருகிறது?
அவளது மனநிலைக்கு நேரெதிராக ஆனந்த துள்ளலோடு செல்லத்துரை வீட்டினுள்ளே நுழைந்தார். கற்பகத்திடம் ஆசையாக, “என்னவோ சௌதா வாழ்க்கையை நினைச்சு கவலை பட்டுட்டு இருந்தியே. அதுக்கெல்லாம் இனி அவசியமே இல்லை… நம்ம சௌதாவை சர்வாவே கூட்டிட்டு போறானாம். ரொம்ப நல்லா பார்த்துப்பேன்னு என்கிட்ட சொல்லியிருக்கான். எனக்கும் தெரியும்… அவன் நல்லா பார்த்துப்பான்… அவனே கூட்டிட்டு போகட்டும் சரியா?” என்று கேட்க, கற்பகம் ஆனந்தமாகத் தலையசைத்தார்.
வசந்தனுக்கு இப்பொழுது தான் அத்தை பல ஆண்டுகள் கழித்து வீட்டிற்கு வந்த ரகசியம் விளங்கியது. விளங்கியவனின் முகம் விளக்குப் போடாமலேயே பிரகாசமாக ஜொலித்தது. அதன்பிறகு ஆவலே வடிவாய் அவர்களின் சம்பாஷணைகளைக் கேட்கத் தொடங்கினான்.
செல்லத்துரை மனைவியிடம் மேலும் தொடர்ந்து, “ஆமா, நீ சொன்ன மாதிரி சௌதா இங்கிருந்து போயிட்டாலும்… பூபாலனுக்கும், வசந்தனுக்கும் ஆளுக்கு ஒரு பொண்ணை கல்யாணம் செஞ்சு நம்ம கூட்டிட்டு வருவோம் தானே? என்னை ஏமாத்த எதுவும் நீ பொய் சொல்லலையே” வெகு தீவிரமாக விசாரித்தார்.
“கண்டிப்பாங்க… அவங்களுக்கும் சர்வா வயசு வந்ததும் கண்டிப்பா கல்யாணம் தான்” என்றார் கற்பகமும் புன்னகை முகமாக. சித்தியை இத்தனை புன்னகையோடும் பூரிப்போடும் பார்த்துப் பல வருடங்கள் ஆகிவிட்டதை சௌதா ஓர் இயலாமையுடன் உணர்ந்தாள்.
செல்லத்துரையின் சிறுபிள்ளைத்தனமான கேள்விகளையும், செய்கைகளையும் மிகுந்த பொறுமையோடே அந்த குடும்பத்தினர் கையாள்வார்கள். அது அவர்கள் அனைவரின் வாடிக்கையும்! ரேவதி இதை முதன்முதலில் பார்க்கிறார் என்பதால் கண்கள் கலங்க அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்தார்.
அங்கிருந்த ரேவதியை செல்லத்துரை அப்பொழுது தான் கவனித்தார் போல, “இது யாரு புதுசா வந்திருக்காங்க…” என மிரண்ட பார்வையோடு கேட்டுவிட்டு மனைவியை நெருங்கி நின்று கொண்டார்.
ரேவதிக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. இப்படி ஒரு நிலை தன் தம்பிக்கு வரவேண்டுமா என வெகுவாக கலங்கினார். எத்தனை அருமை, பெருமையாக இருந்தவன் என நினைக்கையிலேயே அவருக்குத் தொண்டை அடைத்தது.
எனக்கு ஒரு பிள்ளை போதும் அக்கா என் பொண்டாட்டி முதல் பிரசவத்துலயே ரொம்ப சிரமப்பட்டுட்டா… இவனையே சீரும், சிறப்புமா வளர்த்திடறேன் பாருங்க என்று அவன் அன்றொரு நாள் சொன்னது இன்னும் பசுமையாக நினைவில் இருந்தது.
மனைவி கற்பகத்தின் மீது கொள்ளை பிரியம் வைத்திருந்தான் என்றால், வசந்தனின் மீது உயிரையே வைத்திருந்தான். எங்க வாழ்க்கையோட வசந்தம் கா இவன். எங்களோட அன்பு, பாசம் எல்லாமே இவனுக்கு மட்டும் தான்னு கடவுள் நினைச்சிருக்காரு என்பான் பெருமையாக. கூடவே ஒற்றை பிள்ளை வைத்திருப்பதால் இருக்கும் சாதகங்களையும் பக்கம் பக்கமாகச் சொல்லுவான்.
அப்பொழுது கேட்கச் சிரிப்பாக இருக்கும். ஆனால், ஆழ்ந்து யோசித்தால் அச்சோ ஒற்றை பிள்ளையாக நின்று விட்டானே என்னும் கலக்கம், அவனைச் சாதகங்களைத் தேடித்தேடிப் பார்க்க வைத்திருக்கும் என்பதையும், அதை அவனுள் பதிய வைப்பதற்காகவே மீண்டும் மீண்டும் பேச வைத்திருக்கும் என்பதையும் புரிந்துகொள்ள முடியும். அவருக்கும் ஒற்றை பிள்ளையோடு வேறு பாக்கியம் இல்லை தானே! ஆக அவரால் தம்பியின் மனநிலையை எளிதாகக் கணிக்க முடிந்தது.
ஒற்றை பிள்ளையே வளம் என்பதை ஆணி அடித்தது போல பதிய வைத்துக் கொண்டு வசந்தனை நல்லபடியாக வளர்த்த தம்பியை எத்தனைமுறை பெருமையாக நினைத்திருக்கிறார்.
அதுபோன்ற சூழலில் செல்லத்துரையின் உடன்பிறந்த அண்ணன் வேலவன் ஒரு விபத்தில் தன் மனைவியோடு மறைந்துவிட, எந்த சங்கடமும் பார்க்காமல் தன் அண்ணன் பிள்ளைகளை தன் பிள்ளைகளாக ஏற்றுக் கொண்டான். அவன் உடனடியாக எந்த தயக்கத்தையும் காட்டாமல் அவ்வாறு செய்ததை சுற்றம் அனைவருமே மிகவும் பெரிதாக நினைத்தனர்.
வசந்தன் மட்டுமே ஒரே பிள்ளை… மொத்த பாசமும் அவனுக்குத் தான்… அது, இதென்று அத்தனை காலமும் வசனம் பேசியவன், அதன்பிறகு மூன்று பிள்ளைகள் மீதுமே பாசத்தைக் கொட்டி அரவணைத்தான். சுற்றம் அனைவருமே அவனது குணத்தைப் பெரிதாக நினைத்தது.
இத்தனை இத்தனை உயரிய குணங்களையும், பண்புகளையும் கொண்ட தன் தம்பிக்கா இப்படி தன்னை மறந்த நிலை! இது மறதி கூட இல்லையே… அதையும் தாண்டி, அனுதினமும் சிறுபிள்ளை போல… கண்கள் உடைப்பெடுத்துக் கொண்டது ரேவதிக்கு. அவசரமாகப் புடவை முந்தானையில் துடைத்துக் கொண்டார்.
அதற்குள்ளாக, “இது உங்க அக்கா தாங்க. பேரு ரேவதி. நம்ம சர்வாவோட அம்மா…” என்ற சிறு அறிமுகத்தைக் கற்பகம் தந்திருந்தார்.
ரேவதியை ஆராய்வது போல பார்த்துவிட்டு, “இவங்களும் சௌதாவை நல்லா பார்த்துப்பாங்க தானே?” என மேடை ரகசியமாக மனைவியிடம் கேட்டார் செல்லத்துரை.
ரேவதி கண்களைத் துடைத்தபடி, “என்ன இருந்தாலும் உன் அளவுக்குப் பார்க்க முடியாது தம்பி. ஏதோ என்னால முடிஞ்ச மாதிரி நல்லா பார்த்துப்பேன் சரியா?” எனக் கேட்க,
“அதுக்கு எதுக்கு அழறீங்க. அழ எல்லாம் கூடாது. எப்பவும் சிரிச்ச முகமா இருங்க. சரியா?” என்றார் செல்லத்துரை செல்ல அதிகாரத்துடன். அந்த பாவனையில் ரேவதி சிரிக்க, “ஹ்ம்ம் இது அழகா இருக்கு…” என்று சர்டிபிகேட் தந்தவர்,
சர்வாவிடம், “உங்க அம்மாவுக்கு நீ பூ வாங்கி தரலையா? பொட்டு கூட காணோம் பாரு” என விசாரித்தார்.
முகம் வாடியவன், “என்னால வாங்கி தர முடியலை மாமா…” என்றான்.
“ஏன்? ஏன்?” என அவசரமாகக் கேட்டவரிடம், “நான்தான் வேணாம்ன்னு சொன்னேன் தம்பி” என மகன் தடுமாறுவது தாங்கமாட்டாமல் ரேவதி முந்திக்கொண்டு பதில் சொல்லியிருந்தார்.
“ஏன்கா உங்களுக்கு நல்லா இருக்கும்ன்னு தோணுது…” எனச் சொல்ல, “அதெல்லாம் ஒன்னும் இல்லைப்பா…. ஆம்பிளைங்க எல்லாம் பொட்டு, பூ வைக்கறீங்களா? அந்த மாதிரி தான்” எனச் சமாளித்தார்.
“ஆமாம்… நாங்க ஏன் வைக்கலை?” என மீண்டும் ஆராய்ச்சி கேள்வியை எழுப்பினார்.
“அப்பதானே யாரு பசங்க, பொண்ணுங்கன்னு அடையாளம் தெரியும்”
“ஓ… அப்ப நீங்க ஏன் வைக்கலை?” விடுவேனா எனக் கேட்டவரிடம், “நான்தான் புடவை கட்டியிருக்கேனே” எனக் குழப்பி விட்டார் ரேவதி.
“அதுனால என்ன?” என விடாக்கண்டனாகச் செல்லத்துரை கேட்டு நிறுத்தவும், “அது புருஷனை சாமியா கும்பிடும் பொண்ணுங்க, அதெல்லாம் வைக்க மாட்டாங்க தம்பி” என்று பொறுமையாக விளக்கம் தந்தார்.
“ஓ….” என்று ஒரு பெரிய ஓவில் அனைத்தையும் மனதில் போட்டுக் குழப்பிக் கொண்டிருந்தார்.
கற்பகம் தான், “நமக்கு அதெல்லாம் தெரிஞ்சுக்க வேணாம்ங்க” எனத் தன்மையாகக் கூறினார்.
“வேண்டியதில்லையா?” என மீண்டும் உறுதிப்படுத்தக் கேட்க, ஆம் எனக் கற்பகம் தலையசைத்தார்.
“நிஜமாவே நீங்களும் சௌதாவை நல்லா பார்த்துப்பீங்க தானே அக்கா?” என மீண்டும் ரேவதியிடம் உறுதியாகக் கேட்க, “கண்டிப்பா நல்லா பார்த்துப்பேன்…” என்றார் அவர் மனம் நிறைந்தவராக.
“சரி… சரி… சந்தோஷம்… சந்தோஷம்… எல்லாம் நல்லபடியா நடக்கும்…” என அவர் பாட்டிற்குப் பூரிப்பில் பேசிக் கொண்டிருந்ததை உள்ளிருந்து பார்த்துக் கொண்டிருந்த சௌதாவின் விழிகள் கலங்கி விட்டது. அவர் பேச்சிலிருந்தே சித்தி பலமுறை தன் திருமணம் குறித்து கலங்கியிருக்க வேண்டும் என அவளுக்குப் புரிந்தது.
ஆனாலும் அவளும் தான் என்ன செய்வாள்! இப்பொழுது திருமணம் வேண்டாம் எனத் தோன்றுகிறது. அதற்கு அவள் தயாராகவும் இல்லை எனும்போது தன் மறுப்பையும் குடும்பத்தினரிடம் சொல்லி விட்டாள் தான்! அவர்களுக்கு இதில் ஆட்சேபனை இருப்பது புரிந்தாலும் தன் முடிவிலிருந்து அவள் மாறவில்லை. இப்போதானால்… மேற்கொண்டு யோசிக்கவே பிடிக்காமல் கண்களை இறுக மூடிக் கொண்டாள். மூடிய விழிகளிலிருந்து நீர் வழிந்தது.
யாரோ கதவை மெலிதாக தட்டிவிட்டு உள்ளே நுழையும் அரவம் கேட்டதும், உடல் விரைத்தவள் வேகமாக விழிகளைத் துடைத்துக் கொண்டு எழுந்து முதுகுகாட்டி நின்று கொண்டாள்.
உள்ளே வருவது அவன்தான் என அவளால் உணர முடிந்தது. அவளது உடல்கள் இன்னும் விரைக்க, முகத்தில் ஒரு கடினத்தன்மை வந்தமர்ந்து கொண்டது. ‘அழுவதற்கு கூடவா சுதந்திரம் இல்லை’ இயலாமையில் கண்கள் உடைப்பெடுக்க, மீண்டும் அவசரமாக துடைத்துக் கொண்டாள்.
“நீ மட்டும் தனியா ஏன் இங்க இருக்க?” வெகு சாதாரணமாக வெளிவந்தது சர்வாவின் கேள்வி.
அவள் அழுகிறாள் என்று நிச்சயம் அவனுக்குப் புரிந்திருக்க வேண்டும். இருந்தும் ஒன்றும் தெரியாதவன் போல பேசுபவனிடம் மேற்கொண்டு என்ன எதிர்பார்க்க முடியும்? இருந்தும் மனம் தளராதவராய், “இதெல்லாம் சரியா வராதுன்னு உங்களுக்குப் புரியாதா?” என்றாள் திரும்பாமலேயே.
“எது?” என்றான் சிறு புன்னகையுடன்!
‘எதுவாம்? எது? நான் எதைப்பற்றி பேசறேன்னு இவனுக்குப் புரியாதா?’ உள்ளே சீறியதை வார்த்தையில் காட்டாமல், “கல்யாணம்…” என்றாள் எள்ளலாக.
“கல்யாணம்?” அதையே வினா போலக் கேட்டு வெகுவாக ஆச்சரியப்பட்டவனை அடித்தால் தான் என்ன என அவளுக்கு ஆத்திரம் கிளர்ந்தது.
“முதல்ல என்னைத் திரும்பிப் பார்த்துப் பேசு. ஏன் சுவரைப் பார்த்து பேசிட்டு இருக்க?” அதை அவன் சாதாரணமாகத் தான் சொன்னான். ஆனால், அவளுக்கு அதிகாரம் செய்வது போல தெரிந்தது.
அது பிடிக்காமல், “அது என் இஷ்டம்” என்றாள் வெடுக்கென்று. கூடவே, “இங்கிருந்து போயிடுங்க” என்று குரலை உயர்த்தாமல் கட்டளையிட்டாள்.
“நான் போவேன். ஆனா தயாராயிரு… கூடிய சீக்கிரம் உன்னையும் என்னோட அழைச்சிட்டு போவேன்” என்றான் உறுதியாக.
அதில் சினந்தவள், “அது நடக்காது” என்றாள் அவனினும் உறுதியாக.
“அதெப்படி நடக்காம போகும்? அதுவும் அது என் இஷ்டமா இருக்கும்போது…” என அவளுக்கு முன்னே வந்து கண் சிமிட்டி சொன்னவனைக் கண்டு அவசரமாக அவள் திரும்ப எத்தனிக்க, அவளது தோள்களை அழுத்திப் பிடித்தவன் அவளைத் திரும்புவதற்கு அனுமதிக்கவில்லை.
அவனிடம் போராடுவது வீண் எனப் புரிந்தவள், கீழுதட்டைக் கடித்துக் கொண்டு தலையைக் குனிந்து கொண்டாள். வலது கையால் அவளது முகத்தை நிமிர்த்தியவன், அவளது கண்ணீர் வடுக்களை விரல்களால் அளந்தான். பிறகு என்ன நினைத்தானோ ஒரு பெருமூச்சுடன் எதுவும் சொல்லாமல் அவளிடமிருந்து விலகிச் சென்று விட்டான்.
செல்பவனின் முதுகைக் குழப்பத்துடன் வெறித்தாள் சௌதாமினி. இப்பொழுது இவனது முடிவு என்ன? மங்கையின் மனம் குழம்பியது.