எனக்கொரு வரம் கொடு 8 – சுகமதி

எனக்கொரு வரம் கொடு – 8

 

வசந்தனிடம் தொடர்ந்து பாராமுகம் காட்டுவதே சௌதாமினியின் வாடிக்கையாக இருந்தது. போகக்கூடாத எல்லை வரை போய் வந்தவனை நொடியில் மன்னிக்க அவளால் முடியவில்லை. அதுவும் குடும்பம் இருக்கும் சூழ்நிலையில் எத்தனை பொறுப்போடு அவன் இருந்திருக்க வேண்டும்! இத்தனை தூரம் பிசகி விட்டானே என்னும் கோபமே அவனிடம் இணக்கம் காட்ட அவளை விடவில்லை.

 

என்ன தவறு செய்தாலும் திரும்பச் சேர்த்துக் கொள்வார்கள் என்னும் நம்பிக்கையை அவனுக்கு தந்துவிடக்கூடாது என்பதில் அத்தனை உறுதியாக இருந்தாள் சௌதாமினி. ஆனால், இது இளையவனை வேறு விதத்தில் பாதித்தது.

 

அவளின் புறக்கணிப்பால் வசந்தன் மிகவும் மனம் வாடிப் போனான். அக்கா என்பவள் இரண்டாம் அன்னை என்பார்கள்; அவன் விஷயத்திலோ சௌதாமினி அவனைத் தாயாகவும், தந்தையாகவும் தாங்கியவள் ஆயிற்றே! அவளது கோபத்திற்கு ஆளாகி விட்டோமே என்னும் குற்றவுணர்வு அவனை தினந்தினம் அரித்தது.

 

முன்பு அத்தனை புத்தி சொன்னாளே ஒவ்வொரு முறையும் உன் சொல்படி கேட்கிறேன் என நம்பவைத்து அதைப் பொய்யாக்கி இருக்கிறேனே என காலங்கடந்து கலங்கினான். அவள் சொல் பேச்சை கேட்டு நடந்திருந்தால் இத்தனை தூரம் போயிருக்காது. இவ்வளவு மனவுளைச்சலும் அவமானமும் ஏற்பட்டிருக்காது.

 

அப்பொழுது இளமையின் சுகமாக எண்ணிச் செய்ததெல்லாம் இப்பொழுது சுமையாக அவன் முதுகில் ஏறி அமர்ந்து கொண்டு, நாள்தோறும் சித்திரவதை செய்து கொண்டிருந்தது. இந்த மன புழுக்கத்திலிருந்து மீளத் தெரியாமல் தத்தளித்தவனுக்குத் தமக்கையின் பாராமுகம் மேலும் வேதனையை தந்தது.

 

எவ்வளவோ பொறுத்துப் பார்த்தவனுக்கு ஒரு கட்டத்தில் முடியாமல் போக, சௌதாமினியிடம் மனம் விட்டுப் பேச எண்ணி அவளை அழைத்துக் கொண்டு வெளியே சென்றான்.

 

“எங்கேன்னு சொல்லேன்?” எரிச்சலும் சலிப்புமாக சௌதா தம்பியிடம் கேட்டுக் கொண்டிருந்தாள்.

 

“வாக்கா சொல்லறேன். கொஞ்சம் முக்கியமான விஷயம்” என்றவன் அமைதியாகச் சென்றான்.

 

“வண்டியிலயாச்சும் போவோம்…” என கார் சாவியை எடுக்கச் சென்றவளைத் தடுத்தவன், “இல்லைக்கா பக்கம் தான்” என்றவன் அவளது கூரிய பார்வையைக் கண்டு, “பார்க் வரை…” என மெதுவாக கூறினான்.

 

அவனை ஏற, இறங்கப் பார்த்துவிட்டுச் சிறு பெருமூச்சுடன் அவனோடு இணைந்து நடந்தாள். பூங்கா செல்லும்வரை கூட பொறுமை இல்லாதவளாய், “இப்ப என்ன பிரச்சினை?” என்று கலக்கமாக வினவினாள்.

 

ஒருநொடி திடுக்கிட்டவன், “அதெல்லாம் எதுவும் இல்லைக்கா” என்றான். இந்த அக்கா ஏன் என்னை நம்பவே மாட்டீங்கறா என்ற எண்ணத்தில் அவன் மனம் வெகுவாக சோர்ந்தது.

 

சௌதாமினி அவனது திடுக்கிடலைத் தவறாக அர்த்தப்படுத்திக் கொண்டாள். “மறுபடியும் இப்ப என்ன பிரச்சினையை இழுத்து விட்டிருக்க?” என்று அழுத்தமாக விசாரித்தாள். சற்று ஆத்திரமாகவும்!

 

தமக்கையை அடிப்பட்ட பார்வை பார்த்தவாறே, “நான் தப்பு மட்டும் தான் செய்வேன்னு நினைக்கிறீங்க தானே கா…” என்று உடைந்து போன குரலில் வசந்தன் கேட்டபோது, அவளது மனம் இளகி விட்டது.

 

ஆறுதலாக அவனது கரம் பற்றித் தட்டிக்கொடுத்தபடி, “இல்லை வாசு… முன்னாடி செஞ்ச தப்பு எதுவும் இப்ப பாதிக்குதோன்னு…” அவளும் சிறு பதற்றத்தோடே விளக்கினாள். அவனே மருகிக் கொண்டிருக்கிறான் அவனிடம் போய் இத்தனை கடுமை காட்ட வேண்டுமா? என்று ஒருமனம் சொன்னாலும், இன்னொரு மனம் இளக்கம் காட்டி விடாதே இழுத்துப் பிடி என எச்சரித்தது.

 

“ம்ப்ச்… எனக்கு இப்ப எந்த பிரச்சினையும் வரலைக்கா. நான் எந்த வம்பு தும்புக்கும் போறதில்லை. நான் இதுவரை செஞ்ச தப்பெல்லாம் தான் என்னை கொல்லுது கா. ஆறுதலா யாரும் இல்லாத போது குற்றவுணர்ச்சி என்னை கூறு போடுதுக்கா… என் பிரண்ட்ஸ்… ச்சு… அவனுங்களை அப்படி என்னால இனி யோசிக்கக் கூட முடியாது. அவங்களோட சுத்தமா பேசறதை நிறுத்தி, அவங்ககிட்ட இருந்து மொத்தமா விலகிட்டேன்.

 

அம்மாகிட்ட நடந்த விஷயம் எதையும் சொல்ல முடியாது. சொல்லவே முடியாதுங்கிற போது… ஆறுதலோ, அரவணைப்போ எப்படித் தேட? விஷயம் தெரிஞ்ச நீயும் என்மேல வெறுப்பை மட்டும் தான் கொட்டற! உன்னைத் தப்பு சொல்லலை கா… நான்… நான்… செஞ்ச தப்பு அப்படி… பலசமயம் நான் பூமிக்கு பாரமோன்னு தோணுதுக்கா” என்றவன் வழியிலேயே உடைந்து அழவும், என்ன சொல்லி அவனைத் தேற்றுவது எனச் செய்வதறியாமல் திகைத்துப் போனாள் சௌதாமினி.

 

எந்த மாதிரி மனவுளைச்சலில் தம்பி தினந்தினம் தவித்துக் கொண்டிருக்கிறான். இப்பொழுது குற்றவுணர்வில் மறுகுவது அவள் முறையாயிற்று.

 

இவ்விடத்தில் அக்கறையைக் காட்டிலும் அதட்டல் தான் உடனடியாக செயல்படும் என்று புரிந்தவளுக்கு, “ஷ்ஷ்… பொது இடத்துல என்ன வாசு இது? நம்ம ரோட்டுல இருக்கோம்ன்னு உனக்கு புரியுதா இல்லையா? போறவங்க வரவங்க எல்லாம் என்ன ஏதுன்னு விசாரிக்கணுமா?” என அடிக்குரலில் கடிந்து கொள்ளவும் தான் அவசரமாக தன்னை சீர்ப்படுத்தினான் வசந்தன்.

 

அவன் சற்று தெளிந்ததும், வேகமாக அவனைப் பூங்காவினுள் அழைத்துச் சென்றவள், அங்கு ஓரமாக வீற்றிருந்த ஒரு இருக்கையில் அவனை அமர வைத்துவிட்டுக் கூடவே தானும் அமர்ந்து கொண்டாள். சற்று நேரம் இருவருமே மௌனத்தைக் கலைக்கவில்லை.

 

இளையவனின் கையை பற்றி பொறுமையாக, “நீ தப்பு செஞ்சிருக்க வாசு. அதுவும் யாராலும் யோசிக்க முடியாத, மன்னிக்க முடியாத தப்பு. இவ்வளவு பெரிய தப்பையும் செஞ்சுட்டு உடனே மன்னிப்பை எதிர்பார்க்கிறது முட்டாள்தனம் இல்லையா?” என்று அவனுக்கு உரைக்கும் வண்ணம் கேட்டாள்.

 

வசந்தன் மூத்தவளையே எதுவும் பேசாமல் பார்த்துக் கொண்டிருக்க அவள் மேலும் தொடர்ந்து, “அதுவே முட்டாள்தனம்ன்னு சொல்லறப்ப… உன் தப்பை மொத்தமா தலைமுழுகி நல்லபடியா வாழந்து காட்டணும்ன்னு வைராக்கியம் வராம பூமிக்கு பாரம்ன்னு பேசறது இன்னும் மடத்தனம் இல்லையா?” என அவனிடம் கேட்டாள்.

 

இப்பொழுது வசந்தன் தன் தலையைத் தாழ்த்திக் கொண்டான். அக்காவின் குற்றச்சாட்டு சரிதான்… ஆனால், முதலில் குற்றக் குறுகுறுப்பிலிருந்து வெளி வரவேண்டுமே! அதிலும் கவின்யாவை காணும்போதெல்லாம் அவளை எந்த இக்கட்டில் நிறுத்தி வைத்திருந்தோம் என நினைக்க நினைக்க எத்தனை நொந்து போகிறான்? இதெல்லாம் அக்காவிடம் விளக்கும் தைரியம் அவனுக்கில்லை.

 

ஆனால், சௌதாமினி சற்று நிதானித்தாள். பருவ வயதில் பிள்ளைகள் இடறுவது வழமை தானே? என்ன இவன் சற்று பெரிய தப்பைச் செய்து விட்டான். ஆனாலும் தப்பு பாதையிலேயே தான் தொடர்ந்து செல்வேன் என்று அடம் பிடிக்கவில்லையே! திரும்பி, திருந்தி வரத் தயாராய் இருக்கிறான்! இதுபோன்ற சூழலில் அவனது தவறை மீண்டும் மீண்டும் குத்திக் காட்டுவதோ, பாராமுகம் காட்டுவதோ அவனுக்கு எத்தனை வேதனையை அளிக்கும் என்று புரிந்தவளாய், ஒரு நீண்ட பெருமூச்சை வெளியிட்டு விட்டு, “நான் செஞ்சதும் தப்புதான். உனக்கு தேவையான அரவணைப்பு தராம, நானும் உன்னோட வேதனை அதிகப்படுத்தி இருக்க கூடாது” என்று சொல்ல,

 

“அக்கா….” என அவளது கரங்களைப் பற்றிக் கதறி விட்டான். இவளால் எப்படி இத்தனை தூரம் மன்னிக்க முடிகிறது. தன் ஒரு துளி கண்ணீரிலும் கரைகிறாளே! இவள் இரண்டாம் அன்னை தான்! என்னுடைய பற்றுகோல் இவள்!

 

அவனை அவன் போக்கில் அழ விட்டவள், அவன் அழுது ஓய்ந்ததும், “நீ சூடுபட்ட பூனை வாசு, உன்னால இனி தப்பு வழி போக முடியாதுன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு” என ஆறுதலாகப் பேசவும்,

 

“நான் என்ன செய்யணும் சொல்லுக்கா… இனி உன் சொல்பேச்சு கேட்டுத் தான் நடப்பேன்” என்றான் சிறு குழந்தையாக.

 

மெல்ல புன்னகைத்தவள், “நீ நல்லா இருக்கணும்ன்னு ஆசைப்பட எனக்கு உரிமை இருக்கு வாசு. ஆனா, நீ இப்படி வாழ்ந்தா தான் நல்லா இருப்பன்னு சொல்லற உரிமை யாருக்குமே இல்லை… எனக்கும் சேர்த்துத் தான்! எங்க கைபிடிச்சு தான் நீ போகணும்ன்னு எந்த அவசியமும் இல்லை. உனக்கு சரின்னு பட்டதை நீ தாராளமா செய்யலாம். உனக்குக் குழப்பம் வரும்போது உன்னை வழிநடத்த நாங்க எல்லாரும் இருப்போம்” என்றாள் அவன் கண்ணீரை மொத்தமாகத் துடைத்தபடி.

 

“கண்டிப்பா நல்லபடியா இருப்பேன் கா”

 

“அந்த நம்பிக்கை எனக்கும் இருக்கு வாசு… வா வீட்டுக்கு போகலாம் சித்தி என்னவோ, ஏதோன்னு நினைச்சுப்பாங்க” என்று சொல்லி அவனை அழைத்துச் சென்றாள்.

 

வீட்டில் நடந்து கொண்டிருக்கும் பேச்சுவார்த்தைகளைப் பற்றி அறியாதவளாய் தம்பியிடம் நேரம் செலவழித்து விட்டு வீடு நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தாள் சௌதாமினி. ஒருவேளை வீட்டில் தனக்கென ஒரு மாப்பிள்ளை காத்திருப்பதையும், அந்த மாப்பிள்ளை சர்வேஸ்வரன் தான் என்பதையும் தெரிந்திருந்தால் அப்பொழுதே அவ்விடத்தை விட்டு ஓட்டம் எடுத்திருப்பாளோ என்னவோ… ஆனால், அவள் அறியும் வழிதான் ஏது? அவள் தப்பிக்கும் மார்க்கமும் தான் ஏது?

 

சர்வேஸ்வரன் தான் கொண்டு வந்திருந்த செடிகளை செலத்துரையோடு சேர்ந்து பின்புற தோட்டத்தில் நட்டு வைத்துக் கொண்டிருந்தான்.

 

முல்லை செடிகளைப் பார்த்து அவருக்கு மிகுந்த சந்தோஷம். “நிறைய பூக்கும் தானே சர்வா?” என்று ஆசையாக விசாரித்தார்.

 

அவனும் “கண்டிப்பா மாமா…. செடி முழுக்க பூதான் வரும் பாருங்க” என்று மாமாவின் மனம் குளிர வைத்தான்.

 

“எல்லாமே என் பொண்ணுக்கு தான்” எனப் பெருமை பொங்கச் செல்லத்துரை சொல்லவும்,

 

“ஹ்ம்ம்… அப்ப அத்தைக்கு…” எனத் தாடையில் விரல்வைத்து, அண்ணாந்து பார்த்து யோசனை போல கேட்டு வைத்தான் சர்வா. சௌதாமினி பார்த்த காட்சி அதுதான்!

 

பார்த்தவள் கொஞ்சம் பிரமித்துத் தான் போனாள்! இவனால் இத்தனை இலகுவாகப் பேச இயலுமா எனும் எண்ணத்தில் சிட்டுக்குருவி போல வாயைப் பிளந்தபடி பிரமிப்பு!

 

அவள் அப்பொழுது தான் தம்பியுடன் வீட்டிற்கு வந்திருந்தாள். வாயிலில் சர்வேஸ்வரனின் காரை கண்டதுமே புரிந்து போனது அவனது வருகை! வசந்தனை மட்டும் வீட்டினுள்ளே அனுப்பிவிட்டு பின் தங்கியவள், வீட்டைச் சுற்றிக்கொண்டு பின்புறம் சென்றாள். சென்றவள் கேட்டதும், கண்டதும் இதைத்தான்!

 

சர்வாவின் சந்தேகத்தைக் கேட்ட செல்லத்துரை, “ஆமா ஆமா கற்பகத்துக்கும் கொஞ்சம் கொடுக்கணும்” என்றார் சீரியஸாக.

 

“என்ன மாமா கொஞ்சம் தானா?” என்னவோ சாக்லேட் மறுக்கப்பட்ட குழந்தை போலப் பாவனையாக கேட்டவனைப் பார்த்ததும் சௌதாவிற்கு மயக்கம் வராத குறைதான். இது இவனின் எந்த முகம்?

 

“ஆமாம் பின்னே சௌதாவுக்கு வேணுமே… அவளுக்கு நிறைய முடி. அப்ப நிறைய பூ வைக்கணுமே…” இன்னமுமே வெகு சீரியஸாக தான் செல்லத்துரை பதில் சொல்லிக் கொண்டிருந்தார். பார்க்க, கேட்க அழகாகவும் ரசனையாகவும் இருந்தது அவரது பேச்சு!

 

சித்தப்பா சொன்ன விளக்கத்தில் அவளுக்குப் புன்னகை அரும்பியது. அப்ப சித்திக்கு மட்டுமென்ன கொஞ்ச தலைமுடியா? அவருக்கும் நீளம் தானே! பாதிப் பாதி பூன்னு சொல்ல வேண்டியது தானே இந்த சித்தப்பா என நினைத்து சிரித்தாள்.

 

சர்வேஸ்வரனோ வேறு சொன்னான். “இங்கே பூக்கும் பூ எல்லாம் அத்தைக்கே இருக்கட்டும் மாமா. நான் சௌதாவுக்கு எங்க வீட்டுல செடி நட்டு வைக்கிறேன்” என்று பெரியவரைச் சமாதானம் செய்தான்.

 

“அங்கிருந்து நீ தினமும் கொண்டு வருவியா?” என ஆராய்ச்சியாகக் கேட்டவரிடம், மீண்டும் தாடையைத் தட்டி யோசித்து விட்டு, “அது கொஞ்சம் சிரமம் தான் மாமா. வேணும்ன்னா அவளை என்னோடவே கூட்டிட்டு போயிடறேன்” என்று பட்டென்று சொல்லி விட்டான்.

 

என்னவோ மறுக்கும் எண்ணமே இல்லாமல் “அங்கேயா? அவளுக்கு வசதி படுமா?” எனச் செல்லத்துரை விசாரிக்க, இவர்கள் சம்பாஷணைகளைக் கேட்டுக் கொண்டிருந்த சௌதாவிற்கு ஸ்தம்பித்த நிலை! சித்தப்பா கிட்ட இவன் என்ன சொல்லிட்டு இருக்கான்.

 

அதற்குள் சர்வா, “அவளுக்கு என்ன வசதி தேவைன்னாலும் செஞ்சு தருவேன் மாமா. அவளை ரொம்ப நல்லா பார்த்துப்பேன்… உங்களுக்கு என்மேல நம்பிக்கை இல்லையா?” என தேர்வுக்கு தயாராகும் மாணவனின் பதற்றத்தோடு கேட்க, அவன் கேட்டதை நம்பமாட்டாமல் விழி தெறித்து விடுமளவு விழிகளை வட்டமாக விரித்து பார்த்துக் கொண்டிருந்தாள் சௌதாமினி.

 

‘சித்தப்பாவோட சம்மதம் கூட இவனுக்கு இத்தனை முக்கியமா?’ ஏனோ சூழலின் கனம் தாங்காமல் மங்கையவளின் விரிந்த விழிகள் நீரால் நிறைந்து போனது. வேகமாகத் துடைத்துக் கொண்டாள்.

 

“நீ நல்லா பார்த்துப்ப தான்…” எனச் செல்லத்துரை இழுக்கவும், அத்தனை நேரமும் இழுத்துப் பிடித்திருந்த மூச்சை சர்வேஸ்வரன் வெளிவிடுவதையும், அவன் முகத்தில் ஆசுவாசம் படர்வதையும் அவளால் தெளிவாகவே பார்க்க முடிந்தது.

 

இவன் என்ன பேசியே சித்தப்பாவை கவுத்திடுவான் போல என நினைத்தவள், ‘இந்த சித்தப்பாவும் தான் இன்னும் ரெண்டு பூச்செடி இங்கேயே வளர்த்துக்கறேன்னு சொல்லறாரா? அவன் பூ வளர்ப்பானாம். அதை வெச்சுக்க என்னைக் கூடவே கூட்டிட்டு போயிடுவானாம்… இதென்ன கதை’ என மனதோடு புலம்பிக் கொண்டாள்.

 

சர்வா செல்லத்துரையிடம், “அப்ப சௌதாவை நான் கூட்டிட்டு போகவா?” என ஆசையும் ஆவலுமாகக் கேட்க, கேட்டுக்கொண்டிருந்தவளுக்கு இதயம் தொண்டையில் வந்து துடிப்பது போல உணர்வு.

 

சித்தப்பாவின் முகத்தையே என்ன சொல்வாரோ எனப் பார்த்துக் கொண்டிருந்தாள். ‘அவளை அனுப்பிட்டு நாங்க என்ன செய்யறதுன்னு கேளுங்க சித்தப்பா’ என்றாள் மானசீகமாக.

 

ஆனால், அவரோ, “கற்பகமும் ஒரு நல்ல பையன் கையில அவளை பிடிச்சு கொடுக்கணும்ன்னு சொல்லிட்டே இருப்பா. கற்பகம் என்கூட வந்து இருக்கிற மாதிரி, மகளும் வேறொரு வீட்டுக்குப் போக வேண்டியவளாம். எப்படிப்பட்ட இடம் வருமோ… இந்த பொண்ணும் சம்மதிக்காம இழுத்தடிக்கிறாளேன்னு ரொம்ப கவலை படுவா… இப்ப நீ சொல்லறதை பார்த்தா… உங்க வீடுன்னா கவலைப்பட வேண்டியதில்லை தான்! நீயும் நல்லா பார்த்துப்பன்னு சொல்லற? பார்த்துப்ப தானே?” என தன்போக்கில் பேசிக்கொண்டே வந்தவர், மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்ள வினவியதும்,

 

“கண்டிப்பா மாமா…” என்றான் புன்னகையோடே! அவளின் பிடிவாதத்தின் முன்பு, தன் முன்கோபத்தால் தனது வாக்கைக் காப்பாற்ற முடியாது எனத் தெரியாமல் உறுதியாக சொல்லிக் கொண்டிருந்தான் அந்த இளைஞன்.

 

“அப்ப சரி… அப்ப சரி… எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு…” என தன் சம்மதத்தைச் செல்லத்துரை சொன்னதும், இன்ப மிகுதியில் அவரை அணைத்து “ரொம்ப தேங்க்ஸ் மாமா” என்றான் சர்வேஸ்வரன். சௌதாவிற்கு மூச்சடைப்பது போல இருந்தது.

 

அவர்கள் அருகே நெருங்கவும் முடியாமல், அவர்கள் பேச்சு கேட்காத தூரம் செல்லவும் முடியாமல் தடுமாறித் தவிப்பாக நின்றிருந்தாள் மங்கை.

 

இத்தனை நாட்களும் சர்வேஸ்வரன் என்ற ஜீவன் இருந்தாலே ஒரு பர்லாங்கு தூரம் தலை தெறிக்க ஓடுபவள், முதல்முறை அவளையும் அறியாமல் அவனைப் பார்த்துக் கொண்டே, அவன் பேசுவதைக் கேட்டுக் கொண்டே இருக்கிறாள்.

 

அவளே அறியாமல் அவள் கொண்ட முதல் மாற்றம்! தீப்பொறி அளவு வெளிச்சம் அவளின் இதய அறையில் சிறகடித்துக் கொண்டிருக்கிறது. இனி என்னென்னவெல்லாம் நேர்ந்திடும்?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

எனக்கொரு வரம் கொடு 24(நிறைவுப் பகுதி)எனக்கொரு வரம் கொடு 24(நிறைவுப் பகுதி)

எனக்கொரு வரம் கொடு – 24 கற்பகத்திற்கு சௌதாமினி செய்து வந்த காரியத்தில் துளியும் உடன்பாடில்லை. அவள் பாட்டிற்குக் கணவனோடு சண்டை போட்டுக்கொண்டு பிறந்தகம் வந்தால், அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? அந்தளவு முதிர்ச்சியற்றவளா மகள்? என வேதனையாக இருந்தது.  

எனக்கொரு வரம் கொடு 22 – சுகமதிஎனக்கொரு வரம் கொடு 22 – சுகமதி

எனக்கொரு வரம் கொடு – 22 டிஐஜி ஜெயந்த் முரளி உச்சக்கட்ட எரிச்சலில் இருந்தார். மலர் ஹாஸ்ப்பிட்டல் கேஸை விட்டுவிடு… நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் கேஸை முடிக்கும் வழியைப் பார் என படித்துப் படித்துச் சொல்லியிருக்கிறார், இந்த சர்வேஸ்வரனோ செவி சாய்க்காமல் மீண்டும்

எனக்கொரு வரம் கொடு 12 – சுகமதிஎனக்கொரு வரம் கொடு 12 – சுகமதி

எனக்கொரு வரம் கொடு – 12   சர்வேஸ்வரன், சௌதாமினி இருவருக்கும் நிச்சயத்திற்கான தேதி குறிக்கப்பட்டிருந்தது. கற்பகம் மிகுந்த உற்சாகத்துடன் வளைய வந்தார். செல்லத்துரைக்கும் மனைவியோடு சேர்ந்து மகளின் திருமண விஷயம் பற்றிப் பேசுவது மிகுந்த உற்சாகமளிப்பதாகவே இருந்தது.   அவர்களின்