எனக்கொரு வரம் கொடு 7 – சுகமதி

எனக்கொரு வரம் கொடு – 7

 

ரேவதி சௌதாமினியின் திடீர் வரவை எதிர்பாராமல் திகைத்துப் போனவர், “வாடாம்மா வா… என்ன திடீர்ன்னு இந்த பக்கம்? சித்தி, சித்தப்பா எல்லாம் எப்படி இருக்காங்க?” என்று ஆவலோடு வரவேற்றார்.

 

“எல்லாரும் நல்லா இருக்காங்க அத்தை” என்றவள் முகத்தை இயல்பாக வைத்திருக்கப் பெருமுயற்சி செய்து கொண்டிருந்தாள். அவளுக்குச் சிங்கம் என்றாலே அதீத பயம் என்கையில், சிங்கத்தின் குகை எப்படிப்பட்ட தாக்கத்தைக் கொடுக்கும்?

 

அவளது நிலை உணராது, “இரு குடிக்க எதாவது கொண்டு வரேன்…” என்று சமையலறை சென்றவரின் பின்னேயே சென்றவள், “அத்தை இருக்கட்டும் வாங்க” என்று தடுக்க பார்த்தாள். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இங்கிருந்து சென்றுவிட வேண்டும் என்ற எண்ணம் அவளுக்கு.

 

ரேவதிக்கு அதெல்லாம் எங்கே பதியும்? சௌதாமினி வீட்டுப்பக்கமே எட்டிப் பார்க்காத பெண்! ஆக, இப்பொழுது வந்திருக்கவும், அப்படி ஒரு பரபரப்பு அவருக்கு.

 

“என்னமா நீ…. வாராத பொண்ணு வந்திருக்க, உன்னை சீராட்டி அனுப்பிட்டு தான் மறுவேலை…” என்றவர், அவளுக்கென தேநீர் தயாரித்து, தின்பண்டங்களைத் தட்டில் அடுக்கி தந்தார்.

 

“அச்சோ! அத்தை… எதுக்கு இவ்வளவு?” எனத் தட்டைப்பார்த்து சௌதா மிரளவும், “கால் ஓய ஆடணும். தெம்பு வேண்டாமா?” என்றார் அவர்.

 

“ஆஹான்… நொறுக்குத்தீனி சாப்பிட்டுத் தான் தெம்பு வருமா? எந்த ஊருல?” என வம்புக்கு கேட்டாலும், அவர் மனம் நோகாமல் எடுத்துக் கொண்டாள். அளவாகத்தான்!

 

“என்னம்மா இவ்வளவு கம்மியா சாப்பிடற? இன்னும் கொஞ்சம் சாப்பிடும்மா” என உபசரித்தவரிடம், “இல்லை அத்தை… போதுமே…” என்று நாசூக்காக மறுத்து விட்டாள்.

 

வந்த விஷயத்தை அவரிடம் எப்படித் தொடங்க என வெகுநேரமாகத் தயக்கம் அவளுக்கு! அதைக் கண்ணாடியாக அவள் முகம் பிரதிபலித்ததோ?

 

ரேவதியே, “என்ன விஷயம் மா?” என அவளின் கன்னம் வருடிப் பரிவாகக் கேட்டார்.

 

கண்டுகொண்டாரே என்ற அதிர்ச்சியில் அவளது விழிகள் வட்டமாக விரிய, எச்சில் கூட்டி விழுங்கி கொண்டாள். என்ன இருந்தாலும் உங்கள் மகன் இப்படிச் செய்தான் என்று புகாரளிப்பது அத்தனை எளிதல்லவே!

 

ஆனால், ரேவதி அவளின் தயக்கத்தையும், தடுமாற்றத்தையும் பார்த்து அவராகவே ஒரு கதையை ஊகித்துக் கொண்டார். அழகான இளம்வயது பெண் என்றால் என்ன பிரச்சினையாக இருக்கும் என ஊகிக்க முடியாதா? ஆக, அவராகவே “யாராவது ஏதாவது பிரச்சினை செய்யறாங்களா மா? அதை சர்வா கிட்ட சொல்லி வைக்கணுமா?” என்று கேட்டதும், அவள் மேலும் அதிர்வாய் விழித்தாள். சற்று எல்லையற்ற அதிர்ச்சியும் கூட! புகாரே அவனைப்பற்றித் தானே என்ற அதிர்ச்சியில் மீன் குஞ்சாய் அவளின் இதழ்கள் கூட பிரிந்து கொண்டது!

 

அவளைப் பார்த்த ரேவதியோ சிறு புன்னகையோடே, “உனக்கு அவன் கூட ஆகாதுன்னு தான் எனக்குத் தெரியுமே! யாரு என்னன்னு விவரம் சொல்லிட்டு போ… நானே அவன்கிட்ட சொல்லி வைக்கிறேன்” என்று வேறு சொல்ல, தலையில் துண்டு போட்ட நிலை அவளுக்கு.

 

அவளின் முகபாவனைகளில் யோசனையாகி, “என்னம்மா?” என இன்னமுமே பரிவாக ரேவதி கேட்க,

 

“அத்தை… இது வேற…” என்றாள் திணறலாக! ரேவதி குழப்பமானார். வேறு என்ன பிரச்சினையாக இருக்கும்? என்ன யோசித்தும் அவருக்கு ஒன்றும் விளங்கவில்லை.

 

தயங்கி தயங்கி மொத்த விஷயங்களையும் பகிர்ந்து கொண்ட சௌதாமினி இன்னொரு கோணத்தை யோசிக்கத் தவறினாள். இத்தனை நாட்களும் சர்வாவிற்குத் தன்மீது இருக்கும் பிடித்தம் அவர்கள் இருவர் மட்டுமே அறிந்த தனிப்பட்ட விஷயம்! ஓர் அழகான ரகசியம் எனலாம்! ஆனால், இப்பொழுது அதை அவளாகவே முன்வந்து இன்னொருவர் அறிய செய்கிறாள். அதுவும் சர்வேஸ்வரனின் திருமணத்தை ஆவலோடு எதிர்நோக்கும் அவனது அன்னையிடம்!

 

இதன் எதிர்வினை அவளுக்குச் சாதகமாகுமா? பாதகமாகுமா?

 

மொத்த விஷயத்தையும் சொல்லிவிட்டு சௌதாமினி அத்தையைப் பார்க்க அவர் முகபாவனையிலிருந்து அவளால் எதையும் கண்டுகொள்ள முடியவில்லை. அத்தை அவனை கண்டிப்பாரா இல்லையா?

 

சரி சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டோம் இனியும் இதுபோல மூக்கை நுழைத்தால் பார்த்துக் கொள்வோம் என எண்ணியவள், அத்தையிடம் அவசரமாக விடைபெற்றும் கொண்டாள். அவள் அவசரமாகப் புறப்படுவது சர்வாவை எதிர்கொள்ள அவள் தயாராயில்லை என்ற விஷயத்தை ரேவதிக்குச் சொல்லாமல் சொல்லியது.

 

ரேவதி யோசனையானார். மகன்மீது கோபமாக வந்தது. என்ன செய்து வைத்திருக்கிறான் இவன்? எனக் கோபப்பட்டவர், மகனின் வரவிற்காகச் சற்று ஆத்திரத்தோடே காத்திருந்தார்.

 

பூகம்பம் வெடிப்பதற்கான மொத்த அறிகுறியும் அந்த இல்லத்தில் தெரிந்து கொண்டிருந்தது. சர்வேஸ்வரன் வீட்டிற்கு வந்திருந்தான். உடைமாற்றவோ, உண்ணவோ கூட விடாமல், மகனை விசாரிக்கத் தொடங்கி விட்டார் ரேவதி! இதுபோல பிழைகள் நாம் எதிர்பார்க்கும் விவாத முடிவைத் தராது என்று புரியாதவராய், உணரமுடியாதவராய் ஆத்திரத்தில் அவசரப்பட்டிருந்தார்.

 

“ஏன் இப்படிப் பண்ணின?” ரேவதி தன் மகன் செய்த செயலால் எழுந்த அதிருப்தியிலும், கோபத்திலும் சத்தமிட்டுக் கொண்டிருந்தார். சர்வேஸ்வரன் அலட்டிக் கொள்ளவேயில்லை!

 

“உன்னைத்தானே கேட்டுட்டு இருக்கேன். நீ எதுவா இருந்தாலும் என்கிட்ட தானே சொல்லியிருக்கணும்” மகனின் அமைதி பொறுக்கமாட்டாமல் மீண்டும் சத்தமிட்டார்.

 

சலிப்போடு, “சரி இப்பதான் நான் சொல்லாமையே உங்களுக்கு தெரிஞ்சிடுச்சே… என்ன செய்ய போறீங்க?” என்று வெகுநேர மௌனத்தை உடைத்து அழுத்தமாக சர்வா கேட்க ரேவதிக்கு ஆத்திரமாக வந்தது.

 

“என்ன விளையாடறியா நீ? இதெல்லாம் நீ வழக்கமா அடம் பிடிச்சு சாதிக்க நினைக்கிற விஷயம் இல்லை” என்று கண்டிப்போடு மறுப்பு கூறினார் அன்னை.

 

“ம்ப்ச்… ம்மா… இதை யாரும் தடுக்க முடியாது… என் விருப்பம் இது” என்றான் அவனும் இன்னும் அழுத்தமாக.

 

“இல்லை சர்வா இது எப்படி சரியா வரும்?”

 

“ஏன் சரியா வராதுன்னு பேசறீங்கம்மா. எனக்கு அவளை பிடிச்சிருக்கு. என் வாழ்க்கையில அவ மட்டும் தான் எனக்கு வேணும். இதுல என்ன சரியா வராதுன்னு சொல்லறீங்க. என்னால அவளை நல்லா பார்த்துக்க முடியாதா? இல்லை அவளுக்கு நான் பொருத்தமானவன் இல்லையா? என் வேலை, தோற்றம், குணம் எதுவும் சரியா இல்லையா? என்கிட்ட என்ன குறையை பார்த்தீங்கன்னு சரியா வராதுன்னு சொல்லிட்டு இருக்கீங்க?” இல்லாத பொறுமையை இழுத்துப் பிடித்துப் பேசினான்.

 

“விளையாடாத சர்வா… விருப்பம்ன்னு ஒன்னு இருக்கல்ல…” என்று ரேவதி முடிக்கக்கூட இல்லை. அதற்குள் அவனுக்குக் கோபம் பொங்கிவிட்டது. அவனும் கிளிப்பிள்ளைக்கு சொல்வது போலச் சொல்கிறான் அதை இம்மியும் செவி சாய்க்கா விட்டால் எப்படி? அதுவும் வீட்டிற்குள் வந்ததும், வராததுமாக!

 

“பாருங்க மா. இதை நீங்க மட்டுமில்லை. அவளே நினைச்சாலும் மாத்த முடியாது. அவளுக்கும், எனக்கும் கல்யாணம் நடந்தே ஆகணும். யார் தடுத்தாலும் இது நிக்காது. அவளே தடுத்தாலும்… ஏன் மறுத்தாலும் கூட…” நிதானமாகத் தொடங்கி, உச்சஸ்தாதியில் முடித்த அவன் குரலில் ரேவதிக்கே தூக்கி வாரிப்போட்டது.

 

“உன்கிட்ட மனுஷன் பேசுவானா? உன்னை அடிச்சு வளர்க்க வேண்டிய நேரத்துல எல்லாம் விட்டுட்டு இப்ப அனுபவிக்கிறேன். நீ என்ன வில்லனா டா?” என பல்லைக்கடித்துக் கொண்டு அன்னை மீண்டும் திட்ட, இப்பொழுதும் அவன் அலட்டிக்கொள்ளவே இல்லை.

 

அவனின் செய்கை கோபத்தை வரவைத்தாலும், காரியம் தானே பெரிது என்ற எண்ணத்தில் தன்மையாக, “பாரு சர்வா, சௌதாமினிக்கு உன்னைப் பார்த்தாலே பயம். நீ வீட்டுக்கு வரேன்னு தெரிஞ்சா பின்கட்டு வழியா ஓட்டம் எடுத்திடுவா. உன்னைப்பத்தி பேச்சு கூட எடுக்க விட மாட்டா. அவளுக்கும், உனக்கும் எப்படி ஒத்துப்போகும் சொல்லு …” என்று இல்லாத நிதானத்தை இழுத்துப் பிடித்து எடுத்து சொல்ல, அவனோ ஹாயாக சோபாவில் அமர்ந்து சாவகாசமாகத் தொலைக்காட்சியில் ஆழ்ந்திருந்தான்.

 

முயன்று இழுத்துப்பிடித்த பொறுமையுடன், “உன் அதிரடிக்கும், அவ பயத்துக்கும் கொஞ்சம் கூட ஒத்துப் போகாது சர்வா. கொஞ்சம் யோசியேன்” என்று ரேவதி மேலும் எடுத்துச் சொல்ல,

 

சலிப்பும், எரிச்சலுமாக “அம்மா இதுக்கு மேல இதுல பேச எதுவும் இல்லை” என்றான் உறுதியான குரலில். ‘பயமாம் பெரிய பயம்! முறைச்சிக்கிட்டே திரிவா… அவளுக்கு பயமாம்’ என அவனுக்கு உள்ளுக்குள் கடுப்பாக வந்தது.

 

“உன் முடிவு மட்டும் போதாது சர்வா” சலிப்பாக ரேவதி சொன்னதும், “நீங்கி என்ன வேணா நினைச்சுக்கங்க. என்னை மீறி அவளுக்கு வேற எங்கேயும் மாப்பிள்ளை பார்க்கிறதா தெரிஞ்சா அப்பறம் நான் பொல்லாதவனாயிடுவேன் பார்த்துக்கங்க…” என்றான் எச்சரிக்கை செய்யும் குரலில்.

 

மகனின் தலையிலேயே நங் நங்கென்று இரண்டு முறை கொட்டியவர், “இப்ப செஞ்சு வெச்சிருக்கிறது பத்தாதா? சௌதாமினியை அவங்க மகனுக்கு பேச முயற்சி செஞ்சாங்கன்னு தெரிஞ்சதுமே அந்த பையன் வீட்டுக்கு போயி கலாட்டா பண்ணிட்டு வந்திருக்க. நீ போலீஸா இல்லை ரவுடியாடா” என்று கத்த, “எப்படி வேணா வெச்சுக்கங்க” என்றான் அவனும் கூலாக.

 

“படிப்பும் உன் இஷ்டம். வேலையும் உன் இஷ்டம். இப்ப கல்யாணமும் உன் இஷ்டமன்னா அப்பறம் பெத்தவ நான் எதுக்குடா?”

 

“நீங்களா படிக்க போறீங்க? இல்லை வேலைக்குத் தான் நீங்க போக போறீங்களா? இல்லை கல்யாணம் பண்ணி குடும்பம் தான் நீங்க நடத்த போறீங்களா? என் படிப்பு, என் வேலை, என் கல்யாணம்… பெத்துடீங்கன்னு இதுல நீங்க எப்படி இன்வால்வ் ஆவீங்க?” என்று அவன் பேசிய வியாக்கானத்தில், மகனது தலை முடியைப் பிடித்து உலுக்கியவர்,

 

“கல்யாணம் என்ன உனக்கு மட்டுமா அவளுக்கும் சேர்த்துத் தானே? அப்ப அவ இஷ்டம் பார்க்க வேண்டாமா?” என்று கோபமாகக் கேட்க,

 

அம்மாவின் கையை சுலபமாகத் தட்டி விட்டவன், “அதான் சொல்லறீங்களே நான் வீட்டுக்கு வந்தாலே பின்கட்டு வழியா தெறிச்சு ஓடிடறான்னு… அப்பறம் எங்க அவளுக்கு என்மேல இஷ்டம் வர வைக்கிறது. கல்யாணம் செஞ்சு வையுங்க… அப்பறம் அவளை கரெக்ட் பண்ணிக்கிறேன். இப்ப ஒரு போலீஸ்காரன் போயி பொண்ணு பின்னாடி சுத்தினா நல்லாவா இருக்கும்”

 

இவனிடம் பேச முடியாத இயலாமையில் மண்டை காய்ந்தது ரேவதிக்கு.

 

மேற்கொண்டு என்ன செய்வது என அவருக்குச் சுத்தமாகப் புரியவில்லை. ஆனால், சர்வேஸ்வரன் உறுதியாக இருந்தான். வெகு வெகு உறுதியாக! அவனது உறுதியின் முன்னால் ரேவதியால் எதையும் செய்ய முடியவில்லை. வேறு வழியின்றி அடுத்து வந்த ஒரு நன்னாளில் மகனோடு செல்லத்துரையின் வீட்டிற்குச் சென்று திருமண விஷயமாக பேசலாம் என முடிவுக்கு வந்தார்.

 

அப்பொழுதும் புலம்பலாக “இதெல்லாம் சரியில்லை சர்வா. சௌதா எப்படியும் வேண்டாம்ன்னு தான் சொல்லுவா…” என்றார்.

 

“அம்மா…” என்று பல்லைக்கடித்தவன், “நா சொன்ன மாதிரி முதல்ல அத்தை, மாமாகிட்ட பேசுவோம். அப்பறம் பார்த்துக்கலாம்” என்றான் கடுப்புடன். அவனுக்கே ஏகப்பட்ட வேலைகள் இருக்க, அதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு வர நினைத்தால், இந்த அம்மா வேறு அவனை ஏகத்துக்கும் படுத்தினார்.

 

செல்லத்துரையின் வீட்டிற்கு ரேவதியும் சர்வேஸ்வரனும் புறப்பட்டனர். செல்லும் வழியில் பழங்கள், இனிப்புகள் என ரேவதி வாங்க, மகனோ நர்சரியில் வண்டியை நிறுத்தி சில மரக்கன்றுகளை வாங்கினான்.

 

அவனைப் புதிராகப் பார்த்தவர், “இது எதுக்கு டா?” என்றார் யோசனையாக.

 

“ம்ப்ச் அம்மா கேள்வியா கேட்பீங்களா?” என்று சலித்தவன், பதில் சொல்லாமல் வாகனத்தைச் செலுத்தினான்.

 

‘யாரும் கேள்வியே கேட்க கூடாதுன்னு நினைக்கிறவங்க எல்லாம் கல்யாணத்தைப் பத்தி யோசிக்கவே கூடாது’ என்று ரேவதி சற்று சத்தமாகவே முணுமுணுத்தார்.

 

“எல்லா வீட்டிலேயும் மகனுக்குக் கல்யாணம் செஞ்சு பார்க்கணும்ன்னு ஆசைப்படுவாங்க. நீங்க மட்டும் எனக்கு வில்லி வேலை பாருங்க” என்று கடுகடுப்போடு சொன்னவன், கோபத்தை வாகனத்தை ஓட்டும் வேகத்தில் காட்டினான்.

 

“மெல்ல போடா…” என்று கடிந்த ரேவதியும் வாயை இறுக மூடிக்கொண்டார். இவனோடு பேசி ஒரு பயனும் இல்லை எனும் விதமாக! அவருக்கு சௌதாமினியை எதிர்கொள்ளத் தான் சங்கடமாக இருந்தது. ஏதோ என்னால் பார்த்துக் கொள்ள முடியும் என நம்பி வந்தவளுக்குப் பாதகம் செய்வது போலத் தோன்றியது.

 

சர்வாவை மணந்து கொள்வது பாதகமில்லை என்றாலும், அந்த பெண்ணுக்குத் தான் துளியும் விருப்பம் இல்லையே… இவன் கொஞ்சம் பொறுமையாக இருந்து சாதிக்க வேண்டிய விஷயம் அல்லவா இது? அதைவிடுத்து இப்படிக் கட்டாயப்படுத்த வேண்டுமா? அது வெறுப்பை அதிகப்படுத்தத் தானே செய்யும்? ஒன்றும் புரிந்து கொள்ள மறுக்கிறானே என்ன செய்வது என்று ஆற்றாமையாக நினைத்தவருக்கு, இந்த விஷயத்தில் தன்னால் மேற்கொண்டு எதுவும் செய்ய முடியாது என்று புரிந்தது.

 

அங்கு என்ன நடக்குமோ? சௌதா இதை எப்படி எடுத்துக் கொள்வாளோ? என்று அச்சத்தோடே ரேவதி பயணம் செய்ய, அங்கு வீட்டில் இவர்களுக்குப் பலத்த வரவேற்பு!

 

“என்ன அண்ணி? ரெண்டு பேரும் ஒன்னா வந்திருக்கீங்க. வாங்க வாங்க…” என்று கற்பகவள்ளி ஆவலோடு வரவேற்று அமர வைத்தார்.

 

“வந்து ரொம்ப நாளாச்சே சர்வா. இன்னைக்கு என்ன வாங்கிட்டு வந்த?” என்று கற்பகம் ஆவலாக விசாரிக்க, “முல்லை கன்னு ரெண்டு அப்பறம் வெண்டைக்காய் செடி அத்தை” என்றான் அளவான புன்னகையுடன்.

 

கூடவே, “மாமா எங்கத்த?” என்றும் விசாரிக்க, “பின்னாடி தோட்டத்துல தான் இருக்காங்க” என்று கற்பகம் காட்டினார்.

 

“சரி அத்தை நீங்க பேசிட்டு இருங்க” என்றுவிட்டு எழுந்தவன், அம்மாவிடம் விஷயத்தை பேசும்படி சமிக்ஞை செய்துவிட்டு, காரிலிருந்து கன்றுகளை எடுத்துக்கொண்டு பின்வழியாகத் தோட்டத்திற்குச் சென்றான்.

 

“இவன் இங்க வந்து போறானா கற்பகம்?” என அதிசயம் போல ரேவதி விசாரிக்க,

 

“என்ன அண்ணி இப்படி கேட்டுட்டீங்க? அவருக்கு ஏதாவது ஒரு விஷயத்துல ஈடுபாடு கொண்டு வரணும்ன்னு யோசிச்சப்ப, நம்ம சர்வா தான் பின்னாடி தோட்டம் போடும் ஐடியாவே தந்தது. தந்ததோட மட்டுமில்லாம அவனே வந்து அவரோட பேசி, அவரே தனியா செடி நட வைக்கக் கூட இருந்து உதவி செஞ்சு, அவருக்கு ஒவ்வொன்னையும் பொறுமையா எடுத்து சொல்லி அத்தனை பொறுப்பா அவரை கவனிச்சுக்கிட்டான். நேரம் இருக்கப்ப ஏதாவது செடி வாங்கிட்டு வரதும், அவர் ஏற்கனவே வளர்த்த செடியைப் பத்தி பெருமையா பேசறதும்…” என்றவர் கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டார்.

 

“இவருக்கு இப்படியானதும் சொந்தபந்தம் எல்லாம் கேலி பேசறதும், பரிதாப படறதும்ன்னு எவ்வளவு முடியுமோ அவ்வளவு கஷ்டபடுத்திட்டாங்க. ஆனா சர்வா ரொம்ப நல்ல மாதிரி அண்ணி. நீங்க அவனை நல்லா வளத்தியிருக்கீங்க” என்றார் உள்ளார்ந்த அன்புடன்.

 

மகனை பற்றி கேள்விப்பட்ட புது கோணத்தில் ரேவதி வாயடைத்துப் போனார். தனக்குக் கூட தன் தம்பியை அடிக்கடி வந்து பார்க்க வேண்டும் என்று தோன்றவில்லையே! தன் கணவரின் மறைவு, அதன்பிறகு வீட்டோடு முடங்கி விட்ட நிலை இதில் மற்றவர்களின் துயரங்கள் கூட பெரிதாகத் தெரியவில்லையே! நமக்காவது வளர்ந்த, விவரம் தெரிந்த மகன். இங்கோ தலைகீழ் நிலையல்லவா? நாம் அடிக்கடி வந்து பார்த்திருக்க வேண்டுமோ என்று தாமதமாக யோசித்து வருந்தினார்.

 

ரேவதியின் முகம் வாடுவதைப் பார்த்து, “என்ன அண்ணி?” எனக் கற்பகம் விசாரிக்கவும், “ஒன்னுமில்லை கற்பகம். இவன் வந்து போறது பிள்ளைகளுக்குத் தெரியுமா?” என்று யோசனையாகக் கேட்டார்.

 

“எல்லாரும் ஸ்கூலுக்கு வேலைக்குன்னு போகும் சமயத்தில் தான் வருவான் அண்ணி. அதிகமா வர அவன் வேலை ஒத்துழைக்காது. ஆனா, எப்பவாவது ஒருமுறை நேரத்தை ஒதுக்கிக் கண்டிப்பா வந்துடுவான். சர்வா வீட்டுக்கு வந்து போறது பத்தி நான் சொல்லுவேன்” என்றார்.

 

கூடவே, “என்ன விஷயம் அண்ணி. சர்வா எதையோ பேசச் சொல்லி சொல்லிட்டு போனான்?” எனத் தான் கவனித்ததைக் குறிப்பிட்டுக் கேட்க, அவனுக்கு வேற வேலை என்ன என ரேவதியால் இப்பொழுது விட்டேறியாக நினைக்க முடியவில்லை.

 

கடவுளை மனதில் நன்கு வேண்டிக்கொண்டு, தயக்கமாக, “அது நம்ம சர்வாக்கு சௌதாவை கேட்கலாம்ன்னு…” என்று இழுத்தார்.

 

கற்பகத்திற்குப் பயங்கர அதிர்ச்சி! “என்ன அண்ணி?” என்று கேட்டே விட்டார்.

 

“சர்வாவுக்கு அவளை ரொம்ப பிடிச்சிருக்காம். அதான் பேசச் சொன்னான்…” என மெதுவாகச் சொல்லவும்,

 

“அண்ணி… நிஜமா தான் சொல்லறீங்களா? எனக்குக் கூட சர்வாவை பார்க்கும் போது இந்த எண்ணம் வரும். ஆனா, இவங்க ரெண்டு பேருக்கும் தான் ஒத்து போகாதேன்னு மேற்கொண்டு யோசிக்க மாட்டேன். இப்ப நீங்க சொல்லும்போது எத்தனை சந்தோஷமா இருக்கு தெரியுமா? இந்த விஷயம் மட்டும் கூடி வந்தா எவ்வளவு நல்லா இருக்கும் தெரியுமா?” என்று ஆர்வமும் ஆசையாகப் பேசுபவரைப் பார்த்து பதிலுக்கு உற்சாகம் காட்ட முடியவில்லை ரேவதியால்.

 

அதை உணர்ந்து, “என்ன அண்ணி? உங்களுக்கு விருப்பமில்லையா?” காற்று போன பலூனாய் முகம் வாடி கற்பகம் கேட்க,

 

“ச்சே! ச்சே! அதெல்லாம் எதுவும் இல்லை கற்பகம்… நம்ம சௌதாவுக்கு சர்வாவை சுத்தமா பிடிக்காதே! அவளுக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இருக்குமான்னு தான்…” என ரேவதி தயக்கமாக இழுக்க,

 

“அட போங்கண்ணி. அவளுக்கு கல்யாணத்துலேயே பொதுவா இஷ்டம் இல்லை. சாமியாரா போற மாதிரி இருப்பா… இவளை எப்படிக் கரை சேத்தறதுன்னு நானே தவிச்சிட்டு இருக்கேன். இவளுக்கு சர்வா தான் சரி. அவன்கிட்ட இவளால வாலாட்டவே முடியாது. இனி என்ன செய்யறான்னு பாப்போம். நீங்க ஒரு பெரிய கவலையை ஊதி தள்ளிட்டீங்க அண்ணி” என்றார் உற்சாகமாக.

 

இப்பொழுது கற்பகத்தின் உற்சாகம் ரேவதிக்கும் மெல்லத் தொற்றிக் கொண்டது.

 

சௌதாமினிக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மையே! அவளைப் போராடி ஒப்புக்கொள்ள வைப்பதென்றாலும் அவள் மனதிற்குப் பிடித்த, அவளின் மனமொத்த ஒருவன் என்றால் அது வேறு விதம்! ஆனால், சர்வாவையோ அவளுக்கு இம்மியும் பிடிக்காது. அவன் என்றாலே அவள் ஒரு காத தூரம் ஓடி விடுவாள்.

 

இந்த சூழலில் பிடிக்காத திருமணம், அதிலும் சுத்தமாகப் பிடிக்காத ஒருவனோடு என்பதை அவளால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? முதலில் அவள் திருமணத்திற்கு சம்மதிப்பாளா? மீறி இவர்கள் சம்மதிக்க வைத்தாலும் அவளது மனநிலை என்னவாக இருக்கும்?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

எனக்கொரு வரம் கொடு 20 – சுகமதிஎனக்கொரு வரம் கொடு 20 – சுகமதி

எனக்கொரு வரம் கொடு – 20 தஞ்சாவூர் மனநல மருத்துவமனைக்கு சர்வேஸ்வரனும் சௌதாமினியும் வந்து சேர்ந்திருந்தனர். கணவனுக்கு நிதானமாக ஒவ்வொரு பகுதியாகச் சுற்றி காட்டிக் கொண்டிருந்தாள் சௌதா. பலரும் கைத்தொழில் எதிலாவது தங்களை முழு அர்ப்பணிப்போடு ஈடுபடுத்தி இருப்பதை மிகுந்த ஆச்சரியத்தோடு

எனக்கொரு வரம் கொடு 24(நிறைவுப் பகுதி)எனக்கொரு வரம் கொடு 24(நிறைவுப் பகுதி)

எனக்கொரு வரம் கொடு – 24 கற்பகத்திற்கு சௌதாமினி செய்து வந்த காரியத்தில் துளியும் உடன்பாடில்லை. அவள் பாட்டிற்குக் கணவனோடு சண்டை போட்டுக்கொண்டு பிறந்தகம் வந்தால், அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? அந்தளவு முதிர்ச்சியற்றவளா மகள்? என வேதனையாக இருந்தது.  

எனக்கொரு வரம் கொடு 12 – சுகமதிஎனக்கொரு வரம் கொடு 12 – சுகமதி

எனக்கொரு வரம் கொடு – 12   சர்வேஸ்வரன், சௌதாமினி இருவருக்கும் நிச்சயத்திற்கான தேதி குறிக்கப்பட்டிருந்தது. கற்பகம் மிகுந்த உற்சாகத்துடன் வளைய வந்தார். செல்லத்துரைக்கும் மனைவியோடு சேர்ந்து மகளின் திருமண விஷயம் பற்றிப் பேசுவது மிகுந்த உற்சாகமளிப்பதாகவே இருந்தது.   அவர்களின்