Tamil Madhura தமிழ் க்ளாசிக் நாவல்கள் தனி வழி 8 – ஆர். சண்முகசுந்தரம்

தனி வழி 8 – ஆர். சண்முகசுந்தரம்

8

பத்து வருஷங்களுக்குப் பிறகு இப்போது நடைபெற்றுக் கொண்டிருப்பதுதான் என்ன? மூன்று தொழிற் சங்கங்களோடு நான்காவது ஒன்றும் உருவாகிச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ‘ஒரு தொழிலுக்கு ஒரு சங்கம்’ என்பது நீதி வாக்கியம் போன்று ஏட்டளவோடு சரி! கடைப் பிடிப்பார் யாரும் இல்லை. நடைமுறைக்கும் வரச் சாத்தியக்கூறுகள் கிடையவே கிடையாது. முதலில் கட்சிகள் தொலைய வேண்டும். கட்சி என்று இருக்கும் போது, ‘எங்கள் கட்சிச் சங்கம் தான் இருக்கட்டுமே’ என்றே அவர்கள் கூறுவார்கள். அரசியலில் பழுத்த, திரு. கிரி போன்றோரே சொல்லிச் சொல்லிப் பார்த்துவிட்டு மௌனமாகி விட்டார்கள்.

சுவாமி விவேகானந்தரை அமெரிக்காவுக்குத் தமிழ்நாடுதான் அனுப்பி வைத்தது என்று பெருமை கொள்வதுபோல் தமிழ்நாட்டில் தான் சென்னை சூளையில் திரு. வாடியா முன்நின்று முதல்முதலில் பஞ்சாலைத் தொழில் யூனியனை நிறுவினார் என்று பூரிப்படையலாம். அதன் பிறகு தான் ஆமதாபாத்தில் மகாத்மா காந்தி தொழிற்சங்கத்தை அமைத்தார். கிட்டத்தட்ட ஒரு நூறு ஆண்டுகள் ஆனபோதிலும், 1881-ல் ‘பாக்டரி’ சட்டம் கொண்டு வந்தது முதல் இன்று வரை எண்ணற்ற மாறுதல்கள். எல்லாம் தொழிலாளர் நலனுக்குத்தான். வேலை நேரத்தை பன்னிரண்டு மணியிலிருந்து எட்டு மணியாகக் குறைத்தும் தொழிலாளர் உலகு இன்று எப்படி இருக்கிறது. மேடையில் அந்த வசதி, இந்த வசதி, இன்ஷூரன்ஸ் பாதுகாப்பு – வைத்திய வசதி – இன்னும் கணக்கற்ற வசதிகள் குறித்து பேசப்படுகிறது. செய்யப்பட்டும் இருக்கின்றன. ஆனால் அவர்கள் பயன்பெற்றது எந்த அளவுக்கு. அது சாரமற்ற பேச்சு! மேலே கதையைக் கவனிக்கலாம் சாரமற்ற ‘தலைமை’ நீடிக்கும் வரை இப்படித்தான் ‘சக்கை’கள் தென்பட்டுக் கொண்டிருக்கும்!

பஞ்சாலைகள் ஒழுங்குடன் இயங்கி கொண்டிருந்தால் தொழிற்சங்கங்கள் தூங்கி வழியும்! போராட்டம் என்றால் தான் கனஜோரை அங்கே பார்க்கலாம். பிரச்சினைகள் சதாசர்வகாலமும் அடிபட்டுக் கொண்டிருக்கும்! பசி, தாகத்தை மறந்து பிறகு சாவகாசமாக வட்டியும் முதலுமாக ‘பிரியாணி’களைத் தீர்த்துக் கட்டலாம் என்ற நினைப்பும் இன்றி – அருமையாகச் செயல்படுவார்கள். பாடுபடாவிட்டால் ‘சந்தா’த் தொகைகள் குவியுமா? சந்தாப் பணத்தில் வளர்ந்தவை தானே சங்கக் கட்டிடங்கள், கார்கள், இதர வசதிகள், அவர்கள் அனுபவிப்பது எல்லாம். எல்லாமே தொழிலாளர்களை மையமாக வைத்து விளையாடுகிற விளையாட்டுத்தான்.

கருப்பண்ணன் சங்கத்திலேயே ‘குடி’ இருந்தான். ஆம் அந்த நிமிஷம் கூட வீட்டிற்குப் போக நேரம் ஏது?

கீரனூரிலிருந்து திரும்பிய நாச்சப்பன் எப்படியோ முதற் காரியமாக கருப்பண்ணனைச் சங்கத்தில் தேடிப் பிடித்துவிட்டான். அவன் காரியதரிசியோடு அந்தரங்கமாக என்னவோ ‘கலந்து’ கொண்டிருந்தான்! மூடாமலிருந்த அந்த அறைக்குள் நாச்சப்பன் சென்று அவர்களுடன் கலந்து விட்டான்!

“வாண்ணா வா” என்று வரவேற்றான். மறுகணமே “நீங்க போங்க அண்ணா. பின்னாலேயே வந்திர்ரேன்” என்றான், காரியதரிசியையும் ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே.

“அடத் தெரியுமப்பா, நீயாவது வரதாவது?” நாச்சப்பன் நம்பிக்கை இழந்து பேசவே, “பிரச்சினைகள் அண்ணா!” என்றான் கருப்பண்ணன் பரிதாபமாக.

காரியதரிசி ரொம்பவும் இங்கிதம் தெரிந்தவர். அவர் ‘டைப்’ பண்ண ஒரு ‘பைலை’ எடுத்துக் கொண்டு அடுத்த அறைக்குச் சென்றார். முக்கியக் கடிதங்களை அவரே டைப் செய்வது வழக்கம்.

“இந்தா கருப்பண்ணா, ராத்திரிக்கு ஊட்டுக்கு வராட்டி அப்புறம் மானமரியாதை எல்லாம் கெடுத்துப் போடுவேன் பாத்துக்கோ” என்றான் உரிமையோடு. சற்று கோபமும் வந்தது. அடக்கிக் கொண்டான்! சங்கம் என்பதனால் அல்ல. அளவுக்கு மீறி மிரட்டினால், தன்னைக் கண்டும் அவன் ‘முக்காடு போட ஆரம்பித்து விட்டால் என்ன பண்ணுவது?

கருப்பண்ணனுக்கு சீக்கிரமாக நாச்சப்பனை அந்த இடத்திலிருந்து தட்டி விட்டு விட வேண்டும் என்ற துடிப்பு!

“ஏண்ணா அப்புறம்?” என்றான் மெதுவாக.

“அப்பறம் என்னடா ராசா? என்னமோ அந்த ‘வளுக்கு வாலு’ ஒளருச்சிண்ணா… அதுக்கென்ன சின்னப்பையன் கூடக் கூட பேசறவந்தான்! நீ அதைக் காதிலே போடுக்கலாமா? யாரோடே சீராடிக்கறது? எனக்குந்தான் அவனை நாலு சாத்தலாமுன்னு இருக்குது! ஆளுக்கு ஆளாகிட்டான். கை வெக்கறது நல்லா இருக்குமா? நீ ஊடு அண்டறதில்லேன்னு அந்த முண்டைப் பிராணி எப்படி இடிஞ்சிபோய் உக்காந்திருக்கறா தெரியுமா?”

“யாரு மாரக்காளா?”

“என்னமோ சீமையிலே இருந்து வந்தவனாட்ட கேக்கறயே! மாரக்காதான். பின்னே அந்தப் புள்ளை குஞ்சாளா நீ வர்லேயேன்னு ‘அக்யான’ப்படும்? அது வள்ளுவளுசல்! இந்த நாயோடேதான் எப்பப் பாத்தாலும் கேலியும் கெக்காந்தமும் அதுக்கு! எனக்கு என்னமோப்பா பொம்பளை கிட்டே வாயைத் தொறந்துகிட்டுப் பேசற ஆளுகளையே புடிக்காது! எம் பையனாப் போச்சு! இல்லாட்டிக் காறித் துப்பிடுவேன்.”

கருப்பண்ணன் தலையை ஆட்டிக் கொண்டிருந்தான். “நீ ஓடக் கானாட்டத் தலையை ஆட்டினாப் போதாது. நாளைக்கு எங்க ஊர்லே இருந்து கிட்டானுக்குப் பொண்ணுக் குடுக்கறவ வாரா! சாதி சனமும் வருதின்னு வெச்சுக்கோ பேச்சு வார்த்தைக்கு. நீ இல்லாட்டி நல்லா இருக்குமா? நல்ல வார்த்தை சொல்றதுக்கு உன்னைப்போல நம்ம மனுசா பக்கத்திலே இருக்க வாண்டாமா?” என்றான். நாச்சப்பன் இயல்பாகப் பேசும் கட்டத்தை அடைந்துவிட்டான் என்பதைக் கண்டு கொண்ட கருப்பண்ணன், “அதுக்கென்னங்க அண்ணா. எல்லா நா மின்னாலே நின்னு செஞ்சிர்றேன் போங்க” என்றான்.

சங்கத்திலிருந்து திரும்பி வருகிற போது நாச்சப்பன் முகத்தில் ஒரு தெளிவு! எடுத்த காரியத்தை முடித்து விடலாம் என்ற நம்பிக்கை. ‘ஆனா மாரக்காகிட்டே மொதல்லே எதையும் சொல்லக் கூடாது’ என்று உறுதிப்படுத்திக் கொண்டான்.

கொஞ்ச தூரத்தில் வரும்போதே கிட்டப்பன் பலமாகச் சிரிக்கும் சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து சிரிப்பலைகள்! ‘பொம்பளைக இப்படி எட்டு ஊட்டுக்கு கேக்கறாப்பலே சிரிக்கறாங்களே!’ என்று நாச்சப்பன் நினைக்கவே அவனையறியாமல் அவனுடைய முகம் கோணலாக வளைந்தது! உள்ளமும் ‘கிறு கிறு’த்தது.

தோழர்களோடு ஒரு முக்கியமான பிரச்சினைக்கு முடிவு காண்பதில் முனைந்திருந்தான் கிட்டப்பன். வழக்கமாக கூடும் நண்பர்கள் குழாம் தான் அது. பழனிச்சாமி உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் போதே திடீரென்று எழுந்து நின்று கொள்வான். பொதுக்கூட்டங்களில் ஆவேசமாகப் பேசும் பிரசங்கி வேகமாகக் கைகளை மேலும் கீழும் ஆட்டும் தோரணையிலே பேசிப் பழக்கம் அவனுக்கு. இடையில் யாரும் குறுக்கிட்டு ஏதும் சொல்லக் கூடாது. அவன் முடிக்கிறவரை யாராவது வாயை அசைத்தால் சைகையிலேயே அவனும் அடக்கிவிடுவான். ஆனால் ‘கீரீச்’சுக் குரலில் பேசும் ரங்கன் அதைச் சட்டை செய்வதே இல்லை. அவன் பாட்டுக்கு இடையில் கேள்வி கேட்காமல் இருக்க மாட்டான். சின்னச்சாமி, திருவேங்கடம், பாலன் முதலானவர்கள் தங்கள் அபிப்பிராயத்தைச் சொல்ல அவசியம் ஏற்பட்டால் தான் வாய் திறப்பார்கள். சிறுகுரல் ரங்கனுக்குப் பயந்து கொண்டு குஞ்சாள் சிரிப்பதை மட்டுப்படுத்திக் கொள்வதில்லை. பெண் பேசுவதுபோல் இருக்கும். அவனுடைய வார்த்தைகள் ‘பிரசங்கத் தோரணை’ பழனிச்சாமியின் ‘அடக்குமுறை’க்கும் கணடனத்திற்கும் ஆளாகும் போது யாருக்குத்தான் சிரிப்பு வராது?

கிட்டப்பன் நிலைமைகளைச் சமாளிக்க நேரிடும். அதாவது ‘காட்டுக்கத்தல்’ கட்டத்தை உஷ்ணமான சொற்போர் பரப்பிவிடும். ‘அட என்னப்பா வீதியிலே போறவங்க எல்லாம் நின்னு இந்தப் பக்கமாகத் திரும்பிப் பார்க்கறாங்க’ என்று சமாதானம் பண்ண வேண்டியும் இருக்கும் சில வேளைகளில்.

அங்கு வருகிறவர்கள் அக்கம் பக்கம் மில்களில் வேலை செய்கிற இளைஞர்கள். கிட்டப்பனுக்கும் மாரக்காளுக்கும் நன்கு பழக்கமானவர்கள், வேண்டியவர்கள். அண்ணன் தம்பி போல் அந்த வீட்டோடு தொடர்பு பூண்டவர்கள். ஆதலால் குஞ்சாளும் ‘குறுக்கே நெடுக்கே’ திரிவதிலோ, பேச்சுக்களில் கலந்து கொள்வதிலோ மாரக்காளுக்கு ஆட்சேபனையோ வித்தியாசமோ கிடையாது. ‘சிறுசுக அப்படித்தான் இருக்கும்’ என்று அவர்கள் போக்கிலேயே விட்டு விட்டாள்.

நாச்சப்பனுக்கு சுத்தமாக அது பிடிக்காது. ‘சினேகிதமெல்லாம் ஊட்டுக்குள்ளே என்னடா?’ என்று கடிந்து கொள்வான். நாளா வட்டத்தில் அதைக் கைவிட்டு விட்டான். அந்த இளையவர்கள் நாச்சப்பனிடம் மிக்க மரியாதையாக நடந்து கொண்டார்கள். ரங்கன் சற்று அதிகப்படி மரியாதை செலுத்தினான் என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால் சிகரெட் பிடிக்கும் பழக்கமுள்ளவன். சம்பளம் வாங்கி பத்து நாட்களுக்கு சிகரெட்களாக ஊதித் தள்ளுவான். காசு தீர்ந்து விட்டால் பீடியே கதி! பீடிப்புகை நாச்சப்பனுக்கு வேப்பங்காய். தப்பித் தவறி நாச்சப்பன் வரும்போது புகையை விட்டுக் கொண்டிருந்தால் அவசர அவசரமாக பீடி நெருப்பை ரங்கன் அணைப்பான். அன்றைக்கும் அப்படித்தான் நடந்தது!

காரசாரமான பேச்சு ‘கப்’பென்று அடங்கிற்று. நின்று கொண்டிருந்த பழனிச்சாமியிடம், “உக்காரதுக்குத்தானப்பா திண்ணையிலே பாய் விரிச்சிருக்குது” என்று சொல்லிக் கொண்டே அங்கு நிற்காமல் நாச்சப்பன் உள்ளே சென்றான். வாசலில் மணல் பரப்பி இருந்தது. உள்ளே சிறு அறை. பின்புறமும் சின்ன அறை என்றாலும் அங்கொரு திண்ணை. வாசல் பின்புறம் கதவு கூட இருந்தது. கதவைத் திறந்தால் திறந்தவெளி. அருகில் காடு. அப்படிக் கச்சிதமான வீடு அந்த வட்டாரத்தில் கிடைப்பது அபூர்வம்! நாச்சப்பனுக்காகவே அவ்வித வீடு அமைந்தது போலும்!

பின்பக்கத்தில் அடுப்பு வேலைகளை முடித்துவிட்டு மாரக்காள் உட்கார்ந்து கொண்டிருந்தாள். மகள் பூக்கட்டி இருக்கிறாள். இந்தக் கனகாம்பரத்தைக் கட்டத் தெரிந்து கொள்ளவில்லை மாரக்காள். அவளுக்குக் கை எங்கே வணங்குகிறது? மகள் கண்ட இடத்தில் பூக்கட்டும் நாரைப் போட்டிருப்பாள். பூக்களையும் சிந்தி இருப்பாள். எதிலும் மகளுக்கு அவசரந்தான். யந்திர வாழ்க்கையே அவசர வாழ்க்கை. அதிலே இளமைத் துடிப்பும் வேகமும் நிறைந்த குஞ்சாளால் ‘அன்ன நடை’ நடந்து கொண்டிருக்க முடியவில்லை.

மீண்டும் நண்பர்களிடையே கலகலப்பாகப் பேச்சு தொடங்கிற்று. கிட்டப்பன் ஆரம்பித்து வைத்தான். “என்னப்பா பேசாமே இருக்கறீங்க? அப்பன் வந்தால் என்ன, வாண்டாம்னா சொல்லுது? இப்பத்தான் உள்ளே போயிட்டுது…”

இடைமறித்தான் பழனிச்சாமி. “ரங்கா, நீ பீடியைப் பற்றவை!”

“நாலுபேருக்கு முன்னால சிகரெட்டிண்ணாவது சொல்லித் தொலைக்கறதுதாண்டா?” என்று கிளறிவிட்டான் சின்னச்சாமி.

“முக்கிய ‘பிரச்சினை’ அடிபட்டுப் போச்சு” என்றான் பாலன்.

“எந்தப் பிரச்சினைக்கும் முடிவு எடுக்கற வழக்கந்தான் நம்ம கிட்டேக் கிடையாதே!” என்று ஒரு சிறு திருத்தம் கொண்டு வர முயன்றான் அங்கண்ணன். அவன் அப்போதுதான் அங்கு வந்து சேர்ந்தான். அங்கணனுக்கு அங்கே வந்தாலே ‘சொரீர்’ என்றிருக்கும்! ஏழெட்டு வருஷங்களுக்கு முன்பு அவன் தான் மாரக்காளுக்கு எடுத்த கைப்பிள்ளை! இரவு பத்துப் பதினொரு மணிவரை பேசிக் கொண்டே இருப்பான். மாரக்காளும் சிங்கநல்லூருக்குப் புதிது! அங்கண்ணன் குடும்பத்தில் முக்கால்வாசிப் பேர் மில் வேலைக்குத்தான் போகிறார்கள். டீக்கடை, சிறுமளிகைக் கடை, நகை நட்டுகளின் பேரில் கொடுக்கல் வாங்கல் இத்யாதி விஷயங்களும் அக்குடும்பத்தில் ‘அடங்கி’ இருந்ததால் பலரும் மதிப்பு வைத்திருந்தார்கள். அவனிடம் பெரியதாகக் குறை ஏதும் கூற முடியாது. சிறு பெண்களைக் கண்டால் அவர்களை விட்டு நீங்க அவனுக்கு மனசு வராது. சிரித்தபடி பேசிக் கொண்டிருப்பான். துணிந்து எந்தத் தப்பும் செய்ய மாட்டான். ஆனால் பழனிச்சாமி அடிக்கடி சொல்கிற மாதிரி, ‘இளிச்சவாய்ப் பட்டம் தானப்பா அதனால் மிச்சமாகும்’ என்பதும் உண்மையே. முன்னர் குஞ்சாளிடம் ‘வளவள’வென்று பேசிக் கொண்டிருந்தான். ஆனால் கிட்டப்பன் வருகைக்குப் பிறகு அந்த இனிய உறவு கனவாய்ப் பழங்கதையாய் நழுவிவிட்டது. கிட்டப்பனே அதிகாரி போலத்தானே தற்போது, ‘அடப் போப்பா! போய்த் தூங்கு!’ என்கிறான். அதற்குப் பதில் வரவேண்டிய இடத்திலிருந்து வருவதில்லையே! மாறாக அங்கண்ணன் திரும்பிய சில நிமிஷங்களுக்குள்ளேயே சிரிப்பொலி பின்னால் விரட்டுகிறது! அவர்கள் இருவரும் தான் சிரிக்கிறார்கள். ‘வாலைச் சுருட்டிக் கொண்டு நாய் ஓடுகிறது!’ என்று எள்ளி நகைக்கிறார்களோ! ஆம், அப்படித்தான் இருக்கும். அத்தி பூத்தாற் போல் இன்று வந்திருக்கிறான். இந்த வாரத்திலேயே மாரக்காள் அவனிடம், “எங்கப்பா ஊட்டுப் பக்கமே வாரதில்லையே?” என்றாள் தேடிப்பிடித்து ஒருநாள். ‘அன்பின் அழைப்பா? அன்புத் தூதின் அழைப்பா? போய்த்தான் பார்க்கலாமே’ என்று வந்திருக்கிறான்.

வந்த சமயம் –

குஞ்சாள் ஒரு தட்டத்தில் வெள்ளரிப்பிஞ்சு, மாங்காய் தர்ப்பூசணிப் பழம் இவைகளை நறுக்கி, அடுக்கி, பூப்போல் எடுத்து வந்து வைத்தாள். பாயின் மேல் தான். ஆனால் முதலில் அங்கண்ணனைப் பார்த்து, “எடுத்துக்குங்க” என்றாள்.

“ஐயோ!” அங்கண்ணன் மெதுவாகச் சொல்லிக் கொண்டான். நல்லவேளை! ‘காது கேட்டிருந்தால் அந்தப் பய காதைத் திருகினாலும் திருகி விடுவான்’ என்ற அச்சமும் அங்கண்ணன் மனசில் உதிக்காமல் இல்லை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

வடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 08வடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 08

அதைக் கேட்ட மகாராஜன் வெகுநேரம் வரையில் ஆழ்ந்து யோசனை செய்தபின் பேசத்தொடங்கி, “இதற்குமுன் இருந்த சிப்பந்திகள் தமது வேலையை ஒழுங்காகச் செய்யவில்லை என்று நான் கவர்னர் ஜெனரலுக்கு எழுதி, மகா மேதாவியும் சட்ட நிபுணருமான இந்த மனிதரை வரவழைத்து திவானாக நியமித்து,

சாவியின் ஆப்பிள் பசி – 26சாவியின் ஆப்பிள் பசி – 26

‘விக்டோரியா மெமோரியல்’ பார்த்துவிட்டு, அப்படியே எதிரில் மியூசியத்தையும் பார்த்தானதும், “அப்பா வீட்டுக்குப் போகலாமா?” என்றாள் சகுந்தலா. “ஏன் இதுக்குள்ளவா களைச்சுட்டே!” என்று கேட்டார் ராமமூர்த்தி. “இதிலெல்லாம் எனக்கு அவ்வளவா இன்ட்ரஸ்ட் இல்லை” என்றாள் சகுந்தலா. “சரி, கொஞ்சம் லேக் பக்கம் பார்த்துட்டு

சாவியின் ஆப்பிள் பசி – 35சாவியின் ஆப்பிள் பசி – 35

நினைக்க நினைக்க மனசில் வேதனையும் ஆச்சரியமும் பெருகியது சாமண்ணாவுக்கு. ‘தொடர்ச்சியாக எந்த பின்னமும் இல்லாமல் என் மீது உயிரை வைத்துள்ள பாப்பாவை உதாசீனப்படுத்தி விட்டேன். இது எவ்வளவு பெரிய தவறு? சில நாட்களே பழகிய சுபத்ரா என்னை அலட்சியப்படுத்துகிறாள் என்று தெரிந்தபோது