எனக்கொரு வரம் கொடு 6 – சுகமதி

எனக்கொரு வரம் கொடு – 6

 

சர்வேஸ்வரனுக்கு வெகுநாட்களாகவே பிரகதீஷ் குறித்துத் தெரிந்திருந்தது. அவன் விடாமல் சௌதாமினியின் நாட்டிய விழாக்களில் பங்கேற்பது மட்டுமல்லாமல், அவளிடம் பேச முயற்சிப்பதையும் தெரிந்து வைத்திருந்தான். உபயம் சௌதாமினியின் ஒப்பனையையும், கால் சீட்டையும் பார்த்துக்கொள்ளும் வளர்மதி அக்கா.

 

சௌதாவைத்தான் நெருங்கவே முடிவதில்லையே! ஆக அவளுடன் பணிபுரிபவர்களோடு நட்பை உருவாக்கி வாய்த்திருந்தான். நட்பு என்று கூட சொல்வதற்கில்லை! ஒருவகையான பரிச்சயம்! நான் சௌதாவுக்கு உறவினன். அவளைக் குறித்து உங்களிடம் தெரிந்து கொள்வேன், அவளின் பாதுகாப்பிற்காக! என்றவாறு தான் விழா கமெட்டியர், சபா நாயகர் முதல் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் வரை அனைவரிடமும் கோடிட்டுக் காட்டி வைத்திருக்கிறான்.

 

இவனுடைய பதவியும், இவன் இயல்பாக சௌதாமினியிடம் பேசுவதையும் கண்ட பிறகு இவன் மகுடிக்கு ஏன் ஆட மாட்டார்கள்?

 

அதிலும் சபாக்களில் இவளின் விவரங்களை யாருக்கும் பகிரக் கூடாது என்று சர்வேஸ்வரன் சற்று அழுத்தியே கூறியிருக்கிறான். தவிர்க்க முடியாத சூழலில் கொடுப்பதாகினும், யாரேனும் விவரங்கள் கேட்டு வந்தாலும் யார் என்ன என்ற விவரங்களை எனக்குத் தெரிவித்து விடுங்கள் என்றும் சொல்லியிருக்கிறான்.

 

சர்வேஸ்வரன் சௌதாவின் விஷயத்தில் சற்று சர்வாதிகாரி தான்! என்னவோ அவளைப் பொத்தி பொத்தி பார்த்துக் கொள்வான். அவனுக்கு அது தவறாகவும் பட்டதில்லை. அவள் பிரபலம் ஆக ஆக, என்னவோ ஒரு அச்சம் அவன் மனதினுள்! அவளின் அன்னை இருந்திருந்தாலும் இந்த அச்சம் எழுவது இயல்பே! அந்த மாதிரி ஒரு கரிசனமான அச்சம் மட்டுமே அவனுள்!

 

பிரகதீஷ் அவளின் விலாசம் மற்றும் இதர விவரங்களை வாங்க சபாக்களில் முயற்சி செய்வதாக தகவல் வந்தபோதே சர்வாவுக்கு அவன்மீது எழுந்திருந்த சந்தேகம் ஊர்ஜிதமாகியிருந்தது.

 

அப்பொழுதுதிலிருந்தே அவனது அடுத்த அடி என்னவாக இருக்கும் என்று கண்காணித்துக் கொண்டே வந்தவனுக்கு, இன்று அவனுடைய பெற்றோர்கள் சௌதாமினியின் வீட்டிற்குச் சென்றிருக்கிறார்கள் என்ற தகவல் கிடைக்கவும், உடனேயே பூபாலனுக்கு அழைப்பு விடுத்து விட்டான்.

 

பூபாலனுக்கு நிறையக் குழப்பங்கள். ஒரு மேரேஜ் புரபோசல் வந்தால், மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்றளவெல்லாம் அவனுக்குத் துளியும் தெரியவில்லை. அந்த வரன் குறித்து விசாரிக்க வேண்டும் என்ற புரிதல் இருந்தாலும், திருமணமே வேண்டாம் என்று அக்கா விடாப்பிடியாகச் சொல்லும்போது, அதையும் மீறி விசாரித்து அக்காவிடம் பேசி ஒப்புதல் பெறுவதெல்லாம் நடக்கிற காரியமா என்று அவனுக்கு மலைப்பாக இருந்தது. சௌதாவின் அடமும், பிடிவாதமும் இந்த விதத்தில் அதிகமாகவே இருந்தது.

 

ஒன்றும் புரியாமல் தவிப்போடும், குழப்பத்தோடும் பூபாலன் இருந்த நேரத்தில் தான் சர்வேஸ்வரனின் அழைப்பு வந்து சேர்ந்திருந்தது. சர்வாவின் சாமர்த்தியம் நன்கு வேலை செய்ததில் பூபாலன் மெல்ல மெல்ல வீட்டில் நடக்கும் விஷயங்களை ஒப்புவித்திருந்தான்.

 

விவரங்களை கேட்கக் கேட்க சர்வாவிற்கு பற்றிக்கொண்டு வந்தது. அதென்ன முந்திரிக்கொட்டை தனம்? சௌதா இவனை அருகில் கூட விட்டதில்லை எனும்போது அவள் மனநிலை புரிந்து விலகியிருக்க வேண்டாமா? அதை விட்டுவிட்டு வேண்டாத வேலையை எதற்குச் செய்கிறான் என்று பிரகதீஷ் மீது எரிச்சலுற்றான்.

 

பூபாலன் எல்லா விவரங்களையும் சொல்லி முடித்தவன், “என்ன செய்யலாம் மாமா?” எனக் கேட்கவும், “சௌதாவுக்கு இதுல விருப்பம் இருக்காது” என்று உறுதியாகக் கூறினான் சர்வா. மேற்கொண்டு இது விஷயமாக எதுவும் செய்யாதே என நேரடியாக சொல்ல முடியாத எரிச்சல் அவனிடம்!

 

சற்றே ஓய்ந்த குரலில், “அது தெரிஞ்ச விஷயம் தானே மாமா. மேற்கொண்டு என்ன செய்யலாம்ன்னு சொல்லுங்க. அக்காவை இப்படியே விட முடியாதே” என இளையவன் மெல்லிய கவலையோடு சொன்னதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும் என சர்வாவுக்கு புரிந்தது.

 

சர்வாவும் சற்று அதிகமாகவே காத்திருக்கத் தொடங்கி விட்டான்! சௌதா இம்மியும் அசரவில்லை என்னும்போது அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணிக்க வேண்டிய கட்டாயத்திற்கு வந்திருந்தான். அதில் அவளது விருப்பம் இம்மியும் இருக்காது என்று தெரிந்த போதும் அவனுக்கு வேறு வழியே இருக்கவில்லை.

 

ஆழ்ந்த மூச்சை உள்ளிழுத்து வெளியேற்றியவன், “நீ சொல்லறதும் சரிதான். இந்த விஷயத்தை நான் பார்த்துக்கறேன். ஆனா, இந்த வரன் சரி வராது…” என்று தெளிவாக சொன்னவன், மெல்லிய இடைவெளியின் பிறகு, “சௌதாவை நான் கல்யாணம் செய்துப்பேன்” என்று கூறவும், பூபாலனுக்கு ஒன்றுமே புரியவில்லை.

 

“மா… மாமா… அது…” என அவன் திணற,

 

“உங்க சித்தப்பா விஷயத்துல பாரபட்சமா நடந்துக்கிட்டதால உங்க அக்காவுக்கு போலீஸ்ன்னா ஒரு விலகல் அதானே?” என்று சர்வா பூபாலனின் திணறல் புரிந்து வினவினான்.

 

“ஹ்ம்ம்…” என்று தயக்கத்தோடே ஆமோதித்தவனிடம், ‘அவளுக்கு என்னைக் கூடத்தான் பிடிக்காது. என்கிட்ட இருந்து தூரமாவே இருக்க நினைப்பா’ என்று வாய்வரை வந்துவிட்ட வார்த்தைகளை வெளியேற விடாமல் அணைக் கட்டி தடுத்தான் சர்வா.

 

பூபாலனிடம் சமாதானமாக, “உன் அக்கா எதை எதையோ குழப்பிப்பா. அவளை நான் சமாளிச்சுப்பேன். நீ இதைப்பத்தி யோசிக்காம நிம்மதியா இரு. சீக்கிரமே நல்ல நியூஸ் சொல்லறேன்” என சர்வா சொல்லவும்,

 

“அக்காவை ரொம்ப கட்டாயப்படுத்த வேண்டாம் மாமா. அவ ரொம்ப பாவம்!” என மென்குரலில் வேண்டுதலாகப் பூபாலன் கூறினான்.

 

‘உங்க வழியெல்லாம் அவளுக்குச் சரிப்பட்டே வராது’ என்று மனதில் எண்ணியவன் அதை இம்மியும் வெளிப்படுத்தாமல், “சரி பூபாலா… நான் பார்த்துக்கறேன். நீ இதைப்பத்தி உங்க சித்திக்கு சொல்ல வேண்டாம். நாங்க முறைப்படி கேட்டா தான் சரியா இருக்கும்” என்று பேசி வைத்தான்.

 

அடுத்த இரண்டு தினங்களில் ஒரு பொது இடத்தில் சௌதாமினியை எதிர்கொண்ட பிரகதீஷ், “உங்களுக்கு இஷ்டம் இல்லைன்னா நீங்களே மறுத்திருக்கலாம்” என்று கோபமாகக் கேட்டபடி வந்து அவளது எதிரில் நின்றான்.

 

யாரென்றே புரியாத பாவனையில் விழித்தவளைப் பார்த்து ஏமாற்றமடைந்தவன், “ஓ காட்… சீரியஸ்லி?!? நிஜமாவே உங்களுக்கு என்னை அடையாளம் தெரியலையா?” என்று வியப்படைந்தான். அவனது முகத்தில் பலத்த அதிருப்தியும், ஏமாற்றமும்!

 

பரிதாபமாக மறுத்துத் தலையசைத்த விதமே அவள் பொய்யுரைக்கவில்லை என்று பறைசாற்றியது!

 

ஆழ்ந்த பெருமூச்சுடன், “என் பேர் பிரகதீஷ். உங்க நாட்டியம்ன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். சமீபமா உங்களோட எந்த விழாவையும் நான் மிஸ் செய்யறதே இல்லை. எல்லா முறையும் அட்டண்ட் செய்துடறேன்” என்று முழுக்க முழுக்க சௌதாவின் ரசிகன் நான் என்பதாக அவன் அறிமுகப்படுத்திக் கொள்ள, அவளும் சிறு புன்னகையோடு அவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

 

ஆனால், பிரகதீஷோ மேற்கொண்டு, “என்னோட பிடித்தம் உங்க நாட்டியத்து மேல மட்டுமில்லை…” என்றபடி சொல்லிவிட்டு நேருக்கு நேராக அவளைப் பார்க்கவும், சௌதாவிற்கு படப்படப்பாக இருந்தது. அச்சத்தில் முகம் வியர்க்க தொடங்கிவிட்டது. என்னவோ இதுபோன்ற சூழல்களை நேரடியாக அதுவும் பொது இடத்தில் எதிர்கொள்வதென்பது அசாதாரணமானதாக இருந்தது. அதிலும் இந்த பிரகதீஷ் என்பவனை அவளுக்குப் பரிச்சயமே இல்லை என்னும்போது இதுபோல அவளால் எப்படி எதிர்கொள்ள முடியும்?

 

பொதுவாக இதுபோன்ற சூழல்களை அவள் எதிர்கொள்ளவே மாட்டாள். விழா முடிந்து பேச நெருங்கிவரும் ரசிகர்களையும் ஒரு புன்னகையுடன் வேகமாகக் கடந்து விடுவதே இதுபோன்ற சூழலை எதிர்கொள்ளும் தைரியம் இல்லாமல் தான்! இப்பொழுதோ நேருக்கு நேராக ஒருவன் வந்து நின்று மனதைச் சொல்லவும், என்ன சொல்ல என அவளுக்குப் புரியவில்லை.

 

பிரகதீஷோ அவளது பதற்றத்தை புரிந்து, “நான் என் காதலை எங்க வீட்டுல சொல்லி… உங்க வீட்டுல பேச சொன்னேன்” என்று விவரத்தைச் சொன்னபோது… இது எப்ப நடந்தது என்று புரியாமல் குழம்பினாள். கூடவே இவனுக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை என்று கடுப்பாகவும் வந்தது.

 

அவனோ, “உங்களுக்கு விருப்பம் இல்லைன்னா நேரடியா மறுத்திருக்கலாம் அதை விட்டுட்டு…” என இழுக்க, இப்படி ஒரு விஷயம் நடந்ததே எனக்குத் தெரியாது. இதுல நான் என்ன செய்திருக்க போறேன் என சௌதா மேலும் குழப்பமுற்றாள்.

 

சரி அதைச் சொல்லத்தானே வந்திருக்கிறான் அவனே சொல்லட்டும் என்று அவன் முகத்தையே அவள் பார்த்திருக்க, “சொல்லுங்க ஏன் இப்படி செய்தீங்க?” என அவன் இவளிடம் கேள்வி கேட்டு நிறுத்த, அப்படி என்னதான் நடந்திருக்கும் எனப் புரியாமல் யோசனையானாள்.

 

“நாங்க எவ்வளவு பாரம்பரியமான குடும்பம் தெரியுமா?” பிரகதீஷின் இந்த கேள்வியில் அவளுக்கு எரிச்சல் மண்டியது. ‘ஆமா! மத்த குடும்பத்துக்கெல்லாம் பாரம்பரியமே இல்லை பாரு!’ என்று மனதிற்குள் கடுத்தவள், முகத்தில் எந்த மாறுதலையும் வெளிக்காட்டவில்லை.

 

“எங்க வீட்டுக்கு ஒரு போலீஸ் வரதும்… இதையெல்லாம் பேசறதும்… எங்களுக்கு இதெல்லாம் எப்படி இருந்ததுன்னு புரியுமா உங்களுக்கு?”

 

‘என்னது போலீஸா? அந்தளவெல்லாம் நாங்க வொர்த் இல்லை ராஜா?’ சற்றே எழுந்த பதற்றமும் அவளுள் அமிழ்ந்து விட்டிருந்தது, பிரகதீஷ் செய்து கொண்டிருந்த பில்டப்பில்!

 

“நீங்க ஒருத்தரை விரும்பினா முன்னாடியே சொல்லி இருக்கலாம் தானே?” சற்றே சீரியஸாக கேட்டவனைப் பார்க்க, இப்பொழுது சிரிப்புதான் வந்தது!

 

மனதில் நினைத்ததை மறைக்காமல், “நீங்க என்கிட்ட முன்னாடியே சொல்லியிருந்தா தானே என்னால சொல்ல முடியும்?” என்றாள் பாவனைகளை வெளிக்காட்டாமல்!

 

அவனுக்குக் கடுப்பாக வந்தது! “எங்க நீங்கதான் உங்ககிட்ட பேசவே விட்டதில்லையே!”

 

“அங்கேயே நீங்க புரிஞ்சிருக்க வேண்டாமா? யாரையும் பேசவே நெருங்க விட மாட்டேங்கறனே… வாழ்க்கையில் எப்படி நெருங்க விடுவேன்னு?”

 

அவளது எதிர்க்கேள்விகள் நியாயமாகவும், இவனை வாயடைக்கும் விதமாகவும் அமைய, “இருந்தாலும்… நாங்க உங்க வீட்டில் சொன்னோம்! நீங்களும் அப்படி சொல்லாம…? அந்த சர்வா வந்து மிரட்டறான்?” என்றான் கடுப்பாக!

 

சௌதாவின் நிதானம் தப்பியது! வடிவான புருவங்களைச் சுருக்கி, “எக்ஸ்கியூஸ் மீ…” என்றாள் அழுத்தமாக.

 

“வாட்?” என்றான் அவனும் எரிச்சல் குரலில்!

 

“அந்த சர்வாவா? டூ யூ நோ ஹூ ஹீ ஈஸ்? அஃப்கோர்ஸ் யூ ஷுட் நோ… அப்பவும் இந்த அலட்சியம்? நாட் பேஃர்!” என்றாள் கரங்களை மார்பின் குறுக்கே காட்டியபடி அவனை அழுத்தமாகப் பார்த்த வண்ணம்!

 

“அ… அது…” என பிரகதீஷ் திணற அவன் முன்பு கையை நீட்டித் தடுத்தவள், “அவரோட புரஃபஸனுக்கு மரியாதை கொடுங்க… இந்த அலட்சியம் ரொம்ப தப்பு! இன்னமும் என்ன நடந்ததுன்னு சொல்லாம… சம்பந்தம் சம்பந்தம் இல்லாம ஏதேதோ பேசிட்டு மட்டும் இருக்கீங்க…” என்றாள் கட் அண்ட் ரைட்டாக!

 

“அதுதான் சொன்னேனே…” என்று அவன் மீண்டும் தொடங்கவும்,

 

மறுப்பாகத் தலையசைத்தவள், “வந்ததிலிருந்து சொல்ல முயற்சி செய்யறீங்களே தவிர, இன்னமும் எனக்கு முழு விவரமும் கிடைக்கலை…” என்றாள்.

 

‘ஹப்பா! இந்த பெண்ணிடம் பேசி…’ என அவனுக்கு அந்த சில நிமிடங்களிலேயே ஆயாசமாக இருந்தது. சொல்ல வந்த விஷயத்தைச் சொல்லும் விதமாக, இவர்கள் வீட்டில் பெண்கேட்டு சென்று வந்தபிறகு, சர்வேஸ்வரன் அவர்கள் வீட்டிற்கு வந்ததையும், இந்த திருமணத்தில் அங்கு யாருக்கும் விருப்பம் இல்லை என்பதையும், அவனும் சௌதாவும் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்பதையும் சொன்னதாக தெரிவித்தான்.

 

சௌதாமினிக்கு கடுப்பாக வந்தது! உனக்கென்ன அதிகப்பிரசங்கி தனம்! ஏன் இப்படி எல்லாம் செய்யற?

 

“அது அவரோட பொஸிஷனுக்கு அவர் வந்து சொன்னா எப்படி?” என்றான் பிடிக்காத பாவனையுடன்.

 

“யூனிஃபார்ம்ல வந்தாரா?”

 

“இல்லை… இல்லை…”

 

“பின்ன என்ன? அவரோட பர்சனல் வேலையை அவர் அசிஸ்டன்ட் கமிஷனர் அப்படிங்கறதுக்காக செய்யாம இருக்க முடியுமா?”

 

“பாருங்க பிரகதீஷ் ஒரு பொண்ணை உங்களுக்கு பிடிச்சிருக்கு. அவளைப் பத்தி உங்க வீட்டுல பேசறீங்க, அவங்க வந்து அந்த பொண்ணு வீட்டுல பேசறாங்க எல்லாம் சரிதான்! ஆனா, அந்த பொண்ணு வீட்டுல இருந்து ஏதோ ஒரு விதத்துல மறுப்பு வந்தபிறகு இப்படி அந்த பொண்ணை வழிமறிச்சு பேசறது உங்களுக்குச் சரியா தோணுதா?”

 

பதிலில்லை அவனிடம்! தொடர்ந்தவளோ, “ஒருவேளை உங்க வீட்டுலயோ எங்க வீட்டுலயோ பேசறதுக்கு முன்னாடி என்கிட்ட பேச முயற்சி செஞ்சிருந்தா ஒரு நியாயம் இருக்கு! அப்ப நீங்க ஒதுங்கினதும் தப்பு! இப்ப வழிமறிச்சு கேட்கறதும் மகா தப்பு! நிராகரிப்பை ஏத்துக்க பயந்து அப்ப என்னை நீங்க நெருங்கலைன்னு என் அபிப்ராயம்! இன்னமும் உங்களால நிராகரிப்பை எதிர்கொள்ள முடியலை போல! அதுதான் இப்படி வந்து பேசறீங்க…” என்றவள், “டேக் யுவர் ஓன் டைம் டு ரிகவர்… டேக் கேர். பை” என்றதோடு அவனிடமிருந்து விலகி வந்திருந்தாள்.

 

பிரகதீஷ் அவளோடான பேச்சில் சற்றே உஷ்ணமானான்! ஆம் சௌதா கூறியது போல அவனால் நிராகரிப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை! போதாக்குறைக்கு குடும்பத்தினர் வேறு வண்டி வண்டியாக ஆலோசனைகள் தந்திருக்க அவனுக்குப் பற்றிக்கொண்டு வந்திருந்தது! இப்பொழுது இவளும் இப்படியெல்லாம் பேசி சென்றிருக்க, அவனது கோபம் பெரும் நெருப்பெனக் கனன்று கொண்டிருந்தது.

 

பிரகதீஷுக்கு சற்றும் குறைவில்லாத புகைச்சலோடும், ஆத்திரத்தோடும் சௌதாமினி இருந்தாள். ‘இவன் ஏன் அந்த பையன் வீட்டில் போய் பேச வேண்டும்…’ என்னும் ஆத்திரம் பெருக, நேராக அவள் சென்றது சர்வேஸ்வரன் இல்லத்திற்கு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

எனக்கொரு வரம் கொடு 3 – சுகமதிஎனக்கொரு வரம் கொடு 3 – சுகமதி

எளிதாகத் தீர்ந்திருந்தது. அதில் மனதினோரம் பெரும் மகிழ்ச்சி அவனுக்கு!   அவனது பார்வையை உணர்ந்தாளா அல்லது எண்ணப்போக்கை உணர்ந்தாளா தெரியவில்லை. “இப்ப உனக்கு சந்தோஷமா இருக்கணுமே? உன் பிரச்சினை எல்லாம் ஒன்னும் இல்லாம ஆயிடுச்சு” என்று சௌதா கேட்ட தொனியே சரியில்லாமல்

எனக்கொரு வரம் கொடு 12 – சுகமதிஎனக்கொரு வரம் கொடு 12 – சுகமதி

எனக்கொரு வரம் கொடு – 12   சர்வேஸ்வரன், சௌதாமினி இருவருக்கும் நிச்சயத்திற்கான தேதி குறிக்கப்பட்டிருந்தது. கற்பகம் மிகுந்த உற்சாகத்துடன் வளைய வந்தார். செல்லத்துரைக்கும் மனைவியோடு சேர்ந்து மகளின் திருமண விஷயம் பற்றிப் பேசுவது மிகுந்த உற்சாகமளிப்பதாகவே இருந்தது.   அவர்களின்

எனக்கொரு வரம் கொடு 13 – சுகமதிஎனக்கொரு வரம் கொடு 13 – சுகமதி

எனக்கொரு வரம் கொடு – 13   நிச்சயதார்த்தம் எப்படி விரைவாக ஏற்பாடானதோ திருமணமும் அவ்வாறே… குறுகிய கால அவகாசத்துக்குள் சர்வா, சௌதாவின் திருமணம் ஏற்பாடாகியிருந்தது.   யார் பார்வையிலும் படாமல் இதற்கு மறைமுக காரணமாக சர்வேஸ்வரன்தான் இருந்தான். ஒவ்வொரு முறையும்