எனக்கொரு வரம் கொடு 4 – சுகமதி

எனக்கொரு வரம் கொடு – 4

 

சௌதாமினி தோழிகளோடு வெளியில் வந்திருந்தாள். அனைவரும் காலையில் புதிதாக வந்திருந்த திரைப்படம் ஒன்றைப் பார்த்துவிட்டு, மதிய உணவை ஹோட்டலில் முடித்துக்கொண்டு அருகிலிருந்த பார்க்கிற்கு வந்திருந்தார்கள்.

 

பெரும்பாலும் திருமணம் ஆனவர்களே! மீதம் இருப்பவர்களும் வரன் பார்த்துக் கொண்டு இருப்பவர்களாகவோ அல்லது வரன் அமைந்து திருமணம் நிச்சயம் ஆனவர்களாகவோ இருந்தார்கள்.

 

அடுத்த மாதம் திருமணம் முடிவாகியிருக்கும் தேவிகா கைப்பேசியும் கையுமாகவே அலைய, “இப்ப எல்லாம் அப்படி தான் இருப்பாங்கடி” என்று கேலி செய்தனர் மணமுடித்தவர்கள்.

 

“ஏன்? ஏன்? அப்பறம் என்னவாம்?” என்று வம்புக்கு வந்தது இன்னொரு தோழி உத்ரா. அவளுக்கும் மூன்று மாதங்களில் திருமணம் தான்! உத்ராவின் அவரால் வேலையிடத்தில் கைப்பேசியை உபயோகிக்க முடியாது என்பதால் அவளது கைப்பேசி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது.

 

“நாங்களும் இப்படி பேசிட்டு இருந்தவங்க தான்டி. இப்ப போன் பண்ணினா… என்ன விஷயம் சீக்கிரம் சொல்லுன்னு சொல்லுவாங்க” என்று ராகமாகச் சிந்து இழுக்க மற்றவர்கள் அவளை ஆதரிப்பது போல, “அதே! அதே!” என்றனர் சிரிப்பினூடே!

 

தோழிகளின் பேச்சை வேடிக்கை பார்த்தபடி மென்சிரிப்போடு அமர்ந்திருந்த சௌதாமினிக்கு எதுவோ உறுத்த, பக்கவாட்டில் தன் பார்வையைச் சுழற்றினாள்.

 

கம்பீர நடையோடு காவல் உடையில் அவர்களை நோக்கி வந்தவன் சாட்சாத் சர்வேஸ்வரனே! அவனைக் கண்டதுமே அவளுக்கு உதறல் எடுத்தது. ‘ஐயோ! இவன் செய்யும் சேட்டைகளுக்கு வரைமுறையே கிடையாதா! ம்ப்ச் இவர்கள் எதிரில் எதையும் செய்ய துணிந்தான் என்றால், என்ன செய்வது?’ என்று பதற்றமானாள்.

 

‘கிட்ட வரட்டும் கத்தி ஊரைக் கூட்டறேன். இன்னைக்கு அவன் இஷ்டத்துக்கு நடந்துக்க முடியாது’ உச்சி மண்டையில் ஏறிய கோபத்தோடு அவள் அமர்ந்திருக்க, கைப்பேசியில் பேசி முடித்து வந்த தேவிகா இவளைக் கவனித்து, “என்னடி எல்லாரும் ஏதோ பேசி சிரிச்சிட்டு இருக்காங்க. நீ மட்டும் இப்படி மூஞ்சியை கடுகடுன்னு வெச்சிட்டு இருக்க?” என்று கேட்டாள்.

 

தன் முகம் அத்தனை வெளிப்படையாகவா பிரதிபலிக்கிறது என்று எண்ணியபடியே, “என்னடி எப்படி தெரியுது?” என்று தன் முகத்தை தன் கரத்தால் தடவியபடியே பரிதாபமாகக் கேட்டவளை பார்த்து, விழுந்து விழுந்து சிரித்தவள், “உன்னோட…” என்று தலையில் அடித்துக் கொண்டாள் தேவிகா.

 

சௌதாமினிக்கு லஜ்ஜையாகப் போய்விட்டது. “சரி சரி பராக்கு பாக்காம இவங்களை கவனி” என முகம் பிடித்து திசை திருப்பி விட்டாள் தேவிகா.

 

அசடு வழியச் சிரித்தபடியே தோழிகள் புறம் திரும்பிய போதும் மனம் தாறுமாறாக அடித்துக் கொண்டது. ‘என்ன இன்னும் காணோம்?’ என்று கடைவிழிப் பார்வையால் நோட்டம் விட, அங்கே அவனைக் காணாமல் அதிர்ந்து போனாள்.

 

‘அவன் வந்தானே! இப்பொழுது எங்கே போனான்? நான் அவனை என் கண்ணால் பார்த்தேனே! அதற்குள் எங்கே போய் விட்டான்? அவனை காணோம் என்றால் அப்பொழுது நான் பார்த்தது அவனது உருவெளித் தோற்றத்தையா? ச்சே! ச்சே! அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. நான் ஒன்றும் அவனை நினைக்கவே இல்லையே… சம்பந்தமே இல்லாமல் அவனது உருவெளித்தோற்றம் எப்படித் தெரியும்?’ கண்டபடி குழம்பிக் கொண்டிருந்தவள், தோழிகளின் சலசலப்பில் கலைந்தாள்.

 

“போலீஸ் எதுக்குடி வந்திருக்காங்க?” என்று ஒருத்தி கேட்க,

 

“தெரியலையே! இரு பார்க்கலாம்” என்று அனைவரும் சுவாரஸ்யமாக வேடிக்கை பார்க்கத் தொடங்கி விட்டனர். இவர்கள் பார்வை சென்ற திசையைப் பார்த்தவளுக்கு அங்கிருந்த சர்வேஸ்வரனைப் பார்த்ததும் சுத்தம் என்று தோன்றியது. விரைவாக அவன் கண்ணில் படாமல் நழுவி ஓடிவிட வேண்டும் என்று தனக்குள் உருப்போட்டுக் கொண்டாள்.

 

“இவரு ஏ.சி.பி., தானே…?” என்று ஒருத்தி வாயைப் பிளந்தாள்.

 

“ஆமாம்டி ஆளு போட்டோல விட நேரிலே செமையா இருக்காருடி” என்று ஜொள்ளினாள் இன்னொருத்தி.

 

இவர்கள் பேசியதைக் கேட்டு நமட்டு சிரிப்புடன் தலையில் அடித்துக் கொண்டாள் சௌதாமினி. ‘அவன் சரியான திமிர் பிடிச்சவன்டி. அவனையோ சைட் அடிக்கறீங்க? அவனைப் பத்தி உங்களுக்குச் சரியா தெரியலை’ என்று அவள் கேலியாக எண்ணி முடிப்பதற்குள், தன்னைப்பற்றி மற்றவர்களுக்குப் புரிய வைக்கத் தொடங்கியிருந்தான் சர்வேஸ்வரன்.

 

பொது இடங்களில் சற்று மறைவான பகுதியில் காதல் என்ற பெயரில் நடக்கும் காம நாடகங்களைப் பிடிக்க அன்று அவன் வந்திருந்தான். உடன் அழைத்து வந்திருந்த டீம், தவறான செய்கைகளைச் செய்தபடி மரங்கள் பின்புறமும், செடிகளின் மறைவிலும் அமர்ந்திருந்தவர்களைத் திரட்டிக் கொண்டு வந்து அவன் முன் நிற்க வைத்தனர்.

 

வந்த ஒவ்வொருவரையும் ஏற இறங்கப் பார்த்தவன் முகம் சுளித்தான். உண்மையில் முகம் சுளிக்கும் படியாகத் தான் இருந்தது. அங்கிருந்த பலரும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளே! பார்த்தாலே மிகவும் சிறிய வயது என்று அப்பட்டமாகத் தெரிந்தது. இவர்களைப் பார்த்ததும் தன் தம்பி வசந்தனின் முகம் சௌதாமினியின் மனதில் வந்து போக முகம் கசங்கினாள்.

 

அனைவரையும் அழைத்து வந்ததும் சர்வேஸ்வரன் அவர்களிடம், “பெயர், வயது, ஊர்” என பொதுவாக விசாரித்தான். அதுவரை அவன் வார்த்தைகள் மிகவும் சாதாரணமாகவே வெளிவந்தது.

 

ஆனால், அதையெல்லாம் விசாரித்து முடித்துவிட்டு, “பார்க்கில் வசதி பத்தாதே! ஹோட்டல் இல்லாட்டி லாட்ஜில் ரூம் புக் பண்ணித் தரச் சொல்லட்டுமா?” என்று நக்கலாகக் கேட்க, ஏற்கனவே போலீஸ் என்ற பயத்தில் இருந்தவர்கள், இவன் இவ்வாறு கேட்டதும் அவமானத்தில் குன்றிப் போயினர்.

 

ஒரு பெண்ணை பார்த்து, “என்னம்மா ரேட் எல்லாம் எப்படி சார்ஜ் செய்யறீங்க. ஹவர்லி சார்ஜஸா இல்லை டே பேமெண்ட்டா?” என்று கேட்க,

 

“சார்” என்று எகிறினான் உடன் வந்தவன்,

 

அவனது முட்டியிலேயே லத்தியால் ஒரு சாத்து சாத்திய சர்வேஸ்வரன், “என்னடா துள்ளற? பொது வெளியில அந்த பொண்ணோட அந்தரங்கத்தைக் கடை பரப்பும் போது உனக்கு எங்கே போச்சு இந்த ரோஷம்? அத்தனை அரிப்பு நாயுக்கு. கல்யாண வயசு என்னன்னு தெரியுமா டா நாயே! அதுக்குள்ள இப்படி மேஞ்சு பாக்காட்டி என்ன? சில விஷயங்களை மெதுவா தெரிஞ்சுக்கலாம்ன்னு சொன்னா அதை விட்டுடுங்க. உடனே தெரிஞ்சுக்கிட்டு என்னத்தை புடுங்க போறீங்க? படிக்கிற வழியை காணோம். உருப்படியா படிச்சு நல்ல வேலை வாங்க துப்பில்லை. இதுக்கு மட்டும் நாக்கை தொங்க போட்டுட்டு வந்திடுவீங்க” என்று சர்வேஸ்வரன் விளாசிய விளாசில் அத்தனை பேரும் குற்றவுணர்வில் தலை கவிழ்ந்தனர்.

 

“என்னடி இப்படி பச்சை பச்சையா திட்டறான்?” சிந்து பரிதாபமாக விழிக்க, ‘இதெல்லாம் ரொம்ப ரொம்ப கொஞ்சம். அவன் இதுக்கும் மேலயே செய்வான்’ என்று மனதிற்குள் எண்ணியபடி சிந்துவை நக்கல் பார்வை பார்த்தாள் சௌதாமினி.

 

“நல்ல வேளை இவன் நம்ம படிக்கும்போது ரௌண்ட்ஸ் வரலை…” என ஒருத்தி பெருமூச்சு விட,

 

“வந்திருந்தா சஞ்சனா படிக்கிற வயசிலேயே கர்ப்பமாகி, யாருகிட்டேயும் சொல்லப் பயந்து கருவை கலைக்கத் தாமதம் பண்ணி கடைசியில உயிரை இழந்திருக்க மாட்டா” என்று சட்டென்று தேவிகா அவர்களின் தோழியை நினைவு படுத்த அனைவரின் முகமும் சஞ்சனாவின் நினைவில் வாடியது. உண்மைதானே தட்டி கேட்க யாருமே இல்லாத வரைமுறையற்ற சுதந்திரம்; எடுத்துச் சொல்ல யாருமிருந்தாலும் அதைக் காது கொடுத்துக் கேட்காமல் இளமையின் வேகத்தில் சீரழிபவர்கள் எத்தனை எத்தனை? சஞ்சனாவைப் போல! அனைவருமே மனம் கலங்கினர்.

 

இங்கிருக்கும் பெண்களுக்கும் அவளது நிலை வர எத்தனை நாட்கள் ஆகிவிடப்போகிறது? ஆக இவனின் கண்டிப்பு சரியே என்பது போல அவனைப் பார்த்திருந்தனர்.

 

சர்வேஸ்வரன் அங்கிருந்த பெண்களையும் விடுவதாக இல்லை. “படிக்க வெளியூருக்கு நம்பி அனுப்பினா, இங்கே நம்மைக் கண்காணிக்க யார் இருக்கான்னு தைரியத்துல விபச்சாரம் செய்ய தொடங்கிடுவீங்களா? இப்ப இவன் செய்யறது சுகமா இருக்கும். நாளைக்கு இவனை வேண்டாம்ன்னு முடிவு பண்ணின பிறகும் உடம்பு சுகத்துக்காக அரிக்கும். உடனே இன்னொருத்தனோட இதையே செய்யக் கூச்சமே இல்லாமா இதே இடத்துக்கு வருவீங்க. உண்மையை சொல்லுங்க யாருக்கெல்லாம் இது முதல் காதல்?”

 

அங்கிருந்த பெண்களுக்கு அவன் கேட்ட கேள்விகளில் உடலெல்லாம் கூசியது. என்ன இத்தனை தரக்குறைவாகப் பேசுகிறான் என்று குன்றிப் போனார்கள். அதிலும் சர்வேஸ்வரனின் கணீர் குரலால் சுற்றியுள்ள அனைவரும் வேடிக்கை பார்க்க, அவர்களால் தலையை நிமிர்த்தவே முடியவில்லை.

 

“என்னம்மா டிரெஸ் இது? இதைப்பார்த்துத் தான் இவன் மயங்குவான்னு நினைச்சியோ? இல்லை இதை மாட்டினாலாவது இவன் உன்னைத் திருப்தி படுத்தறானான்னு பார்த்தியா? எப்படிச் சரியா திருப்தி படுத்திட்டானா? இல்லை வேற கிராக்கி எதையும் பார்க்கணுமா?”

 

“உனக்கென்னடா? இவ இழுத்து போத்திட்டு வந்திருந்தாலே நீ கலைச்சு பார்த்துத் தான் திருப்தி ஆவ. இதுல அவளே உனக்கு ஏத்த விதமா வரவும் மேஞ்சு முடிச்சிட்டியா? இல்லை இன்னும் மிச்சம் மீதி எதுவும் இருக்கா…” தயவு தாட்சண்யமேயின்றி வார்த்தைகளால் விளாசினான்.

 

“அச்சோ! ரொம்ப ரொம்ப பச்சை பச்சையா பேசறானே…” என்று உத்ரா சொல்ல, “ஹ்ம்ம் ஆமாம்டி” எனப் பரிதாபமாக விழித்தனர் மற்றவர்கள். இவர்களின் முகம் போன போக்கை பார்த்து வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டாள் சௌதாமினி. கூடவே இவன் எப்படி வசந்தனை மட்டும் அப்படியே விட்டுவிட்டான். இந்த சாட்டையடிகளை அவனுக்கு ஏன் வழங்கவில்லை என்று யோசித்தவளுக்குக் குழப்பமே மிஞ்சியது.

 

பூஜைகள் எல்லாம் அன்றிரவு வசந்தன் சர்வேஸ்வரனுக்குக் கைப்பேசியில் அழைத்து நன்றி சொன்னபோதே முடிந்திருந்தது. என்ன அதெல்லாம் இவளுக்குத் தான் தெரிந்திருக்கவில்லை!

 

“என்ன உங்க வீட்டுல வந்து சொல்லும் வரை பப்ளிக் நியூஸன்ஸ்ன்னு உங்க எல்லாரையும் உள்ளே தள்ளிடலாமா?” என்று நிதானமாக சர்வா கேட்க,

 

“வேணாம் சார். வேணாம் சார்” எனக் கதறினார்கள் அனைவரும்.

 

‘தெரியாம செஞ்சிட்டோம்ன்னு மட்டும் எவனும் சொல்லிடாதீங்கடா. அவனுக்கு செம கோபம் வந்திடும்’ என்று சௌதாமினி மனதிற்குள் உருப்போட்டு முடிக்கவில்லை அதற்குள் அதே வார்த்தைகளை ஒருவன் சொல்லி விட்டான்.

 

அவ்வளவுதான் அவன் கன்னம் பழுக்குமளவு ஒரு அறை. நிச்சயம் காது ஜவ்வே கிழிந்திருக்கும்.

 

“தெரியாமையா செஞ்ச?” வெகு கூர்மையாக அவன் கேட்க, எதிரில் நின்றவனுக்கு சர்வமும் அடங்கியது.

 

“நாயே! இன்னொருமுறை இப்படி விபச்சாரம் செய்ய நடு வீதிக்கு வந்த… என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது…” என்று கர்ஜித்தவன்,

 

“காதலாம்… கத்திரிக்காயாம்… மண்ணாங்கட்டியாம்… காதலிக்கிறவங்க வாழ்க்கையை பகிர்ந்துக்கத் தான் ஆசைப்படுவாங்க. இப்படி அரிப்பை தணிச்சுக்க இல்லை” என்று கத்த, எதிரில் இருந்தவர்கள் அவமானத்தில் குன்றிப் போயினர். பெண்களுக்கு அவன் சொற்களிலிருந்த கடினம் தாங்க முடியாமல் கண்ணீரே வந்துவிட்டது.

 

சர்வேஸ்வரன் தன்னுடன் வந்த கான்ஸ்டபிள்களை அழைத்து, அனைவரின் விவரங்களையும், கையெழுத்தையும் வாங்கிக்கொண்டு, அனைவரையும் புகைப்படமும் எடுத்துக்கொண்டு, அனுப்பி விடும்படி பணித்தவன், மனதின் இறுக்கம் தளர்த்தும் விதமாகச் சற்று அங்கிருந்து நகர்ந்தான்.

 

“மழை பெஞ்சு ஓஞ்ச மாதிரி இருக்குடி” என்று உத்ரா சொல்ல, அனைவரும் ஆமோதித்தனர்.

 

“என்ன ஆளுமை? என்ன கம்பீரம்?” என்று சிந்து சிலாகிக்க, இதுங்க திருந்தாதுங்க என்பதுபோல பார்த்தாள் சௌதாமினி.

 

மெல்ல தோழிகளிடம், “கிளம்புவோமாடி?” என்று பேச்செடுக்க,

 

“அதுக்குள்ள என்னடி தில்லானா? இன்னைக்கு எல்லாரும் ஒன்னா இருக்கணும்ன்னு ஏற்கனவே பிளான் செஞ்சது தானே?” என்று ஒருத்தி முறைத்தாள்.

 

“அதில்லைடி நேரமாயிடுச்சே!” என்று இழுத்தவளிடம், “மணி நாலு கூட ஆகலை” என்று ஒருத்தி பொரிந்து தள்ளினாள்.

 

‘இவளுங்க வேற நிலைமை தெரியாம…’ என மனதோடு அலுத்துக் கொண்டவள் வேறு வழியின்றி அமைதி காத்தாள்.

 

ஊருக்கு உபதேசம் செய்யும் சர்வேஸ்வரன் பார்வையில் தான் விழாமல் இருக்க வேண்டுமே! என்ற கவலை அவளுக்கு. அதை மற்றவர்களுக்கு எப்படி எடுத்துச் சொல்லிப் புரிய வைப்பது? ஆக வேறு வழியின்றி அங்கேயே அமைதியாக இருந்தாள்.

 

ஆனால், உண்மையில் எடுத்துச் சொல்ல வேண்டியதென்னவோ சௌதாமினிக்கு தான்! அன்று பிரௌஸிங் சென்டரில், அந்த சூழலுக்கு அப்படி நடந்து கொண்டானே தவிர, அதுபோக வேறு எந்த சூழலிலும் அவன் கண்ணியம் தவறியதேயில்லை! விதிவிலக்கு என்றால் அவனது விழிகளைக் குறிப்பிட்டுச் சொல்லியே ஆக வேண்டும்! அது மட்டும் சௌதாமினி என்ற பெண்ணிடம் கண்ணியத்தை கடைப்பிடிக்காது.

 

அதேசமயம் பிரௌசிங் சென்டரில் இவளை அன்றி வேறு யார் இருந்திருந்தாலும் அவனால் இவ்வாறு செய்திருக்க முடிந்திருக்காது. நன்கு யோசித்திருந்தால் இவளுக்கும் அது உரைத்திருக்கும்.

 

அவனது கண்ணியத்தைப் பற்றி சில நொடிகள் யோசித்திருந்தாலும் சௌதாமினியால் புரிந்து கொண்டிருக்க முடியும். ஆனால், அவன் மீதிருக்கும் கோபமும், வெறுப்பும் அவளது கண்களை மறைத்து, மூளையையும் மழுங்கச் செய்தது. அதில் முன்னிலும் அதிகம் ஒதுங்க நினைத்தாள்.

 

தன் முகத்தைத் துப்பட்டாவாலும், கரத்தாலும் மறைத்தபடி அமர்ந்திருந்தவளுக்கு, சர்வேஸ்வரன் அவளைக் கவனித்ததோ, அவள் தன்னிடமிருந்து அவளை மறைத்துக்கொள்ள முயன்று கொண்டிருக்கிறாள் என்று கணித்து முகம் சுணங்கியதோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

 

காவல்துறையினர் அங்கிருந்து அகலும் வரையிலுமே முகத்தைப் பெருமளவு மறைத்தே அமர்ந்திருந்தாள்.

 

“என்னடி ரொம்ப நேரமா என்னவோ மாதிரியே இருக்க. என்னாச்சு?” என்று உத்ரா உலுக்கினாள்.

 

“வந்ததுல இருந்தே இப்படித்தான்டி இருக்கா…” என்று தேவிகாவும் எடுத்துக் கொடுக்க,

 

“என்னடி தில்லானா ஏதாவது நாதஸ்வர வித்துவானைப் பார்த்துட்டியா? காதல் கடலில் குதிச்சு எதுவும் வெச்சுடாதடி…” என தோழிகள் கேலி செய்ய,

 

“ச்சு… வாயை மூடுங்கடி எப்ப பாரு காதல், கல்யாணம்ன்னு… வாழ்க்கையில வேற எதுவுமே இல்லையா?” என்று சௌதாமினி எரிந்து விழுந்தாள்.

 

அவள் எரிந்து விழுந்ததைக் கண்டுகொள்ளாமல், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டவர்கள், “இந்த வயசுல கல்யாணத்தைப் பத்தி பேசாம வேற என்னத்த பேசிப்பாங்க” என்று அப்பாவிகள் போலக் கேட்டுக் கொண்டனர்.

 

“உங்களை…” என்றவளுக்கு அவர்களது பாவனை சிரிப்பைத் தரக் கோபம் மறந்து சிரித்தாள்.

 

“முத்தி போச்சு…” என அதற்கும் கேலி செய்தார்கள் அவளுடைய தோழிகள். பேச்சும், சிரிப்புமாக மாலை வரை தோழிகளோடு நேரம் செலவிட்டுவிட்டு அனைவரும் அவரவர் இல்லம் சென்றனர்.

 

வீட்டிற்குச் செல்லும் வழியில் சௌதாமினியின் நினைவுகளை சர்வேஸ்வரனே ஆட்கொண்டான். அவனது முரட்டுத்தனமும், அதிரடியும், பேச்சும்… ஹப்பா நிச்சயம் இனி அந்த பிள்ளைகள் மறுமுறை தப்பு செய்யத் துணிய மாட்டார்கள் என்று எண்ண வைத்தது. சாட்டையால் அல்லவா அடித்திருக்கிறான் என்று அவன் செய்கைகளைப் பிரமிப்பாக நினைத்துக் கொண்டாள்.

 

சர்வேஸ்வரனுக்கு ஒருமாதிரி இருந்தது. சௌதாமினி ஒவ்வொரு முறையும் தன்னை கண்டால் விலகி ஓடுவதையும், ஒதுங்கி இருப்பதையும் வாடிக்கையாகக் கொண்டிருப்பது அவனுக்கு மிகுந்த எரிச்சலைத் தந்தது.

 

‘என்னைத் தெரியாத அவளுக்கு? அப்படியென்ன என்னிடம் ஒதுக்கம்?’ என மனதிற்குள் புகைந்து கொண்டிருந்தான்.

 

எரிச்சலான மனநிலையில் அவன் இருந்தபோது, அந்த அழைப்பு வந்தது. அதை ஏற்றவன், தனக்கு வந்த தகவலில் பரபரப்பானான்.

 

“எந்த இடம்? உடனே வரேன்” என்று எதிர்முனையில் இருந்தவர்களிடம் சொன்னவன், பதில் வந்ததும் ஜீப் டிரைவரிடம், “மலர் மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டலுக்கு போங்க” என்று பணித்தான்.

 

சர்வேஸ்வரன் மருத்துவமனையை அடைந்தபோது, இவனுக்கு முன்பே இவனுடைய அசிஸ்டண்ட்ஸ் பிரசாந்த்தும், ஓவியாவும் அவ்விடத்திற்கு வந்து சேர்ந்திருந்தார்கள்.

 

“லோக்கல் இன்ஸ்பெக்டர் வந்தாச்சா?”

 

“எஸ் சார் அவங்க தான் முதல்ல வந்தது”

 

“கிரௌட் கிளியர் பண்ண சொல்லாம என்ன செய்யறீங்க? இங்க எதுக்கு இத்தனை கூட்டம்?” அவர்களை அர்ச்சித்தபடியே அவர்களோடு இணைந்து மருத்துவமனையின் வலதுபுறம் அமைந்திருந்த பிளாக் நோக்கிச் சென்றான்.

 

“இதோ சார்…” என்ற பிரசாந்த் லோக்கல் இன்ஸ்பெக்டரை அணுகி அவ்விடத்தின் கூட்டத்தை கிளியர் செய்யச் சொல்ல, அதற்கான வேலைகள் துரிதமாக நடந்தது.

 

அதற்குள் ஓவியாவோடு அந்த பிளாக்கை நெருங்கியிருந்த சர்வேஸ்வரன், “பாரன்ஸிக் (Forensic) டிபார்ட்மெண்ட்டுக்கு சொல்லிட்டீங்களா?” என்று விசாரித்தான்.

 

“வந்திட்டே இருக்காங்க சார்…” என்று ஓவியா பதிலளித்த போது அங்கிருந்த லிப்ட் இயங்கும் பகுதிக்கு வந்திருந்தனர்.

 

அங்கே மருத்துவமனையில் முக்கிய பொறுப்பில் இருக்கும் சிலர் நின்றிருக்க, அவர்களிடம் மரியாதை நிமித்தம் ஒரு தலையசைப்பை மட்டும் கொடுத்துவிட்டு, அந்த லிப்ட்டை நோட்டம் விட்டான். உள்ளே ஒரு மனித எலும்புக்கூடு இருந்தது.

 

இந்த மின்தூக்கி கடந்த சில வருடங்களாகப் பயன்பாட்டில் இல்லாமல் இருக்கிறது. இந்த கட்டிடத்தை ஒட்டி புதிதாக ஒரு கட்டிடம் கட்ட்டப்பட்டு அதில் நவீன வசதியுடன் கூடிய மின்தூக்கி இணைக்கப்பட்டிருந்த படியால், இதை சீர்ப்படுத்த பெரிதாக அக்கறை காட்டாமல் விட்டு விட்டார்கள்.

 

சமீபத்தில் தான் இதையும் சீரமைத்தால் உபயோகமாக இருக்கும் என்று முடிவு செய்யப்பட்டு அதனை பழுது பார்க்கும் வேலைக்கு ஒரு ஆளை வரச் சொல்லியிருக்க, இன்று காலையில் வந்தவன், கிட்டத்தட்ட சில ஆண்டுகளாக மூடியபடியே இருந்த மின்தூக்கியைத் திறக்க வெகுவாக சிரமப்பட்டுப் போனான்.

 

ஒருவழியாக அதனைப் போராடி திறந்தவன், உள்ளே கண்ட காட்சியில் கத்தி கதறியிருக்கிறான். அவனது சத்தத்தில் கூடியவர்களுக்கும் பயங்கர அதிர்ச்சியே! ஏனென்றால் அவர்கள் உள்ளே கண்டது ஒரு மனித எலும்புக்கூட்டை.

 

உடனடியாக காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுக்கப்பட, அவர்களும் விரைந்து வந்திருந்தனர்.

 

ஓவியாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “இந்த லிப்ட் எப்ப இருந்து பயன்பாட்டில் இல்லை?” என்று மருத்துவமனை ஊழியர்களிடம் சர்வேஸ்வரன் விசாரிக்க,

 

ஓவியா அவன் குறிப்புணர்ந்து அவனது விசாரணையை ரெகார்ட் செய்யத் தொடங்கியிருந்தாள்.

 

“கிட்டத்தட்ட மூணு வருஷத்துக்கும் மேல இருக்கும் சார்”

 

“லிப்ட்டுக்கு ஆபரேட்டரா யாரும் வேலை செஞ்சாங்களா?”

 

“இல்லை சார் அப்படி யாரையும் போடலை. வாட்ச்மேன் இருந்தான் அவனே பார்த்துப்பான். இந்த லிப்ட் போட்டதிலிருந்தே அடிக்கடி ரிப்பேர் ஆகும் சார். அப்ப புது பிளாக் வேலை வேற நடந்ததால, இதை யாரும் பெருசா கவனிக்கலை சார்”

 

“அந்த வாட்ச்மேன் எங்கே?”

 

“இல்லை சார் அவன் போன வருஷம் சொந்த ஊருக்கு போகணும்ன்னு வேலையை விட்டு நின்னுட்டான்…” என்று பதில் வரவும், சர்வேஸ்வரனின் புருவங்கள் முடிச்சிட்டது. அவனது வலது கையிலிருந்த பெருவிரல் நகத்தைச் சுற்றி ஆட்காட்டி விரல் வட்டமிட்டுக் கொண்டிருந்தது.

 

பொதுவாக இப்படி சிறு சிறு விஷயத்தையும் சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது அவனது வாடிக்கை. அவனது நடவடிக்கைகளைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

எனக்கொரு வரம் கொடு 20 – சுகமதிஎனக்கொரு வரம் கொடு 20 – சுகமதி

எனக்கொரு வரம் கொடு – 20 தஞ்சாவூர் மனநல மருத்துவமனைக்கு சர்வேஸ்வரனும் சௌதாமினியும் வந்து சேர்ந்திருந்தனர். கணவனுக்கு நிதானமாக ஒவ்வொரு பகுதியாகச் சுற்றி காட்டிக் கொண்டிருந்தாள் சௌதா. பலரும் கைத்தொழில் எதிலாவது தங்களை முழு அர்ப்பணிப்போடு ஈடுபடுத்தி இருப்பதை மிகுந்த ஆச்சரியத்தோடு

எனக்கொரு வரம் கொடு 8 – சுகமதிஎனக்கொரு வரம் கொடு 8 – சுகமதி

எனக்கொரு வரம் கொடு – 8   வசந்தனிடம் தொடர்ந்து பாராமுகம் காட்டுவதே சௌதாமினியின் வாடிக்கையாக இருந்தது. போகக்கூடாத எல்லை வரை போய் வந்தவனை நொடியில் மன்னிக்க அவளால் முடியவில்லை. அதுவும் குடும்பம் இருக்கும் சூழ்நிலையில் எத்தனை பொறுப்போடு அவன் இருந்திருக்க

எனக்கொரு வரம் கொடு 7 – சுகமதிஎனக்கொரு வரம் கொடு 7 – சுகமதி

எனக்கொரு வரம் கொடு – 7   ரேவதி சௌதாமினியின் திடீர் வரவை எதிர்பாராமல் திகைத்துப் போனவர், “வாடாம்மா வா… என்ன திடீர்ன்னு இந்த பக்கம்? சித்தி, சித்தப்பா எல்லாம் எப்படி இருக்காங்க?” என்று ஆவலோடு வரவேற்றார்.   “எல்லாரும் நல்லா