எனக்கொரு வரம் கொடு 3 – சுகமதி

எளிதாகத் தீர்ந்திருந்தது. அதில் மனதினோரம் பெரும் மகிழ்ச்சி அவனுக்கு!

 

அவனது பார்வையை உணர்ந்தாளா அல்லது எண்ணப்போக்கை உணர்ந்தாளா தெரியவில்லை. “இப்ப உனக்கு சந்தோஷமா இருக்கணுமே? உன் பிரச்சினை எல்லாம் ஒன்னும் இல்லாம ஆயிடுச்சு” என்று சௌதா கேட்ட தொனியே சரியில்லாமல் இருக்க, எச்சில் கூட்டி விழுங்கியபடி திருதிருத்து பார்த்தான்.

 

“எல்லாம் உன்னால வந்தது. நீ இதையெல்லாம் இழுத்து வைக்காட்டி எதுக்கு அங்கே போக போறோம்?” என்று காய்ச்சி எடுத்தாள்.

 

மாமா செய்த திருவிளையாடல்களுக்கு அக்காவிடம் தான் அனுபவிக்கிறோம் என்று அவனுக்குப் புரிந்து விட்டது. அக்கா இத்தனை கோபத்தில் இருக்கும்போது நாம் வேறு எதையாவது பதிலுக்குப் பேசி நிறைய வாங்கி கட்டிக்கொள்ளப் போகிறோம் என்ற அச்சத்தில் வாயைப் பூட்டுப் போட்டு மூடிக் கொண்டான்.

 

தம்பியை கடிந்து கொண்டாலும் அவளது கோபம் குறைவதாக இல்லை. எத்தனை இயல்பாக, தன்னிச்சையாகத் தெரிவது போல தன் கைவளைவிற்குள் என்னை வைத்துக் கொண்டான். அவனுக்கு எத்தனை தைரியம் இருக்க வேண்டும்? என்று நினைக்க நினைக்க ஆத்திரம் தலைக்கேறி அவளது மண்டையைச் சூடாக்கியது.

 

வேலை விஷயமாக பொது இடத்திற்கு வந்திருக்கிறோம் என்றில்லை. சுற்றிலும் ஆட்கள் இருக்கிறார்கள் என்றில்லை. அவனது பொறுப்பான பதவியைப் பற்றி யோசிக்கவில்லை. எதிரில் நின்றிருந்த எனது கோபம் பொருட்டில்லை. எனது மறுப்பையும் கண்டுகொள்ளவில்லை. இவனால் மட்டும் எப்படி இதுபோல இருக்க முடிகிறது? ஆத்திரத்தில் பற்களைக் கடித்தாள்.

 

அதிலும் எப்பொழுதுமே துளியும் பொறுத்தமில்லாமல் சௌதி என்றோ, தாமு என்றோ அழைப்பான். சௌதி என்பது அரேபிய நாட்டை சொல்வது போல இருக்கும். தாமு என்று ஆண் பெயரிட்டு அழைத்தால் அவளுக்குப் பற்றிக்கொண்டு வரும். ஆனாலும், வேண்டுமென்றே வீம்புக்கு அப்படியே தான் அழைப்பான். அவளுக்குப் பிடிக்காது என்று தெரிந்திருந்தும் தன் வழக்கத்தை மாற்றிக் கொள்ள மாட்டான். அதுதான் அவன்! அவன் என்ன நினைக்கிறானோ அதை மட்டுமே செயல்படுத்தும் திமிர் பிடித்தவன், திமிரின் பேரரசன்! அடங்காத காளை!

 

சர்வேஸ்வரன் இருக்கும் இடத்தில் இருக்கக் கூட சௌதாமினிக்கு பிடிக்காது. அவன் வடக்கில் வருகிறான் என தெரிந்தால், இவள் தெற்கில் நழுவியிருப்பாள்.

 

இன்று போதாத காலம் அவன் இருக்கும் இடத்திற்குத் தானாகச் சென்று மாட்டிக் கொண்டது. இந்த புகைச்சல் இன்னும் சில நாட்களுக்கு இருக்கும். அவனது மகிமை அப்படி!

 

அந்த மகிமையின் பயனாய், ‘ம்ப்ச்! என்னை எப்படி அவன் அணைக்கலாம்?’ என மீண்டும் மீண்டும் அவன் செய்த செயலே மனதில் காட்சியாய் தோன்றி அவளுக்குள் எரிச்சல் மூண்டு கொண்டேயிருந்தது.

 

வீடு வந்து சேர்ந்த போது, மலரென கிளம்பிச் சென்றிருந்தவள், நெருப்பு மலரெனத் திரும்பியிருந்தாள்.

 

அவளது தோற்றமே நெருங்கத் தக்கதாக இல்லாமலிருக்க, என்னாச்சு? என்று வசந்தனிடம் ஜாடையில் விசாரித்தார் கற்பகவள்ளி.

 

அவனோ திருத்திருத்து நின்றான். “என்னம்மா கிளாஸ் எந்த டைம்? பீஸ் எப்படி? அது படிச்சா உபயோகமா இருக்குமா?” என்று மகளிடம் கேள்விகளை அடுக்கினார் கற்பகவள்ளி.

 

“என்னமோ சரிப்பட்டு வரலைம்மா…” என்று எரிச்சலாக மொழிந்துவிட்டு அறைக்குள் அடைந்து கொண்டாள். செல்லும் மகளின் முதுகையே யோசனையாக வெறித்தது கற்பகவள்ளியின் விழிகள். இந்த அம்மா என்ற அழைப்பு அத்தனை எளிதில் வருவதில்லை. வந்திருக்கிறதென்றால் அவள் இயல்பாக இல்லை என்றே பொருள்!

 

வசந்தனிடம் விசாரித்த போதும், எங்கே தன் குட்டு வெளிப்பட்டு விடுமோ என்று மழுப்பலாகவே பதிலளித்தான்.

 

உள்ளே வந்து படுக்கையில் சரிந்த பிறகும், சௌதாமினியால் நடந்த எதையும் மறக்கவோ, ஒதுக்கவோ முடியவில்லை. நான் தையா தக்கான்னு குதிக்கிறேனா? அவன் சொன்ன வார்த்தைகளால் அவளுக்கு ஏகப்பட்ட கடுப்பு. அதெப்படி என் நடனத்தை அவன் அப்படி கேலி செய்யலாம் என்று எரிச்சலோடு படுத்திருந்தாள். அவன் தன்னிடம் நெருக்கமாக நின்றிருந்த மனத் தோற்றமும் அவளைக் கொதிநிலையிலேயே வைத்திருந்தது.

 

சிறு வயதிலிருந்தே அவளை வெறுப்பேற்றுவதில் முதலிடம் என்றால் அது சர்வேஸ்வரனுக்குத் தான்! முதல்முறை முன்பற்கள் விழத் தொடங்கிய சமயம், அவன் வெகுவாக கேலி செய்தே அவளை அழவே வைத்திருந்தான்.

 

“பல்லு விழுந்தா முளைக்கவே முளைக்காது. எப்படி பல்லை உடைச்சிக்கிட்ட? அச்சோ பாவம்! பல்லு இல்லாம என்ன செய்வியோ?” என்று அவன் சொன்னபோது, அதை நம்பாமல், “பொய் பேசாதீங்க…” என அவனுடன் சண்டை தான் பிடித்தாள். அவள் வயதொத்த பள்ளித் தோழிகளுக்கும் பற்கள் விழுந்திருந்ததே!

 

“இல்லை இல்லை… உனக்கு இங்கே எகிறுல வலுவே இல்லை. பார்த்தாவே தெரியுது. உன் பிரண்ட்ஸ்க்கு எல்லாம் பல்லு முளைக்கும். உனக்குப் பல்லே முளைக்காது. ஆமா, பல்லு விலக்குவியா இல்லையா? ஏன் இப்படி இருக்கு உனக்கு? அந்த எகிறெல்லாம் பாரு ரொம்ப குட்டியா வளராம இருக்கு” என்றெல்லாம் ஏதேதோ அடுக்கி வெறுப்பேற்ற, “இல்லை இல்லை… பொய்…” என்றாள் உதடு பிதுக்கி. எங்கே அவன் சொல்வதுபோல தன் எகிறுகள் பலமாக இல்லையோ! பற்கள் முளைக்காதோ! என்ற அச்சம் எழுந்திருந்தது.

 

அவள் அழுவதும், சுற்றி இருக்கும் கூட்டம் இவனுக்கு ஒத்தூதுவதும் அவனுக்கு சுவாரஸ்யமாக இருக்க, “பல்லெல்லாம் விழுந்து கிழவி மாதிரியே இருக்க… இல்லை இல்லை பயங்கரமான பேய் மாதிரி இருக்க. தயவு செய்து சிரிச்சுடாத. இப்படி அழுத மூஞ்சியாவே இரு…” என்று இன்னும் இன்னும் சர்வேஸ்வரன் வெறுப்பேற்ற, அவனோடு இருந்தவர்களும் அவனுக்கு ஒத்துப் பேசி இவளைப் பார்த்துக் கைகொட்டி சிரிக்க, அவள் கதறிக் கதறி அழத் தொடங்கி விட்டாள்.

 

அவளை அன்று சமாதானம் செய்யவே அவளது பெற்றோர்களுக்கு போதும் போதும் என்றாகிவிட்டது.

 

அதன்பிறகு சௌதாமினியை சந்திக்கும் போதெல்லாம் அன்றையதினம் அவள் அழுததற்கும் சேர்த்து கேலி செய்வான் சர்வேஸ்வரன்.

 

“ஹே தாமுவை எதுவும் சொல்லிடாதீங்கடா. அவ அழ தொடங்கினா இங்கே இன்னொரு காவிரி வந்திடும். அப்பறம் நாம எல்லாருமே அதில் மூழ்கிடுவோம்” என்று ராகமாக சர்வேஸ்வரன் சொல்ல, சுற்றி இருப்பவர்கள் எல்லாம் கூட சேர்ந்து சிரிப்பார்கள்.

 

“தாமு என்றழைக்காதே” என்று சண்டையிட்டால், மீண்டும் மீண்டும் அப்படிச் சொல்லியே வெறுப்பேற்றுவான். கூடவே சௌதி என்ற பெயரைச் சொல்லியும்.

 

“சௌதி நாட்டுக்கு யாரும் போயிருக்கீங்களா டா. நமக்காக சௌதியே தஞ்சாவூருக்கு வந்திருக்கு பாருங்க… நல்லா பார்த்துக்கங்க… சுத்தி சுத்தி பார்த்துக்கங்க” என்று அவன் வம்பு செய்தபோது, தன் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் கீழே கிடந்த கல்லை எடுத்து அவன்மீது வீசியிருக்கிறாள்.

 

இவளை விட ஐந்தாண்டுகள் மூத்தவன். அடியை வாங்கிக்கொண்டு சும்மாவா இருப்பான்? கோபமாக அவளை அடிக்க நெருங்க, பயந்தபடி விழுந்தடித்துக் கொண்டு ஓடியதில் வாரி சுருட்டிக் கொண்டு விழுந்திருந்தாள்.

 

விழுந்த வேகத்தில் கை, கால் முட்டிகளிலெல்லாம் சிராய்ப்பு. உதட்டிலும் பற்கள் ஆழப்பதிந்து, நன்றாக கிழிந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.

 

வலி தாங்காமல் கத்தியவளை, “ஸ்ஸ்ஸ் ஒன்னும் இல்லை. இரு மருந்து போட்டுக்கலாம்” என்று துளி பதட்டமில்லாமல் சாவகாசமாகச் சொல்லி, அவளை அவனே தூக்கிச் சென்று, சோபாவில் அமர வைத்து மருந்தும் போட்டு விட்டான்.

 

அவளது அழுகையில் அவளை தேடி வந்த பெற்றோரிடம், மற்ற சுற்றத்தினரிடனும் ஓடி போகும்போது விழுந்து விட்டாள் என்று மிகுந்த பொறுப்பு போலச் சொன்னான்.

 

‘நானா எதுக்குடா ஓடப்போறேன்?’ என்று அவனை முடிந்த மட்டும் பார்வையாலேயே முறைத்தாள். கிழிந்த உதடு எதையும் பேச விட்டால் தானே!

 

சர்வேஸ்வரனையோ அனைவரும் பாராட்டினார்கள். வேடிக்கை பார்க்காமல், பெரியவர்கள் வரும்வரை பொறுமை காக்காமல் அவனாகவே முதலுதவி செய்து விட்டானாம்! ரொம்ப ரொம்ப நல்ல பையனாம்! அதைக் கேட்டுக்கொண்டே அங்கு அன்னை மடியில் தொய்ந்து போய் படுத்திருந்தவளுக்கு எரிச்சலாக வந்தது.

 

இவன் நல்லவனா? நான் விழுந்ததே இவனால் தான் என்று உரக்கச் சொல்ல நினைத்தாலும் உதட்டின் வலி அதை அசைக்கக் கூட விடவில்லை. வீங்க வேற தொடங்கிவிட்டது. அவசரமாக ஐஸ் கியூப் கொண்டு வந்து வீக்கத்தின் மேல் தடவி விட்டார்கள். வலி தாங்காமல், கத்தவும் முடியாமல் அழுது கரைந்தாள்.

 

ஆனால், அவனோ சௌதாமினியின் அருகே வந்து மென்மையாகக் கண்ணீரைத் துடைத்து விட்டு, “அழாத சரியாயிடும்” என்று சொன்னவன், வெகுவாக குரலைத் தணித்து, “சாரி…” என்றான்.

 

நீயும், உன் சாரியும் என வெடுக்கென்று முகத்தைத் திருப்பிக் கொண்டாள். அன்று முதல் அந்த முரடன் இருக்கும் இடத்திற்கே ஒரு பெரிய கும்பிடு. ஆனால், விலகுதல் என்பது ஒருவரின் எண்ணம் மட்டுமில்லையே! எதிரில் இருப்பவரும் செயல்படுத்தி, சூழலும் அதற்குத்தக்க அமைந்தால் தானே விலகலைச் செயல்படுத்த முடியும்.

 

அவள் விஷயத்திலும் அப்படியே! விலக அவள் நினைத்தாலும், சூழல் விட்டதில்லை! சர்வேஸ்வரனும் விட்டதில்லை!

 

வெகுநேரம் அறையிலேயே முடங்கி விட்ட சௌதாமினிக்கு, சித்தி என்ன நினைத்து கவலைப்படுகிறாளோ என்ற எண்ணம் வந்ததும், முகம் கழுவி, உடை மாற்றிவிட்டு அறையிலிருந்து வெளியில் வந்தாள். வசந்தன் மட்டும் தனியாக எதையோ யோசித்த வண்ணம் சோபாவில் அமர்ந்திருந்தான். தொலைக்காட்சியில் ஓடிய செய்திகளில் அவனது கவனம் துளியும் பதிந்திருப்பது போலத் தெரியவில்லை.

 

அவனை அவன் போக்கில் விட்டு விட நினைத்தாள். அவனே அவனது பிழைகளை யோசித்துச் சரி செய்யட்டும். நாம் மீண்டும் மீண்டும் பேசி… இல்லை பேசுவது என்ற பெயரில் அவன் மனம் நோகத் திட்டிக் கொண்டே இருக்கிறோம். அவனும் எத்தனை தாங்குவான்? ஏற்கனவே தன் பிழையை நினைத்து நொந்து கொண்டிருப்பவன் வேறு என்று எண்ணியவள் ஒரு பெருமூச்சோடு அமைதியாக அவனைக் கடந்து வெளி வராண்டாவிற்கு சென்றாள்.

 

மதியம் நெருங்கிக் கொண்டிருந்த நேரம். வெயில் சற்று அதிகமாகவே இருந்தது. வெளி வராண்டாவில் சித்தி இல்லை. அங்கு காணோம் என்றதும் சித்தியைத் தேடி பின்புறம் சென்றாள். நன்கு உயர்ந்து வளர்ந்திருந்த வேப்பமர நிழலில் சித்தப்பாவோடு அமர்ந்து ஏதோ பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

 

அருகில் இருவருக்குமான உணவு இருந்தது. இவளும் சென்று அவர்களோடு அமர்ந்து கொண்டாள்.

 

கற்பகவள்ளி அவளைக் கண்டதும், “பாருங்க. காலையில வெளிய போயிட்டு வீட்டுக்கு வந்தது. ஒரு மணி நேரம் ரூமுக்குள்ளேயே அடைஞ்சி கிடக்கிறா?” என்றார் செல்லத்துரையிடம் குறையாக.

 

“என்ன? என்ன பண்ணின? இத்தனை நேரமும்…” சித்தப்பா சிறு கோபத்துடன் கேட்க,

 

போட்டுக்கொடுத்த சித்தியை முறைத்தபடியே, “தலைவலி சித்தப்பா…” என்றாள் அவர் நம்பும் விதமாக முகத்தைச் சுருக்கி.

 

“அப்படியா? சரி.. சரி… நீயும் சாப்பிடு. தூங்கி எழுவியாமா” என்றார் அன்பும், அக்கறையுமாக. எதிர்பார்ப்பில்லாமல் அன்பு செலுத்த சித்தப்பா போன்றவர்களால் மட்டுமே முடியும். கொள்ளை கொள்ளையாக அன்பைப் பொழிவார். முன்பு உட்கார்ந்து பேசக்கூட நேரமில்லாமல் வேலை வேலை என்று அவர் ஓடிய பொழுதுகள் நினைவில் எழ கண்கள் கலங்கியது.

 

பல வாரங்களில் ஞாயிறு கூட வேலைக்கு ஓடுவார். “இன்னைக்கு கூட போகணுமா பா. கூடவே இருங்களேன்” என்று வசந்தன் கெஞ்சுவான். மகனுக்கு மறுக்கிறோமே என்ற இயலாமை செல்லத்துரையின் விழிகளில் எட்டிப்பார்க்கும்.

 

இருந்தும் சமாளித்து, “வேலை இருக்குப்பா. சீக்கிரமா வந்துடறேன்” என்று தாஜா செய்துவிட்டு ஓட்டம் பிடிப்பார்.

 

அனைவரிலும் வயதில் மூத்தவள் என்பதால், சௌதாமினிக்கு சித்தப்பா இப்படி வேலை, வேலையென்று ஓடுவதன் காரணம் தெளிவாகவே புரியும். ஒன்றுக்கு மூன்றாய் பிள்ளைகளை வளர்ப்பதென்பது சாதாரணம் இல்லையே! சித்தப்பாவை நினைத்து மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். இப்படி அநியாயமாக தங்கள் பெற்றோரை பறித்துக்கொண்டு, சித்தப்பாவின் சுமையைப் பலமடங்கு ஏற்றிய கடவுளை மனதிற்குள் திட்டி தீர்ப்பாள்.

 

அப்பொழுதெல்லாம், தான் நல்ல வேலைக்கு சென்று சித்தப்பாவிற்கு உதவியாக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வாள். ஆனால், இப்பொழுது அவள் நல்ல வேலை, பெயர், புகழ் என்று இருக்கும் சமயம், அவளின் சித்தப்பா தன்னையே மறந்த நிலையில் சித்தம் சிதைந்து இருக்கிறாரே என்று அவள் கலங்காத நாளே இல்லை.

 

“அவர் முன்ன எதுக்கு கண் கலங்கற?” என்று கற்பகவள்ளி அதட்டவும் தான், சூழல் புரிந்து, “அச்சோ சாரி சித்தி” என்று அவசரமாகச் சொல்லிவிட்டு, முகத்தை துடைப்பவள் போலக் கலங்கிய கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

 

“என்னாச்சு? சாப்பிட சொன்னா சாப்பிட மாட்டீங்கிற? இது… கிழங்கு… நான்… நான்… நானே..” என்று செல்லத்துரை எதையோ சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அவரது உணவு முடிந்திருக்க அவரது கைகளைக் கழுவச் சொல்லி நினைவூட்டினார் கற்பகவள்ளி.

 

மனைவி சொன்னதுபோல கைகளைக் கழுவியவர், தன் வாயையும் துடைத்துக் கொண்டு, அவர் தந்த துண்டாலும் கைகளையும், வாயையும் துடைத்துக் கொண்டார்.

 

பிறகு மகளைப் பார்த்து, தான் சொல்ல நினைத்ததை மீண்டும் சொல்ல நினைக்க அவருக்கு தான் முன்பு என்ன பேசினோம் என்பது சுத்தமாக மறந்திருந்தது.

 

“அது… அது… வந்து…” என்றவருக்கு மேற்கொண்டு யோசிக்க முடியாமல் போக, தன் தலையை லேசாக முன்புறம் குனிந்து, தனது கைவிரல்களைச் செங்குத்தாக நீட்டி நெற்றியில் முட்டி முட்டி எடுத்து யோசிக்கத் தொடங்கினார்.

 

அவரது நிலையை கண்டதும், வேகமாக நெருங்கி அமர்ந்தவள், ஆறுதலாக அவரது தலையை வருடி கொடுத்து, “ஞாபகம் வரலைன்னா விடுங்கப்பா. மெல்ல சொல்லுவீங்களாம்” என்று பொறுமையாகச் சொல்ல, கற்பகவள்ளியும் கணவரின் முதுகை மென்மையாக நீவி தந்து ஆசுவாசப்படுத்தினார்.

 

“அது… அது…” என அப்பொழுதும் திணறினார்.

 

“அம்மா செஞ்சிருந்த கிழங்கைப் பத்தி எதுவோ சொன்னீங்க பா” என சௌதாமினி எடுத்துக் கொடுத்தாள்.

 

கற்பகவள்ளிக்கு என்ன சொல்ல நினைத்திருப்பார் என்று புரிந்து விட்டிருக்க, “அப்பா வளர்த்தாரே மரவள்ளி கிழங்கு அதிலிருந்து அவர் தோண்டி எடுத்துத் தந்ததை தான் இன்னைக்கு சமைச்சேன். அதைத் தான் சொல்ல வந்திருப்பாரு” என்று முடித்தவர்,

 

கணவரின் விரல்களை நெற்றியிலிருந்து பிரித்து விட்டு, “அது தானேங்க?” என்று மென்மையாகக் கேட்டார்.

 

அப்பொழுதும் செல்லத்துரைக்கு நினைவு வர மறுக்க, “மாத்திரை சாப்பிட்டு தூங்கற நேரம் ஆச்சே… வாங்க சித்தப்பா…” எனச் சொல்லிக் கைபிடித்து உள்ளே அழைத்துச் சென்றாள் சௌதாமினி.

 

அவருக்கு மாத்திரை தந்து படுக்க வைக்கவும், “கிழங்கு சாப்பிடு” என்று நினைவு படுத்தினார்.

 

“பின்ன எங்க சித்தப்பா எனக்காக வளர்த்த கிழங்கு நான் சாப்பிடாம இருப்பேனா? நீங்க ரொம்ப சூப்பர் சித்தப்பா. எனக்கு இன்னும் நிறைய வளர்த்து கொடுங்க…” என்று பேச்சு கொடுத்தபடியே அவரை தட்டிக் கொடுக்க, உடல் அயற்சியும், மன அயற்சியும் அவரை விரைவாகவே உறக்கத்திற்கு அழைத்துச் சென்றது.

 

அவரது மனநலம் முற்றிலும் தேறும் நாள் எப்பொழுது வருமோ? எனக் கவலையாக எண்ணினாள். அவள் அசைவற்று அமர்ந்திருப்பதைப் பார்த்து, “சித்தப்பா தூங்கிட்டாங்க. நீ வந்து சாப்பிடு” என கற்பகவள்ளி அழைத்தார்.

 

ஜன்னல்களின் திரைச்சீலைகளை இழுத்து விட்டவள் சித்தியோடு உணவருந்தச் சென்றாள்.

 

“ஏன் ரெண்டு பேரு முகமும் சரியில்லை” என்று கற்பகவள்ளி விசாரிக்க, சமயத்திற்கு பொய் சொல்லிச் சமாளிக்கத் தெரியாமல் சௌதாமினி திருதிருத்தாள்.

 

பெரியவள் என்ன நினைத்தாளோ, “முதல்ல சாப்பிடுங்க…” என்று நகர்ந்து விட,

 

வசந்தனை நெருங்கி, “எந்த கப்பல் கவுந்து போச்சுன்னு இப்படி உட்கார்ந்துட்டு இருக்க. சித்தி என்ன ஏதுன்னு விசாரிக்கிறாங்க. நான் என்ன பதில் சொல்லறது?” என்று கடிந்து கொண்டாள்.

 

அவன் தலையைக் குனிய, “ஏன்டா படுத்தற. அதுதான் பிரச்சினை முடிஞ்சதல்ல வந்து சாப்பிடு. இனியாவது ஒழுங்கா இருக்க பாரு” என்றாள்.

 

“கண்டிப்பா கா…” என்று சொன்னவனின் காண்க கலங்கியிருக்க, “ச்சு குழந்தையாடா நீ?” என்று அவனது தலையை ஆறுதலும், பாசமுமாக வருடிக் கொடுத்தாள் மூத்தவள்.

 

இருவருக்குமான உணவை எடுத்து மேஜையில் அடுக்கிக் கொண்டிருந்த கற்பகவள்ளியின் பார்வையில் இது விழ, அக்கா… தம்பி சண்டை போல என்று நினைத்து அந்த விஷயத்தை அத்தோடு இன்முகமாக ஒதுக்கினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

எனக்கொரு வரம் கொடு 1 – சுகமதிஎனக்கொரு வரம் கொடு 1 – சுகமதி

எனக்கொரு வரம் கொடு – 1   அழகானதொரு பொன்மாலைப் பொழுதில், தஞ்சாவூர் திலகர் திடலில் செல்வி சௌதாமினியின் நாட்டிய விழா ஏற்பாடாகியிருந்தது. அந்த ஜில்லாவில் புகழ்பெற்று விளங்கும் இளம் பரத நாட்டிய கலைஞர்களுள் அவளும் ஒருத்தி ஆவாள். அவளின் பெயருக்கென்றே

எனக்கொரு வரம் கொடு 13 – சுகமதிஎனக்கொரு வரம் கொடு 13 – சுகமதி

எனக்கொரு வரம் கொடு – 13   நிச்சயதார்த்தம் எப்படி விரைவாக ஏற்பாடானதோ திருமணமும் அவ்வாறே… குறுகிய கால அவகாசத்துக்குள் சர்வா, சௌதாவின் திருமணம் ஏற்பாடாகியிருந்தது.   யார் பார்வையிலும் படாமல் இதற்கு மறைமுக காரணமாக சர்வேஸ்வரன்தான் இருந்தான். ஒவ்வொரு முறையும்

எனக்கொரு வரம் கொடு 24(நிறைவுப் பகுதி)எனக்கொரு வரம் கொடு 24(நிறைவுப் பகுதி)

எனக்கொரு வரம் கொடு – 24 கற்பகத்திற்கு சௌதாமினி செய்து வந்த காரியத்தில் துளியும் உடன்பாடில்லை. அவள் பாட்டிற்குக் கணவனோடு சண்டை போட்டுக்கொண்டு பிறந்தகம் வந்தால், அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? அந்தளவு முதிர்ச்சியற்றவளா மகள்? என வேதனையாக இருந்தது.