எனக்கொரு வரம் கொடு 2 – சுகமதி

எனக்கொரு வரம் கொடு – 2

 

சௌதாமினி காலையில் எழுந்து பரபரப்பாகக் கிளம்பிக் கொண்டிருந்தாள். எந்நாளும் இல்லாத திருநாளாக அன்றையதினம், தன் தோற்றத்தில் வெகு அக்கறை எடுத்துக் கிளம்பிக் கொண்டிருந்தாள்.

 

ஆரஞ்சு வண்ண லெனன் புடவையும், அதை எடுத்துக்காட்டும் படியான அடர் நீல நிற டிசைனர் ப்ளௌஸும், ஒரு கையில் தங்க வளையலையும், மற்றொரு கையில் டைடன் வாட்சும் அணிந்து, மிதமான அலங்காரமும், வாசனைத் திரவியமுமாகத் தயாரானாள். அவளைப் பாந்தமாகத் தழுவிய புடவையின் முந்தானையைச் சரிய விட்டு உடுத்தியிருந்தவள், கழுத்தில் வழக்கமாக அணியும் செயினுடன் இன்னுமொரு செயினையும் சேர்த்து அணிந்திருந்தாள்.

 

கற்பகவள்ளிக்கு கிளம்பி வந்த மகளைப் பார்த்து பெரும் ஆச்சரியம்! “என்னம்மா மழை எதுவும் வரப்போகுதா?” என்று கேலியாகக் கேட்டபோதும், ஆசையாக மகளை உச்சி முதல் பாதம் வரை வருடினார். மாலை வீடு திரும்பியதும் சுற்றிப்போட வேண்டும் என்று அக்மார்க் அன்னையாக நினைத்துக் கொண்டவருக்கு, திருமணத்திற்கு மட்டும் இன்னும் பிடி கொடுக்க மாட்டேன் என்கிறாளே என்று ஏக்கப் பெருமூச்சு வந்தது.

 

சிற்றன்னையின் ஏக்கம் அவரது பார்வையிலும், பாவனையிலும் புரிந்தாலும், சௌதாமினி அதைப்பற்றி மூச்சு விட்டாளில்லை! கன அக்கறையாக, “வாசுவுக்கு கம்பியூட்டர் கிளாஸ் சேரணுமாம் சித்தி. என்னை கூட்டிட்டு போகச் சொன்னான். அதான் கொஞ்சம் கெத்தா போகலாமேன்னு…” என்று கண் சிமிட்டி பதில் சொல்லிவிட்டு காலை உணவருந்த அமர்ந்து கொண்டாள்.

 

அக்கா சொன்னதைக் கேட்டுக்கொண்டே உணவருந்திக் கொண்டிருந்த இளையவனுக்கு எங்குச் செல்லவிருக்கிறோம் என்று தெளிவாகப் புரிந்து விட்டது. நேற்று எதுவுமே சொல்லாமல் அக்கா மூட்டை கட்டி வைத்த விஷயம் இன்று இதுபோல மேலெழும் என்று அவன் நினைக்கவே இல்லை. தன் நிலையை விளக்கி பணத்தை கேட்டால், அக்கா தந்துவிடுவாள் என்று தான் எண்ணினானே தவிர, இதுபோல அக்கா முடிவெடுப்பாள் என்று அவன் யோசித்துப் பார்க்கவே இல்லை.

 

இந்த சூழலிலும், கவின்யாவின் நிலையே அவனை வெகுவாக அச்சுறுத்தியது. தன்நிலை, தன் குடும்பத்தின் கௌரவம் அனைத்தும் இக்கட்டில் இருந்த போதும், அவள் தன்னை நம்பி வந்த பெண் என்பதிலேயே மற்ற அனைத்தும் பின்னோக்கிச் சென்றிருந்தது. மனம் முழுக்க கவின்யா இதை எப்படித் தாங்குவாள் என்ற நிலையிலேயே அவன் உணர்வுகளும், எண்ணங்களும் தேக்கம் பெற்றது.

 

“சீக்கிரம் சாப்பிடு வாசு. கிளம்பணும்” அன்னையின் முன்பு இன்முகமாகச் சொன்னாலும், சௌதாமினியின் முகம் காட்டிய கண்டிப்பு அவனுக்குத் தெளிவாகவே புரிந்திற்று!

 

சுவை உணராமல், வயிறு நிறையாமல் உண்டேன் என்று பெயர் பண்ணிக்கொண்டு வசந்தன் எழுந்தான். அது புரிந்தாலும் ஏன் என்று கேட்கவேயில்லை மூத்தவள். அவளின் நிராகரிப்பு அவனுக்கு மிகுந்த வலியைக் கொடுத்தது.

 

காரின் அருகே சென்றதும் அமைதியாக ஓட்டுநருக்குப் பக்கத்து இருக்கைக்குச் சென்று அமர்ந்து கொண்டான். அவன் செய்கையை ஆச்சரியமாகப் பார்த்தபடி காரில் ஏறியவள் அதைக் கிளப்பியபடி, “ஒரே நாள்ல திருந்தாதடா. நம்ப முடியலை” என்றாள் கீழுதடு பிதுங்க.

 

அக்கா தாஜா செய்வதற்காக நடிக்கிறேன் என்று நினைக்கிறாள் போலும் என்று எண்ணியவனுக்கு முகம் விழுந்து விட்டது. மென்குரலில், “நான் இனி நல்லபடியா நடந்துப்பேன் கா…” என்று வாக்குறுதி தந்தான்.

 

உன்னை நான் நம்பவில்லை என்று அவளது மௌனமே கட்டியம் கூறியது. அதில் எழுந்த வருத்தத்தோடு, “அக்கா இப்ப நம்ம கண்டிப்பா அங்க போகணுமா?” என்றான் தயங்கித் தயங்கி.

 

“ஏதோ ப..ண..ம்ம்ம்… தரணும்ன்னு சொன்னியே வாசு” என்றாள் மூத்தவள் இழுத்து நிறுத்தி. முகபாவனையில் எரிச்சலும், நக்கலும் சரி சமமாகத் தெரிந்தது.

 

அக்கா நான் சொன்னதை நம்பவில்லையா? என் வாக்கில் நம்பிக்கையில்லை; இப்பொழுது என் சொல்லிலுமா? என வேதனையாக எண்ணியவன், “நிஜமாலுமே அவனுங்க பிளாக்மெயில் பண்ணறாங்கக்கா…” என்றான் கம்மிய குரலில்.

 

“ம்ப்ச்” என்று வெளிப்படையாகச் சலித்தவள், “நீ கெட்டு போறதும், வயதுக்கு மீறி சில விஷயங்கள் செய்யறதும் எப்படி எனக்கு தப்புன்னு படுதோ… பிடிக்கலையோ… அதே மாதிரி தான், அவனுங்க பிளாக் மெயில் செய்யறதும் எனக்குச் சரியா படலை. அதுக்கு நான் ஒத்துப் போக மாட்டேன்” என்றாள் கறாராக.

 

அதில் விழித்தவன், “அக்கா கவின்யா இதெல்லாம் தாங்க மாட்டா கா. பிளீஸ்கா… அவ பாவம். அவளுக்காகவாவது கொஞ்சம் யோசிக்கா” என்றான் கெஞ்சலாக.

 

“உனக்கு மூளைன்னு ஒன்னு வேலையே செய்யாதாடா. இன்னைக்கு பணம் கேட்கிறானுங்க. நீயும் தந்துடற. இதே இன்னும் போகப்போக கேட்டுட்டே இருந்தா நீயும் எவ்வளவு தருவ? நீ ஏற்கனவே திருடின மோதிரமும், பணமும் கூட இவனுங்களுக்காகத்தான் இருக்கும் போல. சரி ஒரு கட்டத்துல அவனுங்க அந்த பொண்ணே வேணும்ன்னு கேட்டா அப்ப ரெண்டு பேரும் என்ன செய்வீங்க?” அவள் கோபமாகத் திட்ட, அவனது முகம் வெளிறியது.

 

“அக்கா…” என்றான் பரிதாபமாக.

 

“நாளும் யோசிக்கணும் வாசு. சரி நீங்க செய்தது ரொம்ப பெரிய தப்புதான். அதை நான் இல்லைன்னு சொல்லலை. இப்ப அதுக்காக எவ்வளவு நாள் ஒரு திருட்டு கும்பலுக்கு பணம் தர போறீங்க. முதல்ல அங்கே போயி அவனுங்க கிட்ட பேசிப் பார்ப்போம். அவனுங்க ஆள் எப்படின்னு ஒரு கணிப்பு கிடைக்கும். அதுக்கு தகுந்த மாதிரி மேற்கொண்டு யோசிக்கலாம். ஆனா, பணம் மட்டும் கொடுக்கக் கூடாது. அதை மட்டும் எக்காரணத்தைக் கொண்டும் மறந்துடாத” என்றாள் கண்டிப்புடன்.

 

சரியென்று தலையசைத்தவன், “ஆனா கவின்யா கா?” என்றான் தயங்கிய குரலில்.

 

“அதையெல்லாம் இதுபோல செய்யும் முன்ன யோசிச்சிருக்கணும். தப்பைத் தைரியமா செய்யறீங்க. ஆனா, அதை வெளியில் சொல்லும்போது எதுக்கு இவ்வளவு பயம்?”

 

“அக்கா அவ வீட்டுல தெரிஞ்சா ரொம்ப பிரச்சினை ஆயிடும் கா. இதுமாதிரின்னு தெரிய வந்தா படிப்பை நிறுத்தி கல்யாணம் கூடச் செய்து வெச்சுடுவாங்க கா” என்றான் கலக்கமாக.

 

இத்தனை கட்டுப்பாடுகளோடு இருக்கும் பெண்ணா இத்தனை தூரம் துணிந்தாள்? என்று சௌதாமினிக்கு தலை கிறுகிறுத்தது. இருந்தும் தம்பியிடம் காட்டும் சிறு இளக்கம் கூட பெரிய பாதிப்பை உருவாக்கும் என்று புரிந்தவள் எதையும் காட்டிக் கொள்ளாமல், “ எவ்வளவோ கஷ்டப்பட்டு பொண்ணுங்க படிக்கவும், வேலைக்குப் போகவும் நம்ம நாட்டுல சுதந்திரம் வாங்கி தந்தாங்க. ஆனா, உங்களை மாதிரி ஆட்களோட கீழான செயலால அதை எவ்வளவு அழகா முடக்க முடியுது. இதெல்லாம் ரொம்ப பெரிய சாதனை. இதை நினைச்சு நீ தாராளமா பெருமை படலாம்” என்றாள்  இளக்காரமாக.

 

அக்காவின் ஒவ்வொரு குத்தல் பேச்சுக்கும் வெகுவாக குன்றிப் போனான் வசந்தன். எவ்வளவு பெரிய விஷயங்களையும் வெகு சாதாரணமாகச் செய்து விடுகிறோம் என்று அவனுக்கு மனம் குன்றியது. உண்மையாகவே மனம் வருந்தினான் தான்! ஆனால், அவன் செய்த பிழைகளின் அளவுகள் பெரியது என்பதால் சௌதாமினியால் இம்மியளவு கூட அவனிடம் இளக்கம் காட்ட முடியவில்லை.

 

“என்ன பேச்சையே காணோம்”

 

“நான் எத்தனை சாரி சொன்னாலும் போதாதுக்கா…” என்றான் வருத்தத்துடன்.

 

“எத்தனை பேருக்கிட்ட சாரி கேட்க வேண்டியிருக்கும்ன்னும் நினைச்சு பாரு… லிஸ்ட் நீளமோ நீளம். ஒரு பொண்ணை மனசுல நினைக்கிறதுக்கே எவ்வவளோ யோசிக்கணும். ஆனா, உன்னோட தகுதிக்கு… பெத்தவங்க கிட்ட ஒட்டுண்ணியா வாழ்ந்திட்டு இருக்கும் இந்த நிலைக்குக் காதலே பெருசுங்கிறப்ப… காமம்…” அந்த வாக்கியத்தை முடிக்கக் கூட முடியாமல் இதழ் கடித்து, பெருமூச்சு விட்டுத் தடுமாறினாள்.

 

“நான் ரொம்ப ரொம்ப மட்டமா நடந்துட்டேன் இல்லைக்கா” என்று சொன்னவனின் கண்கள் கலங்கியிருக்க, தன் கைக்குட்டையால் கண்ணீரைத் துடைத்தான். வசந்தன் அழுவதும் சௌதாமினிக்கு கஷ்டமாகவே இருந்தது. அதன்பிறகு என்ன நினைத்தாளோ எந்த பேச்சும் பேசாமல் அவன் குறிப்பிட்ட ஏரியாவிற்கு வண்டியை விட்டாள்.

 

“பிரௌசிங் சென்டர் எங்க இருக்கு?” என்று அவனிடம் கேட்டபடியே அவன் சுட்டிக்காட்டிய இடத்திற்கு வண்டியைக் கொண்டு நிறுத்தினாள். அருகில் இருந்த போலீஸ் வாகனத்தை அவள் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. தங்களது வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு, தம்பியோடு பிரௌசிங் சென்டருக்குள் நிமிர்வோடு நுழைந்தவள் அங்கு நின்றிருந்தவனைச் சத்தியமாக எதிர்ப்பார்க்கவில்லை. அதிர்ந்து, மிரண்டு விழித்தாள்.

 

அவனுக்கும் அதே நிலை தான் போலும்! இவள் உள்ளே நுழைந்ததுமே இவள் புறம் பார்வையைத் திருப்பியவனின் புருவங்கள் ஏகத்திற்கும் ஏறி இறங்கியது. ஆச்சரியமாம்!

 

கூடவே அவனது விழிகளோ ஆர்வமாக அவளை உச்சி முதல் பாதம் வரை வருடிவிட்டு மெச்சுதலாக அவளை நோக்கியது. காலையில் சித்தி பார்த்த அதே பார்வை தான். அதே ரசனையும், மெச்சுதலும் தான்! ஆனால், இவன் எப்படி அதுபோல பார்க்கலாம் என அவளுக்குள் பெரு நெருப்பு எரிந்ததில், அவளது விழிகள் அனலைக் கக்கியது.

 

அதையெல்லாம் கண்டுகொள்பவன் சர்வேஸ்வரன் இல்லையே! அவள் ஏதோ காதல் பார்வை பார்ப்பது போல அவளுக்கு பதிலுக்கு மென்னகையைப் புரிந்து விட்டு, மீண்டும் தன் முன்பு நின்றிருந்தவர்களின் மீது கவனத்தைப் பதித்தான்.

 

“சொல்லுங்கடா… எத்தனை நாளா நடக்குது இந்த திருட்டுத்தனம்?” என்று அதட்டினான்.

 

“தெரியாம பண்ணிட்டோம் சார்…”

 

“என்னது தெரியாமையா? ச்ச்… ச்ச்…” என அநியாயத்துக்கு நக்கல் செய்தவன், இருவரின் கன்னங்களிலும் பொறி பறக்க அரை விட்டான். தலை கிறுகிறுக்க சுழன்றவர்களின் கன்னங்களில் அவனது கை விரல் தடங்கள் அப்பட்டமாகத் தெரிந்தது.

 

அக்காவும், தம்பியுமே அவனது அதிரடியில் சற்று அரண்டு தான் நின்றிருந்தார்கள். மீண்டும் இவர்கள் புறம் பார்வையைத் திருப்பி இவர்கள் தோற்றத்தைக் கவனித்தவன், “ம்ப்ச்…” என்று தன் நெற்றியில் பெரு விரலும், மோதிர விரலும் கொண்டு தேய்த்து விட்டுக் கொண்டான்.

 

“என்னை ஏன்டா கடுப்பேத்தறீங்க…” என்று குற்றவாளிகளிடம் உறுமியவன், “எங்கே நானும் தான் இங்கே வந்திருக்கேன். தைரியம் இருந்தா என்னைப் போட்டோ எடுங்க பார்க்கலாம்” என்று சொன்னான்.

 

உடனேயே, “ஓ கூட ஒரு பொண்ணிருந்தா தான் உங்க கேமரா வேலை செய்யுமோ?” என்று நக்கலாகக் கேட்டவன், யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், சட்டென்று வேக எட்டுக்களில் சௌதாமினியை நெருங்கி தன் வலது கையால் அவளது வலது கரத்தைப் பற்றி ஒரு சுழற்று சுழற்றி தன்னருகே தன் கை வளைவில் நிற்க வைத்திருந்தான்.

 

அதில் அவள் திருதிருக்க, அவனுடைய அசிஸ்டண்ட்ஸ் பிரசாந்த், ஓவியா இருவரும் விழிகள் தெறிக்க ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

 

“இங்கே என்ன பார்வை… சீக்கிரம் எல்லா ஆதாரத்தையும் கலெக்ட் பண்ணுங்க…” என்று அவர்களிடம் உறுமியவன், அந்த பிரௌஸிங் சென்டரை நடத்தும் இளைஞர்களிடமும் திரும்பி “இப்போ எடுங்க டா… போட்டோவையும், வீடியோவையும்…” என்றான் பல்கலைக் கடித்துக் கொண்டு.

 

அவர்கள் பாவமாகப் பார்த்துக் கொண்டிருக்க, “என்ன செய்யறீங்க?” என்றாள் சௌதாமினி பல்லைக் கடித்துக் கொண்டு.

 

“இவனுங்க சரியான பிராடுங்க சௌதி. அதான் டெமோ காட்டிட்டு இருக்கேன்”

 

“அதுக்கு நான் தான் கிடைச்சேனா? மரியாதையா என்னை விடுங்க” என்றாள் அதட்டலாக.

 

“ஸ்ஸ்ஸ்… போலீஸுக்கு கொஞ்சம் கோ-ஆபரேட் பண்ணுமா. என்னத்த பப்ளிக்கோ… கொஞ்சம் கூட பொறுப்பில்லை” என்று அவன் சலித்துக் கொள்ள, அவனது பதிலில் கோபம் பொங்க அவனை முறைத்தாள்.

 

“ஏய்! சும்மா அவனுங்களை மிரட்டத் தான்… நான் என்னவோ வேணும்ன்னே உன் கையை பிடிச்சு இழுத்த மாதிரியும், கிட்ட நிக்க வெச்சு ரசிக்கிற மாதிரியும் இந்த முறை முறைக்கிற…”

 

“வேணாம் என் கோபத்தை கிளறாதீங்க…”

 

“ஸ்ஸ்ஸ்… ஒரு ரெண்டு நிமிஷம் அமைதியா இரு சௌதி. என்னை பாரு அதிகமா உன்னை உரசக் கூட இல்லை. அவனுங்களை மிரட்டிட்டு விட்டுடறேன்” என்று சமத்தாகச் சொன்னான்.

 

இந்த அழகில் நின்று கொண்டுதான் குற்றவாளிகளை மிரட்டுவானா என்று சௌதாமினிக்கு ஆத்திரம் கனன்றதில், “ஏன் என் மானத்தை வாங்கறீங்க. இங்கே எத்தனை பேரு இருக்காங்க எல்லாரும் என்ன நினைப்பாங்க…” என்று கீழ்க்குரலில் அதட்டினாள்.

 

“ஓ… இவங்க எல்லாம் எதுவும் நினைச்சுப்பாங்க தானே!” என்றவன் வசந்தனை ஒரு பார்வை பார்த்து, “ஆமா ஆமா உன் தம்பி வேற கண்ணு வெளிய தெறிச்சு விழறது போல பார்க்கிறான். போயி அவங்கம்மா கிட்டச் சொல்ல வாய்ப்பிருக்கா…” என்று தீவிரமாகக் கேட்க,

 

“வாயில நல்லா வந்திடும் பார்த்துக்கங்க…” என அவனை தன்னிலிருந்து அவள் வேகமாக பிரித்துவிட, அவனே சிறு சிரிப்போடு அவளை விட்டு விலகி நின்று கொண்டான்.

 

அப்பொழுதும் கிசுகிசுப்பாக, “வாயில வந்தா அது வாந்தி. அதுவும் இப்ப வரணும்ன்னு எந்த அவசியமும் இல்லை. எப்படியும் நீ கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டு, அப்பறம் நம்ம கல்யாணம் நடந்து… அதுக்கு ஒரு ரெண்டு மாசம் ஆயிடும். அதுக்கப்பறம் வாந்தி எடுக்க ஒரு ரெண்டு மாசம்… ஹ்ம்ம் இன்னும் மினிமம் நாலு மாசம் தேவைப்படும்” என்று தீவிரமாகச் சொல்ல, அவளுக்கு வந்த ஆத்திரத்தில்,

 

அவளது தம்பியின் புறம் வேகமாகத் திரும்பி, அவனது தலையில் கொட்டி, “எல்லாம் நீ இழுத்து வெச்ச வம்பால…” என்று கீழ்க்குரலில் கடிந்து கொண்டாள். வசந்தனுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. இங்கே மாமா இருப்பதும் விளங்கவில்லை. அவர் அக்காவிடம் வம்பு செய்ததும் விளங்கவில்லை. இப்பொழுது அக்கா தன்னை ஏன் அடிக்கிறாள் என்றும் விளங்கவில்லை.

 

வசந்தன் திருதிருக்க, “ம்ப்ச் அவனை ஏன் அடிக்கிற சௌதி… அவனே பாவம்… அதோட அவன் எனக்கு எவ்வளவு உதவி செஞ்சிருக்கான் தெரியுமா?” என்று அவனது தோளில் கைபோட்டு தட்டிக் கொடுத்தவன்,

 

பிரௌஸிங் சென்டர் ஆட்களைப் பார்த்து, “உங்க வண்டவாளமெல்லாம் எப்படி தண்டவாளம் ஏறிச்சுன்னு இப்ப உங்களுக்கு புரிஞ்சுதா? இவன் என்னோட மாமா மகன். இவன் தான் என் ஐடியா படி அவன் பிரண்டை இங்கே கூட்டிட்டு வந்து, உங்ககிட்ட மாட்டற மாதிரி நடிச்சு… உங்க மிரட்டலுக்கு பயந்த மாதிரி பணம், நகை எல்லாம் கொடுத்தான். அதுக்கான எல்லா ஆதாரமும் எங்ககிட்ட இருக்கு. இன்னும் நீங்க செஞ்ச கோல்மால் எல்லாத்தையும் ஒரு மாசமா எங்க டீம் கண்காணிச்சிட்டே தான் இருக்கு. உங்களுக்கு எதிரா நிறைய ஆதரங்களை வலுவா சேகரிச்சு பிறகுதான் உங்களை வலை போட்டு தூக்கியிருக்கோம். இனி நீங்க தப்பிக்கவே முடியாது… உங்களை மாதிரி பிளாக் மெயில் பண்ணற ஆசாமிகளை எல்லாம் ஊரறிய காட்டணும் டா. ஸ்கூல் பிள்ளைங்க, காலேஜ் பிள்ளைங்க கிட்ட எத்தனை சேட்டை செஞ்சிருக்கீங்க? உங்களால அவங்களுக்கு எத்தனை மனவுளைச்சல். உங்களை சும்மா விடலாமா?” என்று தாடையை வலக்கையால் தடவியபடி நிதானமாகக் கேட்க, அவர்கள் அரண்டு விழித்தனர்.

 

தெரியாம செஞ்சிட்டோம் என்று கூடச் சொல்ல முடியாதபடி வாங்கிய அடி பலமாக இருக்க, “இனி ஒழுங்கா இருக்கோம் சார்…” என்றனர் பரிதாபமாக.

 

“கண்டிப்பா… கண்டிப்பா… உங்க தண்டனை காலம் முடிஞ்சதும் நீங்க ஒழுங்கா இருக்கணும். அதைத்தான் நானும் எதிர்பார்க்கிறேன்” என்று அவன் சொன்னதைக் கேட்டதும் அவர்களது விழிகள் அச்சத்தில் விரிந்தது.

 

வசந்தனுக்கோ இங்க என்னடா நடக்குது மொமண்ட். மாமா சொல்லி நான் இங்கே வந்தேனா? இது எப்போ நடந்தது? என்று ஒன்றும் புரியவில்லை.

 

ஓவியா, “சார் மொத்த டேட்டாவும் செக் பண்ணியாச்சு. ரெண்டு பேர் கிட்டேயும் நாலு மொபைல் போன்ஸ், எட்டு சிம் கார்ட், ரெண்டு லேப்டாப்ஸ் இருக்கு. பிரௌஸிங் சென்டர்ல இருக்க கம்பியூட்டர்ல எல்லாம் எதையும் ஸ்டோர் பண்ணி வைக்கலை. அப்பறம் சில போட்டோஸ் அண்ட் வீடியோஸ் கிளவுட்ல அப்லோட் பண்ணியிருக்காங்க. எல்லா ஆதாரமும் பக்கா கிளியர் சார்” என்றவள், சௌதாமினியையும், வசந்தனையும் ஒரு பார்வை பார்த்தபடி, “பிரஸுக்கு சொல்லிடலாமா?” என்று கேட்க,

 

“குட் ஜாப்” என்று அதிசயமாகப் புகழ்ந்தவன், “இவங்களை வழியனுப்பிட்டு வரேன். நீங்க பிரஸுக்கு சொல்லிடுங்க” என்று சொல்லிவிட்டு, மற்ற இருவரையும் அழைத்துக் கொண்டு கீழே சென்றான்.

 

பிரசாந்த் அதிர்ந்து நின்றவளிடம், “என்ன ஓவியா?” என்று கேட்க, “சார் குட் ஜாப்ன்னு சொல்லி பாராட்டினாரு டா” என்றாள் பிரமிப்பாக.

 

அவனோ சிரிப்போடு, “கண்டுக்காத விடு. கூடிய சீக்கிரம் கல்யாண சாப்பாடு சாப்பிடலாம் போல… ம்ப்ச் மேடம் கிட்டத் தான் பேச முடியலை” என்றான் வருத்தத்துடன்.

 

“எதுக்கு தாஜா பண்ணி வைக்கிறதுக்கா…” என அவள் சிரிக்க, “ஏன் நீ பண்ண மாட்டியாக்கும்…” என்று அவளது காலை வாரினான் பிரசாந்த்.

 

அதற்கு சிரித்தபடியே, “சரி விடு அமைச்சரே… தொழில் முக்கியம்… வேலையை கவனிப்போம்” என்று ஜகா வாங்கினாள் ஓவியா. அதன்பிறகு மேலிடத்திற்குத் தகவல் சொல்வது, பிரஸிற்கு தகவல் தருவது என்று அவர்களது வேலைகள் பிஸியானது.

 

சர்வேஸ்வரன் அவர்களைக் கீழே அழைத்து வந்தவன், “கிளம்புங்க மீதியை மெதுவா பேசிக்கலாம்” என்று அவர்களை வழியனுப்ப எத்தனிக்க,

 

“இப்ப எதுக்கு இத்தனை பொய்? இவன் உங்களுக்கு உதவி செய்ய அப்படிச் செய்தானா? இதை நம்ப நான் என்ன காது குத்தி இருக்கேனா?” என்று கடிய,

 

வசந்தனுக்கு கேட்காத குரலில், “அதெப்படி சௌதி கோபத்தை கூட சமத்தா, அமைதியா காட்டற? கொஞ்சம் கூட சத்தமே வெளிய வர மாட்டீங்குது. செம ஸ்கில்…” என்றான் ரசனையாய்.

 

“நான் என்ன கேட்கிறேன். நீங்க என்ன பேசறீங்க?” என்று கண்ணை உருட்டி மிரட்டினாள்.

 

“ஹே நான் என்ன இவன் எத்தனை அலும்பு செய்யறான்னு உன்கிட்ட சொல்லவே இல்லையா? சரி தெரிஞ்ச விஷயத்தை சொல்லுவோம்ன்னு வந்தா… என்னைப் பார்த்தலே ஓடி ஒளிஞ்சுக்கிற” என்று சொன்னவனை இடை நிறுத்தி,

 

“யாரு ஓடி ஒளிஞ்சா? நான் எல்லாம் யாரைப் பார்த்தும் ஓடவும் இல்லை… ஒளியவும் இல்லை” என்றாள் ரோஷமாக.

 

“ஓஹோ அப்படியா… சரி சரி அப்பறம் ஏன் என் போனை கூட எடுக்கலை” என்று நக்கலாக கேட்டான்.

 

“எனக்கு எத்தனையோ வேலை இருக்கும்” என்றாள் அவளும் அசட்டையாக.

 

“எது தையா தக்கான்னு குதிப்பியே அதுவா?” என்று சொல்லி அவளை வெறுப்பேற்றினான்.

 

அவள் முறைக்கவும், “உன்கூட நாள் முழுக்க சண்டை போடவும் எனக்கு சந்தோசம் தான். அதுவும் இன்னைக்கு கண்ணுக்குக் குளிர்ச்சியா வேற இருக்க. சின்ன பிள்ளைங்க மாதிரி உருண்டு, பிரண்டு சண்டை போட கூட நான் தயாரா தான் இருக்கேன். ஆனா, பாரு இங்கே கொஞ்ச நேரத்துல பிரஸ் பீப்பிள் எல்லாம் வந்திடுவாங்க. என்னை கடமை அழைக்குது. நான் என்ன செய்ய?” என்று விளையாட்டாகக் கண்சிமிட்டி கேட்டவனிடம், எதையும் வெளிப்படுத்த முடியா இயலாமையோடு நன்கு முறைத்துவிட்டு அங்கிருந்து காரில் ஏறி அமர்ந்து கொண்டாள்.

 

வசந்தன் மட்டும் சர்வேஸ்வரனை வேகமாக நெருங்கி, “உங்க உதவியை என்னைக்கும் மறக்க மாட்டேன் மாமா…” என்று உணர்வுப்பூர்வமாகச் சொல்ல, அதற்குள் காரின் ஹாரனை அலற விட்டிருந்தாள் சௌதாமினி.

 

“இனி இதுபோல நடந்ததுன்னு தெரிஞ்சது… உள்ளே அவனுங்க வாங்கின அடியை பார்த்திருப்பன்னு நினைக்கிறேன்” என்று மிரட்டலாக சர்வா சொல்ல,

 

“மாமா கண்டிப்பா இனி ரொம்ப சமத்தா இருப்பேன்” என்று பணிவாகச் சொன்னவன், மீண்டுமொருமுறை ஹாரன் சத்தம் கேட்கவும், “சரி மாமா நீங்க பாருங்க. நான் நைட் உங்களுக்குக் கால் பண்ணறேன்” என்றதோடு அவசரமாக காரில் ஏறி அமர்ந்து கொண்டான்.

 

அவன் ஏறும் போது, சிறு சிரிப்போடு சௌதாமினிக்கு தலையாட்டி சர்வா விடைகொடுக்க, அவளோ வெடுக்கெனத் தலையை திருப்பிக்கொண்டு வாகனத்தைக் கிளப்பியிருந்தாள். அவளின் அந்த செய்கையையும் சிரிப்போடே பார்த்துக் கொண்டிருந்தான் சர்வேஸ்வரன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Related Post

எனக்கொரு வரம் கொடு 17 – சுகமதிஎனக்கொரு வரம் கொடு 17 – சுகமதி

எனக்கொரு வரம் கொடு – 17   சர்வேஸ்வரன் வீட்டிலும், அவனது அறையினுள்ளும் மெல்ல மெல்ல அழகாகப் பொருந்திப் போனாள் சௌதாமினி.   காவலன் தினமும் வேலை வேலை என்று அலைகிறான். எங்கே நெருக்கம் காட்டி விடுவானோ என அவள் அனாவசியமாய்

எனக்கொரு வரம் கொடு 21 – சுகமதிஎனக்கொரு வரம் கொடு 21 – சுகமதி

எனக்கொரு வரம் கொடு – 21 சில கேஸ்கள் இதுபோல வரும். சரியாக உறங்க முடியாது. சரியான பாதை கிடைக்காது. தொடங்கிய இடத்திலேயே நிற்கிறோம் என்கிற அலுப்பைத் தரும். அதுமாதிரியான கேஸாகத்தான் சர்வேஸ்வரனுக்கு இது அமைந்து விட்டது. இது அவனது திறமைக்கு

எனக்கொரு வரம் கொடு 8 – சுகமதிஎனக்கொரு வரம் கொடு 8 – சுகமதி

எனக்கொரு வரம் கொடு – 8   வசந்தனிடம் தொடர்ந்து பாராமுகம் காட்டுவதே சௌதாமினியின் வாடிக்கையாக இருந்தது. போகக்கூடாத எல்லை வரை போய் வந்தவனை நொடியில் மன்னிக்க அவளால் முடியவில்லை. அதுவும் குடும்பம் இருக்கும் சூழ்நிலையில் எத்தனை பொறுப்போடு அவன் இருந்திருக்க